Fade In முதல் Fade Out வரை – 8
முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம்
ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பு எப்படிப்பட்டது?
எல்லாவற்றுக்கும் முதலில் ஸிட் ஃபீல்ட் தொடங்கிவைத்த திரைக்கதை அமைப்பு மிகவும் எளிமையானது. ‘அறிமுகம் (அல்லது) ஆரம்பம், எதிர்கொள்ளல் என்ற நடுப்பகுதி, தெளிவான முடிவு’ என்பதே அவர் உருவாக்கிய வடிவமைப்பு. இவற்றில் இரண்டு ப்ளாட் பாயிண்ட்களைச் சேர்த்து, சில திருப்பங்களை உள்ளே வைத்தால் (Pinch 1, Midpoint & Pinch 2), முழுமையான ஒரு திரைக்கதை அமைப்பு கிடைத்துவிடுகிறது. அதனைக் கீழே படத்தில் பார்க்கலாம். இந்த அமைப்பைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இதோ ஸிட் ஃபீல்டின் புத்தகத்தைப் பற்றிய தொடரைப் படிக்கலாம்.
இவருக்குப் பிறகு வந்த திரைக்கதைப் பயிற்சியாளர்கள் அனைவருமே, ஒன்று- இந்த அமைப்பை அடிப்படையாக எடுத்துக்கொண்டு தங்களது அமைப்பை நிறுவினார்கள்; அல்லது- ஸிட் ஃபீல்டின் அமைப்பைக் கரித்துக்கொட்டிக்கொண்டே தங்களது அமைப்புகளை உருவாக்கினார்கள். அப்படி உருவாக்கப்பட்டவை அனைத்துமே மிகவும் விரிவாகவும் அமைந்தன. காரணம், ஏற்கெனவே ஒரு திரைக்கதை அமைப்பு பிரபலமாக இருக்கும்போது நாம் நமது அமைப்பை உருவாக்கினால் அவசியம் அதைவிடவும் detailedஆகத்தானே அமைப்போம்?
அப்படித்தான் ப்ளேக் ஸ்னைடரும் அவரது திரைக்கதை அமைப்பை விரிவாக பல படிகளில் உருவாக்கினார். இதில் கவனிக்கப்படவேண்டிய அம்சம், ப்ளேக் ஸ்னைடர் ஸிட் ஃபீல்டின் பள்ளியைச் சேர்ந்தவர். தமிழில் இலக்கியத்தில் பல பள்ளிகள் இருப்பதைப்போலவே திரைக்கதை அமைப்பிலும் இரண்டு பள்ளிகள் உண்டு. முதல் பள்ளி, ஸிட் ஃபீல்ட் பள்ளி. இதில் இருப்பவர்களில் ப்ளேக் ஸ்னைடர் முக்கியமானவர். இரண்டாம் பள்ளி, ஸிட் ஃபீல்டை எதிர்ப்பவர்கள் பள்ளி. இதைத் துவக்கியவர் ராபர்ட் மெக்கீ. இப்போது இருக்கும் பல திரைக்கதைப் பயிற்சியாளர்கள் இந்தப் பள்ளிதான். ஆனால் ஸிட் ஃபீல்டோ அனைவர் மேலும் அன்பு செலுத்தினார். அவருக்குப் பின்னர்தானே அனைவரும் உருவானார்கள்? அதனால்தான்.
சென்ற கட்டுரையில் பார்த்த ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை அமைப்பை இன்னொருமுறை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
The Blake Snyder Beat Sheet
PROJECT TITLE:
GENRE:
DATE:
1. Opening Image (1);
2. Theme Started (5);
3. Set-up (1-10);
4. Catalyst (12);
5. Debate (12-25);
6. Break into Two (25);
7. B Story (30);
8. Fun and Games (30-55);
9. Midpoint (55);
10. Bad Guys Close In (55-75);
11. All is Lost (75);
12. Dark Night of the Soul (75-85);
13. Break into Three (85);
14. Finale (85-110);
15. Final Image (110);
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1. Opening Image (1)
FADE IN.
INT. PURPLE HAZE PUB – BANGALORE. AFTERNOON – HAPPY HOURS.
பப்பின் வண்ணமயமான, பல badgeகள் தொங்கவிடப்பட்ட கதவின் அருகே இருவர் மட்டும் அமரும் மேஜை. அதில் நாம். சுற்றிலும் எண்பதுகளின் ராக் சூப்பர்ஸ்டார்களின் படங்கள். அளவான இடைவெளியில் மேஜைகள். தொண்ணூறுகளில் உலக ஃபேமஸான பப். இப்போது ஒன்றிரண்டு பேர் மட்டும்தான் இருக்கின்றனர். அந்தப் பப்பின் ப்ளஸ் பாயிண்ட் – அட்டகாசமான Rock பாடல்கள். அதனால்தான் அங்கு அடிக்கடி செல்வது நமக்குப் பிடிக்கும். எப்போதாவது தனியே. இது அந்த எப்போதாவதான நிமிடம்.
அப்போதுதான் லவ் ஃபெய்லியரில் இருந்து மீண்டு ஜாலியாகப் பப்பில் அமர்ந்து பியர் அருந்திக்கொண்டிருக்கிறோம். அந்தப் பெண்ணுக்கும் நமக்கும் wavelength செட் ஆகவில்லை. எனவே காதல் கட். ஒவ்வொரு ஸிப் பியரை உறிஞ்சும்போதும் மூளையைத் தாக்கும் போதையில் இண்டர்கட்டாக மின்னல் போல அவளது முகம்.
கதவு திறக்கிறது. அங்கே ஒரு பெண் வருகிறாள். நமக்கு எதிரே உள்ள மேஜையில் அமர்கிறாள். ஜீன்ஸ். Scorpions குழுவின் படம் போட்ட டிஷர்ட். அலட்சியமான – ஆனால் காஸ்ட்லி backpack. அவளிடம் ஒரு கம்பீரம் உள்ளது. பின்னணியில் ஓடும் Simple Plan பாடல் – Addicted – அப்போதுதான் தொடங்குகிறது. நமக்கு உடனடியாக மனம் உடைகிறது. உள்ளே போன பியரால் பழைய காதலியின் ஈரம் கலந்த நினைவுகள். ஆனால் அந்தப் பாடலை அவள் முணுமுணுத்துக்கொண்டே அங்கிருக்கும் மெனுவைப் பார்க்கிறாள். சர்வரை ஒரு விரலால் அழைக்கிறாள்.
பப்பில் ஓரிருவர்தான் என்பதால் கண்கள் இயற்கையாக அவளை நோக்கிச் செல்கின்றன. அதுவரை மனதில் இருந்த சோகம் மறைந்து மனம் மெதுவே ஜாலியாக மாறுகிறது. இண்டர்கட்டில் வந்த பழைய காதலியின் முகம் இப்போது பியரை உறிஞ்சும்போது மழுப்பலாகக் காணாமல் போகிறது. அவளுடன் பேசியே ஆகவேண்டும் என்று தோன்றுகிறது.
சற்று நேரம் பியர் உறிஞ்சிக்கொண்டே அவளைப் பார்த்துக்கொண்டுவிட்டு, இரண்டு பைண்ட்கள் (Pynt) பியர் உள்ளே சென்றதும் ஒரு குருட்டு தைரியத்தில் அவளிடம் சென்று ‘ஹாய்’ என்கிறோம். அவளும் ‘ஹாய்’ என்று சொல்லிவிட்டுப் புன்னகை செய்கிறாள். எப்படி இருக்கும்? ‘மே ஐ ஜாய்ன்?’. ‘ஷ்யூர்’. அவள் எதிரே அமர்கிறோம். சர்வர் நமது பியர் பிட்சரை மேஜைமேல் வைத்துச் செல்கிறார். அங்கே இருக்கும் டிவியில் பாடல் மாறி, இப்போது ஜிமி ஹென்ட்ரிக்ஸ். மிதமான வெளிச்சம். அந்தப் பெண்ணின் காதில் இருக்கும் பெரிய வளையம் உள்ளே என்னமோ செய்கிறது. அங்கிருக்கும் பியர், சிகரெட் வாடையை மீறிக்கொண்டு அந்தப் பெண்ணின் பெர்ஃப்யூம். அப்போதுதான் தெரிகிறது – மெல்லிய புன்னகையோடு அந்தப் பெண் நம்மையே இத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பது.
அந்த நேரத்தில் சர்வர் அந்தப் பெண் ஆர்டர் செய்திருந்த வோட்காவை வைத்துவிட்டு நகர்கிறார். அவள் பியர் ஆர்டர் செய்யவில்லை. வோட்கா என்பதால் இரண்டு ரவுண்டில் கிளம்பிவிடுவாள் என்று நமக்கு உள்ளே தோன்றுகிறது. எதையாவது பேசவேண்டும். நம்பர் வாங்கவேண்டும். அவளுடன் வெளியே செல்லவேண்டும். அவள் பெயர் என்ன?
‘பேசு….பேசு’..
மிகச்சரியாக அதே நேரத்தில் அவளது ஃபோன் அடிக்கிறது. ’ஹேய் ப்ரவீன் —- யா ஐம் இன் பர்ப்பிள் ஹேய்ஸ்.. யூ கமிங்? —–நோ நோ ஐம் கோன்னா ஃபினிஷ் இன் அ ஃப்யூ மின் —- ஓகே. வில் வெய்ட் இன் ப்ரிகேட். அவ்ர் யூஷ்வல் ஸ்பாட் இன்..(செல்லில் தெரியும் டைமைப் பார்க்கிறாள்).. எக்ஸாக்ட்லி ட்வெண்டி மின் ஃப்ரம் நௌ——-cya’
நம்மைப் பார்க்கிறாள். ‘யா…’. வோட்காவை வேகமாக அருந்த ஆரம்பிக்கிறாள். சர்வரிடம் பில் கொண்டுவரும்படி சிக்னலும் செய்துவிட்டாள்.
இந்த நேரத்தில் என்ன பேசமுடியும்? நாம் எதிர்பார்த்தது வேறு; அங்கே நடப்பது வேறு. வெகுசில நிமிடங்களில் அங்கிருந்து அவள் போய்விடுவாள். யாரோ ப்ரவீன் என்பவனைச் சந்திக்கப்போகிறாள். நமக்கு இருப்பது இன்னும் ஐந்து நிமிடம் என்றால் ஜாஸ்தி. அதன்பின் பில்லைக் கட்டிவிட்டு வெளியேறிவிடுவாள். இந்த நேரத்தில் நாம் பேசப்போவதுதான் அவள் நம்முடன் இனி இருக்கப்போகிறாளா இல்லை நம்மை சுத்தமாக நினைவே இருக்காமல் அவள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ளப்போகிறாளா என்பதை முடிவுசெய்யப்போகிறது. சுருக்கமாகச் சொன்னால் நமது வாழ்க்கையே அந்த வெகுசிலநிமிடங்களில்தான் முடிவாகப்போகிறது. லஃவ் ஃபெய்லியர் வாழ்க்கை + குடி + சிகரெட்டா, இல்லை இந்தப் பெண் + எப்போதாவது பியர் + எப்போதாவது சிகரெட்டா?
இந்த இடத்தில் தட்டுத்தடுமாறிக்கொண்டு ‘ஐ…..யாம் ‘ என்றெல்லாம் பேசினால் எந்தப் பயனும் இல்லை. அவளைப் பார்க்கிறோம். அவளும் பார்க்கிறாள். வோட்கா க்ளாஸைக் கீழே வைக்கிறாள்.
’டு யு லைக் ஜிமி ஹென்ட்ரிக்ஸ்’?
யோசிக்கிறாள். ‘சம்டைம்ஸ் யெஸ்.’
‘ஹூம் டு யு லைக்?’
‘well. . . Led Zeppelin‘
அவள் கண்களையே பார்த்துக்கொண்டு, இரண்டு கைகளையும் மேஜை மீது வைத்து அவளை நோக்கி மெதுவே நகர்கிறோம்.
‘இப்போது நீ இங்கே இருந்தால் இங்கே லெட் ஸெப்லின் போடச்சொல்கிறேன். இன்னொரு வோட்கா ஆர்டர் செய்யலாம். எனக்கு பியர் இருக்கிறது. Why don’t you stay?’
அவள் கண்களில் இருந்து நமது பார்வையை நகர்த்தவில்லை. கண்களில் லேசான தயக்கம். ஒரு ஓரத்தில் சிறிதாக நடக்கும் ஒரு அசைவு, நமக்கு நம்பிக்கையைக் கிளப்புகிறது. பேசுகிறாள்.
‘யூ நோ.. ஐ…. காட் டு கோ நவ்… மை ஃப்ரெண்ட் ஈஸ் காலிங்’
இது நமக்கு வைக்கப்பட்ட பொறி. இந்த இடத்தில் பேசாமல் இருந்தாலோ மொக்கையாக ரியாக்ட் செய்தாலோ பெரிய ஜெண்டில்மேன் போல ‘ஷ்யூர். ப்ளீஸ் கேரி ஆன்’ என்றெல்லாம் சிவாஜித்தனமாக நடித்தாலோ அவசியம் எழுந்து போய்விடுவாள். சந்தேகமே இல்லை. ஆனால் அவளை நாம் கன்வின்ஸ் செய்தால் நம்முடன் இருக்க 95% வாய்ப்பு உண்டு.
‘அவனுடன் எத்தனை தடவை பேசியிருப்பாய்? ஆனால் இந்த இடத்தில், உனக்குப் பிடித்த பாடல்களின் நடுவே அமர்ந்து உன்னுடன் பேசும் வாய்ப்பு இனி எனக்குக் கிடைக்காது’.
நம்மையே பார்க்கிறாள். செல்ஃபோனை எடுத்து ‘ப்ரவீன்.. வெரி ஸாரி.. மை ஃப்ரெண்ட் ப்ரியா கால்ட். ஷி ஈஸ் கோயிங் ஔட். நீட்ஸ் மை கம்பனி..ஐல் மீட் யூ டுமாரோ?’ ———— ‘ ஓகே. ஸீ யா’.
புன்னகையுடன் நம்மைப் பார்க்கிறாள்.
ஆட்டம் ஆரம்பம்.
இதுதான் Opening Image.
எந்தப் படத்தையும் நாம் பார்க்கையில் அதன் முதல் காட்சியைப் பார்த்தாலே ஒருவிதமான mood செட் ஆகும். அந்தப் படமே எப்படி இருக்கப்போகிறது என்பதற்கான விஸிட்டிங் கார்டே அந்த முதல் காட்சிதான். அந்தக் காட்சி பிடித்துவிட்டால் அவசியம் படம் முழுக்க நாம் அமரும் வாய்ப்பு ஜாஸ்தி. அப்படிப்பட்ட முதல் காட்சிதான் Opening Image. அந்தப் பெண்ணிடம் சென்று அமர்ந்ததும் நம்மைப் பற்றிய கணிப்பை அந்தப் பெண்ணுக்கு நாம் பேசுவதுதான் வழங்குகிறது. கண்டபடி உளறினால் ‘இவன் ஒரு மொக்கையன்’ என்று எண்ணி வோட்காவை நம் பேண்ட்டில் ஊற்ற வாய்ப்பு உண்டு. மாறாக, நாம் நாமாகவே அந்தப் பெண்ணிடம் பேசினால் நம்முடன் இருக்கவும் வாய்ப்பு உண்டு. முதல் காட்சியைப் பார்த்ததும் ஆடியன்ஸுக்கு எழுந்து ஓடவேண்டும்/வெளியே சென்று தம் அடிக்கவேண்டும்/பசங்க கூட பப்புக்கே போயிருக்கலாம்/க்ளாஸிலாவது அமர்ந்திருந்தால் தூங்கியிருக்கலாம் என்றெல்லாம் தோன்றினால் அந்தப் படம் அவுட். மாறாக முதல் காட்சியைப் பார்த்ததும் அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று உள்ளே எதுவோ நம்மிடம் சொன்னால் அவசியம் படம் முழுக்க நாம் அமர்ந்துவிடுவோம் (பின்னால் வரும் காட்சிகள் மொக்கையாக இருந்தாலுமே படம் அவுட்தான். அப்படி இல்லாமல், சுவாரஸ்யமான ஒரு படத்துக்கு அதைவிட சுவாரஸ்யமான ஓப்பனிங் இருக்கவேண்டும்).
இதே கருத்தைத்தான் ஸிட் ஃபீல்ட் ‘இன்ஸைட்டிங் இன்ஸிடெண்ட்’ (Inciting Incident) என்று விளக்குவார். அதனைப்பற்றி இங்கே இன்னும் ஆழமாகப் படிக்கலாம். இதையும் படித்தால் இன்னும் நன்றாகப் புரிதல் டெவலப் ஆகும்.
ப்ளேக் ஸ்னைடர் ‘Opening Image’ என்பதை இன்னும் விளக்குகிறார். ஓப்பனிங் இமேஜ் என்பதுதான் ஒரு ஹீரோவையோ ஹீரோயினையோ படத்தில் வரும் பிரதான பாத்திரங்களையோ ஆடியன்ஸுக்கு அறிமுகம் செய்யும் காட்சி. அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? எந்த சூழ்நிலையில் வாழ்கிறார்கள்? என்பதெல்லாம் இதில்தான் வருகிறது. நமது திரைக்கதையில் முழுதுமாக வரக்கூடிய எந்தப் பாத்திரமும், அப்படிப்பட்ட பயணத்தை ஆரம்பிக்குமுன் எப்படி இருக்கிறது என்பதை இந்த ஓபனிங் இமேஜ் உணர்த்துகிறது. ‘இமேஜ்’ என்றதும் ஒரே ஒரு ஷாட் என்று நினைத்துக்கொள்ளவேண்டாம். ஒரு ஸீன்/சில ஸீன்கள் என்பது இதில் அடங்கும்.
உதாரணமாக, ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் ராகவனின் அறிமுகம். அந்த ‘கண்ணை நோண்டும்’ காட்சியைப் பார்த்ததுமே படம் இனிமேல் எப்படி இருக்கப்போகிறது என்பது தெரிகிறதுதானே?
இங்லீஷில் இப்படிப்பட்ட ஆரம்பக் காட்சிகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லாப் படங்களுமே முதல் ஷாட்டிலேயே ஆரம்பித்துவிடுவது அங்கே சாதாரணம். சில நாட்களுக்கு முன்னர் வந்த Edge Of Tomorrowவில் இருந்து எழுபது ஆண்டுகள் முன்னர் வெளிவந்த Gone with the Wind படம் வரை எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் தமிழை எடுத்துக்கொண்டால் இப்படி முதல் ஷாட்டிலேயே கதை ஆரம்பிப்பது மணி ரத்னத்தின் வருகைக்குப் பிறகுதான் நிகழ்ந்தது. அதற்கு முன்பெல்லாம் எடுத்ததும் பாடல் வரும். இல்லாவிட்டால் எதாவது நகைச்சுவை சம்பவம். இல்லையென்றால் கதைக்கு சம்மந்தமில்லாமல் ஏதோ ஒரு சம்பவம் (இதற்கு ஒருசில விதிவிலக்குகளும் உண்டு). மணி ரத்னத்தின் வருகை அதை மாற்றியது. உதா: மௌன ராகம். படத்தின் முதல் ஷாட்டே குழந்தை ரேவதியின் பல புகைப்படங்கள்தான். அதிலேயே கதையின் mood செட் ஆகிவிடும். பின்னர் ரேவதியின் அறிமுகம். அந்தக் கதாபாத்திரத்தை ஆடியன்ஸ் அறிந்துகொள்வது. இப்படிச் செல்லும் படத்தில் 27ம் நிமிடத்தில் மோகனும் ரேவதியும் டெல்லியில் இறங்கிவிடுவார்கள். எண்பதுகளின் துவக்கத்தில் இருந்து ’தளபதி’ படம் வரும் வரையில் மணி ரத்னத்தின் படங்களை அடித்துக்கொள்ள ஆளில்லை. அந்தக் காலகட்டத்தில் 20 ஆண்டுகள் முன்னோக்கிய படங்களாக அவரது படங்கள் இருந்தன. அவைகள் எல்லாவற்றிலும் முதல் ஷாட்டிலேயே கதை ஆரம்பிப்பதும் இருக்கும். அதன்பிறகு வந்த படங்களில் ஒருசில காட்சிகள் நன்றாக இருந்தாலும் தளபதி வரையிலான படங்களின் ஃபீல் இல்லை (’இருவர்’ & ‘குரு’ நீங்கலாக).
கீழே இருக்கும் உதாரணத்தில் முதல் 3 நிமிடங்கள் எப்படி இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். படத்தின் ஒட்டுமொத்தக் கதையுமே அதில் வந்துவிடும்.
மணி ரத்னத்துக்கு முன்னாலும் அப்படிப்பட்ட ஒருவர் இருந்தார். அவர்தான் பாக்யராஜ். பாக்யராஜின் ’ராசுக்குட்டி’ வரையிலான எந்தப் படத்தை எடுத்துக்கொண்டாலும் இப்படித்தான் முதல் நிமிடத்திலேயே கதை ஆரம்பிப்பது இருக்கும். ’சின்னவீடு’ ஒரு நல்ல உதாரணம். படத்துக்கு வரும் ஆடியன்ஸை முதல் காட்சியிலேயே கவர்ந்துவிடவேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது என்பதற்கு அவரது படங்களின் முதல் காட்சிகள் உதாரணங்கள்.
கீழே இருக்கும் உதாரணத்தில் டைட்டில் எப்படிப் போடப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். கூடவே முதல் சில நிமிடங்கள்.
மணி ரத்னத்தின் வருகைக்குப் பிறகு தமிழில் இந்த முதல் காட்சி மேட்டர் நன்றாகவே எடுபட ஆரம்பித்தது. கௌதம் ஒரு உதாரணம். தரணி இன்னொரு உதாரணம். வெற்றிமாறன் மற்றொருவர். இவர்கள் என்று இல்லாமல் மேலும் பலரும் இப்படிப்பட்ட ஓப்பனிங் காட்சிகளை சுவாரஸ்யமாக வைக்க ஆரம்பித்து இப்போதெல்லாம் பக்காவாக ஹாலிவுட் பாணி திரைக்கதை அமைப்பைத் தமிழில் உபயோகிப்பது மிக அதிகமாக மாறிவிட்டது. உலகெங்கும் நிரூபிக்கப்பட்ட வெற்றிகரமான திரைக்கதை அமைப்புகள் ஹாலிவுட்டில்தான் மிக அதிகம் என்பதால் அது நல்லதுதான்.
நல்ல திரைக்கதை எழுத்தாளர் என்றால், ஆரம்பத்தில் காண்பித்த காட்சியைப் போலவே அதற்குப் பொருந்தும்படியாக முடியும்போதும் ஒரு காட்சி வைப்பார். கதை ஆரம்பிப்பதற்குமுன்னர் இருந்தவர்கள் கதை முடிந்தபின்னர் எப்படி இருக்கிறார்கள் என்று காட்டும்விதமாக.
இதுதான் Opening Image.
மேலே தலைப்பில் அடைப்புக்குறிக்குள் (1) என்று இருக்கிறதே? அது என்ன?
அதுதான் ப்ளேக் ஸ்னைடர் கொடுத்திருக்கும் திரைக்கதையின் பக்க எண். முதல் பக்கத்தில் மேட்டர் ஆரம்பித்துவிடவேண்டும் என்பதைத்தான் அது குறிக்கிறது. இந்த சுவாரஸ்யமான ஓப்பனிங் இமேஜ் என்பது முதல் 3-4 பக்கங்களுக்குள் இருக்கலாம். அதாவது திரைப்படத்தின் 3-4 நிமிடங்கள். அதற்குள் எப்படி எல்லாரையும் அறிமுகப்படுத்திவிடமுடியும்? அட்லீஸ்ட் பத்து பக்கங்களாவது வேண்டாமா?
கண்டிப்பாக வேண்டும்தான். ஆனால் ஓப்பனிங் இமேஜ் என்றால் 3-4 பக்கங்களுக்குள் எல்லாரையும் அறிமுகப்படுத்திவிடவேண்டும் என்று யார் சொன்னது? திரைக்கதைக்கு ஒரு சுவாரஸ்யமாக ஆரம்பம் தருவது மட்டுமேதான் இந்த நான்கு பக்கங்களின் நோக்கம். அந்த சுவாரஸ்யமான ஆரம்பத்துடனேயே அறிமுகம் என்பது கண்டிப்பாக இன்னும் சில பக்கங்களுக்கு வரலாம். இந்த நான்கு பக்கங்களில் திரைப்படத்தின் mood செட் செய்துவிட்டு அதன்பின்னர் கூட எல்லாரையும் அறிமுகப்படுத்தலாம். அல்லது கதாநாயகனை மட்டும் முதல் 3-4 பக்கங்களில் அறிமுகப்படுத்திவிட்டு (வேட்டையாடு விளையாடு ராகவனின் அறிமுகக் காட்சி அவ்வளவுதான் இருக்கும். டைட்டில் பாடலை சேர்க்காமல் பார்த்தால்) பின்னர் மற்றவர்களை அறிமுகப்படுத்தலாம்.
படம் பார்க்க வந்த ஆடியன்ஸ் எழுந்து ஓடாமல் ’Just started. It’s rocking!!’ என்று தியேட்டரிலேயே செல்ஃபோனை ஓப்பன் செய்து ஃபேஸ்புக்கிலோ ட்விட்டரிலோ ஸ்டேட்டஸ் போடும் அளவு இருக்கவேண்டும் என்பதுதான் ஓப்பனிங் இமேஜ் என்ற முதல் பாயிண்ட்டின் நோக்கம்.
பயிற்சி #4
1. Opening Image என்பதைப் படித்ததும் நீங்கள் செய்யவேண்டிய பயிற்சி – உங்களுக்குப் பிடித்த சில படங்களைப் பற்றி யோசிப்பது அல்லது பார்ப்பது. ஓப்பனிங் காட்சி எப்படி இருந்தது? அந்த ஓப்பனிங் காட்சியை வைத்தே படத்தின் mood உங்களுக்குப் புரிந்ததா? ஒருவேளை படத்தின் mood ஓப்பனிங் காட்சியில் சரியாகச் சொல்லப்படாமல் இருந்ததா? அப்படியென்றால் அந்த ஓப்பனிங்கை எப்படியெல்லாம் இன்னும் சுவாரஸ்யம் ஆக்கலாம்? ஓப்பனிங் காட்சியில் அறிமுகங்கள் இருந்தனவா? அவை சுவாரஸ்யமாக இருந்ததா? ஓப்பனிங் காட்சியில் சும்மா சுவாரஸ்யத்தை மட்டும்தான் உணர்ந்தீர்களா? இல்லை கதையின் ஆரம்பம் அதில் இருந்ததா?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கும்போது, ஓப்பனிங் இமேஜ் என்பது முதல் 3-4 நிமிடங்கள் மட்டும்தான் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். இடையே டைட்டில் ஸாங் வந்தால் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம். ஸாங் கணக்கில் இல்லாமல் ஓப்பனிங் என்பது 3-4 நிமிடங்களில் இருந்ததா? ஒருவேளை பாடலில் கதை நகர்ந்தால் மட்டும் அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
இதை யோசித்துப் பாருங்கள்.
2. உங்களுக்குப் பிடித்த படங்களைப் பார்த்து ஓப்பனிங் இமேஜ் பற்றிய ஹோம் வொர்க்கை முடித்துவிட்டபின், உங்கள் மனதில் இருக்கும் ஒன்லைனை யோசித்துப் பாருங்கள். அந்தக் கதைக்கு எப்படிப்பட்ட ஓப்பனிங் காட்சி வைக்கலாம்? மேலே நாம் பார்த்த அத்தனை கேள்விகளுக்கும் அதில் பதில் இருக்கவேண்டும். அந்த ஓப்பனிங் காட்சியைப் பார்த்ததுமே ஆடியன்ஸுக்கு சுவாரஸ்யம் அதிகரிக்கவேண்டும். படத்தைப் பற்றிய எண்ணம் தோன்றவேண்டும்.
தொடரும் . . .
now i realized how “lathika” made 200 days…
மிக்க நன்றி அண்ணே ஒப்பணிங் பற்றியெ வெளுத்து வாங்கியிருக்கிறீர்கள். பல படங்களை மனத்திரையில் வச்சு பிச்சு உதற வைத்திருக்கிறீர்கள்
மணிரத்னம் உதாரணம் எதற்கு?
ஆரம்பத்தில் அவரை திட்டிவிட்டு…