Life (2017) – English

by Karundhel Rajesh March 26, 2017   English films

ஒரு ஏலியன் படம் எப்படி இருக்கவேண்டும்? நம் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதிலிருந்து இம்மி கூடப் பிசகாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் Life. ரிட்லி ஸ்காட் எடுத்த Alien (1979) படத்துக்கும் இந்தப் படத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ‘ஏலியன்’ படத்தை இப்போது எடுத்தால் எப்படி இருக்குமோ, அதுதான் இந்தப்படம் என்றே சொல்லிவிடலாம். பல காட்சிகள், ‘ஏலியன்’ படத்தில் இருந்து அப்படியப்படியே எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இதில் எதுவுமே புதிதாகச் சொல்லப்படவில்லை. ஆனால் அதற்காக இந்தப்படம் மொக்கை என்றும் சொல்லமுடியாது. ஏன் என்று சொல்கிறேன்.

ஒரு ஏலியன் இடம்பெறும் த்ரில்லர் எப்படி இருக்கவேண்டும்? ஏதோ ஒரு இடம். அந்த இடத்தில் ஒருசில நபர்கள். அவர்களுக்கு ஒரு நோக்கம். இவர்களுக்கு இடையே வந்து மாட்டிக்கொள்ளும் ஏலியன். அந்த ஏலியனால் ஒவ்வொருவராகக் கொல்லப்படும் நபர்கள். இறுதியில் இவர்களில் உயிர்பிழைத்திருக்கும் ஓரிரு நபர்களின் மூளையில், இதுவரை நடந்த நிகழ்ச்சிகளின் இடையே இருந்து திடீரென்று ஒரு புதிய உண்மை ஃப்ளாஷ் ஆகி, அதனால் அவர்கள் அந்த ஏலியனை வெற்றிகொள்ளுதல். வெற்றியோடு வீடு திரும்புதல். இதுதான் ஏலியன் வில்லனாக இருக்கும் படத்தின் டெம்ப்ளேட். ஏலியன் வில்லனாக நடித்திருக்கும் படங்களையெல்லாம் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள். Alien, Alien2, Alien3, Prometheus, Species, The Blob என்று ஏராள உதாரணங்கள் உண்டு. இவைகள் எல்லாமே நான் சொன்ன டெம்ப்ளேட்டின்படிதான் இருக்கும். ஏனெனில், விண்கலத்தில் மாட்டிக்கொள்ளும் ஏலியனை வில்லனாகச் சித்தரிக்கவேண்டும் என்றால் இப்படித்தான் காட்டமுடியும். இந்தக் கதையில் விண்கலம் என்பதற்குப் பதில் வீடு, ஏலியன் என்பதற்குப் பதில் பிசாசு என்று வைத்துக்கொண்டால் ஈவில் டெட் போன்ற படங்களை எடுத்துவிடலாம். எனவே இது ஒரு பொதுப்படையான டெம்ப்ளேட்.

ஆனால், இந்தக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு, படம் பார்க்க வரும்முன்னரே படத்தின் கதையைத் தெரிந்துகொண்டு திரையரங்கு வரும் ஆடியன்ஸை எப்படியெல்லாம் அதிரவைக்கமுடியும் என்று யோசித்தே எழுதப்பட்டிருக்கிறது இந்தப்படம். இதன் திரைக்கதையை எழுதியவர்கள், Deadpool படத்தை எழுதிய அதே Rhett Reese & Paul Wernick ஜோடிதான். ‘ஏலியன்’ படத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்தத் திரைக்கதையையும் இவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஏலியன் படத்தில் இல்லாத இரண்டு விஷயங்கள் இதில் உண்டு. இரண்டுமே முக்கியமான விஷயங்கள்தான். Spoiler Alert. ஒன்று – படத்தின் ஹீரோ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் கதாபாத்திரம்தான் முதலில் மண்டையைப் போடுகிறது. இரண்டு – படத்தின் முடிவு. அதை நான் சொல்லப்போவதில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

பிற ஏலியன் படங்களுக்கும் இதற்கும் உள்ள இன்னொரு வித்தியாசம், ஏலியனின் உருவ அமைப்பு. ஒரு பிரம்மாண்ட ராட்சதன் போல இல்லாமல், ஜெல்லி மீனும் ஆக்டோபஸும் கலந்த கலவை போல உள்ள ஏலியன், பயத்தை மேலும் கூட்டுகிறது. அதேபோல், ஏலியனைப்பற்றிய வசனங்கள் (ஏலியன் நம்மை விரோதியாக நினைப்பதில்லை; ஆனால், இரண்டு வித்தியாசமான உயிரின வகைகள் இருக்கும் ஒரு இடத்தில், அவற்றில் வலிமையான உயிரினம் கட்டாயம் பிற உயிரினத்தைக் கொன்றே தீரவேண்டும். அப்போதுதான் அது உயிர்பிழைக்க முடியும்) நன்றாக எழுதப்பட்டுள்ளன. அதேபோல், இதில் ரத்தம் சார்ந்த வன்முறை கொஞ்சம் அதிகம்.

ஆனால், படத்தின் நெகட்டிவ் பாயிண்ட்களாக, எந்தக் கதாபாத்திரத்துக்கும் பின்னணியே இல்லை. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் தனது மனைவிக்குக் குழந்தை பிறப்பதைப் பார்க்கிறது. அவ்வளவுதான். அனைவருமே துண்டான மனிதர்கள். ஒரு கேங்க்ஸ்டர் படத்தில் இப்படி வரலாம். சூது கவ்வும், Snatch, Lock stock and Two Smoking Barrels போன்ற படங்களில் இப்படிப்பட்ட மனிதர்கள்தான் வருவார்கள். பழைய ஏலியன் படங்களிலும் இப்படிப்பட்ட மனிதர்கள் உண்டு என்றாலும், இப்போது எடுக்கப்படும் படங்களில், உணர்வுபூர்வமான காட்சிகளின்போது ஆடியன்ஸ் படத்தோடு ஒன்ற, கதாபாத்திரங்களின் பின்னணி அவசியம் தேவை. அது இல்லாதது, படத்தின் பெரிய மைனஸ். கூடவே, எப்படியும் ஒவ்வொருவராக எல்லோரும் இறக்கப்போகிறார்கள் என்பது எளிதில் தெரிந்துவிடுகிறது. கதையில் புதுமையே இல்லாதது அடுத்த மைனஸ். ஆனால், இந்த மைனஸ்களை ஆடியன்ஸ் மறந்துவிடவேண்டும் என்ற நோக்கில்,ஒருசில திடுக் தருணங்களோடு விறுவிறுப்பான திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. அந்தந்தத் தருணங்கள் வருகையில் படம் விறுவிறுப்பாகவே செல்கிறது.

அதுவே, விறுவிறுப்பான தருணங்களைத் தெளிவாக உணர்த்தியிருக்கும் திரைக்கதையில், சில முக்கியமான சம்பவங்கள் சரியாக எழுதப்படவில்லை. உதாரணமாக, இவர்களின் distress signal கிடைத்ததும் கொஞ்சம் தள்ளி வரும் ஆளில்லாத விண்கலம் dock செய்யப்படும் காட்சி ஒரு உதாரணம். அது குழப்பத்தையே விளைவிக்கிறது. அதேபோல், அவ்வளவு நேரம் விண்வெளியில் காற்றே இல்லாதபோதுகூட சர்வைவ் செய்யத் தெரிந்த ஏலியனுக்கு, படத்தில் ஒரு கதாபாத்திரம் ஆக்ஸிஜனை உபயோகித்து எரியும் விளக்கைக் காட்டும்போது அதை ஓடிவந்து கட்டிப்பிடித்து கருணாஸ் பியர் பாட்டிலைக் கன்னத்தோடு வைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவதுபோலக் காட்சிகள் அமைத்திருப்பது சற்றே நகைச்சுவையாக இருந்தது. இதுபோலப் படத்தில் சில காட்சிகள் உண்டு. ஏலியனை சரியாக டிஃபைன் செய்யவில்லை.

உங்களுக்குக் கேள்விகள் இல்லாமல், ஓரளவு விறுவிறுப்பான காட்சிகளோடு நன்றாகத் தெரிந்த கதையோடு ஒரு ஏலியன் த்ரில்லர் பார்ப்பதில் விருப்பம் இருந்தால் தாராளமாக இப்படத்தைப் பார்க்கலாம். ஆனால் என் கவலையெல்லாம், இதே கதையை வைத்துக்கொண்டு தாத்தா ரிட்லி ஸ்காட் அடுத்த ஏலியன் படத்தோடு கிளம்பிவிட்டார். விரைவில் Alien: Covenant படம் வெளியாகப்போகிறது. அது, அதே ஏலியன் கதைதான். அதுதான் பயமாக இருக்கிறது.

  Comments

1 Comment;

  1. Aksayan

    நல்ல விமர்சனம்

    அடிக்கடி எழுதுங்க

    Reply

Join the conversation