Avengers: Age of Ultron – a Sneakpeek

by Karundhel Rajesh April 23, 2015   English films

முன்குறிப்பு

நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன.


Captain America: The Winter Soldier படத்தின் போஸ்ட்-க்ரெடிட் காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதில் பாரோன் வான் ஸ்ட்ரூக்கர் (Baron Von Strucker) என்ற நபர் காண்பிக்கப்படுவான். எதுவோ ஒரு ரகசிய பரிசோதனைக் கூடத்தில் அவன் செய்யும் சில சோதனைகள் காண்பிக்கப்படும். அப்போது அவன் இரட்டையர்கள் இருவரைக் காண்பிப்பான். அதில் ஒரு நபர், மின்னல்வேகத்தில் நகரக்கூடிய ஆள். இன்னொரு பெண், அவளது சக்தியால் பொருட்களை நகர்த்தக்கூடியவள். கூடவே, ஸ்ட்ரூக்கரின் பரிசோதனைகளுக்கு சக்தியை அளிக்கக்கூடிய வஸ்துவாக, லோகி எப்போதும் கையில் வைத்துள்ள தடி காண்பிக்கப்படும் (Sceptre என்பதை மந்திரக்கோல் என்றால் கேவலமாக உள்ளது. குச்சி என்றால் காமெடியாக இருக்கிறது. தடி என்பதுதான் ஓரளவு பொருந்துகிறது. ஆனால் கொடூரமான அர்த்தங்களைக் கொடுக்கிறது. பின் இதை எப்படித்தான் எழுதுவது???). இந்த ஸ்ட்ரூக்கர் பல அவெஞ்சர் காமிக்ஸ்களில் வரக்கூடிய வில்லன். இவனது கதையில் இருந்துதான் ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ திரைப்படம் துவங்குகிறது.

‘அல்ட்ரான்’ என்பவன் யார்? அவனுக்கும் அவெஞ்சர்களுக்கும் என்ன தொடர்பு? ஸ்ட்ரூக்கர் அதில் எங்கே வந்து குதித்தான்? ‘ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ ட்ரெய்லர்களைப் பார்த்தவர்களுக்கு இந்த அல்ட்ரான் பற்றிய புரிதல் ஓரளவு வந்திருக்கலாம். பார்க்க ஒரு ரோபோ போல் இருக்கும் அல்ட்ரான், டோனி ஸ்டார்க்கின் தயாரிப்பு. அவெஞ்சர்களுக்கே தெரியாமல், தனது பரிசோதனைக் கூடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை உருவாக்குகிறார். அதுதான் அல்ட்ரான் – புதிய superpower. இது ஏனெனில், அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தில் லோகி தனது பிரம்மாண்ட ஏலியன் படையோடு பூமியைத் தாக்கியது டோனி ஸ்டார்க்குக்கு இன்னும் மறக்கவில்லை. உலகைக் காக்க அவெஞ்சர்கள் மட்டும் போதாது என்பது டோனி ஸ்டார்க்குக்குத் தெரியும். இதனால் சுயமாக சிந்தித்துச் செயல்படக்கூடிய ஒரு படையை உருவாக்க முனைகிறார் டோனி ஸ்டார்க். அந்தப் படையின் ஒரு representation தான் அல்ட்ரான். அல்ட்ரானைப்போல் பல எந்திரங்களை உருவாக்கி, ஒரு பெரும்படையை அமைத்து உலகைக் காக்கவேண்டும் என்பது டோனி ஸ்டார்க்கின் எண்ணம்.

ஒரு முக்கியமான சம்பவத்துக்குப் பிறகு (ஏஜ் ஆஃப் அல்ட்ரானின் ஓப்பனிங் காட்சிகளைக் கவனிக்கவும்), இந்த லோகியின் தடி அவெஞ்சர்களின் கைக்கு வருகிறது. இதைவைத்து, அதில் உள்ள சக்தியால் அல்ட்ரானுக்கு உயிர் கொடுக்கின்றனர் அவெஞ்சர்கள். ஆனால், இந்த சக்தியால் சுயமாக சிந்திக்கும் எண்ணம் வாய்க்கப்பெற்ற அல்ட்ரான், தன்னிச்சையான சில முடிவுகள் எடுக்கிறது. அவெஞ்சர்களிடம் இருந்து பிரிந்து செல்கிறது. எங்கே? துவக்கத்தில் நாம் பார்த்த ஸ்ட்ரூக்கரின் இடத்துக்குதான். அங்கே இருக்கும் இரட்டையர்களான பியேட்ரோ மற்றும் வாண்டா மாக்ஸிமாஃப் ஆகிய இருவரும் அல்ட்ரானுக்குத் துணைபுரிகின்றனர். இதனால் இந்த மூவராலும், ‘வைப்ரேனியம்’ என்ற சக்திவாய்ந்த உலோகத்தைக் கைப்பற்ற முடிகிறது. வுல்வரீனின் உடல் முழுக்க வியாபித்திருக்கும் Adamantium போலவே இந்த வைப்ரேனியமும் புகழ்பெற்ற உலோகம். கேப்டன் அமெரிக்காவின் கேடயம் வைப்ரேனியத்தால் உருவாக்கப்பட்டதுதான். இந்த வைப்ரேனியத்துக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. உலகிலேயே வைப்ரேனியம் கிடைக்கும் ஒரே நாடு – ஆப்ரிக்காவின் வாகனாடா (Wakanada). இந்த நாட்டை ஆள்பவன் T’Challa. இவன் தான் பின்னர் Black Panther என்ற பெயரில் 2018ல் வரும் படத்தில் அறிமுகமாகப்போகும் அவெஞ்சர். இந்த சமயத்திலேயே யுலிஸிஸ் க்ளா (Ulyssis Klaw) என்ற நபரின் அறிமுகத்தையும் படத்தில் காணலாம். இந்த வேடத்தில் நடித்திருப்பவர் ஆண்டி ‘the Gollum’ செர்கிஸ் (Andy Serkis). இந்த யுலிஸிஸ் க்ளா தான் ப்ளாக் பாந்த்தரின் மைய வில்லன். எனவே ஆண்டி செர்கிஸை வில்லனாக 2018ல் நாம் காணமுடியும். இந்த இரட்டையர்கள் அல்ட்ரானுடன் சேர்வதற்குக் காரணம், அவர்களின் பெற்றோர்களை அழித்தது டோனி ஸ்டார்க் என்பதால்தான். படத்தில் டோனி ஸ்டார்க்கின் குண்டு ஒன்றால்தான் அவர்கள் அழிந்துபோனார்கள் என்ற சிறிய கதை சொல்லப்படும்.

இதுதான் ‘அவெஞ்சர்ஸ்: த ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ படத்தின் துவக்கமும் அதன் பின் நடக்கும் காட்சிகளும். படத்தின் கதை பற்றி எந்த சஸ்பென்ஸுமே ஜாஸ் வீடன் வைக்கவில்லை. ட்ரெய்லர்களைப் பார்த்தாலே கதை தெரிந்துவிடுகிறது. இவையெல்லாம் படத்தில் எப்படிக் காட்டப்பட்டுள்ளன என்பதுதான் சுவாரஸ்யமான அம்சமாக இருக்கப்போகிறது.

இந்தப் படத்தில் அவெஞ்சர்களுக்கான அறிமுகமே தேவையில்லை என்பதால், ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போல, அதிரடியான ஓப்பனிங் இதில் உண்டு. ஆனால் அது கதையுடன் சம்மந்தப்பட்டது. இருந்தாலும் இந்தப் படத்தில் சில முக்கியமான விஷயங்களை ஜாஸ் வீடன் நுழைத்திருக்கிறார். அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தோடு, ‘மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ்’ என்ற MCUவின் முதல் பகுதி முடிவடைந்துவிட்டது. இந்த முதல் பகுதியில், ஹல்க், Iron Man (இரண்டு பாகங்கள்), Captain America, Thor ஆகிய ஹீரோக்களுக்காக தனித்தனிப் படங்கள் எடுக்கப்பட்டன. இவர்களைப் பற்றிய அறிமுகங்களாக அப்படங்கள் விளங்கின. அவற்றுக்கெல்லாம் ஹைலைட்டாக அவெஞ்சர்ஸ் வெளியானது. அத்துடன் முதல் பகுதி முடிந்தது. அதன்பின் Iron Man 3, Captain America 2: The Winter Soldier, Thor 2: The Dark World, Guardians of the Galaxy ஆகிய படங்கள் வந்தன. இவைகளுக்கு அடுத்தபடியாக, இம்முறை அவெஞ்சர்ஸ் 2 படம் நாளை வெளியாகிறது. இதன்பின்னர் ஜூலையில் வெளியாகப்போகும் Ant Man படத்தோடு இந்த MCUவின் இரண்டாம் பகுதி வெற்றிகரமாக முடியப்போகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்றால், Captain America: Civil War (2016), Doctor Strange (2016), Guardians of the Galaxy 2 (2017), Thor: Ragnarok, (2017), Avengers: Infinity Wars: Part 1(2018), Black Panther (2018), Captain Marvel (2018), Avengers: Infinity Wars: Part2(2019), Inhumans (2019) ஆகிய படங்களோடு MCUவின் முன்றாவது பகுதி முடியடையப்போகிறது. இதனால், ஒவ்வொரு படத்திலும் இனிமேல் வரப்போகும் படங்களைப் பற்றிய சின்னச்சின்ன செய்திகள் தேவைப்படும். போஸ்ட்-க்ரெடிட் சீன்கள் மற்றும் கதைக்குள்ளேயே வரும் சிறிய க்ளூக்கள் ஆகியவைதான் இப்படிப்பட்ட செய்திகளை ஆடியன்ஸுக்கு சொல்லப்போகின்றன. கூடவே, ஒவ்வொரு படத்திலும் இனி அறிமுகமாகும் ஹீரோக்களை அடுத்த அவெஞ்சர் படத்துக்குள் நுழைக்கவேண்டும். இப்படிப்பட்ட பல வேலைகள் இந்த அவெஞ்சர் இரண்டாம் பாகத்திலிருந்து துவங்கப்போகின்றன. எனவேதான் இதில் ப்ளாக் பாந்த்தர் ஆளும் இடம் பற்றியும், அவனது முக்கியமான வில்லனான யுலிஸிஸ் க்ளாவும் இப்படத்தில் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் சேர்த்து, ஸ்கார்லெட் விட்ச் (நாம் முதலில் பார்த்த வாண்டா மாக்ஸிமாஃப் இவள்தான்) மற்றும் க்விக்ஸில்வர் (பியேட்ரோ – X Men: Days of the Future Past படத்தில் மின்னல்வேகத்தில் ஓடும் மனிதன்) ஆகியவர்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். இவர்களின் அறிமுகம் ஏன் என்று படத்தின் இறுதியில் தெரிந்துவிடும்.

தோர் படத்தின் மூன்றாவது பாகமான Ragnarok படத்தைப் பற்றியும் இந்தப் படத்தில் ஒரு க்ளூ உண்டு. ஒரு காட்சியில் தோர் கதாபாத்திரத்துக்கு எதிர்காலத்தைப் பற்றிய சில சம்பவங்கள் காட்டப்படும். அப்போது, தோரின் அஸ்கார்ட் கிரகமே அழிந்துபோய், சிதிலமடைந்திருப்பதை தோர் பார்க்க நேரும். இதுதான் ராக்னராக்கின் கதை. அதில் வில்லன் மறுபடியும் லோகியாகவே இருக்கக்கூடும் (காரணம் என்னவென்றால், தோர் இரண்டாம் பாகத்தில், யாரைப்போன்றும் உருவத்தை மாற்றிக்கொள்ளும் இயல்பு படைத்தவன் லோகி என்பதால், தோர் மூன்றாவது பாகத்தில் தந்தை ஓடினைப்போல் உருவம் மாற்றிக்கொண்டு அவன் அழிவை விளைவிக்கலாம் என்பது காமிக்ஸ் ரசிகர்கள் கருத்து. அந்தப் படத்தின் இறுதியிலும் ஓடினைப்போன்று உருவத்தை மாற்றிக்கொண்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் லோகியை நாம் காண்கிறோம் அல்லவா?)

உலகைக் காக்க உருவாக்கப்படும் இயந்திரம் உலகையே அழிப்பதாக மாறுவது, படைத்தவனையே அது எதிர்ப்பது, துண்டுதுண்டாக சிதறியபின்னர் மறுபடிப் புதிய உடலோடு மீண்டு வருவது, அந்த இயந்திரத்துடன் அதைப்போலவே தோற்றமளிக்கும் பிற இயந்திரங்கள் வருவது போன்றதெல்லாம் ஆடியன்ஸுக்கு ‘எந்திரன்’ படத்தை நினைவுபடுத்தக்கூடும். இது ஒரு தற்செயல் நிகழ்வே. அவெஞ்சர்ஸ் காமிக்ஸைப் படித்தால் இதுபோன்ற பல சம்பவங்கள் அவற்றில் ஏற்கெனவே வந்துவிட்டதைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் படத்தில் கவனிக்கப்படும் கதாபாத்திரம் – ஸ்கார்லெட் விட்ச். இவளிடம், பிறரின் மனங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. அதை வைத்தும் படங்களில் சில காட்சிகள் உண்டு. இந்தப் படத்தின் மிக முக்கியமான புதிய அறிமுகமாக, ‘விஷன்’ (Vision) என்ற கதாபாத்திரம் இருக்கக்கூடும். காமிக்ஸ்களில் அவெஞ்சர்களுடன் அடிக்கடி இடம்பெறும் கதாபாத்திரம் இது. எப்படி ஒரு நல்ல கதாபாத்திரம் வில்லனாக மாறுகிறதோ, அப்படி அதற்கு நேர் எதிராக உருவாக்கப்படும் இயந்திரம் இது. அவெஞ்ச்ர்ஸ் இரண்டாம் பாகத்துக்காக உருவாக்கப்பட்ட கடைசி ட்ரெய்லரில் கடைசிக்காட்சியில் சட்டென்று கண்களைத் திறக்கும் ஒரு கதாபாத்திரத்தைக் கவனித்திருப்பீர்கள். அதுதான் விஷன். இதற்கு மேல் இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்ல இயலாது. படம் பார்த்தால் புரியும்.

படத்தின் வில்லன் அல்ட்ரானுக்குக் குரல் கொடுத்து மோஷன் காப்சர் செய்திருப்பவர் ஜேம்ஸ் ஸ்பேடர் என்பதைப் பலரும் தெரிந்துகொண்டிருந்திருக்கலாம். இவர் யாரென்று தெரியாதவர்களுக்கு மட்டும் – கிட்டத்தட்ட டாம் க்ரூஸ் போல வந்திருக்கவேண்டிய நடிகர். ஆனால் சில தவறான திரைப்படத் தேர்வுகளால் அப்படி வர இயலாமல், அதனால் எந்தப் பிரச்னைகளும் இல்லாமல், மனம்போன போக்கில் படங்களைத் தேர்வு செய்து நடிப்பவர். இவர் நடித்த படங்களில் Sex, Lies and Videotape குறிப்பிட்டுச் சொல்லமுடிந்த படம். இவர் நடித்த Dream Lover படத்தை முன்னர் Zee MGM சானலில் ‘வெள்ளி இரவுகளில்’ அடிக்கடி போடுவது வழக்கம். நீண்ட வருடங்கள் கழித்து ‘லிங்கன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார்.

அல்ட்ரானின் தோற்றம் காமிக்ஸ்களில் இருப்பதுபோல் இதில் இல்லை. இருந்தாலும், காமிக்ஸ்களில் அல்ட்ரான் கதாபாத்திரம் முதலில் தோன்றியபோது எப்படிப்பட்ட சிவப்பு வண்ண உடையால் தன்னை முழுதும் மூடியிருந்ததோ, அப்படிப்பட்ட சிவப்பு வண்ணத்துணி ஒன்றை இதிலும் ஒரு காட்சியில் அல்ட்ரான் அணிந்திருப்பதைக் கவனிக்கமுடியும் (இரட்டையர்களோடு அல்ட்ரான் பேசும் காட்சி). அதேபோல் அல்ட்ரானின் கண்களும் வாயும் மின்னுவதும் காமிக்ஸ்களில் இருந்து எடுக்கப்பட்டதே.

படத்தின் ட்ரெய்லர்களில் ஹல்க்கும் ஐய(ர்)ன் மேனும் சண்டையிடுவதைக் கவனித்திருக்கலாம். அதில் அவர் அணிந்திருக்கும் உடைதான் ஹல்க்பஸ்டர் என்று காமிக் ஸ்களில் அழைக்கப்படுகிறது. ஹல்ட் என்றாவது தறிகெட்டுத் திரிந்தால் ஹல்க்கை அடக்கவே மிகப்பிரம்மாண்டமான அந்த இரும்பு உடையை டோனி ஸ்டார்க் வடிவமைத்துத் தயாராக வைத்திருப்பார். அப்படியென்றால் அதை இப்போது பயன்படுத்தவேண்டிய காரணம்? அதுவும் படத்தில் தெரியும். ஒரு க்ளூ கொடுக்கவேண்டும் என்றால், ஸ்கார்லெட் விட்ச்சுக்கும் இதற்கும் தொடர்பு உண்டு.

முதன்முறையாக இந்தப் படத்தில் ஒரு காதலும் உண்டு. இரண்டு அவெஞ்சர்களுக்கு இடையே காண்பிக்கப்படும் அந்தக் காதலை, ட்ரெய்லர்களை ஒழுங்காகப் பார்த்தவர்கள் கண்டுபிடித்திருப்பார்கள். அதற்கும் படத்தின் இறுதிக்கும் கொஞ்சம் தொடர்பு உண்டு. படத்தில் சில சொல்லக்கூடாத ஸ்பாய்லர்கள் அவசியம் உண்டு என்பதால், படம் பார்த்து அவற்றை அறிந்துகொள்க. ஆனால் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இறக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை. இதை சென்ற வருடமே அறிவித்துவிட்டனர். அது யார் என்பதையும் படம் பார்த்துத் தெரிந்துகொள்க (எனக்குத் தெரியும்).

படத்தை நாளைக் காலையில் பார்க்கப்போகிறேன் என்பதால் நாளை இரவு விமர்சனம் வெளிவரும். அதுவரை – have a blast !

பி.கு – படத்தில் ஒரே ஒரு போஸ்ட் க்ரெடிட் ஸீன் தான். அதுவும் டைட்டில்கள் போட ஆரம்பித்ததுமே வந்துவிடும். அது முடிந்ததும் எழுந்து வந்துவிடுங்கள். கடைசிவரை காத்திருந்தால் மண்டை காய்வதுதான் மிச்சம்.

  Comments

4 Comments

  1. Accust Here

    Waiting to see it tomorrow. Thank you for informing about Post credit scene

    Reply
  2. காமிக்ஸ் அல்ட்ரான் உருவாக்கியது ஆன்ட் மேன் தானே அவருக்கான படம் லேட் என்பதால் டோனியை பயன்படுத்தி விட்டாங்களா.
    விஷன் உருவாக்குவது அல்ட்ரான் விஷனுக்கு மனம் இருக்கும் விபத்தில் சிக்கி கொள்ளும் அவஞ்சர்ஸ் காப்பாற்றி தங்களுடன் வைத்து கொள்வார்கள்
    காமிக் படத்திற்கும் பல விசயங்கள் சம்பந்தம்மே இல்லை லோகி magic stick இரண்டு x men காமிக் கிடையாது.
    விஷன் உருவாக்க முக்கிய காரணம் வைப்ரேனியத்தை கொண்டு வரவும் அவஞ்சர்ஷ் அழிப்பதும் தான்.

    Reply
  3. அல்ட்ரான் பாக்க ஜான் கார்ட்டர் படத்தில் பச்சை கலர் ஒரு குருப் இருக்குமே அதை போலவே இருக்கு

    Reply
  4. Sathish

    2015ற்கு பிறகான வருடங்களில் காமிக் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது. மார்வெல் மற்றும் காமிக் திரைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது.

    Reply

Join the conversation