Brightburn (2019) – English

by Karundhel Rajesh May 28, 2019   English films

 

வேறு ஒரு கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்த ஒரு குழந்தை என்றால் அது எப்படி இருக்கும்? இதற்கு சூப்பர்மேன் சாட்சி. பெற்றோருக்கு அந்தக் குழந்தையின் சக்திகள் மெதுவாகத் தெரிய ஆரம்பிக்கும். அதை வைத்துக்கொண்டு அந்தக் குழந்தை தன் வாழ்க்கையில் மெல்ல மெல்ல தன்னையே புரிந்துகொள்ள அந்தப் பெற்றோர்கள் உதவுவார்கள். அதன்பின் அது ஒரு சூப்பர்ஹீரோவாக மாறி, மனிதகுலத்தின் மேன்மைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும். இதுதான் பொதுவான டெம்ப்ளேட். இதற்கு சூப்பர்மேன்ஹெல்பாய், Silver Surfer, He-Man என்பதில் துவங்கி, இன்னும் நிறைய உதாரணங்கள் உண்டு. இதனிலேயே, பூமியில் பிறந்து, பிற கிரகங்களில் சூப்பர்ஹீரோ ஆனவர்களும் உண்டு (Star Lord, Captain Marvel போல). ஆனாலும், இவர்கள் அனைவருமே நல்லவர்களே.

அப்படி இல்லாமல், ஒருவேளை பூமியில் வந்து விழுந்த குழந்தை ஒரு சூப்பர் வில்லனாக இருந்தால்? அதுதான் Brightburn.

Guardians of the Galaxy திரைப்படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன் தயாரிப்பில், அவரது இரண்டு சகோதரர்கள் திரைக்கதை எழுதி, டேவிட் யாரோவெஸ்கி இயக்கிய (இரண்டாவது படம்) இது. இதன் பட்ஜெட் மிகச்சிறியது. வெறும் ஆறு மில்லியன் டாலர்கள். எண்பதுக்கும் மேற்பட்ட ம்யூஸிக் வீடியோக்களும் விளம்பரப் படங்களும் எடுத்திருப்பவர் டேவிட் யாரோவெஸ்கி. ஜேம்ஸ் கன்னின் நீண்டகால நண்பரும் கூட. கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி படத்துக்கும் முன்னரே, ஜேம்ஸ் கன்னும் டேவிட் யாரோவெஸ்கியும் திரைப்படம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று பல காலம் முயற்சித்திருக்கின்றனர். ஒரு நாள் ஜேம்ஸ் கன்னின் சகோதரர்கள் ப்ரயன் கன் & மார்க் கன் ஆகிய இருவரும், இந்தப் படத்தின் கதையை யாரோவெஸ்கியிடம் சொல்ல, உடனே கதையும் அவருக்குப் பிடித்துவிட, ஜேம்ஸ் கன்னிடமும் கதையைச் சொல்லி, அவரது சம்மதத்தையும் பெற்று, அதன்பின் தயாரிப்பாளர்களைப் பிடித்து, எடுக்கப்பட்ட படம் இது.

இத்தனை காலமாகவே, ஏலியனாக இருந்தால் அது சூப்பர்ஹீரோதான் என்பதை உடைக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

இதற்கு, ஒரு பேட்டியில், அருமையான உதாரணம் கொடுக்கிறார் யாரோவெஸ்கி. பேட்மேன் படங்களிலும் கதைகளிலும், அவர் பொதுவான ஹீரோவாகவே இருந்தாலும், படங்களிலும் கதைகளிலும் வரும் திருடர்கள், கெட்டவர்கள் ஆகியவர்களுக்கு அவர் வில்லன் தானே? ஒரு இருட்டுத் தெருவில் நிற்கும் ஒரு அடியாளின்மீது, திடீரென்று தலைகீழாக இறங்கும் ஒரு முரட்டு உருவம், யாரென்று தெரிவதற்கு முன்னரே தபதப என்று அவனை அடித்துப்போட்டுவிட்டுப் பறந்துசென்றால், அடிவாங்கியவனுக்கு எவ்வளவு பயமாக இருக்கும்? இந்தக் காரணம்தான் இப்படி ஒரு படத்தை இயக்கக் காரணமாக இருந்தது என்பது டேவிட் யாரோவெஸ்கியின் கருத்து.

இந்தத் திரைப்படம் இந்தியாவில் மிகச்சில ஊர்களில் மட்டுமே வெளியாகியுள்ளது. அதிருஷ்டவசமாக, நான் பெங்களூரில் இருப்பதால், சுலபமாகப் பார்க்கவும் முடிந்தது. நான் பார்த்த தியேட்டரில் (கோபாலன் க்ராண்ட் மால்), நான் தான் இரண்டாவது கஸ்டமர். மொத்தம் ஐந்து பேர் வந்தால்தான் படத்தைப் போடமுடியும் என்று சொன்னதால், காத்திருந்தேன். சரியாகப் படம் துவங்கும் நேரத்தில் மூன்றே பேர் மட்டும் வந்து டிக்கட் வாங்க, படம் துவங்கியது.

இந்தப் படத்தை ஒரு Prequel கதை என்றே சொல்லமுடியும். பொதுவாக எல்லா சூப்பர்ஹீரோ படங்களிலும், ஒரு சூப்பர்ஹீரோ எப்படி உருவானான் என்று காட்டுவார்கள் இல்லையா? Batman Begins, Man of SteelSpidermanIron man ஆகியவை போல. அப்படி, ப்ராண்டன் ப்ரேயர் (Brandon Brayer) என்ற குட்டி சூப்பர்ஹீரோ எப்படி உருவாகிறான் என்பதுதான் இந்தப் படம். ஆனால், மற்ற படங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், மேலே சொல்லப்பட்ட படங்களில், முதல் 30-45 நிமிடங்களுக்குள்ளாக ஒரு சூப்பர்ஹீரோ உருவாகிவிடுவான். அதன்பின் அந்த சூப்பர்ஹீரோவோடு மோத ஒரு சூப்பர் வில்லன் வருவான். இருவருக்கும் போராட்டம் நடந்து, இறுதியில் சூப்பர்ஹீரோ, தன் சக்திகளை நன்றாக உணர்ந்துவிடுவான். அடுத்த பாகங்களில் இன்னும் பிரம்மாண்டமான வில்லன்களுடன் மோதுவான். அதுவே ப்ரைட்பர்ன் படத்தில், சூப்பர் வில்லனாக ஒரு சிறுவன் எப்படி உருவாகிறான் என்ற – முதல் 30ல் இருந்து 45 நிமிடங்களுக்குள் சொல்லப்படவேண்டிய கதையே, ஒண்ணரை மணி நேரமும் ஓடுகிறது. படத்தின் இறுதியில்தான் அந்தச் சிறுவன் சூப்பர் வில்லனாக முழுமையான அவதாரம் எடுக்கிறான். அத்துடன் படம் முடிகிறது.

இதனால் என்ன நடக்கிறது என்றால், படம் பார்க்கும் நமக்கே, அடுத்தது என்ன நடக்கப்போகிறது, யார் இறக்கப்போகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. படத்தின் துவக்கத்தில் இருந்து அறிமுகமாகும் கதாபாத்திரங்களே மிகக்குறைவு (சிறிய பட்ஜெட் படம்). எனவே அவர்களின் அறிமுகத்தின்போதே, அவர்கள் இறக்கப்போகிறார்கள் என்பதற்கும் சில leading வசனங்கள் வைக்கிறார்கள். இது புரிந்துவிடுவதால், அவர்கள் இறக்கப்போகிறார்கள் என்பதில் சந்தேகம் இன்றி, எப்படி இறக்கப்போகிறார்கள் – அதையாவது பார்க்கலாமே என்று தோன்றிவிடுகிறது. இவைதான் படத்தின் இரண்டு பிரச்னைகள்.

இது சூப்பர்ஹீரோ genreஇலேயே ஒரு ஹாரர் படமும் கூட. கிட்டத்தட்ட slasher படங்களில் வரும் அளவு வன்முறை தெறிக்கிறது. அதுவும், அவைகள் ஒரு சிறுவனால் நிகழ்த்தப்படுகின்றன. மண்டையைப் பிளப்பது, முகரக்கட்டை அறுந்து தொங்குவது, உடலையே ரத்தக்களறியாக்கிப் பிய்த்து வீசுவது போன்ற காட்சிகள் அனைத்தும் இதில் வருகின்றன (இதிலும் ஒரு இடத்தில் ஒரு உடல் தொங்குகையில் நம்மூர் சென்சார் புத்திசாலிகள் அதை blur செய்யச்சொல்லி இருக்கிறார்கள். இதுவே ஒரு A சர்ட்டிஃபிகேட் படம். இதிலுமா?). ‘ஒரு சிறுவன், ஒரு முகமூடி அணிந்ததுமே அவன் பயம்கொள்ளத்தக்க ஆளாக மாறிவிடுகிறான்’ என்பதும் இயக்குநர் டேவிட் யாரோவெஸ்கியின் கருத்துதான். அது உண்மையாகவே அப்படித்தான் இருக்கிறது (Orphanage படம் ஒரு உதாரணம்). படத்தில் மிகச்சில பயமுறுத்தும் தருணங்களும் உண்டு.

ஒருவேளை இதற்கு ஒரு sequel வந்தால்,  இந்தச் சிறுவன் யாருடன் மோதப்போகிறான் என்பது தெரியலாம். ஒரு வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இப்படத்தைப் பார்க்கமுடியும். ஆனால் நான் சொன்னபடி, கதை ஆரம்பத்திலேயே தெரிந்துவிடவும் வாய்ப்பு உண்டு.

படத்தில், ப்ரைட்பர்ன் என்ற சூப்பர் வில்லனாக வரும் சிறுவனுக்கு, சூப்பர்மேனுக்குரிய அத்தனை சூப்பர்பவர்களும் உண்டு. இதனால் சூப்பர்மேன் கதாபாத்திரத்தையே subvert செய்து, மாற்றி அளித்திருக்கிறார்கள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

 

  Comments

Join the conversation