Filth (2013) – English

by Karundhel Rajesh February 13, 2014   English films

முன்குறிப்பு – ’நல்ல’ ஆத்மாக்கள் இந்தக் கட்டுரையையோ அல்லது படத்தையோ படிக்க/பார்க்க வேண்டாம்.

தற்கால மனித வாழ்க்கை எப்படிப்பட்டது? பண்டைய காலத்தில் தியாகம், அன்பு, மனித வாழ்வின்மேல் இருக்கும் பரிவு போன்றவை பெரிதாகப் பேசப்பட்டன. நாவல்கள், படங்கள் ஆகியவற்றில் இவற்றை அதிகமாகக் காணலாம். தமிழை எடுத்துக்கொண்டால், ஆதி காலத்தில் இருந்து இன்றுவரை திரைப்படங்களில் இவைதான் பெரும்பாலான தீம்கள். ஐம்பதுகளில், ரத்தக்கண்ணீர் ஒரு வித்தியாசமான படமாக வெளிவந்தது. கதாநாயகன் பிற மனிதர்களிடம் தனக்கு உள்ள வெறுப்பையும், வாழ்வின் மேல் இருக்கும் விமர்சனங்களையும் பகடியாக வெளிப்படுத்தும் வகையிலான படம். ஆனால் தமிழில் இதுபோன்ற முயற்சிகள் மிகவும் அரிது.

உலக அளவில் படங்களை எடுத்துக்கொண்டாலும், வாழ்க்கையின் நிலையாமை, சக மனிதர்களிடம் உள்ள வெறுப்பு, சமூகத்தின் மேல் இருக்கும் கோபம், அன்றாட வாழ்க்கையின் irony போன்றவைகளை வெளிப்படுத்தும் படங்கள் கொஞ்சம் குறைவுதான். நாவல்கள் அதிகமாக இருந்தாலும், படங்களாக Taxi Driver, Fear and Loathing in Las Vegas, Dev D, Eternal Sunshine of the Spotless Mind, Salo or 120 days of Sodom, Fight Club, Full Metal Jacket, The Coast Guard போன்றவை நான் பார்த்தவைகளில் முக்கியமானவை.

இதுபோன்ற படங்கள் பெரும்பாலான சமூகத்தினருக்காக எடுக்கப்படுபவை அல்ல. பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள சமூகம், நம்மேல் திணிக்கும் பலவிதமான கற்பிதங்களில் ஒன்றுதான் ‘மனித வாழ்க்கை ஒரு வரம்’ என்பது. உண்மையில் அப்படியா இருக்கிறது? தினமும் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் அப்படி நம்மை நினைக்க வைப்பதில்லை அல்லவா? ‘ஏன் இத்தகைய அசிங்கமான/கொடூரமான/கசப்பான/எரிச்சலூட்டும்/மிருகத்தைப்போன்ற/போலித்தனமான/ (உங்கள் இஷ்டத்துக்கு மனதில் தோன்றும் வார்த்தை அல்லது வார்த்தைகளைப் போட்டுக்கொள்ளவும்) ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம்?’ என்ற எண்ணம்தான் பெரும்பாலும் நமது மனதில் தோன்றும் எண்ணமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு எண்ணத்தின் விளைவே Nihilism, Cynicism, Existentialism போன்றவற்றின் வெளிப்பாடு. சுருக்கமாக சொல்லப்போனால், ‘மனித வாழ்க்கை என்பது இலக்கற்றது; அர்த்தமற்றது; ஒழுக்கம், நன்னடத்தை போன்றவையெல்லாம் சமூகத்தால் நம்மீது திணிக்கப்படுபவை மட்டுமே’ என்பதே இப்படிப்பட்ட தத்துவங்களின் சாரம்.

நமக்கு லாபம் வரப்போகிறது என்பதை உணர்ந்த அடுத்த நொடி நாம் எப்படி மாறுகிறோம்? பல்லிளித்து, முதுகில் குத்தி, நம்பிக்கைத் துரோகம் செய்து, சமயத்தில் கொலை வரை போகிறோம் அல்லவா? (நாம் = மனித இனம்). அதுதான் நிஜமான, முகமூடிகளற்ற ‘நாம்’.

திரைப்படம் பற்றி எழுதாமல் தத்துவ விசாரம் செய்வதன் நோக்கம், இந்தத் திரைப்படத்தின் கருத்து பற்றி சொல்லலாம் என்பதே.

ப்ரூஸ் ராபர்ட்ஸன் என்பவன் எடின்பர்க் போலீசில் டிடெக்டிவ் சார்ஜெண்ட்டாக வேலை பார்ப்பவன். அவனுடன் வேலை செய்பவர்களைப் பற்றித் திரைப்படத் துவக்கத்தில் ப்ரூஸே நமக்கு அறிமுகம் செய்கிறான். அவனது பார்வையில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம வேலையில் நீடிப்பதற்காக அசிங்கமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று சொல்கிறான். அவனது துறையில் ஒரு ப்ரமோஷன் வரப்போகிறது. ஆனால், அந்தப் ப்ரமோஷன் யாராவது ஒருவருக்குத்தான் கிடைக்கும். ப்ரூஸுடன் வேலை பார்ப்பவர்களான ரே, பீட்டர், அமாண்டா ஆகியவர்களோடு சேர்த்து ப்ரூஸும் அந்தப் போட்டியில் இருக்கிறான். இவர்களில் அந்தப் ப்ரமோஷன் கிடைக்கும் வாய்ப்பு ப்ரூஸுக்கே அதிகம். அதையும் அவனே நமக்குச் சொல்கிறான்.

இந்தச் சூழ்நிலையில் அந்த இடத்தில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையை ப்ரூஸின் மனைவி பார்த்துவிடுகிறாள். கொலையைத் துப்பறியும் பொறுப்பு ப்ரூஸின் துறைக்கு வருகிறது. ப்ரூஸின் தலைமை அதிகாரியான ராபர்ட் டோல், இந்தக் கேஸை ப்ரூஸுக்கே அளிக்கிறார். கொலைகாரனைக் கண்டுபிடித்தால், ப்ரமோஷன் கிடைப்பதற்கான பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது என்னும் கேரட்டையும் அவனது கண்கள் முன் ஆட்டுகிறார்.

ஏற்கெனவே தன்னைச் சுற்றியுள்ள யாரையும் பிடிக்காமல் வெறுப்புடன் அலையும் ப்ரூஸ், இந்த வாய்ப்பை தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ள நினைக்கிறான். தனது அலுவலகத்தில் உள்ள தனது போட்டியாளர்கள் அனைவரையும் சிறுகச்சிறுக அசிங்கப்படுத்த நினைக்கிறான். தனது மனதில் உள்ள வெறுப்பை இப்படிப் பல வழிகளில் வெளிப்படுத்தி ஒவ்வொருவராக அவமானப்படுத்துகிறான். எப்படியெல்லாம் அதைச் செய்கிறான் என்றால், பீட்டர் ஒரு gay என்று அலுவலகக் கழிப்பறையில் இவனே எழுதிவிட்டு, அதனை அனைவரிடமும் உரக்கச்சொல்லி, அப்படி எழுதியவனைப் பிடித்து கடுமையாக தண்டிக்கப் போவதாக சவால் விடுகிறான். மற்றொரு சமயம், ஒரு பார்ட்டியில், ஒரு புதிய விளையாட்டைச் சொல்வதாக அனைவரிடமும் பேசி, அனைவரும் தங்களது ஆணுறுப்புகளை xerox மிஷினில் நகலெடுத்து வெளியே ஒட்டிவைத்து, அவர்களின் மனைவிகள் அல்லது காதலிகளை விட்டு எந்தந்த உறுப்பு யாருடையது என்று கண்டுபிடிக்கச் சொல்லும் போட்டி நடத்துகிறான்.இதில் என்ன விஷயம் என்றால், இவனுடன் வேலை செய்யும் ரேவுக்கு, தனது உறுப்பு மிகச்சிறியது என்ற complex உண்டு. அவனை இதன் மூலம் அசிங்கப்படுத்துகிறான் (தனது உறுப்பை மட்டும் என்லார்ஜ் செய்து (!!!???!!) மாட்டி வைக்கும் வேலையையும் அங்கே அவன் செய்கிறான்).

இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யும்போதே, தனது நெருங்கிய நண்பனான க்ளிஃப்ஃபோர்டையும் அவன் விட்டுவைப்பதில்லை. அவனது மனைவிக்கு அவ்வப்போது ஃபோன் செய்து, அசிங்கமாகப் பேசும் வேலையையும் செய்கிறான். அதன்பின் அவளிடமே ஒரு சார்ஜெண்ட்டாக சென்று, அப்படிப் பேசுபவனிடம் பேச்சை வளர்க்கச் சொல்லி, அதன்மூலம் அவனைப் பிடித்துவிடலாம் என்றும் அறிவுரை சொல்கிறான். க்ளிஃப்ஃபோர்டின் மனைவிக்கு, க்ளிஃப்ஃபோர்ட் மீது வெறுப்பு. காரணம் அவன் மிகவும் பயந்தவனாக, ஒரு introvertடாக வாழ்ந்துவருவதுதான். இதனைக் கச்சிதமாக உபயோகித்துக்கொள்ளும் ப்ரூஸ், க்ளிஃப்ஃபோர்டுக்கு நன்றாக ஊற்றிக்கொடுத்துவிட்டு அவளுடன் உறவும் கொள்கிறான். இதுதவிரவும் அவனுக்கு வேறு சில தொடர்புகளும் இருக்கின்றன. மது, போதை மருந்துகள் ஆகியவற்றை அளவுக்கதிகமாக உட்கொள்கிறான்.

ப்ரூஸின் மனைவி அவனுடன் இல்லை என்பது தெரிகிறது. அவர்களின் மகளை அழைத்துக்கொண்டு எப்போதோ அவள் வெளியேறிவிட்டாள் என்று அறிகிறோம். கூடவே,அவ்வப்போது ப்ரூஸ் ஒரு சைக்யாட்ரிஸ்ட்டையும் கலந்தாலோசிப்பதும் தெரிய வருகிறது.

இப்படியாகச் செல்லும் ப்ரூஸின் வாழ்க்கையில், அபூர்வமாகச் செய்யும் நல்ல காரியமாக, ஒரு மனிதனைக் காக்கவும் முயற்சிக்கிறான். அவனுக்கு ஒரு மனைவி உண்டு. ஒரு மகனும். ஆனால் அந்த மனிதன் இறந்துவிடுகிறான் என்று அறிகிறோம்.

இவைதான் இந்தத் திரைப்படத்தின் களன். இதன்பின்னர் திரைப்படம் எப்படிப் போகிறது என்பதைச் சொல்வதைவிட, பார்த்தால்தான் நன்றாக இருக்கும்.

ஒரு மனிதன் தனியாக இருக்கும்போதுதான் அவனைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்ளலாம் என்பதற்கு ப்ரூஸ் ஒரு அடையாளம். அளவுக்கதிகமாக போதை மருந்தையும் மதுவையும் உட்கொண்டுவிட்டு அவன் செய்வதெல்லாம் அதைத்தான் நிரூபிக்கின்றன. யாரைப் பற்றியும் கவலை இல்லாத ப்ரூஸ், எப்படியாவது அந்தப் பிரமோஷன் தனக்கே கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செய்யும் செயல்கள் அவை. இதைத்தவிர, அவனுக்கு செக்ஸ் தேவைப்படும்பொதெல்லாம், பிறரை தன்னிஷ்டத்துக்கு ஆட்டுவிக்கும் தனது குணங்களால் அதனை அடைகிறான்.

படத்தைப் பார்க்கையில், நமது மனதிலும் வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள் எழாமல் இருக்காது. ஒருவகையில் பார்த்தால் ப்ரூஸ் செய்யும் வேலைகளின் அதிகபட்சமான/குறைந்தபட்சமான நகல்களைத்தான் நாம் எல்லோருமே எல்லாச்சமயங்களிலும் செய்துவருகிறோம்.

படத்தில் ப்ரூஸாக நடித்திருக்கும் ஜேம்ஸ் மெக்கவாய் (James McAvoy – தமிழில் எழுதினால் ஏதோ பொக்கவாய் என்பது போலத் தொனிக்கிறது) எனக்கு சமீப காலங்களில் சற்றே பிடிக்க ஆரம்பித்துவிட்ட நடிகர். அவரது முகபாவனைகள் பிற நடிகர்களிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டுவதாக அவரது X men: First Class படத்தில் தோன்றியது. இந்தப் படத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். அவரது பல்வேறு வெளிப்பாடுகளைப் படத்தில் காணும் எவருக்குமே அப்படித்தான் தோன்றும்.

இப்படி ஒரு படம் தமிழில் வந்தால், அடுத்த கணம் தியேட்டர் எரிக்கப்படுவது உறுதி. நான் மேலே கொடுத்துள்ள படங்கள் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.

படத்தின் மொழிக்கும் (மேலே போஸ்டரைப் பார்க்கவும்),  ஒரிஜினல் நாவலுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் ஒரு அரசியல் இருக்கிறது. மேல் விபரங்களுக்கு, படத்தைப் பற்றித் தேடிப் படிக்கவும்.

  Comments

Join the conversation