
முண்டாசுப்பட்டி (2014) – Analysis
1980க்களின் துவக்கத்தில், சத்தியமங்கலத்தின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஃபோட்டோ எடுத்தால் உயிர் போய்விடும் என்ற கடும் மூடநம்பிக்கை நிலவுகிறது. அப்போது அங்கே சாகக்கிடக்கும் ஊர்த்தலைவரை ஃபோட்டோ எடுக்க வரும் இரண்டு ஃபோட்டோக்ராஃபர்கள், அந்த ஃபோட்டோ சரியாக எக்ஸ்போஸ் ஆகாததால் முனீஸ்காந்த் என்ற ஆளை இறந்த கோலத்தில் ஃபோட்டோ எடுத்து ஊரில் கொடுத்துவிடுகின்றனர். முனீஸ்காந்த்தும் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் குட்டு வெளிப்பட்டுவிடுகிறது. இதனால் ஊர்த் தண்டனைக்கு ஆளாகின்றனர். அந்த ஊரில்தான் ஃபோட்டோக்ராஃபர் கோபியின் மனம் கவர்ந்த பெண்ணும் இருக்கிறாள். கோபி அந்தப் பெண்ணை அடைய சில சிக்கல்கள் இருக்கின்றன.
இதற்கிடையே அந்த ஊரில் பல்லாண்டுகளுக்கு முன் விழுந்த விண்கல்லைத்தான் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். அந்த விண்கல்லில் அரிய கனிமங்கள் இருக்கின்றன. அதைத் திருடி இங்லீஷ்கார ஆள் ஒருவனுக்கு அளித்து எக்கச்சக்கமாக பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார் பக்கத்து ஊர் ஜமீன்.
இந்த இரண்டு கதைகளும் முட்டிக்கொண்டால் என்ன ஆகும்? அதுதான் ’நாளைய இயக்குநர்’ ராம் குமார் எழுதி இயக்கி, சி.வி.குமார் தயாரிப்பில் வந்திருக்கும் முண்டாசுப்பட்டி.
ஓகே. முண்டாசுப்பட்டியின் பாஸிடிவ்ஸ் என்னென்ன?
முதலில், படத்தின் தூண்களில் ஒருவராக வரும் காளி வெங்கட். அழகுமணி கேரக்டரில் படம் முழுக்க ஸ்கோர் செய்பவர் இவர்தான். படத்தின் நாயகனாக வரும் விஷ்ணுவுக்கு இதில் ஸ்கோப் மிகவும் கம்மி. அடித்தொண்டையில் இவர் பேசும் பல வசனங்கள் நிஜமாகவே புன்சிரிப்பை வரவழைக்கின்றன. அவரது கோவை accent அவரது கதாபாத்திரத்துக்கு இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்.
அடுத்ததாக, படத்தின் இன்னொரு தூண் – ராம்தாஸ். முனீஸ்காந்த் கதாபாத்திரம். அவர் அறிமுகமாகும் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரையிலும் முழுக்க முழுக்க இது ஒரு ராம்தாஸ் படம் என்று சொல்லும் அளவு பிரமாதமாக நடித்திருக்கிறார். பல ஷாட்களில் நடிகர் ஸ்ரீமன்னை நினைவுபடுத்துகிறார். பக்காவான பாடி லேங்வேஜ். கோடம்பாக்கத்தில் விடாமுயற்சியுடன் கிட்டத்தட்ட 17 வருடங்கள் காத்திருந்தவருக்கு இது ஒரு மெகா ஓப்பனிங். அவசியம் பல திரைப்படங்களில் பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் ராம்தாஸுக்காகக் காத்திருக்கின்றன. அவைகளை அவசியம் ஒரு கை பார்ப்பார் என்று எதிர்பார்க்கிறேன். முனீஸ்காந்த், ரஜினி & கமலை வைத்துப் பேசும் ஆரம்ப கட்ட வசனங்களை வைத்து இன்னும் பின்னால் ஏதேனும் நகைச்சுவை செய்திருக்கலாம் என்பது என் கருத்து.
படத்தின் மூன்றாவது தூண் – வசனம். குறிப்பாக அதுவும் காளி வெங்கட் மற்றும் ராம்தாஸ் பேசும் வசனங்கள். இவர்கள்தான் படத்தில் பெரும்பங்கு வருவதால் இவர்களின் உடல்மொழியோடு சேர்ந்த வசனங்கள் ஆங்காங்கே அவசியம் சிரிப்பை வரவழைக்கின்றன.
படத்தின் நான்காவது தூண் – இசை. குறிப்பாக ’ராசா மகராசா’ பாடலுக்கும் ’கில்லாடி ஒருத்தன்’ பாடலுக்கும் அவர் இசையமைத்திருக்கும் விதம். படத்தில் ஆங்காங்கே இவை வருவதால் கொஞ்ச நேரத்திலேயே இந்த இசை மனதில் தங்கிவிடுகிறது. ’காதல் கனவே’ பாடலும் இதேவிதம்தான். மிக மிக லேசாக சந்தோஷ் நாராயணனை நினைவூட்டும் இசை. ஆனால் அவசியம் அதில் ஷான் ரோல்டனின் தனித்துவம் தெரிகிறது.
இவை நான்கும்தான் என்னைப் படம் முழுதும் அமர வைத்தன. இந்தப் படத்தைப் பார்த்ததில் எனக்கு சில இன்புட்ஸ் கிடைத்தன. இப்போதெல்லாம் தமிழ் மக்களின் திரை ரசனை எப்படி இருக்கிறது என்ற என் கருத்துக்கு மேலும் இந்தப் பாயிண்ட்ஸ் வலு சேர்த்தன.
1. படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை முழுமையான பொழுதுபோக்கைத் தரவேண்டும். அது சீரியஸ் படமாக இருந்தாலும் சரி – லைட்டான படமாக இருந்தாலும் சரி. சீரியஸாக இருந்தால் ஆங்காங்கே நகைச்சுவை இருந்தே ஆகவேண்டும். லைட்டான படமாக இருந்தால் படம் முழுக்கவே நகைச்சுவை இருக்கவேண்டும்.
2. படத்துக்கு நாயகன் முக்கியமில்லை. நாயகனுடன் யார் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். அந்தக் கதாபாத்திரத்துக்கு நல்ல நகைச்சுவை வசனங்கள் இருக்கவேண்டும்.
3. படத்தில் டூயட் அவசியமில்லை. பாடல்களே தனியாக இல்லாமல், மாண்டேஜ்களின் பின்னணியில் வந்தால் போதுமானது.
4. வில்லன் என்பவன் படத்தில் அவ்வப்போது வந்துபோனால் போதும். கிட்டத்தட்ட கௌரவ வேடம்.
5. படத்துக்குக் கதை என்பது அவசியம் இல்லை. சில ஜாலியான காட்சிகள் எழுதப்பட்டிருந்தாலே தமிழ்நாட்டு ஆடியன்ஸ் ரசிக்கிறார்கள். படத்தைப் பற்றிய பாஸிடிவ் இமேஜையும் பரப்புகிறார்கள்.
இவைகள் எல்லாம் முண்டாசுப்பட்டியில் இருக்கின்றன. இதனால் ஆடியன்ஸுக்கும் படம் பிடிக்கிறது. நான் படம் பார்த்தது பெங்களூரின் முகுந்தா திரையரங்கு. இங்கே பாதி தியேட்டர்தான் நிரம்பியிருந்தது. ஆனால் வந்திருந்த ஆடியன்ஸ் அத்தனை பேருக்கும் படம் பிடித்தது என்பதை என்னால் உணர முடிந்தது. பல காட்சிகள் + வசனங்கள் கைதட்டலும் விசிலும் வாங்கின. படம் முடிந்து வெளியே வந்த ஆடியன்ஸ் மிகவும் திருப்தியாகக் கிளம்பியதையும் கவனித்தேன். இதனாலேயே முண்டாசுப்பட்டி ஒரு ஹிட் என்று தோன்றுகிறது.
சரி. இப்போது முண்டாசுப்பட்டியின் நெகட்டிவ்ஸ் என்னென்ன?
முதலாவது பெரிய நெகட்டிவ் பாயிண்ட் – படத்தின் கதாநாயகன் விஷ்ணுவுக்கு இந்தப் படத்தில் ஸ்கோப்பே இல்லை. கதாநாயகியை லவ் செய்யவும், ஸ்டைலாக அங்குமிங்கும் நடமாடவும் ’நாயகன்’ என்று ஒரு கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காகவே விஷ்ணுவின் பாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பது போன்ற ஃபீல். இதைத்தாண்டி அவரது கதாபாத்திரம் எதையும் செய்துவிடவில்லை. பல காட்சிகளில் அவரது நடிப்பும் செயற்கையாக இருந்ததை உணர்ந்தேன் (உதாரணம்: ஆரம்பத்தில் பள்ளியில் உள்ளே கேமரா ஸ்டாண்டை வைத்துவிட்டதை அறிந்து தலையில் அடித்துக்கொள்ளும் காட்சியில் அவரது நடிப்பைக் கவனியுங்கள்). இதனாலேயே அந்தக் காட்சிகளின் வலு குறைகிறது. என்னதான் ஜாலியான படமாக இருந்தாலும் நடிப்பு என்று வரும்போது அது சரியாக இருக்கவேண்டும்தானே?
அடுத்து, படத்தின் பல கதாபாத்திரங்களும் (காளி வெங்கட் & ராம்தாஸ் தவிர்த்து) சரியாக நடிக்கவில்லை. முண்டாசுப்பட்டி கிராமத்தின் மாந்தர்களாக வரும் அவர்கள் பேசும்போது அவர்களின் உடல்மொழி மிகவும் செயற்கையாக இருப்பது தெரிகிறது. விஷ்ணுவுக்கு நேர்ந்த அதே பிரச்னை. முகத்தில் உணர்ச்சிகளும் இல்லை. படம் பார்க்கையில் இவர்களை கவனித்துப் பாருங்கள்.
இதையெல்லாம் மீறிய இன்னொரு பிரச்னை, படத்தின் ஆரம்பத்தில் இருந்து விஷ்ணுவும் காளி வெங்கட்டும் முண்டாசுப்பட்டிக்குக் கிளம்புவது வரை மிகவும் மெதுவாகவும் இருக்கிறது படம். வலுவாக, கதாபாத்திரங்களை எஸ்டாப்ளிஷ் செய்யும் காட்சிகள் இல்லை. ஜாலியாக ஹாலிவுட் ஸ்டூடியோவில் விஷ்ணுவையும் காளி வெங்கட்டையும் அறிமுகப்படுத்திவிட்டு அப்படியே அடுத்த காட்சிகளுக்குச் சென்றுவிடுகிறோம். இவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள்? இவர்களின் பின்னணி என்ன? எந்த விபரமும் நமக்குக் கிடைப்பதில்லை. படத்தின் க்ளைமேக்ஸுக்கு அருகேதான் விஷ்ணுவின் கதாபாத்திரம், தனக்கு யாருமில்லை என்று கதாநாயகியிடம் சொல்கிறது. ஏன் இப்படி துண்டு துண்டான மனிதர்களாக (பின்னணியே இல்லாத மனிதர்கள்) இப்போதைய படங்களில் கதாபாத்திரங்கள் வருகிறார்கள் என்பது தெரியவில்லை. ஹாலிவுட்டிலும் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உண்டு. க்வெண்டின் டாரண்டினோ & கை ரிட்சி படங்களில் அத்தனை ஹீரோக்களும் இப்படிப்பட்டவர்களே. ஆனால் அவர்களுக்கு அட்டகாசமான காட்சிகளை அமைத்து அவர்களின் பின்னணி முழுவதும் நமக்குப் புரியும்படி அந்த இரண்டு இயக்குநர்களும் செய்துவிடுவார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திர வடிவமைப்பு இதில் இல்லை. வசனங்களை வைத்தே துண்டு துண்டான இந்தக் கதாபாத்திரங்களை எல்லாச் சமயங்களிலும் கரையேற்றிவிட முடியாதுதானே?
இதன்பின்னர் முண்டாசுப்பட்டியில் நடக்கும் காட்சிகள் வருகின்றன. தலைவரை ஃபோட்டோ எடுக்கிறார்கள். ஃபோட்டோ சரியாக எக்ஸ்போஸ் ஆகவில்லை. எனவே முனீஸ்காந்த்தைப் பிடித்து அவருக்கு இறந்தவரின் காஸ்ட்யூம் போட்டு ஃபோட்டோ எடுக்கிறார்கள். கிராமத்துக்குச் சென்று ஃபோட்டோவைத் தருகிறார்கள். முனீஸ்காந்த்துக்கு இது தெரிகிறது. இடைவேளை. இதுவரையில், இந்தக் காட்சிகளின் நகைச்சுவையால் அவை வேகமாகச் சென்றுவிடுகின்றன. ஆரம்பத்தில் இருந்து முண்டாசுப்பட்டிக்குள் இருவரும் வருவதுவரையிலான மெதுவான ஓட்டம் இப்போது இவைகளால் சரியாகி, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று கவனிக்க ஆரம்பிக்கிறோம்.
பின்னர் இடைவேளைக்குப் பின் கிணறு வெட்டுகிறார்கள் இருவரும். க்ளைமேக்ஸ் வரை அதையேதான் செய்துகொண்டிருக்கிறார்கள். நடுவில் லஞ்ச் ப்ரேக் விட்டதுபோல் கதாநாயகியைக் கலாய்ப்பது, டூயட், திருமணத்தை நிறுத்த ப்ளான் போடுவது போன்றதெல்லாம் நடக்கிறது. ஆனால் இடைவேளை வரை வேகமாக வந்த கதை, இப்போது க்ளைமேக்ஸ் வரை மறுபடி தொய்வடைகிறது. குறுக்கே வரும் ஒரு சில காட்சிகள் மட்டும் நகைச்சுவையாக நகர்கின்றன (சாமியாரை இரவில் சந்திக்கும் காட்சி – இதில்கூட ஒரு பிரச்னை இருக்கிறது. அதை அடுத்துப் பார்ப்போம், ஜமீந்தார் அடியாட்கள், முனீஸ்காந்த் அடிவாங்கும் காட்சி போன்றவை). பின்னர் க்ளைமேக்ஸில் வேகம் பிடித்து உடனே முடிந்துவிடுகிறது படம்.
இயக்குநர் ராமின் பேட்டியை தினகரன் வெள்ளிமலரில் சில வாரங்களுக்கு முன்னர் படித்தேன். சில மூடநம்பிக்கைகளைப் பற்றிய காட்சிகள் உள்ளதாகச் சொல்லியிருந்தார். அதேபோல் இதில் கண்மூடித்தனமான பக்தி, கடவுளின் பெயரால் செய்யும் ஃப்ராடு வேலைகள், பள்ளிக் கல்வியின் நன்மை ஆகிய விஷயங்களைப் பற்றிய மெஸேஜ்கள் மிக லைட்டாக வந்து செல்கின்றன. ஆனால் அதேசமயம் சாமியாரை இரவில் சந்திக்கும் காட்சியில் ஏன் அடுத்தவரின் மனைவியை அவ்வளவு கேவலமாக சித்தரிக்கும் காட்சி? அந்தக் காட்சியின் சித்தரிப்பு, இத்தனை மெஸேஜ்களைச் சொன்னதையும் ஒரே கணத்தில் வாஷ் அவுட் செய்துவிடுகிறது. மிகவும் cheap காமெடி இது. ஆனால் வழக்கப்படி குத்துப்பாட்டுகளின் ப்ளேலிஸ்ட் போல தொலைக்காட்சியில் வரும் அத்தனை டபிள் எக்ஸ் நிகழ்ச்சிகள் + பாடல்களையும் குடும்பத்துடன் பார்த்துக் குதூகலிக்கும் பொதுவான ஆடியன்ஸ் இந்தக் காட்சியையும் ரசித்துத் தான் பார்த்தனர். இருந்தாலும் ரசிக்கிறார்கள் என்பதால் இஷ்டத்துக்குக் காட்சிகளை வைத்துவிட முடியாதல்லவா?
இறுதியாக, இந்தப் படம் அவசியம் ஹிட்தான். படம் பார்க்கும் ஆடியன்ஸில் நூற்றுக்கு 70% ஆடியன்ஸுக்கு அவசியம் முதலிலிருந்து கடைசிவரை பிடிக்கும். ஆனால் என்னதான் ஜாலியான படமாக இருந்தாலும், இந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்திருந்தால் முண்டாசுப்பட்டி தரமான, வேகமான, இயல்பான ப்ளாக்பஸ்டர் ஆகியிருக்கும் என்பது என் கருத்து. 1980க்களின் ஆரம்பகட்டம் என்பது ஒரு பயங்கர அட்டகாசமான, நாஸ்டால்ஜிக்கான கதைக்களம். அதிலும் ஆங்காங்கே நாஸ்டால்ஜியாவைக் கிளப்பிவிட்டு ஒரு அதிரடி ஆட்டத்தைக் காட்டியிருக்கலாம். ஏன் அவை இல்லை என்பது புரியவில்லை.
ஹிட் படம் ஒன்றைக் கொடுப்பதில் வெற்றியடைந்திருந்தாலும், இயக்குநர் ராம் குமாரின் அடுத்த படம் எப்படி இருக்கிறது என்பதற்காகக் காத்திருக்கிறேன்.
பி.கு – சிவி குமாரின் பிற படங்களுக்கு நான் எழுதியிருக்கும் விமர்சனங்களை இங்கே படிக்கலாம்
அந்தக் குறும்படத்தையே எத்தனையோ தரம் திருப்பி பார்த்திருக்கிறேன். படத்தை பார்த்து ஒப்பிடாமல் விடுவேனா…
எனக்கு இது விமர்சனப்பதிவாகத் தெரியவில்லை. திரைக்கதை தொடர்பான தொடரின் ஒரு கிளையாகத் தான் தெரிகிறது. படம் பார்த்தபிறகு தான் மிகுதி விடயங்கள் முடிவெடுக்கலாம்..
அன்புச் சகோதரன்…
ம.தி.சுதா
http://WWW.mathisutha.COM
பொழுதுபோக்கு – “கொ”ழுதுபோக்காய்டுசே தல
I have changed it boss 🙂
Rajesh.. Have you seen ‘The Raid 2’? I have never seen such a hyper-violent film, but it’s brilliantly taken. You may like it.
Do they have this in English?
கருத்து சூப்பர்…
“நல்ல திறமையுள்ள சில இயக்குனர்கள் ஏன் இவளவு குறைகளுடன் படத்தை அமைகின்றனர் என்றே தெரியவில்லை .ஒரு வேலை ,படம் எடுப்ப வர்களுக்கு தான் தெரியுமோ அவர்களுடைய பிரச்சனை . ஏன் குறைகள் இல்லாமல் படமே எடுக்க முடியாத என்ற, கேள்விகள் மனதில் வருகின்றன“ – லோகநாதன்
“ரொம்ப சிம்பிள் பாஸ். கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கும் மேல உக்காந்து ஸ்கிரிப்ட் வொர்க் பண்ணிட்டு இருக்கும்போது அதுக்குள்ள இயக்குனர்கள் முழுசா இறங்கிடுவாங்க. அப்போ அதுல இருக்கும் நிறை குறைகள் முழுசா அவங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதுனாலதான் சில பிரச்னைகள் படங்கள்ல வந்துருது. இந்தப் பிரச்னைகளை முழுசா எடுத்துச்சொல்லி சஜஷன்ஸ் தர்றதுதான் என்னைப்போன்ற ஸ்கிரிப்ட் கன்சல்டன்ட்டின் வேலை” -ராஜேஸ்.
இதுல்ல என்ன பிரச்சனையின…இப்ப வர்ர இயக்குநர்கள் முதல்ல ஸ்கிரிப்ட்ட முடிச்சிடுறாங்க… அப்புறம் நம்ம ராஜேஸ்… நலன்.. (நான்) போன்றோர்களிடம் ஸ்ரிப்ட்டைக் கொடுத்து நல்லா இருக்கா… என்கிறார்கள்… நாம் சில கரக்ஸன் சொன்னதுக்குப் பிறகு…ஒண்ணு நம்மளை சரி பண்ணச் சொல்வார்கள்… நாமளும் நைட் பகலா (பொண்ணாட்டியிட்ட திட்டுவாங்கி) கரக்சன் பண்ணித் தந்தால்…. அதை மருந்துக்கு கூட பயன்படுத்தாமல்… அவுங்க ஆரம்பத்துல எப்படி குடுத்ததாங்களே அதவே படமா எடுப்பாங்க……. அப்புறம் படம் வந்ததுக்கு பிறகு நாம சொன்னது எல்லாத்தையும் விகடன்… ராஜேஸ் …மாதிரி ஆளுக கழுவி ஊத்துனதுக்கு அப்புறம் நம்மள பாத்து ஒரு சிரிப்பு சிாிப்பானுக பாருங்க……
சார், ஒரு சின்ன கருத்து. தப்பா நெனச்சுக்காதீங்க. நீங்க இப்போ திரைக்கதைகளை அனலைஸ் பண்ணி தொடர் எழுதிட்டிருக்கறதனாலே இந்தமாதிரி ரூட்டீன் விமர்சனங்களும் கொஞ்சம் சீரியஸ் டோன்-ல ஆழமான அனாலிசிஸ் மாதிரி இருக்கு. உங்க வழக்கமான ஜாலி+சுவாரஸ்யம் பேலன்ஸ் மிஸ்ஸிங்.
ஏன், தொடருக்காக இப்படி அனாலிசிஸ் பண்ணக்கூடாதா?-ன்னு கேட்டா, அனலைஸ் பண்ண எத்தனையோ பக்காவான படங்கள் இருக்கு. இந்த மாதிரி above average படத்துக்கு இவ்வளவு ஆழம் தேவையில்லையே?
(ஒருவேளை சிவி குமார் அல்லது ராம்குமாருக்காக இப்படி எழுதியிருந்தா ஓகே)
பாஸ், படம் பார்த்துட்டேன்.. ஆங்காங்கே அடுக்கார கமெண்ட்ஸ் தான் சூப்பர். முனீஸ்காந்த் பெருசா கவரலை, சொல்லப்போன கொஞ்சம் irritation. ஹீரோவோட நண்பர் பாத்திரம் சூப்பர். காதல் போர்ஷன் கொஞ்சம் போரடிச்சுது… ஆர்ட்வொர்க் கலக்கல்… நல்ல படம்தான்.
//பின்னணியே இல்லாத மனிதர்கள்// – பின்னனிய சொன்னா இதெல்லாம் நமக்கு தேவையானு தோணும்…
// cheap காமெடி// – உண்மை தான்
//1980க்களின் ஆரம்பகட்டம் என்பது ஒரு பயங்கர அட்டகாசமான, நாஸ்டால்ஜிக்கான கதைக்களம்// – இது ரொம்ப ஓவர்.
any version with subtitles?