Parasakthi (2026) – Tamil: A Detailed Analysis

by Karundhel Rajesh January 14, 2026   Tamil cinema

பராசக்தி திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. அந்தப் படம் பரவலாக எதிர்பார்க்கப்பட்டும் வந்தது. இப்போது திரைப்படம் வெளியான நிலையில் அந்தப் படம் பற்றிய மிக விரிவான ஒரு analysisஐ எழுதியிருக்கிறேன். எந்தவித சார்புநிலையும் இல்லாமல், திறந்த மனதோடு இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்க்கவும்.

முதலில், பராசக்தி என்ன சொல்கிறது?

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்த 1965 காலகட்டத்தில் தமிழகத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை இந்தப் படம் விவரிக்கிறது என்பதே டிரெய்லர் வெளியானபோது நமக்குக் கிடைத்த செய்தி. அதேபோல் பல காலமாகவே படத்தைப் பற்றிய தகவல்களும் இதை உறுதிப்படுத்தின. அதேபோல் திரைப்படம் வெளியானதுமே, இதுதான் படத்தின் முக்கியமான அம்சம் என்று புரிந்தது. திரைப்படத்தின் துவக்கத்தில், மொழி என்பதைப் பற்றிய அரசியலை அனைவருக்கும் உணர்த்தும் வகையிலான சில அனிமேஷன் காட்சிகள் வருகின்றன. அதில் மொழி என்பதன் சக்தி பற்றிய வாய்ஸ் ஓவர் சொல்லப்படுகிறது. இதன்மூலம் படம் பார்க்க வந்திருக்கும் ஆடியன்சின் மனதில் ஒரு எதிர்பார்ப்பு உருவாகிறது. இந்த அனிமேஷன் காட்சிகளுக்குப் பின்னர் திரைப்படம் துவங்குகிறது. அந்த அனிமேஷன் காட்சிகள் முடியும்போது, பயம் என்றால் என்ன என்று தெரியாத ஒரு படை – புறநானூற்றுப் படை என்பது உருவானது என்று ஒரு வாய்ஸ் ஓவர் சொல்கிறது.

1959இல் கதை துவங்குகிறது. ரயிலில் திரு என்ற திருநாடன் (ரவி மோகன்) இண்டெலிஜன்ஸ் ஆஃபீசராக அறிமுகம் ஆகிறார். அவர் ரஷ்யாவில் கே.ஜி.பியின் கீழ் பயின்ற மிகப்பெரிய திறமைசாலி என்று அறிமுகப்படுத்தப்படுகிறார். அப்போதே ரயில் வரும் வழியில் நிற்கும் செழியன் (சிவகார்த்திகேயன்) கதாபாத்திரமும் அறிமுகம் ஆகிறது. கூடவே படத்தின் க்ளைமேக்ஸில் யாரெல்லாம் வருவார்களோ அவர்கள் அனைவரும் அவரவர் தாய்மொழிகளில் (மலையாளம், பெங்காலி etc..) பேசிக்கொண்டு, க்ளைமேக்ஸில் வரும் வசனங்களுக்கு lead கொடுத்துக்கொண்டே அறிமுகமாகின்றனர். அங்கே ஒரு புகைவண்டி கொளுத்தப்படுகிறது. நீதி பரவட்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பறக்கின்றன. அப்போதே செழியன் கதாபாத்திரம், ரயிலில் இருப்பவர்களிடம், நாங்கள் இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் – இந்திக்காரர்களை அல்ல என்று சொல்லி, அனைவரையும் பாதுகாப்பாக ரயிலில் இருந்து இறங்கவைக்கிறார்.

அப்போது செழியனுக்கும் திருநாடனுக்கும் சண்டை நடக்கிறது. சண்டையில் செழியன் தப்பித்துவிடுகிறான். இதுதான் பராசக்தியின் துவக்கக்காட்சி. இதில் புறநாநூற்றுப் படை என்ற படையின் அறிமுகம் நடப்பதால், இந்தப் படை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுகிறது. அதேபோல் இந்தப் படைக்கு எதிராக செயல்படும் இண்டெலிஜன்ஸ் ஆஃபீசர் திருநாடன் என்னவெல்லாம் செய்யப்போகிறார்? இந்தித் திணிப்பை எதிர்க்கும் புறநாநூற்றுப் படை என்ன செய்யப்போகிறது என்றெல்லாம் ஒரு ஆர்வம் எழுகிறது.

அத்தோடு சரி. ஆரம்பக் காட்சிகளில் எழுந்த எதிர்பார்ப்பு ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டி மூடப்பட்டதுதான் பராசக்தியின் மிகப்பெரிய பிரச்னை.

பராசக்தியின் கதை எங்கெங்கோ அலைபாய்கிறது. படத்தின் கதை கண்டபடி இழுபடுகிறது. சொல்லவந்த எதுவுமே தெளிவாக சொல்லப்படவில்லை. கதைக்குத் தொடர்பே இல்லாத பல காட்சிகள் பராசக்தியை அலுப்பான அனுபவமாகவே ஆக்குகின்றன. எப்படி என்று விரிவாகச் சொல்கிறேன்.

முதலில் இது எதைப்பற்றிய படம்? இந்தித் திணிப்பின் எதிர்ப்பைப் பற்றியது. அப்படியென்றால் இந்தப் படத்தில் வில்லன் யார்? இந்தி மொழித் திணிப்பு. எந்த ஒரு தரமான கமர்ஷியல் படத்திலும் படத்தின் நாயகனுக்கு ஒரு குறிக்கோள் இருக்கும். அந்தக் குறிக்கோளை நோக்கியே அவன் போராடுவான். அந்தக் குறிக்கோள் நாயகனுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ள எதிர்நாயகன் (வில்லன்) வருவான். இதுதான் கமர்ஷியல் படங்களின் டெம்ப்ளேட். பராசக்தியில் நாயகர்கள் என்று சொன்னால் இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்களான செழியன், அவனது தம்பி சின்னதுரை, நாயகி ரத்னமாலா மற்றும் இவர்களுடன் இருப்பவர்கள் ஆகியோர். அப்படியென்றால் இவர்களுக்கு எதிரே மோதும் வில்லன் யார்? ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? இந்தி மொழித் திணிப்பு. எனவே வில்லன் உயிரோடு இருக்கும் கதாபாத்திரம் இல்லை. அது ஒரு கொள்கை. ஒரு சட்டம். ஒரு தீர்மானம். இதனால் என்ன பிரச்னை? உயிருடன் இருக்கும் ஒரு வில்லனைப் படத்தில் உருவாக்கு. அதுதான் ரவி மோகனின் திருநாடன். அவன் புறநாநூற்றுப்படையுடனும், செழியனுடனும் மோதிக்கொண்டே இருக்க வேண்டும். அதேசமயம், இந்தித் திணிப்பை அமல்படுத்தும் அரசியல்வாதிகள் உயிருடன் இருந்த கதாபாத்திரங்கள். அவர்களை ஒரு அளவுக்கு மேல் வில்லனாக்க முடியாது. இதனால் ஒட்டுமொத்தப் படத்திலும் ரசி மோகனின் திருநாடனே ஒரு வில்லனுக்கான வேலைகளை செய்யப் பார்க்கிறது.

இதனால் என்ன ஆகிறது? திருநாடனே வில்லன். எனவே அவனுக்கு வில்லனுக்கான காரணங்களை உருவாக்கு. அந்தக் கதாபாத்திரத்தின் அம்மாவை ஒரு தமிழன் ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான் என்று ஒரு வசனம் எழுது. உனக்குள்ள ஓடுற உன் அப்பனோட தமிழ் ரத்தம் எப்படி அந்தப் புரட்சிக்காரங்களை சுடும்? என்று இன்னொரு வசனம் எழுது. இனிமே நான் தமிழ் பேசுற நொண்டிக்கை மதராசி துரோகி என்று திருநாடனையே புலம்ப வை. இதனாலெல்லாம் திருநாடன் தமிழால் பாதிக்கப்பட்டான் என்று காட்சி வை. அப்போதுதான் அவன் தமிழுக்காகப் போராடுபவர்களின் மீது வெறிகொண்டு பாய்வான். இப்படியெல்லாம் இருப்பதன் பிரச்னை, முதலில் திருநாடன் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாகவே இல்லை. அப்பன் தமிழன் – அம்மாவை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான் என்பதாலேயே அவனுக்கு தமிழ்மீது வெறுப்பா? இதை எப்படி நம்புவது?

துவக்கத்திலேயே இப்படிப்பட்ட ஏற்கவே முடியாத காரணங்களை அடுக்குவதால் முதலில் ரவி மோகனின் கதாபாத்திரமே உறுதியாக இல்லாமல் அங்கங்கே தடுமாறுகிறது.

அதேபோல்தான் செழியன். படத்தின் துவக்கத்தில் வெறிகொண்டு ஒரு புரட்சிப்படையை வழிநடத்தி ஒரு புகைவண்டியையே எரிக்கும் அளவு திறமை படைத்த செழியன் – தமிழ் தமிழ் என்று தமிழுக்காக எதைவேண்டுமானாலும் செய்வேன் என்ற மன உறுதி படைத்த நாயகன் செழியன் – எந்த வசனம் பேசினாலும் அதில் எப்படியாவது மொழி பற்றி ஒரு வாக்கியமாவது பேசிவிடும் செழியன், இதன்பின் படத்தில் என்னவெல்லாம் செய்கிறார்?

புகைவண்டி எரிக்கப்பட்ட தீ விபத்தில் ஒரு மாணவன் உடல் கருகி இறந்துவிடுகிறான். அவனது வீட்டுக்குச் செல்லும் செழியன், இந்த மரணத்தால் பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்தப் புறநாநூற்றுப் படையையும் கலைத்துவிடுகிறான்.

ஏம்ப்பா? உண்மையைச் சொல்லுங்கள். தமிழுக்கென்றே உருவான ஒரு புரட்சிப்படை, ஒரு புகைவண்டியையே எரித்து டெல்லி வரை அரசியல்வாதிகளைக் கலங்கவைத்த புரட்சிப்படையை இதனால் உடனடியாகக் கலைத்துவிட்டு லௌகீக வாழ்க்கையில் தடாலென்று செழியன் இறங்கிவிடுவாரா? சரி ஒருவேளை அப்படியே வைத்துக்கொள்ளலாம். இனிமேல் யார் உயிரையும் இழக்க விடமாட்டேன் என்று சொல்லி அந்தப் புறநானூற்றுப் படையைக் கலைக்கிறார் என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதன்பின் செழியன் என்ன செய்கிறார்?

நடந்த சம்பவங்களின் எந்த சுவடும் இல்லாமல், அவரது மனதைப் பாதித்த அந்த இறப்பைப் பற்றிய ஒரு தடயமும் இல்லாமல், ஜாலியாக ஹீரோயின் ரத்னமாலாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அது மட்டும் அல்ல. அந்த ரத்னமாலாவை ரூட்டு விடுவதற்காக, அவளிடம் இந்தி (!!??) கற்றுக்கொள்ளத் துவங்குகிறார். அடப்பாவி! உனது பூர்வாசிரமத்தில் ரயிலை எரித்தபோது, ‘இந்தி பேசுறவங்க மேல எங்களுக்குப் பிரச்னை இல்ல’ என்று சொன்னாயே அது இதற்குத்தானா?

அடுத்த கணமே செழியன் மீதான நம்பிக்கை பணால் என்று உடைகிறது. இதனால் என்ன ஆகிறது என்றால், திரையில் எதுவோ சம்பவங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன – அவை துளிக்கூட நம்மை பாதிப்பதில்லை என்ற எண்ணமே எழுகிறது. யோசித்துப் பாருங்கள். இத்தனை புரட்சிகரமான வேலைகளைச் செய்திருக்கும் ஒரு தமிழ் ஆர்வலன், செழியன் செய்வதைப் போன்ற தொடர்பே இல்லாத வேலைகளை மனதில் எந்த emotional baggageஉம் இல்லாமல் இத்தனை ஜாலியாக செய்வானா?

ஹீரோ செழியன் திடீரென்று இந்தி கற்றுக்கொண்டு காதல் செய்யும் குறிக்கோளுடன் தனது நோக்கத்தில் இருந்து ஒதுங்கிவிட்டால் இதன்பின் படத்தில் புரட்சி கோஷத்தை யார் எழுப்புவது? அவர் இல்லாவிட்டால் என்ன? அவரது தம்பியை இறக்கு. இதோ வந்தார் சின்னதுரை. அவருடன் ஒரு சிலர் சேர்ந்து, இவர்கள் புறநானூற்றுப்படையின் இன்ஸ்பிரேஷனில் கிளைக்கழகம் ஒன்று உருவாவது போல ஒரு குட்டியூண்டு புரட்சிப் படையை உருவாக்குகின்றனர். இவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராக என்னவெல்லாம் செய்கின்றனர்?

பல்கலைக்கழகத்தில் ஓடும் ஷம்மி கபூரின் இந்திப் பட ரீலை மாற்றிவிட்டு, தமிழ்ப்பாடல் ஒன்றைப் போட்டுவிட்டு கம்பீரமாக (??!!) நிற்கின்றனர். ஆஹா. இந்தி ஒழிந்தது.

இந்தி கற்றுக்கொண்டு ஹீரோயினைக் காதலிக்கும் ஹீரோ இடையில் தம்பியுடன் செல்லமாக சண்டை போடுகிறார். தம்பியின் பாக்கெட்டில் இருந்து லைட்டரை களவாண்டு ஓடிவிடுகிறார். அதாவது, படத்தின் துவக்கத்தில் நமக்கு எழுந்த எதிர்பார்ப்பு படத்தின் இந்த இடத்தில் எல்லாம் சுக்குசுக்காக உடைந்து சிதறி, என்ன வேணாலும் நடக்கட்டும்யா.. உங்களால முடிஞ்சதைப் பண்ணுங்க என்பதாக மாறிவிடுகிறது. இதனால் எப்படிப்பட்ட காட்சி வந்தாலும் எந்த எமோஷனும் இல்லாமல் ஒரு zombie போல நம்மால் அமர்ந்து பார்க்க முடிகிறது. நீங்கள் கட்டையே வைத்து அடி அடி என்று அடித்தாலும் ஏதோ கொசு கடிக்கிறது என்றே எண்ணிக்கொண்டு ஒரு அரைமயக்க நிலை நீடிக்கிறது.

ஆனால் இடைவேளை நெருங்குகிறதே? என்ன செய்வது? செழியன் வேறு முக்கால் மணி நேரமாகத் தொடர்ந்து காதலித்துக்கொண்டே இந்தி கற்றுக்கொண்டிருக்கிறாரே? இரண்டு மூன்று பாடல்கள் வேறு பாடிவிடுகிறார் (புரட்சிப் பாடல்கள் அல்ல. காதல் பாடல்கள்தான்).

இப்போது கொண்டுவா அண்ணாவை. கருணாநிதியை. அவர்களின் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, வீறுகொண்ட வசனங்கள் எழுதி, அதுவரை தூங்கிக்கொண்டிருந்த திரைக்கதையை தட்டி எழுப்பு (உண்மையில் மிக முக்கியமான இந்தப் பெரும் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்திருக்கும் இயக்குநரை எப்படி விமர்சிப்பது என்றே தெரியவில்லை).

இதன்பின் இடைவேளை. அதில் வானில் இருந்து இறங்கும் சூப்பர்ஹீரோ போல ஒரு வழியாக செழியன் காதல் மயக்கம், இந்தி கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவற்றில் இருந்து தற்காலிக லீவு வாங்கி, மறுபடியும் கொள்கை வீரராக மாறிவிடுகிறார். என்ன காரணம்? அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இண்டர்வ்யூ செயும் அதிகாரி இந்தி பற்றிப் பேசி இவரை ரிஜெக்ட் செய்துவிடுகிறார் (இதேபோல்தான் வலிந்து திணித்து சூரரைப் போற்று படத்தில் நாயகன் சூர்யாவின் தந்தையை இறக்க வைத்திருப்பார் சுதா. காரணம் ஹீரோவுக்கு லட்சிய வெறி வரவேண்டும் அல்லவா? இப்படியெல்லாம் தொடர்பே இல்லாமல் காட்சிகள் எழுதினால் அவை துருத்திக்கொண்டு தெரியாமல் வேறு எப்படி இருக்கும்?. மேலே இருக்கும் எனது சூரரைப் போற்று விமர்சனத்தையும் முழுதாகப் படித்துப் பாருங்கள்).

இதுபோதும் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் கதையை விரிவாகப் பார்க்கவேண்டாம். மாறாக, படத்தின் பிரச்னைகளை மறுபடியும் கவனிக்கலாம்.

இப்போது நான் சொல்லியவவற்றை வைத்தே படத்தின் மிகப்பெரிய ஸ்பீட் ப்ரேக்கர்கள் என்ன என்று தெரிந்திருக்கும். துவக்கத்தில் இருந்து ஒரே நேர்க்கோடாக, விறுவிறுப்பாகச் சொல்லவேண்டிய அட்டகாசமான கதைக்களம்தான் தமிழகத்தில் நடந்த இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த கிளர்ச்சி. ஆனால் அதை எடுத்துக்கொண்டு, எப்படியெல்லாம் அதை நீர்க்கவைத்து, படம் பார்ப்பவர்களைத் தூங்கவைக்கலாம் என்றே எழுதப்பட்டதுபோலத்தான் பராசக்தியின் திரைக்கதை உள்ளது.

இந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் முன்னுக்குப் பின் முரணாகவே எழுதப்பட்டிருக்கின்றன. செழியன் மற்றும் திருநாடன் ஆகிய கதாபாத்திரங்கள் பற்றி விரிவாகவே மேலே பார்த்தோம். நாயகி ரத்னமாலாவின் அறிமுகத்திலேயே தெரிந்துவிடுகிறது – அவரை சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் ஜெனிலியா போலவே ஏதோ ஒரு மாதிரி சித்தரிக்க நினைத்திருக்கிறார்கள் போல. படத்தில் எனக்குப் பிடித்த ஒரே கதாபாத்திரம் – அதர்வா நடித்திருக்கும் சின்னதுரை. தன்னால் முடிந்தவரை கல்லூரி படிக்கையில் இந்தித் திணிப்பை எதிர்த்து எதாவது செய்யவேண்டும் என்று துறுதுறுப்பாகவே திரியும் கதாபாத்திரம் இது. மாணவர்கள் சிலரை ஒன்றுசேர்த்துக்கொண்டு அங்குமிங்கும் எதாவது செய்யவேண்டும் என்று ஓடும் கதாபாத்திரம். இது மட்டும் நன்றாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இன்னொரு மிகப்பெரிய பிரச்னை, இந்தித் திணிப்பை எதிர்த்து எழுந்த மாபெரும் போராட்டத்தை, ஒரே ஒரு சின்ன கும்பலுக்கு எதிராக ஒரு இண்டெலிஜன்ஸ் ஆஃபீசர் மேற்கொள்ளும் சண்டை என்று சுருக்கியதுதான். படம் முழுக்கவே திருநாடன் துப்பறிந்துகொண்டே இருக்கிறார். யாருக்கு எதிராக? புகை வண்டியை எரித்தவர்களுக்கு எதிராக. இதைத்தவிர அவர் வேறு வேலை எதையும் பார்த்ததாகத் தெரியவில்லை. புறநாநூற்றுப் படை, சின்னதுரையின் சிறிய கும்பல் ஆகியவற்றைத் தவிரப் படத்தின் பெரும்பான்மையான நேரத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வீச்சு சரியாகவே சொல்லப்படவில்லை. எந்தக் காட்சியைப் பார்த்தாலும் ஒன்று செழியன் காதலிக்கும் காட்சி, அல்லது சின்னதுரை தொடர்பான காட்சிகள் என்றே பெரும்பாலும் படம் ஓடுகிறது. படத்தின் இரண்டாம் பாதியில்தான் ஓரளவு சீரியஸ் காட்சிகள் வருகின்றன. ஆனால் அவையுமே முதல் பாதியில் நாம் வாங்கிய அடியால் நம்மைக் கடந்து சென்றுவிடுகின்றன. கதாபாத்திரங்களை செயற்கையாக வடிவமைத்து முதல் பாதியில் இயக்குநர் சுதா வைத்திருந்ததால், இரண்டாம் பாதியில் அவை என்ன செய்தாலும் மனம் அவற்றை நம்ப மறுக்கிறது. இது அவசியம் படத்தின் திரைக்கதையின் தோல்வியே.

சரி. படத்தின் பாசிடிவ்கள் என்ன?

அண்ணாதுரைக்கு வைக்கப்பட்ட வசனங்கள், சென்சாரில் பல இடங்களில் வெட்டுப்பட்டது நமக்குத் தெரியும். ஆனால் அதை மீறி, அவரது கதாபாத்திரம் நன்றாகவே காட்டப்பட்டிருக்கிறது. சேத்தனின் நடிப்பு நம்மை வசீகரிக்கிறது. அண்ணாதுரை பற்றி எதுவுமே தெரியாத இக்கால சினிமா ரசிகர்கள் அவசியம் அவரது கதாபாத்திரத்தால் கவரப்பட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அதேபோல் நாயகன் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் கண்டபடி திரைக்கதையில் கொத்துக்கறி போடப்பட்டிருந்தாலும், அவரது சின்சியரான நடிப்பு படத்தில் தனித்துத் தெரிகிறது. அவரது உழைப்பு நன்றாகவே புரிகிறது. ஆனால் அது விழலுக்கு இறைத்த நீராகவும் மாறிவிடுகிறது. அதர்வா, ரவி மோகன் ஆகியோருமே நன்றாக நடித்துள்ளனர். ஆனால் ரவி மோகனின் கதாபாத்திர உருவாக்கத்தின் பிரச்னையினால் அவரது நடிப்பில் ஒன்ற முடியவில்லை.

அடுத்ததாக, படத்தின் இரண்டாம் பாதியில் வரும் பல காட்சிகள் ஓரளவு நன்றாக உள்ளன. ஆனாலும் நான் சொன்னதுபோல, படத்தின் முதல்பாதியில் படம் பார்க்கும் ஆடியன்ஸைப் பிரம்பால் அடித்த திரைக்கதையால், இத்தனை தீவிரமான காட்சிகள் இடம்பெற்றும் உளவியல் ரீதியாக நம்மால் படத்தில் ஒன்ற முடிவதில்லை.

படத்தின் இறுதியில் எதற்காக இத்தனை கேமியோக்கள்? கூடவே எதற்காக இத்தனை மொழிகள்? தென்னிந்திய மொழிகள் அனைத்துமே அந்தந்த மாநில நடிகர்களால் கேமியோக்களில் சரிசமமாகப் பங்கிடப்பட்டுக் காட்டப்படுகின்றன. இவைதவிர, பெங்காலி போன்ற மொழிகளும் வருகின்றன. இது மொழி பற்றிய படம்தான். அதற்காக இப்படியா? இத்தனை மொழிகளைப் பற்றியும் காட்டுவேன் என்றால் துவக்கம் முதல் மதராஸில் தமிழ் மொழி சார்ந்த போராட்டமாகவே சொல்லப்பட்டுவந்த கதை ஏன்? முதலில் இருந்தே எல்லா மொழிகள் பற்றியும் சொல்லி இருக்கலாமே? தனிப்பட்ட, தமிழ்நாடு சார்ந்த மொழிப்போராட்டமாகவே அறியப்பட்டு வந்த ஒரு போராட்டத்தை எதற்காக அனைத்து மொழி சார்ந்த போராட்டமாக முன்வைக்கவேண்டும்? இன்றுவரை கர்நாடகத்தில் மும்மொழிக் கொள்கைதான். எனக்குத் தெரிந்து தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன் (தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்). கேரளத்தில் எப்படி என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த அத்தனை மலையாளிகளுமே இந்தி நன்றாகப் பேசுவார்கள்.

அப்படி இருக்க, தமிழகத்தில் மட்டுமே அப்போதைய முதல்வர் அண்ணாதுரை இருமொழிக் கொள்கையை அறிவித்து இன்றுவரை அது சிறப்பாகவே நடக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அப்போதைய தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து எழுந்த போராட்டம். அப்படி இருக்க, எதனால் இது நீர்க்கப்பட்டு, அனைத்து மொழிகள் சார்ந்த போராட்டம் என்று படத்தில் அறிவிக்கப்பட்டது? (இந்த இடத்தில், சூரரைப் போற்று படத்தில் சுயமரியாதைத் திருமணத்தில் பெரியார் படத்தைத் தெலுங்கு டப்பிங்கில் அகற்றிய சம்பவம் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது).

ஒரு அரசியல் படத்தை இயக்கும் இயக்குநருக்கு ஆழமான அரசியல் ஞானம் இல்லாவிட்டாலுமே, ஓரளவு அரசியல் தெளிவு இருக்கவே வேண்டும். மாறாக, எந்த விதமான அரசியல் ஞானமும் இல்லாமல், வெறுமனே ஒரு vigilante படம் போலவே முக்கியமான ஒரு பிரச்னையைக் கையாளும் படத்தை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் சுதா. இதை சுட்டிக்காட்டாமல் எப்படித் தவிர்ப்பது? இதுவரை வந்திருக்கும் சுதாவின் படங்களைப் பார்த்தால், சமூகப் பிரச்னைகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை தன்னிஷ்டத்துக்கு வலிந்து வளைத்து, சம்பவங்களைக் கண்டபடி மாற்றியே எடுத்து வந்திருக்கிறார். இந்த டெம்ப்ளேட் அவசியம் ஒத்து வராது. பராசக்தி போல ஒரு கட்டத்தில் கைவிட்டுவிடும்.

இனியாவது எழுதும் கதை சார்ந்த அரசியலை நன்றாக ஊன்றிப் படித்துத் தெளிவாகி (சாவர்க்கரை திடீரென்று பாராட்டி மன்னிப்புக் கேட்டுக்கொண்டதைப் போல அல்லாமல்), அதன்பின்னரே திரைக்கதை எழுதுமாறு சுதாவைக் கேட்டுக்கொள்கிறேன். அது அவசியம் அவருக்கு நன்மையையே கொடுக்கும்.

பின்குறிப்புகள்

1. எனது சூரரைப் போற்று விமர்சனம் – இங்கே படிக்கலாம்.

2. திமுகவைச் சேர்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களைப் படத்தில் காட்டிவிட்டார்கள் என்பதற்காகவே திமுக அனுதாபிகளில் பலர் பராசக்தியை வலிந்து பாராட்டுவதைப் பார்க்கிறேன். நான் மேலே சொல்லியுள்ள கருத்துகளை மனதில் வைத்துக்கொண்டு, எந்த சார்புநிலையும் இல்லாமல் படம் பற்றி யோசித்துப் பாருங்கள். அதுதான் சினிமாவுக்கு நல்லது. இல்லையென்றால் இப்படி சில தலைவர்களைக் காட்டி, சில புரட்சி வசனங்களை வைத்தாலே தமிழகத்தில் ஓடிவிடும் என்ற போலியான நம்பிக்கையை அது கொடுக்கும்.

3. புறநாநூறு என்பதே இந்தத் திரைப்படத்துக்கு மிகச்சரியான தலைப்பு. பராசக்தி என்பதை விட.

  Comments

6 Comments

  1. Vijay

    Maatru Cinemavi rasikum “cinema rasigargalin” ennamum idhuvay.upper caste unarvugal pola “upper language Pride” Naanum en moziyin literature pathi ellam therindhu kollamal chumma oru emotional aga mattum Mozhi unaruvu yarpaduvathu polavay thondrriyathu.

    Well written bro….enakum neriya thondriyathu “epavumay hero poradum podhu Avan graphe down agum podhu oru saatharana manithanin porathathi vida mudiyartchi ah kaamitcha kuda audience ku sema inspiration agum” neriya emotional scenes miss panitanga nu thonitchu.

    Reply
  2. Jeyapandian

    அதுல ஒன்னு பாருங்க.. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஹாஸ்டல் வளாகத்தில் ஷம்மி கபூர் ன் ஹிந்தி படம் ஓடும். அதை நிறுத்திவிட்டு அதர்வா கேரக்டர்.. நடிகர் திலகம் சிவாஜி நடித்த பராசக்தி என்ற திரைப்படத்தை புரொஜெக்டரில் ஓடவிடுவார். ஹிந்தி படத்திற்கு பதில் தமிழ் படத்தை பாருங்கள் என்பதற்கான எதிர்ப்பு மனநிலையைப் பிரதிபலிக்கும் காட்சி இது.. ஆனால் அவரே படத்தை மற்றவர்கள் பார்க்க விடாமல் ப்ரொஜெக்டர் முன்னால் நின்று மறைத்து விடுவார். என்ன இதெல்லாம்..

    Reply
  3. Dinesh

    இங்க பானிபூரி விக்கிற hindikaran na mattum face panna ipdi daan periya bhuthisaali maari review போடுவாங்க hindi theriyala naa nee indiane illa nu soldra original hindi wala ta pesi irundha theriyum… Intha படத்தோட seriousness நீங்க சொன்ன ஒண்ணுக்கும் என்னால பதில் சொல்ல முடியும் but உங்களுக்கு adhu புரியாது புரிஞ்சலும் புரியாத மாறி nadippinga

    Reply
    • பரிமளசெல்வன்,

      சினனிமா

      Reply
    • பரிமளசெல்வன்,

      சினனிமா

      Reply

Join the conversation