கரீப் நவாஸ் . .
இதோ நமது ட்ரயாலஜியின் கடைசிப் பாடல். இத்தோடு பாடல்களைப் பற்றித் தொடர்ந்து எழுதுவதற்கு ஒரு கமா விட்டுவிட்டு, மறுபடி படங்களைப் பற்றிப் பார்ப்போம். அவ்வப்போது நல்ல பாடல்களைப் பற்றி எழுதுகிறேன் (யப்பாடி நிறுத்தினாண்டா சாமி).
இந்தப் பாடலான ‘கரீப் நவாஸ்’ பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்தப் பாடல் எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றி சற்றுப் பார்ப்போம்.
பதிமூன்றாம் நூற்றாண்டில், வட இந்தியாவில், ஆஜ்மீரில் வாழ்ந்த ஒரு துறவி, க்வாஜா மொய்னுதீன் (ச்)சிஷ்டி. இவரது முழுப்பெயர், ஷேக் க்வாஜா சையத் முஹம்மத் மொய்னுதீன் சிஷ்டி. மிகவும் சக்திவாய்ந்த ஒரு சூஃபி துறவி. ‘சிஷ்டி’ என்ற ஒரு புதிய பிரிவை இந்தியாவில் தொடங்கிவைத்த முதல் துறவி ஆவார். இவரது மிகப்பிரபலமான மற்றொரு பெயர், ‘கரீப் நவாஸ்’ என்பதாகும். இதற்கு, ‘ஏழைகளின் பாதுகாவலர்’ என்பது பொருள். இவர், முஹம்மது நபியின் வழித்தோன்றலும் ஆவார்.
இரானில் கி.பி. 1141ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது இளவயதில், ஒரு முஸ்லிம் துறவி அளித்த ஒரு ரொட்டியைச் சுவைத்தவுடன், ஞானம் அடைந்து, தனது சொத்துக்களைத் துறந்து, உலகெங்கும் பயணம் மேற்கொண்டார் என்பது இவரைப் பற்றிய உண்மை. பயணத்தின் போது லாகூருக்கு வந்த இவர், அங்கிருந்து கோரி முஹம்மத் என்ற மன்னனுடன் (மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ – நினைவிருக்கிறதா?) இந்தியாவிற்கு – ஆஜ்மீருக்கு வந்து, அங்கேயே தங்கி விட்டார்.
அவர் வாழ்ந்த காலத்தில், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு – ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இருபாலருக்குமே – அருளை அள்ளி வழங்கினார். குறிப்பாக ஏழை மக்களுக்கு, எப்பொழுதும் இல்லை என்னாமல் அருளையும் பொருளையும் வாரி வாரி வழங்கினார். பல புத்தகங்களையும் எழுதினார். இன்றும், இவரது தர்ஹாவில் கூட்டம் அலைமோதுவதை, ஆஜ்மீருக்குச் செல்லும் நண்பர்கள் கவனித்திருக்கலாம். வட இந்தியாவில் இவரைத் தெரியாதவர்களே இல்லை.
இப்பொழுது, பாடலைப் பார்க்கலாம். இந்தப் பாடல், ஜோதா அக்பரில் வருகிறது. கதையின்படி, திருமணத்துக்கு முன்னர், இவரது அருளை வேண்டி, இளம் அக்பரின் முன்னிலையில் பாடப்பெறும் ஒரு பாடல் இது.
கரீப் நவாஸ் பாடலை, இந்தச் சுட்டியில் தரவிறக்கிக் கொள்ளலாம் (டவுன்லோட்). இதோ பாடலின் மொழிபெயர்ப்பு.
‘என்னுடைய க்வாஜாவே . . எனது இதயத்தில் வந்து வாழுங்கள். .
நீங்களே அரசர்களின் அரசர் ஆவீர்கள்; நீங்களே அலியின் (அலி – நபியின் மருமகன்) விருப்பத்திற்கு உரியவரும் ஆவீர்கள் . .
ஏழை எளியவர்களின் கொடும்விதியை, நீங்களல்லவா மாற்றினீர்கள் . .
(க்வாஜா. .)
க்வாஜாவே . .உங்களது அரசவையில், அருளின் ஒளியை நாங்கள் காண்கிறோம் . .
உங்களது அரசவையில், மற்ற சாதுக்களும் அருளாளர்களும் உங்களிடம் தலைவணங்குகின்றனர் . .
நீங்களே எங்களது பாதுகாவலர் . .உங்களது திருநாமம், எவ்வளவு அழகு . .
உங்களை நாங்கள் வணங்கினால்/விரும்பினால், நபியான முஸ்தஃபாவின் அருளும் எங்களுக்குக் கிடைத்திடும் . .
(க்வாஜா. .)
எனது குருவிற்கு எனது வணக்கங்கள் . . எனது அன்பிற்குறிய வணக்கங்கள் . .
அவரது மூலமாகத் தான் உங்களைத் தெரிந்து கொண்டேன் . .
எங்களது அனைத்துக் கவலைகளும் இப்பொழுது தொலைந்து விட்டன . .நாங்கள் உங்களது ஆனந்தமாகிய ஒளியின் நிழலில் அல்லவா இருக்கிறோம் . .
தங்களின் மேல் எவரும் எவ்வளவு பொறாமை கொண்டாலும், அது மிகச்சிறிய அளவுதான் எங்களின் வணக்கத்திற்கு உரிய க்வாஜாவே . .
உங்களை விட்டுப் பிரிவது சரியே அல்ல; நீங்கள் தாம் எமது வழிகாட்டி..
(க்வாஜா. .)
ரஹ்மானின் குரலின் முழுவீச்சும் இப்பாடலில் அற்புதமாக வெளிப்படும். பாடல் தொடங்குமுன், கிட்டத்தட்ட ஒன்றரை நிமிடம், அவரது ‘ஆலாப்’ என்றழைக்கப்படும் ஆலாபனையை நாம் ரசிக்கலாம். மிகத்தேர்ந்த பாடகர்களே பாடுவதற்குத் திணறும் ஒரு ‘ஹைபிட்ச்’ குரலில், அனாயாசமாகப் புகுந்து விளையாடியிருப்பார்.
இப்பாடலை, இதற்கு முன் நாம் பார்த்த ‘பியா ஹாஜி அலி’ மற்றும் ‘அர்ஸியான்’ பாடல்களோடு சேர்த்துக் கேளுங்கள். ஒரு அற்புத மனநிலையை நீங்கள் அடைவது திண்ணம்.
இத்துடன் நமது பாடல்களைப் பற்றிய பதிவுகள் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வருகின்றன. இனிமேல் தொடர்ந்து திரைப்படங்களைப் பார்ப்போம். அவ்வப்போது நல்ல பாடல்களைப் பற்றி எழுதுகிறேன். நாளை ஒரு நல்ல திரைப்படத்துடன் வருகிறேன் . .
பி.கு – நமது ரஹ்மானின் வலைத்தளம், இங்கே . அதில், அவரது அனைத்துப் படங்களும், பாடல்களும், மிக நல்ல முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது, அவர் இதுவரை இசையமைத்த விளம்பரங்களும் (ஆரம்ப நாட்களில் இருந்து) கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே கிளிக்குங்கள்.
சந்தோஷமா வாங்க.. தேளு…
எல்லாம் அர்த்தம் புரியாமலே கேட்டு அனுபவிச்ச சரக்குகள். 🙂
உங்களால அதுவும் தெரிஞ்சிகிட்டோம்!
@ அண்ணாமலையான் – வந்தாச்சு தல. . நாளை பாருங்க . . 🙂
@ பப்பு – எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே . . நம்ம தல பட்டைய கிளப்பின பாட்டுங்கள பஹ்தி எழுதினா என்னன்னு தோணிச்சி . .அதான் . . அதுவும் அவரால்தான் .. 🙂
நண்பரே, நல்ல மொழிபெயர்ப்புடன் வரலாற்றுத் தகவல்களும் அருமை. சிறப்பான பதிவு. போட்டுத் தாக்குங்கள் சினிமாப் பதிவுகளை நண்பரே.
காதலரே . .சினிமாப் பதிவுகள் இதோ மறுபடி தொடங்கப்போகின்றன . . போட்டுத்தாக்கிவிடுவோம் . . :–)
பாட்டு பதிவு சூப்பர்…அப்படியே சினிமா பற்றி பதிவு போடுங்க ராஜேஷ் …:)
இதோ சினிமா பதிவு வந்துக்கினே இருக்கு . .வெகு விரைவில் .. :–)
ஜோதா அக்பர் பாடல்கள்(ஹிந்தி)வேளியாகி இன்னைக்கு வரைக்கும் மனசு அமைதியா இல்லன்னா எனக்கு அமைதிய கொடுக்கக்கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று. தமிழில் கேட்பதைவிட இந்தியில் கேட்கும் பொழுது அர்த்தம் புரியாவிட்டாலும் மனதை வருடிச்செல்லும்.
http://youtu.be/65aMwHImyFA
The song in tamil
Hi all! Great initiative Mr. Karundhel.. my name is Mashook Rahman. I penned the Tamil version of the song Khwaja endhan Khwaja.. Good to see your translation too.. visit me if have time http://www.facebook.com/mashookpoet
Dear Mashook. I just read your comment in my கரீப் நவாஸ் translation, and was very happy to know that you have done the song in tamil. Saw your blog too, and it was nice.
Cheers and best wishes to you. Happy to connect
Thank you Rajesh.. Wishes to you too..
சூபிசம் என்றால் என்ன? அனைவரும் விளங்கி கொள்ளக்கூடிய விதத்தில் இலகுவாக விளக்கப்பட்டுள்ளது.
http://www.mailofislam.com/sufism_tamil.html
சூபிசம் சம்பந்தமான நூல்கள்
http://www.mailofislam.com/tamil_books.html
அருமையான விளக்கம் மிக நன்றி 🙂
குன் பாயா குன் மனதைக் கரைத்து விட்டது..நன்றி நண்பரே.தேசம் படப்பாடலுக்கு நான் அடிமை..