Fade In முதல் Fade Out வரை – 31 : Robert Mckee – 10
இதுவரை எழுதப்பட்ட அத்தியாயங்கள்:
1. முழுத்தொடரையும் காண – Fade in முதல் Fade Out வரை
2. Blake Snyder தொடர்பான அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Blake Snyder
3. Robert Mckee பற்றிய அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Robert Mckee
சென்ற கட்டுரையில் ஆர்க்ப்லாட், ஆண்டிப்லாட் & மினிப்லாட் என்றால் என்ன என்று கவனித்தோம். ’கதை’ என்ற விஷயத்துக்குள் இத்தனைவிதமான வெளிப்பாடுகள் இருக்கின்றன. நமது மனதில் இருக்கும் கதையை இத்தனை விதங்களாகச் சொல்லமுடியும். இதில் இன்னும் உள்ளே செல்லலாம். சென்ற கட்டுரையில் நாம் பார்த்த ‘Story Triangle’ என்ற பதத்தையும், அதன் வரைபடத்தையும் ஒருமுறை கவனித்துக்கொள்ளுங்கள்.
Formal Differences within the Story Triangle
Closed Vs Open endings
க்ளோஸ்ட் எண்டிங் மற்றும் ஓப்பன் எண்டிங் என்றால் என்ன என்பது நம் எல்லாருக்குமே தெரியும். தெளிவான, இறுதியான ஒரு முடிவுதான் க்ளோஸ்ட் எண்டிங். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வருகையில் ஆடியன்ஸின் மனதில் எழுந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும். எதுவுமே குழப்பமாக, முடிக்கப்படாமல் இருக்காது. உதாரணமாகத் தமிழின் பல படங்கள்: கல்யாணப்பரிசு, அந்த நாள், நாயகன், முந்தானை முடிச்சு, மூன்றாம்பிறை, முதல்வன், பூ, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, தனி ஒருவன் போன்ற படங்கள். இந்தப் படங்களிலெல்லாம் இறுதியில் முடிக்கப்படாத விஷயங்கள் ஏதேனும் இருந்தனவா? இல்லைதானே?
ஆர்க்ப்லாட் என்று நாம் கவனித்த பிரிவு இதில் அடங்கும். ஆர்க்ப்லாட்டில் கச்சிதமான முடிவுகள் சாதாரணம்.
அதேசமயம், ’வீடு’ திரைப்படத்தின் இறுதியில், நாயகி கட்டிக்கொண்டிருந்த வீடு நல்லபடியாக முடிந்ததா இல்லையா என்பது நமக்குச் சொல்லப்படவில்லை அல்லவா? வீட்டின்மேல் ஒரு பிரச்னை; அந்தப் பிரச்னை பற்றி நாயகிக்கும் அவளது துணைவனுக்கும் தெரிந்ததுமே படம் முடிந்துவிடுகிறது. என்ன ஆயிற்று என்பதை ஆடியன்ஸாகிய நமக்கே விட்டுவிட்டு முடியும் இப்படிப்பட்ட முடிவுகள் ‘ஓப்பன் எண்டிங்’ என்பதன்கீழ் வந்துவிடும். இன்னும் சில படங்களில், எத்தனை தெளிவாக அனைத்தையும் ஆடியன்ஸுக்குப் புரியவைத்தாலும்,
ஓரிரண்டு விஷயங்கள் முடிக்கப்படாமல் இருக்கும். அவை ஆடியன்ஸின் முடிவுக்கே விடப்பட்டுவிடும். ‘காக்கா முட்டை’ படத்தில் சிறுவர்களின் தந்தை ஜெயிலுக்குப் போன காரணம் என்ன? அவன் வெளிவந்தானா இல்லையா?
இப்படிப்பட்ட ஓப்பன் முடிவுகள், ’மினிப்லாட்’ என்பதில் அடிக்கடி நிகழும்.
கதையில் எழுப்பப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான முடிவு அமைந்து, அதன்மூலம் ஆடியன்ஸின் மனதில் எழும் அனைத்து உணர்வுகளுக்கும் பதில் கொடுக்கப்படுவதே க்ளோஸ்ட் எண்டிங்.
கதையில் எழும் பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்தாலும், ஓரிரண்டு கேள்விகள் ஆடியன்ஸின் முடிவுக்கே விடப்பட்டு, அவற்றின் மூலம் எழுப்பப்பட்ட் உணர்ச்சிகள் முழுமையடையாமல் இருந்தால் அது ஓப்பன் எண்டிங்.
External Vs Internal Conflict
’கான்ஃப்ளிக்ட்’ என்றால் பிரச்னை. சிக்கல். ஒரு நல்ல திரைக்கதையில் இப்படிப்பட்ட சிக்கல்கள் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் என்பதெல்லாம் நாம் ஸிட் ஃபீல்டின் புத்தகத்தைப் பார்க்கும்போதே, சில வருடங்களுக்கு முன்பே தெரிந்துகொண்டாயிற்று. அதிலேயே வெளிப்புற, உட்புறப் பிரச்னைகள் பற்றியும் கவனித்தாயிற்று (பார்க்க – திரைக்கதை எழுதலாம் வாங்க புத்தகம்). எந்தத் திரைக்கதையிலும் இந்த இரண்டு விதமான போராட்டங்களும் இடம்பெற்றால் அந்தத் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். உட்ப்றப் பிரச்னைகள் என்பது ஒரு கதாபாத்திரம் தனது மனதில் எழும் எண்னங்களுடன் மோதுவது. வெளிப்புறப் பிரச்னைகள் என்பது அந்தக் கதாபாத்திரத்துக்குப் பிற கதாபாத்திரங்கள், சமூகம், இயற்கை முதலியவற்றால் ஏற்படும் வெளீப்படையான பிரச்னைகள்.
ஆர்க்ப்லாட்டில், வெளிப்புறப் பிரச்னைகளே அதிகமாக கவனிக்கப்பெறும் என்பது ராபர்ட் மெக்கீயின் கருத்து. ஆர்க்ப்லாட் கதைகளில் மனப்போராட்டங்கள் முதலிய உட்புறப் பிரச்னைகள் இருக்கவே செய்யும். இருந்தாலும், அந்தக் கதைகளில் வெளிப்புறப் போராட்டங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்.
உதாரணமாக, தனி ஒருவன் படத்தை எடுத்துக்கொண்டால், மித்ரனுக்கும் சித்தார்த் அபிமன்யுவுக்கும் இட்டையே நடக்கும் போராட்டத்தில் இந்த இருவிதப் பிரச்னைகளும் சரியாகக் கையாளப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், அதில் சித்தார்த் அபிமன்யுவை மித்ரன் வென்று, சித்தார்த்தின் மரணத்தில்தானே கதை முடிகிறது? இது வெளிப்புறப் போராட்டத்திற்கு ஒரு உதாரணம். எந்தக் கமர்ஷியல் படமாக இருந்தாலும், உணர்ச்சிகளை மீறிக்கொண்டு இப்படிப்பட்ட வெளிப்படையான சண்டைகள், போராட்டங்கள் ஆகியவற்றிலேயேதான் முக்கியத்துவம் இருக்கும்.
ஆனால் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ’சேது’ முதலிய படங்களில், என்னதான் ஒருசில வெளிப்புறப் பிரச்னைகள் இருந்தாலும், முக்கியமான கதாபாத்திரங்களின் மனதில் எழும் பிரச்னைகள்தானே அதிகமாகக் கையாளப்பட்டிருக்கின்றன? இவையெல்லாம் மினிப்லாட்டில் அடிக்கடி இடம்பெறும் விஷயங்கள். இதுதான் இரண்டுக்குமான வித்தியாசம்.
Single Vs Multiple Protagonists
காலம்காலமாக சொல்லப்பட்டு வரும் பல கதைகள், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன் இருந்தானாம்’ என்றுதானே சொல்லப்பட்டுவருகின்றன? அந்த ராஜகுமாரன்/குமாரிக்கு என்ன பிரச்னை வந்தது? அதை அவர்கள் சந்தித்தார்களா? என்ன முடிவு? இதெல்லாம்தான் நமக்குச் சொல்லப்பட்டுவரும் பல கதைகளின் சாராம்சம். இது கச்சிதமான ஆர்க்ப்லாட். வழிவழியாக சொல்லப்பட்டுவரும் கதைசொல்லல் முறை.
ஆனால், சில சமயங்களில் ஒரு கதை பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு நாயகன்/நாயகி இருந்தால், அது மினிப்லாட்.
உதாரணமாக, ஆதியிலிருந்து இன்றுவரை வெளியாகும் பல தமிழ்ப்படங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் 99% ஒரே ஹீரோ, அவனுக்கு நடக்கும் பிரச்னை என்றுதான் ஆர்க்ப்லாட் தனமாகப் போகின்றன. ஆனால் அவற்றில் ஒருசில படங்கள் மட்டும் பலப்பல கதைகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் ஒரு ஹீரோ/ஹீரோயின் என்று பேசப்பட்டு முடிகின்றன. இதற்கு ‘Pulp Fiction‘ திரைப்படம் கச்சிதமான உதாரணம். அதில் வரும் ஒவ்வொரு கதைக்கும் ஒரு பிரதான கதாபாத்திரம்/பாத்திரங்கள் உண்டுதானே? ‘ஆரண்ய காண்டம்’ படமும் ஓரளவு இதில் அடங்கும். அதிலும் சில கதைகள், ஒவ்வொன்றிலும் சில முக்கியமான கதாபாத்திரங்கள் என்று இருக்கின்றன.
Active Vs Passive Protagonist
வழக்கமான ஆர்க்ப்லாட் படங்களில் இருக்கும் நாயகன் எப்படியும் துடிதுடிப்பான, தானே முன்வந்து காரியங்களை செய்யக்கூடியவனாகவே இருப்பான் (ஆக்டிவ்). எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் அவற்றை முறியடித்துக்கொண்டு இலக்கை அடைந்துவிடுவான். ஆனால், மினிப்லாட் என்பதில் வரும் நாயகன்/நாயகி, ஓரளவு இதற்கு நேர் எதிராக இருப்பார்கள். அதாவது, தானாக முன்வந்து ஒரு சில வேலைகளைச் செய்தாலும், பெரும்பாலும் ரியாக்ட் செய்துகொண்டோ சுறுசுறுப்பின்றியோதான் இருப்பர். இது மெக்கீயின் கருத்து.
சுறுசுறுப்பான கதாபாத்திரம் என்பது, தனது லட்சியத்தை நோக்கிப் போகும் பயணத்தில் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தையும் மக்களையும் எதிர்க்கும் சூழ்நிலையில் தானாகவே முன்வந்து பலவிதமான வேலைகளைச் செய்யும்.
அதுவே சுறுசுறுப்பில்லாத, passive கதாபாத்திரம் என்பது, லட்சியத்தை நோக்கிய பயணத்தில், மனதளவில் அந்த லட்சியத்தை அடையும் நோக்கம் உறுதியாக இருந்தால்கூட, உலகத்தையும் சமூகத்தையும் எதிர்க்கும் நிலையில் அவ்வளவாக சுறுசுறுப்பில்லாமல், சில சமயங்கள் எதுவுமே செய்யாமல் கூட இருக்கும்.
Linear Vs Nonlinear Time
வழக்கமான ஆர்க்ப்லாட் கதைகளில், காலம் என்பது எளிதில் புரியும். ’இன்னின்ன வருடத்தில் ஆரம்பித்து இன்னின்ன வருடத்தில் முடிகிறது’ என்று எளிதில் ஆடியன்ஸுக்குப் புரியும். கதாபாத்திரங்களின் கதை இன்னின்ன காலகட்டங்களில் சொல்லப்படுகிறது என்பதெல்லாம் தெளிவாக இருக்கும். ஃப்ளாஷ்பேக் சீக்வென்ஸ்கள் வந்தாலும்கூட, கதையில் அவை எந்தெந்த இடங்களில் வருகின்றன என்பதெல்லாம் னன்றாகப் புரியும்.
ஆனால், ஆண்டிப்லாட் கதைகளில், கதை எந்தக் காலகட்டத்தில் நடைபெறுகிறது, கதையில் வரும் காலம் என்பது வரிசையானதா அல்லது குழப்பமானதா என்றெல்லாம் பல கேள்விகள் எழும். புகழ்பெற்ற இயக்குநர் கொதார் (Godard என்ற இவரது பெயரை, கொதார்டு என்றே பலரும் எழுதுகின்றனர். அது அவசியம் தவறு. அவரது பெயரை கொதார் என்றே சொல்லவேண்டும்), ‘a film must have a beginning, middle, and end … but not necessarily in that order’ என்று சொல்லியிருப்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆரம்பம், நடுப்பகுதி & முடிவு என்பது எந்தப் படத்துக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதே வரிசையில் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை’ என்பது பொருள். இதை யோசித்துப் பாருங்கள். இதுதான் ஆண்ட்டிப்லாட்.
Causality Vs Coincidence
Cause Versus Effect என்பது அனைவருக்கும் தெரியும். நிகழ்வு மற்றும் அதன் விளைவு. ஒரு காரியம் நடந்தால் அதற்கு ஒரு விளைவு இருக்கும். அந்த விளைவுக்கு இன்னொரு விளைவு இருக்கும். இப்படி வரிசையாக ஒவ்வொன்றாகப் போய்க்கொண்டே இறுதியான, மாற்ற இயலாத க்ளைமேஸை அடைவதுதான் ஆர்க்ப்லாட் கதைகளின் தன்மை. உதாரணமாக,னி ஒருவன் படத்தைல் சித்தார்த் அபிமன்யுவைக் கண்டுபிடிக்கிறான் மித்ரன். நகரில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் இவனேதான் காரணம் என்று அவனுக்குப் புரிகிறது. சித்தார்த் நிகழ்த்த இருக்கும் ஒரு தீயசெயலை இவன் முறியடிக்க நினைக்கிறான். அது சித்தார்த்துக்குத் தெரிகிறது. அவன் இதனால் ஒரு செயலைப் புரிய, அந்த செயலின் விளைவு மித்ரனுக்குப் பாதகமாக முடிகிறது. இப்படி ஒவ்வொன்றாக, படிப்படியாக ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு நடந்து படமும் முடிகிறது. இது ஆர்க்ப்லாட்.
ஆனால், தற்செயல் என்று ஒரு விஷயமும் உண்டு. எந்தவித நொக்கமும் இல்லாமல் எதேச்சையாக ஒரு வேலையைச் செய்யப்போக, அதனால் ஏதோ இன்னொரு காரியம் தூண்டப்பட, இப்படி வரிசையாகச் செல்வது. சில சமயங்களில் இந்தத் தற்செயல் சம்பவம் சட்டென்று முடிந்தும் விடலாம். இப்படி ஒரு திரைக்கதையில் தற்செயல் நிகழ்வுகளால் கதை பல துண்டுகளாக உடைக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒரு அத்தியாயமாக முடிந்துவிடுவதே (அல்லது வரிசையாகச் செல்வதே) தற்செயல். இது ஆண்ட்டிப்லாட். ’தற்செயல்’ என்பது இங்கே முக்கியம். ’குஷி’ படத்தில் எஸ்.ஜே சூர்யா உண்டுசெய்யும் விபத்தால்தானே கதையின் முக்கியமான திருப்பம் நிகழ்கிறது? ஆனால் தமிழில் இப்படிப்பட்ட தற்செயல் நிகழ்வுகள் எப்போதாவதுதான் – அதிலும் ஆர்க்ப்லாட் கதைகளிலேயே – வருகின்றன. இங்லீஷிலும் உலக சினிமாக்களிலும் இந்தத் தற்செயல் நிகழ்வுகளில் கதை முழுதும் நகர்வது சாதாரணம். After Hours ஒரு உதாரணம்.
Consistent Vs Inconsistent Realities
எந்த ஒரு கதையிலும் அந்தக் கதைக்கே மையமான சில விதிகள் உண்டு. உதாரணமாக, ‘இன்று நேற்று நாளை’ படத்தில் காலப்பயணம் சொல்லப்படுகிறது. அந்தக் காலப்பயணம் என்பது ஒருசில விதிகளுக்குள் அடங்குகிறது. இதைப்போல் எந்தப் படமாக இருந்தாலும் அதற்கென்றே ஒரு இயல்பு உண்டு. நாம் அந்தக் கதைக்காக உருவாக்கும் உலகங்களில் ஒருசில முக்கியமான விதிமுறைகளும் அவசியம் இடம்பெறும். இதுபோல் உருவாகும் கதைகள் ஆர்க்ப்லாட் வகையைச் சேர்ந்தவை. நம்பவே முடியாத உலகமாக இருந்தாலும் அங்கும் கச்சிதமான விதிகளால் அந்தக் கதை நகர்வது. சொல்லப்படும் கதைக்கென்றே நம்பும்படியான விதிகளை நாம் ஒவ்வொன்றாக உருவாக்குவது. இதுதான் Consistent Reality.
அதேசமயம், ஆண்ட்டிப்லாட்டில், விதிகளை உடைப்பதுதான் மையநோக்கம். இதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இது கொதாரின் படங்களில் சாதாரணம். கதாபாத்திரங்கள் நடந்துசெல்கையில், திடீரென்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபல நாவலாசிரியை எமிலி ப்ராண்டே அவர்களுக்கு முன் தோன்றுவதெல்லாம் அவரது படங்களில் சர்வசாதாரணம். இப்படிப்பட்ட, விதிகளே இல்லாத, எந்த விதியையும் பின்பற்றாத திடீர் திடீரென்ற சம்பவங்கள் ஆண்ட்டிப்லாட். இதற்குத் தமிழில் உதாரணங்களே இல்லை (ஹீரோ அந்தரத்தில் பறந்து அடிப்பது, ஒரு கார் ஆகாயத்தில் பறப்பது, மீசையை முறுக்கினால் ஆள் பறப்பது போன்றதெல்லாம் ஆண்டிப்லாட் தானே என்று யாராவது கேட்டால் மூக்கிலேயே குத்துவேன்). இவையே Inconsistent realities.
Expressionism, Dadaism, Surrealism, Stream of Consciousness, Theatre of the Absurd போன்றவையெல்லாம் ஆண்ட்டிப்லாட்டின் கீழ் வருவனவே.
இப்போது பார்த்த அனைத்தையுமே கீழ்க்கண்ட படத்தால் விளங்கிக்கொள்ளலாம்.
இவைதவிர, இன்னொரு அம்சமும் நாம் கவனிக்கவேண்டி உள்ளது.
Change Vs Stasis
பல கதைகளில் ’மாற்றம்’ என்பது அவசியம் இருக்கும். கதையின் ஆரம்பத்தில் நாம் பார்க்கும் கதாநாயகன்/கதாநாயகி, கதையின் இறுதியில் அவசியம் மாற்றத்துக்கு உள்ளாகி, இன்னும் கொஞ்சம் பக்குவப்பட்டிருப்பார்கள். இதுதான் பல கதைகளிலும் நடக்கும். ஆனால், சில கதைகளில் எந்தவித மாற்றமும் நடக்கவே நடக்காது. எல்லாருமே அப்படியப்படியே இருப்பர். ஆனால் அதற்காக அவை மொக்கைப் படங்களும் அல்ல. இப்படிப்பட்ட, மாற்றமற்ற நிலையே Stasis எனப்படும். இதற்கு உலகப்படங்களில் UMBERTO D, FACES, NAKED, SHORT CUTS, MASCULINE FEMININE (France/1966), THE DISCREET CHARM OF THE BOURGEOISIE (France/1972) போன்ற பல உதாரணங்கள் உள்ளன. தமிழில் இல்லை.
தொடர்ந்து கவனிப்போம்.
தொடரும்…
அவதார் படத்திலும் ஹீரோவின் அண்ணன், பேன்டோரா கிரகத்தில் ஆராய்ச்சி செய்து நாவி மொழியைக் கற்று இருந்தாலும் தற்செயலாக அவன் கொல்லப் படுவதால், இவர்கள் இரட்டையர்களாக இருப்பதால் அவனுக்கான அவதாரில் இணைய உடல் ஊனமற்ற ஹீரோவிற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. இவன் ஒரு போர் வீரனாக இருந்ததாலும் இவனுக்கு நாவி உலகத்தை பற்றி ஏதும் தெறியாததால், இவனுக்கு சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பாக, அதை (அவன் கற்றுக் கொல்லும் விதமாக) நமக்கு சொல்லும் விதமாக திரைக்கதை நகர்கிறது. நான் சொல்வது சரியா சார்?.