LOTR: The Series – 19 – Edoras & Rohirrim

by Karundhel Rajesh January 6, 2012   war of the ring

முன்குறிப்பு- இந்தக் கட்டுரைகள், தொடர்ச்சியாக இல்லாமல், நான்-லீனியராக இருப்பதை நண்பர்கள் அவதானித்திருக்கலாம். அப்படி எழுதுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. நோக்கம் என்னவென்றால், ஆரம்ப சில கட்டுரைகள் தவிர்த்து, எந்தக் கட்டுரையைப் படித்தாலும் அது புரியவேண்டும் என்பதே. அதாவது, சென்ற கட்டுரையான ஜான் ஹோவ் மற்றும் அலன் லீ பற்றிய கட்டுரையை, இந்தக் கட்டுரைத்தொடரிலேயே முதன்முறையாகப் படித்தாலும், அது புரியவேண்டும். அதன்பின் அங்கொன்று இங்கொன்று எனப் படித்தாலும், சொல்ல வரும் விஷயத்தைப் புரிந்துகொள்வதில் எந்தச் சிரமமும் ஏற்படக்கூடாது என்பதால்தான் இப்படி எழுதப்படுகின்றன. ஆனால், ஈ-புக் வெளிவரும் நேரத்தில், மேலும் விடுபட்டவைகளையெல்லாம் சேர்த்து, கலர்ஃபுல்லாகக் கொண்டுவரவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

எடோராஸ் என்பது, ரோஹான் என்று அழைக்கப்படும் நாட்டின் தலைநகரம். White Mountains என்றழைக்கப்படும் மலைகளின் பள்ளத்தாக்கு ஒன்றில், ஒரு மலையின் மீது கட்டப்பட்ட நகரம் இது. இந்நகரை உருவாக்கியவரின் பெயர், ப்ரெகோ (Brego). ரோஹான் நாட்டின் இரண்டாவது மன்னர். காண்டோர் (Gondor) நாட்டின் வடக்கே அமைந்துள்ள பிராந்தியம் இது. ஏற்கெனவே ரோஹான் பற்றி மிகச்சுருக்கமாகப் பார்த்திருந்தாலும், இந்தக் கட்டுரையில் ரோஹான் பற்றிய அனைத்துத் தகவல்களையும் விரிவாகப் பார்த்துவிடலாம். அது, இப்படங்களைப் புரிந்துகொள்ள உதவும்.

மிஸ்டி மலைகளுக்கும் வெள்ளை மலைகளுக்கும் (White Mountains) இடையில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கில் அமைந்த இடமே ரோஹான். ஐஸன் ஆறு இதன் மேற்கு எல்லையாகவும், மிடில் எர்த்தையே கிழக்கு மேற்காக இரண்டாகப் பிரிக்கும் ஆண்டூய்ன் ஆறு இதன் கிழக்கு எல்லையாகவும் அமைந்திருக்கின்றன. இந்த இடத்தில் வாழும் மனிதர்கள், ரோஹிர்ரிம் என்று அழைக்கப்பட்டனர். இதற்கு அர்த்தம் – குதிரை வீரர்கள் எனப் பொருள்படும் ‘Horse Lords‘ என்பதாகும். ஆயினும், ரோஹானின் குடிமக்கள், தங்களை ‘இயோர்லிங்காஸ்’ (Eorlingas) என்றே அழைத்துக்கொண்டனர். இதற்குப் பொருள் – ரோஹானின் முதல் மன்னனான இயோர்லின் மக்கள் என்பது.

ரோஹான் எப்படி உருவானது?

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதை நடப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னர், ஸிரியன் (Cirion) என்ற பெயருடைய காண்டோரின் அமைச்சர் – இவர்தான் அப்போது காண்டோரை ஆண்டுகொண்டிருந்தவர் – ஒரு போரை சந்திக்கவேண்டி வந்தது. இந்தப் போரில், அவர் தோல்வியடையும் நிலையில், அவரது உதவிக்கு வந்துசேர்ந்தது, இயோர்லின் கீழ் அமைந்த படை ஒன்று. இதன் காரணமாகப் போரில் வென்ற ஸிரியன், இயோர்லின் வீரத்தை மெச்சி, அவருக்கு அளித்ததே இந்த ரோஹான் நிலப்பரப்பு. இந்தப் போருக்காக கான்டோர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஸிரியனின் பெரும்படை, லாத்லாரியனைக் கடக்கும் வேளையில், லாத்லாரியனிலிருந்து பெரும் மேகம் ஒன்று, இப்படைகளுக்கு மேலாகவே காண்டார் வரை துணைவந்தது. இந்த மேகத்தால் தங்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றை ஸிரியனின் படை பெற்றது. ஆகவே, போரில் இக்கூட்டணி வென்றதற்கு இதுவும் ஒரு காரணம் (லாத்லாரியனில் வாழ்ந்து வந்த எல்ஃப்கள் இவ்விதமாக மறைமுக உதவி புரிந்தனர்) . இப்படியாக, ரோஹான் நாடு உருவானது. ஸிரியனின் சந்ததியினர், அந்நாட்டை ஆண்டுவந்தனர்.

இதற்குப் பலநூறு ஆண்டுகள் கழித்து, தெங்கெல் (Thengel) என்ற மன்னன் ரோஹானை ஆண்டுவந்ததிலிருந்து, நமக்குத் தேவையான கதை ஆரம்பிக்கிறது.

தெங்கெல் மன்னன் ரோஹானை ஆண்டபோதுதான், அவரது பிராந்தியத்திற்குள் இருக்கும் ஐஸங்கார்டை, ஸாருமான் என்ற மந்திரவாதி ஆக்கிரமித்தார். ரோஹானின் படையான ரோஹிர்ரிமை அவ்வப்போது தாக்கி, இடைஞ்சல் கொடுக்க ஆரம்பித்திருந்தார் இந்த ஸாருமான். அந்த நேரத்தில்தான் தெங்கெல் மன்னர் மரணமடைந்து, அவரது மகன் ரோஹானை ஆளும் பொறுப்பை ஏற்றார்.

ரோஹானின் இந்தப் புதிய மன்னனின் பெயர் – தியோடன்.

தியோடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுப் பல வருடங்கள் கழிந்தபின், ஸாருமான் சாரோனின் பிடியில் விழுந்த நேரம். தியோடனின் மந்திரியான க்ரிமாவை தனது பிடியில் போட்டுக்கொண்டு, க்ரிமாவின் மூலமாகத் தியோடனை மெல்ல மெல்லத் தன்வசப்படுத்தினார் ஸாருமான். இதனால் ரோஹானின் படைகள் பலம்பெறுவதை ஸாருமானால் தடுக்க முடிந்தது. ரோஹானின் படைகள் வளராமல் போனால், பிற்காலத்தில் சாரோன் காண்டார் மீது போர் தொடுக்கையில், உதவிக்கு ஒருக்கால் ரோஹான் சென்றால், அதனை எளிதில் வீழ்த்திவிடலாம் என்பது ஸாருமானின் கணக்கு. ஆகவே, தனது ஆட்களான ஆர்க்கள் (Orcs) என்றழைக்கப்பட்ட பூதங்களை வைத்து, உருக் – க்ஹாய்களை உருவாக்கத் துவங்கினார் ஸாருமான். இந்த உருக்-க்ஹாய்களை வைத்து, ரோஹானின் எல்லைப்புறங்களில் காவல் காத்துவந்த படைகளை அழித்தார். உருக்-க்ஹாய்களைக் கொல்ல நினைத்த தியோடனின் மகனான தியோட்ரெட், ஸாருமானால் பீடிக்கப்பட்ட தியோடனால் தடுக்கப்பட்டான்.

இதன்பின்னர் நடந்ததெல்லாம் LOTR விசிறிகளுக்குத் தெரிந்திருக்கும்.

ரோஹான் நிர்மாணிக்கப்பட்ட விதம்

Mount Sunday என்று ஒரு மலை உண்டு. கேண்டர்பரியில். எடோராஸ் நகரத்தை நிர்மாணிக்க ஜாக்ஸன் முடிவுசெய்த இடம். முன்னதாக, அலன் லீயும் ஜான் ஹோவும் எடோராஸ் பற்றி வரைந்துகொடுத்த ஸ்கெட்ச்கள் ஜாக்ஸனிடம் இருந்தன. தனது ஆர்ட் டிபார்ட்மெண்ட்டின் உதவியை நாடிய ஜாக்ஸன், ஆர்ட் டிபார்ட்மெண்ட்டின் தலைவரான Dan Hannah விடம் லொகேஷன் பார்க்கச் சொல்லி உத்தரவிட்டார். குறிப்புகளின்படி, பெரிய மலையில், எடோராஸ் அமைந்திருக்க வேண்டும். அங்கேயே அதன் அரண்மனையும் கட்டப்பட்டிருக்க வேண்டும். இது, நிறைவேற்றுவதற்கு மிகச் சிக்கலான விஷயம்.

மௌண்ட் சண்டேயில் முகாமிட்ட குழுவினர், முதலில் ஒன்றரை கிலோமீட்டர் நீளத்துக்கு ஒரு சாலையை அதன் அடிவாரத்தில் அமைத்தனர். அதன்பின், மலையுச்சியில் கட்டிடங்களை அமைக்கும் பணி துவங்கியது. இந்த இடத்தின் பிரச்னை என்னவென்றால், இருபுறமும் பெரிய மலைகள் இருந்ததனால், நடுவில் அகப்பட்டுக்கொண்ட இப்பிரதேசத்தில், மிகப்பலமான காற்று வீசியதுதான். சில தருணங்களில், அங்கு நிற்பதே முடியாத காரியமாக இருந்தது.

அத்தனை சிக்கல்களையும் மீறி, மௌண்ட் சண்டேயின் மீது எடோராஸின் செட் அமைக்கப்பட்டபோது, எட்டு மாதங்கள் கழிந்துவிட்டிருந்தன.

இவ்வளவு நாட்கள் ஆனதற்கு இன்னொரு காரணம், டோல்கீன், தனது புத்தகங்களில்,எடோராஸின் ஒவ்வொரு அடியையும் வர்ணித்து எழுதியிருந்ததே. அத்தனை தத்ரூபமாக இந்த இடத்தை உருவாக்க, மிக நீண்ட காலம் தேவைப்பட்டது.படத்தில் எடோராஸ் அரண்மனையைக் காட்டும்போது கவனித்தால், அரண்மனையின் உட்புறத்தில் அத்தனை அழகாக வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்படிருப்பதைக் காணலாம்.

எட்டு மாதங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய செட்டில், எத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடந்தது? ஜஸ்ட் மூன்றே வாரங்களில், மூன்று பாகங்களுக்குமான படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டது. அதன்பின், பிரம்மாண்டமான அந்த செட், முற்றிலுமாகக் கலைக்கப்பட்டது.

இந்த வீடியோவைக் கவனியுங்கள். எடோராஸ் நிர்மாணிக்கப்பட்ட அதிசயத்தைக் காணலாம்.

தொடரும் . . .

  Comments

10 Comments

  1. வழக்கம் போல செம தல…

    ///தொடர்ச்சியாக இல்லாமல், நான்-லீனியராக இருப்பதை நண்பர்கள் அவதானித்திருக்கலாம். அப்படி எழுதுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. நோக்கம் என்னவென்றால், ஆரம்ப சில கட்டுரைகள் தவிர்த்து, எந்தக் கட்டுரையைப் படித்தாலும் அது புரியவேண்டும் என்பதே.////

    இது நல்லாருக்கு…. தொடர்ச்சியா படிச்சா தான் புரியும் ன்னு இல்லாம இப்படி இருக்கது….

    Reply
  2. தல அந்த ஐசன் கார்டன் ல ஒரு அணை மாறி போட்டு சாரமான் ஒரு நதிய தடுத்து வச்சுருப்பானே…ஐசன் கார்டன் போர் அப்போ கூட அந்த அணைய உடைப்பாங்களே. அது என்ன நதி ?? அந்த நதி பத்தி சொல்லுங்களேன்…

    Reply
  3. அட… மீ தி பர்ஸ்ட்… வட .. பொங்கல்… சாம்பார் …

    Reply
  4. நல்ல பதிவு..வியப்பாக இருக்கிறது இந்த தொடர் ?? உங்களால் மட்டும் எப்படி இத்தனை வருடங்களாக சிறப்பாக எழுத முடிகிறது..அதுவும் அனைவரையும் கவரும் விதத்தில் ? அந்த ரகசியத்தை சொல்லுங்களேன் (விருப்பம் இருப்பின்)..என்னை போன்றவர்களுக்கு மிக பெரிய உதவியாக இருக்கும்..
    கேள்விகள் கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்…ஏனெனில் தங்களை போன்றவர்களே எனக்கு மிக பெரிய முன்னுதாரணம்..நன்றிகள் பல.

    Reply
  5. // வியப்பாக இருக்கிறது இந்த தொடர் ?? உங்களால் மட்டும் எப்படி இத்தனை வருடங்களாக சிறப்பாக எழுத முடிகிறது..அதுவும் அனைவரையும் கவரும் விதத்தில் ? அந்த ரகசியத்தை சொல்லுங்களேன் (விருப்பம் இருப்பின்)..என்னை போன்றவர்களுக்கு மிக பெரிய உதவியாக இருக்கும்..

    கேள்விகள் கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்…ஏனெனில் தங்களை போன்றவர்களே எனக்கு மிக பெரிய முன்னுதாரணம்..நன்றிகள் பல. //
    நான் கேட்க நினைத்ததை கேட்டுவிட்டீர்கள் குமரன்.

    வழக்கம்போல கலக்கல் பதிவு. தொடரின் மூலம் LOTR பற்றி எவ்வளவோ தெரிந்துகொண்டேன். மிகவும் நன்றி. Now I am an official LOTR Geek. 😀

    Reply
  6. கட்டுரைத் தொடரில் கூட நான்-லீனியர் முறையை உலகிலேயே முதன்முறை அறிமுகப்படுத்திய அண்ணன் ராஜேஷுக்கு ஒரு ‘ஓ’ போடுங்க

    Reply
  7. அற்புதமான பதிவு. ஒரு சந்தேகம். ரோஹானின் மேற்கு எல்லையாகிய ஐசன் ஆற்றுக்கு மேற்கே இருக்கக்கூடிய ஐசன்கார்ட் எப்படி ரோஹானின் ஒரு பகுதியாக இருக்க முடியும்?

    மற்றபடி, மூன்று வார படப்பிடிப்பிற்கு எட்டு மாத செட்.. சான்சே இல்லை…

    Reply
  8. @ முரளி – ஐஸங்கார்ட்ல இருக்கும் நதியின் பெயர், ஆங்க்ரன் (Angren). இதை, ஐஸன் நதின்னும் சொல்லுவாங்க. அந்த நதி, மிஸ்டி மலைகளில் உருவாவது. ரோஹான் நாட்டின் மேற்கு எல்லை, இந்த நதியால் வகுக்கப்படுகிறது. Gap of Rohan என்ற இடம். இந்த நதியைத்தான் ஸாருமான் அணை கட்டி தடுத்தார்.

    @ விமல் – நன்றி 🙂

    @ குமரன் – இந்த மாதிரி எழுதுவது பெரிய மேஜிக் எல்லாம் இல்லை. எதில் விருப்பம் இருக்கிறதோ, அதைப் பற்றி யோசித்து, தகவல்கள் திரட்டினால், யாருமே எழுதிவிட முடியும். இன்டர்நெட்டிலும், டிவிடிக்களிலும் உள்ள தகவல்களைத்தான் நான் தொகுக்கிறேன். இதுதான் ரகசியம். நன்றி

    @ ஹாலிவுட் ரசிகன் – நீங்கள் LOTR geek ஆனது குறித்து மகிழ்ச்சி. LOTR என்பது ஒரு கடல். அதிலிருந்து பொறுக்கப்பட்ட சிப்பிகளே இந்தத் தொடர் 🙂

    @ கணேசன் – அவ்வவ்வ்வ்வ் .. மீ பாவம். அழுதுடுவேன்

    @ அபராஜிதன் – //ரோஹானின் மேற்கு எல்லையாகிய ஐசன் ஆற்றுக்கு மேற்கே இருக்கக்கூடிய ஐசன்கார்ட் எப்படி ரோஹானின் ஒரு பகுதியாக இருக்க முடியும்?// – இது ஒரு மிக நல்ல கேள்வி. இதற்கு சுருக்கமான பதில் இங்கே. விரிவான பதில், அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.

    ஐஸங்கார்ட் என்பது காண்டோரின் பகுதியாகத்தான் இருந்தது. பின்னாட்களில், ரோஹானின் பகுதியாக மாறியது. இதற்குக் காரணம், ஐஸங்கார்டை தலைமையகமாக வைத்து ரோஹானின் மேல் போரிட்ட சில சக்திகளை ரோஹான் முறியடித்ததே. விரிவான பார்வை, அடுத்த பகுதியில் காணலாம். உங்கள் கேள்விக்கு மனமார்ந்த நன்றிகள்.

    Reply

Leave a Reply to Abarajithan Cancel Reply