Kaaka Muttai (2015) – Tamil

by Karundhel Rajesh June 10, 2015   Tamil cinema

‘In our country, we make anywhere from 70 to 80 movies a year, and I would say that 40 to 50 of them are the kind of movies that you would call “neutral.” Neutral in the sense that they don’t do anything for you; they just produce cheap thrills and entertainment, similar to a lot of Hollywood films that are just like fast food. They’re there for fast consumption and don’t really impact the audience one way or another. They’re only made to make money. But we have about 20 to 30 filmmakers, directors, and they are responsible for the prestige and success of Iranian cinema as enjoyed outside of Iran. These directors, every year they make about 10 to 15 good, decent movies, and these are the movies that tend to go outside of Iran to foreign audiences. But the kind of arenas that those movies end up in are mostly film festivals or film clubs. Rarely do they penetrate into the real film market. I truly believe that the ultimate success is when you make the breakthrough to the real film market and become part of mainstream film, internationally. It’s nice to have limited exposure, but that’s not how you make it’

— Majid Majidi,Director – Children of Heaven

‘(சுருக்கமாக) எங்கள் நாட்டில் பெரும்பாலான படங்கள் ஆடியன்ஸின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதவை. பணத்துக்கென்றே எடுக்கப்படும் கமர்ஷியல் படங்கள். இருப்பினும் எங்களிடம் இருக்கும் 20-30 இயக்குநர்கள், இரானிய சினிமாக்களை உலகெங்கும் எடுத்துப்போவதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். இவர்களால்தான் இரானியப்படங்கள் உலகெங்கும் பாராட்டுகளைக் குவிக்கின்றன. ஆனால் இப்படங்கள் விருதுகளுக்கு மட்டுமே செல்கின்றன. இரானின் வெகுஜனங்களிடம் இப்படங்கள் எடுபடுவதில்லை. எப்போது ஒரு நல்ல படம் (வெறும் கமர்ஷியல் படங்களே எப்போதும் ஓடும்) இந்த வெகுஜன சந்தைக்குள் புயல்போல நுழைந்து அந்த வெகுஜன சந்தையின் ஒரு முக்கியமான படமாகவும் உலகெங்கும் மாறுகிறதோ அதுதான் அந்தப் படத்தின் நிஜ வெற்றி. அப்படித்தான் இரானின் முக்கியமான படங்கள் விளங்கவேண்டும்’

— மஜித் மஜிதி – Children of Heaven பட இயக்குநர்

 

மஜித் மஜிதி எடுத்த சில்ரன் ஆஃப் ஹெவன் இன்றும் உலகின் முக்கியமான படங்களில் ஒன்றாகவே விளங்குகிறது. இரண்டு சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு குறிப்பிடத்தகுந்த சம்பவத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட உணர்வுபூர்வமான நல்ல படம் அது. மனதை நெகிழச்செய்யும் பல தருணங்கள் இப்படத்தில் உண்டு. இந்தப் படத்தின் தொனியே, மகிழ்ச்சி, இனிய தருணங்கள் ஆகியவற்றைப் படம் பார்க்கும் நேயர்களுக்கு அளிப்பதே. என்னதான் ஸஹ்ராவின் குடும்பத்தின் ஏழ்மையை நாம் பார்க்க நேர்ந்தாலும், என்னதான் அந்தத் தருணங்கள் நமது மனதில் தைத்தாலும், இந்தக் குழந்தைகளின் செயல்களில் வெளிப்படும் சந்தோஷமும் நேரடியாக நமது மனங்களில் சென்று பதிகிறது என்பதையும் மறுக்கமுடியாது. இந்த வகையில் இப்படமும் சரி, இன்னும் பல இரானியப்படங்களும் சரி, சோகமே உருவான பிறமொழிப்படங்களிலிருந்து மாறுபடுகின்றன.

சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தைப் போலவே வாழ்க்கையின் அபத்தங்களைப் பற்றிப் பேசி, படம் பார்க்கும் ஆடியன்ஸைப் புன்னகைக்க வைக்கும் இன்னொரு ஒரு திரைப்படமே காக்கா முட்டை. காக்கா முட்டையின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது படம் பார்க்கும்போதே விளங்கிவிட்டது. முதலாவதாக, ஒரு அழகான, சுருக்கமான கதை. இரண்டாவதாக, அந்தக் கதைக்குக் கச்சிதமாகப் பொருந்தும் நடிப்பைக் கதாபாத்திரங்களிடமிருந்து வாங்கியது. மூன்றாவதாக, இந்தக் களத்தைத் துன்புறுத்தாமல் இயல்பாக வைத்துக்கொண்டது. இதுபோன்ற குப்பத்து வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்ட பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. அவற்றில் இல்லாத நடிப்பு இதில் இருக்கிறது. பெரிய காக்காமுட்டையும் சின்னக் காக்காமுட்டையும் வெறுமனே சிரிக்கும் காட்சிகள் சில இப்படத்தில் இருக்கின்றன. அவர்களது அந்த சாதாரண சிரிப்புகள் கூட மிக மிக இயல்பாக இருக்கும்படிப் படமாக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் மட்டுமல்லாமல், பழரசமாக வரும் கதாபாத்திரமும் இதற்கு ஒரு உதாரணமாகத் தெரிந்தது. அதன் அப்பாவித்தனமான சிரிப்பு, அது இரண்டு காக்காமுட்டைகளுக்கும் உதவுவது, ‘பீட்ஸாதான் சாப்புடுவீங்களா? ரசம்சாதம்லாம் வாணாமா?’ என்றெல்லாம் சாதாரணமாகப் பேசுவது, அதன் உடல்மொழி என்று எல்லாமே மிக இயல்பு. கடை வைத்திருக்கும் ஆள், அவரது மனைவி, இரண்டு காக்காமுட்டைகளின் அம்மாவாக வரும் ஐஷ்வர்யா ராஜேஷ், அவர்களின் பாட்டி, ரமேஷ் திலக், கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு படத்தின் அத்தனை பேரும் இவ்வளவு இயல்பாக வந்துபோவது கடைசியாக எந்தத் தமிழ்ப்படத்தில் என்று யோசித்தால், அது வீடு படமோ அல்லது சந்தியாராகமாகவாகவோ இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால் இத்தனை இருந்தாலும், இது உலகப்படவிழாக்களுக்கு மட்டுமே செல்லக்கூடிய படமாக இல்லை. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் மஜீத் மஜிதி சொன்னபடி, எப்போது ஒரு நல்ல படம் கமர்ஷியல் ஆடியன்ஸின் கோட்டையான வெகுஜனப் படங்கள் என்ற இரும்புத்திரையை உடைத்துக்கொண்டு கம்பீரமாக உள்ளே சென்று அவர்களுக்கிடையிலும் பாராட்டும் வசூலையும் வாரிக்குவிக்கிறதோ, அதுதான் ஒரு சிறந்த படத்தின் வெற்றி. அவருக்கே நடக்காத விஷயம் ஒன்று மணிகண்டனுக்கு நடந்திருப்பது சாதாரண அம்சம் இல்லை. இயக்குநர் மகேந்திரனின் ‘சினிமாவும் நானும்’ புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கும் விஷயம் ஒன்றை சென்ற வாரம் நான் எழுத ஆரம்பித்திருக்கும் தமிழ் ஹிந்து தொடரில் எழுதியிருந்தேன். அதை இங்கேயும் கொடுக்கிறேன். படித்துப் பாருங்கள்.

’மிக மிக உயர்ந்த ரசனை கொண்டவர்கள் நமது தமிழ்நாட்டுச் சினிமா பார்வையாளர்கள் என்பது உண்மை. இவர்கள், எந்த மொழிப்படமாக இருந்தாலும் சரி, அவை உன்னதமான படங்களாக இருந்தால், அந்தப் படங்களை மொழி தெரியாமலேயே மீண்டும் மீண்டும் பார்த்துப் பாராட்டி மகிழ்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட நல்ல படங்கள் வெளியாகத் தாமதமாகும்போது, பொழுதுபோக்கவேண்டும் என்பதற்காக – அதாவது Time killing மனோபாவத்தோடு மிகமிக மோசமான படத்தைக்கூட ஒருதடவை அல்ல; பல தடவைகள் பார்ப்பார்கள். முறையான சினிமா பற்றித் தெரிந்த எவரும் பார்த்துச் சிரிப்பார்களே என்ற வெட்க உணர்வு துளியும் இல்லாமல், நாகரிகத்தின் உச்சாணிக்கு நாம் போய்விட்டதாகச் சொல்லிக்கொள்ளும் இன்றைய காலகட்டத்திலும் நம் சினிமாக்களில் காதலன், காதலி டூயட் பாடியாடும் அலங்கோலம் அரங்கேறுகிறது. இந்த அலங்கோலத்தை இந்திய நாட்டைத் தவிர வேறு எந்தவொரு நாட்டின் சினிமாவிலும் பார்க்க முடியாது’

– இயக்குநர் மகேந்திரன் – சினிமாவும் நானும்.

இதைத்தான் தமிழ் சினிமா ஆடியன்ஸ் காக்கா முட்டைக்குச் செய்திருக்கிறார்கள். நல்ல படமாக இருந்தால் அது அவசியம் தமிழில் பாராட்டுப்பெற்றே தீரும். அதுதான் காக்கா முட்டைக்கு நடந்திருக்கிறது. தங்க மீன்கள் செயற்கையான படம். அதனால் அது பாராட்டுப்பெறவில்லை. இதுதான் லாஜிக். எளிய கருத்து. நான் ராமைக் குறைசொல்லவில்லை. ஆனால் இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் என் கருத்தை ஒப்புக்கொள்வார்கள்.

இந்தப் படத்தில் ஆழ்ந்த கருத்துகள் எளிமையான வசனங்களாக ஜஸ்ட் லைக் தட் நம்மைக் கடந்துபோவதைப் பார்க்கலாம். ‘முட்டை விக்குற வெலைல அதை வாங்க முடியுமா?’ என்று ஒரு வசனம் உள்ளது. நம்மால் அதைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால் தினக்கூலி நான்கு ரூபாயோ ஐந்து ரூபாயோ வாங்கும் மக்களால்தான் இதை உள்ளது உள்ளபடி புரிந்துகொண்டு ஆமோதிக்கமுடியும். இதுவேதான் பீட்ஸா எத்தனை ரூபாய் என்று தெரிந்துகொள்ளும்போது பாட்டி அடையும் அதிர்ச்சிக்குக் காரணம். ஒரு மாதம் முழுக்கக் கஷ்டப்பட்டால்தான் பீட்ஸாவை நினைத்தே பார்க்க முடியும் என்பது எத்தனை கொடுமையான விஷயம்? ரயிலில் இருந்து செல்ஃபோனை குச்சியால் தட்டிப்பறிப்பது, டாஸ்மாக்கில் சரக்கு அடிப்பவர்களிடம் இருந்தே சரக்கு திருடுவது, கரியை விற்றுக் காசு பார்ப்பது போன்ற எல்லாவற்றையும் இப்படிப்பட்ட புரிதலில்தான் அறிந்துகொள்ளமுடியும்.

தமிழில் சேரிகளையும் குப்பங்களையும் மையமாக வைத்துப் பல படங்கள் உள்ளன. அவற்றில் எல்லாப்படங்களையும்விடவும் காக்கா முட்டையே சிறந்தது என்பது உறுதி. நீங்கள் இதுவரை பார்த்த சேரிக்காட்சிகளை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இப்படத்தில் எப்படி இயல்பான காட்சிகள் எடுக்கப்பட்டன என்பதை எனது நல்ல நண்பர் – ஒரு இயக்குநர் – தெரிவித்தார். அவரும் மணிகண்டனும் நாளைய இயக்குநர் நாட்களிலேயே நண்பர்கள். ஒரு குப்பத்தில் சென்று ஒரு திரைப்படக்குழு இறங்குகிறது என்றால் அவர்கள் அந்த ஜனங்களால் எப்படிப் பார்க்கப்படுவார்கள்? ‘திரைப்படக்குழு’ என்ற மாயை இருந்தால் அந்த ஜனங்களிடம் எப்படி நடிப்பை வாங்கமுடியும்? மாறாக, கதையை முடிவுசெய்துகொண்டு, படப்பிடிப்பு நடக்கப்போகும் இடங்களுக்குச் சென்று, அவர்களோடு இயல்பாகப் பழகி, அவர்களுடன் ஒருவராக ஆகிவிட்டு, அதன்பின்னரே மணிகண்டன் இப்படத்தை எடுத்திருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். அதுதான் நல்ல இயக்குநர் ஒருவருக்கு அடையாளம். மேலும் விக்னேஷ், ரமேஷ், படத்தில் இடம்பெறும் பிற சேரிச்சிறுவர்கள், அந்தப் பாட்டி ஆகியவர்களிடமெல்லாம், ஒரு காட்சியை விளக்கி, இப்படி நடி அப்படி நடி என்பதெல்லாம் வேலைக்காகாது. அவர்கள் அப்படி நடித்தால் அவசியம் அந்த நடிப்பில் ‘சினிமா’ தெரிந்துவிடும். எனவே அவர்களுடனேயே பழகி, அவர்களின் மிக இயல்பான தருணங்களில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளே நீங்கள் திரையில் பார்த்தவை. மேலும் பல காட்சிகள், களத்திலேயேதான் செழுமைப்படுத்தப்பட்டன. இது இயல்பான சினிமாவுக்கு அடையாளம். கூடவே, இந்தப் படத்தில் ஒளிப்பதிவு என்ற அம்சமே உங்கள் கண்களை உறுத்தாது. கதைமாந்தர்களின் பின்னாலேயே போய்ப் படப்பிடிப்பு நிகழ்த்தியிருப்பதுதான் படத்தின் வெற்றிக்கு இன்னொரு அம்சம். மணிகண்டன் இந்த விஷயத்திலும் ஜெயித்திருக்கிறார்.

பொதுவாகத் தமிழில் படமெடுப்பவர்களில் சிலர் எப்போது பார்த்தாலும் ஆடியன்ஸைக் குறைசொல்லிக்கொண்டே இருப்பதைக் கவனித்திருக்கிறேன். ராம், செல்வராகவன், மிஷ்கின் ஆகியவர்கள் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள். செல்வராகவன், அவரது புதுப்பேட்டை வந்ததும் ஆடியன்ஸைக் குறைசொல்லிப் பேட்டிகொடுத்ததாக நினைவு. மிஷ்கினுமே நந்தலாலா போன்ற படங்களில் இதைச் செய்திருக்கிறார். இவர்கள் எல்லோருமே திறமைசாலிகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு போன்றவை ஆடியன்ஸால் கொண்டாடப்பட்ட படங்களே. ஆனால் இவர்கள் சொல்வதுபோல் தமிழ் சினிமா ஆடியன்ஸ் அத்தனை இளைத்தவர்கள் இல்லை. மேலே இயக்குநர் மகேந்திரன் சொல்லியிருப்பதை நினைவுபடுத்திக்கொள்ளவும். காக்கா முட்டை போன்ற ஒரு படம் எடுத்தால் அது ஆடியன்ஸால் கொண்டாடப்படாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை. எடுத்திருப்பது என்னதான் நல்ல படம் என்ற எண்ணம் நமக்கு இருந்தாலும், அந்தப் படங்களில் ஆடியன்ஸை நெருடும் அம்சங்களோ, திரைக்கதை குழப்பமாகவோ இருந்தால் ஆடியன்ஸ் அப்படங்களைப் புறக்கணிக்கவே செய்வார்கள். பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற படங்களெல்லாம் பிய்த்துக்கொண்டு ஓடிய இடம் இது. அவையெல்லாம் என்ன கமர்ஷியல் படங்களா? ஆனால் இன்றும் ஆடியன்ஸின் மனதைத்தொடும் படங்களாகத்தானே அவை இருக்கின்றன? அதுதான் காக்காமுட்டைக்கும் நிகழ்ந்திருக்கிறது.

காக்கா முட்டை, கண்டிப்பாக ஒரு நல்ல படம்தான். பல வெளிநாட்டுப் படங்கள் – குறிப்பாக இத்தாலிய, இரானியப் படங்களில் மிகச்சிறிய ஒரு கருவை எடுத்துக்கொண்டு அதை நம்பக்கூடிய காட்சிகளின்மூலம் வெளிப்படுத்தியிருப்பார்கள். அப்படித்தான் காக்கா முட்டையும். தமிழுக்கு இதுபோன்ற முயற்சிகள் அவசியம் தேவை. சிறிய சப்ஜெக்ட் என்றாலும் இயல்பாக, படுவேகமாக நகரும் திரைக்கதை இதற்கு ஒரு ப்ளஸ் பாயின்ட். அத்தனை பேரின் நடிப்புமே அட்டகாசம். சிறந்த கதாபாத்திர வெளிப்பாடு. ஐஷ்வர்யா ராஜேஷ் பிரமாதமாக நடித்திருக்கிறார். ஒரு தமிழ்ப்படத்தின் எல்லா அம்சங்களுமே பின்னியெடுத்திருப்பதை வெகு நாட்களுக்குப்பின் கவனித்தேன்.

இணையத்தில் சில விமர்சனங்களைக் கவனித்தேன். இது ஒரு ஃபீல்குட் படம். எனவே இட ஒதுக்கீடு, ஜாதிப்பாகுபாடு போன்ற விஷயங்களையெல்லாம் இப்படம் சொல்லத்தேவையே இல்லை. அக்கருக்களை எடுத்துக்கொண்டு வேறு யாராவது எடுக்கட்டுமே? சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தில் இரானில் பெண்களின் நிலையைப் பற்றிச் சொல்லவில்லை. எனவே அது ஒரு குப்பை என்று யாராவது சொல்லமுடியுமா? அது வேறு சப்ஜெக்ட். அதற்கு சமீரா மக்மல்பஃப், மர்ஸியே மெஷ்கினி (மிஷ்கின் அல்ல) போன்றவர்கள் உண்டு.

முதல் படத்திலேயே இப்படியெல்லாம் துல்லியமாகத் திட்டமிட்டு அதன்பின் அந்தத் திட்டப்படியே அளவான பட்ஜெட்டில் வசூலிலும் ஜெயிக்கத்தக்க, தயாரிப்பாளருக்கும் லாபம் வரும்படி, எக்கச்சக்கமாக செலவழிக்காமல் உலகம் முழுவதும் பேசப்படும் இயல்பான, அரிய, நல்ல படங்களில் ஒன்றை எடுப்பது லட்சத்தில் ஒருவரால்தான் முடியும். இதனை சாத்தியமாக்கிய மணிகண்டனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

பி.கு

1. என்னுடன் காக்கா முட்டையை எடுத்த விதம் பற்றிப் பகிர்ந்துகொண்ட அந்த இயக்குநர் நண்பர் யார் என்பதை இதற்குள் நீங்கள் யூகித்திருப்பீர்கள். சூது கவ்வும் இயக்கிய நலன்தான் அவர்.

2. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ‘வலசை’ இதழில் நான் எழுதிய ‘குழந்தைகள் மனச்சிதைவும் உலகத் திரைப்படங்களும்’ என்ற கட்டுரையில் காக்கா முட்டையைப்போன்ற சில அருமையான உலகத்திரைப்படங்களைப் பற்றிக் கவனிக்கலாம்.

3. மஜித் மஜிதியும் மகேந்திரனும் பேசியிருப்பதை விடவும் காக்கா முட்டையைப் பற்றிச் சொல்ல எதுவுமே இல்லை. அவர்களின் மேற்கோள்களே இப்படத்தை மிகத்தெளிவாகப் புரியவைக்கும்.

  Comments

7 Comments

  1. Ramesh Vasudevan

    நண்பா,
    முதல் முறயாக குறை ஒன்று கூட கூறாமல் ஒரு முழு (தமிழ்) திரை படத்தை பாராட்டி விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள்….பதிவு அருமை …கண்டிப்பாக திரைபடத்தை பார்க்க போகிறேன் …………..நன்றி

    Reply
  2. அரை நாள் லீவ் போட்டுட்டு போய்ப் பார்த்தேன்…

    worth it…

    Reply
  3. கும்க்கி

    அருமையான விமர்சனம் தல.. போலவே போலீஸ் ஜீப்பில் சிறுவர்களின் அம்மா பயணிக்கும்போது இன்ஸ்பெக்டருடனான பேச்சின் போது “பின்ன இன்னா ஸார் இல்லாதவங்க வீட்டு முன்னாடி கடைய போட்டு உசுப்பேத்திகினு” என்பதையும் பதிவில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
    தனது மகனை அடித்துவிட்டார் என்பதை தவிர வேறு எந்தவிதமான உணர்வுமின்றி மிக எளிமையாக வெளிப்படும் குப்பத்து மக்களின் எண்ணம் அது. சென்னை போன்ற ஒரு நகரத்தில் தமக்கான வாழ்வையும் அதன் போக்கிலேயே வாழ்ந்து தீர்க்கும் குப்பத்து மக்கள், நகரத்தின் அசுர வளர்ச்சியையும், அதன் சவுகர்யங்களை அனுபவிக்கும் நடுத்தர மேல்தட்டு மக்களையும் குறித்த எந்தவொரு பொறாமையும், வன்மமும் அற்ற தம் வாழ்வின் எல்லைகளை மீறத்தெரியாத அழகான பார்வை….

    Reply
  4. ஜி உங்கள் விமர்சனம் அருமை.. தன் மகன் மீது அக்கறை உள்ள அம்மா ஏன் அவர்களை பள்ளிக்கு அனுப்ப முயற்சி செய்யவில்லை.,.

    Reply
  5. Madhavan RC

    சின்ன காக்கா முட்டை தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது தினமும் நிகழ்வதாக காட்ட படுகின்றன, சரிதான்
    ஆனால் காக்கா முட்டையை அண்னன் தம்பி இருவரும் குடிப்பதால் தான் காக்கா முட்டை என்ற பெயரில் மற்றவர்களால் அழைக்கப்படுகிறார்கள். சின்ன மற்றும் பெரிய காக்கா முட்டை அறிமுகத்தை தவிர்த்து மற்ற காட்சிகள் எங்கும் அவர்கள் காக்கா முட்டை குடிக்க வில்லையே ஏன்?
    2.தந்தையின் கட்டுப்பாட்டில் (கூண்டு பறவை யை போல்) இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியின் சிறுவன் (தன் தோழமை உண்ண விரும்பிய பீட்சா) தனக்கு கிடைத்த பீட்சாவை பகிர்ந்து கொள்ள நினைக்கிறான். ஆனால் பெரிய காக்கா முட்டை அச்சிறுவனை உதாசின படுத்திவிட்டுச்செல்கிறான். இந்த காட்சி அமைப்பில் பார்வையாளன் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்று இயக்குநர் விரும்பினார் ? மேலும் அந்த காட்சியில் (கூண்டு பறவையின்) சிறுவனின் நட்பை உதாசினம் செய்தது போல் அல்லவா அமைந்திருக்கிறது. ஏன் (எச்சில் பீட்சாவை ) தோழமையில் பகிர்ந்து கொள்ளுதல் தவறா? முதலில் சின்ன மற்றும் பெரிய காக்கா முட்டை என்கிற சிறுவர்களுக்கு பீட்சா சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஆரம்பத்தில் இருக்கிறது.
    பிறகு ஒருநாள் அபார்ட்மென்ட் சிறுவனின் எச்சில் பீட்சாவால் (சிம்புவைப்போல் பீட்சா சாப்பிட வேண்டும் என்ற) எண்ணம் எழுந்தது என்றால் அபார்ட்மென்ட் சிறுவனுடன் காக்கா முட்டைகளின் உறவு என்ன?
    மூன்று சிறுவர்களுக்கும் இடையில் இருப்பது நட்பு இல்லையென்றால் பழரசத்துக்கும் இவர்களுக்கும் இடையே என்ன உறவு?. பொதுவாக பெரியவர்கள் குழந்தைகளுடன் பழகும் போது குழந்தைகளாக மாறுவது இயல்பு. சிறுவர்களுடனான பழக்கங்களில் சிறுவர்கள் தவறு செய்தால் கண்டிகவும் செய்வோம், அவர்களின் தேவைகள் என்ன என்ற தெரிந்தால் முடிந்தளவு உதவியும் செய்வோம். பழரசம் கதாபாத்திரம் அதைத்தான் செய்கிறது. ஆனால் காக்கா முட்டைகளுக்கு உதவி செய்கிறது என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அவர் செய்யும் உதவி திருட்டுதனமாக கரி எடுத்து செல்ல வழிவகை அல்லவா செய்கிறது.(பீட்சாவின் விலை ரூபாய்.300)பழரசம் திருட்டுதனம் கற்றுக்கொடுத்ததிற்க்கு பதில் ரூபாய்.300 கொடுத்திருக்கலாம் அல்லது பீட்சா வாங்கி கொடுத்திருக்கலாம். ஆனால் பழரசம் அப்படி செய்திருந்தால் படம் 1 மணி நேரத்திற்க்குள் முடிந்திருக்கும் என்பதால்தான் இயக்குநர் அவ்வாறு செய்யவில்லையோ?
    Children of heavan படத்தில் தங்கைக்கு உதவ அண்ணனும், அண்ணனுக்கும் உதவ தங்கையும் இருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் உதவ பெரியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.அதனாலையோ என்னவோ அந்த குழந்தைகளின் தவிப்பும், படபடப்பும் பெரியவனான என்னை தொற்றிக்கொண்டதை நான் உணர்ந்தேன். அவர்களுக்கு உதவ திரைக்கதையில் என் கதாபாத்திரம் இல்லாததை எண்ணி வருந்தினேன்.
    பி.கு:1
    காக்கா முட்டை படத்தின் இறுதி காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இறுதி கட்டத்தில் என்னை கடத்திகொண்டுபோன காக்கா முட்டைகள் அவர்களுடன் பீட்சா சாப்பிட வைத்தார்கள். இயக்குநர் அவர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், என்னை காக்கா முட்டைகளுடன் திரைக்கதைக்குள் பீட்சா சாப்பிட அனுமதி நுழைவாயிலை வழங்கியதற்க்கு.
    பி.கு:2
    திரு.கருந்தேள் அவர்களே காக்கா முட்டை திரைக்கதையின்
    1.Inciting incident
    2.key incident
    3.1st plot point
    4.2nd plot point
    5.Resolution
    பற்றிய விரிவான ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

    Reply
    • Bala

      Thala.. Super al sikki irukkar. Pathil sonningaa tholanjingaaaaa.. Ha ha ha

      Reply
    • tamil

      super ji.

      Reply

Join the conversation