The Coast Guard (2002) – South Korean

by Karundhel Rajesh April 6, 2011   world cinema

இந்த உலகின் சிறந்த தற்கால இயக்குநர்களில் ஒருவரான கிம் கி டுக்கின் படங்களைப் பார்ப்பது ஒரு தேர்ந்த கலாபூர்வமான அனுபவமாக இருப்பதற்குக் காரணம், அவரது படங்களில் வெளிப்படும் மனித உணர்வுகளின் வெளிப்பாடு. அவரது படங்களில் வரும் கதாபாத்திரங்கள், பொதுவாகத் தங்களது உணர்வுகளை வசனங்களின் மூலம் வெளிப்படுத்தாமல், அவர்களது செய்கைகள் மூலமே வெளிப்படுத்துவதைப் பார்த்து வருகிறோம். அதேபோல், தனது படங்களில், படம் பார்க்கும் ரசிகர்களையும் நேரடியாக ஈடுபடுத்துவது அவரது பாணி. இதன்மூலம், படத்தில் நமக்கும் ஒரு ஈடுபாடு வந்துவிடுகிறது. தனது முக்கியமான படங்களான த ஐல் (2000), ஸ்ப்ரிங் சம்மர் ஃபால் விண்டர் அண்ட் ஸ்ப்ரிங் (2003), சமாரிடன் கேர்ல் (2004), 3 – அயர்ன் (2004), டைம் (2006) மற்றும் ப்ரெத் (2007) ஆகிய படங்கள் அத்தனையிலுமே படம் பார்க்கும் ரசிகர்களைப் படங்களில் நேரடியாக ஈடுபடுத்தியிருப்பார்.

கிம் கி டுக்கின் கோஸ்ட் கார்ட் திரைப்படம், மற்றொரு திரைப்பட மேதையான ஸ்டான்லி குப்ரிக்கின் ‘ஃபுல் மெடல் ஜாக்கெட்’ (1987) படத்தின் சில துணுக்குகளை நமக்கு நினைவுபடுத்துகிறது. கோஸ்ட் கார்ட் படத்தின் அடிநாதமாக அமைவது, ஒரு ராணுவ வீரனுக்கு ஏற்படும் மனநிலை பாதிப்பு. தனது கடமைகளை அளவுக்கு மீறிய ராணுவ ஒழுங்குடன் செய்துவரும் ஒரு ராணுவ வீரன், எவ்வாறு தனது லட்சியத்தை நினைத்துக்கொண்டே அதனால் மனநிலை பிறழ்ந்து, பிறருக்கு இன்னல்களை விளைவிக்கத் தலைப்படுகிறான் என்பதே கோஸ்ட் கார்ட் படத்தின் கதை. ஃபுல் மெடல் ஜாக்கெட்டிலும், முதல் பகுதியில் இதைப்போலவே ஒரு கதை கையாளப்பட்டிருப்பதை, அப்படம் பார்த்தவர்கள் உணர்ந்திருக்கலாம். லியனார்ட் என்ற மந்தமான ராணுவ வீரனை எப்பொழுது பார்த்தாலும் கேலி செய்து கொண்டே இருக்கும் ஹார்ட்மேன் என்ற கமாண்டர், லியனார்டின் லாக்கரில் ஒரு டோனட் இருப்பதை அறிந்து, அந்த ராணுவப் பிரிவு முழுவதற்கும் தண்டனை கொடுக்க, இதனால் கோபமடையும் அந்தப் பிரிவின் வீரர்கள் அனைவரும் ஓர் நாள் இரவில் லியனார்டைக் கடுமையாக அடித்துவிட, இதற்குப் பின் மிக ஒழுங்கான வீரன் என்று பெயரெடுக்கும் லியனார்ட், மெல்ல மெல்ல மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி, தனது துப்பாக்கியிடம் பேசத் துவங்குகிறான். மனநிலைப் பிறழ்வின் உச்சத்தில், ஹார்ட்மேனையும் கொன்று விடுகிறான்.

இதேபோல், மற்றொரு ஆங்கிலத் திரைப்படமான ஜார்ஹெட்டிலும் (Jarhead), இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டிருக்கும்.

கிட்டத்தட்ட இந்தப் படத்தை நினைவுபடுத்தும் வகையில் ஓரிரு சம்பவங்களை நினைவுகூர முடிகிறது கோஸ்ட் கார்ட் படத்தில்.

தென் கொரியக் கடலோரப் பகுதிகளில் Saemangeum என்று ஒரு இடம். தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் ராணுவப் பிரச்னைகள் இருப்பதால், தென்கொரியாவின் இந்த இடம் மிகவும் முக்கியமான கடலோரப் பகுதியாக இருக்கிறது. இந்த இடத்தின் வழியே, சில வடகொரிய உளவாளிகள் இதுவரை ஊடுரூவியிருப்பதால், இந்த இடத்தில் பலத்த காவல் போடப்பட்டிருக்கிறது. இரவில் இந்தப் பிராந்தியத்தில் நுழைபவர்கள் எவராக இருந்தாலும் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்பது சட்டம். இந்த இடத்தில் காவல் இருக்கும் வீரர்களின் குழுவுக்கு, கோஸ்ட் கார்ட் ப்ளடூன் 23 என்று பெயர். இந்த இருபத்து மூன்று பேரில் ஒருவன் தான் காங் ஹாங் ச்சுல். வட கொரிய உளவாளிகளை எப்படியாகிலும் பிடித்துவிட வேண்டும் என்பது இவனது லட்சியமாகவே இருக்கிறது. இதற்காகவே, ஒவ்வொரு இரவிலும், காவலிருக்கும் வேளையில், முகத்தில் யுத்தச் சாயம் பூசிக்கொண்டு, துப்பாக்கி சகிதம் மிகவும் தயாரான நிலையிலேயே இருக்கிறான். சக வீரர்கள், இனிமேல் எந்த உளவாளியும் ஊடுரூவப்போவதில்லை என்று சிரித்தபடி இவனிடம் சொல்லி விளையாடுவதையும் இவன் பொருட்படுத்துவதில்லை.

கரையோரம் மீன்களைப் பிடித்து விற்கும் தொழிலில் இருப்பவன், ச்யோல் கு என்ற இளைஞன். இவனுக்கு மீ யோங் என்ற தங்கை உண்டு. கில் என்பவன், மீ யோங்கின் காதலன். பொதுவாகவே, நம்மிடம் ஒரு பழக்கம் உண்டு. எந்தப் பிராந்தியத்திலாவது ராணுவம் முகாமிட்டு, அவர்களால் பொதுமக்களுக்கு இன்னல் நேர்ந்தால், அந்த ராணுவத்தை விமர்சித்துக் கொண்டே இருப்பது வழக்கம். அதேபோல், இந்த Saemangeum பிராந்தியத்திலும், ஏற்கெனவே ஒரு வயதான பெண்மணியை ராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறது – அப்பெண்மணி, இரவில் வழிதவறி ராணுவ வரம்புக்குள்ளிருக்கும் இடத்தில் பிரவேசித்ததால். எனவே, மக்களுக்கு ராணுவத்தின் பெயரில் எந்த வித அபிமானமும் இல்லை. தங்களது வரிப்பணத்தைக் கொள்ளையடிக்க வந்தவர்களாகத்தான் ராணுவத்தினரை, அந்தப் பிராந்திய மக்கள் பார்க்கின்றனர்.

ஒருநாள், ச்யோல் கு-வும், மீ யோங்கும், கில்லும் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், அந்தப் பக்கமாக நடந்து செல்லும் ராணுவ வீரன் காங் ஹான் ச்சுல்லைக் கிண்டல் செய்கின்றனர் ச்யோல் கு-வும் கில்லும். கோபமடையும் காங் ஹான், அவர்களுக்குத் துணிச்சல் இருந்தால், இரவில் வந்து பார்க்குமாறும், அப்படி இவர்கள் வரும் பட்சத்தில், தனது எறிகுண்டு, இவர்களைச் சின்னாபின்னாமாக்கும் என்றும் சூளுரைத்துவிட்டு, அங்கிருந்து செல்கிறான். அப்படி இரவில் அங்கு சென்றுவிட்டால், தனது தங்கையை கில்லுக்குத் தந்துவிடுவதாகப் பேச்சு வாக்கில் ச்யோல் கு சொல்வது, மீ யோங்கின் மனதில் தைக்கிறது.

மறுநாள், ச்யோல் கு, தனது நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருக்கிறான். குடிபோதை தாளாமல் மயக்கமடைகிறான். அப்போது கில்லை இழுத்துக் கொண்டு, ராணுவப் பகுதிக்குள் செல்கிறாள் மீ யோங். பயப்படும் கில்லைப் பார்த்துச் சிரித்துவிட்டு, தனது உடைகளைக் களைகிறாள். இருவரும் கலவியில் ஈடுபடுகின்றனர். அதேநேரத்தில், உளவாளிகள் சிக்கமாட்டார்களா என்று கூர்த்த கவனத்துடன், பைனாகுலர்களில் கடற் கரையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் காங் ஹாங், மணலில் ஏதோ அசைவு தெரிவதைப் பார்த்தவுடன், தயங்காமல் அவ்விடம் நோக்கிச் சுடுகிறான். தனது துப்பாக்கியின் அத்தனை குண்டுகளையும் தீர்த்து விடும் அளவுக்கு வெறியோடு சுட்டுவிட்டு, தனது கையெறிகுண்டையும் வீசுகிறான்.

மறுகணமே அந்த இடத்தை நோக்கி விரையும் ராணுவக் குழு, கில்லின் பிய்ந்துபோன ஒரு கையை வைத்துக்கொண்டு கதறிக்கொண்டு இருக்கும் மீ யோங்கைப் பார்க்கிறது. உண்மை புரிகிறது.

மறுநாள். துண்டுகளாகச் சிதறிப் போன கில்லின் சடலத்தை வைத்துக்கொண்டு அவனது தாய் கதறிக்கொண்டு இருக்க, அந்த ஊர் மக்கள் அத்தனை பேரும் ராணுவ முகாமை வெறியுடன் தாக்க ஆரம்பிக்கின்றனர். துப்பாக்கியை உபயோகித்துத் தான் அவர்களை விரட்ட முடிகிறது. அதிர்ச்சியில் அமர்ந்திருக்கும் காங் ஹாங், எந்தக் கேள்வி கேட்கப்பட்டாலும், ‘எனக்குத் தெரியவில்லை’ என்றே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறான். சற்றுத்தள்ளி, பேதலித்த நிலையில் மீ யோங். ராணுவத்தின் காவலையும் மீறி உள்ளே பிரவேசித்துவிடும் மக்கள் சிலர், காங் ஹாங்கை அடித்துவிடுகின்றனர்.

மறுநாள், தனது கடமையைச் செய்த காங் ஹாங்குக்கு ஒரு வார விடுமுறையும், அவனைப் பாராட்டும் வண்ணம் சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படுகிறது. தனது ஊரை நோக்கி ரயிலில் பயணிக்கும் காங் ஹாங், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் சிறுவன், தனது பொம்மைத்துப்பாக்கியை இவனை நோக்கிப் பயன்படுத்துவது பிடிக்காமல், அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கி, கோபத்துடன் உடைத்து வீசுகிறான்.

ஊரில், தனது காதலியோடு ஒரு வார்த்தை கூடப் பேசுவதற்கு, காங் ஹாங்கினால் முடியவில்லை. இரவில் தனக்குத்தானே பேசிக்கொண்டும் அழுதுகொண்டும் அவன் இருப்பது, அவளுக்குக் கவலையை அளிக்கிறது. அதேபோல், இங்கே, மீ யோங், தனது அண்ணன், தொட்டிக்குள் வைத்திருக்கும் மீன்களையெல்லாம் எடுத்துத் தரையில் வீசிவிட்டு, அவன் கண் முன்னரே சிறுநீர் கழிக்கிறாள். அதன்பின் தனது முடியையும் அறுத்துக் கொள்கிறாள்.

காங் ஹாங்கின் காதலி, அவனுடன் பழக மறுத்துவிடுகிறாள். விடுமுறை முடிந்து முகாமுக்குத் திரும்பும் காங் ஹாங், ச்யோல் குவினால் கடுமையாகத் தாக்கப்படுகிறான். அன்றுமுதல், முகாமில் இருக்கும் சக ராணுவத்தினரிடம் மிகக் கடுமையான முறையில் நடந்துகொள்ளத் துவங்குகிறான். முகாமையே சுற்றிச் சுற்றி வரும் மீ யோங்கை, முகாமில் இருக்கும் ராணுவத்தினர், ஒவ்வொருவராகக் கற்பழிக்கின்றனர். இதுவும் அவளுக்குத் தெரியவில்லை. அவள், முழுமையாகப் புத்தி பேதலித்தவளாக மாறிவிடுகிறாள்.

திடீரென்று ஒரு நாள் இரவு, ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு, தலைநகர் சியோல் நோக்கிப் பயணப்பட ஆரம்பிக்கும் காங் ஹாங்கை, மிகுந்த சிரமத்துக்குப் பின், ராணுவத்தினர் வளைத்துப் பிடிக்கின்றனர். அவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதனால், இனி ராணுவ வேலையில் அவன் இருப்பது சாத்தியமில்லை என்று மருத்துவர் சொல்லிவிடுகிறார். எனவே, பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அனுப்பப்படுகிறான் காங் ஹாங்.

மறுநாள் இரவு. காவலிருக்கும் ராணுவ வீரர்களின் முன்னிலையில், முழுச் சீருடையோடு தோன்றுகிறான் காங் ஹாங். அவர்களில் ஒருவனது துப்பாக்கியையும் பிடுங்கிக்கொண்டு, காவலிருக்க ஆரம்பிக்கிறான். மறுநாள், அந்த முகாமை விட்டுத் துரத்தப்படும் காங் ஹாங், முகாமின் வாசலிலேயே அமர்ந்துகொண்டு, உள்ளே நடப்பவைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். ராணுவ வீரர்களைப் பின்தொடர்ந்தே செல்லும் காங் ஹாங், ஊர் மக்களால் மறுபடி அடிக்கப்படுகிறான். அவன் அடிவாங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்த ராணுவ வீரர்களை, காங் ஹாங்கின் நண்பனாக இருந்த மற்றொரு வீரன் அடிக்கிறான். ஆனால், இதனைத் தடுக்கும் வீரர்கள், இனி காங் ஹாங்குக்குப் பரிந்து பேசினால், அவனும் அடி வாங்குவான் என்று சொல்லிச் செல்கின்றனர். அன்று இரவே, அத்துமீறி ராணுவப் பிரதேசத்துக்குள் நுழையும் காங் ஹாங், பிடிக்கப்பட்டு, மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறான். வழியில் தப்பிக்கிறான்.

அன்றிலிருந்து, ராணுவ வீரர்களுக்குத் தலைவலி ஆரம்பிக்கிறது. மறைந்திருக்கும் வண்ணமே, ஒவ்வொரு இரவிலும் ஒரு வீரனைச் சுட்டு வீழ்த்துகிறான் காங் ஹாங். அதேபோல், மீ யோங் கர்ப்பமுறுவதால், அது ஊருக்குத் தெரிந்தால் தங்களுக்கு ஆபத்து என்பதால், அவளைப் பிடித்து கருக்கலைப்பு செய்கிறார்கள் ராணுவத்தினர். கிட்டத்தட்ட ஏழு பேர் அவளுடன் உறவு கொண்டிருந்திருக்கிறார்கள்.

காட்சி மாறுகிறது. ராணுவத்தினர், ஓய்வு நேரத்தில் பாடும் பாடல் ஒன்றை, சியோலில், ஜனநெருக்கடி மிகுந்த ஒரு இடத்தில், சீருடையோடு நின்றுகொண்டு, காங் ஹாங் பாடிக்கொண்டிருக்கிறான். பாடலைப் பாடி முடித்துவிட்டு, தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருக்கும் மக்களைத் தனது துப்பாக்கியில் இருக்கும் கத்தியால் குத்திக் கொல்லத் துவங்குகிறான். அவனைப் போலீஸ் சுற்றி வளைக்கிறது. கேமரா, காங் ஹாங்கின் முகத்தை டைட் க்ளோஸப்பில் காட்ட, தனது துப்பாக்கியை இயக்குகிறான் காங் ஹாங். ராணுவ வீரர்கள் அனைவரும் சந்தோஷமாக விளையாடும் ஒரு காட்சியின் பின்னணியில், இந்தப் பாடல் பாட, மெல்ல முடிகிறது படம்.

படத்தின் துவக்கத்தில், கிம் கி டுக் பேசுகிறார். ‘கோஸ்ட் கார்ட்’ படத்தை எடுக்க நேர்ந்ததைப் பற்றி விவரிக்கும் கிம் கி டுக், துண்டாடப்பட்ட ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களது வாழ்வின் கொடுந்துயரங்களைப் பற்றியே இப்படம் பேசுவதாகக் குறிப்பிடுகிறார். தென்கொரியாவில், கட்டாய ராணுவப் பயிற்சி அனைவருக்கும் இருப்பதால், பல இளைஞர்களைக் கடலோர ராணுவப் படையில் சேர்ப்பதாகவும், கிட்டத்தட்ட இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து ஒற்றர்கள் வருகை வழக்கொழிந்தே போய்விட்டாலும், இந்த இளைஞர்களின் வாழ்வில், ராணுவப் பயிற்சி என்ற பெயரில், அவர்கள் மேல் சுமத்தப்படும் துன்பத்தைப் பற்றியே இப்படம் இருப்பதாகவும் சொல்கிறார். தென்கொரியாவில் மட்டுமன்றி, உலகின் எந்த நாட்டிலும் இந்தத் துயரங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், எப்பொழுது பார்த்தாலும் தாக்கவும் தற்காப்பை உறுதி செய்யவும் நாம் முயன்று கொண்டிருந்தால், இத்தகைய இளைஞர்கள் வீணடிக்கப்பட்டு, அவர்களது அருமையான எதிர்காலம் இருண்டு போகத்தான் செய்யும் என்பதனை உணர்த்தவே இப்படம் எடுத்ததாகவும் சொல்லி முடிக்கிறார்.

படத்தின் பல காட்சிகளில், கிம் கி டுக் உணர்த்த முயலும் அவலம் நம் கண்களை அறைகிறது. படம் தொடங்கையிலேயே, ராணுவ வீரர்கள் அனுபவிக்கும் மிகக் கடினமான பயிற்சிகளின் வலியை நாம் காண நேர்கிறது. இந்த வலி, படம் நெடுகிலும் நமக்குப் பல காட்சிகளின் மூலமும் உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தங்களது ராணுவ வாழ்கையில் எந்தச் சந்தோஷமும் இன்றி, கொடும் பயிற்சிகள் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதை உணர்ந்துகொள்ளும் வீரர்களுக்குள் ஏற்படும் கோபம், அந்தக் கோபத்தை எப்படியாகிலும் வெளியேற்றிவிடத் துடிக்கும் அவர்களது இயலாமை, அப்படி வெளியேற்றப்பட்ட கோபத்தினால் சமூகத்தில் நிகழும் துயர மாறுதல்கள், அந்த மாறுதல்களின் தாக்கம் முழுமையாகத் தங்களது தோள்களில் விழும்போது, அந்த பாரத்தைத் தாங்க இயலாத வலி என்று இந்தச் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது.

கிம் கி டுக்கின் படங்களில், நம்மால் ஜீரணிக்க முடியாத சில காட்சிகள் வருவது வழக்கம். ’த ஐல் (2000)’ படத்தில் இது மிக விரிவாகக் காட்டப்பட்டிருக்கும். உயிரோடு தவளையைப் பாறையில் அடித்துக் கொல்வது, மீனின் தோலை உயிரோடு பாதியாக உரித்து, அதனைக் கடலிலேயே விட்டுவிடுவது போன்ற சில உதாரணங்கள் தரலாம். அதேபோல், இப்படத்திலும், மீன்கள் சம்மந்தப்பட்ட ஓரிரு காட்சிகள் உண்டு. இக்காட்சிகள் கொடூரமாக இல்லாமல், இயல்பாக இருப்பது, படம் பார்ப்பவர்களை சற்றே ஆசுவாசப்படுத்தும்.

இதைக்குறித்து விமர்சனங்களை எழுப்பிய அமெரிக்கப் பத்திரிகையாளர்களிடம், ’அமெரிக்காவில் மக்கள், ஆடு, மாடு, பன்றி, கோழி போன்ற பல உயிர்களைக் கொன்று உண்கின்றனர். ஆனால், அவைகள் கொல்லப்படும்போது அவை என்ன பாடு படுகின்றன என்று அவர்களுக்குக் கொஞ்சம் கூடக் கவலையில்லை. ஆனால், அதேபோல் சில மிருகங்கள் கொல்லப்படுவதை நான் காட்டினால் மட்டும், கோபப்படுகின்றனர். அமெரிக்கர்களுக்கு மற்ற நாட்டுக் கலாச்சாரங்களின் மேல் மதிப்பு இருக்குமென்றால் , மற்ற நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயங்களை அவர்கள் மதிக்கக் கற்றுக்கொண்டால் பரவாயில்லை !’ என்று சொல்லிய ஒரு இயக்குநராவார் கிம் கி டுக்.

அரசாங்கத்தை நேரடியாக விமர்சனம் செய்யும் கிம் கி டுக்கின் திரைப்படங்கள், கொரியாவில் ஓடுவதில்லை. அதனைப்பற்றிக் கிம் கி டுக் கவலையும் படுவதில்லை. உலகங்கும் உள்ள பல திரைப்பட விழாக்களில், இவரது படங்கள் பங்கு பெறுகின்றன. உலகத்தின் அற்புதமான திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்களின் மத்தியில், கிம் கி டுக் ஒரு அட்டகாசமான இயக்குநராகத் திகழ்கிறார்.

The Coast Guard படத்தின் Trailer இங்கே.

  Comments

18 Comments

  1. நீண்ட இடைவேளைக்கு பிறகு நம்ம கிம் கி டுக் படம்,
    படம் பார்த்துட்டு வந்து சந்தேகம் கேக்குறேன் கருந்தேள்,
    புல் மெட்டல் ஜாக்கெட் படம் பார்க்குரப்ப ஏதோ ஒரு பயங்கர பேய் படம் பார்க்குற மாதிரி பாதிப்பு & பயம் வந்துச்சி,
    இந்த படம்மும் அப்படி இருக்குமா கருந்தேள்?

    Reply
  2. Nice review.. Yet to see this movie

    My personal favourite in Korean war movies “Brotherhood of war”. If u havent seen it.. u re missing something !!

    Reply
  3. @ Keanu – இந்தப் படம், பயமா இருக்காது. ஆனா பாதிப்பு கட்டாயம் இருக்கும். படம் முழுக்கவே அந்த பாதிப்பு உங்க மனசுல தெரியும்.. பார்த்துட்டு வாங்க 🙂

    @ Arun – இன்னும் அதைப் பார்க்கல.. மொதல்ல கிம் கி டுக்கை முடிச்சிட்டு வரலாம்னுதான். இன்னும் ரொம்ப சில படங்களோட, கிம் கி டுக் சீரீஸ் முடிஞ்சிரும். அப்பாலிக்கா மத்த கோரிய படமாண்ட வரேன் நைனா 🙂 . . நன்றி

    Reply
  4. நண்பா,
    அவசியம் பார்த்துவிடுகிறேன்.நீங்கள் சொன்னபடி பார்த்தால் ஃபுல் மெட்டல் ஜாக்கெட்டின் முதற்பாதி அப்படியே படத்தில் இருக்கிறது போல,
    நண்பா ஒரு சந்தேகம்:-
    முனிரத்துனம் தான் நம் ஊரின் கிம் கி டுக்காமே?அது உண்மையா?

    Reply
  5. இது பற்றி சொல்லியே தீரவேண்டும்
    சிக்குபுக்குன்னு ஒரு பாடாவதி படம் பார்க்க நேரிட்டது.
    அதில் காலம்சென்ற ஜீவாவின் சிஷ்யன் மணிகண்டன் என்னும் ஒரு இயக்குனர் பதர் இது போல ஃபுல்மெட்டல் ஜாக்கெட்டின் சில காட்சிகளை படு திராபையாக கையாண்டுள்ளார்.அந்த படத்தை தயவு செய்து பார்த்துவிடவேண்டாம்.அதில் ஒருவன் கண்ணாடி போட்டுக்கொண்ட்டு மிலிட்டரி ட்ரெய்னிங் செய்கிறான்.அதுவும் ஊட்டியில்,சரி அதாவது விட்டுவிடுவோம்.படம் 1986 க்கு தாவ அங்கே ப்ளாக் அண்ட் ஒயிட் கேமரா பயன்படுத்தி வையாபுரி கலர் கிளாஸி போட்டோக்களை எடுத்து தருகிறார்.இது போல ஓராயிரம் கூதல்கள்.இது போல மடையர்களுக்கு ப்டம் தந்த அந்த முட்டாள் ப்ரொட்யூசரை தான் அடிக்க வெறியெழுகிறது.

    Reply
  6. @ கீதப்ரியன் – நண்பா.. என்னாது ?? முனிரத்துனம் தான் கிம் கி டுக்கா? அடப்பாவிகளா.. அது வேறொண்ணுமில்லை.. இந்த தென்னாட்டு பெர்னாட்ஷா, தென்னாட்டு காந்தி, வாழும் வள்ளுவர், ‘ஒலக’ நாயகன், இந்த ரீதில எவனாவது கதைகட்டிவிட்டிருப்பான். இதெல்லாம் கிம் கி டுக்குக்குத் தெரிஞ்சுது.. மக்கா இங்க வந்து முனியோட கழுத்தை கடிச்சி வெச்சிருவாரு 🙂

    அப்புறம், அந்த சிக்குபுக்கு படத்தை பத்தி நானும் கேள்விப்பட்டேன். . அய்யகோ . .நீங்க சொன்னமாதிரி, புரோட்யூசரைத்தான் அடிக்கணும்.. என்ன கொடுமை இது 🙁

    @ பாஸ்கி – அவ்வளவுதானா? அவ்வளவே தானா ? 🙂 ஹீ ஹீ

    Reply
  7. ரொம்ப நாள் கழிச்சி ஒரு கிம் கி டுக் பட விமர்சனம். சூப்பரா இருக்கு.
    முடிஞ்சா “Bad Guy” படத்தோட விமர்சனத்த போடுங்க. நெறைய டவுட் இருக்கு. உங்க புரிதலை படிச்சி தான் தெரிஞ்சிக்கணும்.

    Reply
  8. @ Suresh – கட்டாயம் பேட் கை விமர்சனம் சீக்கிரமாவே போடுறேன். இன்னொரு மூணு நாலு போஸ்ட் கழிச்சி அதைப்போட முயற்சி பண்ணுறேன்

    Reply
  9. சீக்கிறம் போடுங்க bad guy – விமர்சனத்த. படம் கடைசில என்ன சொல்றாங்கண்ணே புரியலை. மத்த கொரியன் படத்தப் பத்தியும் எழுதுங்க.

    Reply
  10. பழனின்னா..பஞ்சாமிர்தம்.திருப்பதின்னா லட்டு.
    கருந்தேளுன்னா…கிம் கி டுக்.

    Reply
  11. செ.சரவணக்குமார் – நன்றி 🙂

    உலக சினிமா ரசிகரே – வர்ற ரெண்டாயிரத்திப் பதினாறுல, கருந்தேள் முன்னேற்றக் கழகம், தேர்தல்ல நிக்கும்போது, இந்த கோஷத்த வெச்சிக்கலாம். என்ன சொல்றீங்க ? 🙂

    Reply
  12. கிம் கி டுக் படங்கள் பற்றிய உங்கள் விமர்சனம் அருமை.
    ஒரு உதவி இயக்குனாரான எனக்கு நிறைய தகவல்கள்.

    நன்றி!
    வாழ்த்துக்கள் நண்பரே.

    Reply
  13. சரவணக்குமார் . .உங்கள் தொழிலில் மேலும் மேலும் சிறந்து விளங்கி, அருமையான படங்களை நீங்கள் எடுக்க வாழ்த்துகிறேன். நன்றி.

    Reply
  14. Hi,
    Please provide this movie torrent link. I have found one but it has 0 seeders and hence unable to download the movie.

    Reply
  15. Have you seen the movie Oldboy? It is one of the worst and best endings I have ever seen in a movie. It punches you in the gut! I could not see the review here.. If you have not seen please see it and comment about it.!! Even though if you do not like it..

    Reply

Join the conversation