Fade In முதல் Fade Out வரை – 9

by Karundhel Rajesh June 20, 2014   Fade in to Fade out

முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம்

Fade In முதல் Fade Out வரை


 

ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை உத்திகளைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதோ அவரது திரைக்கதை முறை.

The Blake Snyder Beat Sheet

PROJECT TITLE:
GENRE:
DATE:

1. Opening Image (1);
2. Theme Started (5);
3. Set-up (1-10);
4. Catalyst (12);
5. Debate (12-25);
6. Break into Two (25);
7. B Story (30);
8. Fun and Games (30-55);
9. Midpoint (55);
10. Bad Guys Close In (55-75);
11. All is Lost (75);
12. Dark Night of the Soul (75-85);
13. Break into Three (85);
14. Finale (85-110);
15. Final Image (110);

சென்ற வாரம், முதல் பாயிண்ட்டான Opening Image (1) என்றதைப் பார்த்தோம். அதை இங்கே படிக்கலாம்.

இந்த வாரம், இரண்டாம் பாயிண்ட் – Theme Started (5) என்பதைப் பார்ப்போம்.


 

2. Theme Started (5)

ஒரு நல்ல திரைக்கதைக்கு எது அடையாளம்? திரைக்கதை ஆரம்பித்த சில நிமிடங்களில் கதை எதை நோக்கிச் செல்லப்போகிறது என்பது எப்படியாவது – எந்தக் கதாபாத்திரத்தின் வாயிலாகவோ (பெரும்பாலும் அது பிரதான கதாபாத்திரங்களாக இருக்காது) வெளிப்பட்டுவிடும். அந்தக் கதாபாத்திரம், பிரதான கதாபாத்திரத்திடம் நமது திரைக்கதை எங்கே செல்லப்போகிறது என்பதைப்பற்றிய கேள்வியையோ அல்லது வசனத்தையோ பேசும். அப்படிச் சொல்வதை அந்தப் பிரதான கதாபாத்திரம் கவனிக்காது (அல்லது) அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாது. ஆனால் அது பின்னால் உண்மை ஆகிவிடும். அதுதான் நமது திரைக்கதையில் அந்தக் கதாபாத்திரம் பெரும்பாலும் அடைய நினைப்பதாகவோ, அதன் நோக்கமாகவோ ஆகும்.  இது, சில காட்சிகளாலும் காட்டப்படலாம். அதாவது, பின்னால் நடக்கப்போவதைப் பற்றிய க்ளூக்கள்.

இதை எப்படிப் புரிந்துகொள்வது?

ப்ளேக் ஸ்னைடர் சொல்வது ஹாலிவுட்டுக்காக என்பதை மறந்துவிடவேண்டாம். ஹாலிவுட்டில் எல்லாத் திரைக்கதைகளும் முதல் ஷாட்டிலேயே கதையை ஆரம்பித்துவிடும். இதனால் நாம் சென்ற வாரம் பார்த்த Opening Imageஜைப் பார்த்ததும் உடனேயே கதையும் ஆரம்பிப்பதற்கான காட்சிகளும் வந்துவிடும். அப்போதுதான் இந்தப் பாயிண்ட்டும் வரும்.

ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் இது எப்படிப் பொருந்தும்?

தமிழை எடுத்துக்கொண்டால் தற்போது வரும் பல படங்களில் ஹாலிவுட் திரைக்கதை முறைதான் கையாளப்படுகிறது. எடுத்ததும் கதை துவங்கிவிடுகிறது (பெரும்பாலும்). இருந்தாலும், தமிழில் அறிமுகம் என்பது கொஞ்சம் எக்ஸ்ட்ரா நிமிடங்கள் பிடிக்கக்கூடியது. திரைப்படத்தின் முதல் 10-15 நிமிடங்கள் இதிலேயே சென்றுவிடுகின்றன. அதில் தவறே இல்லை. காரணம் தமிழ் திரைக்கதை முறையில் இதுவரை யாரும் எந்த ஃபார்முலாவையும் எழுதி வைக்கவில்லை. இன்றுவரை ஒவ்வொருவருக்கும் உரிய ஒரு முறைமையில்தான் அனைவரும் திரைக்கதை எழுதிவருகின்றனர் – திரைப்படங்களை இயக்கியும் வருகின்றனர். எனவே ஸிட் ஃபீல்டைத் தவிர பிறரின் திரைக்கதை முறைகளைத் தமிழில் அப்படியே பயன்படுத்துவது சிலசமயம் பிரச்னைகளில் முடியலாம்.

உதாரணமாக, ‘சுப்ரமண்யபுரம்’ படத்தில் கதை ஆரம்பிப்பது – கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கழித்து லாட்ஜில் நடக்கும் காட்சியில்தான். அப்போதுதான் தன் அண்ணனை அவமானம் அடையவைத்தவர்களைக் கொல்லச்சொல்லும் காட்சி வருகிறது. அதுதான் கதையின் துவக்கம். அதுவரை நாம் பார்த்ததெல்லாம் அந்தத் தருணத்துக்காக ஆடியன்ஸைத் தயார் செய்த காட்சிகள்தான். அப்படித் தயார் செய்யும் காட்சிகளுக்கு இத்தனை நீளம் அவசியமும் கூட. அப்போதுதான் ஆடியன்ஸால் இன்வால்வ் ஆகிப் பார்க்க முடியும். இந்தப் படத்தில் ‘ஆரம்பத்தில் பத்தே நிமிடத்தில் கதை துவங்கிவிடவேண்டும்’ என்றெல்லாம் ப்ளேக் ஸ்னைடர் வந்து சொல்லியிருந்தார் என்றால் படமே ஒருவேளை ஃப்ளாப் ஆகியிருக்கலாம்.

ஆனால் அதேசமயத்தில் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் இந்த உத்தி தமிழில் இல்லாமலும் போகவில்லை.

சூது கவ்வும்’ படத்தில், ஆரம்பத்தில் மூன்று கதாபாத்திரங்களைக் காட்டிவிட்டு தாஸ் பாத்திரத்தைக் காட்டும்போது அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? ஒரு பெண்ணைக் கடத்த ரெடியாக இருக்கிறார். அந்தக் காட்சியைப் பார்த்ததுமே படம் எப்படி செல்லப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறதுதானே? அவர் சொதப்புகிறார் என்பது ஷாலு பேசும் வசனங்களால் தெரிகிறது. இது படத்தின் மிக ஆரம்பத்திலேயே வந்துவிடுகிறது. ஸிட் ஃபீல்டாக இருந்தாலும் சரி, ப்ளேக் ஸ்னைடராக இருந்தாலும் சரி, ராபர்ட் மெக்கீயாக இருந்தாலும் சரி – ‘சூது கவ்வும்’ திரைக்கதை உத்திகளுக்குக் கச்சிதமான உதாரணம். இன்னும் சில படங்களும் உள்ளன. ‘கில்லி’, ‘முதல்வன்’, ‘ஆடுகளம்’, ‘இந்தியன்’, ‘ஜெண்டில்மேன்’, ‘பொல்லாதவன்’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ ஆகியவை அவற்றில் முக்கியமான படங்கள். இந்தப் படங்கள் எல்லாவற்றிலும் திரைக்கதைக்கான விதிகள் அவசியம் இருக்கும். மணி ரத்னத்தின் ’தளபதி’ வரையிலான படங்களும் உதாரணங்கள். பாக்யராஜின் ‘ராசுக்குட்டி’ வரையிலான படங்களும்தான். சில படங்கள் இந்த லிஸ்ட்டில் விட்டுப்போயிருக்கலாம்.

இந்தப் படங்கள் மட்டும் கச்சிதமாக திரைக்கதை விதிகளுக்குள் அகப்படுவதன் காரணம் என்ன?

சுவாரஸ்யம் என்பதுதான் மேட்டர். நான் மேலே சொல்லியிருக்கும் படங்களை எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் பார்க்கமுடியும். அலுக்காது. இவற்றைத் தவிரவும் பல ஹிட்கள் தமிழில் உண்டு. உதாரணம் – ‘சின்னதம்பி’. சின்னதம்பியை உங்களால் எத்தனை முறை பார்க்க முடியும்? (கவுண்டமணி – செந்திலுக்காக பலமுறை பார்ப்பேன் என்று சொல்லக்கூடாது). சின்னதம்பியைப் போன்ற ஹிட்களை ஒருமுறைதான் அதிகபட்சம் பார்க்க முடியும். அதில் சுவாரஸ்யம் மிகவும் கம்மி. செண்ட்டிமெண்ட்டுக்காகவே ஓடிய படம் அது. அதேபோல்தான் ‘கரகாட்டக்காரன்’. கவுண்டமணி – செந்தில் ஹீரோவாக நடித்த படம். பேபி ஷாம்லி ஹீரோயினாக நடித்து பாம்பு, பல்லி, ஓணான் ஆகிய ஜந்துக்களுடன் பேசி, ஆடிப்பாடி நடித்த படங்களும் இந்த கேடகரிதான்.

ஒரு திரைப்படத்தை உங்களால் ஒரு முறைக்கும் மேலே பார்க்க முடிகிறதா? அதில் நடித்த நடிகருக்கு நான் வெறியன், படத்தில் ஒரு ஷாட்டில் நான் வேலை செய்யும் ஆஃபீஸ் வருகிறது, படத்தில் ஒரு பாடலில் பின்னால் நடப்பவர் எனது ஒன்றுவிட்ட சித்தப்பு, படம் முழுதும் காமெடிக்காகவே பார்க்கலாம் என்றெல்லாம் சொல்லக்கூடாது. கதை – அல்லது காட்சிகளின் சுவாரஸ்யத்துக்காகவே ஒருமுறைக்கும் மேல் உங்களை எந்தப் படம் கவர்ந்திருந்தாலும், அதன் திரைக்கதையை நீங்கள் ஸ்டடி செய்யலாம். அது நல்ல படம்தான்.

ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்துவது என்பது ஒரு மிகக்கடினமான வேலை. திரைக்கதை உறுதியாக இருந்தால்தான் அது நடக்கும். அப்படி சுவாரஸ்யப்படுத்தும் எந்தப் படமும் எல்லாத் திரைக்கதை விதிகளையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் – அப்படி இருக்கிறது என்பதே தெரியாமல். அதுதான் உலகில் வெளிவந்த அத்தனை சுவாரஸ்யமான படங்களுக்கும் பொதுவாக இருக்கும் ஒரே சூத்திரம் – சூட்சுமம் – ஃபார்முலா – எல்லாமே.

அப்படி அனைவரையும் சுவாரஸ்யப்படுத்தும் எல்லாப் படங்களிலும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ‘Theme Started (5)’ என்ற அம்சம் இருந்தே தீரும். சந்தேகமே இல்லை. சொல்லவரும் கதையின் துவக்கப்புள்ளி. ஆனால் அவ்வளவு முக்கியமாக கவனிக்கப்படாதது. யாரேனும் படத்தில் நடக்கப்போகும் பிரச்னைகளின் மிகச்சிறிய க்ளூவைப் பேசுவது. அல்லது அதைப் பற்றிய காட்சிகள் காட்டப்படுவது.

முதல் ட்ராஃப்ட்டில் இதை வைக்காமல் இருக்கலாம். தப்பே இல்லை. ஆனால் மெதுவாக நமது கதையை செதுக்கும்போது இறுதி வடிவத்தில் இப்படி ஒரு சின்ன க்ளூவை முன்னால் வைத்துப் பாருங்கள். அதன்பின் படம் பார்க்கும் ஆடியன்ஸ், படத்தின் முக்கியமான சம்பவங்கள் வரும்போதெல்லாம் ‘அட.. ஆரம்பத்துலயே அந்தக் கேரக்டர் இதை ஹீரோ கிட்ட கேட்டுச்சே’ என்று ஆச்சரியப்படுவார்கள். இப்படி முன்னும் பின்னும் கோர்ப்பது நல்ல திரைக்கதையின் இன்றியமையாத அம்சம்.

இன்னொரு உதாரணம் – கில்லியில் படம் ஆரம்பிக்கும்போது விஜய்யின் ஜாக்கிங் முடிந்தபின்னர், படம் ஆரம்பித்த இரண்டு மூன்று நிமிடங்களிலேயே வேலு சிலபேரால் கார்னர் செய்யப்படுவான். ‘மாட்டிக்கிட்டியா?’ என்று அவர்கள் கேட்கையில், ‘எந்த ஏரியாலயும் எனக்கு பயம் கிடையாது’ என்று வேலு சொல்வான். அது ஏதோ திணிக்கப்பட்ட பஞ்ச் போலத் தோன்றினாலும், அந்தக் கதாபாத்திரத்தின் முக்கியமான குணம் அது. எதிரியின் ஏரியாவிலும் பயமில்லாத அதே குணத்தால்தான் கதாநாயகியைப் பின்னால் அவன் காப்பாற்றப்போகிறான்.

இன்னும் ஒரு உதாரணம். ‘விஸ்வரூபம்‘ படத்தில் ஆரம்பத்திலேயே புறாக்களுக்கு இரை போடும் காட்சி வரும். அந்தப் படத்தின் போஸ்டர்களிலேயே புறாக்கள் காட்டப்பட்டிருக்கும். இது ஏன் என்று தெரிகிறது தானே? (Update – 20th June 2014 – இந்தக் கட்டுரையை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்தபோது காளிஸ்வரன் என்ற நண்பர் போட்ட கமெண்ட் இது. நமது தொடரைப் படிப்பவர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை).

இதுபோன்ற சின்னச்சின்ன – ஆனால் பின்னால் நினைத்துப்பார்க்கும்போது ’ஆமாம்ல… ஆரம்பத்துலயே இது வந்திச்சே’ மொமெண்ட்கள்தான் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் ’Theme Started (5)’ என்ற இரண்டாவது உத்தி. ‘5’ என்பது ஐந்தாவது பக்கம் என்பதைக் குறிக்கிறது. குத்துமதிப்பாக திரைக்கதையின் ஐந்தாவது பக்கத்தில் இந்த மொமெண்ட் இருக்கவேண்டும் என்பது ப்ளேக் ஸ்னைடர் கருத்து.

3. Set-Up (1-10)

திரைக்கதையின் முதல் பத்து பக்கங்கள்தான் செட்டப். ’ஆடியன்ஸ் திரையரங்குக்குள் வந்து அமரும்போது அவர்களை முதல் பத்து நிமிடத்தில் கவரத் தவறினால் அந்தப் படம் ஜெயிபது கடினம்’ என்று ஸிட் ஃபீல்டும் சொல்லியிருக்கிறார். அவரது திரைக்கதை வடிவமைப்பில் Inciting Incident‘ என்ற சொல்தான் இந்த ஆரம்ப சுவாரஸ்யத்தைச் சொல்கிறது. முதல் பத்து பக்கங்களில்தான் அத்தனை கதாபாத்திரங்களும் (குறைந்தபட்சம் 90% பாத்திரங்கள்) அறிமுகப்படுத்தப்படவேண்டும். அவர்களுக்குள் என்னென்ன உறவுமுறைகள், சிக்கல்கள் என்பதெல்லாம் வந்துவிடவேண்டும். பிரதான பாத்திரங்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதும் இருக்கவேண்டும். அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களும் இதிலேயே வந்துவிடவேண்டும். சுருக்கமாக – திரைக்கதையின் துவக்கத்தில் எல்லாரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதற்கு விடை.

கூடவே இன்னொன்றும் முக்கியம். படத்தில் கதாநாயகன் எதை அடையப்போகிறானோ, அது அவனிடம் திரைக்கதை ஆரம்பத்தில் இல்லை என்பதையும் காட்டிவிடவேண்டும். அது இல்லாததால் அவனுக்கு என்ன பிரச்னை என்பது இங்கேயே தெளிவாக இருக்கவேண்டும். வழக்கமான தமிழ் சினிமா க்ளிஷே டெம்ப்ளேட் உங்களுக்கு நினைவிருக்கலாம். பணக்கார ஹீரோயின் – ஏழை ஹீரோ. இங்கேதான் – முதல் பத்து பக்கங்களில்தான் – ஹீரோவின் ஏழை வாழ்க்கை காட்டப்படும். தேமே என்று வாழ்வான். ஒரு சந்தோஷம் இருக்காது. பின்னால் ஹீரோயினைக் கைப்பிடித்ததும் சந்தோஷம் கிடைக்கும்.

கமல்ஹாஸனின் ‘பேசும்படம்’ இதற்கு ஒரு நல்ல உதாரணம். படம் ஆரம்பிக்கும்போதே ஏழை வேலையில்லாப் பட்டதாரியாக கமலின் கதாபாத்திரம் அறிமுகமாகிவிடும். அந்த ஏழ்மைதான் படத்தின் முதல் பத்து நிமிடங்களில் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும். அதன்பின் அவன் ஒரு பணக்காரனை சந்திப்பான். அவனது பணம் நிறைந்த வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத்தான் ஆள்மாறாட்டம் செய்வான்.

சில படங்களில் ஹீரோ தேடி அலைவது ஒரு கொலைகாரனாகவோ கொள்ளைக்காரனாகவோ இருக்கலாம். அப்போது இதை எப்படிக் காண்பிப்பது? சிம்பிள். அந்தக் கொலைகாரனின் ஆரம்பகட்ட க்ளூக்கள் – வேட்டையாடு விளையாடு படத்தில் விரல் வீட்டின் வாசலில் தொங்குமே – அப்படிக் காட்டலாம். முதல் பத்து பக்கங்களில் கச்சிதமாக அதில் கதை துவங்குவதைக் காணமுடியும். மேலே நாம் பார்த்த அத்தனை படங்களும் இப்படியே.

கதாநாயகன்/நாயகியின் உலகத்தில் அவர்கள் நினைப்பதை சாதிக்கக் கிளம்புமுன்னர் எப்படி வாழ்ந்து வந்தார்கள் என்பதே இந்த முதல் பத்து பக்கங்கள். முடிந்தவரை சுவாரஸ்யமாக அதனைக் காட்டுதல் நல்லது.

பயிற்சி #5

இந்த வாரம், நீங்கள் அடிக்கடி பார்க்கும் படம் என்று ஒன்று இருந்தால், அதனைப் போட்டுப் பாருங்கள். முதல் சில நிமிடங்களில், நாம் பார்த்த ‘க்ளூ’ மேட்டர் வருகிறதா? அது ஒரு சிறிய அரை நொடி வசனமாகவும் இருக்கலாம். ’முண்டாசுப்பட்டிக்கெல்லாம் போக வேணாம் மாஸ்டர்’ என்பதுபோன்ற க்ளூவாக இருக்கலாம். அங்கு போனால் பிரச்னை என்பது அர்த்தம். ஆனால் படத்தில் பின்னால் அதுதான் நடக்கும். உங்களுக்குப் பிடித்த படங்களில் அப்படிப்பட்ட விஷயம் என்ன வருகிறது? ஒருவேளை அப்படி இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. நன்றாகப் பார்த்தும் அது இல்லை என்றால் பரவாயில்லை.

ஒருவேளை உங்கள் படத்தின் திரைக்கதைச் சுருக்கம் உங்கள் கையில் இருந்தால், படத்தின் பின்னால் வரப்போகும் நிகழ்வுகளை இங்கே எப்படி லைட்டாக ஒரு க்ளூவாகக் கொண்டுவருவீர்கள்? யோசித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை கதை முழுதாக ரெடி ஆகாவிட்டால், முதல் ட்ராஃப்ட் முடிந்ததும் உட்கார்ந்து இதனை யோசிக்கவும். ஆடியன்ஸ் மனதில் சுவாரஸ்யத்தைக் கிளப்பும் விஷயம் இது.

பயிற்சி #6

உங்களுக்குப் பிடித்த படங்களில் டைட்டில்கள், டைட்டில் ஸாங் ஆகியவை இல்லாமல், முதல் பத்து நிமிடங்கள் எப்படி இருக்கின்றன? கதாபாத்திரங்கள் எங்கு இருக்கிறார்கள்? அவர்களுக்குள் என்ன சம்மந்தம்? அவர்களின் சுற்றுப்புறங்கள் எப்படி? ஹீரோ/ஹீரோயினுக்கு என்ன தேவை? அது இல்லாமல் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? கதாபாத்திரங்களுக்கு ஏதேனும் விசேட மேனரிஸங்கள் (உடல்மொழி) உள்ளனவா? ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்ற கதாபாத்திரத்திடம் இருந்து எப்படி வேறுபடுகிறது?

உங்கள் படத்தில் இதை எப்படி விளக்கியிருக்கிறீர்கள்?

வரும் வாரம் சந்திப்போம்.

தொடரும்…

  Comments

9 Comments

  1. நன்றி அண்ணே
    அலேட் வச்சி எத்தனை மணியானாலும் விழித்து எழுந்து வாசிக்கும் அளவுக்கு தொடரை வைத்து விட்டீர்கள் (2.45 AM).
    இதற்கு தான ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் இந்த டெம்ளட் மிஸ் ஆனதோ என்ற சந்தேகம் எனக்குள் இருக்கிறது. அல்லது மசாலாத்தனமாக அப்படத்தை நகர்த்த நினைத்து இதை கடைப்பிடிக்காமல் விட்டார்களோ தெரியவில்லை.

    Reply
    • Rajesh Da Scorp

      நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கல பாஸ். அதைப் பத்தின உங்க கருத்தை இங்க சொல்லுங்க.

      Reply
  2. Accust Here

    என் மரமண்டைக்கு இன்னும் விஸ்வரூபம் படத்தில் வரும் புறா காட்சி பத்தி ஒன்னும் புரியல,அத நான் இத வாசிக்கிற வரைக்கும் கண்டுகிட்டது கூட இல்ல, கொஞ்சம் விளக்க முடியுமா அல்லது உங்கள் விஸ்வரூபம் பதிவில் இதைபத்தி போட்டுரிகின்களா

    இதுபோல் தமிழ் படங்களை எடுத்துகாட்டாக சொல்லும்போது கொஞ்சம் புரிகிறது. நிறைய எடுத்துகாட்டுகள் தர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்

    Reply
    • ஓகே. என்ன மேட்டர்னா, படத்தோட இறுதில புறாக்கள் மூலமாத்தான் குண்டுகளை வைக்க ப்ளான் பண்ணுவாங்க.. அதை ஆரம்பத்திலேயே உணர்த்தும் க்ளூதான் மொதல்லயே புறாக்களைக் காட்டுறது.

      Reply
      • Accust Here

        மிக்க நன்றி. நானெல்லாம் எந்த தைரியத்துல நோலன் படமெல்லாம் பாக்கிறேன்னு தெரியல.

        Reply
  3. Vignesh

    It’s very useful

    Reply
  4. Abarajithan

    //ஆமாம்ல… ஆரம்பத்துலயே இது வந்திச்சே’ மொமெண்ட்கள்//

    ப்ரெஸ்டீஜ் ப்ரெஸ்டீஜ்… அதைப் பார்த்த எவனும் திரும்பப் பார்க்காமல் விடமாட்டான். (இது ரொம்ப ஓவரான உதாரணம்தான்)

    நான் சினிமாவில் எழுதும் சீரியசான உத்தேசமெல்லாம் இல்லாததால் உங்கள் எழுத்து நடையை ரசிப்பதற்கும், எனது சினிமா ரசனையை, விமர்சனத் திறமையை வளர்ப்பதற்கும், (வெளியே போய் பந்தா காட்டுறத்துக்கும்தான்) தொடர்ந்து படித்து வருகிறேன். அதனால் பயிற்சிகளை செய்வதில்லை.

    Reply
  5. Sureshkumar

    Sema article boss. Padicha piragu, “Naama en funny ah oru movie edukka kudathu nu thonuthu”… Very informative… Expecting a movie from you.. And you can give at least above average movie..

    Reply

Join the conversation