A Bittersweet Life (2005) – South Korean: சினிமா எக்ஸ்ப்ரஸில் வெளிவந்த கட்டுரை
மே முதல் வாரத்தில் சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் எழுதிய கட்டுரை இது. இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதப் பல விஷயங்கள் உள்ளன என்றபோதிலும், சினிமா எக்ஸ்ப்ரஸ் வாசகர்களை கண்ட கண்ட புரியாத இலக்கிய வார்த்தைகள் உபயோகித்து ஓட ஓட விரட்டக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தப் படத்தைப் பற்றிய சுருக்கமான பார்வை இது.
ஒரு ஸென் குருவிடம் சீடன் கேட்கிறான் – ‘இலைகள் தானாக அசைகின்றனவா, அல்லது அது காற்றினால் நடக்கிறதா?’
குரு சொல்கிறார் – ’அசைவது இலையோ காற்றோ இல்லை. உனது இதயமும் மனதும்தான்’.
‘A Bittersweet Life’ என்ற இந்தக் கொரியன் படம், இந்த மேற்கோளுடன் தான் ஆரம்பிக்கிறது. இந்தப் படத்தின் அடிநாதமும் இதே மேற்கோள்தான்.
கொரியாவில் ’கிம்-ஜி.வூன்’ (Kim Ji Woon) என்று ஒரு இயக்குநர் இருக்கிறார். தனது ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு வகையில் இயக்கி, தனக்கு என்று எந்தவிதப் பாணியும் இல்லாமல் – அதேசமயம் இயக்கும் எல்லாப் படங்களையும் படம் பார்ப்பவர்கள் முழுமனதுடன் ரசிக்கும்படி எடுப்பதே இவரது ’பாணி’. கொரியா- திரைப்படம் என்றதும் பெரும்பாலானவர்கள் இது ஏதோ மிகவும் மெதுவாக நகரப்போகும் புரியாத மொழிப் படம் என்று எண்ணத்தான் வாய்ப்பு அதிகம். ஆனால், பொதுவாக உலகின் சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதாக தவறாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஹாலிவுட் படங்களைவிட அற்புதமாக எடுக்கப்படும் கொரியன் படங்களில் தலைசிறந்த ஒரு இயக்குநரால் எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம்தான் இது. மிகவும் வேகமாக நகரும் தன்மையுடன், பிரமாதமான பின்னணி இசை, அருமையான அர்த்தம் பொதிந்த கதை என்று இந்தப் படத்துக்குப் பல சிறப்புகள் உண்டு.
பொதுவாகவே கொரியன் படங்களில், ஆங்கிலப் படங்களில் இல்லாத பல அம்சங்கள் உண்டு. ஷாட்களை அமைப்பதிலிருந்து, இயல்புத்தன்மை, இசை, வேகமான திரைக்கதை, மனித வாழ்வின் அபத்தங்களைப் பற்றிப் பேசுதல் போன்ற பல விஷயங்களில் கொரியன் படங்கள் ஹாலிவுட்டைத் தாண்டி நிற்கின்றன. இதனால்தான் தற்போது கொரியப் படங்களை ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் வாங்கிக்கொண்டிருக்கின்றனர். இவற்றை வாங்கி, ஆங்கிலத்தில் எடுத்து வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். அப்படித் தற்போது வெளியாகிய ‘Oldboy’ என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் படுதோல்வி அடைந்தது. அதனை இயக்கியவர், புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்பைக் லீ. இருந்தாலும், ஓல்ட்பாய் போன்ற படங்கள், கொரியாவின் பிரத்யேகப் படங்கள். அதில் இருந்த ஜீவன் ஆங்கில வடிவத்தில் பறிபோய்விட்டது. கூடவே, ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் எதுவாக இருந்தாலும் அதை வணிகப்படுத்துதலின் விளிம்பில் கொண்டு சென்று தள்ளிவிடும். இதனால் வேறு மொழியில் இருக்கும் ஒரு படத்தை அப்படியே அதன் ஜீவன் மாறாமல் ஹாலிவுட்டால் எடுக்க முடியாது.
நாம் மேலே பார்த்த Oldboy தான் கொரியப்படங்களை உலகம் திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் பிரதானமானது. அதனை இயக்கியவர் – பார்க் – சான் – வூக். இவரது படங்கள் மிகப் பிரபலமானவை.
சரி. நாம் முதலில் பார்த்த Bittersweet Life படத்தைக் கவனிப்போம். இன்றுவரை உலகப்படங்களைப் பார்க்கும் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத இடம் இந்தப் படத்துக்கு உண்டு. காரணம் என்ன? விரிவாகப் பார்ப்போம்.
கிம்-சுன்-வூ (சுருக்கமாக இனிமேல் கிம்) என்பவன் ஒரு நிழலுலக தாதாவுக்கு அடியாளாக இருப்பவன். அவர் பெயர் காங். ஏழு வருடங்களாக காங்கிடம் ஒரு விசுவாசமான நாயைப் போல வேலை செய்துகொண்டிருப்பவன் கிம். அவன் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் காங், அவனுக்கு ஒரு வித்தியாசமான வேலையைக் கொடுக்கிறார். காங்குக்கு ஒரு காதலி உண்டு. அவள் காங்கை விடவும் பல வயது இளையவள். அவள் பெயர் ஹீ – ஸூ. இந்த ஹீ – ஸூவுக்கு இளவயதுக் காதலன் ஒருவன் உண்டு என்பது காங்கின் சந்தேகம். எனவே, ஒரு முக்கியமான வேலை காரணமாக வெளியூர் செல்லும் காங், இந்த இடைப்பட்ட நேரத்தில் அப்படி ஒரு காதலன் ஹீ – ஸூவுக்கு இருப்பது உண்மையா என்று கிம்மிடம் கண்டுபிடிக்கச் சொல்கிறார். அது மட்டும் உண்மையாக இருந்தால், அவனே இருவரையும் கொன்றுவிடலாம் என்றும் சொல்லிச்செல்கிறார்.
இந்த உண்மையைக் கண்டுபிடிக்கக் கிளம்புகிறான் கிம். தனது முதலாளி அனுப்பியதாக அந்தப் பெண்ணைப் போய்ப் பார்க்கிறான். தன்னை அவள்கூடவே இருக்கும்படிச் சொல்லியிருக்கிறார் என்றும் சொல்கிறான். ஆனால் அவள், கிம் அவளுடன் இருப்பதை விரும்புவதில்லை. எனவே கிம்மை அனுப்பிவிடுகிறாள்.
ஹீ – ஸூ, ஒருநாள் தனியாக உணவு உண்ண அலுப்பாக இருப்பதால் கிம்மை அழைத்துக்கொண்டு உணவு உண்கிறாள். அப்போதுதான் அவளை மிகவும் அருகில் நீண்டநேரம் பார்க்கும் வாய்ப்பு கிம்முக்குக் கிடைக்கிறது. அவளது சிறுசிறு அசைவுகளைப் பார்க்கையில் தனது மனதில் எதுவோ அசைவதைக் கிம் உணர்கிறான். அவளின் மீது அவனுக்கு உடனடியாகக் காதல் வந்துவிட்டது என்றெல்லாம் தமிழ்ப்படப் பாணியில் சொல்ல முடியாது என்றாலும், அந்த உணர்வு அவனுக்குப் பிடிக்கிறது. (மேலே துவக்கத்தில் இருக்கும் ஸென் கதை இதைத்தான் உணர்த்துகிறது). அதன்பின்னர் அவள் ஸெல்லோ (cello) என்ற இசைக்கருவியை வாசிப்பதைக் காண்கிறான். அவளிடமிருந்து அழகிய, மனதை வருடும் இசை பெருகுகிறது. இந்த இசை, கிம்மின் மனதையும் இதயத்தையும் அசைக்கிறது. அந்த அழகிய உணர்வை அப்போதுதான் முதல்முறையாகத் தனது மனதில் கிம் உணர்கிறான்.
இருந்தாலும் அவளை ரகசியமாகப் பின்தொடரும் கிம், அவளுக்கு ஒரு காதலன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறான். அன்று இரவு அவளது வீட்டுக்குள் அத்துமீறிச் செல்லும் கிம், அவளது காதலனை அடித்து வீழ்த்துகிறான். தனது முதலாளிக்கு ஃபோன் செய்யப்போகும் அந்த அயனான சந்தர்ப்பத்தில் அவளது அழகான சிறிய செய்கைகள் அவனது மனதில் நிழலாடுகின்றன. எனவே முதலாளிக்கு ஃபோன் செய்யாமல் தவிர்க்கிறான். இருவரும் இனிமேல் சந்தித்துக்கொள்ளக்கூடாது என்று கடுமையாக மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறான்.
இது, வெளியூரிலிருந்து திரும்பும் முதலாளி காங்குக்குத் தெரிகிறது. எனவே, வேறு ஒரு பிரச்னையில் இன்னொரு கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் கிம்மைத் தனது ஆட்களை வைத்து உயிரோடு புதைக்கிறார். அதிலிருந்து தப்பிக்கும் கிம்முக்குத் தனது முதலாளி ஏன் இப்படிச் செய்தார் என்பது துயரம் கலந்த வெறுப்பை ஏற்படுத்துகிறது.
முதலாளியைக் கொல்ல முடிவு செய்கிறான் கிம்.
இதன்பின் நடக்கும் சம்பவங்கள் நமக்கு முக்கியம் அல்ல. படத்தின் துவக்கத்தில் இருந்து நாம் காணும் காட்சிகள் வாயிலாக நமக்குச் சொல்லப்படும் செய்திகள்தான் முக்கியம். அவைதான் இந்தப் படத்தை மற்ற ஆக்ஷன் படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.
முதலாவதாக, irony எனப்படும் வாழ்க்கையின் முரண்கள். நம் எல்லோருக்கும் வாழ்க்கை எல்லாச் சமயங்களிலும் அழகாக இருக்கிறதா என்ன? மேடு பள்ளங்கள் நிரம்பிய வாழ்க்கையில் சந்தோஷம் என்பது எப்போதாவதுதானே கிடைக்கிறது? அதுதான் நாயகன் கிம்முக்கும் நடக்கிறது. அவனது வாழ்க்கை, பல வருடங்களாக ஒரு அடியாளாகவெ கழிகிறது. சந்தோஷம் என்றால் என்ன என்பதே தெரியாதவன் கிம். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் முதலாளி சொல்பவனை அடிக்கவேண்டும் என்பதே. அவனது மனதின் அடியாழத்தில் புதைந்துள்ள சந்தோஷம், அன்பு, ரசனை போன்றவற்றையெல்லாம், ஹீ – ஸூ என்ற பெண்ணைப் பார்த்ததுமே மெல்ல மெல்ல உணர ஆரம்பிக்கிறான். குறிப்பாக அவள் முடி கோதுவது, உணவை உண்பது போன்ற சிறிய சம்பவங்கள்தான் அவனது மனதில் அசைவை ஏற்படுத்துகின்றன. அந்த உணர்வு அவனுக்குப் பிடித்திருக்கிறது. அதனை இன்னமும் அதிகமாக உணர விரும்புகிறான். இப்படிப்பட்ட ஒரு உணர்வைத் தனக்குக் காட்டிய பெண்ணைக் கொல்ல அவனுக்கு மனம் வருவதில்லை. எனவேதான் ஹீ – ஸுவையும் அவளது காதலனையும் கொல்லாமல் விட்டுவிடுகிறான் கிம். இத்தனைக்கும், கிம்மின் மனதில் நிகழும் எந்தவித மாறுதல்களும் ஹீ – ஸுவுக்குத் தெரியாது என்பதுதான் முக்கியமான விஷயம். தனது இருப்பாலேயே இதெல்லாம் அவளையறியாமலே கிம்மின் மனதில் நடத்துகிறாள் ஹீ – ஸு. இதைத்தான் ஆரம்பத்தில் உள்ள ஸென் கதை விளக்குகிறது. இலை அசைவது காற்றினால் அல்ல. அதைப் பார்க்கும் நமது மனதினால்தான். போலவே, கிம்மின் மனதில் சலனம் வந்தது அவனாலேயேதான். இதைத்தான் படம் போகப்போக உணர்த்துகிறது.
கூடவே, இப்படிப்பட்ட காட்சிகளில் இசை என்பது மிகவும் முக்கியம். சில படங்களில் இசையே இல்லாமல் கூட இருப்பதுண்டு. ஆனால் இந்தப் படத்தில் தேவையான இடத்தில் மட்டும் இசை கச்சிதமாகப் பயன்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கிம்மின் மனது சலனப்படும் காட்சியில் ஹீ – ஸு ஸெல்லோவை வாசிக்கும்போது எழும் இசை அப்படிப்பட்டது. அதே காட்சி, படத்தின் இறுதியிலும் வரும். அப்போது இன்னும் அழுத்தமான உணர்வை அந்தக் காட்சி தரும். இதுபோன்ற மென்மையான காட்சிகளில் மட்டுமல்லாமல், ஆக்ஷன் காட்சிகளிலுமே அந்தக் காட்சிக்குத் தேவையான இசை சரியாக இருக்கும். ஸெல்லோவும் பியானோவும் இந்தப் படத்தில் அருமையான கூட்டணி அமைத்திருக்கின்றன என்று தாராளமாகச் சொல்லலாம்.
இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் கிம்–ஜி–வூன் சொல்கையில், ’நாயகன் கிம்மின் கதாபாத்திரம், நிஜவாழ்க்கையில் நமக்கெல்லாம் நடக்கும் சம்பவங்களை மனதில் கொண்டுதான் உருவாக்கப்பட்டது. சில சமயங்களில், நமது வாழ்வின் முக்கியமான காதலை, மிகச்சிறிய காரணங்களால் இழந்திருப்போம். பொதுவாக இதுபோன்ற இழபுகளுக்கு எல்லோரும் பெரிய காரணங்களைச் சொல்வார்கள். என்றாலும், யோசித்துப் பார்த்தால், அந்தப் பெரிய காரணத்துக்கு ஆணிவேராக ஒரு சிறுபிள்ளைத்தனமான, அற்பமான காரணம்தான் இருந்திருக்கும். எனவே, நாயகன் கிம், ஒரு அற்பமான சம்பவத்தின் மூலமாக அவனது வாழ்க்கையின் கொடூரமான முடிவுகளைச் சந்திக்க நேர்கிறது’ என்கிறார்.
மேலும், ‘இந்தப் படத்தில் சொல்லப்படாத காதலை, அன்பைச் சொல்ல விரும்பினேன். அந்தக் காதலின் வலிகளையும் உணர்த்த நினைத்தேன். புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் தத்துவவாதி ஸாக் தெரிதா (Jacques Derrida) சொல்லிய ஒரு மேற்கோள் எனக்குப் பிடிக்கும். ‘வெறுமே பார்த்துக்கொண்டிருக்கும் காதல்கூட துன்புறுகிறது’ என்பதுதான் அந்த மேற்கோள். எனவே, நாயகி ஹீ – ஸூவை விரும்பும் மனிதனாக – ஆனால் அவனது உணர்ச்சிகளை இறுதிவரை சொல்லாத மனிதனாக என் படத்தின் நாயகனை உருவாக்கினேன்’ என்றும் சொல்கிறார்.
இப்படியெல்லாம் அவர் சொல்வதால், படம் ஒரு மென்மையான படம் என்று நினைத்துவிடவேண்டாம். மிகவும் வேகமான ஆக்ஷன் படம் இது. ஆனால் அந்த ஆக்ஷனின் மத்தியில், மனித மனதின் சலனங்களையெல்லாம் பற்றி யோசித்துக் காட்சிகளை அமைத்திருக்கிறார் கிம்-ஜி-வூன்.
கிம்-ஜி-வூனின் பிற படங்களில், I saw the Devil, A Tale of Two Sisters, The Good, the Bad and the Weird போன்ற கொரியப்படங்கள் அடங்கும். இவையெல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. இவை அனைத்துமே அருமையான படங்களும் கூட. கிம்–ஜி-வூன், பார்க்-சான்–வூக், கிம்-கி-டுக், போங்-ஜூன்–ஹோ போன்ற அட்டகாசமான இயக்குநர்களின் படங்கள் தற்போது உலகின் பல நாடுகளை வலம் வருகின்றன. இந்தப் படங்களின் மூலம் கொரியா உலக சினிமாக்களில் தனக்கென்று ஒரு இடத்தையும் பெற்றுவிட்டது.
‘A Bittersweet Life’ படத்தின் இறுதியில் வரும் இன்னொரு ஸென் கதையோடு இந்தக் கட்டுரையை முடிக்கலாம். அந்தக் கதைக்கும் இந்தப் படத்துக்குமே நெருங்கிய தொடர்பு உண்டு.
ஓர் நாள், சிஷ்யன் திடீரென அழுதுகொண்டே தூக்கத்திலிருந்து கண்விழிக்கிறான். ஸென் குரு அவனிடம் பேசுகிறார்.
’கெட்ட கனவு எதாவது கண்டாயா?’
‘இல்லை’
’சோகமான கனவு ஏதேனும் கண்டாயா?’
’இல்லை… நான் கண்டது மிகவும் சந்தோஷமான கனவு’
‘பிறகு ஏன் அழுகிறாய்?’
சிஷ்யன் கண்ணீரை அமைதியாகத் துடைத்துக்கொண்டே சொல்கிறான் – ‘ஏனெனில், நான் கண்ட கனவு ஒருபோதும் நிஜமாகாது என்பதால்தான்’.
பி.கு
1. கருந்தேளில் பிற கிம் ஜீ வூன் படங்களைப் பற்றிப் படிக்க இதோ லிங்க் –> கிம் ஜீ வூன் படங்களின் விமர்சனம்
2. சினிமா எக்ஸ்ப்ரஸில் வந்த சுருக்கப்பட்ட கட்டுரையை இங்கே படிக்கலாம்
Thankyou for a wonderful review rajesh!!!
Thanks for the opinion boss 🙂
I enjoyed the review particularly the hero’s love!!!
Thank you :-). I didn’t want to write a very detailed review, as Cinema express is not a hardcore literary magazine. I wanted to present a short review to portray the importance of this film, and I think my article covers it.
http://www.youtube.com/watch?v=YXKFTzlBziI
அருமையான ரெவ்யு…. திரும்பவும் பார்க்கத்தோனும்படி எழுதியிருக்கிறீர்கள்.
ஹலோ கோஸ்ட் – கொரியன் காமெடி படம் பார்த்திருக்கிறீர்களா ?
இல்லையே பாஸ். நல்லா இருக்குமா?
anna the storyline which you narrated resembles me Thotti Jaya. On the top view, the hero opposes his boss. Do they have any similarities? Please correct me if im wrong
why u didnt write about raid redemption and raid 2 berandal..? not as world cinema, just a good action movie..
I will definitely write boss. Very soon
This has a same storyline as thotti jaya, but that cannot be copy of this because it released in the same year(2005), So let’s think both directors had a same idea at the same time or both are copy of some other movie. I believe this will be revealed by our Karundhel.
May be yes. But I still think there is no ‘similar’ storyline. May be distantly both have a same scene or something..
Excellent 🙂
yea but ya gotta think,all 3 of the castlvania games on nes have stiff controls and have cheap deaths,thankfully,that is fixed in every game after the first 3.
Please write about some other best Korean
movies
sure boss. I will. soon
but whos that who kills the hero ?
That’s the brother of a weapon supplier who was killed by the Hero
Rajesh thanks for your Valuable time for replying. As you said It is not Only an action Movie but also an
emotional Movie. but I dont remember any scene conveying the killer to be the brother of arm dealer or we Should Construe the same?
Have you seen “Montage (2013) ” (Korean)? Good Thriller..You may like it..