Men In Black 3 – 3D (2012)
பிரம்மாண்டமான க்ரைஸ்லர் கட்டிடத்தின் உச்சியில் நிற்கிறான் ஏஜெண்ட் ஜே. அவனது கையில் மிகச்சிறிய கருவி ஒன்று. அதில் ஏதேதோ எண்கள் தெரிகின்றன. பலத்த காற்று. அவனுக்குப் பின்னால் ப்ரின்ஸ் என்பவன் நின்றுகொண்டிருக்கிறான்.
’குதி’ என்கிறான் ப்ரின்ஸ்.
ஜேவின் முகம் முழுக்கவே பயம். இங்கேயிருந்து குதிக்கவேண்டும் என்பதை அவனால் இன்னமும் நம்ப முடிவதில்லை.
‘இந்தக் கருவியில் தேதியை செட் செய்யவேண்டும்; அதன்பின்னர் குதிக்கவேண்டும். அப்போது இந்தக் கருவியில் பளிச்சிடும் நீல ஒளியை அழுத்தவேண்டும்; அதன்பின் காலம் மாறிக்கொண்டே வரும்; பூமியைத் தொடுவதற்கு இரண்டு அடிகள் முன்னால் முற்றிலுமாக காலம் மாறிவிடும்; அதன்பின் மறுபடியும் கீழேயிருந்து மேலே இப்போது நிற்கும் இடத்துக்கே வந்துவிடுவேன்; வேறு ஒரு காலத்தில். இதுதானே இப்போது நடக்கப்போகிறது?’ என்று பயமும் அதிருப்தியும் கலந்ததொரு குரலில் ப்ரின்ஸைக் கேட்கிறான் ஜே.
’அப்படித்தான் என்று நினைக்கிறேன். குதித்துத்தான் பாரேன். அதன்பின் என்ன ஆகிறது என்று தெரிந்துவிடும்; திரும்பிவந்தபின் இதுதான் சரியான முறையா என்று என்னிடம் வந்து சொல்’ என்று சிரிக்கிறான் ப்ரின்ஸ்.
ஜேவுக்கு வேறு வழியே இல்லை. 1969க்கு அவன் சென்றே ஆகவேண்டும். இல்லையேல் தற்போது அமெரிக்காவை சூழ்ந்துள்ள ஏலியன் கப்பல்கள் அமெரிக்காவை முற்றிலும் அழித்துவிடும். அதைவிடவும் முக்கியம் என்னவெனில், நாற்பது வருடங்கள் முன்னர் இறந்துவிட்ட ஏஜெண்ட் கேவின் கொலையைத் தடுக்கவேண்டும்.
கண்களை மூடிக்கொள்கிறான் ஜே.
குதித்துவிடுகிறான். பரபரப்புடன் அந்தக் கருவியின் நீலப் பொத்தானை அழுத்துகிறான்.
மிகப்பெரிய டைனோஸார் ஒன்று இவன் விழும்போது வாயை அகலப் பிளக்கிறது.
’ஆஆஆஆஆஆஆஆஆஆ’
அதே காஸ்ட். அதே இயக்குநர். அதே காமெடி. அதே ஃபீல். இதுவரை வந்த முந்தைய இரண்டு படங்கள் அளித்த அதே ஃபீலிங்கையே இந்தப் படமும் அளிக்கிறது.
போரிஸ் தி அனிமல் என்ற கொடூரமான ஏலியன், நிலாவில் உள்ள சிறை ஒன்றில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறான். இவன் உண்மையில் ’பாக்லொடைட்’ என்று அழைக்கப்படும் ஏலியன் வகையைச் சேர்ந்தவன். நாற்பது வருடங்களாக அந்தச் சிறையில் இருக்கும் போரிஸ், ஒரு நாள் தப்பிக்கிறான். அவனது மனதில் உள்ள ஒரே எண்ணம் ; அவனைப் பிடித்து அவனது கையைப் பிய்த்து சிறையில் அடைத்த ஏஜெண்ட் கேவைக் கொல்லவேண்டும்.
எனவே, ப்ரின்ஸ் என்ற இன்னொரு ஏலியனைப் பிடித்து, அவன் வசம் இருக்கும் கால எந்திரத்தின் மூலம் போரிஸ் பிடிபட்ட 1969 ஜூலை 16ம் தேதிக்கு மீண்டும் செல்கிறான் போரிஸ்.
நிகழ்காலம். போரிஸ் தப்பித்த விஷயம் ஏஜெண்ட் கேவுக்குத் தெரிகிறது. அவன் எப்படியும் தன்னைத்தேடிவருவான் என்று அவனுக்காகக் காத்திருக்கும் கே, மெல்ல காற்றில் கரைந்துவிடுகிறார். அவரது வீடும் மாறிவிடுகிறது. அங்கே ஒரு குடும்பம் வசிப்பதைப் பார்க்கிறோம்.
போரிஸ் தப்பித்ததை அறியும் ஏஜெண்ட் ஜே, மறுநாள் தலைமை அலுவலகத்துக்கு வந்து, போரிஸ் பிடிபட்ட பழைய செய்திகளைப் படிக்கிறான். ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவனால் டேட்டாபேஸில் உட்புக முடிவதில்லை. இவனுக்கு அதிகாரம் இல்லை. ஆகவே கோபமடைகிறான் ஜே. அவனது தலைமையதிகாரியான ஏஜெண்ட் ஓ என்ற பெண்ணிடம் இதைப்பற்றிப் பேசுகிறான். ஆனால், யாருக்குமே கே என்ற ஏஜெண்ட்டைப் பற்றித் தெரிவதில்லை. அப்படியொருவர் 40 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார் என்ற தகவலே ஜேவுக்குக் கிடைக்கிறது. நேற்றுவரை தன்னுடன் இருந்த கே, எப்படி 40 ஆண்டுகளுக்கு முன்னர் இறக்க முடியும்?
அப்போதுதான் போரிஸ் காலத்தில் பின்னோக்கிச் சென்று, கேவைக் கொன்றுவிட்டது ஜேவுக்குப் புரிகிறது. அதனால்தான் இப்போதைய கேவும் மறைந்துவிடுகிறார். இதுமட்டுமல்லாமல், 40 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் கே அமைத்ததால்தான் பிற ஏலியன் கிரகங்களால் எந்த ஆபத்தும் இதுவரை பூமிக்கு இல்லை. ஆனால் கேவை போரிஸ் கொன்றுவிட்டதால், இப்போது அப்படிப்பட்ட பாதுகாப்பு வளையம் எதுவும் இல்லாமல், பூமியை பாக்லோடைட் ஏலியன்கள் சூழ்ந்துகொண்டுவிடுகிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தாக்குதல் ஆரம்பிக்கப்போகிறது.
ப்ரின்ஸைத் தேடிச்செல்கிறான் ஜே. அவனிடம் இருக்கும் கால யந்திரத்தை வைத்து, கே இறந்த தேதியான 1969 ஜூலை 16ம் தேதிக்கு முந்தைய நாளுக்குச் செல்ல முடிவுசெய்கிறான்.
ஆனால் அந்த இயந்திரம் இயங்கவேண்டுமென்றால், உயரத்திலிருந்து குதிக்கவேண்டும். அப்போது உருவாகும் மொமெண்டத்தை வைத்துதான் அந்த இயந்திரம் செயல்படும். இதனால், க்ரைஸ்லர் கட்டிடத்தின் உச்சிக்குச் செல்கிறான் ஜே.
முதல் பாராவைப் படிக்கவும்.
1969. அங்கே போரிஸ் முதன்முதலில் தென்பட்ட இடத்துக்கு விரைகிறான் ஜே. அப்போது போரிஸை சுடமுயலும் அந்த வினாடியில், இவனது தலையில் ஒரு துப்பாக்கி பதிகிறது. அது, 29 வயதே ஆன ஏஜெண்ட் கே (நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ஜாஷ் ப்ராலின். அட்டகாசமாக நடித்திருக்கிறார். இவருக்கும் டாம்மி லீ ஜோன்ஸுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை). ஜேவை ஏதோ உளவாளி என்று நினைத்து, பிரம்மாண்டமான ‘ந்யூரலைஸர்’ கருவியினுள் நுழைக்கிறார் கே. ஜேவின் நினைவை முற்றிலுமாக அழிப்பதே கேவின் நோக்கம். ஆனால், வருங்காலத்திலிருந்து கேவைக் காப்பாற்றவே இங்கு வந்ததாக சொல்லும் ஜேவின் குரலைக் கேட்பதால், அந்தக் கருவியை நிறுத்தி, ஜேவை வெளிக்கொணர்கிறார் கே. கேவுக்கு எல்லாக் கதையையும் சொல்கிறான் ஜே.
இருவரும் சேர்ந்து போரிஸை என்ன செய்தார்கள் என்பதே படம். 1969ல் இருக்கும் போரிஸ் மட்டுமல்லாமல், 2012லிலிருந்து கால எந்திரத்தில் பின்னுக்குச் சென்றுள்ள போரிஸும் சேர்ந்துகொண்டு, இரண்டு வில்லன்களாக இருக்கின்றனர். இந்த இருவருக்கும் என்ன ஆகிறது?
இந்தப் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்கள்: வசனங்களே. திரைக்கதை எழுதியிருப்பது, ட்ராபிக் தண்டர், மடகாஸ்கர் 2 ஆகிய படங்களை எழுதியிருக்கும் ஈதன் கோஹன் ( கோயன் பிரதர்ஸின் ஈதன் கோயனுடன் இவரைப் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்). வாய்விட்டு சிரிக்கவைக்கும் பல வசனங்கள் இதில் உள்ளன.
அதேபோல், படத்தின் அடுத்த அட்ராக்ஷன், இளைய கேவாக நடித்திருக்கும் ஜாஷ் ப்ராலின். No Country for Old Men படத்தில் இவரது அட்டகாசமான நடிப்பை மறக்க முடியாது. அப்படிப்பட்டவர், மீசையை முழுதுமாக மழித்துவிட்டு, டாம்மி லீ ஜோன்ஸின் ஜெராக்ஸ் போலவே இப்படத்தில் உருவாகியிருக்கிறார். பேச்சு, முகபாவம், பாடி லாங்வேஜ் ஆகிய எல்லாவற்றிலும் அப்படியே டாம்மியை நகலெடுத்திருக்கிறார் ப்ராலின்!
இந்தப் படத்தில் க்ரிஃப்ஃபின் என்று ஒரு கேரக்டர் வருகிறது. அதுவும் ஒரு ஏலியன்தான். காலத்தில் முன்பின்னாக நடக்கப்போகும் பல விஷயங்களையும் ஒரே சமயத்தில் அறிந்துகொள்ளும் ஏலியன் இது. இந்தக் கேரக்டர் வரும்போது இதன் பேச்சைக் கவனியுங்கள்.
படத்தின் இறுதியில் ஸீரியஸ் செண்டிமெண்ட் காட்சி ஒன்று உண்டு. கே ஏன் நகைச்சுவை உணர்வே இல்லாமல் இடித்தபுளி போலவே இருக்கிறார் என்பதை உணர்த்தும் காட்சி அது.
கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் கழித்து நடிக்கவந்திருக்கும் வில்ஸ்மித்துக்கு இப்படம் ஒரு பூஸ்டர். அவரது கடைசிப்படம், Seven Pounds. இது 2009ல் வெளிவந்தது. அதன்பின் மென் இன் ப்ளாக் 3தான்.
இந்தப் படத்திலும், காட்சிகளை துல்லியமாக ரெண்டர் செய்யவே 3டி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. என்றாலும், வில் ஸ்மித் உயரத்தில் இருந்து குதிக்கும் ஸீக்வென்ஸ் 3டியில் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப்படம் அமெரிக்காவில் ஓடுவது சந்தேகம்தான். காரணம், இப்படம் வெளிவந்திருக்கும் காலகட்டம். இன்னமும் அவெஞ்சர்ஸ் சக்கைப்போடுபோட்டுக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரத்தில் ரிட்லி ஸ்காட்டின் Prometheus வெளிவருகிறது. அதன்பின் ஸ்பைடர்மேன். அதன்பின் டார்க் நைட் ரைஸஸ். இப்படியொரு காலகட்டத்தில் வெளிவந்திருக்கும் இப்படம், முதல் பாகத்தின் அளவு அட்டகாசமாக இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். வில் ஸ்மித்தும் டாம்மி லீ ஜோன்ஸும் படத்தில் பார்ப்பதற்கே வயதானவர்களாகத் தெரிகிறார்கள். கூடவே, வில் ஸ்மித் பேசும் வசனங்கள், என்னதான் நகைச்சுவையாக இருந்தாலும், வேறுவழியே இல்லாமல் உச்சரிப்பதைப் போலவே இருக்கின்றன. முந்தைய இரண்டு பாகங்களில் நம் பார்த்த துடிப்பான வில் ஸ்மித் இதில் இல்லை. பத்து வருடங்கள் கழித்து இந்தப் படம் வந்திருப்பதும் ஒரு காரணம். படத்தில் அனுபவித்து நடித்திருக்கும் ஒரே மனிதர், ஜாஷ் ப்ராலின்.
வில் ஸ்மித்துக்கு அடுத்து வர இருக்கும் படம், After Earth. மனோஜ் நைட் ஷ்யாமளனின் படம். 2013 ஜூனில் வெளியாகிறது. இதன்பின் Bad Boys 3, I Robot 2 ஆகிய படங்கள். அவரை நினைத்தால் எனக்குப் பாவமாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் ஹாலிவுட் வசூல் சரித்திரத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகர். இப்போது, அடுத்த 3-4 வருடங்களுக்கு, அவரது பெயரைச் சொல்லப்போகும் படம் ஒன்றுகூட இல்லை. போயும்போயும் ஷ்யாமளனின் பிடியில் சிக்கிக்கொண்டுவிட்டார். செத்தார் மனுஷன். எப்படி மாட்ரிக்ஸ் படத்தின் நியோ வேடத்தை, Wild Wild West படத்துக்காகத் தவறவிட்டு, அப்படம் ஃப்ளாப் ஆகியதோ அப்படி இனிமேல் அடுத்த மூன்று வருடங்களுக்கு அவரது பாக்கெட்டில் நிறைந்திருப்பது ஃப்ளாப் படங்களே.
Men in Black 3 படத்தின் ட்ரெய்லர் இங்கே.
படத்தைப் பார்க்கலாமா வேண்டாமா? எனக்குப் படம் பிடித்திருந்தது. போர் அடிக்கவில்லை. ஆனால் வசனங்கள் புரியவில்லை எனில் படம் அலுத்துவிடும். ஆகவே, தமிழில் இப்படத்தைப் பாருங்கள்.
நானும் பார்த்து விட்டேன்…நீங்கள் சொன்னது போல் வசனம் புரியாததால் கொட்டாவி தான் வந்தது…எப்படா படம் முடியும் என ஆகி விட்டது.
அதுக்குள்ளே பார்த்து விமர்சனமா ? படம் எப்படி இருந்தாலும் பார்க்கறது நம்ம கடமை …நாளைக்கு போலாம்னு இருக்கேன் தல …
This comment has been removed by the author.
தல விமர்சனம் கொஞ்சம் நீளம்…. ஆனா super..