Plagiarism Vs Inspiration: a practical note

by Karundhel Rajesh August 11, 2014   Cinema articles

‘Immature poets imitate, mature poets steal. Bad poets deface what they take from great poets and transform it into something better, or at least different’ – T.S.Eliot
‘Good artists copy, Great artists steal’ – Pablo Picaso
’I steal from every movie ever made’ – Quentin Tarantino

தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், இந்திய சினிமாக்களில் – ஆங்கில சினிமாக்களிலும் கூட – நகலெடுப்பது பலமுறை நடந்திருக்கிறது. உலகம் முழுக்க இன்னும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அதேசமயம் ‘இன்ஸ்பிரேஷன்’ என்ற வார்த்தையும் அடிக்கடி உபயோகிக்கப்படுகிறது. பல சமயங்களில் இப்படிக் காப்பியடிப்பதைத்தான் அந்த வார்த்தை நாசூக்காகக் குறிக்கிறது என்றாலும் இரண்டுக்கும் தெளிவான, எளிமையான வித்தியாசங்கள் உண்டு. சிலருக்கு அது தெரிந்திருந்தாலும், ஃபேஸ்புக்கிலும் தமிழ் இணையத்திலும் அவசர அவசரமாக எழுதப்படும் பல நிலைத்தகவல்களிலும் இந்த வித்தியாசம் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது தெரிகிறது. எனவே, இந்த இரண்டையும் கொஞ்சம் ஆழமாக, உதாரணங்களோடு கவனிப்போம். அப்போதுதான் இனி இந்தப் பதங்களை சரியாக உபயோகிக்கலாம். அதன்மூலம் அப்பட்டமான நகல்களை இன்னும் அழகாகக் கண்டுகொண்டும் விடலாம். இப்படி நகல்களைக் கண்டுகொள்ளும் விஷயத்தை இன்னும் தெளிவாகச் செய்யலாம்.

‘ப்லேஜியரிஸம்’ என்பதுதான் இப்படி நகலெடுப்பதைக் குறிக்கும் வார்த்தை. ப்லேஜியரிஸம் என்றால் என்ன?  இன்ஸ்பிரேஷன் என்றால் என்ன? இரண்டும் வேறு வேறா அல்லது ஒன்றா?[divider]

நீங்கள் ஒரு வேலையைச் செய்திருக்கிறீர்கள். அதற்காகக் கஷ்டப்பட்டு ஒரு அறிக்கை தயார் செய்கிறீர்கள். அந்த அறிக்கையை உங்கள் மேலதிகாரியிடம் அளித்திருக்கிறீர்கள். கொஞ்ச நாளில் அலுவலகத்தில் ஒரு அறிவிப்பு வருகிறது. மேலதிகாரி தயார் செய்த அறிக்கையின் காரணமாக அவருக்குப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. அந்த அறிக்கையைப் பற்றியும் அதில் உள்ளது. அதைப் படித்தால் அது நீங்கள் தயார் செய்த அறிக்கை. அவரது பெயரைப் போட்டுக்கொண்டு மேலதிகாரி பதவி உயர்வை வாங்கிவிட்டார். மேலதிகாரி தாக்கல் செய்த அறிக்கையை முழுதாக அலுவலகத்தில் வெளியிடுகிறார்கள். அதைப் படித்தால் சந்தேகமே இல்லாமல் அது உங்கள் அறிக்கையின் முழுமையான நகல் என்று தெரிகிறது. அதில் ஆங்காங்கே சில வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன. உங்களின் அடிமனதில் அப்போது எழுமே ஒரு ஆற்றாமை கலந்த கோபம்? அந்த உணர்ச்சி உங்களை முழுதாக அரித்துத் தின்ன ஆரம்பித்துவிடும்.

இதுதான் ப்லேஜியரிஸம். அடுத்தவரின் வேலையை அனுமதியில்லாமல் திருடுவது.

இதே சிச்சுவேஷனில், உங்கள் மேலதிகாரி உங்களிடமிருந்து திருடிய அறிக்கையில் மைய ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றபடி உங்கள் அறிக்கையை விடவும் மிகச்சிறப்பாக ஒரு அறிக்கையைத் தயார் செய்து அனுப்புகிறார் என்றால் அது  ப்லேஜியரிஸம் அல்ல. உங்கள் ஐடியாவினால் அவர் இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார் என்பதுதான் பொருள். உங்கள் ஐடியாவினால் கவரப்பட்ட மேலதிகாரி, அதைவிடவும் சிறப்பான ஒரு யோசனை எழுந்ததால் இப்படி ஒரு அறிக்கையைத் தயார் செய்திருக்கிறார். அது முற்றிலுமே அவரது உழைப்புதான். யோசனை மட்டும் ஒன்றாக இருந்தாலும் அது காப்பி அல்ல. அதேசமயத்தில், உங்கள் யோசனையினால் கவரப்பட்டு, அவருக்குத் தோன்றும் யோசனைகளை வைத்துத் தயார் செய்யப்பட்ட அந்த அறிக்கை உங்கள் அறிக்கையை விடவும் மோசமாகவும் இருக்க வாய்ப்பும் உண்டு என்பதையும் மறக்கக்கூடாது. எப்படி இருந்தாலும் அது ப்லேஜியரிஸம் அல்லவே அல்ல. இது இன்ஸ்பிரேஷன் என்றே அழைக்கப்படும். அதாவது, ஏற்கெனவே இருக்கும் ஒரு விஷயத்தால் கவரப்பட்டு அந்த உந்துதலால் பிரத்யேகமான இன்னொரு பொருள் உருவாக்கப்படுவது. இரண்டுக்கும் சம்மந்தமே இல்லாமலும் இருக்கலாம். அல்லது இரண்டின் மைய ஐடியாக்கள் மட்டுமே ஒன்றாகவும் இருக்கலாம். இந்த இடத்தில் உங்கள் முதலாளி அவரது அறிக்கையில் உங்களுக்கு நன்றி தெரிவிக்க முடிவு செய்யலாம். தெரிவிக்காமலும் இருக்கலாம்.  அது அவரது இஷ்டம். அதனால் தவறு இல்லை. ஏனெனில் உங்களுக்கு மட்டுமே அது தழுவல் என்பது தெரியும். அப்படிப்பட்ட சூழலிலும் அவர் உங்களுக்கு நன்றி தெரிவித்தால் அது அவரது பெருந்தன்மைதான்.

இதுதான் ‘ப்லேஜியரிஸம்’ என்ற காப்பி மற்றும் இன்ஸ்பிரேஷன் ஆகியவற்றுக்கான வித்தியாசம்.[divider]

ஒரு சிச்சுவேஷன்.

A என்பவர் வெளிநாட்டில் வாழ்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு படத்தை ஆங்கிலத்தில் எடுத்து வெளியிடுகிறார். படம் நன்றாக ஓடுகிறது/பெட்டியில் படுத்துக்கொள்கிறது. A வேறு படங்களை இயக்கக் கிளம்பிவிட்டார். அவரது படம் மறக்கப்பட்டும் விட்டது. இப்போது B என்று இந்தியாவில் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஏதோ ஒரு உலகப்பட விழாவில் A இயக்கிய படத்தை B பார்க்கிறார். சடாரென்று அவருக்குள் ‘படம் நல்லா இருக்கே?’ என்று தோன்றுகிறது. B இந்திய சினிமாவில் – தமிழ்நாட்டிலும் புகழ்பெற்றவர் என்பதால் அந்த எண்ணம் வந்ததுமே அவர் சும்மா இருக்கவில்லை. உடனடியாக வீடு சென்று அந்தப் படத்தை மையமாக வைத்துத் தமிழுக்கு ஏற்றபடி ஒரு கதையை உருவாக்குகிறார். ஒரு தயாரிப்பாளரைக் கன்வின்ஸ் செய்கிறார். படம் எடுக்கப்பட ஆரம்பிக்கிறது. விளம்பரங்கள் வருகின்றன. படம் வெளியாகிறது.

ஆடியன்ஸ் படம் பார்க்கும்போது அதில் ஒருவர் A இயக்கியிருந்த ஒரிஜினல் படத்தைப் பார்த்திருப்பவர். அவருக்குப் பளீரென்று ‘இது அந்தப் படமாச்சே?’ என்ற கேள்வி எழுகிறது. அதனை ஒரு பதிவாகவோ ஸ்டேட்டஸாகவோ இணையத்தில் பகிர்கிறார். விஷயம் பரவுகிறது.

இப்போது, B செய்தது என்ன?  ப்லேஜியரிஸம் என்கிற திருட்டா? அல்லது இன்ஸ்பிரேஷன் மட்டுமா?[divider]

இதை காப்பி என்றோ இன்ஸ்பிரேஷன் என்றோ எப்போது நம்மால் தெளிவாகச் சொல்லமுடியும்? அந்த இரண்டு படங்களையும் முதலில் நாம் பார்த்திருக்கவேண்டும். அப்படிப் பார்த்தபின்னர்தான் காட்சிகளை ஒப்பிட்டு அது காப்பியா அல்லது இன்ஸ்பிரேஷனா என்று தெளிவாகச் சொல்லமுடியும். ஆனால் இங்கேதான் தமிழ் சினிமாவில் இன்னொரு விஷயம் குறுக்கே வருகிறது.  என்னை வைத்தே அது என்ன என்று பார்க்கலாம்.

ஒரு விமர்சகனாக என்னை உதாரணம் எடுத்துக்கொண்டால், நான் கமல்ஹாஸனின் எதிரி என்று ஒரு மிகவும் நகைச்சுவையான கருத்தை சிலர் வேண்டுமென்றே அடிக்கடி திரும்பத்திரும்ப கூவிக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா? இவைகளை உண்மை என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக்கொண்டால், நான் கமல்ஹாஸனைப் பிடிக்காதவன். எனவே நான் அவரது பக்கம் ஒரு bias உள்ளவன் என்று அது நீள்கிறது. அதாவது, கமல்ஹாஸன் என்ன செய்தாலும் நான் அதை எதிர்ப்பேன் என்று அந்தக் கருத்து நீண்டு, எனவே நான் கமல்ஹாஸனைப் பற்றி எழுதுவது நடுநிலை தவறிய விமர்சனம் என்று முடிகிறது. இந்த biasness தான் தமிழ் சினிமாவுக்குக் குறுக்கே வரும் விஷயம். ஒரு படத்தை உள்ளது உள்ளபடி பார்க்காமல், ‘நான் இன்னாரின் ரசிகன்/எதிர்ப்பாளன்; எனவே என்ன ஆனாலும் இதைப் பாராட்டுவேன்/கண்மூடித்தனமாக எதிர்ப்பேன்’ என்ற எண்ணமாக இந்த biasness உருமாறுகிறது. இதனால் நடுநிலை தவறிய கருத்துகள் வெளியாகிறது. அந்தக் கருத்துகளால்/கட்டுரைகளால்/ஸ்டேட்டஸ்களால் தெருவின் ஓரமாக எப்போதும் அசைபோட்டுக்கொண்டே அமர்ந்திருக்கும் எருமைக்குக் கூட எந்தப் பிரயோஜனமும் இல்லை.

மாறாக, விமர்சனம் என்ற ஒன்றை எழுதும்போது இப்படிப்பட்ட biasகளைத் தூக்கிவீசிவிட்டு, உள்ளதை உள்ளபடி எழுதுவதே சிறந்தது. அதுதான் உண்மையான விமர்சனமாக இருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக அது தமிழில் மிகக்குறைவு. எழுதும் பலருமே யாராவது ஒருவர் மீதோ பலரின் மீதோ ஒரு பாரபட்சத்துடனேதான் இருக்கின்றனர். இதனால் அவர்கள் எழுத்து நம்பகத்தன்மையை எளிதில் இழக்கிறது. என்னையே எடுத்துக்கொண்டால், தமிழில் எனக்குப் பிடித்த நடிகர்/நடிகை யாரும் இல்லை. அதேபோல் பிடிக்காத நடிகர்/நடிகையும் யாரும் இல்லை. விமர்சனம் எழுதுவது என்று முடிவுசெய்தபின்னர் உடனடியாகவே பாரபட்சமற்ற வகையில் இருக்கவேண்டும் என்பதை முடிவுசெய்துகொண்டேன். எந்தப் பாரபட்சமும் இல்லாமல் வெளிப்படையாக விமர்சனங்கள் எழுதவேண்டும் என்பதே என் நோக்கம். இதுவரை அப்படித்தான் எழுதியும் வந்திருக்கிறேன். கமல்ஹாஸனையே எடுத்துக்கொண்டால், அவரது நகல்களைப் பற்றிய கட்டுரையை நான் 2010ல் எழுதியபோது அது மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கியது. அதுவரை அந்த நகல்களைப் பற்றிய விபரங்கள் பலருக்கும் தெரியவில்லை. இதன்விளைவாக அந்த ஒரிஜினல் படங்களைப் பலரும் பார்க்க ஆரம்பித்து, கமல்ஹாஸன் மீது இருந்த கண்மூடித்தனமான பக்தியை அறவே நீக்கிக்கொண்டனர். அந்தக் கட்டுரை பலரையும் இப்படியாக நடுநிலையாளர்களாகவும் மாற்றியது. அதேசமயம் நான் கமல்ஹாஸனைப் பாராட்டியும் எழுதியிருக்கிறேன். ‘இளையராஜா+கமல்ஹாஸன்= உன்மத்தம்’ என்ற ஒரு கட்டுரையில் ஹேராம் மற்றும் விருமாண்டியின் இசை பற்றியும் அந்த இசையைப் படமாக்கிய விதங்கள் பற்றியும் விரிவாகவும் எழுதியிருக்கிறேன். தினகரன் வெள்ளிமலரில் நான் எழுதிய ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தொடரில் கமல்ஹாஸனின் படங்கள்தான் அதிகமாக எடுத்துக்காட்டுகள் மூலம் விவரிக்கப்பட்டிருக்கின்றன. விமர்சகன் என்பவன் இப்படித்தான் செயல்படவேண்டும் என்று நினைக்கிறேன். நான் எடுக்கும் திரைக்கதை வகுப்புகளில் ‘விருமாண்டி’யின் க்ளைமேக்ஸ் சீக்வென்ஸ் பற்றி விரிவான ஒரு அலசல் தவறாமல் இடம்பெறும்.

போலவே, ‘விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமே இல்லை’ என்பது என் கருத்து. So called கடவுள் என்ற ஒரு character என் முன் வந்து பேசினால், அதையும் கேலி செய்யும் இயல்புடையவன் நான். அடிப்படையில் ஒரு icanoclast. பிம்பங்களை உடைப்பவன். இதை எனக்கு சொல்லிக்கொடுத்தவர் பெரியார். ‘ஆட்களின் மீது விமர்சனம் அல்ல; படைப்பின் மீதுதான் விமர்சனம்’ என்பதை நன்றாகப் புரிந்துகொண்டவன் நான். ஆரம்ப காலத்தில் இதையும் மீறி சில விமர்சனங்களில் தனிமனிதர்களைப் பற்றி நான் விமர்சித்தபோது அதைத் தயங்காமல் என்னிடம் சொன்னவர் கவிஞர் ராஜசுந்தர்ராஜன். உடனடியாக அவருக்கு நன்றி சொல்லி அந்தக் குறிப்பிட்ட விஷயத்தைத் திருத்திக்கொண்டுவிட்டேன்.

இதையெல்லாம் நான் இங்கு சொல்வதன் நோக்கம் சுய தம்பட்டம் அல்ல. ஒரு படம் காப்பி அல்லது இன்ஸ்பிரேஷன் என்பதை நடுநிலையாக இருந்து பார்த்தால்தான் புரிந்துகொள்ளமுடியும் என்பதால்தான். கமல்ஹாஸனின் அடிப்பொடியாக விளங்கும் நபர்களுக்கு என் கட்டுரையைப் படித்தால் எரியத்தான் செய்யும். அதேசமயம் ரஜினியின் அடிப்பொடி ஒருவர் அதைப் படித்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து கமல்ஹாஸனின் நகல்களைப் பற்றி இணையத்தில் பரப்புவார். இரண்டுமே தவறு. இப்படிப்பட்ட பாரபட்சம் சரியல்ல. அப்படிப் பாரபட்சமாக இருப்பவர்கள் எழுதாமல் இருப்பதுதான் பிறருக்கு அவர்கள் செய்யும் நன்மை என்பது என் கருத்து.[divider]

சரி. நடுநிலையாக மேலே சொல்லப்பட்ட உதாரணத்தை நோக்குகிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். அப்போது நாம் என்ன செய்யவேண்டும்? A எடுத்த படத்தை முதலில் பார்க்கவேண்டும். பின்னர் B எடுத்த படத்தைப் பார்க்கவேண்டும். காட்சிகள் அப்படியே வெட்டி ஒட்டப்பட்டுள்ளனவா? ஆம் எனில் அவசியம் அது நகல்தான் என்பதில் சந்தேகம் இருக்காது.  இல்லை- காட்சிகள் அப்படியே எடுத்து ஒட்டப்படவில்லை; படத்தின் கரு மட்டும்தான் பொதுவாக இருக்கிறது; இந்தப்படம் Bயின் சிந்தனைப்படிதான் முழுக்க எடுக்கப்பட்டுள்ளது’ என்றால், அது இன்ஸ்பையர் செய்யப்பட்டுள்ளது என்றே பொருள். இன்ஸ்பையர் என்பதற்குக் ‘கவரப்படுதல்’ என்பது பொருள். Aவின் கருத்தால் கவரப்பட்ட B, தனது பிரத்யேகமான வழிமுறைகளால் அந்தக் கருத்தை வைத்து இவரது பாணியில் ஒரு படம் எடுத்திருக்கிறார் என்று பொருள்.

ஆனால், காப்பியா இன்ஸ்பிரேஷனா என்பதில் குழப்பம் விளைவிக்கக்கூடியவை என்னவென்றால், சில காட்சிகள் ஒரே போன்று இருக்கலாம்; ஆனால் பெரும்பாலான படம் வேறுமாதிரி இருக்கலாம். இதை என்ன என்று சொல்வது? ஒரே போன்று இருக்கும் காட்சிகள் நகல்களா? அல்லது இரண்டுமே பிரத்யேகமாக அந்தந்த இயக்குநர்களின் பாணியில் இருக்கின்றனவா? பொதுவாக, எந்த பாரபட்சமும் இல்லாமல் பார்த்தால் நமக்கே அவை நகல்களா அல்லது இன்ஸ்பிரேஷன்களா என்பது புரியும். அதுதான் உண்மையாகவும் இருக்கும்.  வெட்டி ஒட்டப்பட்டுள்ள காட்சிகளாக அவை இருந்து, புதிதாக அவற்றின் மூலம் எந்த கலாபூர்வமான அனுபவமும் ஏற்படாமல், முந்தைய படத்தின் காட்சிகளின் நீட்சியாக மட்டும் இந்தக் காட்சிகள் இருந்தால் அவை அவசியம் காப்பிதான்.

உலகில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள gangster படங்களின் இன்ஸ்பிரேஷனாக Godfather தான் விளங்குகிறது. காட்ஃபாதருக்கு முன் – காட்ஃபாதருக்குப் பின் என்று கேங்ஸ்டர் படங்களைப் பிரிக்கலாம். காட்ஃபாதர் வெளிவந்த உடன் அதன் உள்ளர்த்தத்தைத் தமிழ் சினிமா உடனடியாகப் புரிந்துகொண்டது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு படம் தமிழில் வெளியாக மணி ரத்னம் வரவேண்டியிருந்தது. மணி ரத்னம் காட்ஃபாதரின் ரசிகர். கமல்ஹாஸனும் அப்படியே. ‘நாயகன்’ வெளியானது. பெரும்புகழ் பெற்றது. தமிழ்ப்படங்களில் இப்படிப்பட்ட திரைப்பட உருவாக்கம் மிகவும் புதியது. அதேசமயம், மணி ரத்னமும் கமல்ஹாஸனும் இது காட்ஃபாதரின் இன்ஸ்பிரேஷன்தான் என்பதைத் தெளிவாகவே பேட்டிகளில் குறிப்பிட்டனர். இதுதான் வெளிப்படையாக ஒரு திரைப்படத்துக்குச் செலுத்தக்கூடிய tribute. காட்ஃபாதரை அப்படியே தமிழில் எடுத்துவிட்டு, ‘இது நான் சொந்தமாக யோசித்தது’ என்று மணி ரத்னம் சொல்லியிருந்தார் என்றால் அப்போதைய காலகட்டத்திலேயேகூட தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை உதாசீனப்படுத்தியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ராம்கோபால் வர்மா ‘சர்க்கார்’ படத்தை எடுத்தபோது, அதன் டைட்டிலிலேயே ‘உலகெங்கும் கட்ஃபாதரால் இன்ஸ்பையர் செய்யப்பட்ட பல படங்களில் இதுவும் ஒன்று’ என்றே போட்டார். இவையெல்லாம் இன்ஸ்பிரேஷன்களுக்கு உதாரணங்கள். ஒரு திரைப்படம் இப்படி இன்ஸ்பையர் செய்யப்படும்போது – வெளிப்படையாக அதை உருவாக்கியவர்கள் இன்ஸ்பிரேஷன் பற்றிக் கருத்துச் சொல்லும்போது – இரண்டு படங்களுமே மரியாதை பெறுகின்றன.

ஆனால் அதே கமல்ஹாஸன் ‘Very bad things’ படத்தை பஞ்சதந்திரம் என்று உருவாக்கியபோது அதைப்பற்றி மூச்சுக்கூட விடவில்லை. அதற்கும் முன்னர் ‘Reincarnation of Peter Proud’ படம் எனக்குள் ஒருவன் என்று வெளியாகியது. அதன் ஹிந்தி மூலம் என்று சொல்லப்பட்ட ‘கர்ஸ்’ படத்துக்குமே இதுதான் மூலம். ‘She Devil’ படம் ‘சதி லீலாவதி’ என்று உருமாற்றம் செய்யப்பட்டது. ‘Green Card’ படம்தான் ‘நள தமயந்தி’யாக மாறியது. ‘Tie Me Up.. Tie Me Down’ படத்தால் இன்ஸ்பையர் ஆனதுதான் குணா.  ‘What about Bob’தான் தெனாலி. ‘Moon over Parador’ படம்தான் ’இந்திரன் சந்திரன்’. ‘காதலா காதலா’வில் இறந்தவர்களைப் படம் வரைந்துகொண்டு சம்பாதிப்பது ’Two Much’ என்ற படத்தில் இருந்து எடுக்கப்பட்ட சீன் பை சீன் நகல். அதேபோல் ‘ராஜபார்வை’ படத்தின் க்ளைமேக்ஸ், டஸ்டின் ஹாஃப்மேன் நடித்த ‘The Graduate’ படத்தின் அப்பட்டமான நகல். இவையோடு பட்டியல் முற்றுப்பெறவில்லை. இவை சில உதாரணங்களே.

கவனித்துப் பார்த்தால் தமிழ் சினிமாவில் அதிகபட்ச படங்களை நகலெடுத்தவர் கமல்ஹாஸனாகத்தான் இருக்கிறார் என்பது என் தனிப்பட்ட கருத்து. ‘அது தப்பு – கமலுக்கு மீறியவர்கள் இதோ இருக்கிறார்கள் பார்’ என்று யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அந்தக் கருத்தை மாற்றிக்கொள்வேன். அதைப்பற்றி வெளிப்படையாக எழுதினால் உடனடியாக ‘இவனுக்குக் கமலைப் பிடிக்காது’ என்று ஒரு ஒரு fanatic கும்பல் கிளம்புகிறது என்பதுதான் தமிழ்சினிமாவில் வெறியர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது. கமல்ஹாஸன் மட்டும் இல்லாமல், இன்னும் தமிழ் சினிமாவின் காப்பிகளைப் பற்றி நான் எழுதியிருப்பதை இந்த இணைப்பில் காணலாம். அவற்றைப் பற்றி மிகவும் வசதியாக இந்த fanatics மறந்துவிடுவார்கள்.  இந்த fanatic கும்பலைப் போல் பாரபட்சம் இருந்தால் நடுநிலையோடு படங்களை விமர்சனம் செய்வது என்பது எப்போதும் நடக்காது.

இதுதான் காப்பிக்கும் இன்ஸ்பிரேஷனுக்குமான பிரதம வேறுபாடு. இன்ஸ்பையர் செய்யப்பட்ட படங்கள், மூலத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசி அதற்கு அஞ்சலி செலுத்துவதன்மூலம் இன்னும் புகழ் பெறுகின்றன. ஒருவித வெளிப்படைத்தன்மையும் அந்தப் படங்களுக்குக் கிடைக்கிறது. மாறாக, மூச்சே விடாமல் இருந்தால் எப்படியும் இணையத்தின் மூலமாக அந்த இன்ஸ்பிரேஷனுக்கு மூலம் வெளியாகி, படத்துக்கும் படம் எடுத்தவருக்கும் தீராத அவமானத்தையே அது தருகிறது என்பதைப் புரிந்துகொண்டால் போதும்.  இவை வெளிப்படையான இன்ஸ்பிரேஷன்களுக்குப் பொருந்தும். ஆனால் ஏராளமான படங்கள், இன்னொரு படம் தரும் ஐடியாவினால் கவரப்பட்டு அந்த ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டு முற்றிலும் வேறான களத்தில் எழுதப்பட்ட திரைக்கதையைக் கொண்டிருக்கும். அவை எந்தப் படங்களின் இன்ஸ்பிரேஷன் என்பது அந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ரசிகர்களுக்கு அழகான ஒரு அனுபவத்தைப் பழைய ஐடியாவை வைத்துக்கொண்டு இன்னும் மேம்பட்ட விதத்தில் இந்தப் படங்கள் அளிக்கின்றன என்பதால் அவற்றில் தவறில்லை. இரண்டு படங்களையும் ஒப்பிட்டால் அவற்றுக்கு இடையே ஒரு ஒற்றுமை கூட இருக்காது. ஆனால் மேலே கொடுக்கப்பட்ட உதாரணங்கள் அப்படிப்பட்டவை அல்ல. மூலத்துக்கும் இந்தப் படங்களுக்கும் உள்ள ஒற்றுமை இரண்டையும் பார்த்தால் தெரிந்துவிடும். இப்படிப்பட்ட சூழலில் வெளிப்படையாக ‘இவை இவற்றின் இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்வதே நல்லது. இல்லையேல் எப்படியும் இணையத்தின் வீச்சால் அவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.

இதை மையமாக வைத்து ஒரு  உதாரணத்தை கவனிப்போம்.

தமிழில் ‘அறை எண் 305ல் கடவுள்’ என்று ஒரு படம் வந்தது. அதை வேறொரு இயக்குநர் பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மைய ஐடியாவான ‘கடவுள் பூமியில் தோன்றி இரண்டு வெட்டிப்பயல்களுக்கு உதவுதல்’ என்பது அவருக்குப் பிடித்துவிட்டது. இதிலிருந்து அவருக்கு, ‘இரண்டு வெட்டிப்பயல்கள் தேவலோகத்துக்குச் சென்று அங்கே சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கடவுளுக்கு உதவுதல்’ என்ற வேறொரு ஐடியா தோன்றுகிறது. உடனடியாக அதைத் திரைக்கதையாக எழுதிப் படமாகவும் எடுக்கிறார் என்றால், அவருக்கு மட்டும்தான் அவரது ஐடியா தோன்றிய இடம் தெரியும். இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எந்த ஒற்றுமையும் இருக்காது. அப்படியென்றால் இது காப்பியும் இல்லை; இன்ஸ்பிரேஷனும் இல்லை என்றே பொருள். ஒரு ஐடியாவினால் கவரப்பட்ட ஒருவர் அதை இன்னும் மெருகேற்றி/மாற்றித் தனது படைப்பை உருவாக்குவதே இது.  இது இன்ஸ்பிரேஷன் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். ஒருவேளை அவரது படத்தில்,  ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தை நினைவூட்டும் விதமாக எதாவது போஸ்டரோ பாடலோ அல்லது அதைப்போன்ற ஒன்றை வைக்கவும் அவர் முடிவு செய்யலாம்.; டைட்டிலில் நன்றி செலுத்தலாம். ஐடியா தோன்றிய தோற்றுவாய்க்கு நம்மாலியன்ற ஒரு சிறிய அஞ்சலி செலுத்துவது. அது அவரது இஷ்டம்.  எல்லாருமே அப்படிச் செய்தாகவேண்டும் என்று எந்த விதியும் இல்லை. டாரண்டினோ அப்படித்தான் செய்வார்.

க்வெண்டின் டாரண்டினோ பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவரது சிறுவயதில் இருந்து அவரைக் கவர்ந்த படங்கள், இசைக்குறிப்புகள் போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளைத் தவறாமல் தனது படங்களில் பயன்படுத்துகிறார். என்றுமே அவர் ‘இதெல்லாம் நான் ஒரிஜினலாக சிந்தித்து எடுத்த படங்கள்’ என்று சொன்னதே இல்லை. மாறாக, ‘நான் திருடுகிறேன். ஆனால் திருடுவதில் வெளிப்படையாக இருக்கிறேன்’ என்றே சொல்கிறார். இதுதான் ஒரு கலைஞனுக்கும் வியாபாரிக்கும் உள்ள வித்தியாசம். அவர் எடுத்த அத்தனை படங்களையும் இசைக்குறிப்புகளையும் பற்றி அவரது படங்களின் creditsகளில் விபரங்கள் இருக்கும். க்வெண்டினின் க்ரெடிட்ஸ்களைப் பார்ப்பது என்பதே ஒரு தனி அனுபவம். அவற்றின்மூலம் எக்கச்சக்கமான படங்களும் இசைக்குறிப்புகளும் ரசிகர்களுக்குக் கிடைக்கும். அந்த இசைக்குறிப்புகளைப் பணம் கொடுத்தே வாங்குகிறார். அவரது பேட்டிகளில் ஒவ்வொரு படத்தில் இடம்பெற்ற அந்தக் காட்சிகளைப் பற்றி விளக்குகிறார். அவருக்கு அந்தப் படங்களின் மீது இருக்கும் ஒருவித பக்தியை இவற்றின்மூலம் அறிந்துகொள்ளலாம். இது டாரண்டினோவின் ஹோமேஜ்.[divider]

தமிழ் சினிமா சூழலில் ப்லேஜியரிஸத்தால் என்ன பிரச்னை?

ஒரு படம் பிடித்திருக்கிறது என்றால், அது இந்திய மொழிகளில் இருந்தால் அதன் உரிமையை வாங்கிப் படமெடுக்கமுடிகிறது. ஆனால் அதுவே வெளிநாட்டுப் படங்கள் என்றால் அதன் உரிமையை வாங்குவதில் எக்கச்சக்க பட்ஜெட் ப்ரச்னைகள் இருக்கின்றன. எனவே அவை அப்படியப்படியே நகல் எடுக்கப்படுகின்றன. இதுதான் பெரிய பிரச்னை. இதைத் தவிர்க்க, ஒரிஜினலாக சிந்தித்துப் படமெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அல்லது மூலப்படத்தின் ஐடியாவை வைத்துக்கொண்டு அதனை மெருகேற்றி ஒரு புதிய களத்தையும் கதையையும் அதன்மூலம் ஒரு அழகான அனுபவத்தையும் உருவாக்குவதே சிறந்தது. அது ப்லேஜியரிஸத்தில் சேராது. வெட்டி ஒட்டுவதுதான் குற்றமே தவிர இது குற்றம் அல்ல.

அதேசமயம், அப்படி எதன்மூலமாவது நாம் கவரப்பட்டால், பிறர் அதனைக் கண்டுபிடித்துச் சொல்வதற்கு முன்னரே நமது படங்களில் தெளிவாக அவற்றுக்கு ஒரு ‘நன்றி’ தெரிவித்தால் – க்வெண்டின் டாரண்டினோ ஸ்டைலில் – அது நமது மதிப்பைத்தான் பலமடங்கு உயர்த்தும். ஆடுகளத்தில் வெற்றிமாறன் அதைத்தான் செய்தார். அவர் அதன் க்ரெடிட்ஸில் சொல்லிய பல படங்களுக்கும் ஆடுகளத்துக்கும் துளிக்கூட சம்மந்தம் இருக்கவே இருக்காது. ஆனாலும் வெற்றிமாறன் இதைச் செய்ததால் அவருக்கு நல்ல பெயர் கிடைத்ததா இல்லையா?  அவரது படமெடுக்கும் ஆசைக்கு இத்தனை படங்களும் உறுதுணையாக இருந்திருக்கின்றன. இவற்றைப் பார்த்ததன் மூலம் அவரது க்ரியேட்டிவிடி நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கிறது என்பதற்கான அவரது அஞ்சலியே அந்தப் படங்களுக்கு அவர் நன்றி தெரிவித்த விதம் என்பது நன்றாகப் புரிகிறது. [divider]

இதை அப்படியே இந்தியத் திரை இசைக்குக் கொண்டுவந்தால், பல இசையமைப்பாளர்களின் பாடல்களில் இடம்பெறும் இசை எங்காவது ஒரே போன்று இருப்பதை இசை ரசிகர்கள் உணர்ந்திருக்கலாம். குறிப்பாக ஹிந்தியில் ஆர்.டி பர்மனின் இசையில் சில ஆங்கிலப் பாடல்களின் சாயல் இடம்பெற்றிருக்கும்.  இளையராஜாவின் இசையின் சாயலுமே அவரது பாடல்களில் ஆங்காங்கே தெரியும். இதைப்பற்றி அவரே பலமுறை பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். ‘ஒரு இசையமைப்பாளனால் 100% ஒரிஜினல் இசையை வாழ்நாள் முழுக்க அளிப்பது சாத்தியமே இல்லை; பல பாடல்களைக் கேட்கிறோம். அவற்றால் கவரப்படுகிறோம். அந்தப் பாடலின் மைய இழையை வைத்துக்கொண்டு நமது கற்பனையில் முற்றிலும் வேறான அருமையான இசை அனுபவம் ஒன்றைத் தர முயல்கிறோம் என்பதே உண்மை. ஆனால் உடனேயே நான் காப்பியடிக்கிறேன் என்பது உண்மை அல்ல. நான் இன்ஸ்பையர் ஆகிறேன் என்பதே உண்மை’ என்பதுதான் அவரது கருத்து. ஆனால் இது அனு மாலிக்குக்கும் பப்பி லஹரிக்கும் பொருந்தாது. அனு மாலிக் சரமாரியாக ரஹ்மானின் பாடல்களை ஹிந்தியில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே சுட்டார். பப்பியின் பாடல்களில் சில, ஆங்கிலப் பாடல்களின் காப்பி (Dur dur tum rahe – raindrops keep falling on my head, Tera mera mera tera – Karma Chameleon, Palkon ke tale – The heat is on போன்றவை ஒரு சில உதாரணங்கள்). இதுதான் ஆர்.டி. பர்மன் போன்ற ஜீனியஸ்களையும், அனு மாலிக் & பப்பி லஹரி போன்ற சாதாரண ஆட்களையும் வித்தியாசப்படுத்துகிறது.

MSV, இளையராஜா, ரஹ்மான் போன்றவர்களுமே இப்படி இன்ஸ்பையர் ஆனவர்கள்தான். அவர்களின் பெயர் மீது க்ளிக் செய்து அவரவர்கள் இப்படி இன்ஸ்பையர் ஆன பாடல்களைப் பற்றிப் படித்துக்கொள்ளலாம். கேட்கவும் செய்யலாம். ஆர்.டி. பர்மன், எஸ்.டி. பர்மன், மற்றும் மேலே சொல்லப்பட்ட இசையமைப்பாளர்கள், சிலசமயங்களில் இன்ஸ்பிரேஷன் என்பதையும் தாண்டி நகலெடுத்தலையும் செய்ய முயன்றிருக்கிறார்கள் என்பதும் அந்த இணைப்பில் இருக்கும்.  இளையராஜாவுக்கு ஜொஹான் செபாஸ்டியன் பாக்ஹ் (Bach) என்றால் பிடிக்கும். அவரது இசை சர்வசாதாரணமாக இளையராஜாவால் ரெஃபர் செய்யப்பட்டிருக்கும் (How to name it). அதேபோல் மொஸார்ட் என்றாலும் இளையராஜாவுக்கு உயிர். ஆனால் இதெல்லாம் tribute என்பதில் சேர்ந்தது. காப்பிகள் அல்ல. மொஸார்ட்டையும் பாக்ஹையும் எப்படி காப்பி அடிக்கமுடியும்? உலகம் முழுக்கப் பிரபலமானவர்கள் அவர்கள்.  இருந்தாலும், இளையராஜா & ரஹ்மானின் இசையில் சில பாடல்கள் அப்பட்டமான நகல்களே. அவையும் மேலே உள்ளன. அது தவறுதான். அவற்றை எப்படியுமே நியாயப்படுத்தவே இயலாது.

ஆனால் இவர்கள் மட்டும் அல்லாமல் உலகின் முக்கியமான இசையமைப்பாளர்கள் அனைவருமே எப்போதாவது காப்பி அடித்தவர்கள்தான்.  இதோ இந்த லிங்க்கில் ஹாலிவுட் இசையமைப்பாளர்களின் காப்பிகள் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். இது நியாயப்படுத்தவே முடியாததுதான்.  ஆனால் இசையைப் பொறுத்தவரை இந்தக் காப்பி தவிர்க்கமுடியாதது என்பதுதான் ஒரு விசித்திரம். காரணம் திரைப்படங்களைவிட இசை நுண்ணியமானது.  மிக எளிதில் நமக்குப் பிடித்த இசையில் கவரப்பட்டுவிடமுடியும். அதனாலேயே இப்படிப்பட்ட காப்பிகள் எப்போதாவது நிகழ்வதும் உண்டு என்று தோன்றுகிறது.[divider]

இறுதியாக, இன்ஸ்பிரேஷன் என்பது மிகவும் நல்லது. வேறு ஒரு விஷயத்தால் கவரப்பட்டு அதனை மையமாக வைத்துக்கொண்டு அதைவிட மேலான ஒரு புதிய படைப்பு உருவாக்கப்படுவது நல்லதுதானே? குரஸவாவின் சில படைப்புகள் ஷேக்ஸ்பியரால் கவரப்பட்டவை. அவரது Throne of Blood, மேக்பெத்தின் தழுவலே. அதேபோல் அவரது Ran, கிங் லியரின் தழுவல். ஆனால் அந்த நாடகங்களைவிடவும் குரஸவாவின் படங்கள் அட்டகாசமாக இருக்கும். ஷேக்ஸ்பியரை விஞ்சிய கலாபூர்வமான படைப்புகள் குரஸவாவினுடையது. அதுதான் ஒரு ஜீனியஸ் இன்ஸ்பையர் ஆவதன் நன்மைகள்.  ஆனால் குரஸவா இந்த முயற்சிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார். அதுதான் ஒரு நல்ல கலைஞனுக்கு அழகு. இன்ஸ்பையர் ஆவதை வெளிப்படையாக சொல்லிவிட்டால் பிரச்னைகள் எழாது. இரண்டு படைப்புகளுக்குமே இதனால் பெருமை.

எனவே, இன்ஸ்பிரேஷனுக்கும் ப்லேஜியரிஸத்துக்குமான வித்தியாசம் புரிந்துவிட்டால், எதைப் பார்த்தாலும் காப்பி காப்பி என்று சொல்வது குறையும். அதேபோல் காப்பிகள் எவை? இன்ஸ்பிரேஷன்கள் எவை? என்பது நன்றாகப் புரிந்துவிடும். அப்படிப் புரியவேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறியதா என்பதைப் படிப்பவர்கள்தான் சொல்லவேண்டும்.

Image courtesy – http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f7/ME_109_Thief.png

  Comments

18 Comments

  1. சிந்திப்பதை எழுத்தில் கொண்டு வருவது ஒரு கலை. அதே எழுத்தை, எளிய வாசகனும் புரிந்து கொள்ளும் விதத்தில் படைப்பது மேலும் செழுமையான கலை. ஒரு கருத்தை நிறுவ, தெளிவான எல்லையை வகுத்து கொண்டு விவாதம் செய்திருக்கிறீர்கள். பனி விலகிய காலை பொழுதாக சில விஷயங்கள் கூடுதல் தெளிவுடன் புலப்படுகின்றன. வாழ்த்துகள் ராஜேஷ்.

    Reply
  2. Thank you Siva. Good to know it was useful 🙂

    Reply
  3. NewBoy

    i observed some inspiration between Pizza & Yamirukka Bayame. please write about that briefly.

    Reply
  4. Handala

    NewBoy if u observed then u have to write . Why asking him to write. Funny

    Reply
  5. Hariharan S

    உங்கள் மேலதிகாரி இன்ஸ்பிரேஷன் எடுத்துக்காட்டு பிழையானது. அவர் உங்கள் அறிக்கையை கொன்றுவிட்டு அந்த மையக்கருவை எடுத்துக்கொண்டு இன்னொரு அறிக்கையை தயாரிக்கிறார். அதுவும் திருட்டே. மையக்கருவுக்கான பலனை அவர் அனுபவிப்பது திருட்டே. எப்போது அது திருட்டாகாது என்றால் அவர் உங்களை கூப்பிட்டு அவருடைய யோசனையையும் சேர்த்து இன்னொரு அறிக்கையை தயார் செய்யும்போதுதான். அந்த அறிக்கையில் உங்கள் பெயரும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

    இந்திரன் சந்திரன் படம் Moon over Parador படத்தின் நகல் என்பது சரியா? அந்த கதையை விக்கிபீடியாவில் படித்தேன். பெரிய ஒற்றுமை இருப்பதாக தெரியவில்லை. அது The Prisoner of Zenda போன்று இல்லையா? மற்ற படங்களை கமல்ஹாசன் நகல் எடுத்திருக்கிறார் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.

    இப்போது ஜிகர்தண்டவிற்கு வருவோம். “A Dirty Carnival” படத்தில் ஒரு தாதாவை பற்றி ஒருவன் படம் எடுக்க வருகிறான். இது நகல் இல்லை என்றால் இந்திரன் சந்திரன் எப்படி நகல் ஆகும்? உங்களை பொறுத்தவரை இந்திரன் சந்திரன் நகல் என்பதை நினைவில் கொள்க.

    Reply
    • Rajesh Da Scorp

      இல்லை. மேலதிகாரி உதாரணத்தில் நான் சொல்லியிருப்பதை நன்றாகக் கவனித்தீர்களா? அவர் உங்கள் மையக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அதை வைத்து உங்கள் அறிக்கையை விட அட்டகாசமான, முற்றிலும் வேறான அறிக்கையைத் தயார் செய்கிறார். இரண்டு அறிக்கைகளுக்கும் சம்மந்தமே இல்லை என்பதுதான் முதல் தோற்றம். ஆனால் அவருக்குக்கு மட்டுமே அதற்கான ஊற்றுக்கண் உங்கள் அறிக்கை என்பது தெரியும். அப்படிப்பட்ட சூழலில் நன்றி தெரிவித்தால் அது அவரது பெருந்தன்மை மட்டுமே. அது திருட்டு அல்ல. எப்படி பறவையை வைத்து விமானம் கண்டுபிடிக்கப்பட்டதோ அப்படி.

      இப்போது மூன் ஓவர் பாரடோர் படம். இதோ இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அதில் இந்திரன் சந்திரன் மற்றும் மூன் ஓவர் பாரடோர் படத்தின் காட்சிகளை வீடியோவாகக் கொடுத்திருக்கிறேன். இரண்டையும் பார்த்துவிட்டு வாருங்கள். பின்னர் காப்பியா இல்லையா என்று சொல்லுங்கள் —> http://karundhel.com/2010/10/copies-kamalhassan-videos.html

      ஜிகர்தண்டா இப்படிப்பட்ட நகல் அல்ல. அதன் மையக்கரு வேண்டுமானால் டர்ட்டி கார்னிவலோடு சேர்ந்திருக்கலாம். ஆனால் அதற்கும் ஜிகர்தண்டாவுக்கும் எந்தவிதமான நகல் சம்மந்தமும் இல்லை. அதைப்பற்றி விரிவாக எழுதுவேன்.

      Reply
      • // அவர் உங்கள் மையக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு // Couldn’t accept to this point. 😀

        I believe that you know better that the one liner is the ‘actual’ spark of creation in film making (yes, u know it 😉 ). All the ideas are one liners regardless of the field nor industry. 🙂

        // மையக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு //
        I strongly belive it’s a stealth. Trust me u never ever want to see you one liner to be filmed, used by others in whatever industry (even if that’s been accidental or coincidenece). It hurts. 🙂

        Inspiration is something else.

        Inspiration fires you with some ‘what if’ and you are the one who come up with an answer! You get to solve some problem!

        And generally the ‘மையக்கரு’ is the solution you cannot USE it without permission or in some cases without reference. Else you get to solve a bigger problem using this மையக்கரு (quite like a lemma in mathematics 🙂 ).

        WDYT?

        p.s: sorry, no tamil font access @ d moment, pasted ‘மையக்கரு’. 😀

        Reply
  6. Mahalingam

    No offence meant when I mentioned about Kamal. I only felt your regular readers would automatically connect with Kamal without reference on reading your article. Am I wrong?

    Reply
  7. raja

    Thank you for your detailed explanation.

    Reply
  8. Accust Here

    இசைஅமைப்பாளர்கள் காப்பி அடிப்பது தவிர்க்கமுடியாது என்று பார்த்ததும் தமிழ் சினிமாவின் குறிப்பிட்ட ஒருவரை நினைவு கூர்ந்தேன் அவர் பல பாடல்கள் காப்பிதான் அவர் உங்களுக்கு இதற்குள் தெரிந்து இருக்கும் திரு. தேவா, நம்மில் பெரும்பாலானோர் கேட்டிருக்க இயலாத சில மெட்டுகளை தமிழ்படுத்தியவர், ஆனால் இன்றளவும் எனக்கு புரியாதது தமிழகத்தில் அனைவருக்கும் பரிச்சியமான Terminator theme musicகை பாட்ஷாவில் அவர் பயன்படுத்தியதுதான், அப்பொழுது அதை யாரும் விமர்சனம் செய்யவில்லையா அல்லது இதேபோல் ஏதும் விமர்சனம் எழுந்ததா. அதன் பிறகும் பல பாடல்கள் காப்பியாகவே இருந்தன எனவே விமர்சனம் எழவில்லை என்றே நினைகிறேன்.

    கடைசியாய் ஒரு சந்தேகம், பாட்ஷா படத்தின் ஒரிஜினலான திரைப்படத்தையும் பார்த்துள்ளேன் இரண்டு திரைபடத்தின் திரைக்கதையும் வேறு வேறு ஆனால் கதை ஒன்றுதான் எனவே இது inspirationa அல்லது plagiarisma

    Reply
  9. Dany

    யாருக்கோ சம்மட்டி அடி விழுந்தது மாதிரி சத்தம் கேட்குதே….(யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே)

    Reply
  10. pavel

    வணக்கம் கருந்தேள் , பேரிக்காவில் 2௦௦2 ல் முதன்முதலில் இறங்கிய ஒரு வாரத்தில் கேபிள் டி வி யில் “Green Card” படத்தை எதேச்சையாக பார்த்த போதுதான் தமிழ் சினிமாவின் சுயரூபம் புரிந்தது .”மய்யம்” இதழில் 2௦ ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக கூறப்பட்ட “நள தமயந்தி” கதையை யார் சுட்டது என்று ?
    அடுத்த அதிர்ச்சி “பிரம்மா” படத்தின் குஷ்பு -கேசட் -தியேட்டர் -சேசிங் காட்சியை சுட்டு இன்னொரு இங்கிலீஷ் படம்.

    பாவெல்

    Reply
  11. tulsi

    Nice article

    Reply
  12. Puduvai Kamalraj

    //ஒரு திரைப்படம் இப்படி இன்ஸ்பையர் செய்யப்படும்போது – வெளிப்படையாக அதை உருவாக்கியவர்கள் இன்ஸ்பிரேஷன் பற்றிக் கருத்துச் சொல்லும்போது – இரண்டு படங்களுமே மரியாதை பெறுகின்றன.//

    According to me an inspiration is justifiable only if original work was credited as said by you. Moreover, the film Nayagan is actually based on real life story of Tuticorin born Bumbai don Varadarajan Muniswami Mudaliar popularly known as Vardhubaai(rhyme like Velubaai in Nayagan) around 1960’s and 1970’s. At the time of censor of Nayagan, the sensor officials objected for the story based on Varadarajan and asked the film crew to get clearance from the Varadarajan. After screening the film to him, he said that the film was not based on him, then only the film was censor certified and got released.

    Reply
  13. vijay

    what about “anniyan” and “bone collector” , refer a book for murder. ( karudapuranam & boncollector book).. Is it a inspiration or copy?

    Reply
  14. பித்துக்குளி

    ரகுமான் பற்றிய சிறு குவிஸ்…சும்மா ஜாலிக்கு…
    ரகுமானுக்கு எத்தன புள்ளைங்க…
    1.3
    2.4.
    3.எண்ண முடியல
    .
    .
    ரகுமான் அடுத்து வயித்துவலி வந்தா எந்த மதத்துக்கு மாறுவார்?
    1.பவுத்தம்
    2.தாவோயிசம்
    3.யூதம்.
    .
    எல்லா புகழும் இறைவனுக்கே அப்படின்னா எல்லா கோடி கோடி சம்பளமும் யாருக்கு?
    1.தனக்கே
    2.தனது பிள்ளைக்கு
    3.தனது குடும்பத்துக்கு.,
    .
    .
    ரகுமானின் மகன் பேரென்ன?
    1.அமீன்
    2.வாளமீன்
    3.விலாங்குமீன்.

    Reply
  15. Sundar . G rasanai chennai

    Rajesh, very good analysis on inspiration and plagiarism. Matured Writing. Keep it up. there is a possibility also for those who first release the movie (or the book or…..)– even the copycat/inspiration gets the “Original idea Credit”.

    just info: everybody knows prakash raj productions “Un samayal arayil” film is based on “Salt & Pepper” malayalam film. but the malayalam film story got the “Inspiration” from a 2005 movie “Be With Me”. one of the side story in that film (old man-cook-fantastic food -author-affection etc..,) has been taken as a full plot with needed indian ingredients to suit our taste. (may be useful for your movie workshop sessions and my intention is not boasting)

    rajesh, you may remember our “El Orfanato” — guillermo del torro production (Rigor mortis scene)– it seems Sundar. C’s “Aranmanai” may be a rip-off of “The Orphanage” as the ad promo stills are conveying the same. Sundar C is notorious in that “Fateh Akin”s “Soul Kitchen” transformed into “Kalakalappu”, Anbe Sivam– needless to say……. but i am just guessing. only the film can reveal its true identity. let us wait and watch.

    “Happy Birthday Wishes” rajesh have an enjoyable day. 🙂

    Reply
  16. Nayaganukkum , godfatherukkum enna vidyasam, Mr rajesh neenga vara var overa think panni , ulara arambikkiringannu ninaikiren. Kunjam intha foreign pada mogatha control pannunga, intha copy padatha yellam part hu dhaan , unga rasana valarnthu irukku mind it..

    Reply

Join the conversation