Fade In முதல் Fade Out வரை – 18

by Karundhel Rajesh September 11, 2014   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை பற்றிய டிப்ஸ்களைப் பார்த்து வருகிறோம். திரைக்கதை எழுதுவதில் உள்ள பிரச்னைகளை ப்ளேக் ஸ்னைடரின் பாணியில் கவனித்து வருகிறோம் (இவற்றில் பலவற்றையும் ஸிட் ஃபீல்ட் வாயிலாக ஏற்கெனவே பார்த்துவிட்டாயிற்று என்பதை மறக்கவேண்டாம். அதனால் ஓரளவு repetition இருக்கும்)

Fade In முதல் Fade Out வரை


Take a Step Back

ஒரு கதை எழுதுகிறோம். ஹீரோ அல்லது ஹீரோயின் மிக நல்ல கதாபாத்திரம். பிரருக்கு உதவும் குணம் உடைய நபர். இப்படி இருக்கும் நமது பிரதான பாத்திரத்துக்கு ஒரு சோதனை வருகிறது. அந்தப் பாத்திரத்தின் காதலி (அல்லது காதலன்), எதோ பிரச்னையில் கோபித்துக்கொண்டு வேறு ஒரு நாட்டுக்குச் சென்றுவிடுகிறாள். அவளைத் தேடிக்கொண்டு நமது பாத்திரம் பயணம் கிளம்புகிறது. இதுதான் கதை. இந்தக் கதையில் அந்தப் பாத்திரம் வழி முழுவதும் சந்திக்கும் பிற பாத்திரங்கள்தான் கதையில் சுவாரஸ்யத்தை வரவழைக்கிறது. இந்தக் கதையைக் கேட்டதும் ஒரு நல்ல அனுபவத்தை சிலருக்குக் கொடுக்கக்கூடும்.

ஆனால் இதில் ஒரு பிரச்னை இருக்கிறது.

நமது கதையின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரே போன்றுதான் – நல்ல பாத்திரமாக – இருக்கிறது. அதில் மாற்றங்களே வரப்போவதில்லை. தட்டையான பாத்திரமாகத்தான் கதை முழுதும் வரப்போகிறது. அதன் நல்ல குணத்தால் எப்போது பார்த்தாலும் எல்லாருக்கும் உதவிக்கொண்டே பயணம் செல்லப்போகிறது.

இதற்குப்பதிலாக, நமது கதாபாத்திரம் சராசரியான, சுயநலம் மிக்க பாத்திரமாக இருந்து, பயணம் முழுவதும் சந்திக்கும் பிற பாத்திரங்களால் அதன் குணம் மெதுவாக மாறிக்கொண்டு வந்தால்? அப்படித்தானே நம் எல்லாரின் குணங்களும், இயல்புகளும் மாறுகின்றன? நாம் என்ன பிறப்பில் இருந்து இப்போதுவரை அப்பழுக்கில்லாத நல்லவர்களாகவா இருக்கிறோம்?

எனவே, இதுதான் Take a Step Back. எடுத்த எடுப்பிலேயே நல்ல கதாபாத்திரமாக, க்ளைமேக்ஸில் வெற்றியடையப்போகும் ஆளாக அது எப்படி இருக்கிறதோ அதையே படத்தின் ஆரம்பத்தில் அதன் இயல்பாகக் காட்டுவதைவிட, எடுத்ததுமே எல்லாரையும் போல ஒரு ஆளாகக் காட்டிவிட்டு, சிறுகச்சிறுக அதன் மாற்றத்தைப் பதிவு செய்யலாம்.

இது ப்ளேக் ஸ்னைடரின் வாழ்க்கையில் நிஜமாகவே நடந்த சம்பவம்.

ஒரு கதாபாத்திரம் திரைக்கதையின் போக்கில் எப்படி மாறுகிறது, வளர்கிறது என்பதைக் காட்டவேண்டுமானால், எல்லாவற்றுக்கும் முந்தைய ஆரம்பப் புள்ளியில் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்தவேண்டும். அவர்கள் இறுதியில் எப்படி மாறியிருக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமாகச் சொல்லப்படவேண்டும். அதுதான் மனித இயல்பு என்பதால்.

A Limp and an Eyepatch

இது, பொதுவாகத் தமிழ்ப்படங்களில் அதிகமாகக் காணப்படும் பிரச்னை. குறிப்பாக சி.சுந்தரின் படங்களில் இதை அளவுக்கு அதிகமாகவே பார்க்கலாம். எக்கச்சக்கக் கதாபாத்திரங்கள் – அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவருக்கு என்னென்ன உறவு – என்ன சொல்ல வருகிறார்கள் – அவர்களால் கதைக்கு என்ன நன்மை – எதுவும் புரியாது. ஆடியன்ஸுக்குப் பல சமயங்களில் தலைவலியே மிச்சம்.

ப்ளேக் ஸ்னைடர் சொல்லவருவது கொஞ்சம் விசேஷமானது. இத்தனை பாத்திரங்கள் அவசியம் இருக்கலாம் என்கிறார் அவர். ஆனால், அப்படி இருக்கவேண்டும் என்றால், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆடியன்ஸ் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவு படைக்கவேண்டும் என்பதே அவரது ஒரே நிபந்தனை.

அதுதான் A Limp and an Eye Patch. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நாம் கொடுக்கப்போகும் விசேடத் தன்மை(கள்).

‘உன்னால் முடியும் தம்பி’ படத்தை எனது பள்ளி நாட்களில் திரையரங்கில் பார்த்தேன். அந்தச் சமயத்தில் கதாநாயகன் (கமல்ஹாஸன்), குணச்சித்திர நடிகர் (ஜெமினி கணேசன்) ஆகியோரைவிடவும் எனக்குப் பிடித்தது இன்னொரு கதாபாத்திரம். படம் பார்த்துவிட்டு வந்து இன்று வரையிலும் அந்தப் பாத்திரம் நன்றாக நினைவிருக்கிறது. அந்தப் படத்தில் மரங்களை நடும் தாத்தா ஒருவர் வருவார். அவர் நட்ட மரங்களுடன் பேசுவார். அவற்றை அன்போடு கவனித்துக்கொள்வார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் மனதில் ஒட்டிக்கொண்டுவிட்டார். அவரது விசேடத்தன்மை – அவரது மரங்களின் மீதான அன்பு. மொத்தமே படத்தில் பத்து நிமிடங்களுக்குள்தான் அவர் வருவார்.

இப்படித்தான் கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்டவேண்டும். அவற்றை மறக்கமுடியாததாக மாற்றவேண்டும்.

இதுபோல எந்தப் பாத்திரங்களெல்லாம் உங்களுக்கு மறக்கமுடியாததாக இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள். அவற்றைப் போல உங்களது பாத்திரங்களை ஆடியன்ஸின் மனதில் தங்கவைக்க என்ன செய்யவேண்டும் என்று யோசியுங்கள்.

Is it Primal?

உங்களது திரைக்கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், யாருக்குமே புரியும்படி அடிப்படையான உணர்ச்சிகளால் எழுதப்பட்டு இருக்கவேண்டும் என்பதுதான் Is it Primal?

இன்ஸெப்ஷன் படத்தை எடுத்துக்கொண்டால், அதில் கனவுகளில் நுழைவது, ஆர்க்கிடெக்ட், கனவுக்குள் கனவுக்குள் கனவு என்றெல்லாம் பயமுறுத்தும் சமாச்சாரங்கள் வந்தாலும், எல்லருக்குமே அது புரிந்ததுதானே? (அதே நோலனின் ‘மெமெண்டோ’ புரியாதவர்கள் இன்றும் எக்கச்சக்கம். காரணம், ‘புரிந்தாலும் புரியாவிட்டாலும் கவலையில்லை’ என்ற அவரது மனோபாவம். அதனை ஹாலிவுட் சிறுகச்சிறுகக் கரைத்து நோலனை சாதாரண இயக்குநராக இன்று மாற்றிவிட்டது வேறு விஷயம். இதனைப் பற்றி சீக்கிரமே இண்டர்ஸ்டெல்லார் பற்றிய மூன்றாவது கட்டுரையில் விவாதிப்போம்). அப்படி, எத்தனை கடினமான திரைக்கதையாக இருந்தாலும் அது எளிதில் அனைவருக்கும் புரியவேண்டும். அதாவது, அடிப்படையான உணர்வுகளைக் கையாளவேண்டும். பசி, காமம், காதல், துரோகம், உயிர்வாழ்தல், புறக்கணிப்பு போன்றவையெல்லாம் அடிப்படை உணர்வுகள். படம் பார்க்கும் ஆடியன்ஸுக்குப் புரியும்வண்ணம் அடிப்படையாக, அதே சமயம் சுவாரஸ்யமாகவும் இருந்தால் அந்தத் திரைக்கதை வெற்றிபெறும் என்பது ப்ளேக் ஸ்னைடரின் கருத்து. மெமெண்டோவில் கூட அடிப்படையான பழிவாங்குதல் இருந்தது.

அடிப்படையான பிரச்னைகள் என்றால், கதாபாத்திரங்களும் அடிப்படையான பாத்திரங்களாக இருக்கவேண்டும் என்பது முக்கியம். நம் எல்லாரையும் போன்ற இயல்பான பாத்திரங்களால்தானே அடிப்படை உணர்ச்சிகளைப் புரியவைக்கமுடியும்? அவர்களுக்குள்ளான கிளைக்கதைகள் மூலம் எந்தத் திரைக்கதையையும் சுவாரஸ்யமாக மாற்றலாம்தானே?

எனவே, உங்கள் திரைக்கதை அடிப்படையான உணர்ச்சிகளால் எழுதப்பட்டு எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் – எல்லோராலும் தங்களது வாழ்க்கையில் நடந்தவற்றை எண்ணிப்பார்த்து உங்கள் திரைக்கதையோடு பிணைந்துகொள்ளும்படி எழுதப்பட்டிருக்கிறதா?

இத்துடன் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் திரைக்கதைப் பிரச்னைகள் முடிகின்றன. அடுத்த கட்டுரையில் இன்னும் சில முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம்.

தொடருவோம் . . .

  Comments

6 Comments

  1. kalees

    /இதுபோல எந்தப் பாத்திரங்களெல்லாம் உங்களுக்கு மறக்கமுடியாததாக இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள்.//

    “Boys” Senthil 🙂

    Reply
    • Rajesh Da Scorp

      Ha ha ha.. very right 🙂

      Reply
  2. Rabik Raja

    Pinringa thalaiva..! En valkaila ozhi ethi vaikiringa Rajesh..! Thank u thank u thank u so much..! U r my screenplay guru

    Reply
    • Rajesh Da Scorp

      Cheers boss. All the best 🙂

      Reply
  3. Kathiresh Kaddy

    Indha Vishayangala Blake Snyder kooda ivlo Azhaga Sollirupaara?-ngiradhu than En Doubt……:-)

    Reply
    • Rajesh Da Scorp

      Ha ha ha ha :-). The readers have to tell 🙂

      Reply

Join the conversation