Assassin’s Creed: Brotherhood – கொலை செய்ய விரும்பு

by Karundhel Rajesh April 5, 2011   Game Reviews

‘நீண்ட நெடு நாட்களுக்குப் பின், கருந்தேள் என்ற அந்த மனிதன், பதிவு ஒன்றை எழுத ஆரம்பித்தான். தனக்கு முன் இருந்த விசைப்பலகை என்னும் கருவியின் பொத்தான்களை அவன் அழுத்த அழுத்த, அவனுக்கு எதிரே இருந்த கரும்திரையில் எழுத்துக்கள் மின்ன ஆரம்பித்தன; இதனைக்கண்டு அவனது உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது’. இந்த ரீதியில், படு சீரியஸாக எதையாவது எழுதலாம் என்று தோன்றியது. ஆனால், அப்படி எழுதியபின், இதைப் படிப்பவர்கள் அத்தனைபேரும் குதிகால் பிடறியில் பட ஓடிவிடுவார்கள் என்பதால், நான் மிகுந்த சந்தோஷத்துடன் ஈடுபட்ட ஒரு விஷயத்தைப் பற்றி எழுதப்போகிறேன்

இதற்குமுன் இந்தத் தளத்தில், அசாசின்’ஸ் கிரீட் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். மத்தியகால ஐரோப்பாவில் நிகழும் அட்டகாசமான விளையாட்டு இது. முதல் பாகத்தில், அல் தாயிர் என்ற கொலையாளியின் வாழ்க்கையைப் பின்பற்றிச் செல்லும் இந்த விளையாட்டு, இரண்டாம் பாகத்தில், அதே அல் தாயிரின் பரம்பரையைச் சேர்ந்தவனான எஸியோ ஆடிடோரியின் வாழ்க்கையைப் பின்பற்றிச் செல்கிறது. இந்த எஸியோ என்பவன், இத்தாலியில், பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரபு. கொலையாளிகளின் கூட்டமைப்பில் ஒரு முக்கிய அங்கம் வகித்த ஒரு நபர். இந்த எஸியோவின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள், இந்த விளையாட்டின் இரண்டாம் பாகத்தில், படுகொலை செய்யப்பட, கொலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குகிறான் எஸியோ. இது, இரண்டாம் பாகத்தின் கதை.

இந்த இரண்டாம் பாகம் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆனவுடன், மூன்றாம் பாகத்துக்காக, இதன் விசிறிகள் காத்திருக்க ஆரம்பித்தனர் (நானும்தான்). சென்ற ஆண்டு இறுதியில், ப்ளேஸ்டேஷனுக்கான விளையாட்டு வெளியிடப்பட்டது. அதுவும் ஹிட். இதனைத்தொடர்ந்து, எப்போதடா இதன் பிசி வெர்ஷன் வெளியாகும் (அப்போதுதானே லேப்டாப்பில் விளையாடமுடியும்) என்று ஏக்கத்துடன் காத்திருக்க ஆரம்பித்தேன். இதில், யூட்யூபில் வேறு, அருமையான டிரைலர்கள் வெளியாகி, வெந்த புண்ணில் அமிலத்தை ஊற்றின.

இம்முறை, மூன்றாம் பாகத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், எஸியோவுக்குக் கீழ், பல ஆட்களை நியமித்து, அவர்களுக்கும் கொலைகாரன் ஆகும் பயிற்சி கொடுத்து, இக்கட்டான சூழலில், எஸியோவுக்கு உதவிபுரிய வைக்க முடியும். அதேபோல், இன்டர்நெட்டில் புகுந்து, மல்டிப்ளேயர் முறையில், பலருடன் சேர்ந்து ஆடவும் முடியும்.

ஒருவழியாக, சில நாட்களுக்கு முன்னர், இந்த விளையாட்டின் பிசி வெர்ஷன் வெளியானது. விலை. ரு. 999/- மட்டுமே. பெங்களூரின் சப்னா புக் ஹௌசில் கிடைக்கிறது.

இந்த விளையாட்டை நேற்றுதான் விளையாடி முடித்தேன். இந்த விளையாட்டின் முக்கிய அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

இம்முறை, கதை ரோமில் நடக்கிறது. இந்த விளையாட்டில் வரும் ரோம் தான் இந்த மூன்று பாகங்களிலும் மிகப்பெரிய வரைபடம். இதற்கு முந்தைய பதிப்பின் ஃபிளாரன்ஸ் நகரைவிட மும்மடங்கு பெரிய வரைபடம் இது. ரோம் முழுக்க சுற்றலாம். பல புதிய இடங்களைப் பார்க்கலாம். அதேபோல், மற்றொரு முக்கிய அம்சம் என்னவெனில், முந்தைய பாகங்களைப்போல், இதில் நடக்கத் தேவையில்லை. நகரினுள்ளும் குதிரையில் சுற்றலாம். ஒரு விசில் அடித்தவுடன், ஓடிவந்து நம்மருகில் நிற்கும் குதிரை, ஒரு சந்தோஷமான அம்சம்.

அடுத்த அம்சம், போர்ஜியா டவர்கள். சென்ற இரண்டு பாகங்களிலும், உயரமான டவர்களில் ஏறி, அதிலிருந்து குதிப்பது நினைவிருக்கிறதா? அதைப்போலவே, இந்த பாகத்தில், போர்ஜியா டவர்கள் எனப்படும் டவர்களில் ஏறி, அங்கிருக்கும் ஒரு பலம்வாய்ந்த தளபதியைக் கொன்று, இந்த டவரையும் எரிக்க வேண்டும். அப்படி எரித்துவிட்டு, முந்தைய இரண்டு கேம்களில் வருவதுபோல, படையினரால் கொல்லப்படப்போகும் அப்பாவிக் குடிமக்களைக் காப்பாற்றினால், இந்தமுறை, அவர்கள் எஸியோவின் படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களை வைத்துக்கொண்டு, இக்கட்டான சூழ்நிலைகளில், எஸியோவின் ஹெல்த் குறைகையில், இவர்களை அழைத்து, எதிரிகளைக் கொல்ல இயலும். இது, விளையாடுவதற்கு மிகச் சுவாரஸ்யமாக இருந்தது.

அடுத்த அம்சம், இதன் கிராபிக்ஸ். முந்தைய இரண்டு கேம்களைவிடவும், இதில் கிராபிக்ஸ் துல்லியமாக இருக்கிறது. எஸியோ, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்கையில், அவனது பின்புலத்தில் வரும் ரோமின் வீதிகள், மாடங்கள், மாளிகைகள், மக்கள், தெருக்கள் ஆகிய அனைத்துமே, அசத்தல். அதேபோல், இதில் முக்கியப் பங்கை வகிக்கும் ஒரு இடம், கொலோஸியம். கிளாடியேட்டர் படத்தில் நாம் பார்த்தோமே . .அதே பிரம்மாண்ட அரங்கம். இதில், கொலோஸியத்தின் வெளிச்சுவர்களில் ஏறி, உள்ளே குதித்து, எதிரிகளைக் கொள்ளவேண்டிய ஒரு லெவல் உண்டு. இரவில் அதனை விளையாடிப்பாருங்கள். அருமையான பின்னணி இசையில், உங்களை மறந்துவிடுவீர்கள்.

சென்ற கேமில் வருவது போலவே, இதிலும் லியனார்டோ டவின்சி வருவார். ஆனால், இதில் மனிதரின் தாடி வெள்ளையாகி விடுகிறது. இந்த விளையாட்டின் தாக்குதல்களில் ஒரு சூப்பர் அம்சம் என்னவெனில், ஒரு எதிரியைக் கொன்றவுடன், வரிசையாகப் பலரையும் டார்கெட் செய்து கொல்ல முடியும் (இந்த வசதி, பேட்மேனில் உண்டு). இது, சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கிறது. அதேபோல், ஆறுபேரைக் காப்பாற்றி, எஸியோவின் படையில் சேர்த்துக்கொண்டுவிட்டால், பல எதிரிகள் நம்மைத் தாக்கும்பொழுது, அவர்களை அழைத்து, அம்புமழை பொழிவித்து, அனைவரையும் கொல்ல முடியும். இதுவும் ஒரு விறுவிறுப்பான அம்சமே.

ஒரு திடுக்கிடும் கிளைமாக்ஸுடன் முடிவடையும் இந்த விளையாட்டுக்கு, கட்டாயம் அடுத்த பாகம் உண்டு. விளையாடி முடிந்ததும், டைட்டில்கள் ஓடுகையில் வரும் வசனமே இதற்கு சாட்சி.

இரண்டாம் பாகத்தைப் போல், இதில், இன்டர்நெட் இருந்தால்தான் விளையாட முடியும் என்ற முட்டாள்தனமான விஷயம் இல்லை. அப்படிச் செய்ததன் மூலம், கண்டபடி கிராக்குகள் டெவலப் செய்யப்பட்டதை அறிந்த யூபிசாப்ட், இதில் அந்த மடத்தனத்தைத் தவிர்த்துவிட்டது.

இதன் இன்னொரு ப்ளஸ் அம்சம் என்னவெனில், எஸியோவின் டீமில் இணையும் புதிய கொலைகாரர்களுக்கு, பல வேலைகள் கொடுத்து, அவர்களை கைதேர்ந்த கொலைகாரர்கள் ஆக்கும் வசதியும் இருக்கிறது. இதன் முக்கியத்துவம் என்னவெனில், கேமின் பின்பாதியில், எஸியோவை, பலரும் சேர்ந்து தாக்கும் இடங்கள் உண்டு. இத்தகைய இடங்களில், இந்த கைதேர்ந்த கொலைகாரர்களை அழைத்தால், அவர்கள் வந்து எதிரிகளைப் பந்தாடிவிடுவார்கள். ஒருவேளை அவர்களின் திறமை அதிகரிக்காமல் (வேலை கொடுக்கப்படாமலே இருந்தால்) இருந்தால், அனைவரும் செத்துவிட நேரும். எனவே, கொலைகாரர்களுக்கு அவ்வப்போது வேலைகொடுத்து வருவது சாலச்சிறந்தது என்று அறிக.

இந்தக் கேமின் ஆரம்பத்தில், எஸியோவின் கோட்டை தாக்கப்படும் ஒரு லெவல் உண்டு. அதில், அங்குமிங்கும் ஓடி, எதிரிகளை பீரங்கியின் துணைகொண்டு எஸியோ துவம்சம் செய்யும் அழகை விளையாடிப்பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ளமுடியும். மொத்தத்தில், அட்டகாசமான கேம். விளையாடுங்கள் (இது, டவுன்லோட் செய்தால், எட்டு ஜிபி வரும்).

இதோ Assassin’s Creed: Brotherhood கேமின் சில அருமையான விடியோ காட்சிகள். கண்டு மகிழுங்கள்.

  Comments

9 Comments

  1. நண்பா,
    இங்கே wii மற்றும் ps3 மற்றும் அனைத்து விளையாட்டு சாதனங்களும் மலிந்து,மலைபோல குவிந்து கிடக்கின்றது.ஏனோ அதில் இன்னும் நாட்டம் வரவில்லை.இதை என் வீடியோ கேம் ஆர்வமுள்ள உறவினர்களுக்கு ஃபார்வர்ட் செய்கிறேன்

    Reply
  2. does this game work with 256mb graphics card?

    Reply
  3. @ கீதப்ரியன் – கட்டாயம் கேம் பிரியர்களுக்கு அனுப்பி வையுங்கள் நண்பா.. என்னைக்கேட்டால், நீங்கள் தாராளமாக ஆட ஆரம்பிக்கலாம் . முயற்சி செய்துதான் பாருங்களேன்

    @ boyinthahood – 256 mb கிராபிக்ஸ் கார்ட் – வாய்ப்பேயில்லை. என்னுடையது ஒரு ஜிபி. அதிலேயே பவர் போடாமல் ஆடினால், கொஞ்சம் ஸ்லோவாக இருக்கிறது. உங்களுடைய கிராபிக்ஸ் கார்டில், படு ஸ்லோவாக, ஸ்டக் ஆகிஆகி வரும். . . சீக்கிரம் கிராபிக்ஸ் கார்ட் அப்க்ரேட் செய்யுங்கள் . .

    Reply
  4. சூப்பர் போஸ்ட் நண்பா. இந்த கேம் பற்றி ஓரளவிற்குத் தெரியும். பல புதிய விஷயங்களை இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆனாலும் நண்பர் கீதப்ப்ரியனைப் போலவே எனக்கும் இதில் அவ்வளவாக நாட்டம் இல்லை.

    ஸ்டில்ல நம்ம வேலாயுதம் விஜய் மாதிரியே ஒருத்தர் இருக்காரே. எளய தளபதிய காப்பியடிச்சுட்டானுங்களோ??

    Reply
  5. Hello karundhel

    Nice!! when you have a time play and review.

    Prince of Persia: The Forgotten Sands PS3
    Prince of Persia: Sands of Time PS3 HD

    Thank you

    Hari Rajagopalan

    Reply
  6. @boyinthehood.
    the gameplay depends on your type of graphics card u r using not mostly on the memory of graphics card ,my card is gtx9600 512 mb I can play perfectly thz game and my brother is having 8600 gt 256 mb he too plays the game

    Reply
  7. @ சரவணக்குமார் – ஓ அதா? மருத்துவர் விசய் படத்தைக் காப்பியடிச்சி இந்த கேமை டெவலப் பண்ணிட்டாங்கன்ற உண்மை தெரிஞ்ச அவரு, இப்ப பழிக்குப்பழி வாங்க, இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சி வரப்போற அடுத்த பார்ட்டை, புஸ். ஏ. மந்திரபோகர் தயாரிப்புல உருவாக்கிக்கினு வர்ரதா ஆந்தை சொல்லிருக்கு 🙂

    @ Hari – Sands of Time PC version ஆடி முடிச்சிட்டேன்.. Forgotten Sands, நம்ம இலுமி ஆடி முடிச்சிட்டு சொல்றென்னிருக்காரு.. உடனே போட்ரலாம் பதிவு.. இப்போதைக்கு, ஸாண்ட்ஸ் ஆஃப் டைம் பதிவு இன்னும் சில நாள்ல போட்டுர்ரேன் 🙂 . . நன்றி

    @ Karthik – உங்கள் பதிலுக்கு நன்றிகள் 🙂

    Reply
  8. Thank you karundhel

    Hari Rajagopalan

    Reply
  9. prince of persia warrior within has better gameplay than sands of time and two thrones …!!

    Reply

Join the conversation