Fade In முதல் Fade Out வரை – 4

by Karundhel Rajesh May 16, 2014   Fade in to Fade out

Fade in முதல் Fade Out வரை – 1

Fade in முதல் Fade Out வரை – 2

Fade in முதல் Fade Out வரை – 3


 

திரைக்கதையின் முதல் பக்கத்தில் ‘உ லாபம்’ என்று எழுதிவிட்டு கடகட என்று திரைக்கதையை டைப்படிக்க ஆரம்பிப்பதற்குமுன்னர் நாம் செய்யவேண்டிய வேலைகள் எக்கச்சக்கமாக உள்ளன என்று கவனித்தோம். அதில் முதன்மையானது – ஒன்லைன். உண்மையில் திரைக்கதை எழுத ஆரம்பிப்பது என்பது நமது கட்டக்கடைசி வேலையாகத்தான் இருக்கவேண்டும். யோசித்துப் பாருங்கள். ஒரு மிகப்பெரிய கட்டிடத்தை எழுப்பவேண்டும் என்றால் உடனேயே அந்த இடத்துக்குப் போய் செங்கல் ஜல்லி சிமெண்ட் எல்லாவற்றையும் வாங்கி பரக் பரக் என்று தோண்ட ஆரம்பித்துவிடுகிறோமா? பக்காவாக என்ஜினியர் ஒருவரை அணுகி ஒரு ப்ளான் போட்டு அதன்பின் அந்தப் ப்ளானைப் பொறுத்துதானே வேலைகளைத் துவங்குகிறோம்? அதேபோல்தான் திரைக்கதை எழுதுவதும். இதெல்லாம் நமது தளத்தைப் படிக்கும் நண்பர்களுக்கு அத்துபடியாகத் தெரியும் என்று நன்றாகப் புரிந்தாலும் சில முக்கியமான விஷயங்களை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பது நல்லதுதான் இல்லையா?

ஓகே. ஒன்லைன்,

திரைக்கதை எழுத எல்லாவற்றுக்கும் முதல்படியாக ஒரு அட்டகாசமான ஒன்லைன் தேவை. ‘ஒன்லைன்லாம் எனக்குத் தேவையுல்ல மச்சி.. என்னால தோ இப்பவே உக்காந்து சொம்மா காள்தாஸ் கணக்கா வார்த்தைகள சொம்மா மயபெய்யிற மேரி பொயியவெக்க முடியும்…பாக்குறியா?’ என்று சவால்விட்டு எழுத டாரண்டீனோவால் முடியலாம். ஆனால் அந்த அளவு ஜீனியஸ் லட்சத்தில் ஒருவருக்கு (யெஸ்) இருக்கலாம். நமக்கெல்லாம் முதலிலிருந்து ஆரம்பித்துப் படிப்படியாகப் போவதுதான் சரியாக இருக்கும்.

இதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். அதில் முதலாவதும் மிக முக்கியமானதுமான காரணம் என்னவென்றால், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் மிகப்பெரிய இயக்குநர் ஆகலாம். முதல் படமே பிய்த்துக்கொண்டு ஓடலாம். அப்படி உங்கள் முதல் படத்தில் நீங்கள் திரைக்கதை எழுதிய முறையைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், அதில் ஒழுங்குமுறை இருக்காது. முதலில் அஸிஸ்டெண்ட்களுடன் விவாதம், அதன்பின்னர் உட்கார்ந்து எழுதுவது, பின்னர் இன்னும் சில காட்சிகளுக்கு விவாதம், அதன்பின்னர் எழுதியதையே அடித்துத் திருத்துவது என்றெல்லாம் போய், ஒருமாதிரி கலந்துகட்டிய வழிமுறைகளில் எழுதியதாகத்தான் இருக்கும். அந்தப் படத்தை எடுத்து முடித்துவிட்டு அடுத்த படத்துக்குத் திரைக்கதை எழுத அமர்ந்தால், அப்போது நம்மை அடித்துக் காலி செய்யச் சில பிரச்னைகள் தயாராகக் காத்துகொண்டிருக்கும்.

1. முதல் படம் போல இரண்டாவது படத்துக்கு யோசிக்க எக்கச்சக்க அவகாசம் கிடைக்காது. காரணம், முதல் படத்தில் இயக்குநராக நம்மை நிரூபித்து வெற்றிகாண நமக்குக் கொடுக்கப்படும் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும். எனவே இரண்டாவது படத்தில் இருந்துதான் பணம் என்ற வஸ்து நம் கையில் ஓரளவு புழங்க ஆரம்பிக்கும். நாம் வாழப் பணம் தேவைதான் என்பதால் முதல் படம் வந்து ஓடியதும் நம்மிடம் வரும் தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டிருப்போம். அவருக்கு ஒரு டெட்லைன் இருக்கும். இதனால் அந்தத் தேதிக்குள் ஷூட்டிங் ஆரம்பிக்கவேண்டிய நெருக்கடி இருக்கும்.

2. அப்படி ஒரு நெருக்கடி வந்ததும், அதுவரை நன்றாக இயங்கிக்கொண்டிருந்த மனம் மக்கர் செய்ய ஆரம்பிக்கும். மனம் மக்கர் செய்யும்போது நமக்குக் கோபம், இயலாமை, வருத்தம், தாழ்வு மனப்பான்மை, கழிவிரக்கம் போன்ற உணர்ச்சிகள் வரலாம். இதனால் இறுதியில் நம்மிடம் சரக்கு இல்லை என்ற பொய்யை நாமே நம்ப ஆரம்பித்து விடுவோம்.

3. இதனால் இரண்டாவது படம் சிலமுறை சொதப்ப வாய்ப்பு இருக்கிறது. பல அட்டகாசமான இயக்குநர்களின் இரண்டாவது படம் என்பது இதனால்தான் அடிவாங்கியிருக்கிறது என்பது என் தனிப்பட்ட அவதானிப்பு. அதையெல்லாம் தாண்டி ஹிட்டைக் கொடுக்க உறுதியான மனம் தேவை.

இப்படிப்பட்ட பிரச்னைகளால் நம்மை நாமே அவசரப்படுத்தி ஒரு திரைக்கதையை வெளிக்கொண்டுவர முயல்வோம். அப்போது நம்மிஷ்டத்துக்கு முதல் படத்தில் வேலை செய்ததுபோல் கலந்துகட்டி உழைப்பது பயன் தராமல் போகலாம். அதனால்தான் ஒரு நல்ல ப்ளான் நமக்குத் தேவை. இப்படிப் படிப்படியாகச் செல்வதால் எத்தனை படங்கள் எடுத்தாலும் இந்தப் ப்ளான் நமது மனதில் இறுகப்பதிந்து, அதன்படியே நம்மையும் அறியாமல் செயல்பட ஆரம்பித்துவிடுவோம். எத்தனை கஷ்டம் வந்தாலும் அந்தப் ப்ளான்படி தன்னிச்சையாக நம் மனம் இயங்கி, அட்டகாசமான திரைக்கதையை நம்மை எழுதவைத்துவிடும்.

இதனால்தான் படிப்படியாக முதலிலிருந்து செல்வதைப்பற்றி விபரமாக எழுத நினைத்தேன். அப்படிப்பட்ட படிவரிசையில் முதலில் இருப்பது ஒன்லைன். ஒரு ஒன்லைனை நன்றாகச்செதுக்கிப் பாலீஷ் போட்டுவைப்பதன் பயனைப் போனவாரமே பார்த்துவிட்டோம். மனதில் நம் கதையைப் பற்றிய அருமையான ஒன்லைன் இருப்பதன் தலையாய பலன் ஒன்று என்னவென்றால், இந்த ஒன்லைனே நம்மை ஒவ்வொரு பக்கமாக எழுதவைக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும். மனதில் தெளிவான ஒன்லைன் இல்லாமல் குன்ஸாக ஏதோ ஒன்று இருந்தால் சில சமயங்களில் என்ன எழுதவேண்டும் என்பது தெரியாமல் போகலாம். ஆனால் பக்காவான ஒரு ஒன்லைன் தயாராக இருந்தால் அந்த ஒன்லைனைத் திரும்பத் திரும்ப அசைபோடுவதன்மூலம் கதை அருமையாக நமது மனதில் உருவாக எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

சரி. இப்போது சில ஒன்லைன் உதாரணங்களைப் பார்ப்போம்.

‘அமைச்சர் பையனை சிலபேர் கடத்துகிறார்கள். அவர்களைப் போலீஸ் துரத்துகிறது’

இதைப் படித்தால் எப்படி இருக்கிறது? ஏதோ ந்யூஸ்பேப்பரில் கடைசி பத்தியில் தக்கினியூண்டு வரியில் வரும் துணுக்குச் செய்தி போலத்தானே இருக்கிறது?

ஆனால் அதுவே இப்படி எழுதப்பட்டால்?

‘நான்கு வேலையில்லாத மொக்கைகள் அமைச்சர் பையனைக் கடத்திப் பணம் கேட்கும் நோக்கில் கிட்நாப் செய்யும்போது பையன் பணத்துடன் தப்பித்து, இந்த நால்வரையும் உலகின் நம்பர் ஒன் சைக்கோ போலீஸ் வெறித்தனமாகத் துரத்தினால் என்ன ஆகும்?’

இதை நினைத்துப் பார்க்கவே எவ்வளவு ஜாலியாக இருக்கிறது? முதலில் எழுதப்பட்ட ஒன்லைனில் ஜீவன் இல்லை. அது கதையையும் தெளிவாகச் சொல்லவில்லை. அதில் ஒரு முரண்நகை (irony) இல்லை. இரண்டாவது ஒன்லைனில் எல்லாமே இருக்கிறது. ஒரு படமே அந்த மூன்று வரிகளில் ஓடிமுடிந்துவிட்டது. கேட்டாலே நம் மனதில் அந்தக் கதை ஓடுகிறது. அதில் ironyயும் உள்ளது. அமைச்சர் பையன் இவர்களிடமிருந்து பணத்தோடு ஓடியபின் இவர்களை சைக்கோ போலீஸ் துரத்துகிறது என்பது ironyதான். அதிலும் சாதா சைக்கோ போலீஸ் இல்லை. உலகின் நம்பர் ஒன் சைக்கோ போலீஸ் என்றால் அந்தக் கதாபாத்திரம் எப்படியெல்லாம் சைக்கோத்தனத்துடன் இருக்கவேண்டும்?

இன்னொரு உதாரணம் பார்க்கலாம்.

’பல மாதங்களாக நினைத்து ஏங்கிய பைக்கும் காதலியும் ஒரே சமயத்தில் கிடைத்து வாழ்க்கையே செட்டிலாகிவிட்ட சந்தோஷத்தில் பிரபு திளைக்கும்போது அவனது கனவு பைக் களவாடப்பட்டால் என்ன ஆகும்?’

இதிலும் படத்தின் கதை இருக்கிறது. வாழ்க்கையே செட்டிலாகும்போது தனது பல நாள் கனவான பைக் திருடப்பட்டால்? அதிலும் கஷ்டப்பட்டு வாங்கிய பைக்? எல்லாமே கையில் கிடைக்கும்போது திடீரென்று இப்படி நடப்பதுதான் irony. நகைமுரண். வாழ்க்கையே இப்படிப்பட்ட பல நகைமுரண்களால் நிரம்பியதுதான். அதைத்தான் சென்றவாரம் நாம் பார்த்த வீடியோவில் ராபர்ட் மெக்கீ நிகலஸ் கேஜிடம் கேட்டார்.

இதே நகைமுரண் தான் பருத்திவீரனிலும் இருந்தது. காதலியே தனது உடலைத் துண்டுதுண்டாக வெட்டிவீசச் சொல்வது நகைமுரண்தானே?

ஓகே. இப்போது எனது கருத்துகளைக் கொஞ்சம் pause செய்துவிட்டு Blake Snyderஇடம் வருவோம்.

இப்போது நாம் பார்த்த இந்த விஷயங்கள்தான் ஒரு வெற்றிகரமான, கவர்ச்சிகரமான, அழகான ஒன்லைனை முடிவு செய்கின்றன என்பது ப்ளேக் ஸ்னைடரின் கருத்து. அவரது திரைக்கதைகளின் ஒன்லைன்களை இப்படித்தான் அவர் அமைப்பது வழக்கம். இப்படிப்பட்ட ஒன்லைன்களை எழுதுவதற்கு அவர் வகுக்கும் ரூல்கள் நான்கு.

1. ஒன்லைனில் நகைமுரண் (irony) இருக்கிறதா?
2. ஒன்லைன் நமது மனதில் அழுத்தமான கதையை உருவாக்குகிறதா?
3. ஒன்லைனில் படத்தின் ஆடியன்ஸ் மற்றும் பட்ஜெட் பற்றிய க்ளூ இருக்கிறதா?
4. ஒன்லைனில் அட்டகாசமான டைட்டில் இருக்கிறதா?

இந்த நான்கு பாயிண்ட்களில் முதல் இரண்டை மேலே பார்த்துவிட்டோம். அடுத்த இரண்டை இனி பார்ப்போம்.

ஹாலிவுட்டில் எப்போதுமே ஒன்லைன்களைக் கேட்டாலே அது எந்த ஜானர் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். ஜானர் தெரிந்தால் அதன் ஆடியன்ஸும் புரிந்துவிடும். உதாரணமாக, மேலே பார்த்த இரண்டு ஒன்லைன்களுமே ஆக்‌ஷன் படங்கள்தான் என்று புரிந்துவிடுகின்றன. எனவே அவற்றுக்கான ஆடியன்ஸ்கள் யார் யார் என்பது தெரிந்துவிடுகிறது. ஆடியன்ஸ் தெரிந்ததுமே பட்ஜெட்டும் முடிவாகிவிடுகிறது. காரணம், ஒரு குடும்பப்படத்துக்கு எக்கச்சக்க பட்ஜெட் தேவைப்படாது (அதில் கமல்ஹாஸன், ரஜினி, அஜீத், விஜய் போன்றவர்கள் நடிக்காமல் இருந்தால்). ஆக்‌ஷன் என்றால் பட்ஜெட் அதிகம் தேவை. தயாரிப்பாளரிடமோ அல்லது ஸ்டூடியோ ரெப்ரஸண்டேட்டிவிடமோ கதையைச் சொல்வதற்கு முன்னால் ஒன்லைன் சொல்லும்போது அவர்களது மனதிலேயே அவசியம் பட்ஜெட் பற்றிய எண்ணம் உருவாகிவிடும். அப்போதைய அவர்களின் மார்க்கெட் நிலை, கையிருப்புத் தொகை போன்றவையெல்லாம் நன்றாகத் தெரிந்தவர்கள் அவர்கள் என்பதால் படத்தின் பட்ஜெட்டை யோசிப்பது அவர்களுக்கு இயல்பாகவே நடக்கும் செயல். அதனால் ஒன்லைனை வழவழா கொழகொழா என்று சொல்லிச் சொதப்பாமல் தெளிவாக, ஒரு ப்ரிப்பரேஷனுடன் நாம் செல்வது சிறந்தது.

நான்காவது பாயிண்ட் இங்கே தமிழில் அந்த அளவு முக்கியமில்லை என்பது என் கருத்து. ஹாலிவுட்டில் பல படங்களுக்குக் கச்சிதமான டைட்டில்கள் இருக்கும். ‘True Lies’, ‘Jurassic Park’, ‘Goodfellas’, Se7ven’, ‘The Silence of the Lambs’, ‘Rear Window’, ‘Kill Bill’ போன்றவையெல்லாம் தங்களுக்குள் ஒரு கதையையே வைத்துக்கொண்டிருக்கும் டைட்டில்கள். இந்த டைட்டில்களைப் பார்த்தாலே அவற்றின் கதை (அந்தப் படத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்தாலுமே) நமது மனதில் ஓடும். இப்படிப்பட்ட ஒரு டைட்டிலை ஒரு ஒன்லைன் கொண்டிருக்கவேண்டும் என்பது அங்கே மிக முக்கியம். காரணம் தமிழைப் போல் இல்லாமல் ஹாலிவுட்டின் திரைக்கதை படமாக்கப்படும் முறை மொத்தமாக வேறு மாதிரி. அங்கெல்லாம் விதிகள் படு ஸ்ட்ரிக்ட். திரைக்கதை வேறு ஃபாண்ட்டில் டைப் அடிக்கப்பட்டால் ஒரு வரி கூடப் படிக்கப்படாமல் குப்பைத்தொட்டிக்குள் போய்விடும். அப்படிப்பட்ட இடத்தில் ஒரு தயாரிப்பாளரைப் பிடிப்பது இன்னும் கடினம் என்பதால் இந்த விதிகளை முடிந்தவரை அங்கே மொத்தமாகப் பின்பற்றுவது நல்லது. ஆனால் தமிழில் அப்படிப்பட்ட கடுமையான விதிகள் இன்னும் பின்பற்றப்பட ஆரம்பிக்கவில்லை (இன்னும் 20 வருடங்களில் அப்படி நடக்கத் துவங்கலாம்).

ஆனால் தமிழிலும் இப்படி டைட்டிலால் கதை சொல்லும் பாணியை சிலர் அழுத்தமாகப் பின்பற்றியிருக்கிறார்கள். அவர்களில் இயக்குநர் ஸ்ரீதர் முக்கியமானவர். ‘கல்யாணப் பரிசு’, ’தேனிலவு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘காதலிக்க நேரமில்லை’, ’நெஞ்சம் மறப்பதில்லை’, ’சிவந்த மண்’, ‘உரிமைக்குரல்’, ‘ஊட்டி வரை உறவு’ என்று அவரது படங்கள் பலவற்றுக்குத் தலைப்புகளைக் கவித்துவமாக வைத்தவர். இந்தத் தலைப்புகளைப் பார்த்தாலே அந்தப் படங்களின் உணர்ச்சிகள் அவற்றில் பிரதிபலிப்பது தெரியும். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ என்பதைப் படித்தால் ஏதோ காமெடிப்படம் என்றா தோன்றுகிறது? நெஞ்சுக்குள் ஓர் ஆலயம் அமைப்பது எத்தனை கஷ்டம் என்பதைத் திருநின்றவூரைச் சேர்ந்த ’பூசலார்’ என்ற பூசல நாயனாரைக் கேட்டால் தெரியும் (இவர் யார் என்று தெரிந்துகொள்ள வழக்கப்படி கூகிள் செய்க. நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற அதே விதமான சோகக்கதை கிடைக்கும். ஆன்மீகவாதிகளுக்கு அது இன்னும் நல்ல பக்தி உணர்வைக் கொடுக்கும் திறமை படைத்தது). அதேபோல் ’காதலிக்க நேரமில்லை’ என்பது அவசியம் ஒரு குறும்பான டைட்டில்தான். அதேதான் ‘ஊட்டி வரை உறவு’க்கும் பொருந்தும். ஊட்டி என்ற ஊர் டைட்டிலில் வந்துவிட்டாலே மனதில் ஜாலியான ஒரு ஃபீலிங் வந்துவிடுகிறது அல்லவா? அங்கே போய் கதறி அழுதுகொண்டா இருப்பார்கள்? இதிலேயே படத்தின் அவுட்டோர் பட்ஜெட்டையும் ஸ்ரீதர் cover செய்வதைக் கவனியுங்கள். ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்பது அறுபதுகளின் அட்டகாசமான ஒரு மறுபிறவிக் கதை. டைட்டிலிலேயே அந்த உணர்வை ஸ்ரீதர் கொண்டுவந்துவிடுகிறார். (மக்கள் இதுபோன்ற கதையை நம்புவார்களா என்ற சந்தேகத்தில் படத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீதரே தோன்றி சில மறுபிறவிக் கதைகளைப் பற்றி விளக்குவார்).

இந்தக் காட்சியின் செட்டிங்கில் ஸ்ரீதரின் ஆங்கிலத் திரைப்பட டேஸ்ட் வெளிப்படுவதைக் காணலாம்.

இதேபோல்தான் மணி ரத்னமும் ஷங்கரும். மணி ரத்னத்தின் படங்களை எடுத்துக்கொண்டாலும், ‘இதய கோயில்’, ‘மௌன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, நாயகன்’, ‘தளபதி’, ‘இருவர்’, ‘அலைபாயுதே’ போன்ற டைட்டில்கள் அவசியம் தங்களுக்குள் ஒரு கதையைக் கொண்டிருக்கின்றன. அதேபோல் ஷங்கர் – ‘ஜெண்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, முதல்வன்’ போன்ற படங்களின் டைட்டில்களில் அதையேதான் செய்திருக்கிறார்.

இதுபோன்ற கதைசொல்லும் டைட்டில்களை நமது ஒன்லைனுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதுதான் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் நான்காவது பாயிண்ட்.

ப்ளேக் ஸ்னைடரையே எடுத்துக்கொண்டால், Nuclear Family என்ற ஒரு படத்தை எழுதினார். பொதுவாக ந்யூக்ளியர் ஃபேமிலி என்னும் டைட்டில், கூட்டாக வாழும் குடும்பத்தினரைக் குறிப்பது. ஆனால் இவரது கதையிலோ ஒரு குடும்பத்தினர் ரேடியோ ஆக்டிவ் அணுக்கதிர்கள் இருக்கும் ஒரு இடத்துக்குப் பிக்னிக் செல்ல, மறுநாள் அவர்கள் அனைவருக்கும் சூப்பர் சக்திகள் கிடைத்துவிடுகின்றன. அனவே நிஜமாகவே அவர்கள் ந்யூக்ளியர் ஃபேமிலிதான். இந்த டைட்டில் எப்படி?

ஒரு ஒன்லைனை பட்டி தட்டுவது அத்தனை சுலபம் அல்ல. அதற்கே பல மாதங்கள் பிடிக்கலாம். குன்ஸாக மனதில் இருக்கும் கதையை இப்படி அழகாக்கவேண்டும் என்றால் அந்தக் கதை முழுக்க நமக்குத் தெரிந்தால்தான் முடியும். அப்படிக் கதை தெரிந்துவிட்டால் திரைக்கதை எழுதுவதும் எளிது. அப்படிப்பட்ட அனுபவத்தைக் கொடுக்கவேண்டும் என்பதால்தான் இந்த ஒன்லைனைக் கச்சிதமாக உருவாக்கவேண்டும் என்பது ப்ளேக் ஸ்னைடரின் தலையாய செய்தி.

பயிற்சி #1

சரி. ஓகே. இனிமேல் எனது தளத்தில் வரும் திரைக்கதைக் கட்டுரைகள் சும்மா படித்துவிட்டுப் போவதைப்போல் இருக்காது. படிப்பவர்களுக்காக சில பயிற்சிகளும் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

இந்த அத்தியாயத்தின் பயிற்சி இதுதான்.

உங்கள் மனதில் கதை எதாவது இருக்கிறதா? அந்தக் கதையை எப்படி ஓரிரு வரிகளில் சுவாரஸ்யமாகச் சொல்வீர்கள்? ஒரே சான்ஸ்தான் உங்களுக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அந்த சான்ஸ் முடிந்தால் அவ்வளவுதான். அப்படி ஒரு நிலையில், தயாரிப்பாளரிடம் ஒரே ஒரு முறை ஒன்லைனைச் சொல்லி சான்ஸ் வாங்க உங்கள் ஒன்லைனைக் கச்சிதமாக அமைக்க முடியுமா?

முயன்று பாருங்கள். அவசியம் முடியும். அப்படி அமைக்கும்போது இந்தக் கட்டுரையில் நாம் பார்த்த நான்கு விஷயங்களை மறந்துவிடவேண்டாம். (எனக்கு ஒன்லைன்களை அனுப்பவேண்டாம். அவற்றைப் படித்து மார்க் போட எனக்கு நேரம் மிகக்குறைவுதான் என்பதால்). உங்கள் நண்பர்களிடம் அந்த ஒன்லைனைச் சொல்லிப் பார்க்கலாம். அல்லது உங்கள் மனைவி, காதலி(கள்), தோழிகள் ஆகியவர்களிடம் சொல்லிப் பாருங்கள். அவர்களுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது அவர்களின் முகத்தைப் பார்த்தாலேயே தெரிந்துவிடும்.

ஒருவேளை எவ்வளவு முக்கினாலும் ஒன்லைன் செட்டாகவில்லை என்றால் என்ன செய்வது?

அப்போது நமக்குப் பிடித்த படங்களைப் பார்க்கலாம். அவற்றின் ஒன்லைன்களைக் கணிக்க முயலலாம். நமக்கு ஏற்கெனவே தெரிந்த கதை என்பதால் அவற்றின் ஒன்லைனை உருவாக்குவது எளிது. இப்படிச் சிலமுறை செய்வது ஒன்லைன்கள் உருவாக்க நல்ல பயிற்சி.

ஒன்லைனைக் கச்சிதமாக உருவாக்கியபின்னர் என்ன செய்யலாம் என்பதை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம். வரும் வியாழன்.

தொடரும் . . .

  Comments

15 Comments

  1. அண்ணா.. அட்டகாசம்.. அதுவும் பயிற்சி எல்லாம் கொடுத்து அசத்திட்டிங்க… கலக்குங்க…

    Reply
  2. ram warcry

    super rajesh

    Reply
  3. யப்பா, பாராட்டுறதுக்கு எதுனா வார்த்தை புதுசா கண்டு புடிச்சுருக்காங்க? இவர இன்னா சொல்லி பாராட்டுறதுன்னு தெர்லயேப்பா?!! (y)

    //நெஞ்சுக்குள் ஓர் ஆலயம் அமைப்பது எத்தனை கஷ்டம் என்பதைத் திருநின்றவூரைச் சேர்ந்த ’பூசலார்’ என்ற பூசல நாயனாரைக் கேட்டால் தெரியும் //

    எல்லா விஷயத்துளையும் பூந்து விளையாடுறீங்களே. சூப்பர் தல!

    //ஆனால் தமிழில் அப்படிப்பட்ட கடுமையான விதிகள் இன்னும் பின்பற்றப்பட ஆரம்பிக்கவில்லை (இன்னும் 20 வருடங்களில் அப்படி நடக்கத் துவங்கலாம்).//

    அதுக்கு எதுக்கு 20 வருஷம். பக்கத்துல இருக்குற சைபர கட் பண்ணிடுங்க. அதுக்குள்ள நீங்க industry-ல என்ட்ரி ஆகிட மாட்டீங்க!!!!!!!!

    சீக்கிரம் வாங்க…..

    Reply
    • வந்துருவோம் பாஸ். சீக்கிரமே :-)..

      Reply
  4. karuppaih raj

    சந்தர்பவசத்தால் குறுக்கு வழியில் போலிஸ் ஆகும் ஒருவன், தனது லட்சியமான போலீஸ் வேலையை அடையமுடியாமல் விரக்தியில், பொண்ணுங்களை பணத்திற்காக கடத்தி கற்பழிக்கும் கும்பலிடம் சேரும் தனது உயிர் நண்பனையும் அவர்கள் கடத்திய பொண்ணுங்களையும் காப்பற்றினானா ? இல்லையா ?

    இது இன்னா படம்னு சொல்லுங்க?

    Reply
    • jai

      ANJATHE…

      Reply
    • இதோ ஜெய் சொல்லிட்டாரே 🙂 .. ஆனா உங்க ஒன்லைனை கொஞ்சம் சுருக்கணும். இன்னும் அழகாக்கணும். க்ரிஸ்ப்பா மாத்தணும் 🙂

      Reply
  5. Thulasi

    ந்யூக்ளியர் ஃபேமிலி என்னும் டைட்டில், கூட்டாக வாழும் குடும்பத்தினரைக் குறிப்பது.

    Is it?

    Reply
    • Yea Thulasi. Parents and their children. I guess I didn’t make this description clear. Cheers and thanks 🙂

      Reply
  6. nice
    nan nalla padam pannalmnu irukaen idhuvarai oru 20 siru kadhai eludhi irukaen
    ungal kattrai mika udhaviyaaka irukku

    Reply
    • Thank you boss. All the best 🙂

      Reply
  7. Balaji R

    Pinreenga Boss; You are doing a great job in keeping things simple. They always say this, ‘people who are good at doing things, always make it look easy’…

    Reply
    • Whatever are the things we like, we will do it with more interest, isn’t it Balaji? Thanks for the comment 🙂

      Reply
  8. Ramji

    இன்னைக்குதான் கருந்தேள் என் கண்ணுல பட்டுச்சு.செம்மையா இருக்கு!!! youtube la வீடியோ அப்லோட் பண்ணா இன்னும் நிறைய பேருக்கு யூஸ் ஆகும் பிரதர். because
    ” செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை”

    Reply

Join the conversation