காதலிக்க நேரமில்லை & ஸ்ரீதர்

by Karundhel Rajesh December 23, 2015   Cinema articles

ஒரு வருடத்துக்கு முன்னர் எழுதப்பட்டு, டிசம்பர் ‘15 காட்சிப்பிழை இதழில் வெளியான கட்டுரை இது.

தமிழில் இளைஞர்களுக்கான படங்கள் எப்போது வர ஆரம்பித்தன?

யோசித்துப் பார்த்தால், கல்லூரியில் படிக்கும்/படித்துமுடித்தவுடன் இருக்கும் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான படங்கள் மணி ரத்னத்தின் வருகைக்குப்பிறகுதான் பெருமளவில் வர ஆரம்பித்திருந்தன என்பது தெரிகிறது. இது எண்பதுகளின் துவக்கம். அதற்குமுன்னர் எப்போதாவதுதான் இளைஞர்களுக்கான படங்கள் வெளியாகியிருந்தன என்று தெரிகிறது. எப்போதாவது ஒருமுறை ’சபாபதி’, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ போன்ற படங்கள் வந்தாலும், அவைகளிலும் கல்லூரி வயதுடைய இளைஞர்களைக் கவரும் அம்சங்கள் குறைவாகத்தான் இருந்தன. அக்காலத்தில் பெருமளவுப் படங்கள் மத்திம வயதுடைய கதாநாயகன் & கதாநாயகி, இருவருக்கும் ஏற்படும் காதல் (அல்லது) சோகம் என்றே குணச்சித்திரமாகவே எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இளமை துள்ளும் படங்களை எந்த இயக்குநரும் எடுக்க முயற்சித்ததில்லை.

இதன்பலனாக, ஐம்பதுகளில் இருந்து அறுபதுகள் வரை தமிழில் என்னதான் ஹிட் படங்கள் வந்தாலும், அப்போதைய கல்லூரி இளைஞர்களில் பலரும் ஹிந்திப்படங்களையும் ஆங்கிலப்படங்களையுமே பார்க்க விரும்பினர். ஏனெனில் தமிழ்ப்படங்களில் குணச்சித்திரமும் சோகமும்தான் அதிகமாக இருந்த சூழல். கல்லூரி, காதல் போன்ற ஒரு பெரிய படைப்பு வகையே (genre) தமிழில் கவனிக்கப்படாமல் இருந்தது. நகைச்சுவை, இயல்பான காதல் போன்றவை தமிழில் குறைவாகத்தான் இருந்தன. இத்தகைய சூழலில்தான் ‘கல்யாணப் பரிசு’ வெளிவந்தது. அதன் இயல்பான வசனங்களும் காட்சிகளும் பலரையும் கவர்ந்தன. அதை இயக்கிய ஸ்ரீதர், தமிழின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்தார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்படித் திரைப்படங்களைத் தனது சித்ராலயா தயாரிப்பு நிறுவனம் மூலம் எடுத்தார். ஹிந்தியிலும் அவரது படங்களை அவரே இயக்கி, இந்தியாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.

ஸ்ரீதர் இயல்பில் எப்படிப்பட்டவர்?

1959ல், தனது பள்ளித்தோழன் சடகோபன் என்ற ‘சித்ராலயா’ கோபு வேலைசெய்துகொண்டிருந்த ஏற்றுமதி இறக்குமதி அலுவலகத்துக்கு வருகிறார் ஸ்ரீதர். அப்போதே அவர் ஒரு நல்ல வசனகர்த்தாவாகப் பல படங்களை எழுதியிருந்தவர் (அமரதீபம், உத்தமபுத்திரன், ரத்தபாசம், எதிர்பாராதது, மகேசுவரி முதலிய படங்கள்). ’உடனடியாக ராஜிநாமா செய்துவிட்டு என்னோடு வா; ’கல்யாணப்பரிசு’ என்ற படத்தை இயக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது; அதில் நீதான் நகைச்சுவைப் பகுதிகளை எழுதப்போகிறாய்’ என்று கோபுவிடம் சொல்கிறார். கோபுவுக்கு அதிர்ச்சி. கஷ்டப்பட்டுத் தேடிக்கொண்ட வேலையை நண்பன் சொல்கிறான் என்று உடனடியாக எப்படி விடுவது? கோபுவின் குழப்பத்தை ஸ்ரீதர் கண்டுபிடித்துவிடுகிறார். ’சரி.. நீ ராஜிநாமா செய்யவேண்டாம்; என்னோடு மதுராந்தகம் வரையில் இப்போது வா; கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாம்’ என்று சொல்லி கோபுவை வெளியே அழைத்து வருகிறார். வெளியே அட்டகாசமான ஒரு புதிய ஃபியட் கார் நிற்கிறது. ஸ்ரீதரின் புகழ்பெற்ற MSY 5022 கார் அது. அந்தப் புதிய ஃபியட்டைப் பார்த்த மாத்திரத்திலேயே கோபுவின் மன உறுதி பொடிப்பொடியாகிவிடுகிறது. ’காரை எப்போது வாங்கினாய்?’ என்கிறார் கோபு. ‘நேற்றுதான்’ என்கிறார் ஸ்ரீதர். ‘எப்போது காரோட்டக் கற்றுக்கொண்டாய்?’. ‘அதுவும் நேற்றுதான்’ – இது ஸ்ரீதரின் அமைதியான பதில்! திகைத்துப் போகிறார் கோபு. வண்டியைக் கிளப்புகிறார் ஸ்ரீதர். சிறிது நேரத்திலேயே ஸ்பீடாமீட்டர் தொண்ணூறை எட்டுகிறது. ‘இந்த வண்டி இத்தனை வேகமாகப் போகுமா?’ என்று ஸ்ரீதரைக் கேட்கிறார் கோபு. ’தெரியவில்லையே? இதோ பரிசோதித்துப் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு இன்னும் வேகமாக வண்டியை விடுகிறார் ஸ்ரீதர். அன்றே கோபு திரும்பிவந்து வேலையை ராஜிநாமா செய்கிறார். வேகமும் துடிப்பும்தான் ஸ்ரீதரின் இறுதிவரை அவரது இயல்பாக விளங்கின.

ஸ்ரீதர்- கோபு கூட்டணி அன்றிலிருந்து பல வருடங்களுக்குப் புகழ்பெற்ற கூட்டணியாக விளங்கியது. ‘கல்யாணப்பரிசு’ படத்தின் மன்னார் அண்ட் கம்பெனி நகைச்சுவையை யாராலும் மறக்க முடியாது. அதிலிருந்து காதலிக்க நேரமில்லையில் பல காட்சிகள், ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், காசேதான் கடவுளடா, உத்தரவின்றி உள்ளே வா என்று பல படங்களில் கோபுவின் முத்திரை நகைச்சுவைக் காட்சிகளைக் காணலாம். மன்னார் அண்ட் கம்பெனியைப் போலவே ‘ஓஹோ ப்ரொடக்‌ஷன்ஸ்’ என்று காதலிக்க நேரமில்லையில் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார் கோபு.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஸ்ரீதர் இயக்கிய படம்தான் ‘காதலிக்க நேரமில்லை’.  ஒருநாள், எப்போதும்போல் ஸ்ரீதரும் கோபுவும் கடற்கரைக்கு முன்னால் தங்களது காரில் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருந்தபோது, ‘ஏன் நாம் ஒரு முழுநீள நகைச்சுவைப் படம் எடுக்கக்கூடாது?’ என்று கோபு ஸ்ரீதரிடம் கேட்டிருக்கிறார். ஸ்ரீதருக்குத் தயக்கம். இதுவரை அப்படிச் செய்ததில்லை; சரியாக வருமா? என்று யோசித்திருக்கிறார். ஆனால் அந்தத் தயக்கம் கொஞ்சநேரம்தான். உடனடியாகச் சம்மதித்து, ஸ்ரீதரும் கோபுவும் கதை விவாதத்தைத் துவக்கினர்.

இந்தப் படத்தைப் பற்றித் தனது சுயசரிதையான ‘திரும்பிப் பார்க்கிறேன்’ கல்கி தொடரிலும் பின்னால் அது புத்தகமாக வந்தபோதிலும் ஸ்ரீதர் நிறையச் சொல்லியிருக்கிறார். ’காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை முதலில் முடிவு செய்துவிட்டு, அதன்பின்னர் தமிழில் ஒரு வண்ணச் சமூகப்படம் எடுக்க விரும்பி ஒரு திரைக்கதையை எழுதி, அதைக் கொஞ்சகாலம் படமாக எடுத்ததாகவும், ஒரு ஷெட்யூல் திரைப்படப் படப்பிடிப்பு முடிந்தபின்னர் ரஷ் போட்டுப் பார்த்தபோது ஒளிப்பதிவு, நடனம் போன்ற எல்லாத் துறைகளிலும் படம் நன்றாக வந்திருந்தபோதிலும், கதை ஸ்ரீதருக்குத் திருப்தி அளிக்காததால் அந்தப் படப்பிடிப்பை அப்படியே நிறுத்திவிட்டதாகவும் சொல்லியிருப்பார். இதன்பின்னர் மறுபடியும் முதலிலிருந்து ஒரு கதையைத் தயார் செய்து, அதில் புதுமுகங்களான ரவிச்சந்தர்  (இப்படித்தான் படத்தின் டைட்டில் சொல்கிறது) மற்றும் விமானப் பணிப்பெண்னாக இருந்த காஞ்சனா ஆகியவர்களைப் போட்டு எடுத்ததுதான் நாம் இப்போது பார்த்து மகிழும் ‘காதலிக்க நேரமில்லை’.

படத்தின் ஏழெட்டு வார ஹவுஸ்ஃபுல் ஓட்டத்துக்குப் பிறகு படம் மெதுவாக அந்த நிலையில் இருந்து குறைய ஆரம்பிக்கும் நேரத்தில், சட்டசபையில் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. ‘படத்தின் பெயரில் ஆபாசம் தொனிக்கிறது; காட்சிகளும் ஆபாசமாக இருக்கின்றன; சமுதாயத்தைக் கெடுக்கக்கூடிய இத்தகைய படங்களை அரசு அனுமதிக்கலாமா?’ என்று ஒரு எம்.எல்.ஏ சட்டசபையில் பிரச்னை செய்ய, இந்த விவகாரம் செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. இது படத்துக்கான பரபரப்பைக் கூட்டியது. உடனேயே ஏற்கெனவே பார்த்தவர்களும் மறுபடி படத்தைப் பார்க்கத்துவங்க, இதனால் படத்துக்கு நல்ல விளம்பரமும் வருமானமும் கிட்டியிருக்கிறது.

’காதலிக்க நேரமில்லை’ படத்தின் நடன இயக்குநர் – தங்கப்பன். இந்தப் படத்துக்காக வேறு ஒரு புதிய நடன இயக்குநரை ஸ்ரீதர் வரச்சொல்ல, அங்கே தற்செயலாக ஒரு வாய்ப்பு கேட்டு தங்கப்பன் வர, அவர்தான் ஸ்ரீதர் சொல்லியிருந்த நடன இயக்குநர் என்று தப்பாக நினைத்துக்கொண்டு ஸ்ரீதர் அவரை ஒன்றிரண்டு பாடல்களைப் போட்டுவிட்டு நடனமாடச்சொல்ல, அவர் அமைத்த நடன அசைவுகள் ஸ்ரீதருக்குப் பிடித்துப்போய் ஒப்பந்தம் செய்யப்பட்டார் தங்கப்பன். பின்னர்தான் இவர் வேறு ஒரு நபர் என்று ஸ்ரீதருக்குத் தெரியவந்திருக்கிறது. இருந்தாலும் புதுமையான நடனத்தால் ஸ்ரீதரின் மனதைக் கவர்ந்த தங்கப்பன் அந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தங்கப்பனுக்கு சுந்தரம் உதவி நடன இயக்குநராக இருந்தார்.

அதேபோல், எம்.ஜி.ஆரை வைத்து முதன்முறையாக ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற படத்தைக் கறுப்பு வெள்ளையில் ஸ்ரீதர் எடுப்பதற்கான விளம்பரம் பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது. அதே பத்திரிக்கையில் ’காதலிக்க நேரமில்லை’ என்ற வண்ணப்படத்துக்கான விளம்பரமும் வந்திருக்க, இதன்மூலமாகத் தனது படத்தைக் கறுப்பு வெள்ளையில் எடுத்துவிட்டு எதுவோ ஒரு புதுமுகப் படத்தை வண்ணத்தில் எடுத்திருப்பதாக எண்ணிக்கொண்ட எம்.ஜி.ஆர், அன்று சிந்திய ரத்தம் படத்துக்குக் கால்ஷீட் பிரச்னைகளைச் செய்ய, அந்தப்படம் எடுக்கப்படாமலேயே கைவிடப்பட்டது என்பதையும் ஸ்ரீதரின் சுயசரிதையில் அறியலாம் (’அன்று சிந்திய ரத்தம்’, பிந்நாட்களில் மாற்றப்பட்டு ‘சிவந்த மண்’ என்று தமிழிலும், ‘தர்த்தி’ என்று ஹிந்தியிலும் ஸ்ரீதரால் இயக்கப்பட்டது).

காதலிக்க நேரமில்லையில் பல புதுமைகள் இருந்தன. முதலில், அதுவரை ’அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ போன்ற மாயாஜால, சரித்திரப் படங்கள்தான் வண்ணத்தில் வெளிவந்துகொண்டிருந்தன. முதன்முறையாக ஒரு சமூகப்படம் ஈஸ்ட்மேன் வண்ணத்தில் வெளிவந்ததே இந்தப் படத்தில் ஒரு புதுமைதான். இதன்பின்னர் படத்தின் வித்தியாசமான இசையும் நடனங்களும். அப்போதைய ராக் அண்ட் ரோல் பாதிப்பில் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஜோடியினர் பாடல்களை உருவாக்க, அவற்றுக்குத் தங்கப்பன், சுந்தரத்தை உதவியாளராக வைத்துக்கொண்டு புதுமையான நடனங்களை உருவாக்கினார். படத்தில் உபயோகிக்கப்பட்ட உடைகளும் புதுமைதான். ஒரு நைட்டியை உடையாக அணிவித்து ராஜஸ்ரீக்கு ஒரு பாடல் உருவாக்கப்பட்டது (’அனுபவம் புதுமை’). அதேபோல் இந்தப் படத்தில்தான் நாயகிகள் (குறிப்பாக ராஜஸ்ரீ) சில காட்சிகளில் ஜீன்ஸ் அணிந்துகொண்டு தோன்றுவார்கள். ரவிச்சந்திரன் மற்றும் முத்துராமனின் பேகி பேண்ட்கள், படத்தின் தலைப்புகளில் காதலர்கள் ஊர் சுற்றுவதைக் குறிக்கும் கார்ட்டூன்கள், படத்தின் அழகிய ஆழியார் லொகேஷன் என்று எக்கச்சக்கமான புதுமைகள் படத்தில் உண்டு என்பது ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும்.

படத்தின் திரைக்கதையும் ஒரு நிமிடம் கூட அலுக்காதவகையில் அமைக்கப்பட்டிருக்கும். எடுத்த எடுப்பிலேயே முத்துராமன் – காஞ்சனா பாடல் காட்சியில் இருவரின் காதலும் அறிமுகம்; அதன்பின்னர் ரவிச்சந்திரன் முத்துராமனுக்கு எழுதும் கடிதம் வாயிலாக ரவிச்சந்திரன் அறிமுகம்; காஞ்சனாவும் ராஜஸ்ரீயும் சென்னையில் பரீட்சைகள் முடிந்தபின்னர் சின்னமலை எஸ்டேட்டுக்குச் செல்வதன்மூலம் அவர்களின் தந்தை பாலையா அறிமுகம்; உடனேயே நாகேஷின் அறிமுகம்; பின்னர் ரவிச்சந்திரனுக்கு வேலை போவது; அதன்மூலமாகக் கதை துவங்குவது; முத்துராமன் சின்னமலைக்கு வருவது; பின்னர் நடக்கும் சம்பவங்கள் என்று படுவேகமான திரைக்கதை ஸ்ரீதராலும் சித்ராலயா கோபுவாலும் எழுதப்பட்டது.

இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதனையும் கவிஞர் கண்ணதாசனையும் ஆழியாறுக்கே அழைத்துச்சென்றார் ஸ்ரீதர். அந்த இடத்தின் இயற்கை அழகின் மத்தியில் படுவேகமாகப் பாடல்கள் தயாராயின. எண்ணிச் சில நிமிடங்களிலேயே அந்தப் படத்தின் பெரும்பாலான பாடல்களின் இசை தயாரானது. உடனடியாகவே சுடச்சுடப் பாடல் வரிகளை வீசினார் கண்ணதாசன். இப்படியாகத் தமிழின் அற்புதமான படம் ஒன்றின் பாடல்கள் மிகமிக வேகமாகத் தயாரானது ஸ்ரீதரைத் தவிரப் பிறருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கலாம். ஆனால் அதனைக் கட்டாயம் எதிர்பார்த்தே அனைவரையும் அழைத்துச்சென்றிருப்பார் ஸ்ரீதர் என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

‘காதலிக்க நேரமில்லை’ தமிழில் அடைந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாகப் பிற மொழிகளிலும் எடுக்கப்பட்டது. அதன் ஹிந்தி வடிவத்தை 1965ல் ’ப்யார் கியே ஜா’ என்ற பெயரில் ஸ்ரீதரே இயக்கினார். அச்சமயத்தில் ஹிந்தியில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை ‘தில் ஏக் மந்திர்’ என்ற பெயரில் இயக்கியிருந்தார் ஸ்ரீதர் (அதற்கும் முன்னர் கல்யாணப்பரிசை ராஜ் கபூரை வைத்து ‘நஸ்ரானா’ என்ற பெயரில் இயக்கியிருந்த அனுபவமும் ஸ்ரீதருக்கு உண்டு). அது மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆகி, ஸ்ரீதருக்குப் பெரும் புகழை சம்பாதித்துக்கொடுத்திருந்த காலம். இதனால் சிக்கல் எதுவுமின்றிப் பல ஹிந்தி நட்சத்திரங்கள் ப்யார் கியே ஜாவில் நடித்தனர். ஆனால் ஆழியாறில் ஏற்பட்ட பெருமழையின் காரணமாகப் படப்பிடிப்பு மிக மந்தமாக நடந்து, பல மாதங்கள் கழித்தே ஹிந்தியில் வெளியானது. மிகப்பெரிய வெற்றி அடையாவிட்டாலும், அந்த ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக ஆனது. இதிலும் ராஜஸ்ரீயே நடித்தார். முத்துராமன் வேடத்தில் பிரபல நடிகர்- பாடகர் கிஷோர் குமாரும், ரவிச்சந்தரின் வேடத்தில் சரி கபூரும், நாகேஷின் வேடத்தில் மெஹ்மூதும் நடித்தனர்.

ஸ்ரீதரிடம் இருந்த யூனிட் மிகத்தரமானது. கலை கங்காவால் கவனிக்கப்பட, ஒளிப்பதிவு செய்தவர் வின்ஸெண்ட். வசனம், ஸ்ரீதராலும் கோபுவாலும் எழுதப்பட, இசை எம்.எஸ்விஸ்வநாதனால்தான் எப்போதும் அமைக்கப்பட்டது. பாடல்களைக் கண்ணதாசன் எழுதுவார். புகைப்படங்களை திருச்சி அருணாசலம் எடுப்பது வழக்கம். எடிட்டிங்  சங்கரால் செய்யப்படும். இந்த யூனிட் பல படங்களில் ஸ்ரீதரிடம் இருந்தது. அவர் நடத்திய சித்ராலயா தயாரிப்பு நிறுவனமும் மிகவும் கட்டுக்கோப்பானது. தெளிவாகத் திட்டமிட்டு தினசரி அலுவல்கள் அங்கே நடக்கும். அந்த அலுவலகத்துக்கு வந்த எந்தக் கடிதமும் பதிலனுப்பப்படாமல் போனதில்லை. இப்படிப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தை அமைத்ததால்தான் அறுபதுகள் முழுதும் ஸ்ரீதரால் கொடிகட்டிப் பறக்க முடிந்திருக்கிறது. எழுபதுகளிலும் ’உரிமைக்குரல்’, ‘மீனவ நண்பன்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ போன்ற பெருவெற்றிப் படங்களையும், எண்பதுகளில் ‘நினைவெல்லாம் நித்யா’, ‘துடிக்கும் கரங்கள்’, ’தென்றலே என்னைத் தொடு’ போன்ற வெற்றிப்படங்களையும் ஸ்ரீதரால் தர முடிந்திருக்கிறது.

’காதலிக்க நேரமில்லை’ தனது ஐம்பதாவது வருடத்தைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அதன் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்த ஸ்ரீதரையும் சித்ராலயா கோபுவையும் நினைத்துப் பார்ப்பதே அந்தப் படத்துக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும். இன்றுவரை அதை மீறீய நகைச்சுவைப்படம் ஒன்று வந்திராததே ஸ்ரீதர்-கோபு கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி. தமிழில் தரமான படங்கள் எடுக்க விரும்பும் யாரும் ஸ்ரீதரில் இருந்து ஆரம்பித்தால் போதுமானது. அவர் விட்டுச்சென்ற இடம் இன்றும் யாராலும் நிரப்பப்படவில்லை. அந்த இடம்தான் இதுவரை தமிழ் சினிமாவில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் வெற்றிகளை உறுதியாகக் குவிக்கக்கூடிய இடம்.

  Comments

3 Comments

  1. grshan

    sir, I came here again for Hateful Eight (not yet released in India but found in net) spoilers/reviews/points to update….. but I was wondered to read the Kathalika neram illai post….superb news about one of my all time favourite movie…. thanks a lot….

    Reply
  2. Karthick

    Please write review for the film “PULI”….

    Reply
  3. Ravi

    Overall good article. Kudos.
    Fact check needed on the following

    >>>>இசை எம்.எஸ்விஸ்வநாதனால்தான் எப்போதும் அமைக்கப்பட்டது
    AM Raja scored music for Kalyana Parisu and Then Nilavu – both were directed by Sridhar

    >>>> எண்பதுகளில் ‘நினைவெல்லாம் நித்யா’, ‘துடிக்கும் கரங்கள்’, ’தென்றலே என்னைத் தொடு’ போன்ற வெற்றிப்படங்களையும் ஸ்ரீதரால் தர முடிந்திருக்கிறது
    The first 2 are certified flops – in spite of outstanding songs in NN and Rajini in TK

    Reply

Join the conversation