மாநகரம் (2017)

by Karundhel Rajesh April 2, 2017   Tamil cinema

முதலில் தாமதமான விமர்சனத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிடுகிறேன். இரண்டு நாட்கள் முன்னர்தான் படத்தைப் பார்க்க நேர்ந்தது. கடும் திரைக்கதை வேலைகள்தான் காரணம்.

திரைக்கதை என்பது எழுத்தாளனும் ஆடியன்ஸும் ஆடும் ஆட்டம். இதில் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் இருவருமே பரஸ்பரம் ஒருவரையொருவர் மதித்து, புரிந்துகொண்டு செயல்பட்டால்தான் ஆட்டம் பிரமாதப்படுத்தும். இல்லாவிட்டால், ஆடியன்ஸ் முட்டாள் என்று எழுதுபவன் நினைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு ஆடியன்ஸை அவமானப்படுத்துவதுதான் நடக்கும். தமிழில் பல படங்கள் இப்படிப்பட்டவையே. ஆடியன்ஸுக்கும் சிந்திக்கத் தெரியும்; அவர்களுக்கு உண்டான மதிப்பை அளிக்கலாம் என்று புரிந்துகொண்டு படமெடுக்கும் இயக்குநர்கள் சொற்பம். அப்படி ஆடியன்ஸைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்டுள்ள ஒரு படம்தான் மாநகரம் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

படத்தின் துவக்கத்திலேயே, முதல் காட்சியில் இருந்தே கதை துவங்கிவிடுகிறது. கதையில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரங்கள் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்துவிடுகிறோம். அங்கிருந்து, இவர்களுக்குள் நிகழும் சிக்கல்களால் கதை நகர்ந்து, முடிவை எட்டுகிறது. இந்த முதல் காட்சியில், அனைவரும் ஒரே டாஸ்மாக்கில் சந்திப்பது மட்டுமே எனக்கு உறுத்தலாக இருந்தது.  காரணம், ஒன்றிரண்டு தற்செயல்கள் என்பது மன்னிக்கப்படலாம். ஆனால் அத்தனை பேரும் எந்தவிதமான முன் காரணமுமே இல்லாமல் தடால் என்று ஒரு இடத்தில் இருப்பது – அங்கிருந்து பிரச்னை வெடிப்பது என்பது மிகமிகத் தற்செயல். நம்புவதற்கு மிகவும் கடினமானது.  இதைப்போலவே ஒரு காட்சி சூது கவ்வும் படத்தில் உண்டு. தாஸை மூவரும் சந்திக்கும் காட்சி. ஆனால் இது தற்செயலாக இருக்காது. காரணம் அவர்கள் அனைவருக்குமே அங்கு வரக்கூடிய காரணங்கள் முன்கூட்டியே தெளிவாக இருக்கும்.

மாநகரம் திரைப்படத்தின் பெரிய பிரச்னை இதுதான். எந்தக் காட்சியை எடுத்துக்கொண்டாலும், இவர்களுக்குள்ளேயேதான் கதை நகர்கிறது. யார் எங்கே சென்றாலும், அந்த இடத்துக்குப் பிற கதாபாத்திரங்களும் ஜாலியாக, கச்சிதமாக வந்துவிடுகிறார்கள். எனவே, எந்தக் காட்சி வந்தாலும், அங்கே என்ன நடக்கப்போகிறது என்று எளிதாக யூகித்துவிடமுடிகிறது. இது ஒன்றுதான் படத்தின் பிரச்னை.

ஆனால் இந்தப் பிரச்னையும் முதலில் சில நிமிடங்களுக்கு மட்டும்தான்.  காரணம் திரைக்கதை. டாஸ்மாக் காட்சி முடிந்ததுமே படத்தில் நம்மால் ஒன்றிவிடமுடிகிறது. என்னதான் எல்லாக் காட்சிகளிலும் தற்செயல் சம்பவங்கள் நிகழ்ந்து,  பிற கதாபாத்திரங்கள் டாண் என்று வந்து நின்றுவிட்டாலும், படத்தை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் முழுதாக ரசித்துப் பார்க்க முடிகிறது. அதுதான் மாநகரத்தின் வெற்றி. இப்படி ஒரு தமிழ்ப்படத்தை முற்றிலுமாக ரசித்தது சூது கவ்வும் படத்தில்தான். அதற்கு முன்னர் ஆரண்யகாண்டம்.

படத்தின் மிகப்பெரிய பலம், ராம்தாஸ். ராம்தாஸ் என்றால் யாருக்குமே புரியாமல், முனீஸ்காந்த் என்றால்தான் அனைவருக்கும் புரியும் அளவு முண்டாசுப்பட்டியில் பிரமாதப்படுத்தியவர். இவரது கதாபாத்திரத்தில் இருக்கும் எளிமையும், அதற்கு நேர் எதிரான அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அட்டகாசம். ராம்தாஸ் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் ஆடியன்ஸ் பிரம்மாதமான வரவேற்பு கொடுத்ததைக் காண முடிந்தது. வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். எனக்குமே மிகவும் பிடித்தது. க்ளைமேக்ஸ் காட்சியில் சிறுவனின் தலையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு earphoneல் போலீஸிடம் கேட்டுக்கேட்டு செயல்படும் காட்சி தமிழுக்குப் புதியது. அவசியம் அனைவருக்கும் பிடிக்கக்கூடியது. Black Humor.

ராம்தாஸின் கதாபாத்திரத்துக்கு அடுத்தபடியாக, சந்தீப் கிஷன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். இவர் அறிமுகம் ஆகும்போது, இது ஹீரோவா இல்லை ரவுடியா என்று யோசித்தேன். காரணம் ஆஸிட் அடிக்கிறார். முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார். ஆனாலும் சற்று நேரத்துக்குப் பின் இவரது கதாபாத்திரம் இயல்பானதாக மாறிவிட்டது. எனக்குப் படத்தில் ஸ்ரீயின் கதாபாத்திரத்தை விட சந்தீப்பின் கதாபாத்திரம்தான் பிடித்தது. இவர்தான் படத்தின் active ஹீரோ. இவரால்தான் பல காட்சிகள் நகர்கின்றன. ஸ்ரீயும் நன்றாக நடித்திருக்கிறார்தான். ஆனால் அவர் எப்போதுமே react மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறார். சார்லியும் அப்படித்தான். சார்லியும் ஸ்ரீயும் படத்தின் உணர்வுபூர்வமான தருணங்களுக்குச் சொந்தக்காரர்கள். இருவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

ஆனால், ஒரு சிறிய விஷயத்தை மறக்க முடியவில்லை. ஆரண்யகாண்டத்தில் வரும் காளை கதாபாத்திரம் நினைவிருக்கிறது அல்லவா? அந்தக் கதாபாத்திரம் அப்படத்தின் உணர்ச்சிபூர்வமான தருணங்களை நமக்கு வழங்கியது. அதனால் அப்படமும் முழுமையான படமாக மாறியது. ஆனால் மாநகரத்தில் அப்படத்தை முழுமையானதொரு அனுபவமாக மாற்றக்கூடிய விஷயங்கள் சற்றே குறைவாக இருந்தன. ஏனெனில், படத்தில் வரும் பல கதாபாத்திரங்களும் துண்டான மனிதர்கள்தான். அவர்களுக்கு எந்தவிதமான பின்னணித் தகவல்களும் படத்தில் இல்லை. இதுபோன்ற பல த்ரில்லர்களும் அப்படித்தான் இருக்கும். சூது கவ்வுமில் எந்தக் கதாபாத்திரத்தின் பின்னணி நமக்குத் தெரிந்தது? ஆனால் நாம் சொல்ல வருவது, ஆரண்யகாண்டத்தில் காளை, சூது கவ்வுமில் தாஸ் போன்ற கதாபாத்திரங்கள் வழங்கிய உணர்வுபூர்வமான தருணங்களை. மாநகரத்தில் சார்லிக்கு ஒரு பின்னணி உண்டு. நோய்வாய்ப்பட்டிருக்கும் மகன். ஆனால் அது படத்தில் ஒரு செய்தியாக மட்டும்தான் வருகிறது. அதனால் நேரும் உணர்ச்சிகள் ஆடியன்ஸின் மனதுக்குக் கடத்தப்படுவதில்லை. அதேபோல், ஸ்ரீயும் சார்லியும் இரண்டாம் பாதியில் நீண்டநேரம் எதுவும் செய்யாமலேயே சுற்றிக்கொண்டிருப்பது போலவே தோன்றிக்கொண்டிருந்தது. இதனால், படம் முழுதும் விறுவிறுப்பாகச் சென்றாலும் கூட, படம் முடிந்து வருகையில் ஒருசில காட்சிகள் மட்டுமே மனதில் தங்குகின்றன.

எல்லாக் கதாபாத்திரங்களும் எல்லாக் காட்சிகளிலும் எல்லா இடங்களிலும் இருப்பது – இவர்களை எப்போதுபார்த்தாலும் இணைத்துக்கொண்டே இருக்கும் தற்செயல் சம்பவங்கள் – இதுமட்டும்தான் படத்தின் பிரச்னை. ஆனால், நான் சொன்னபடி, ஆடியன்ஸுக்கு இது ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை என்பது படம் பார்க்கையில் உணரமுடிந்த விஷயம். மாநகரம் போன்ற வேகமான படங்கள் அவசியம் தமிழுக்குத் தேவை. நான் முதலிலேயே சொன்னபடி, இஷ்டத்துக்குத் தான்தோன்றித்தனமாக, ஆடியன்ஸ் முட்டாள்கள் என்று நினைத்து டுபாக்கூர் காட்சிகளுடன்  போலியாக எடுக்கப்படும் படங்களே ஓடும்போது, மாநகரத்தை அவசியம் அனைவரும் பார்க்கவேண்டும் என்றே நினைக்கிறேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  Comments

3 Comments

  1. Aksayan

    நல்ல விமர்சனம்
    படத்தை இன்னும் பார்க்கவில்லை. நேரம் கிடைத்தால் பார்ப்பேன்

    Reply
  2. சரியான விமர்சனம். அந்த தற்செயல்தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. என்னால் படத்தை ஒன்றி பார்க்க முடியவில்லை.சிறந்த, அலுப்பு தட்டாத திரைக்கதை இருப்பினும் என்னால் ஒன்றி பார்க்க முடியவில்லை. படத்தில் எனக்கு பல சந்தேகங்கள் உண்டு. உங்களுக்கு நேரம் இருந்தால் விளக்கவும்.
    இன்னும் எத்தனை காலம்தான் இந்த நடிகைகள் சும்மா வெட்டியாக திரியும் பையனையே காதலித்து கொண்டு இருக்க போகின்றனர்.(அதனாலேயே இந்த படம் எதார்த்தத்தை விட்டு வெகு தொலைவுக்கு சென்று விட்டதாக உணர்ந்தேன்.)
    ஹீரோ ஓடும் பேருந்தில் ஒருவனை தண்டிக்கும் காட்சி நடைமுறையில் சாத்தியமா….(??!!)..மற்றும் ஏன் டைரக்டர் அவரை ஒரு விளிம்பு நிலை மனிதனாக காட்சிப்படுத்தினர். (எனக்கு தெரிந்து ஆசிட் அடித்த வழக்குகளில் கைதானது நன்கு படித்த இளைஞர்கள் தான் )
    சார்லி அடி வாங்கும் போது வராத கோபம் ஒரு வார்த்தை (Strenght காட்டுறியா ) சொன்னதும் கோபம் வந்து அந்த இருவரையும் அடித்து உதைப்பது. சத்தியமாக நம்ப முடியவில்லை. இன்னும் எதனை காலம் தான் இதை போன்ற காட்சிக பார்த்து கொண்டு இருப்பது.
    மற்ற காட்சிகள் அனைத்திலும் சொல்லி வைத்தார் pol பிற கதாபாத்திரங்கள் டாண் என்று வந்து நின்று விடுகிறார்கள்.
    சார்லி, ஸ்ரீ, ராமதாஸ் கதாபாத்திரங்கள் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் வரும் காட்சிகள் ரசிக்க முடிந்தது.

    இந்த படத்திற்கு பதில் “குற்றம் 23 ” படத்தை ரெகமண்ட் செய்கிறேன். நேரம் இருந்தால் பார்க்கவும். படத்தின் இரண்டாம் பகுதில் சில குறைகள் இருந்தாலும் படம் அட்டகாசம். கிரிம் திரில்லர்.
    அணைத்து வசனங்களும் சூப்பர். சாதாரண உரையாடலிலே காட்சிகல் நகர்கிறது. அனைவரும் இயல்பான நடிப்பையே வழங்கி இருக்கின்றனர். காட்சி பதிவு மற்றும் பின்னணி இசை அபாரமாக இருந்தது. (குறிப்பாக சர்ச்சில் தடயம் கண்டு பிடிக்கும் போது புறாக்கள் பறக்கும் சத்தம்)
    கண்டிப்பாக “மாநகரம்” படத்தை விட “குற்றம் 23 ” உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். நேரம் இருந்தால் பார்க்கவும். இந்த படத்தை பற்றிய உங்களின் பார்வையை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    Reply
    • Dharma

      @Vinoth //சார்லி அடி வாங்கும் போது வராத கோபம் ஒரு வார்த்தை (Strenght காட்டுறியா ) சொன்னதும் கோபம் வந்து அந்த இருவரையும் அடித்து உதைப்பது. சத்தியமாக நம்ப முடியவில்லை. இன்னும் எதனை காலம் தான் இதை போன்ற காட்சிக பார்த்து கொண்டு இருப்பது.// – Reason is “Strenght காட்டுறியா” is the dilaloge which same guy spoke at Sri miss his certificate (who stolen). Before that dialoge he thought some random rowdy. Bcoz of that villian only Sri life changed, so he got angry.

      Reply

Join the conversation