Dawn of the Planet of the Apes (2014) – Review

by Karundhel Rajesh July 13, 2014   English films

கெவின் காஸ்ட்னரின் மாஸ்டர் பீஸான ‘Dances With Wolves’ படத்தில், கதாநாயகன் ஜான் டன்பார் அமெரிக்காவின் அப்போதைய எல்லைக்குச் சென்று வாழ விரும்புவான். அங்கே சென்றபின் செவ்விந்தியர்களின் தொடர்பு ஏற்படும். அவர்களுடன் மெல்லமெல்லப் பழகி அவர்களில் ஒருவனாக மாறுவான். அப்போது அங்கே வரும் அமெரிக்கப் படையினரால் சிறைப்படுத்தப்பட்டு, செவ்விந்தியர்களால் விடுவிக்கப்படுவான். இறுதியில் அவர்களைப் பிரிந்துசெல்வான். ஏழு ஆஸ்கர்களை வென்ற படம் இது. காஸ்ட்னரே இயக்கித் தயாரித்த படம்.

Dances with Wolves – review

எட்வர்ட் ஸ்விக் இயக்கிய ‘The Last Samurai’ படத்தில் கதாநாயகன் Nathan Algren, ஜப்பானிய ஸாமுராய் வீரர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஜப்பான் செல்வான். அங்கே புரட்சிப் படையினரால் சிறைப்படுத்தப்பட்டு அவர்களின் கிராமத்தில் தங்குவான். பின்னர் மெல்ல மெல்ல அவர்களுடன் பழக ஆரம்பித்து அவர்களில் ஒருவனாக ஆவான். இதன்பின்னர் ஜப்பானியப் படைகளுடன் நடக்கும் ஒரு யுத்தத்தில் பங்கேற்றுப் புரட்சிப் படையினரில் ஒருவனாகவே ஆகிவிடுவான்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘Avatar’ படத்தில் பாண்டோரா என்ற விண்வெளி நிலவில் இருக்கும் அபூர்வமான கனிமம் ஒன்றை எடுக்கச் செல்லும் மனிதர்களுக்கும் அந்த நிலவின் பழங்குடியினருக்கும் யுத்தம் வெடிக்கிறது. அதில் அமெரிக்கப் படையைச் சேர்ந்த ஜேக் ஸல்லி என்பவன் பழங்குடியினரால் சிறைப்படுத்தப்பட்டு, அவர்களில் ஒருவனாக மாறுகிறான். அமெடிக்கப் படையினருக்கு எதிராகப் போரிட்டு அவர்களைத் துரத்துகிறான்.

Avatar – review

இந்த மூன்று படங்களுக்கும் எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு. இந்த மூன்று படங்களுமே சூப்பர்ஹிட்கள். ஒன்றில் உணர்வுபூர்வமான திரைக்கதை இருந்தது (Dances with Wolves); ஒன்றில் டிபிகல் ஹாலிவுட்தனமான திரைக்கதை இருந்தது (The Last Samurai); இன்னொன்று இந்த இரண்டையும் கச்சிதமாகக் கலந்து வெளிவந்து மக்களின் மனதைக் கவர்ந்தது (Avatar). ஆனால் இவை எதுவுமே பிற படங்களின் காப்பி அல்ல. ஒரே விதமான கதையை எடுத்துக்கொண்டு அதனைத் தங்களின் பாணியில் அளித்த இயக்குநர்களின் படங்கள் இவை. இந்த மூன்று படங்களிலுமே பொதுவான அம்சங்கள் பல உண்டு. ஆனாலும் ஒவ்வொன்றுமே நம்மை எத்தனை முறைகள் வேண்டுமானாலும் பார்க்கவைப்பவை. பிரத்யேகமானவை.

இவற்றோடு சேர்த்து டிஸ்னியின் Lion King படத்தையும் சொல்லலாம். சிம்பா என்ற அந்த சிங்கம் உலகம் முழுக்கப் பலரின் மனதையும் கவர்ந்த கதாபாத்திரம். ஸிஜி அல்லது அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்டு இப்படிப் பரவலான அங்கீகாரம் பெற்ற மிகச்சில மறக்கமுடியாத பாத்திரங்களில் ஒன்று.

இதே விதமான படம்தான் Dawn of the Planet of the Apes.

முதல் பாகத்தைப் பார்த்திருப்பவர்களுக்கு சீஸர் பற்றி நன்றாகவே தெரியும். புத்திசாலித்தனமான, தலைமைப் பண்புகள் நிறைந்த சிம்பன்ஸி. முதல் பாகத்தின் இறுதியில் அத்தனை குரங்குகளும் காட்டுக்குள் சென்றுவிட்டபின் அவர்கள் அங்கேயே அரண்களை அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர். வெளியே உலகம் முழுவதிலும் முதல் பாக இறுதியில் அழிந்துவிட்டதால் மனிதர்கள் யாரையும் கடந்த இரண்டு வருடங்களாகப் பார்த்ததே இல்லை என்று தங்களுக்குள் குரங்குகள் பேசிக்கொள்கின்றன. அப்போதுதான் சில மனிதர்களை இந்தக் குரங்குகள் பார்க்க நேர்கிறது. அவர்களைப் பின்தொடர்ந்து செல்லும் குரங்குகள், அவர்கள் வாழும் இடத்தைத் தெரிந்துகொள்கின்றன.

மனிதர்கள் காட்டுக்குள் வந்ததன் காரணம் அங்கே இருக்கும் நீர்மின் உற்பத்தி அணைதான். இதன்மூலம் நகரத்தில் மின்சக்தி கிடைக்கும். மெதுவே குரங்குகளின் தலைவன் சீஸரின் நம்பிக்கையைப் பெறுகிறது இந்த மனிதர்களின் குழு. ஆனால் ஸீஸரின் குழுவில் இருக்கும் முக்கியமான இன்னொரு குரங்கான கோபாவுக்கு (முதல் பகுதியில் வரும் ஒண்ணரைக் கண் குரங்கு) இது பிடிப்பதில்லை. மனிதர்கள் என்றாலே அழிவுக்கு வித்திடுபவர்கள் என்பது அதன் நம்பிக்கை. காரணம் முதல் பகுதியில் அது அனுபவித்த சித்ரவதைகளே. இதனால் ஒரு சிறிய சதிவேலை செய்து சீஸரை வீழ்த்திவிட்டு குரங்குகளின் தலைமைப்பொறுப்பை வகிக்கும் கோபா, அனைத்துக் குரங்குகளையும் நகரை நோக்கித் திருப்பிவிடுகிறது.

நகரம் அழியப்போகிறதா? சீஸர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தின் துவக்கம் முதலே ஸீஸரின் Screen Presence தான் கதையைத் தாங்கி நிற்கிறது. கம்பீரமான தலைவன். கனிவானவனும் கூட. The last Samurai படத்தில் வரும் மோரிட்ஸுகு கட்ஸுமோடோ (கென் வடானபே) போன்ற கதாபாத்திரம். அவனுக்கும் அவனுக்கும் அவனது பிரஜைகளுக்கும் உள்ள உறவு முதல் பாகத்திலேயே நிலைநாட்டப்பட்டுவிட்டதால் இந்தப் பாகத்தில் அவர்கள் அவன் என்ன செய்தாலும் புரிந்துகொண்டு நடப்பது இயற்கையாகவே காட்டப்பட்டுள்ளது. முதல் பாகத்தில், சீஸர் அடைத்துவைக்கப்பட்டுள்ள குரங்குகளின் கூடாரத்தில் நடப்பவற்றைப் புரிந்துகொண்டு, தன்னை உள்ளே போகச்சொல்லும் காவலாளியைப் பார்த்து முதன்முறையாக ‘NOOOOOOOO’ என்று அலறும் காட்சி அட்டகாசமாக இருக்கும். சீஸர் பேசும் முதல் வார்த்தை அது. அதேபோல் படத்தின் இறுதியில் ‘Caesar is Home’ என்று ஹீரோ ஜேம்ஸ் ஃப்ராங்கோவிடம் பேசும். இந்தப் பாகத்தில் சீஸர் நிறையப் பேசுகிறது. அதுவும் மனிதர்களிடம். இது படம் பார்க்க வந்த பலருக்கும் நெருடியதைப் புரிந்துகொள்ள முடிந்தது. குரங்கு எப்படிப் பேசும்? ஆனால் அதைத்தான் முதல் பாகம் முழுதும் காட்டியிருக்கிறார்களே? அதைப் புரிந்துகொண்டால் சீஸர் பேசுவது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது. சீஸருக்கு ஒரு குடும்பமும் உண்டு. ஒவ்வொரு ஃப்ரேமும் இழைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் இது. அதன் முகபாவங்கள், உடல்மொழி அனைத்தும் தத்ரூபம். குறிப்பிட்ட ஒரு காட்சியில் ஒரு சிம்பன்ஸி எப்படி ரியாக்ட் செய்யும்? அதன் வாய் எப்படியெல்லாம் கோணும்? அதன் கை கால்கள் எப்படி அசையும்? எல்லாவற்றையும் அட்டகாசமாகக் கவனித்து இந்தக் கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பியிருக்கிறார் Andy Serkis. கோல்லுமாக லார்ட் ஆஃப் த ரிங்ஸில் நடித்து மோஷன் கேப்சருக்கென்றே பல விருதுகள் வாங்கியவர். அவரால்தான் மோஷன் கேப்சர் நடிப்பு இன்றும் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. கிங்காங்கிலும் இவரே கிங்காங். டிண்டினில் கேப்டன் ஹேட்டாக். காட்ஸில்லா படத்துக்கு மோஷன் கேப்சர் கன்ஸல்டண்ட். தற்போது மோஷன் கேப்சர் உலகில் நம்பர் ஒன் செர்கிஸ்தான். கூடவே அவரது தயாரிப்பு நிறுவனமான இமஜெனரியம் பிக்சர்ஸ் மூலம் இப்படிப்பட்ட மோஷன் கேப்சர் கதாபாத்திரங்களைத் தேடிப்பிடித்து அவற்றைப் படமாகவும் ஆக்கப்போகிறார். அவெஞ்சர்ஸ் இடண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் படம் கொஞ்சம் நீளம் ஜாஸ்தி. 131 நிமிடங்கள். குறைந்த பட்சம் ஒரு அரை மணி நேரத்தை வெட்டிவிட்டு இன்னும் வேகமான படமாக இதனை உருவாக்கியிருக்க முடியும். படத்தின் இன்னொரு பிரச்னை என்னவென்றால், படத்தின் ஆரம்பத்திலேயே மக்கள் மீது படையெடுக்கலாம் – அவர்களைக் கொன்று அழிக்கலாம் என்று சீஸருக்கு கோபா அறிவுரை சொல்கிறது. ஆனால் சீஸர் அதை மறுத்துவிடுகிறான். பல குரங்குகள் சாக நேரிடும் என்று கோபாவிடம் சொல்கிறான். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் அதுவேதான் நடக்கிறது. அதுவும் பல பிரச்னைகளுக்குப் பிறகு. முதலிலேயே அதைச் செய்திருந்தால் படத்தின் கதை அரை மணி நேரத்தில் முடிந்திருக்கும். இத்தனை பெரிய படம் தேவையில்லை. இதே படத்தில் முழுக்கதையையுமே முடித்தும் இருக்கலாம். இனிமேல் மூன்றாவது பாகமும் உண்டு என்பதால் ஒரு மிகச்சிறிய கதையை சற்றே இழுத்திருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

படத்தில் எனக்குப் பிடித்த கேரி ‘ட்ராகுலா’ ஓல்ட்மேனும் உண்டு. ஆனால் அவரது கதாபாத்திரம் எதையுமே செய்யாமல் மொக்கையாகவே இருக்கிறது. Wasted talent. சீஸரைத் தவிர படத்தில் எந்தக் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இல்லை. ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினி கதாபாத்திரம் போல இதில் சீஸர். கம்பீரமான ஒரு குதிரை மீது முகமெங்கும் war paint போட்டுக்கொண்டு சீஸர் வரும்போது அதைப் பார்த்து வியக்காமல் இருக்கமுடியாது.

கீழே இருக்கும் வீடியோவில், குரங்காக நடிப்பது எத்தனை கஷ்டம் என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் படத்தின் ஸிஜி, WETA நிறுவனத்தாரால் செய்யப்பட்டது. முதல் படத்தையும் இந்தப் படத்தையும் ஒப்பிட்டால், முதல் படத்தில் இருந்த அந்த உணர்வுபூர்வமான தருணங்கள் இதில் இல்லை. முதல் படத்தில் சீஸருக்காக ஆடியன்ஸ் cheer செய்தனர். காரணம் அதில் மனிதர்கள்தான் வில்லன்கள். ஆனால் இதில் வில்லன் என்று யாரும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உருவாகும் நெகட்டிவ் பாத்திரங்கள்தான். இதனால் யாருக்காகவும் cheer செய்யமுடியாத சூழல். இதில் வரும் மனிதர்கள் மற்றும் குரங்குகள் ஆகிய அனைவருமே நல்லவர்கள் என்பதால். படத்தில் கோபா எடுக்கும் சில முடிவுகள் கூட அதன் பாயிண்ட் ஆஃப் வ்யூவிலிருந்து கவனித்தால் நியாயம்தான் என்பது புரியும்.

எனக்கு அவசியம் முதல் படம்தான் பிடித்தது. ஆனால் இந்தப் படத்தை நான் வெறுக்கவில்லை. சில மெதுவான காட்சிகளை உங்களால் பொறுக்கமுயும் என்றால், சீஸருக்காக இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.

  Comments

9 Comments

  1. have u seen far cry 4 trailer ….?! authentic, racist and fascinating trailer for a game …

    i’d like to know your view on the same …

    Reply
    • Rajesh Da Scorp

      Yes. I agree. It’s a fascinating trailer 🙂

      Reply
  2. கிரிஷி

    படத்தோட ஒபெனிங்க் சீன்ல சீசரோட குளோஸ் அப் சாட் ஒண்ணு வரும்… அத தான் நீங்க மேல டைட்டில் இமேஜா வச்சு இருக்கீங்க… அதுல உள்ளது நாமம் மாதிரி எனக்கு தெரியுது??? அது எனக்கு மட்டும் தானா???

    Reply
    • Rajesh Da Scorp

      ஆமான்னு நினைக்கிறேன். உங்களுக்கு மட்டும்தான் 🙂

      Reply
  3. Marimuthu K

    I Think this is third part. First part may be “PLANET OF THE APES”.

    Reply
  4. Andy Serkis – இவரை விட மாட்டாங்க போல… 🙂

    btw, i go with marimuthu k… இது மூன்றாம் பாகம் இல்லே???

    Reply
    • Rajesh Da Scorp

      இல்ல கார்த்திக் & மாரிமுத்து. இது ரெண்டாம் பாகம்தான். போன பாகத்தில் ரீபூட் ஆன சீரீஸ் இது. முதல்ல வந்த டிம் பர்ட்டன் படத்துக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல

      Reply

Join the conversation