Noah (2014): 3D- English

by Karundhel Rajesh April 3, 2014   English films

உலகையே அழிக்கக்கூடிய மிகவும் பிரம்மாண்டமான வெள்ளம் வந்தபோது உயிர்களையெல்லாம் ஒரு பெரிய கப்பலில் வைத்துப் பாதுகாத்து, மறுபடியும் புதிய உலகம் துளிர்க்க உதவிய நோவாவின் கதைதான் இந்தப்படம் என்பது எல்லாருக்குமே தெரிந்திருக்கும். Requiem for a Dream, The Fountain, The Black Swan போன்ற, நமது தளத்தில் ஏற்கெனவே பார்த்திருக்கும் படங்களின் இயக்குநரான டேரன் அரனாவ்ஸ்கியின் படம். Pi, The Wrestler படங்களும் இவருடையதுதான். ப்ளாக் ஸ்வான் வெளிவந்தே நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் இரண்டு வருடங்களாக எடுத்துக்கொண்டிருந்த நோவா படம், இவரது ரசிகர்களுக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது (மொக்கையான படங்களுக்கே ரசிகர்கள் தூங்காமல் விழித்திருக்கையில் அரநாவ்ஸ்கிக்கு ரசிகர்கள் இல்லாமலா?).

எதிர்பார்ப்பைப் படம் நிறைவு செய்கிறதா?

நோவாவின் கதையைக் கவனித்தால், நம்மூருக்கும் நோவாவுக்குமே நிறைய சம்மந்தம் இருப்பதைக் காணமுடியும். பைபிளின் The Book of Genesis ஆறிலிருந்து ஒன்பதாவது அத்தியாயம் வரை நினைத்தாலே மனதைப் பதறச்செய்யும் பிரம்மாண்டமான வெள்ளம் ஒன்றைப் பற்றிய விபரங்கள் இருக்கின்றன. இந்த வெள்ளம் எப்படி உருவானது என்று பார்த்தால், ஆறாவது அத்தியாயத்தின் 6.5வது verseல், ‘மனித இனத்தின் இழிவான குணத்தைக் கண்டு கடவுள் வெறுப்படைந்தார்; மனித இனம் எதை யோசித்தாலும் அதில் தீயதே மிகுந்திருந்தது’ என்று வருகிறது. எனவே கடவுள், இப்படிப்பட்ட மனித இனத்தைப் போய் பூமியில் படைத்துவிட்டோமே என்று வருத்தப்படுகிறார். மனித இனத்தின் வாசனையே பூமியில் இல்லாதவாறு பூண்டோடு அழித்துவிடலாம் என்று முடிவு செய்கிறார்.

ஆதாமிலிருந்து வந்த வழித்தோன்றல்களில் அந்தக் காலகட்டத்தில் பூமியில் இருந்தது நோவா. இதற்கு முந்தைய அத்தியாயமான ஐந்தாம் அத்தியாயத்தில் ஆதாமிலிருந்து நோவா வரையிலான genealogy வருகிறது. நோவா பிறக்கையிலேயே, அவரது தந்தை லாமெக், ‘இவன் நமது துயரங்களைத் துடைப்பான்’ என்று சொல்கிறார்.

எனவே ஆதாமின் வழித்தோன்றலான நோவாவிடம் கடவுள் பேசுகிறார். ’மனிதனால் பூமியில் வன்முறை அதிகமாகிவிட்டது. எனவே பூமியையே அழிக்கப்போகிறேன். சைப்ரஸ் மரத்தினாலான ஒரு பெரிய கப்பலைக் கட்டுவாயாக. அதன் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் நன்றாக கோந்தைப் பூசி, தண்ணீர் உள்ளே வராமல் தடுப்பாயாக. இதோ அதன் அளவைகள். நீளம் = 137 மீட்டர்கள் (300 cubits). அகலம் = 23 மீட்டர்கள் (50 Cubits). உயரம் = 14 மீட்டர்கள் (30 Cubits). கப்பலில் மூன்று தளங்கள் இருக்கவேண்டும். நீ, உனது மனைவி, மகன்கள், அவர்களின் மனைவிகள் ஆகியவர்கள் கப்பலுக்குள் இருக்கலாம். ஒவ்வொரு உயிரினத்திலும் இரண்டிரண்டைக் கொண்டுவந்து கப்பலில் வைக்கவேண்டும். ஒன்று ஆணாகவும் இன்னொன்று பெண்ணாகவும் இருக்கவேண்டும். இத்தனை பேருக்குத் தேவையான உணவும் தாராளமாக உன்னுடன் வைத்துக்கொள்’ என்று சொல்கிறார்.

உடனே நோவா இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுகிறார். அத்தனையையும் செய்து முடிக்கிறார். அப்போது கடவுள் அவரிடம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உள்ளே செல்லச்சொல்கிறார். ’நீ மட்டுமே தர்மத்துக்குக் கட்டுப்பட்டவன் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான் உன்னை உள்ளே அனுப்புகிறேன்’ என்றும் சொல்கிறார்.

இதன்பின் அன்றிலிருந்து ஏழாவது நாளில் பேரழிவு தொடங்குகிறது. நாற்பது நாட்கள் விடாமல் பெய்த மழை மற்றும் பூமியில் இருந்த ஊற்றுக்கள் வெடித்துக் கிளம்ப்பிய அதிர்ச்சி ஆகியவற்றால் உலகெமே தண்ணீரால் சூழப்பட்டுக் கொந்தளிக்க ஆரம்பித்தது. புல் பூண்டு உட்பட அத்தனையும் அழிந்தன. நோவாவின் கப்பலில் இருந்தவர்கள் மட்டுமே பிழைத்தனர். ’பூமியில் இருந்த மிகப்பெரிய மலைகள் முகடுகள் கூட தண்ணீருக்குள் நன்றாக அமிழ்ந்தன’ என்று பைபிள் சொல்கிறது.

இதன்பிறகு 10 நாட்கள் பூமியைத் தண்ணீர் சூழ்ந்திருந்தது. பின்னர் மெல்ல வடிய ஆரம்பித்த தண்ணீடால் மலைமுகடுகள் தண்ணீரின் மேலே தெரிந்தன. அராரத் மலையில் கப்பல் தரைதட்டியது. நோவா காகம் ஒன்றை அனுப்புகிறார். எங்காவது தரை இருக்கிறதா என்று கவனிக்க. ஆனால் பயனில்லை. பின்னர் புறா ஒன்றையும் அனுப்புகிறார். அதுவும் வெறும் அலகோடு திரும்பி வருகிறது. ஏழே நாட்களில் திரும்பவும் அதே புறாவை நோவா அனுப்ப, அலகில் கொத்தப்பட்ட ஆலிவ் இலையோடு புறா மாலையில் திரும்புகிறது. தண்ணீர் மெல்ல வடிய ஆரம்பித்துவிட்டது என்று நோவா புரிந்துகொள்கிறார். பிறகு மறுபடியும் அதே புறாவை அனுப்ப, இம்முறை அது திரும்புவதே இல்லை. சில நாட்களுக்குப் பின்னர், அனைவரையும் பூமியில் உயிர்களைப் பல்கிப் பெருகவைக்குமாறு கடவுள் சொல்கிறார். அப்படியே நடக்கிறது. நோவா கடவுளுக்கு ஒரு கோயிலைக் கட்டுகிறார். அப்போது ஒரு அழகிய வானவில்லை சாட்சியாக அனுப்பி, இனிமேல் இப்படியெல்லாம் செய்யப்போவதில்லை என்று கடவுள் சொல்வதோடு பைபிளின் The Book of Genesis அத்தியாயம் எட்டு முடிகிறது.

நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இது பைபிளில் மட்டும் இல்லை. பாகவதத்திலும் இருக்கிறது (எட்டாவது பாகம் – 24வது அத்தியாயம்). வைவஸ்வத மனு, ஒரு மிகச்சிறிய மீனைக் கண்டெடுத்து வளர்க்க, அந்த மீன் கிண்ணத்தை உடைத்துக்கொண்டு பெரிதாக, அதற்கென்றே தொட்டி ஒன்றை உருவாக்கி அதில் மீனைப் போடுகிறார் வைவஸ்வத மனு. தொட்டியையும் உடைத்துக்கொண்டு வளர்கிறது மீன். பிறகு அதை சமுத்திரத்தில் விடுகிறார். கற்பனை செய்துபார்க்கவே முடியாத பிரம்மாண்டமான வடிவத்தில் அந்த மீன் வளர்ந்துவிடுகிறது. வைவஸ்வத மனு என்பவர்தான் பூமியில் உயிர்களுக்கே முதல்வர். இந்த மீன் வைவஸ்வத மனுவிடம் பேசுகிறது. மேலே கடவுள் நோவாவிடம் சொன்னதுபோலவே, மிகப்பெரிய கப்பல் ஒன்றைக் கட்டச்சொல்லி, அதில் சப்தரிஷிகளையும் வேதங்களுக்கான பீஜங்களையும் வைக்கச்சொல்கிறது. அப்படியே செய்கிறார் வைவஸ்வத மனு. அந்த நேரத்தில் மீன் அவரது கப்பலுக்கு முன்னால் தோன்றுகிறது. அதன் பெரிய கொம்பின் நுனியில் கப்பலின் கயிற்றை மனு மாட்ட, கப்பலையே அனாயாசமாக இழுத்துக்கொண்டு சமுத்திரத்தில் செல்கிறது அந்த மீன். அப்போது பிரளயம் துவங்குகிறது. பூமியில் ஒரு உயிர் கூட இல்லாமல் அனைத்தையும் துடைத்துப்போட்டுவிடுகிறது அந்தப் பிரளயம். இதன் முடிவில் ஹிமாலய மலைகளின் உயரிய மலைமுகடு ஒன்றை நோக்கிக் கப்பலை இழுத்துச்செல்கிறது மீன். அதில் இருப்பதிலேயே உயரிய முகட்டில் கயிற்றை வீசிக் கட்டுகிறார் வைவஸ்வத மனு. அந்த முகட்டின் பெயர் அன்றிலிருந்து அந்த முகடு ‘நௌபந்தனா’ என்று அழைக்கப்படுகிறது என்று பாகவதம் சொல்கிறது. கப்பலிலிருந்து வெளியேறிய மனுவிடம் ஒரு அழகிய பெண்ணையும் படைத்து அனுப்புகிறார் கடவுள். இப்படியாக பூமியில் உயிர்கள் தழைத்தன.[divider]

இந்த பாகவதக் கதைக்கும் நோவாவின் கதைக்கும் எத்தனை ஒற்றுமைகள் இருக்கின்றன அல்லவா? கடல், கப்பல், உயிர்கள், மலைமுகட்டில் தரைதட்டுவது – இதையெல்லாம் மீறி, சமஸ்கிருதத்தில் படகு என்பதைக் குறிக்கும் வார்த்தை – ‘நௌ’ என்பது. படகைக் கட்டியதால்தான் அந்த மலை நௌபந்தனம் என்று அழைக்கப்படுகிறது. ‘பந்தம்’ அல்லது ‘பந்தனம்’ என்பதற்குக் கட்டுதல் என்றே சமஸ்கிருதத்தில் பொருள் (திலகாஷ்ட மகிஷ பந்தனம் என்றால் என்ன? தெனாலிராமன் கதை நினைவு வருகிறதா?). சமஸ்கிருதத்தில் படகுக்கு இன்னொரு வார்த்தையும் உண்டு. அது – ‘நௌகா’. அதேபோல் தமிழிலும் படகு என்பதற்கு ‘நாவாய்’ என்பதுதானே பெயர்? ஹிந்தியில் ‘நையா’.

நௌகா – நாவாய் – நையா – நோவா. பெயரில் கூட எத்தனை ஒற்றுமைகள் இருக்கின்றன அல்லவா? (என் பள்ளி நாட்களில் தெய்வத்தின் குரல் படித்திருக்கிறேன். அதில்கூட இப்படி ஒரு ஒற்றுமையை பழைய சங்கராச்சாரியார் சொல்லியிருப்பார். அவர் கலிபோர்னியா என்ற வார்த்தையை, கபிலர் தவம் செய்த இடம் என்று பொருள் வரும் வகையாக கபிலாரண்யம் என்று விளையாட்டாக நகைச்சுவை செய்வார் அந்தப் புத்தகத்தில்). மொழி ரீதியாக என்னால் முடிந்த பிரச்னையைக் கிளப்பிவிட்டாயிற்று. ஜாலி.[divider]

ஓகே. படமும் மேலே சொல்லியிருக்கும் இதே பைபிள் கதையை மையமாக வைத்தே எழுதப்பட்டிருக்கிறது என்பது பார்த்தாலே தெரிகிறது. இதில் சில புதிய கதாபாத்திரங்களும் வருகின்றன. விண்வெளியில் இருந்து கடவுளால் சபிக்கப்பட்டு பூமியில் விழுந்த சில தேவதைகள், தங்களின் ஞானத்தை மனிதர்களுக்கு அளித்து, அதனால் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த மனிதர்கள் இந்தத் தேவதைகளை அடித்துத் துரத்துகின்றனர். இப்படிப்பட்ட பிரம்மாண்ட உருவமுடைய தேவதைகள் நோவாவுக்குக் கப்பல் கட்டுவதில் உதவுகின்றன. கூடவே, திரைப்படத்தை இறுதிவரை வேகமாகக் கொண்டுசெல்லச் சில கதாபாத்திரங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், படத்தைப் பார்த்தபின்னர் எனக்குத் தோன்றிய கருத்து – இந்தப் படம் எல்லாருக்குமான படம் அல்ல. காரணம்?

முதலாவதாக, இது மிகவும் மெதுவாகச் செல்லக்கூடிய வகையில் எழுதப்பட்டிருக்கிறது. இது வழக்கமான அரனாவ்ஸ்கியின் பாணி அல்ல. அவரது முந்தைய படங்கள் மெதுவாகவே சென்றாலும், அவற்றில் உயிர்ப்பு இருக்கும். முதல் பேராவில் உள்ள எல்லாப் படங்களுமே அப்படித்தான். ஆனால் இதில் அந்த உயிர்ப்பு என்பது இரண்டாம் பாதியில்தான் இருக்கிறது. முதல் பாதி மிக மிக மெதுவாகச் செல்கிறது. இது, வேகமான படங்களையே பார்த்துப் பழகிவிட்ட பார்வையாளர்களுக்கு அலுப்பை வழவழைக்கலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால், எல்லாருக்குமே தெரிந்த ஒரு பிரபலமான கதையை எடுப்பதில் அரநாவ்ஸ்கிக்கு வெற்றிதான் என்று தோன்றுகிறது. இதற்கு முந்தைய அரநாவ்ஸ்கி கதைகள் சரித்திரம் அல்ல. ஆனால் இது மதரீதியான ஒரு சரித்திரக் கதை. எல்லாருக்குமே தெரிந்ததும் கூட.

இரண்டாவதாக, இந்தப் படத்தில் பைபிளிலிருந்து பல சிறிய குறிப்பீடுகள் இருக்கின்றன. நோவாவின் கதையை நன்றாகத் தெரிந்துகொள்ளாமல் போனால் ஏமாற்றமே மிஞ்சும். முதலிலிருந்து இறுதிவரை பைபிளில் சொல்லப்பட்ட சம்பவங்கள் கச்சிதமாக வருகின்றன. அனால் இந்தக் கதையெல்லாம் தெரியாமல், வெள்ளம் – க்ராஃபிக்ஸ் என்று நினைத்துக்கொண்டு சென்றால் கடுப்பே மிஞ்சும். அரநாவ்ஸ்கியின் படங்கள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு செல்வது நல்லது.

ஆனால், இதையெல்லாம் மீறி, படம் எனக்குப் பிடிக்கவே செய்தது. காரணம் படத்தில் நோவாவின் கதாபாத்திரச் சித்தரிப்பு. இதுவே ஒரு பழைய படமாக இருந்தால் நோவா ஒரு மிகப்பெரும் தியாகியாக சித்தரிக்கப்பட்டிருப்பார். ஆனால் இதில் நோவா ஒரு சாதாரண மனிதர் மட்டுமே. பிறரை ஏமாற்றிச் சதி செய்யாமல், ஒவ்வொரு பொருளுக்கும் இந்த உலகில் ஒவ்வொரு இடம் உண்டு என்பதைப் புரிந்துகொண்டு வாழும் மனிதராக நோவா உருவாக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவருக்கு சில கனவுகள் வருகின்றன. அவற்றின் மூலம் கடவுளின் செய்தியைப் புரிந்துகொள்கிறார். ஆனால் கடவுளின் ஆணையைப் பின்பற்றுவதில் மிகவும் கண்முடித்தனமாகவும் இருக்கிறார். யார் என்ன சொன்னாலும் கடவுளின் ஆணை என்றால் அது கடவுளின் ஆணைதான் என்று மனதில் நினைத்துக்கொண்டு இருக்கும் கதாபாத்திரம். பைபிளை எடுத்துக்கொண்டாலும் நோவா கடவுள் சொல்வதைத் தலையாட்டி ஏற்றுக்கொள்வதாகத்தான் அதில் இருக்கிறது. ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டால், மஹாபாரதத்தில் அனைவரையும் கொல்லச்சொல்லி கண்ணன் சொன்னபோது வில்லை அர்ஜுனன் வீசுகிறான். அதன்பின் 18 அத்தியாயங்கள் மூச்சே விடாமல் கண்ணன் விளக்கம் சொல்வதால்தான் திரும்பவும் வில்லை எடுக்கிறான். காரணம், இத்தனை பேரை எப்படிக் கொல்வது என்ற கழிவிரக்கம். ஆனால் நோவாவோ, உலகையே அழிக்கப்போகிறேன் என்று கடவுள் சொல்வதை மிகவும் இயல்பாக எடுத்துக்கொள்கிறார். இதே கதாபாத்திர உருவாக்கம்தான் படத்திலும் இருக்கிறது.

ஆனால் இப்படிப்பட்ட கதாபாத்திரம், ஆரம்பத்தில் இருந்து இறுதிக்குக் கதை செல்கையில் ஒரு மாற்றத்தை அடைகிறது. அந்த மாற்றம் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தில், வழக்கமாக அரநாவஸ்கியின் படங்களில் இல்லாத சில க்ளிஷே காட்சிகள் உண்டு. அவற்றை சகித்துக்கொள்ளலாம். காரணம் கதை அப்படி. இந்தக் கதையை எடுக்கும் ஒரு சிறிய ஸ்பேஸில் அகப்பட்டுக்கொண்டுவிட்டார் அரநாவ்ஸ்கி என்பது என் கணிப்பு. இருந்தாலும் அந்த ஸ்பேஸுக்குள் சரியாகத்தான் எடுத்திருக்கிறார். இன்னொன்று- இந்தக் கதையை, டக்கென்று கடவுள் தோன்றி, ‘கப்பலைக் கட்டு’ என்று சொல்வதோடு ஆரம்பித்துவிடவும் முடியாது. அப்போது அது ஒரு டாக்குமெண்ட்ரியாக மாறியிருக்கும். எனவே, அரநாவ்ஸ்கி மிகவும் மெதுவாக இந்தப் படத்துக்குக் கொடுக்கும் துவக்கம் எனக்குப் பிரச்னையாக இல்லை.

ரஸல் க்ரோ- நோவா. ஜெனிஃபர் கானல்லி- நோவாவின் மனைவி நாமீ. நமக்கெல்லாம் பிடித்த ஹாரி பாட்டரின் எம்மா ’ஹெர்மையோனி’ வாட்ஸன் படத்தில் உண்டு.

படுபயங்கர விஷுவல்களோடு கூடிய ஒரு படமாக இதை நினைத்துக்கொண்டு தியேட்டரில் பார்க்க நினைப்பவர்களுக்கு – இதை விட்டுவிட்டு Captain America : The Winter Soldier உங்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யலாம். மெதுவாக இருந்தால் பிரச்னையில்லை என்று நினைப்பவர்கள் மட்டும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

பி.குக்கள்

1. ஆண்ட்டனி ஹாப்கின்ஸின் கதாபாத்திரத்துக்கு இந்தப் படத்தில் முப்பதே செகண்ட் ஃப்ளாஷ்பேக் ஒன்று உண்டு. கவனிக்க முடிந்ததா?

2. இது ஹிஸ்டரியின் காலம். இப்போது நோவா வந்துவிட்டது. விரைவில் Rock ஹெர்குலீஸாக நடிக்கும் Thracian wars வெளிவரப்போகிறது. இந்த ஆண்டின் இறுதியில் ரிட்லி ஸ்காட் இயக்கும் Exodus: Gods and Kings வெளியாகிறது. இதில் மோஸஸாக நடிப்பவர் Christian Bale. இவரைத்தான் முதலில் நோவாவாக நடிக்கக்கேட்டு அரநாவ்ஸ்கி அணுகியிருக்கிறார். பேல் மறுத்துவிட்டார். ஆனால் நேராக ரிட்லி ஸ்காட்டிடம் போய் தற்போது மோஸஸ் வேடத்தைப் போட்டிருக்கிறார் (wikipedia news). ரிட்லி ஸ்காட்டின் ‘ப்ராமிதியஸ்’ எனக்கு துளிக்கூட பிடிக்கவில்லை. இந்தப் படம் எப்படி என்று பார்க்கலாம்.

3. நோவாவின் மூழ்கிய கப்பலைத் தேடுகிறேன் பேர்வழி என்று வழக்கமாக இப்படி எது எழுதப்பட்டாலும் அதைத் தேடி ஓடும் கும்பல்போல் சிலர் இன்றும் தேடிக்கொண்டிருக்கின்றனர். எனக்கு இப்படிப்பட்டவர்களைக் கவனித்தால் ஏதோ pesudo கும்பல் போலத் தோன்றுகிறது.

4. உலகம் எப்படி உருவானது என்பதைக் குறித்த ஒரு பெரிய விளக்கம் இதே The Book of Genesis முதல் அத்தியாயத்தில் இருக்கிறது. அதே விளக்கத்தைத் திரைப்படத்தில் ரஸல் க்ரோ – நோவா – அளிப்பதைக் காணலாம்.

  Comments

4 Comments

  1. Good Review !!!!!
    I didn’t liked the Movie. Yes I expected an Aronofsky Movie(I liked Black Swan, Requiem for a Dream) but got a misdirected one. I get Noah’s emotional turmoil but really got annoyed by the characters around Noah. There were more emphasis on their unnecessary(annoying) actions during whole World Ending scenario where I would’ve liked more scenes on Noah himself. A bit more dragging & atmost would be an one-time watch(at home). I do liked CGI & ‘Universe’ Scene though. Thankfully, No Christian Bale. Else I’d have hated it more.

    Again, A Good Review with ‘necessary background’ intro.

    Reply
  2. Kannan

    i have a different view Rajesh. i dont think this is about the bible story. it is just a back drop. i feel it is more of a prequel to The Fountain movie by him. the questions raised in the movie are about why humans are here and what is our purpose.. flood story is just a back drop… the answer seems to be eternal love… which continues in The Fountain…what do you think?

    Reply
  3. Kannan

    just to add, i loved the movie. i never thought it was slow at any point… may be my perspective

    Reply
  4. Kannan

    another point to add… our Mahamaham story is similar… but more advanced..

    It is believed that the God of Creation, Brahma will go for a sleep once in a while and it will result in the destruction of all the living beings in the earth. The Oceans will raise, flood the cities and villages, remains so for years and kills all the living beings in the world. This is called Brahma pralayam (Flood of Brahma). In order to sustain life in earth, Lord [Shiva] instructs the educated to take sample of seeds (DNA ?) of living organisms in a pot (Kumbham) filled with elixir and keep it atop Himalayas ( now, Mt. Everest). When the Brahma pralayam started, it killed all living creatures in the earth, even the ones who filled the pot. The flood water level rose so high that it got the pot kept in Mt. Everest floating for years. Eventually when all the excess water dried up, the pot settled in a place now called Kumbakonam. Then Shiva took the form of a Hunter and split opened the pot with his arrow. The seeds and elixir poured out of into the Mahamaham tank. Then, life on earth started flourishing again. Hence the God Shiva in here is called as Kumbehswarar.

    Reply

Join the conversation