இலக்கியமும் சினிமாவும்: இலக்கியங்களில் திரைப்படங்களுக்கான கதைக்கருக்கள்

by Karundhel Rajesh May 13, 2014   Book Reviews

சென்ற 2013 அக்டோபரில் லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையின் ஒரு கருத்தரங்கத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. அவர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. படித்துப் பாருங்கள்.


 

‘Books and movies are like apples and oranges. They both are fruit, but taste completely different’ – Stephen King

பொதுவாகவே புத்தகங்கள் திரைப்படங்களுக்கு அளித்திருக்கும் கதைகள் கணக்கில் அடங்காதவை. இந்திய திரைப்படங்களைவிடவும், ஐரோப்பிய, அமெரிக்கத் திரைப்படங்களே இப்படி பெரும்பாலும் புத்தகங்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இங்கே ‘இலக்கியம்’ என்று சொல்லாமல் ‘புத்தகங்கள்’ என்ற வார்த்தை போடப்பட்டிருப்பதற்குக் காரணம், அமெரிக்காவைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் வெளியாகும் ‘பெஸ்ட் செல்லர்’ நாவல்களே திரைப்படங்களாக உருவாக்கப்படுகின்றன. இந்த நாவல்களில் 95 சதவிகிதம், இலக்கியம் அல்ல. Pulp என்று வகைப்படுத்தப்படுபவை இவை. மனித வாழ்வின் பிரச்னைகளைப் பற்றிய கேள்விகளை எழுப்பாமல், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மையமாக எடுத்துக்கொண்டு எழுதப்படும் க்ரைம் மற்றும் காதல் நாவல்கள்.

‘ஆங்கில இலக்கியம்’ என்ற வார்த்தை, தலைப்பில் இருப்பதால், முதலில் சில ஆங்கில இலக்கியவாதிகளையும் அவர்களது படைப்புகளையும் பார்ப்போம். அவைகளில் பல, இன்னும் திரைப்படங்களாக எடுக்கப்படாமலே இருக்கின்றன. காரணம், எழுத்தில் மிகவும் பிரபலாக இருந்தாலும், அவைகள் pulp அல்ல. ஹாலிவுடில் திரைப்படமாக எடுக்கப்படும் தகுதி ஒரு இலக்கியப் படைப்புக்கு இருக்கவேண்டும் என்றால், அதில் ஆள் கடத்தல், மனநலம் பிறழ்ந்த கொலைகாரன், சூப்பர் ஹீரோ, துப்பறியும் உளவாளி, சிறுவர்களை உலகைக் காக்கவந்த அவதாரங்களாக மிகைப்படுத்திக் காட்டல், ராட்சத ஜந்துக்கள், வேற்றுக்கிரகவாசிகள் போன்ற சில வகைகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுதான் முதல் தகுதி. இரண்டாம் தகுதி, அதன் எழுத்தாளர், புகழ்பெற்ற pulp எழுத்தாளராக இருக்கவேண்டும்.

உதாரணமாக, மைக்கேல் கிரைட்டன், ஜான் கிரிஷாம், ஆர்தர் ஹைலி, சிட்னி ஷெல்டன், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ஸ்டீஃபன் கிங் போன்றவர்களை சொல்லலாம். இவர்களில் ஒருவர் கூட இலக்கியவாதி அல்ல. ஆனால் இந்தப் பட்டியலில் இருப்பவர்களின் கதைகள் தான இதுவரை ஹாலிவுட்டில் மிக அதிகமான திரைப்படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

மாறாக, எட்கர் அலன் போ (கவிதை மற்றும் சிறுகதைகள்), அலன் கின்ஸ்பெர்க் (கவிதை), டி .எஸ். எலியட், வில்லியம் ஃபாக்னர், எர்னஸ்ட் ஹெமிங்வே, டோனி மாரிஸன், பேர்ல் எஸ். பக், வில்லியம் எஸ் பர்ரோஸ் போன்ற ஒரு பெரும் படையின் படைப்புகள், இன்னும் திரைப்படங்களாக அதிகம் எடுக்கப்படாமலே இருக்கின்றன. இவர்களை அமெரிக்க இலக்கியத்தின் பிதாமகர்கள் என்று தாராளமாக சொல்லலாம்.

ஹாலிவுட்டின் ரசனை அத்தகையது. இலக்கியங்களை முற்றிலும் கண்டுகொள்ளாமல், pulp நாவல்களையே படமாக எடுத்தால்தான் டாலர்களை அள்ளமுடியும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இன்னொன்று – ஹாலிவுட் இயக்குநர்களுக்கு இலக்கிய அறிவும் அறவே இல்லை (க்ரிஸ்டோஃபர் நோலன் போன்ற சில விதிவிலக்குகள் தவிர. நோலன் கல்லூரியில் முறையாக இலக்கியம் படித்தவர் என்பதால் அவரது படங்களில் இலக்கியவாதிகளின் பாதிப்புகளை உணரமுடியும். குறிப்பாக ‘இன்செப்ஷன்’ படத்தின் mazes போர்ஹேஸை நினைவூட்டக்கூடியன). எனவே, அப்படிப்பட்ட ஒரு இடத்தில் இலக்கியங்களை திரைப்படங்களாக எடுத்தால், அவசியம் ஆச்சரியப்படத்தான் முடியும்.

ஆனால், அதுவே தென்னமெரிக்க இலக்கியம் என்பதை எடுத்துக்கொண்டால், அந்த நாடுகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட நாடுகளாக இருந்ததால் அங்கே இலக்கியம் மிகவும் செழிப்பாக வளர்ந்ததை உணரமுடியும். அதேபோல் உலகின் சிறந்த படைப்பாளிகளாக இருக்கும் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இங்கிருந்து வந்தவர்களே. தென்னமெரிக்க இலக்கியவாதிகளில் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ், ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ், ஹூலியோ கொர்த்தஸார், மரியோ பர்காஸ் யோசா, கார்லோஸ் ஃபுயந்தேஸ், கியர்மோ கப்ரேரா இன்ஃபந்தே, ராபர்தோ போலான்யோ, பாப்லோ நெரூதா, அக்தாவியோ பாஸ் போன்றவர்கள் உலகப் பிரசித்தி அடைந்தவர்கள்.

தென்னமெரிக்க இலக்கியங்களிலிருந்து ஐரோப்பிய இலக்கியங்களின் பக்கம் சென்றால், அங்கும் எக்கச்சக்கமான, அருமையான இலக்கியவாதிகள் உண்டு. அவர்களையும் பட்டியல் இட்டால் இந்தக் கட்டுரை மிகப் பெரியதாக மாறிவிடும் அபாயம் உண்டு என்பதால், இதுவரை நாம் பார்த்த இலக்கியவாதிகளை ஏன் இங்கே நினைவு கூர்கிறோம் என்பதைப் பற்றி இனி கவனிக்கலாம்.

எட்கர் அலன் போ (click to read). 1809ல் பிறந்து, நாற்பதே வருடங்கள் வாழ்ந்து மறைந்த மனிதர். சிறுகதை எழுத்தாளர். கவிஞர். வறுமையில் வாடியவர். வாழ்க்கை முழுதும் தோல்வியுற்ற மனிதனாகவே விளங்கிய எட்கர், காதல் மனைவி விர்ஜீனியாவுடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு சில வருடங்களைத் தவிர, எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. தனது வாழ்வின் சோகங்களையும் இருட்டையும் தனது படைப்புகளில் இலக்கியமாக மாற்றிய மனிதர் அவர். அவரது படைப்புகளில் கொடுந்துயரம் பொங்கிவழிவதை இன்றும் காண முடியும். அதேசமயம், இனம்புரியாத ஒருவித பயமும் அவற்றில் இருக்கும். வாழ்வில் தனது அன்பிற்குறிய மனிதர்கள் அனைவரும் அவரது கண் முன்னர் இறந்ததனால், மரணத்தைப் பற்றி எட்கர் கொண்டிருந்த பயம் அது.
எட்கர் அலன் போவின் சிறந்த சில சிறுகதைகளை உலகின் எந்த மொழியிலும் அருமையான படங்களாக எடுக்க முடியும். உதாரணம் – The Tell-Tale Heart. ஒரு முதியவரின் கூரிய பார்வையை சமாளிக்கமுடியாமல் அவரைக் கொன்று, தனது அறையின் கீழ் புதைக்கும் மனிதன் ஒருவனைப்பற்றிய கதை. 1843ல் எழுதப்பட்டது. இது வெறும் மர்மக்கதை அல்ல. இதில் உளவியல் பிரச்னைகளையும் போ கையாள்கிறார். இந்தக் கதையில் பல முரண்கள் உள்ளன. அந்த முரண்களின் மூலம் கொலைகாரனின் இயல்பையும், அவனை கொலைசெய்யத் தூண்டிய விஷயங்களைப் பற்றியும் போ சொல்வதை உணரமுடியும். இத்தனைக்கும் கதை வெளிவந்த காலத்தை கவனியுங்கள்.

ஒரு அறையில் காதல் மனைவி விர்ஜீனியா, கொடும் நோயில் படுத்திருக்க, பக்கத்து அறையில் அமர்ந்துகொண்டு, மரணத்தையும் மரண பயத்தையும் அவைகளைப் பற்றிய எண்ணங்களையும் எண்ணிக்கொண்டு, ஒருவித மனப்பிறழ்வு நிலையில் அமர்ந்திருக்கும் எட்கர், எழுதிக்கொண்டிருப்பது வழக்கம். அப்போதைய கொடுமையான மனநிலையில் அவர் எழுதிய ஒரு படைப்பு, புகழின் உச்சத்திற்கு அவரைக் கொண்டுசென்றது. அதுதான் The Raven என்ற கவிதை. எழுதிய ஆண்டு ஜனவரி 1845. உலகின் சிறந்த கவிதைகளில் ஒன்றான இது, ஒரு திரைப்படத்துக்கான கூறுகளை எளிதில் தரக்கூடியது.

எட்கர் அலன் போவின் சிறுகதைகளை உள்ளபடி எடுத்துக்கொண்டால், சிறந்த திரைப்படங்களை அவசியம் அவற்றின்மூலம் எடுக்க இயலும். தமிழில் கூட.

மேலே குறிப்பிட்ட தென்னமெரிக்க இலக்கியவாதிகளில் எனக்குப் பிடித்தவர் மரியோ பர்காஸ் யோசா. அவரது கதைகளில் தென்னமெரிக்காவின் ரத்தமும் சதையுமான வரலாறு நிரம்பியிருக்கும். அவரது கதைகளில் விரவியிருக்கும் பல சம்பவங்கள், ஒவ்வொன்றுமே ஒரு திரைப்படமாக எடுக்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்தவை.

தமிழில், இலக்கிய உலகில் ஒரு பெரும் படையே இருக்கிறது. கிட்டத்தட்ட ‘அ’வில் ஆரம்பித்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு இலக்கியவாதியை நாம் பட்டியல் இடமுடியும். ஆனாலும், தமிழில் திரைப்படங்கள் இலக்கியங்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றனவா என்று யோசித்தால், மிக மிக சொற்பமான உதாரணங்களே கிடைக்கின்றன. ஞானராஜசேகரன் இயக்கிய ‘மோகமுள்’, உடனடியாக நினைவுக்கு வருகிறது. கூடவே, ஜெயகாந்தனே எடுத்த சில திரைப்படங்கள். இலக்கியங்கள் அல்லாத சில கதைகளும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டிருந்தாலும், புத்தகங்களிலிருந்து வெளிவந்த திரைப்படங்கள் என்பவை மிக மிக சொற்பம். சென்ற வருடம், வசந்தபாலனின் ‘அரவான்’ திரைப்படம், சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தின் ஒரு கதையில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதும் நினைவு வருகிறது.

தமிழ் இலக்கியத்தைப் பற்றி எக்கச்சக்கமான விஷயங்கள் எழுதலாம் என்றாலும், கட்டுரையின் நீளம் கருதி மிகச்சுருக்கமாக ஒரு சில கதைகளையும் அவற்றை எழுதியவர்களையும் பற்றிப் பார்க்கலாம்.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளிலேயே திரைப்படங்களுக்கான கருக்கள் எளிதில் கிடைக்கும். தற்காலத்தில் எடுக்கத் தகுந்த ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ ஒரு உதாரணம். இந்தக் கதையை அப்படியே திரைப்படமாக எடுக்காமல், கருவை மட்டும் வைத்துக்கொண்டு யோசித்தால் நல்லதொரு அங்கத திரைப்படம் உறுதி.

கிட்டத்தட்ட தமிழின் இலக்கியவாதிகள் ஒவ்வொருவரின் ஒவ்வொரு படைப்பை எடுத்துக்கொண்டாலே போதும். அவசியம் சிறந்த திரைப்படம் ஒன்றை எடுக்கமுடியும். ஆதவனின் ‘என் பெயர் ராமசேஷன்’ கதையை திரைப்படமாக எடுத்தால், Malena போன்ற அனுபவத்தை வழங்கும் படமாக அது இருக்கும். கரிச்சான் குஞ்சு என்ற பெயரில் எழுதிய நாராயணசாமியின் ‘பசித்த மானுடம்’ நாவலில் இருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டு அவற்றை திரைப்படமாக ஆக்க இயலும். எந்த விஷயங்கள் என்றால், நாவலில் ஓரினச் சேர்க்கையைப் பற்றிய அனுபவங்கள் இருக்கின்றன. நாற்பதுகளில் தஞ்சாவூர் பக்கத்து வாழ்க்கையை விவரிக்கும் நாவலில் அக்காலத்திலேயே நடந்த இந்த விஷயங்கள், அக்காலத்தைப் பற்றிய அருமையான படம் ஒன்றினை எடுக்கையில் உதவலாம். இதுவேதான் கரிச்சான் குஞ்சின் ஆதர்சமாக விளங்கிய கு.ப.ராவின் படைப்புகளிலும் சாத்தியம்.

ஒரே நாளில் நடக்கும் கதையான ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலில் ஜி.நாகராஜன் காட்டும் உலகம் தனியானது. இந்த நாவலில் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்களையும் தெரியாமலேயே தமிழ்த் திரையுலகம் ‘புதுப்பேட்டை’ போன்ற படங்களில் காட்டியாகிவிட்டது. இருந்தாலும், இந்த நாவலின் கதைக்கரு தனித்தன்மையுடையது. இதுபோன்ற ஒரே நாளில் நடக்கக்கூடிய கருக்கள், ஆங்கிலத்தில் படங்களாக வந்திருக்கின்றன. இந்தக் கதை, முழுநீளத் திரைப்படமாக எடுக்கப்படுவதற்குத் தகுதியானது.

தபால் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு அரசு ஊழியனுக்கு ஏற்படும் அனுபவங்கள், சாரு நிவேதிதாவின் ‘ராஸலீலா’ நாவலின் மூலம் சொல்லப்படுகின்றன. அங்கு கண்ணாயிரம் பெருமாள் என்ற மனிதன் சந்திக்கும் பல்வேறு மனிதர்களின் மூலமாக அவன் விவரிக்கும் அனுபவங்கள், நகைச்சுவை, காதல், காமம், குரூரம் போன்ற உணர்வுகளின் தொகுப்பாக இருக்கின்றன. இந்த நாவல் மிகப்பெரியது. ஆகவே இதனை மையமாக வைத்து தரமான திரைப்படம் ஒன்றை எடுக்கமுடியும். கூடவே கண்ணாயிரம் பெருமாளின் வெளிநாட்டுப் பயணங்களில் நிகழும் சம்பவங்களை மறக்கவே முடியாது. அதேபோல் அவரது ‘காமரூப கதைகள்’ நாவலுமே அட்டகாசமான நான் லீனியர் படமாக எடுக்கப்படக்கூடியது.  இந்தக் கதைக்கான திரைக்கதையை மிகவும் சுவாரஸ்யமானதாக எழுத முடியும்.

மனோஜ் எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பான ‘புனைவின் நிழல்’ தொகுதியில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு சிறுகதையுமே அபாரம். குறிப்பாக புத்தகத்தின் முதல் சிறுகதை, ‘அட்சர ஆழி, ஒரு அருமையான உலகப் படமாக எடுக்கப்படக்கூடியது. இக்கதையில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களும் வர்ணனைகளும், அப்படியே நமது கண்முன் விரிகின்றன. தனக்கு நடப்பவைகளை ஒரு நபர் நமக்கு விவரிக்கும் பாணியில் எழுதப்பட்ட இந்தக் கதை, சந்தேகமில்லாமல் என் மனதில் இப்பொழுதும் சுற்றியவண்ணமே இருக்கிறது. கதையைப் படித்துமுடிக்கையில் என் மனதில் எழுந்தது ‘அடடா.. இதைத் திரையில் பார்த்தால் எப்படி இருக்கும்?’ என்ற எண்ணமே. இதைப் படித்தால் நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.

அடுத்த கதை, ‘றெக்கை’. இக்கதை முழுக்கவும் ஊடோடும் ஒரு மர்மம் இதில் இருக்கிறது. படிக்கும் நம்மையும் கதைக்குள் இழுத்து, முடிவையும் சம்பவங்களையும் பற்றிய விதவிதமான புரிதல்களை நமக்குள் எழுப்பும் திறமை இக்கதைக்கு உண்டு. மேலே நாம் பார்த்த அட்சர ஆழியிலும் இந்த Post Modernistic கூறுகள் இருக்கின்றன.

இந்த இரண்டு சிறுகதைகளுமே மனோஜின் திறமைக்கு உதாரணங்கள்.

இன்னும் ஏராளமான எழுத்தாளர்களைப் பற்றி எழுதமுடியும். ஆனால், ஒரு சில உதாரணங்களாக மட்டுமே இவர்களைப் பார்த்தோம். நோக்கம் என்னவெனில், தமிழ் இலக்கியத்தில், உலகின் பல்வேறு விருதுகளை வாங்கிய திரைப்படங்களைப் போன்ற தமிழ்ப்படங்களை எடுக்க ஏராளமான கதைகள் உள்ளன. நான் முன்பே சொன்னதுபோல், ஒவ்வொரு இலக்கியவாதியின் ஒவ்வொரு படைப்பை மட்டுமே எடுத்துக்கொண்டாலுமே போதும். உலகின் பல நாடுகளில் இலக்கியம் செழித்து வளர்ந்திருப்பதற்கு மக்களின் ரசனை உணர்ச்சி ஒரு பெரிய காரணம். ஐரோப்பாவில் இது அதிகம். தென்னமெரிக்காவிலும். ஹாலிவுட்டையும் இந்திய சினிமாவையும் (குறிப்பாக தமிழ் சினிமா) எடுத்துக்கொண்டு ஒப்பிட்டால், கிட்டத்தட்ட நாம் ஏற்கனவே பார்த்ததுபோல், நல்ல இலக்கியங்கள் மதிக்கப்படுவதில்லை. திரைத்துறையில் இருக்கும் பலருக்கும் இலக்கிய வாசிப்பு அறவே இல்லை என்பது ஒரு சோகமான உண்மை. ஒருசில இலக்கிய அறிவு மிக்க இயக்குநர்கள் இல்லாமல் போகவில்லை. இருந்தாலும், தமிழில் இருக்கும் அட்டகாசமான கதைகள், முற்றிலும் மறக்கப்பட்டு pulp கதைகள் அவற்றைத் தாண்டிச்சென்று திரைப்பட அங்கீகாரம் பெறுவதற்கு முன்னர் அவசியம் ஒரு விழிப்புணர்ச்சி தேவை.

தமிழர்களாகிய நாமுமே, அன்றாட வாசிப்பில் இலக்கியங்களைப் படிக்கிறோமா என்பதையும் கேட்டுப்பார்த்துக்கொள்ளவேண்டும். என்று இலக்கியங்கள் மதிக்கப்படுகின்றனவோ, அப்போது சமுதாயத்தில் அவசியம் மறுமலர்ச்சி உண்டாகும். அப்போது அவை அருமையான அனுபவங்களை நல்கும் திரைப்படங்களாக எடுக்கப்படும். அந்தக் காலத்தை இன்னும் சில வருடங்களில் எதிர்கொள்வேன் என்ற நம்பிக்கையும் முற்றிலுமாக எனக்கு இருக்கிறது.

  Comments

9 Comments

  1. Sujith N Subbu

    Sema articel na… How about Raju Murugan’s Vattiyum Muthalim..?

    Reply
    • வட்டியும் முதலும் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கல பாஸ் 🙂

      Reply
  2. siva

    What about “Ponniyin Selvan”? People says we can create thousand stories from “Ponniyin selvan”.

    Reply
  3. Balasubramaniam

    try raju murugan வட்டியும் முதலும் really a wonderful columnist experience we can different stories from it..:)

    Reply
  4. Ragul K R

    Rajesh, In malayalam i have seen some good movies based on bengali literature (eg: shyama prasad movies) , have you seen those movies

    Reply
  5. katawarayan

    அருமை ராஜேஷ் நாங்கள் இலக்கியம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து திரைப்படத்தை இயக்குவோம் இது உறுதி

    Reply
  6. katawarayan

    ராஜேஷ் இலக்கிய நூல்களின் பெயர்களைதயவு செய்து குறிப்பிடவும்

    Reply
  7. Very helpful message for me

    Reply

Join the conversation