BIFFES 2013: Heli (2013) – Mexico
ஆள்கடத்தல், கொடூர தண்டனைகள், வன்முறை ஆகியவற்றை தினசரிகளில் படித்துக்கொண்டே இருக்கிறோம். திரைப்படங்களிலும் அவற்றைப் பார்க்கிறோம். ஆனால் திரைப்படங்களில், இப்படிப்பட்ட நிகழ்வுகளின் நாடகத்தனமான வெளிப்பாடுகளே அதிகமாக இருக்கின்றன. அதாவது, நிஜத்தில் எப்படி நடக்கிறதோ அப்படிக் காட்டாமல், அவற்றை Stylize செய்து, மிகைப்படுத்தியே பல திரைப்படங்கள் காட்டுகின்றன. இப்படங்களில், வன்முறை என்பது மிகவும் அடக்கி வாசிக்கப்பட்டு, சுவாரஸ்யம் என்பது அதிகமாக இருக்கும். குறிப்பாக இது இந்தியத் திரைப்படங்களில் அதிகமாகவே நடக்கும். காரணம், உள்ளதை உள்ளபடியே காட்டினால் சென்ஸாரில் பிரச்னை நிகழலாம். அல்லது படத்துக்கு ஆடியன்ஸ் வராமல் போகலாம்.
மெக்ஸிகன் இயக்குநர் அமாட் எஸ்கலாண்ட்டேவுக்கு (Amat Escalante) அப்படிப்பட்ட பிரச்னைகள் எதுவும் இல்லை.
ஹெலி என்பவன், மெக்ஸிகோவின் ஏதோ ஒரு தொலைதூர கிராமத்தில் தனது இளம் மனைவி, இரண்டு மாதக் குழந்தை, தந்தை மற்றும் பள்ளியில் படிக்கும் தங்கை ஆகியவர்களுடன் வாழ்ந்து வருகிறான். படத்தின் துவக்கத்தில், அவன் வீட்டுக்கு வரும் சென்ஸஸ் அதிகாரியிடம் இந்தத் தகவல்களை அவன் சொல்வதால் இவற்றை அறிந்துகொள்கிறோம். கிராமத்தில் இருக்கும் ஒரு மோட்டார் தொழிற்சாலையில் இரவுநேர ஷிஃப்ட்டில் வேலை செய்துவருகிறான். ஹெலியுமே மிகவும் இளைய வயது உடையவன்தான்.
மிகவும் அலுப்பாகவும் சுவாரஸ்யமற்றும் சென்றுகொண்டிருக்கிறது அவனது வாழ்க்கை. மாறாக, அவன் தங்கையின் வாழ்வு, மிகவும் துடிப்பாக இருக்கிறது. காரணம், அவள் ஒரு இளைஞனைக் காதலிப்பதே. அவனுக்கு வயது 17 என்பதை அவனே சொல்கிறான். உள்ளூர் ராணுவப் பயிற்சி முகாமில் தினசரி கடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். அவனது பெயர் – பெடோ (Beto). தங்கையின் வயது – 12-14 இருக்கலாம்.
உள்ளூர் ராணுவம், சுற்றுவட்டாரங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கோக்கெய்ன், மரியுவானா போன்ற போதை வஸ்துக்களை ஒரு நாள் ஒட்டுமொத்தமாக எரிக்கிறது. அதை எரிக்கும் பொறுப்பு, பெடோ இருக்கும் படைப்பிரிவுக்கு வழங்கப்படுகிறது.
பெடோவும் ஹெலியின் தங்கை எஸ்டெலாவும் (Estela) விரைவில் அந்த ஊரிலிருந்தே ஓடிவிடுவதாகத் திட்டமிடுகிறார்கள். எஸ்டெலா, பெடோவினால் அவளைக் காப்பாற்ற முடியுமா என்று கேட்க, பெடோ தயங்குகிறான். அவனிடம் பணம் இல்லை. இதன்பின் பெடோ, எஸ்டெலாவை (Estela) ஏதோ ஒரு அதிசயத்தைக் காட்டுவதாகச் சொல்லி ஒரு இடத்துக்கு அழைத்துச்செல்கிறான். ஆனால் அந்த இடத்தில் ஒரு நாய் கட்டிப்போடப்பட்டிருப்பதால் திரும்பிவந்துவிடுகிறான். அன்று இரவு ரகசியமாக அந்த இடத்துக்குச் செல்லும் பெடோ, நாயை சுட்டு வீழ்த்திவிட்டு அங்கிருந்து ஒரு பார்ஸலை எடுக்கிறான். அதில், ராணுவத்தினரால் எரிக்கப்பட்ட கோக்கெய்ன் பார்ஸலில் இருந்து திருடப்பட்ட இரண்டு பாக்கெட்கள் இருக்கின்றன. அதை விற்றுத்தான் எஸ்டெலாவை வேறு ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்துகொள்வது என்று முடிவு செய்திருக்கிறான் பெடோ.
பார்ஸலை எடுத்ததுமே எஸ்டெலாவின் வீட்டுக்கு வந்து, அவளை ரகசியமாக எழுப்பி, விஷயத்தை சொல்லி, சில நாட்கள் அந்தப் பார்ஸல்கள் எங்காவது ஒளித்துவைக்கப்பட்டிருப்பதே நல்லது என்று சொல்கிறான் பெடோ. எஸ்டெலாவும் அதை வீட்டின் மாடியில் இருக்கும் தண்ணீர் டாங்க்கில் ஒளித்துவைக்கிறாள்.
மறுநாள், வீட்டில் தண்ணீர் அடைபட்டிருப்பதால் அதைப் பார்க்கச்செல்லும் ஹெலி, டாங்க்கினுள் இருக்கும் பாக்கெட்களைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான். உடனடியாக அவற்றை ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு கிணற்றில் கொட்டிவிடுகிறான். வீட்டுக்கு வந்து தங்கையை அதட்டி, காதலனைப் பற்றித் தெரிந்துகொள்கிறான். பெடோவும் எஸ்டெலாவும் பேசிக்கொண்டிருந்ததை முந்தையநாள் இரவிலேயே ஹெலி பார்த்துவிட்டிருப்பதால்,
கோபத்துடன் எஸ்டெலாவை வீட்டில் அடைத்துவைக்கிறான்.
எஸ்டெலாவை அடைத்துவிட்டு, தனது சைக்கிளில் ஹெலி டயரை மாற்றிக்கொண்டிருக்கும்போது, வெளியே கதவு தட்டப்படுகிறது. உடைபடவும் செய்கிறது. உள்ளே அமர்ந்திருக்கும் ஹெலியின் தந்தை உடனடியாக ஒரு ரைஃபிளை எடுத்துக்கொண்டு பதுங்குகிறார். உள்ளே வருபவர்கள், ராணுவத்தினரின் உடையை அணிந்துகொண்டிருப்பவர்கள். ஹெலியின் தந்தையை சுட்டுக்கொல்பவர்கள், அங்கேயே ஹெலியையும் எஸ்டெலாவையும் கடத்திக்கொண்டு செல்கிறார்கள். அவர்களின் பிடியில் ஏற்கெனவே பெடோவும் இருக்கிறான்.
உண்மையில் பெடோ திருடிய கோக்கெய்னுக்கு உரிமையாளர்கள் இவர்கள் என்று தெரிந்துகொள்கிறோம். பெடோ திருடிய கோக்கெய்ன் எங்கே என்று தேடியே அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். ஹெலியிடமிருந்து, கோக்கெய்ன் கொட்டப்பட்ட செய்தியை அறிந்துகொண்டதும், ஹெலியின் தந்தையின் உடலை நடுத்தெருவில் எறிந்துவிட்டு, ஹெலி, பெடோ மற்றும் எஸ்டெலாவை எங்கோ கடத்திச் செல்கிறார்கள். அது ஒரு சிறிய வீடு. உள்ளே சில சிறுவர்கள் டிவியில் வீடியோகேம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதன்பிறகு நடப்பதுதான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட கதை. நிஜத்தில் கடத்தல்காரர்கள் மெக்ஸிகோவில் அளிக்கும் தண்டனையை அப்படியே படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் அமாட் எஸ்கலாண்ட்டே. இந்தக் காட்சி நடைபெறும்போது பல பெண்கள் தியேட்டரை விட்டு வெளியேறியதை கவனித்தேன். Serbian Film, கிம் கி டுக்கின் Isle, பஸோலினியின் Salo, Cannibal Holocust, பரதேசி (???!!!) போன்ற படங்களை ஏற்கெனவே பார்த்திருந்ததால், எனக்கு இந்தக் காட்சிகள் எந்தவிதமான பதற்றத்தையோ அல்லது பய உணர்வையோ வரவழைக்கவில்லை. என் அருகே அமர்ந்திருந்த ஷ்ரீக்கும் அப்படித்தான்.
இந்தக் காட்சியில், பெடோவை ஒரு சங்கிலியில் தொங்கவிட்டுவிட்டு, கிரிக்கெட் பேட்டை எடுத்து அவனது முதுகில் சரமாரியாக அடிக்கத் துவங்குகிறான் ஒருவன். பலமுறை அடித்தபின், அங்கு வீடியோகேம் விளையாடும் சிறுவன் ஒருவனிடம் பேட்டைக் கொடுக்கிறான். அவனோ, தனக்கு அலுப்பாக இருக்கிறது என்று சொல்லிவிடுகிறான். பின்னர், இன்னொரு சிறுவனிடம் அந்த பேட் செல்கிறது. அவனும் தன் பங்குக்கு, இதற்குள் மயங்கிவிட்ட பெடோவின் முதுகை நார் நாராகக் கிழிக்கிறான். இதன்பின் அடிப்பதை நிறுத்தச்சொல்லிவிட்டு, இன்னொரு சிறுவனை அழைக்கிறான் முதல் ஆள். அந்தச் சிறுவன், பெடோவின் ஆணுறுப்பில் பெட்ரோலைப் பீய்ச்சிவிட்டு அதனைப் பற்றவைக்கிறான். ஆணுறுப்பு கருகும் வலி, பெடோவை எழுப்புகிறது. கதறும் பெடோ, மறுபடி மயக்கமடைகிறான். இதன்பின் பெடோவை நாற்சந்தியில் தூக்கில் தொங்கவிடுகிறது அந்தக் கும்பல்.
ஹெலி, அவர்களால் விடப்படுகிறான். வீடு வந்து சேர்கிறான். நடைப்பிணமாக இருக்கும் ஹெலிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எஸ்டெலா இன்னும் அவர்களின் பிடியில்தான் இருக்கிறாள். ஹெலி, இதனால் மனத்தால் பாதிக்கப்படுகிறான். மனைவியுடன் இயல்பாக அவனால் உறவு கொள்ள முடிவதில்லை. வேலையில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. இரவு நேரத்தில், கையில் கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு உலவுகிறான். மறுநாள் தொலைக்காட்சியில், போலீஸ் உடையில் இருந்த- இவர்களைக் கடத்திய மனிதர்களின் தலைகள் வெட்டப்பட்டு, ஒரு காரின் பானெட்டில் வைக்கப்பட்டிருக்கும் செய்தி வருகிறது.
இதன்பின் என்ன நடந்தது என்பதை படத்தில் காண்க. எஸ்டெலா திரும்பி வந்தாளா? மூவரையும் கொன்றது ஹெலிதானா? எஸ்டெலாவைக் கடத்தியவர்களுக்கு என்ன நடந்தது? எல்லாவற்றுக்கும் படத்தின் இறுதியில் விடை இருக்கிறது.
சமீபகாலமாக உலகசினிமாக்களில் அதீத வன்முறை என்பது ஒரு இயல்பான விஷயமாக ஆகிவிட்டதை இந்தப்படமும் உணர்த்துகிறது. நான் ஏற்கெனவே எழுதியிருந்த Harmony Lessons படத்தின் முதல் காட்சியில் ஒரு செம்மறியாடு ஒரு சிறுவனால் கொல்லப்படுவது வருகிறது. எப்போதோ வெகு சில படங்களில் மட்டுமே இப்படி வந்துகொண்டிருந்ததை உலகப்பிரசித்தி ஆக்கியது கிம் கி டுக் தான். பின்னர் அது ஒரு அத்தியாவசிய அம்சமாகவே தற்போது ஆகிவிட்டது என்பதை இந்தப் படமும் உணர்த்துகிறது.
நிஜவாழ்வில் இப்படிப்பட்ட கடத்தல் நிகழ்ந்தால், இந்தப் படத்தில் இருப்பதுபோல்தான் நடக்கும். படத்தில் மிகையாக எதுவும் காட்டப்படவில்லை. மெக்ஸிகோவின் இப்போதைய நிலை இதுதான். அந்த வகையில், படம் எங்களுக்குப் பிடித்தது. படத்தில், சில குறியீட்டுச் செய்திகள் உள்ளன. படத்தின் இரண்டாம் பாதியில் நிகழும் சம்பவங்கள், முதல் பாதியைப் போல் விரிவாகக் காட்டப்படுவதில்லை. சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன என்ற செய்திகள் மட்டுமே சில இடங்களில் ஆடியன்ஸுக்கு அளிக்கப்படுகின்றன.
படத்தில் நகைச்சுவை இல்லாமல் இல்லை. பெடோ, ஹெலியின் தங்கையைக் கையில் சுமந்துகொண்டு பென்ச் ப்ரஸ் செய்யும் காட்சி ஒரு உதாரணம். இருந்தாலும், முதல் பாதியின் இயல்புத்தன்மை இரண்டாம் பாதியில் இல்லை. இரண்டாம் பாதி முழுதுமே மிகவும் தீவிரமாகச் செல்வது ஒரு காரணம்.
படத்தின் இயக்குநர் அமாட் எஸ்கலாண்ட்டே, இதற்கு முன்னர் இரண்டு படங்களை எடுத்திருக்கிறார் (Sangre & Los Bastardos). இரண்டுமே கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கின்றன. அதீத வன்முறை என்பது இவரது ஸ்பெஷாலிடி. Heli திரைப்படத்துக்காக, கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் விருதை வாங்கியிருக்கிறார் எஸ்கலாண்ட்டே.
படத்தின் ஒளிப்பதிவு, குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விஷயம். கேமராவை கவனித்துப் பாருங்கள்.
Heli ஒரு முக்கியமான படம். அதில் சந்தேகமில்லை.
இதற்கு முந்தைய பெங்களூர் திரைப்பட விழா பதிவுகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யலாம்.
நம்ப ஹாலிவுட் பாலா மாறி நீங்க பேய் படங்கள ஒரு series போல எழுதின நல்லாருக்கும்….. எப்ப ஆரம்பிக்றீங்க?
விரைவுல ஆரம்பிச்சிரவேண்டியதுதான் 🙂