John Wick 3 – Parabellum (2019) – English

by Karundhel Rajesh May 27, 2019   English films

ஜான் விக் முதல் இரண்டு பாகங்கள் பற்றி இங்கே படிக்கலாம்.

ஜான் விக் முதல் பாகம் வந்த காலகட்டத்தில், அப்படி ஒரு தரமான, வன்முறை நிறைந்த ஆக்‌ஷன் படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கூடவே, படத்தை இயக்கியது ஹாலிவுட்டின் மிகச்சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள். எனவே படம் பிரமாதமான வரவேற்பைப் பெற்றது. இதனாலேயே, படத்தின் இரண்டாம் பாகமும் 2017ல் வெளியானது. ஆனால் இந்தக் காலகட்டத்தில், ஜான் விக்கைப் போலவே ஒருசில ஸ்டண்ட் படங்கள் வந்தாகிவிட்டன (ஜான் விக் வெளியான அதே அக்டோபரில் டென்ஸல் வாஷிங்டன் நடித்த The Equalizer வெளியாகிறது. அப்படமும் இதேபோல் வெற்றிபெற்று, இரண்டாம் பாகமும் வெளியானது. அதுவும் ஒரு ரிவெஞ்ச் படம்தான். கூடவே, Jack Reacher series. Marveலின் டெட்பூல் இன்னொரு உதாரணம். இவைகளில் எல்லாமே ஆக்‌ஷன் கோரியோக்ராஃபி பிரம்மாதமாக இருக்கும். இதனுடன், சார்லீஸ் தெரான் நடித்த Atomic Blonde. இதன் இயக்குநர், டேவிட் லெடிச் – ஜான் விக்கின் இயகுநர்களில் ஒருவர். டெட்பூல் 2 படத்தையும் இவர்தான் எடுத்தார். இவற்றுடன், ஜான் விக் படத்துக்குப் பிறகு வந்த Fast & Furious படங்களின் பாகங்களையும் நாம் எடுத்துக்கொள்ளலாம்).

தபதப என்று இத்தனை படங்கள் வெளியானதால், ஜான் விக் மூன்றாம் பாகம் எப்படி இருக்குமோ என்று ஒரு கேள்வி இருந்தது. இரண்டாம் பாக விமர்சனத்தின் இறுதியில், மூன்றாம் பாகம் கட்டாயம் வரும் – அது நன்றாகவும் இருக்கும் என்று எழுதியிருந்தேன்.

இரண்டாம் பாகம் விட்ட இடத்தில் இருந்து மூன்றாம் பாகம் துவங்குகிறது (என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்). இந்தப் படத்திலும் பிரம்மாதமான பல ஆக்‌ஷன் சீக்வென்ஸ்கள் இருக்கின்றன. இந்தப் படத்திலும் கொத்துக்கொத்தாகப் பலரும் சாகிறார்கள். இதிலும் ரத்தம் தெறிக்கும் வன்முறை உண்டு (நம்ம சென்சார் போர்டுதான் பல காட்சிகளை வெட்டிவிட்டது). ஆனால், நாம் வேறு பல ஆக்‌ஷன் படங்களையும் பார்த்துவிட்டதால் – அது இயக்குநருக்கும் தெரிந்ததால், கொஞ்சம் Melodramaவை இப்படத்தில் வைத்திருக்கிறார்கள். படத்தின் இடையில் தடால் என்று வெட்டு விழுந்து, கதை வேறு எங்கெங்கோ பயணிக்கிறது. அது படத்தின் வேகத்தைப் பாதிக்கிறது என்றே தோன்றியது. முதல் இரண்டு பாகங்களில், ஒரு உறுதியான கதை இருக்கும். அந்தக் கதையைச் சுற்றியே ஆக்‌ஷன் நடக்கும். ஆக்‌ஷன் கதைக்கு வெளியே போகாது. ஆனால் இதில், ஏற்கெனவே இரண்டு பாகங்களில் ஜான் விக் நடைபெறும் உலகத்தைப் பற்றிப் பல விஷயங்கள் சொன்னதால், புதிதாக எதை வைப்பது என்று தெரியாமல் கொஞ்சம் தடுமாறியிருப்பது தெரிகிறது. பல வெப் சீரீஸ்களில் வரும் அதே பிரச்னை. முதல் சில சீசன்கள் நன்றாக இருக்கும். பின்னர் மாட்டிக்கொள்ளும். கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல.

அப்படி, இதிலும், ஒரு பிரச்னையில் இருந்து தப்பி ஓடும் ஜான் விக் என்ன செய்கிறான் என்று பார்த்தால், கொஞ்சம் ஏமாற்றம்தான். தனக்கு சம்மந்தமே இல்லாத சில விஷயங்களை செய்கிறான். அவற்றுக்கான காரணங்கள் பெரிதாகவும் இல்லை. Halle Berry ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். அந்தக் காட்சிகளைத்தான் சொல்கிறேன். ஜான் விக்குக்கு முதல் இரண்டு படங்களில் படுபயங்கர பில்டப் கொடுத்துவிட்டு, இந்தப் படத்தில் சட்டென்று அவரை இறக்கிவிட்டுவிட்டதுபோல்தான் தெரிந்தது. அதேபோல் படத்தில் தேவையே இல்லாமல் வரும் drama – ஜான் விக் மொராக்கோ செல்வது, அங்கே பாலைவனம், அதன்பின் High Table, பின் திரும்பி வருவது – நடுவே ஒரு விரலையும் காவு கொடுக்கிறார் – இது எல்லாமே, என்ன நடக்கிறது என்று நன்றாகப் புரிந்தும், நெளியவைத்த காட்சிகள்.

இவையோடு சேர்ந்து, ஜான் விக்குக்கு இரண்டாம் பாகத்தில் உதவிய போவெரி கிங் (லாரன்ஸ் ஃபிஷ்போர்ன்), வின்ஸ்டன் ஆகியோர்களுக்கு இப்படத்தில், High table க்ரைம் சிண்டிகேட்டில் இருந்து வரும் Adjudicator என்ற பெண் கதாபாத்திரம் வழங்கும் தண்டனைகள், பின்னர் ஜான் விக் மொராக்கோ செல்வதற்கு அவன் அணுகும் மர்மப் பெண்மணி (இந்தப் பெண்மணி யார் என்பதும் படத்தில் வரும்), ஜான் விகின் திடீர்ப் பின்னணி ஆகியவையெல்லாம் துளிக்கூட ஒன்ற முடியாமல் போன காட்சிகள்.

ஆனால் இந்தக் காட்சிகளுக்குப் பின்னர், எப்போது ஜான் விக் காண்டினெண்டல் ஹோட்டலுக்குத் திரும்பி வருகிறானோ, அதன்பின் இறுதிவரை ஆக்‌ஷன் மழைதான். அந்தக் காட்சிகள் பிடித்திருந்தன. இரண்டாம் பாகத்தின் க்ளைமேக்ஸ் போலவே, மூன்றாம் பாகக் க்ளைமேக்ஸும் ப்ரூஸ் லீயின் Enter The Dragon & Game of Death படங்களுக்கான tributeஆகவே வைத்திருக்கிறார்கள். குறிப்பாக கேம் ஆஃப் டெத். ஒவ்வொரு தளமாகச் செல்கையில் அங்கே இருக்கும் சக்திவாய்ந்த வில்லன்களை முறியடிப்பது கேம் ஆஃப் டெத்தின் க்ளைமேக்ஸ்.

இதற்கும் அடுத்த பாகம் வரப்போகிறது என்று தெரிகிறது. ஆனால் அவை அவசியம் முதல் இரண்டு படங்களைப் போல இருந்தால் நன்றாக இருக்கும். இருக்கவேண்டும்.

  Comments

Join the conversation