From Hell – part 2

by Karundhel Rajesh December 31, 2012   Comics Reviews

From Hell கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம். அதன்பின் இந்தக் கட்டுரையைப் படித்தால் பல விஷயங்கள் புரியும்.[divider]

Prologue. The Old men on the Shore.

ஒரு கடற்கரை. இரண்டு வயதான நபர்கள் மெல்ல நடந்து வருகின்றனர். செப்டம்பர் 1923. அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து ஒருவர் பெயர் அப்பர்லீன் என்றும், மற்றொருவர் பெயர் லீஸ் என்றும் தெரிகிறது. இருவரில் லீஸ் என்பவர், இத்தனை நாள் தான் செய்துவந்த அத்தனையும் நடிப்பு என்று அப்பர்லீனிடம் சொல்கிறார். இதனை அப்பர்லீனால் நம்ப முடிவதில்லை. காரணம், லீஸ் ஒரு புகழ்பெற்ற க்ளார்வாயண்ட். அதாவது, குறி சொல்பவர். அரசி விக்டோரியாவிடமே மிகுந்த செல்வாக்கு பெற்ற நபர். அவர் கணித்தவை அத்தனையுமே இதுவரை தப்பாமல் நடந்திருக்கின்றன. ஆனால், அவையெல்லாமே குருட்டாம்போக்கில் சொன்னவை என்று மீண்டும் சொல்கிறார் லீஸ். மெதுவாகப் பேசிக்கொண்டே இருவரும் ஒரு வீட்டினுள் நுழைகின்றனர்.

கதை ஆரம்பிக்கிறது. முதல் அத்தியாயம். The affections of young mr. S.

ஜூலை 1884 – லண்டன் நமக்குக் காண்பிக்கப்படுகிறது. ஸிக்கர்ட் என்ற நபரையும், அவரது சகோதரனாக அறிமுகம் செய்துவைக்கப்படும் ஆல்பர்ட் என்ற மனிதரையும் காண்கிறோம். ஆல்பர்ட், ஸிக்கர்ட்டுக்குத் தெரிந்த பெண்ணான ஆன்னி என்பவளிடம் காதல்வயப்படுகிறார். தனது தாயைப்போலவே ஆன்னி இருப்பதாகவும், தாயாரின் கண்கள் அப்படியே ஆன்னியிடம் இருப்பதாகவும் சொல்கிறார் ஆல்பர்ட். அடுத்த காட்சியில் இருவரும் உறவு கொள்வதைப் பார்க்கிறோம். இதன்பின்னர் ஸிக்கர்ட் ஒரு ஓவியர் என்ற செய்தி நமக்குக் கிடைக்கிறது. அவரது மாடலான மேரி என்ற பெண், ஆன்னி ஆறு மாத கர்ப்பம் என்ற தகவலை ஸிக்கர்ட்டிடம் சொல்ல, பேரதிர்ச்சி அடைகிறார் ஸிக்கர்ட். அடுத்த காட்சி, ஆன்னியின் பிரசவம். அவளை சந்திக்கச் செல்லும் ஸிக்கர்ட்டிடம், ஆல்பர்ட்டும் தானும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக ஆன்னி சொல்கிறாள். அதன்பின் திருமணம் நடக்கிறது. ஆன்னியின் தோழிகள் மற்றும் ஸிக்கர்ட்டின் முன்னிலையில். ஒரு சில வருடங்களில் குழந்தை வளர்கிறது. குழந்தையின் பெயர் – ஆலீஸ் மார்கரெட்.

ஒரு நாள் (1888), ஸிக்கர்ட்டின் ஸ்டுடியோவுக்கு முன்னர் சில அடியாட்கள். ஸிக்கர்ட்டும் மேரியும் அப்போது அங்கே வருகிறார்கள். மேரியின் கையில் குழந்தை ஆலீஸ். ஆன்னியின் குழந்தையை அவ்வப்போது இப்படி கவனித்துக்கொள்வது மேரியின் வேலை. அங்கு நடக்கும் ஒரு சிறிய சண்டையில், ஸிக்கர்ட்டுக்கு உண்மை புரிகிறது. ஸிக்கர்ட்டின் ஸ்டுடியோ நோக்கிதான் அந்த அடியாட்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். ’விக்டோரியாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது’ என்று அரற்றியபடியே உடனடியாக மேரியை குழந்தையுடன் ஓடிவிடச் சொல்கிறார் ஸிக்கர்ட். அப்போது, ஸ்டுடியோவுக்குள்ளிருந்து ஆல்பர்ட்டை அழைத்து வருகின்றனர் அடியாட்கள் – ‘ஹைனஸ்.. இந்தப் பக்கமாக வாருங்கள்’ என்று மரியாதையாக விளித்தபடி. ஆன்னியையும் பிடித்து வைத்திருக்கின்றனர். அப்போது அவர்கள் ‘ஹைனஸ்’ என்று அழைப்பதை வைத்துதான் ஆன்னிக்கு ஆல்பர்ட் ஒரு சாதாரண ஓவியர் அல்ல; மாறாக ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்ற உண்மை புரிகிறது.

அடுத்த அத்தியாயம் துவங்குகிறது. A State of Darkness.

மறுபடி ஃப்ளாஷ்பேக். ஜூலை 1827. வில்லியம் என்ற சிறுவனை சந்திக்கிறோம். அற்புதமாக சொல்லப்படும் சில கட்டங்களில் அவனது குணம் நமக்குப் புரியவைக்கப்படுகிறது. ஒரு இருள் நிறைந்த சுரங்கப்பாதையின் முடிவில் தெரியும் மிகச்சிறிய வெளிச்சம் நோக்கி மெதுவாக நம்மமி அழைத்துச்செல்லும் கட்டங்கள் அவை. வில்லியமின் தந்தை இறக்கிறார். பின் பதினாறு வயதில் வில்லியம் ஒரு எலியை மெல்ல அறுப்பதன் மூலம், வில்லியமின் இயல்பு புரிவிக்கப்படுகிறது. அவன் எலியை அறுக்கும் காட்சிகள், அவனது தாயார் அவனது எதிர்காலத்தைப்பற்றியும் அவனது விருப்பங்களைப்பற்றியும் பேசும் காட்சிகளோடு இண்டர்கட் செய்யப்படுகின்றன. ஐந்து வருடங்கள் ஓடுகின்றன. ஒரு பிணத்தை தைத்துக்கொண்டிருக்கும் இரண்டு கைகளைக் காண்கிறோம். அவை வில்லியமின் கைகள். அங்கே ஹாரிஸன் என்ற மருத்துவமனையின் தலைவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் வில்லியம். அவரது முகம் காட்டப்படுவதில்லை. ஹாரிஸன் வில்லியமிடம் அவரது கடின உழைப்பைப் பாராட்டிக்கொண்டிருக்கும்போது, ஒரு புகழ்பெற்ற வாசகத்தை வில்லியம் சொல்கிறார். ‘நான் ஒரு தையல்காரனாக இருந்தால், என்னைவிட சிறந்த தையல்காரன் ஒருவனும் இருக்கக்கூடாது; நான் ஒரு பாத்திரம் பழுது பார்ப்பவனாக இருந்தால், என்னைவிட சிறந்தவன் ஒருவனும் இருக்கக்கூடாது’. வில்லியமின் உழைப்பைப் பாராட்டி, தான் அங்கத்தினனாக இருக்கும் ஒரு அமைப்பில் வில்லியமை நுழைக்கப்போவதாக சொல்கிறார் ஹாரிஸன். அந்த அமைப்பின் பெயர் – Freemasons.[divider]

Freemasons அமைப்பைப்பற்றி எழுதுவதென்றால் ஒரு பெரிய கட்டுரை தேவைப்படும். ஆனால் மிக சுருக்கமாக இங்கே பார்ப்பதென்றால், உலகளாவிய ஒரு ரகசிய அமைப்பு இது. ஆன்மீகரீதியான முன்னேற்றத்துக்காக அடிக்கடி இதன் உறுப்பினர்கள் குழுமுவது வழக்கம். ஆனால் இது மட்டும் அந்த அமைப்பின் நோக்கம் அல்ல. பல ரகசியங்கள் இந்த அமைப்பினுள் புதைந்துகிடக்கின்றன. கத்தோலிக்க சர்ச்சின் கடும் சட்டங்களை எதிர்த்து, மதரீதியான நல்லிணக்கத்தை உருவாக்கவே பிறந்த அமைப்பு இது என்று அவர்கள் சொல்லிக்கொண்டதாகத் தெரிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக இது இருந்திருக்கிறது. மொத்தம் 33 நிலைகள் உள்ள அமைப்பு இது. அடிப்படை நிலையிலிருந்து கடைசி நிலையான Grand Inspector General என்ற நிலைக்கு ஒரு உறுப்பினர் எழுவதற்கு பல சோதனைகள் வைக்கப்படும். ஒவ்வொரு சோதனையில் வெல்லும்போதும் அமைப்பின் சில ரகசியங்கள் உறுப்பினர்களுக்கு சொல்லப்படும். ஒவ்வொரு நாட்டிலும் இந்த நிலைகள் வேறுபடும் என்றும் தெரிந்துகொள்கிறோம். சில நாடுகளில் முதல் மூன்று நிலைகள் மட்டுமே. தற்காலத்தில் மொத்தம் ஐந்து மில்லியன் ஃப்ரீமேஸன்கள் உலகில் இருப்பதாக செய்தி.[divider]

வில்லியம் கல், இந்த அமைப்பின் பதினைந்தாம் நிலைக்கு வந்துவிடுகிறார். அப்போது அவருக்கு மேல் நிலையில் இருக்கும் நபரால், இளவரசர் ஆல்பர்ட்டுக்கு சிகிச்சை அளிக்கும் பணி கல்லுக்கு ஒப்புவிக்கப்படுகிறது. ஆல்பர்ட் தேறியபின்னர் விக்டோரியாவை சந்திக்கிறார் கல். விக்டோரியா அரசி, ராஜகுடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆல்பர்ட்டைக் காப்பாற்றியதற்காக அரசின் பிரதான மருத்துவராக கல்லை நியமிக்கிறார். இதன்பின் சில நாட்களில், ஏற்கெனவே வயதான நபராக இருக்கும் கல், நடக்கையில் மூளை தடுமாறி, தனது ஃப்ரீமேஸன் அமைப்பின் இறுதியான கடவுளான Jahbulon என்ற கடவுளை தரிசிக்கிறார். அது அவரது வாழ்க்கையை மாற்றுகிறது. தனது அமைப்புக்காக, அதன் எதிரிகளுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்ற உறுதியான எண்ணத்துக்கு ஆட்படுகிறார் கல்.

இதன்பின் கதையின் போக்கு மாறுகிறது. விக்டோரியாவை மறுபடி சந்திக்கும் கல்லுக்கு ஒரு அஸைன்மெண்ட் வழங்கப்படுகிறது. அரசை ப்ளாக்மெய்ல் செய்யும் சில பெண்களைக் கொல்லவேண்டும் என்பதே அது. இதன் காரணம், ஆல்பர்ட்டுக்கும் ஆன்னிக்கும் பிறந்த குழந்தை அரசின் வாரிசு. ஆகவே அந்த ரகசியத்தைக் காக்கவேண்டியே இந்த அஸைன்மெண்ட் கல்லுக்கு விக்டோரியாவால் வழங்கப்படுகிறது. தனது சாரதி நெட்லியை அழைத்துக்கொண்டு இங்லாண்ட் முழுதும் கோச்சுவண்டியில் சுற்றும் கல், தனது அமைப்பின் தோற்றம், இங்லாண்டில் அதன் வேர்களைப்பற்றிய விபரங்கள், அதன் முக்கியஸ்தர்கள், கொள்கைகள் ஆகிய அத்தனையையும் பற்றி மிக விரிவாக நெட்லியிடம் பேசி, நெட்லியை மூளைச்சலவை செய்து, தனக்காக வேலை செய்யவைக்கிறார். இதன்பின் ஒவ்வொரு பெண்ணாக தொடர்ந்துசென்று, குரூரமாக அவர்களைக் கொல்லவும் செய்கிறார் கல் (’தையல்காரனாக இருந்தால், என்னைவிட சிறந்த தையல்காரன் எங்கும் இருக்கக்கூடாது’). இதற்குள்ளேயே பல விஷயங்களை தாண்டிவிட்டேன். அவைகளைப் படித்தால் மட்டுமே அருமையாக இருக்கும்.

இங்லாண்ட் எங்கும் பீதி. இரவில் பெண்களைக் கொல்லும் கொலைகாரனுக்கு ஜாக் த ரிப்பர் என்று ஊடகங்கள் பெயர்சூட்டுகின்றன. பலபேர் போலி கடிதங்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்புகின்றனர். இதற்கிடையில் தனது சாரதி நெட்லியை வைத்து ஒரு கடிதத்தை தயார் செய்கிறார் கல். From Hell என்று தொடங்கும் அந்தக் கடிதத்தை, ஜார்ஜ் லஸ்க் என்ற தனியார் ரோந்துக்கமிட்டி ஒன்றின் (The Whitechapel Vigilance Committee) தலைவருக்கு கல் அனுப்புகிறார் – தான் கொலைசெய்திருந்த ஒரு பெண்ணின் பாதி அறுத்த சிறுநீரகத்துடன்.

இக்கொலைகளைத் துப்பறிய வருகிறார் அப்பர்லீன் என்ற போலீஸ்காரர். அவருக்கு ஒவ்வொரு தடயமாகக் கிடைக்கிறது. அவருடன் இணைவது, லீஸ் என்ற க்ளார்வாயண்ட். இவர்களால் ஒருநாள் வில்லியம் கல் கண்டுபிடிக்கப்படுகிறார். (இதற்கிடையே பல கொலைகளை கல் நிகழ்த்திவிட்டிருக்கிறார். கொலையான பெண்களுக்கும் பல சம்பவங்கள் நடக்கின்றன. பல நீண்ட பக்கங்களின் கதை இது).

இறுதியில் என்ன ஆனது? க்ராஃபிக் நாவலைப் படித்துத் தெரிந்துகொள்க.

ஜாக் த ரிப்பரால் கடைசியாக சிதைத்துக்  கொல்லப்பட்ட மேரி கெல்லியின் உடல்.

ஜாக் த ரிப்பரால் கடைசியாக சிதைத்துக் கொல்லப்பட்ட மேரி கெல்லியின் உடல்.

[divider]

மேற்கொண்டு எழுதுமுன், மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே டிஸம்பரில் நான் எழுதிய From Hell திரைப்படத்தைக் குறித்த ஒரு சிறிய கட்டுரையை இங்கே படிக்கலாம்.

இனி, இந்த க்ராஃபிக் நாவலைப் பற்றிய எனது கருத்துகள்.

முதன்முதலில் இந்த க்ராஃபிக் நாவலை நான் படித்தது, சில வருடங்கள் முன்பு. ஆனால், அதற்குமுன்னரே From Hell திரைப்படத்தைப் பார்த்துவிட்டிருந்தேன். அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தும் போனது. ஆனால், பின்னர் இந்த க்ராஃபிக் நாவலைப் படித்தபோது, இதில் விளக்கப்பட்டிருக்கும் பல அற்புதமான விஷயங்கள் படத்தில் இல்லாமல் போனதை உணர்ந்தேன். இந்த க்ராஃபிக் நாவல் பல தளங்களில் பயணிக்கிறது. கதாபாத்திரங்களின் உளவியல் தன்மைகளை படிக்கும் வாசகர்களுக்கு அருமையாக விளக்கிச்செல்கிறது இந்த க்ராஃபிக் நாவல். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும், அந்தப் பாத்திரத்தின் கூடவே சில தருணங்கள் பயணிப்பதன்மூலம் நமக்கு விளக்கும் வகையான கதை இது. சில திரைப்படங்கள்/ நாவல்கள் போல் கொலைகாரனை எவருக்கும் காண்பிக்காது, கடைசி பக்கத்தில் முற்றிலும் கதைக்குத் தொடர்பேயற்ற மொக்கை பாத்திரம் ஒன்றைக் காண்பித்து, அந்தக் கடைசி காட்சி/பக்கத்தின் கடைசி பேராவில் அந்தக் கதாபாத்திரத்தின் கதையையும், எதனால் கொலைகாரன் ஆனான் என்ற மாடஸ் ஆப்ராண்டியையும் தலைவேதனை அளிக்கும் வகையில் விளக்கும் கதை இது அல்ல. மாறாக, இதன் கதை ஒன்றின்பின் ஒன்றாக தெளிவாகவே விளக்கப்படுகிறது. ஆல்பர்ட்டின் திருமணம், குழந்தை ஆலிஸ் பிறப்பு, வில்லியம் கல்லின் அறிமுகம், விக்டோரியா அளிக்கும் அஸைன்மெண்ட், கொலைகள், அப்பர்லீன் அறிமுகம், துப்பறிதல், கண்டுபிடிப்பு என்றவகையிலேயே கதை செல்கிறது. அந்தவகையில் சஸ்பென்ஸ் என்ற எதுவுமே இதில் இல்லை. ஆனால், ஒரு நல்ல உலகப்படத்தைப் பார்ப்பதுபோன்ற கதைசொல்லல் இதில் இருக்கிறது. காரணம், ஜஸ்ட் லைக் தட் எதுவுமே இதில் இல்லை. ஒரு சம்பவம் நடந்தால், அதன் காரணத்தை நன்றாக விளக்குவதால், எல்லா சம்பவங்களும் இக்கதையில் ‘ஜஸ்டிஃபை’ செய்யப்படுகின்றன. இது ஒரு நல்ல படைப்பின் அறிகுறி.

அடுத்த விஷயம் – இந்த க்ராஃபிக் நாவலின் ஓவியங்கள். படிக்க ஆரம்பிக்கும்போது, எப்படி ஹாபிட்டின் 48FPS உங்களது கவனத்தை ஈர்த்து முதலில் எரிச்சலை ஊட்டியதோ, அதேபோல் இந்த காமிஸுக்கு வரையப்பட்டுள்ள படங்களால், உங்களால் முதல் பத்து பக்கத்தை தாண்டமுடியாமல் போனால் நான் ஆச்சரியப்படமாட்டேன். ஆனால், அதற்குமேல் இந்தக் கதையே உங்களை உள்ளே இழுத்துக்கொள்ளும். படங்கள் மிகச் சாதாரணமானவை என்று எண்ணிக்கொண்டே க்ராஃபிக் நாவலினுள் சென்றால், ஆங்காங்கே அட்டகாசமான படங்களும் நமது கவனத்தைக் கவர்கின்றன. உதாரணத்துக்கு, இரண்டாவது அத்தியாயத்தின் 26ம் பக்கத்தில், ஃப்ரீமேஸன்களின் கடவுளான Juhbulonனின் தரிசனம் வில்லியம் கல்லுக்குக் கிடைக்கும் ஓவியம். அதேபோல் அரசி விக்டோரியாவை வில்லியம் கல் முதன்முதலில் சந்திக்கும் இதே அத்தியாயத்தின் 18ம் பக்க ஓவியம். அத்தியாயம் நான்கின் 18ம் பக்கத்தில் தனது சாரதிக்கு ஃப்ரீமேஸன்களின் சரித்திரத்தை சொல்லிக்கொண்டிருக்கும் வில்லியம் கல், இங்லாந்தின் பல்வேறு புகழ்பெற்ற கட்டிடங்களுக்குச் செல்லும் படம். ஐந்தாவது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இண்டர்கட்டாக வரும் ஆழ்ந்த கரும்படங்கள். எட்டாவது அத்தியாயத்தில், மேரி கெல்லி என்று நினைத்துக்கொண்டு வேறொறு பெண்ணைக் கொல்லும் வில்லியம் கல்லின் படங்களை 37ம் பக்கத்தில் இருந்து 40ம் பக்கம் வரை காணலாம். இதைக் கண்டால் Saw படங்கள், Hostel போன்ற slasher படங்களைப் பார்க்கும் உணர்வு வந்தால் நான் பொறுப்பல்ல. இதற்குமேலும் வரும் அத்தியாயங்களில் இதுபோன்ற படங்கள் உண்டு. குறிப்பாக, பத்தாம் அத்தியாயம் – The best of all tailors. இதில் மேரி கெல்லியை அணு அணுவாக கிழித்துக் கொல்லும் வில்லியம் கல்லின் குரூரம். இந்த அத்தியாயத்திலேயே வில்லியம் கல்லுக்குக் கிடைக்கும் வருங்காலத்தைப் பற்றிய visionகள் முக்கியமானவை.

No Country for Old Men படம் பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அதேவிதமான கதைசொல்லல் முயற்சி இது (ஆனால் இதுதான் முதலில் வெளிவந்த காமிக்ஸ்). அதாவது, குறிப்பிட்ட கதையை சொல்லிவிட்டு, அதனால் நிகழும் சமுதாய மாற்றங்களையும் முழுதாக விவாதிப்பது. இந்த வகையில், சாதாரண கதை ஒன்று, ஒரு படி மேலே சென்று முக்கியத்துவம் வாய்ந்த கதையாக மாறுகிறது. க்ராஃபிக் நாவல்களில் ஒரு இலக்கியம் என்று இந்தக் கதையைத் தயங்காமல் சொல்லமுடியும்.

இந்தக் கதையில் விவரிக்கப்படும் 90% சம்பவங்கள் உண்மை. இதைப்பற்றி அலன் மூர் மிக நீண்ட ஆராய்ச்சி நிகழ்த்தியே இக்கதையை எழுதியிருக்கிறார். இதைப்பற்றி ஒரு தனி appendixஸே காமிக்ஸின் இறுதியில் அவர் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நிகழும் சம்பவங்களை பட்டியலிட்டு, அது எங்கிருந்து refer செய்யப்பட்டது என்று எழுதியதன்மூலம். கூடவே, Dance of the Gull Catchers என்ற இரண்டாம் appendix மூலம் ஜாக் த ரிப்பரைப் பற்றிய அத்தனை ஆராய்ச்சிகளையும் விளக்கி ஒரு அத்தியாயமும் எழுதியிருக்கிறார். இதில், gull என்ற பறவையைப் பிடிக்கப் பலரும் கையில் வலையுடன் நடமாடுவது போன்ற உருவகத்தோடு ரிப்பரைப் பற்றிய புத்தகங்கள் எழுதிய அத்தனைபேரையும் பற்றி எழுதியிருக்கிறார். அதாவது, ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு gull catcher.

கதையில் இருக்கும் ரியலிஸம், படித்து மட்டுமே தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. இன்னமும் நிறைய எழுதமுடியும் என்றாலும், ‘விரிவஞ்சி விடுத்தனம்’ கருதி இத்தோடு முடிக்கிறேன்.

From Hell – a blast from the past.

பி.குக்கள்

1. மூன்றரை வருடங்களுக்குமுன் எழுதப்பட்ட கனவுகளின் காதலரின் விரிவான From Hell கட்டுரையை இங்கே படிக்கலாம். இதில் இன்னமும் விரிவான கதை இருக்கிறது. கிட்டத்தட்ட முழுக்கதையையுமே இங்கே காதலர் எழுதியிருக்கிறார். எனது From Hell திரைப்பட கட்டுரையில் அவரது கமெண்ட்டைப் படித்து அங்கே சென்று அதைப் படித்திருக்கிறேன்.

2. Alan Moore யார் என்று எழுத விருப்பமில்லை. Stanley Kubrick யார் என்று எப்படி எழுத முடியும்?

3. இந்த க்ராஃபிக் நாவல் முழுக்க முழுக்க கறுப்பு வெள்ளையில் வரையப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய இங்லாண்டை மிக தத்ரூபகரமாக சித்தரித்துள்ள கதை இது. வண்ணத்தில் வரையப்பட்டிருந்தால் அதில் ஒரு ரொமாண்ட்டிஸிஸம் இருந்திருக்கும். கதையை அது கெடுத்திருக்கும்.

4. பல்வேறு உண்மைக் கதாபாத்திரங்கள் இதில் வருகிறார்கள். படிக்கும் நண்பர்களுக்கு அவர்களைத் தெரிந்திருந்தால் இன்னமும் ஜாலியாக இருக்கும்.

5. இந்த க்ராஃபிக் நாவலின் மொத்த பக்கங்கள் – 580.

  Comments

6 Comments

  1. dany

    HAPPY NEWYEAR MR BLACK SCORPE…. and thanks for this.

    Reply
    • Rajesh Da Scorp

      Thank u dany… Wishin u too a superb new year ahead.

      Reply
  2. ரெண்டு பார்ட்டுமே அட்டகாசம்…..இப்ப வரைக்கும், From hell புக்க பாத்தது கூட கிடையாது.படம், ஜானி டெப் கேரக்டரின் gloominessக்காக ரொம்ப புடிச்சது…..

    // ‘நான் ஒரு தையல்காரனாக இருந்தால், என்னைவிட சிறந்த தையல்காரன் ஒருவனும் இருக்கக்கூடாது; நான் ஒரு பாத்திரம் பழுது பார்ப்பவனாக இருந்தால், என்னைவிட சிறந்தவன் ஒருவனும் இருக்கக்கூடாது’ // இந்தமாறி கோட் எல்லாம் ஆங்கிலத்துலயே போட்டிருக்கலாமே…..

    அப்பறம், absinthe….From Hell படத்துல மொத சீன்ல வருமே….அதுதான……

    Reply
  3. The mindscape of Alan Moore – http://www.youtube.com/watch?v=XojNA0I36wo

    Alan moore பத்தி இத பாத்துதான் நா நெறைய தெரிஞ்சுகிட்டது…..அவர பத்தி தெரிந்து கொள்ள நினைக்கும் நண்பர்கள் இத்த பாத்து பயனடைவீர்களாக……ஆண்புள்ள நண்பர்களே, இந்த டாகுக்கு மியூசிக், RZA…..இப்ப ரிலீஸ் ஆயிருக்குற The Man with the Iron Fists பட டைரக்டர்…..

    Reply
    • Rajesh Da Scorp

      நானும் மொதல்ல படத்த தான் பார்த்தேன். அது எனக்குப் புடிச்சது (எனக்குப் புடிச்ச பழைய இங்க்லாண்ட்..கோச்சு வண்டி..etc ).. ஆனா அதுக்கப்புறம்தான் க்ராஃபிக் நாவல் படிச்சேன். அதுல பல சுவாரஸ்யமான மேட்டர் இருக்கு. அதேசமயம் கொஞ்சம் நீளமும் கூட.

      இனிமே quotes இங்க்லீஷ்லயே போட்டுறலாம். Absinthe – yes. You are right.

      Reply
  4. நீங்கள் Grant Morrison’ன் Invisibles படித்து விட்டீர்களா ? அதை பற்றி இது போன்ற ஒரு understandable review படிக்க ஆசை.

    Reply

Join the conversation