இங்கு(ம்) நல்ல படங்கள் விற்கப்படும்

by Karundhel Rajesh November 16, 2016   Cinema articles

தமிழ் இந்துவின் 2016 தீபாவளி மலரில், ‘மசாலாவைத் தாண்டிய சில முயற்சிகள்’ என்ற பெயரில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது.


ஹாலிவுட் படங்கள் என்றாலே பலருக்கும் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனிக்கர், சில்வஸ்டர் ஸ்டாலோன், வின் டீஸல், ஜேஸன் ஸ்டதாம், அவெஞ்சர்கள் வகையிலான சூப்பர்ஹீரோ படங்கள், அனிமேஷன் படங்கள், ட்ரான்ஸ்ஃபார்மர் சீரீஸ் முதலிய மசாலாப்படங்கள்தான் எடுத்த எடுப்பில் தோன்றும். இன்னும் ஒருசிலருக்கு டேவிட் லீன், ஸ்பீல்பெர்க், நோலன், டாரண்டினோ, கய் ரிட்சீ, ஜேம்ஸ் கேமரூன், ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கேப்பலா, மார்ட்டின் ஸ்கார்ஸேஸி முதலியவர்களின் படங்கள் நினைவு வரலாம். உலகெங்கும் மிகப்பெரியதொரு திரைப்பட மார்க்கெட்டை வைத்திருப்பது ஹாலிவுட் படங்களே. ஜேம்ஸ் பாண்ட், ஹாரி பாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் முதலிய மிகப்பெரிய ஃப்ராஞ்ச்சைஸ்கள் எல்லாமே உலகெங்கும் பல மில்லியன்கள் (ஏன்? பில்லியன்கள் கூட) சம்பாதித்துள்ளன.

இருப்பினும், இந்தப் படங்களைத் தாண்டி, ஹாலிவுட்டிலும் மிகத்தரமான, உணர்வுபூர்வமான படங்கள் எப்போதாவது வருவதுண்டு. அத்தகைய படங்களை இயக்கும் இயக்குநர்களை மிகப்பெரும்பாலான ஹாலிவுட் ரசிகர்கள் அறியமாட்டார்கள். ஏனெனில் இப்படங்கள் விருது விழாக்களுக்கு மட்டுமே செல்கின்றன. டமால் டுமீல் படங்களே உலகெங்கும் பிரபலமாகி வசூல் வேட்டையில் இறங்கும் நிலையில், அமைதியான, தரமான இப்படங்கள் மிகச்சில நாடுகளுக்கே செல்கின்றன. கான் முதலிய படவிழாக்களை அறிந்த திரைரசிகர்களே இத்தகைய படங்களையும் இயக்குநர்களையும் அறிவர்.

எனவே, ஹாலிவுட் என்ற பதத்துக்குப் பொதுவாக வெளியே இருக்கும் அர்த்தம் தவிர, வேறொரு நல்ல அர்த்தமும் உண்டு என்பதை நாம் உணரவேண்டும். ஏராளமான மசாலா ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில், உலகின் பிற நாடுகளில் இருக்கும் தலைசிறந்த உலக இயக்குநர்களுக்கு சவால் விடும் திறமைசாலிகள் அவசியம் உண்டு.

அதற்கு முன்னர், ஹாலிவுட்டில் படங்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதைக் கவனிக்கவேண்டும். வார்னர் ப்ரதர்ஸ், யுனிவர்ஸல், பாரமௌண்ட், சோனி, MGM, 20th Century Fox ஆகிய ஆறு ஸ்டுடியோக்களே தற்போது ஹாலிவுட்டின் பெரும்பாலான திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றன. இவர்களின் படங்கள் கட்டாயம் மசாலாக்களே. மில்லியன் கணக்கில் டாலர்கள் கொட்டி எடுக்கப்படும்போது, உலகெங்கும் ஓடவேண்டிய கட்டாயம் இவற்றுக்கு உண்டு. எனவே முடிந்தவரை மசாலாக்களாகவே இவை எடுக்கப்படுகின்றன (ஹாலிவுட் மசாலாவுக்கும் இந்திய மசாலாவுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு என்பதும் முக்கியம். இந்தியாவில் (தமிழையும் சேர்த்துதான்) தரமான மசாலாக்கள் சொற்பம். ஹாலிவுட்டில் அவை அதிகம்). இந்தப் படங்களிலெல்லாம், நிஜவாழ்க்கையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் காட்சிகள் இருக்காது; சற்றேறக்குறைய நிஜத்தையே பெரிதுபடுத்தி, பிரம்மாண்டமாக்கி, படத்தில் தானும் பங்கேற்கும் சிந்தனை முறையை ஆடியன்ஸுக்குக் கொடுக்காமல், எல்லாவற்றையும் எளியமுறையில் விளக்கியே காட்சிகள் எழுதப்பட்டிருக்கும். எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கும். தனது நோக்கத்தில் ஹீரோ வெல்கிறானா இல்லையா என்பதே பிரதானமாக இருக்கும். எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் தெளிவாக இருக்கும். ஆடியன்ஸை எந்தவகையிலும் சிந்திக்கத் தூண்டாத வகையிலேயே பெரும்பாலான இவ்வகை ஸ்டுடியோ தயாரிப்புகள் இருக்கும். ஒட்டுமொத்தமாகக் கவனித்தால், படம் சுவாரஸ்யமாகச் சென்றாலும், முடிந்து வீட்டுக்கு வருகையில் அந்தப் படம் நமது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்காது.

ஆனால், ஹாலிவுட்டில் இத்தகைய பிரம்மாண்டமான ஸ்டுடியோக்கள் இல்லாமல், குட்டிக்குட்டிப் படங்களும் வருவதுண்டு. சிறிய பட்ஜெட்டுடன், தனிநபராலோ அல்லது ஒரு சிறிய குழுமத்தாலோ, பெரிய ஸ்டூடியோக்களின் ஆதரவு இல்லாமல் எடுக்கப்படும் இத்தகைய படங்கள், இன்டிபென்டண்ட் சினிமா’ (Independent Cinema) என்று அழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட படங்களில் ஹாலிவுட் படங்களின் வழக்கமான மசாலாத் தன்மைகள் இருக்காது. மாறாக, இயக்குநரின் நோக்கம், அவரது கதைசொல்லல் முறை ஆகியவைகளுக்கே முக்கியத்துவம் இருக்கும். பொதுவாகத் திரைக்கதைகளுக்கான எந்தவகையான விதிகளும் இப்படங்களில் இருக்காது. எனவே, ‘சுவாரஸ்யம்’ என்ற பதத்தின் உலகளாவிய அர்த்தம் இவற்றில் மாறும். சில படங்கள் மெதுவாகவும் செல்லக்கூடும். (வேகமாக இருந்தால்தான் சுவாரஸ்யம் என்ற பொதுவான கருத்து நம்மிடம் உண்டுதானே?)இப்படங்கள் தரும் உணர்வுகளே முக்கியம். வழக்கமான ஹாலிவுட் படம் தரும் உணர்வைவிடவும் பலமடங்கு அதிகமான தாக்கம் இப்படங்களில் இருக்கும். எனவே நம்மால் மறக்க இயலாத உணர்வை இப்படங்கள் அளிக்கும்.

அத்தகைய ஒருசில முக்கியமான இயக்குநர்களை இந்தக் கட்டுரையில் கவனிக்கலாம்.

ஹாலிவுட்டின் முதல் ‘ஆர்ட்’ ஃபிலிம், புகழ்பெற்ற இயக்குநர் D.W க்ரிஃப்ஃபித் எழுதி இயக்கிய ‘Intolerance’ என்பதே என்று பரவலாக நம்பப்படுகிறது. இது வெளியான வருடம் 1916. மொத்தம் மூன்றரை மணி நேரங்கள் ஓடக்கூடிய மௌனப்படம் இது. நான்கு கதைகள் இதில் சொல்லப்பட்டன. நான்கு கதைகளுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருந்தன. மொத்தம் மூவாயிரம் எக்ஸ்ட்ராக்கள் நடித்த படம் இது. மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டது. ஹாலிவுட்டின் மிக ஆரம்ப கட்டத்தில் இப்படி ஒரு படம் வந்தால் என்ன ஆகும்? பலருக்கும் படம் பிடிக்கவில்லை. படுதோல்வியடைந்தது. ஆனால் அதன்பின் இன்றுவரை உலகின் மிகச்சிறந்த ஆரம்பகால ஆர்ட் படங்களில் ஒன்றாகவே இண்டாலரன்ஸ் திகழ்கிறது. க்ரிஃப்ஃபித்தின் வாழ்க்கையைப் பொருளாதார ரீதியில் பதம்பார்த்த படம் இது.

இதன்பின்னர் ஒருசில வருடங்களுக்கு ஹாலிவுட் படங்கள், இத்தகைய படங்களை எடுக்கவே துணியவில்லை. உலகின் பிற நாடுகளில் பேட்டில்ஷிப் போடெம்கின் (செர்கய் ஐஸன்ஸ்டீன்), Un Chien Andalou (புனுவெல் எடுத்த குறும்படம் – உலகைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏன் என்று அறிய இப்படத்தைப் பார்க்கவும்), L’Age d’Or (இதுவும் புனுவெல் எடுத்த படமே. இப்படத்தில் புனுவெலோடு சால்வதோர் டாலியும் திரைக்கதையில் பணியாற்றினார்) முதலிய படங்கள் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம். இச்சமயத்தில் ஹாலிவுட்டில் சாப்ளின், பஸ்டர் கீட்டன், மார்க்ஸ் சகோதரர்கள் முதலியவர்களின் நகைச்சுவைப் படங்களே பெருவாரியாக வரவேற்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஹாலிவுட்டின் பிரதான ஸ்டுடியோக்களாக அப்போது புகழ்பெற்று விளங்கிக்கொண்டிருந்த MGM, 20th Century Fox, Paramount முதலிய ஸ்டுடியோக்களில் வெஸ்டர்ன்கள், நகைச்சுவைப் படங்கள், ம்யூஸிகல்கள், க்ளாஸிக் கதைகளைப் படமாக்கிய திரைப்படங்கள் ஆகியவையே பெரிதும் எடுக்கப்பட்டன. இதுதான் ஹாலிவுட் படங்கள் உலகின் பிற நாடுகளில் பிரபலமாகிய காலகட்டம்.

 

இக்காலத்தில், பொழுதுபோக்குத் திரைப்படங்கள் பார்க்காமல், உலகின் பிற நாடுகளில் வெளியாகும் தரமான படங்கள்தான் பார்ப்போம் என்று அப்போதே யுனைடட் ஸ்டேட்ஸில் பலர் இருந்தனர். இவர்களின் முயற்சியால், ஆர்ட் படங்களை மட்டுமே திரையிடக்கூடிய அமைப்புகள் உருவாகின. இது நடந்தது நாற்பதுகளின் முடிவில். ’வழக்கமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைப் பார்த்துப்பார்த்து அலுத்துப்போய், ஆர்ட் படங்களைப் பார்க்கப்போகிறோம்’ என்றே இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிரகடனம் செய்தனர். பிற நாடுகளைச் சேர்ந்த ஆர்ட் படங்கள், யுனைடட் ஸ்டேட்ஸில் எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள், ஸ்டுடியோக்களின் தயாரிப்பாக இல்லாமல், சுயாதீனமாக எடுக்கப்பட்ட இண்டிபெண்டண்ட் படங்கள் ஆகியன இங்கே திரையிடப்பட்டன. இருப்பினும், அப்போதுகூடப் பிறநாடுகளின் ஆர்ட் படங்கள்தான் உள்ளே வந்தனவே தவிர, பெருவாரியாக ஹாலிவுட்டில் ஆர்ட் படங்கள் எடுக்கப்படவில்லை.

அதேசமயம், கிட்டத்தட்ட நாற்பதுகளிலிருந்தே ஓரளவு ஹாலிவுட்டில் இன்டிபெண்டண்ட் படங்கள் எடுக்கப்பட்டுவந்திருக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில், சொல்ல விரும்பிய கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பிற கேளிக்கை அம்சங்கள் திரைப்படத்தைக் கெடுக்காமல், நல்ல நடிகர்களை வைத்து இயக்கப்பட்ட இப்படிப்பட்ட படங்களில் 1953-ல் வெளியான ‘லிட்டில் ஃப்யூஜிட்டிவ்’ (Little Fugitive) முக்கியமானது.

இந்தப் படம் இன்றளவும் பேசப்படும் படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் பல குறைந்த பட்ஜெட் படங்கள் எடுக்கப்பட்டன. ‘தி ஃபில்ம்-மேக்கர்ஸ்’ கோஆப்பரேட்டிவ்’ (The Film-Makers’ Cooperative) போன்ற சில அமைப்புகளும் நிறுவப்பட்டு, ஸ்டூடியோ முறைக்கு வெளியே, இதுபோன்ற நல்ல படங்களை விநியோகிப்பதற்காகத் துவங்கப்பட்டன. இக்காலகட்டம்தான் ஹாலிவுட்டில் பொழுதுபோக்குப் படங்கள்மட்டுமே எடுக்கப்படும் என்ற நிலையை மாற்றிய காலம். இண்டிபெண்டண்ட் படங்கள் பெற்ற வெற்றியால் பல சுயாதீனப் படங்கள் எடுக்கப்பட ஆரம்பித்தன.

இச்சமயத்தில்தான், ஐம்பதுகளில் ஃப்ரான்ஸில் French New Wave என்ற ஒரு பதம் புழக்கத்துக்கு வந்தது. ஐம்பதுகளில், அகிரா குரோஸவா போன்ற திரைப்பட மேதைகள் படங்கள் எடுக்கத்துவங்கியிருந்த காலம். இந்தியாவில் ரித்விக் கட்டக், சத்யஜித் ரே ஆகியோர் மூலம் நல்ல சினிமா பரவிக்கொண்டிருந்த காலம். ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (François Truffaut) என்ற இருபத்தேழு வயது இளைஞன் எடுத்த ‘400 Blows’ என்ற ஃப்ரெஞ்ச் திரைப்படம், குழந்தைகள் சிறுவயதில் சந்திக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றிய துல்லியமான பதிவாக உலகெங்கும் புகழ்பெற்றது. த்ரூஃபோ ஒரு விமர்சகராக அவரது திரைவாழ்வைத் துவங்கியவர். ஆண்டோய்ன் டாய்னல் என்ற பனிரண்டு வயது சிறுவனைப் பற்றிய படம் அது. இப்படம் பலருக்கும் நினைவிருக்கக்கூடும்.

பழைய, க்ளாஸிக் கதைகளை அப்படியே திரைப்படமாக எடுப்பது என்ற முறையை அடியோடு ஒழித்ததுதான் ஃப்ரெஞ்ச் ந்யூ வேவ். அதில் முக்கியமானவர்கள் ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ, கொதார் (Godard), க்ளாட் சாப்ரோல் Claude Chabrol  ஆகியோர். இவர்களின் ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் அனைவருமே விமர்சகர்களாக இருந்தவர்கள். இந்த சமயத்தில்தான் இவர்கள் மூலமும், இவர்கள் சார்ந்திருந்த பத்திரிக்கை மூலமும் (Cahiers du Cinema), உருவாக்கப்பட்ட சில கருதுகோள்களே நியூ வேவ் சினிமாவின் துவக்கம். இப்பத்திரிக்கையில் இவரும் பிறரும் எழுதிய சூடான விமர்சனங்கள் மிகப் புகழ்பெற்றவை.

இந்த ஃப்ரெஞ்ச் ந்யூ வேவின் பாதிப்பு ஹாலிவுட்டில் பலமாக எதிரொலித்தது. அதுவரை மிகச்சில இண்டிபெண்டண்ட் படங்களும் ஆவணப்படங்களுமே எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த ஹாலிவுட்டில், ஆண்டி வார்ஹோல் (Andy Warhol) முதலியவர்கள் பரிசோதனைப் படங்கள் எடுக்கத் துவங்குகின்றனர். வார்ஹோல் ஒரு மிகப்பிரபலமான ஆர்டிஸ்ட். இப்போது சர்வசகஜமாகப் புழங்கும் ‘பாப் ஆர்ட்’ என்ற, நடைமுறையில் பிரபலமாக இருக்கும் விஷயங்களை ஓவியங்களில் வெட்டி வைத்து, அவற்றின் மூலம் அந்த ஓவியத்தின் பின்னணியையும் பொருளையும் வேறொரு தளத்துக்கு எடுத்துச்செல்லும் முறையில் மிகச்சிறந்து விளங்கியவர். அவர் திரைப்படங்களும் எடுத்துள்ளார். அவர் எடுத்த அனைத்துப் படங்களுமே மிகவும் வித்தியாசமானவை. ஒரு கவிஞர் தூங்குவதை ஆறு மணி நேரங்கள் படமாக எடுத்தல் (Sleep), ஓரல் செக்ஸில் ஈடுபடும் ஒரு நபரின் முகத்தை மட்டும் காட்டுவது (Blow Job), ஒரு காளானை 45 நிமிடங்கள் சாப்பிடும் மனிதன் ஒருவனைப் பற்றிய படம் (Eat), ஒரே படத்தில், பக்கம்பக்கமாக இரண்டு படங்களை ஓட்டுதல் (Chelsea Girls) என்றெல்லாம் முற்றிலும் வேறுபட்ட பல படங்களை எடுத்தவர் வார்ஹோல். இவரது படங்கள், ஆர்ட் சினிமா என்ற பதத்தை ஹாலிவுட்டில் பிரபலப்படுத்தியது. மென் இன் ப்ளாக் மூன்றாவது பாகத்தில், இவர் சிறிது நேரம் வருவார். இவரை ஒரு உளவாளியாகக் காட்டியிருப்பார்கள். இது அறுபதுகளில்.

இதன்பின்னர் பொதுவாகவே ஆர்ட் ஃபிலிம் என்றால் அது இண்டிபெண்டண்ட் படங்களையே யுனைடட் ஸ்டேட்ஸில் குறிக்க ஆரம்பித்தது. இந்த சுயாதீனப் படங்களில்தான் பல வித்தியாசமான கருக்கள் கையாளப்பட்டன. திகில், செக்ஸ், போதை மருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதைகள் வெளியாயின. இந்தச் சமயத்தில்தான் ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் காப்புலா (Francis Ford Coppola), ‘தி ரெய்ன் பீப்புள்’ (The Rain People) மூலம் அறிமுகமாகிறார். இதன் பின்னர் ஜார்ஜ் லூகாஸும் ‘டிஎச்எக்ஸ் 1138’ (THX 1138) படத்தை எடுக்கிறார். இவர்கள் மூலம் இந்த இண்டிபெண்டண்ட் படங்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.

இதே சமயத்தில்தான் டேவிட் லிஞ்ச்சும் Eraserhead படத்தை எடுக்கிறார். அந்தப் படம் மிகவும் பிரபலம் அடைகிறது. உடனடியாக Elephant Man படத்தையும் லிஞ்ச் எடுத்து வெளியிடுகிறார். இப்படத்துக்கு எட்டு ஆஸ்கர் பரிந்துரைகள் கிடைத்தன (அதேசமயம், மார்ட்டின் ஸ்கார்ஸேஸி எடுத்த Raging Bull படத்துக்கும் அதேபோல எட்டு ஆஸ்கர் பரிந்துரைகள். பின்னர் ஜேம்ஸ் பாண்ட் படம் ஒன்றை எடுத்த மைக்கேல் ஆப்டட்டின் Coal Miner’s Daughter படத்துக்கு ஏழு பரிந்துரைகள். ராபர்ட் ரெட்ஃபோர்ட் இயக்கிய Ordinary People படம் ஆறு பரிந்துரைகளைப் பெற்றது. முடிவில் Elephant Man படத்துக்கு எந்த ஆஸ்கரும் கிடைக்கவில்லை).

டேவிட் லிஞ்ச் ஹாலிவுட்டின் முக்கியமான ஆர்ட் இயக்குநராக மாறுகிறார். தொடர்ந்து பல படங்களை இயக்குகிறார். அவற்றில் மல்ஹோலாண்ட் ட்ரைவ் (Mulholland Drive) படம் மிகவும் முக்கியமானது. இந்தப் படம்தான் 2001ம் வருடம் கான் விருது விழாவில் லிஞ்ச்சுக்கு சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றும் தந்தது. வழக்கப்படி ஆஸ்கர்களில் அவருக்குப் பரிந்துரை மட்டுமே மிஞ்சியது. இன்றுவரை யுனைடட்  ஸ்டேட்ஸின் ஆர்ட் படங்களில் டேவிட் லிஞ்ச்சின் இடம் மிகவும் முக்கியமானது.

இவரைப்போலவே இன்னொரு மிக முக்கியமான இயக்குநர், ஜிம் ஜார்முஷ் (Jim Jarmusch). 1980ல் இருந்து பல படங்கள் எடுத்துள்ளார். இவரது Permanent Vacation, கான் படவிழாவில் சிறந்த முதல் பட விருது வாங்கியது. இவரது படங்களில் Dead Man, Ghost Talk, Coffee and Cigarettes ஆகியவை மிகவும் பிரபலமானவை.

அதேபோல், கஸ் வான் சாண்ட்டும் (Gus Van Sant) மிகவும் முக்கியமானவர். இவர் எப்போதும் ஆர்ட் படங்களே எடுப்பவர் அல்ல. குட்வில் ஹண்டிங் படம் இவருடையதுதான். இவர் எடுத்த My Own Private Idaho மிகவும் முக்கியமான படம். பல விருதுகளை உலகெங்கும் வாங்கியுள்ளது. மிகச்சிறந்த இண்டிபெண்டண்ட் படம் என்று உலகம் முழுக்க இன்றுவரை பிரபலமான படம் இது.

ஜெஃப் நிகோல்ஸ் (Jeff Nichols), தற்காலத்தில் யுனைடட் ஸ்டேட்ஸில் அருமையான இண்டிபெண்டண்ட் படங்கள் இயக்கிக்கொண்டிருக்கும் நபர். இவரது Shotgun Stories, Take Shelter, Mud, Midnight Special, Loving ஆகிய ஐந்து படங்களுமே பாராட்டுக்களைக் குவித்துக்கொண்டிருக்கின்றன. தற்காலத்தின் மிகச்சிறந்த ஹாலிவுட் இயக்குநர்களில் ஒருவர் என்று இவரை ரோலிங் ஸ்டோன்ஸ் பத்திரிக்கை பாராட்டியுள்ளது.

சார்லி காஃப்மேன் (Charlie Kaufman), யுனைடட் ஸ்டேட்ஸின் ஒரு முக்கியமான இயக்குநர். இவரது படங்களை முழுநீள ஆர்ட் படங்கள் என்று சொல்லிவிட இயலாது. வணிகப் படங்களின் போக்கிலேயே துவங்கி, தடாலென்று மிகவும் வித்தியாசமான ஒரு தளத்துக்கு நம்மை இழுத்துச்செல்லும் வகையிலான படங்களே இவரது தனித்தன்மை. Being John Malkovich, Eternal Sunshine of the Spotless Mind ஆகிய இரண்டு படங்களுக்கும் இவரே திரைக்கதை. பின்னர் Synecdoche, New York படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். திரைக்கதை ஜாம்பவான். இவரது படங்களை அவசியம் அனைவரும் பார்க்கவேண்டும்.

ரமீன் பஹ்ரானி (Ramin Bahrani) எடுத்துக்கொண்டிருக்கும் படங்களும் ஹாலிவுட்டில் மிக முக்கியமானவை. இவரது Man Push Cart, Chop Chop, Goodbye Solo, Plastic Bag, At Any Price ஆகிய ஐந்து படங்கள், உலகம் முழுதும் பல திரைவிழாக்களில் பங்குபெற்று விருதுகளை அள்ளியிருக்கின்றன.

இயக்குநர் டாரன் அரநாவ்ஸ்கி (Darren Aronofsky)யும் அவசியம் குறிப்பிடப்படவேண்டிய இயக்குநரே. இவரது முதல் படம் Pi, மிகவும் வித்தியாசமானது. இவர் இயக்கிய Requiem for a Dream, இயல்பான மென்சோகம் நிரம்பிய கதை. இவரது படங்கள், வாழ்வில் நாம் சந்திக்கும் வெற்றிடங்களையும் வெறுமையையும் பற்றி விரிவாக அலசும் தன்மையுடையன. இவரது Black Swan, வெளியிடப்பட்டு ஒரே மாதத்தில், அறுபதுக்கும் மேற்பட்ட விருதுகளில் தேர்வாகி, அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளியிருக்கிறது. அவரது பெயரைத் தேர்வு செய்து கருந்தேளில் அவரைப் பற்றிய கட்டுரைகளைப் படிக்கலாம்.

ஹாலிவுட்டில், மெய்ன்ஸ்ட்ரீம் படங்கள் என்ற கமர்ஷியல் படம் எடுக்கும் இயக்குநர்களும் பல அற்புதமான படங்கள் எடுத்துள்ளனர். அவர்களில் ஹிட்ச்காக், ஸ்டான்லி க்யுப்ரிக், வூடி ஆலன், ஸ்கார்ஸேஸி, டாரண்டினோ, கோயன் சகோதரர்கள், ஃப்ராங்க் டாரபாண்ட் (ஷஷாங்க் ரெடெம்ப்ஷன்), க்ரிஸ்டோஃபர் நோலன், ரிச்சர்ட் லிங்க்லேட்டர், ஸ்பைக் லீ, சோஃபியா காப்புலா ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களைத் தவிரவும் ஒரு படையே இருந்தாலும், இவர்களே அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவர்கள்.

ஹாலிவுட்டில் வெளியாகும் மசாலாக்களுக்கு இணையாக அங்கு நல்ல படங்கள் வருவதில்லை. நாம் பார்த்த இண்டிபெண்டண்ட் படங்கள், ஆர்ட் படங்கள் ஆகியவை அங்கே எடுக்கப்பட்டாலும், அவற்றின் தரம், பிற நாடுகளின் (உதா: இரான், ஃப்ரான்ஸ், தென்னமெரிக்க நாடுகள், தென் கொரியா, டென்மார்க் etc..) கலைப்படங்களோடு ஒப்பிடப்படுவது கடினம்தான். இருந்தும், நாம் இந்தக் கட்டுரையில் பார்த்த இயக்குநர்களின் படங்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால், யுனைடட் ஸ்டேட்ஸிலும் தரமான படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை உணர்வீர்கள். திரைப்படங்களை உற்பத்தி செய்வதில் உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கும் யுனைடட் ஸ்டேட்ஸில் அந்த அளவு தரமான கலைப்படங்கள் வெளிவருவதில்லை என்பது அவசியம் நகைமுரண்தான். ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் ஆதிக்கம் இருக்கும்வரை இந்த நிலை மாற அங்கே வாய்ப்பு இல்லை. அதேசமயம், ஹாலிவுட்டின் மசாலாக்களை விடாமல் பார்ப்பதை நிறுத்திவிட்டு, தரமான படங்களின்மேல் நாம் கவனம் செலுத்தினால், அவசியம் நம்மைத் திருப்திப்படுத்தும் படங்கள் இருந்தே தீருகின்றன என்பதும் உண்மை.

  Comments

Join the conversation