A Perfect World (1993) – English
இந்தத் தளத்தைப் படித்து வரும் நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும் – எனக்கு மிகப்பிடித்தமான ஹாலிவுட் நடிகர், கெவின் காஸ்ட்னர் என்பது. படு கேஷுவலான நடிப்புக்குச் சொந்தக்காரர். அவரது படங்களைப் பற்றி இதுவரை மூன்று முறைகள் எழுதியாயிற்று. இன்னும் அவரைப் பற்றி எழுத வேண்டியது நிறைய இருக்கிறது.
எனது பள்ளி நாட்களில், இவரது படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அன்டச்சபிள்ஸ், ஜேஎஃப்கே, பாடிகார்ட், மெஸேஜ் இன் எ பாட்டில், வாட்டர்வேர்ல்ட், டான்ஸஸ் வித் வுல்ஃப்ஸ், ரிவெஞ்ச், ராபின் ஹூட்: ப்ரின்ஸ் ஆஃப் தீவ்ஸ் போன்ற பல படங்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் விட, படு ஃப்ளாப் ஆன ஒரு படம் – 3000 மைல்ஸ் டு க்ரேஸ்லாண்ட் – இப்படத்தில் அவரது நடிப்பு எனக்கு மிகப்பிடித்திருந்தது. அனாயாசமான ஒரு கொடூர வில்லன் வேடம். பிய்த்து உதறியிருப்பார் காஸ்ட்னர். அவரது வெற்றிக்குக் காரணமே, அவரது இந்த அட்டகாசமான நடிப்புதான். சற்றும் போர் அடிக்காமல் கதையை நகர்த்துவார். Screen Presence என்ற வார்த்தைக்கு இவரை மிக எளிதில் உதாரணம் காட்ட முடியும். மிகத்திறமையான இயக்குநரும் கூட.
க்ளிண்ட் ஈஸ்ட்வுட். இவரைப்பற்றி என்ன சொல்வது? இவரைப்பற்றி, அத்தனை திரைப்படப் பதிவுகளிலும் குறைந்த பட்சம் ஒரு கட்டுரையாவது பார்க்க இயலும். இவரது டாலர் ட்ரையாலஜி படங்களை எண்ணற்ற முறைகள் பார்த்திருப்பேன். ஆனால், அவைகளை விட, டர்ட்டி ஹாரி ஸீரீஸ் தான் எனக்குப் பிடிக்கும். இவருமே, எத்தகைய வேடத்தையும் அடி தூள் பறத்துபவர். இவரது ‘Bridges of Madison County’, இதுவரை நான் பார்த்த ரொமாண்டிக் திரைப்படங்களில் தலைசிறந்த ஒரு படம். இவரது டைரக்ஷன் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
கெவின் காஸ்ட்னர் – க்ளிண்ட் ஈஸ்ட்வுட் – இந்த இரு அருமையான இயக்குநர்களும் ஒன்று சேர்ந்தால்? என்ன நடக்கும் என்பதற்குச் சிறந்த உதாரணமே A Perfect World.
குழந்தைகளின் உலகம் அலாதியானது. தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து குழந்தைகள் எண்ணற்ற விஷயங்களைக் கற்றுக்கொள்கின்றன. அவர்களையே தங்களது ஆதர்சமாகவும் கொண்டிருக்கின்றன. எந்த வித சந்தோஷமும் கிடைக்கப்பெறாத ஒரு குழந்தைச் சிறுவன், திடீரென எந்தக் கட்டுப்பாடும் இல்லாத மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் வாழ்வை வாழ நேர்ந்தால்?
அறுபதுகளின் முற்பகுதி. டெக்ஸாஸ். சிறை. புட்ச் என்ற ராபர்ட் ஹெய்ன்ஸ் (காஸ்ட்னர்), மற்றொரு கைதியுடன் சேர்ந்து, சிறையில் சுரங்கம் தோண்டித் தப்பிக்கிறான் (ஷஷான்க் ரிடெம்ப்ஷன் அல்லவே அல்ல .. ஹீ ஹீ). இந்த புட்ச், ஒரு மூளைக்காரன். டெக்ஸாஸின் ஒட்டுமொத்த ஜனங்களிலும், மிகமிகப் புத்திசாலிகளான இரண்டு பேரில், இவன் ஒருவன். இன்னொரு ஆள் யாரென்று பின்னால் பார்ப்போம். இவனுடன் தப்பிப்பது, டெரி என்ற முரடன். அவன் ஒரு ஸைக்கோவும் கூட. தப்பித்து வெளியேறும்போது, அங்குள்ள ஒரு போலீஸ்காரரை மடக்கி, அவரது காரில் ஒளிந்துகொண்டு தப்பிக்கின்றனர் இருவரும். அதன்பின் அந்தப் போலீஸ்காரர், காரின் டிக்கியில் கட்டிவைக்கப்படுகிறார்.
சிறையிலிருந்து வெளிவரும் இருவரும், கார் ஒன்றைத் திருடும் நோக்கத்துடன், இரவில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் நடமாடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட காரைத் திருடச் செல்லும் டெரி, பக்கத்தில் ஜன்னலில் விளக்கு எரிவதால், அங்கு செல்கிறான். அந்த வீட்டின் உரிமையாளரான பெண், சமையலறையில் போட்ட விளக்கே அது. ஸைக்கோவான டெரி, அந்தப் பெண்ணை மடக்குகிறான். அவளை வன்கலவி செய்ய முயற்சிக்கும் வேளையில், அங்கு வந்துவிடும் புட்ச்சினால் கடுமையாகத் தாக்கப்படுகிறான். இதற்குள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரத்தொடங்க, அங்கு மலங்க மலங்க விழித்துக்கொண்டே நின்றுகொண்டிருக்கும் ஒரு சிறுவனைத் தங்களுடன் பணயக்கைதியாக வைத்துக்கொள்ளலாம் என்று புட்ச் சொல்கிறான். இதனால், அந்தச் சிறுவனைத் தூக்கிக்கொண்டு இருவரும் தப்பிவிடுகின்றனர்.
இருவரும் தப்பித்த செய்தி, போலீஸுக்கு எட்டுகிறது. டெக்ஸாஸில் ரேஞ்சராக இருக்கும் ரெட் (ஈஸ்ட்வுட்), தப்பித்த இரண்டு கைதிகளையும் பிடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அவருக்கு ஒரு சிக்கல். அன்றுதான் தனது அலுவலகத்துக்குப் புதிதாகப் பொறுப்பெடுத்துக்கொள்ள வந்திருக்கும் ஸாலி கெர்பர் (லாரா டெர்ன் – ஜுராஸிக் பார்க் கதாநாயகி) என்ற கிரிமினாலஜிஸ்ட்டின் வளவளா பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கும் கொடுமையே அது. ஏற்கெனவே கைதிகள் தப்பித்த கடுப்பில் இருக்கும் ரெட், இந்தப் பெண், தன்னைப் பேசியே கொல்லும் சித்ரவதையினால் கொலைவெறிக்கு ஆளாகும்போது, அந்த ஊரின் கவர்னருக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு காரவேன் வண்டி, அவருக்குக் கிடைக்கிறது.
சட்டென்று அந்த வண்டியில் ஏறி, இந்த வளவளா ஸாலியோடும், இன்னும் சில போலீஸ் அதிகாரிகளோடும், தப்பித்த கைதிகளைப் பிடிக்கும் வேட்டையில் குதிக்கிறார் ரெட்.
அங்கே… புட்ச்சும் டெரியும், காரில் பறந்துகொண்டிருக்கின்றனர். ஒன்றுமே புரியாமல் திருதிருவென முழிக்கும் சிறுவன் பிலிப்பைன் மேல், டெரிக்கு ஒரு கண். அவன் ஒரு பீடஃபைலாக வேறு இருப்பதால், ஒரு கட்டத்தில், புட்ச் ஒரு கடைக்குச் சென்றிருக்கையில், பிலிப்பிடம் சில்மிஷம் செய்ய முற்படுகிறான். ஆனால், பிலிப் காரில் இருந்து குதித்து, பக்கத்தில் இருக்கும் ஒரு வயல்வெளியில் ஒளிய, அவனை வெறியுடன் தேடும் டெரி, திடீரென தன்முன் யாரோ ஒளிந்து நிற்பதைக் காண்கிறான்.
டுமீல் !!!
டெரி இறந்து விழுகிறான். சுட்டது, புட்ச்.
சிறுவன் பிலிப்புடன், ஓட்டத்தைத் தொடர்கிறான் புட்ச். பிலிப்புக்குத் தேவையான உடைகளை வாங்கிக்கொடுக்கிறான். அவனுடன் மிக நட்பாகப் பேசுகிறான். ஒரு படு சீரியஸான, இதுவரை வாழ்க்கையில் எந்தச் சந்தோஷத்தையும் அனுபவிக்கத் தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பிலிப், தனது வாழ்வின் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க நேர்கிறது. எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல், வாழ்வை அனுபவித்துச் செல்லும் புட்ச், அவனுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கமாக இருக்கிறான். எனவே, மிக மெதுவாக, வாழ்வை ரசிக்கத் துவங்குகிறான் சிறுவன் பிலிப். படத்தின் இந்தக் கட்டத்தில், புட்ச், பிலிப்புடன் நிகழ்த்தும் உரையாடல்கள் மிக அருமையானவை. தனது வழிகாட்டியாக – நேவிகேட்டராக பிலிப்பை அமர்த்தும் புட்ச், ஒவ்வொரு விஷயத்தையும் அவனது கருத்தையும் கேட்டே முடிவு செய்கிறான். தானும் ஒரு முக்கியமான விஷயமாக இருப்பது, பிலிப்புக்குப் பிடித்திருக்கிறது.
வழியில் இருக்கும் ஒரு வீட்டில் உள்ள காரைத் திருடுகிறார்கள் இருவரும். அப்போது, தங்களிடம் எதுவுமே இல்லாத நிலையில், உயிர் வாழ்வதற்காக, திருடுவது தப்பில்லை என்று புட்ச் பிலிப்பிடம் சொல்கிறான். இது, பிலிப்பின் மனதில் பதிந்து விடுகிறது. பின்னால் ஒரு கடையில், தனக்குப் பிடித்த ஹாலோவீன் காஸ்ட்யூம் ஒன்றை – கேஸ்பர் என்ற அன்பான பேயின் உடையை (பை த வே – காஸ்பர் படம் பார்த்திருக்கிறீர்களா? கடைசியாக, அண்மையில் 2000ல் HBOவில் பார்த்தது. அதன் க்ளைமேக்ஸ், என் மனதை உருக்கியது) பிலிப் திருடுவதற்கு, இந்த வாக்கியம் தூண்டுகோலாக அமைகிறது.
கேரவேனில், க்ளிண்ட் ஈஸ்ட்வுட் கூட்டணி, இவர்களின் பின்னாலேயே வந்துகொண்டிருக்கிறது. வரும் வழியில், சிறுவயதில் குற்றங்கள் புரியும் குழந்தைகள் பற்றிப் பேச்சு வருகிறது. அப்போது, ரெட், தனது இளமைப்பருவத்தில் நடந்த ஒரு கதையை ஸாலிக்குச் சொல்கிறார். தண்டனை அனுபவிக்க இருந்த புட்ச் என்ற சிறுவனை, நீதிபதியிடம் சென்று பேசி, பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்த உண்மை அவரது வாயிலிருந்து வெளிவருகிறது. அந்த புட்சைத்தான் இப்போது தாங்கள் துரத்திக்கொண்டிருக்கிறோம் என்பது ஸாலிக்குப் புரிகிறது.
ஊரெங்கும் போலீஸ் புட்சைத் தேடுவதால், சாதுர்யமாக இன்னொரு குடும்பத்தின் காரில் லிஃப்ட் கேட்டு வாங்கிக்கொண்டு தங்களது பயணத்தைத் தொடர்கிறது புட்ச் கூட்டணி. அலாஸ்கா சென்று அடைய வேண்டும் என்பது புட்ச்சின் எண்ணம்.
வழியில், ஒரு இரவு விடுதியில், உணவு உண்ண நேர்கிறது. அங்கே இருக்கும் பெண், புட்ச்சுக்கு சிக்னல்கள் கொடுத்தபடி இருக்க, சிறுவன் பிலிப்பை வெளியே அனுப்பிவிட்டு, அந்தப் பெண்ணும் புட்ச்சும் கில்மா செய்ய, அதனை ஜன்னலில் இருந்தபடியே பார்த்துக்கொண்டிருக்கிறான் பிலிப். இதனைக் கண்டவுடன், அவளை விட்டுவிட்டு, பிலிப்புடன் கிளம்பிவிடுகிறான் புட்ச். பிலிப்பின் மீது எந்தக் கோபமும் இல்லை என்று சொல்கிறான்.
இரவைக் கழிக்க, ஒரு வயல்வெளியில் தூங்கும் புட்ச்சையும் பிலிப்பையும், அங்கு வரும் ஒரு டிராக்டர் எழுப்புகிறது. அந்த வயலை உழ வரும் ஆள், இவர்களைக் கண்டு, இவர்கள் களைப்புடன் இருப்பதைப் புரிந்துகொண்டு, தனது வீட்டுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறான். அவனுக்கு ஒரு பேரன். சற்று மந்தமாக இருப்பவன். அந்தப் பேரனை, எப்பொழுது பார்த்தாலும் அடித்த வண்ணமே இருக்கிறான் அந்த ஆள். இது, புட்ச்சுக்குக் கோபத்தை வரவழைக்கிறது. தனது துப்பாக்கியை மெதுவாக வெளியே எடுக்கிறான் புட்ச்.
இதன்பின் என்ன ஆனது? புட்ச் என்ன செய்தான்? அவர்களைத் துரத்தி வரும் ரெட் கும்பலால் புட்ச்சைப் பிடிக்க முடிந்ததா? படத்தைக் காணுங்கள்.
எனக்குத் தெரிந்து, நான் இதுவரை பார்த்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் படங்களிலேயே , எனக்கு மிகவும் பிடித்தவைகளில் இது தலையாய ஒன்று. மிக அருமையான படமாக்கம். காஸ்ட்னரும் சரி.. ஈஸ்ட்வுட்டும் சரி.. பின்னியெடுத்திருக்கிறார்கள். குறிப்பாக காஸ்ட்னர். சிறுவன் பிலிப்பின் கண்களில், ஒரு பிரம்மாண்ட இன்ஸ்பிரேஷனாக மெல்ல மெல்ல மாறும் அந்த நடிப்பு, அபாரம்.
அதே போல், ஈஸ்ட்வுட். வழக்கப்படி, தனது டர்ட்டி ஹாரி கதாபாத்திரத்தின் உணர்வுகளை இங்கே வழங்கியிருக்கிறார். அனாயாசமான கோபம், டக் டக்கென்று அவர் உதிர்க்கும் பன்ச்சுகள் ஆகியவை சூப்பர்.
இப்படம், ஒரு ஜாலியான ரோலர்கோஸ்டர் ரைட் என்று சொல்லலாம். அதே சமயம், மனதில் ஒரு கனத்தை உணர்வீர்கள்.
A Perfect World படத்தின் ட்ரெய்லர் இங்கே
நல்ல விமர்சனம் கருந்தேள்.
என்னுடைய பேவரிட் படம்.
இது எனக்கு விருப்பமான படங்களில் ஒன்று…உங்களுடைய விமர்சனம் அருமை
நீங்க prestige பட விமர்சனம் எழுதி இருந்தால் அதை கொஞ்சம் share செய்யவும்…
நண்பரே,
நல்ல திரைப்படம் குறித்த சிறப்பான பார்வை.
நல்ல படம் நல்ல விமர்சனம். இந்த படம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. மனதில் மீண்டும் ஆசை. முயற்சிக்கிறேன் பார்க்க….
A perfect review dear thelu. Keep the good work.
தூண்டுகிறது உங்கள் பதிவு பார்க்க படத்தை உடனே (கு: இது இல்லை Template பின்னூட்டம்)
(இன்னும் பார்க்கல. கண்டிப்பா பார்க்கத்தான் போறேன். ஆனா ஈஸ்ட்வுட்காக)
அருமையான விமர்சனம் கருந்தேள்!!
இந்தப் பதிவை வாசித்தவுடனேயே நானும் கெவின் காஸ்ட்னருக்கு ரசிகனாகிவிட்டேன்!!
Karundhel, I read ur review about kevin costner’s dances with the wolves, a few days after u posted it and added in the comments section about posting ur views on this movie. (But it was after several days and you may not have a chance to see that comment)… So I am pleasantly surprised to see this movie review today.. This is one of my favourite (as is for many people here). Thanks for the review.
நண்பா,
அருமையான விமர்சனம்,
நான் டவுன்லோடு போட்டுவிட்டேன்,ஈஸ்ட்வுட்டைப்பற்றி விவரித்ததே பார்க்க வைக்கிறது,கெவின் காஸ்ட்னரின் மொக்கைபடம் ச்விங் வோட் என்று ஒன்று பார்த்தேன்,அந்த படம் பார்த்திருக்க கூடாதுதான்.
@ denim – அடடே… யூ த ஃபர்ஸ்ட் ? நன்றி 🙂
@ விஸ்வா – அடி சூப்பரு !! என்னுதும் தான் 😉
@ கௌதமன் – உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. ப்ரஸ்டீஜ், நான் இன்னும் எழுதவில்லை. நம்ம ஹாலிவுட் பாலா அதனைப் பற்றி எழுதியுள்ளார். அதுவே நன்றாக இருக்கும். இன்னும் பல நண்பர்களும் அப்படத்தைப் பற்றி எழுதியுள்ளனர். நம் கீதப்ரியன் கூட எழுதியுள்ளதாக நினைவு. அவரது தளத்தில் பாருங்கள்.. அங்கேயே பாலாவின் முகவரியுன் கிடைக்கும்.. இது, நண்பர் கீதப்ரியனின் முகவரி – http://geethappriyan.blogspot.com/
@ காதலரே – என்னுடைய 3000 Miles to Graceland பதிவின் பின்னூட்டத்தில், நீங்கள் இப்படம் பற்றி எழுதியுருந்தது எனக்கு நன்றாக நினைவுள்ளது (பின்னே.. இப்பதானே போயி பார்த்தேன்.. ஹீ ஹீ..).. நன்றீ..
@ எஸ்.கே – கட்டாயம் பாருங்க. மிஸ் பண்ணக் கூடாத படம் இது.. நன்றி ..
@ மயிலு – இது ஒண்ணும் டெம்ப்ளேட் பின்னூட்டம் இல்லையே ? 🙂 ஹீ ஹீ
@ கொழந்த – ஈஸ்ட்வுல் இதுல கௌரவ வேடம் மட்டுமே 🙂 .. ஈஸ்ட்வுட்டுக்காகப் பார்த்தா கடுப்பாயிருவீங்க.. காஸ்டருக்காக மட்டுமே பார்க்கவும் 😉
@ JZ – நண்றி.. நீங்க போன பதிவுல உங்க லின்க் குடுத்துருந்தீங்க.. அதை நாளைக்குப் பார்க்கிறேன்… ரைட்டா..
@ Sinna – 😉 .. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.. இப்படம், நீங்கள் சொல்லியது போல, பலருக்கும் ஃபேவரைட் படமாக உள்ளது.. எனக்கும். நீங்கள், டான்ஸஸ் வித் வுல்ஃப்ஸ் பதிவில் போட்ட பின்னூட்டத்தை நான் பார்த்தேன்.. ஆனால் பதில் போட முடியவில்லை. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் … உங்கள் சந்தோஷத்தைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது 😉
@ கார்த்திகேயன் – நண்பா.. கட்டாயம் இந்தப்படம் உங்களுக்குப் புடிக்கும்னு நினைக்கிறேன்.. ஸ்விங் வோட் நான் பார்த்ததில்லை… இனிமேலும் பார்க்கமாட்டேன் 😉 .. அதான் மொக்கைன்னு சொல்லிப்புட்டீங்களே 😉 ..
கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் தேளு.. பாத்துர வேண்டியதுதான் .. Thanks…
ணா…நா சொல்லலாம்னு நெனச்சு சொல்லாமவிட்டது…மேல இருந்த படங்கள்.டைரக்டரவிட அதிக தடவ அந்த போஸ்டரை நாங்க தான் பார்த்திருபோம். ஆனா casanovaவா..என்னமோ போங்க..அதேமாதிரி சில widgetகளையும் கொஞ்சம் டிங்கரிங் பண்ணா என்னய மாதிரி ஸ்லோ-நெட் கனேக்ஸ்சன் வைத்திருப்பவர்களுக்கு வசதியா இருக்கும். பாத்து ஏதாவது பண்ணுங்க..
இந்தப் படம் பல நாளா பார்க்கணும்னு நினைச்சுகிட்டே இருக்கிற படம்.இதில்,கடத்தி வரப்பட்ட ஒரு சிறுவனுக்கும் கடத்திவந்தவனுக்கும் இடையில் இருக்கும் அந்த உறவு அற்புதமாக காட்டப்பட்டு இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.சீக்கிரம் பார்க்கிறேன்.
“the way home” vimarsanam ethirparkren ungalidamidundhu ..
http://en.wikipedia.org/wiki/The_Way_Home
எனக்கு பிடித்த படம் என்றால் Water world தான்
இந்த படம் பார்த்ததில்லை ஆனா நீங்க இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம் கண்டிப்பா பாத்துடுவோம்
.
கெவின் ரசிகனான நான் எப்படி இப்படத்தை மிஸ் பண்ணினேன்???????கடையில் கூட டிவிடி இல்லை.ஒரு காப்பி அனுப்பவும்..குரியரில்
@ இராமசாமி கண்னன் – 🙂 முதல் முறையா படு லேட்டா வந்திருக்கீங்க 😉 .. பாலா என்ன ஆனாரு? அப்டேட்ஸ் தேவை 😉
@ கொழந்த – ஹாஹாஹ்ஹா.. இப்பதான் மாத்திட்டேனே போஸ்டருங்களை.. 😉 இனி அடிக்கடி மாத்திக்கினே இருப்பேன் ;-).. அவற்றைக் க்ளிக் செய்து என்னுடைய பழைய விமர்சனங்களைப் படிக்கவும் 😉 .. விட்ஜட்டுகளை டிங்கரிங் செஞ்சிரலாம் சீக்கிரமே 😉
@ இலுமி – ஆமாம்.. உறவு அற்புதமா இருக்கும். பார்த்துவிடவும் 😉
@ ராம் – த வே ஹோம் விமர்சனம், என்னுடைய ஆங்கில ப்ளாக்கில் சென்ற வருடம் எழுதியிருக்கிறேன்.. இதோ லின்க் – http://giriraajan.blogspot.com/2009/03/world-movie-series-7-way-home.html. இங்க போயி படிச்சிப் பாருங்க.. தமிழ்ல வேணும்னு சொன்னா, கொஞ்ச நாள் கழிச்சி எழுதுறேன் . நன்றி
@ சிபி – வாட்டர் வேர்ல்ட் எனக்கும் புடிக்கும்.. ஆனா இது ரொம்பப் புடிக்கும் 😉 ..
@ உலக சினிமா ரசிகரே – நமக்கெல்லாம் ஒரு ப்ரச்னைன்னா அந்த தெய்வத்துகிட்ட போலாம்.. ஆனா அந்த தெய்வத்துக்கே ஒரு ப்ரச்னைன்னா…… (தங்கப்பதக்கம் ஸ்டைலில் படிக்கவும்).. நீங்க இந்தப் படத்த பார்க்கலைன்னா உலகம் அழிஞ்சிராது?? 🙂
This comment has been removed by the author.
வாட்டர் வேர்ல்டு பார்த்தப்பவே நினைச்சேன்…யார்ரா இவன் இந்தப் போடு போடுறானே (நடிப்பில்தான்) என்று நினைத்தேன். கருந்தேளின் கருணையால் அவரைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. பார்த்திருவோம் பாஸு…படத்தப் பாத்திருவோம்…