Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 1

by Karundhel Rajesh July 18, 2025   80s Tamil

KGF இயக்குநர் ப்ரஷாந்த் நீல் இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார். அவரது எந்த அறிவிப்பு வெளியானாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேசமயம் கே.ஜி.எஃப் இரண்டு பாகங்களுமே (முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் பெரிய ஹிட்) மிக நன்றாக ஓடியதாலேயே அவருக்கு இந்த எதிர்பார்ப்பு இந்தியா முழுதும் இருக்கிறது. பல வருடங்களாகவே ப்ரஷாந்த் நீலின் திரைக்கதைகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தது உண்டு. காரணம் அவர் எப்படி எழுதுகிறார் என்பதைப்பற்றி அவர் மிக விரிவாகவே பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு நண்பர் விடாப்பிடியாக ஃபேஸ்புக்கில் ‘இது பற்றி எழுதாமல் உங்களை விடமாட்டேன்’ என்று தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருந்ததால், இதோ இப்போது இதை விரிவாக எழுதுகிறேன். திரைக்கதை பற்றிப் படிப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை பயன்பட்டால் மகிழ்ச்சி.

இனி, விரிவாக ப்ரஷாந்த் நீலின் திரைக்கதை வடிவங்கள், அவர் எப்படியெல்லாம் அவரது கதாபாத்திரங்களை விளக்குகிறார் என்று கவனிக்கலாம்.

ப்ரஷாந்த் நீல் எங்கிருந்து அவரது கதாபாத்திரங்களையும் திரைக்கதைகளையும் எடுத்துக்கொள்கிறார் என்பது தெரியும் தானே? 70கள் மற்றும் 80களில் இந்தித் திரையுலகையே கலக்கிய திரைக்கதை மேதைகள் சலீம்-ஜாவேத் ஆகியோரின் திரைக்கதைகளில் இருந்துதான் இன்ஸ்பையர் ஆகிறார் ப்ரஷாந்த் நீல் (அவர்கள் பெயரில் க்ளிக் செய்து அவர்கள் இருவர் பற்றிய எனது கட்டுரையை விரிவாகப் படிக்கலாம்).

எப்படி?

இதற்கு, சலீம் ஜாவேத்தின் திரைக்கதைகளில் வரும் ஹீரோ கதாபாத்திரங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கவேண்டும். முதலில் அவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முதல் நான்கு திரைப்படங்களில் அவர்களின் ஹீரோ வழக்கப்படி எல்லாப் படங்களிலும் வரும் நல்லவன் தான் (Adhikaar, Andaz, Hathi mere Saathi, Seetha Aur Geetha). இவைகளில் அந்தாஸ், ஹாத்தி மேரே சாத்தி, சீதா ஔர் கீதா ஆகியவை பெருவெற்றியும் பெற்றன. ஆனால் இந்த மூன்றுக்குப் பின்னால் சலீம் ஜாவேத் எழுதிய திரைக்கதைகள்தான் படுபயங்கர ஹிட்கள் ஆகி, இந்தியாவெங்கும் ஓடின. அவைதான் ப்ரஷாந்த் நீலுக்கு இன்ஸ்பிரேஷன்களாக விளங்கின.

சலீம் ஜாவேத்தின் ஐந்தாவது படமான Zanjeer, அதுவரை சிலபல தோல்விப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த அமிதாப் பச்சன் என்ற இளவயது ஹீரோவை இந்தியா முழுக்கத் தெரியப்படுத்தியது. இதில் ஹீரோவின் பெயர் விஜய். இளவயதிலேயே தனது பெற்றோர் அடையாளம் தெரியாத ஒரு ஆசாமியால் கொல்லப்படுவதைப் பார்க்கிறான் (ஆம். Batman inspiration தான்). பின்னால் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் ஆகிறான். இதன்பின் ஒரு கொடூர வில்லனை அவன் துரத்திக்கொண்டுபோக, பின்னால் பல திருப்பங்களுக்குப் பிறகு அந்த வில்லன் தான் இவனது பெற்றோரைக் கொன்றது என்று தெரியவரும். அதன்பின் வில்லனை விஜய் கொல்வதுதான் கதை. தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க ‘சிரித்து வாழ வேண்டும்’ என்று ரீமேக் செய்யப்பட்டது.

இந்தப் படத்தில்தான் முதன்முறையாக ஹீரோ மிகுந்த கோபமுடைய – கிட்டத்தட்ட வில்லன் போன்ற கதாபாத்திரம் என்பது இந்தியில் எழுதப்பட்டது. வில்லன் செய்யக்கூடிய அத்தனையும் ஹீரோவும் செய்வான். ஆனால் அடிப்படையில் ஹீரோ நல்லவன். காரணம் அவனுக்கும் மேலே பெரிய வில்லனை அடக்கவேண்டும். இந்த டெம்ப்ளேட் பக்காவாக வேலை செய்தது. அமிதாப் பச்சன் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ஆனார். அவரைத் தொடர்ந்து ரஜினிகாந்த் பல படங்களில் இதே டெம்ப்ளேட்டில் நடித்தார்.

இதேதான் சலீம் ஜாவேத் அடுத்து எழுதிய Yaadon Ki Baaraat திரைப்படத்திலும் நடந்தது. இந்தப் படமும் இந்தியா முழுக்க ஓடியது. குறிப்பாக சென்னையிலும் கோவையிலும். இதிலும் மூன்று குழந்தைகளின் பெற்றோர் வில்லனால் கொல்லப்படுவார்கள். மூன்று குழந்தைகளும் சிறுவயதில் இதனால் பிரிந்துவிடும். பின்னால் மூவரும் மூன்று பின்னணிகளில் வளர்வார்கள். அதன்பின் மூவரும் ஒன்றுசேர்ந்து, வில்லனை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே கதை. (ஸஞ்சீர் (கையில் அணியும் ப்ரேஸ்லெட்) மற்றும் யாதோங்கி பாராத் (காலில் அணியும் ஷூ) ஆகிய இரண்டு படங்களிலுமே வில்லனுக்குத் தனிப்பட்ட அடையாளம் ஒன்று இருக்கும். அதை வைத்தே வில்லனைக் கண்டுபிடிப்பார்கள்). இந்தப் படத்திலும் ஹீரோ தர்மேந்திரா கிட்டத்தட்ட அடிதடி வில்லன் போன்றே நடித்திருப்பார். பலமான ஹீரோ – அவனை விடப் பலமான வில்லன் என்ற அதே டெம்ப்ளேட். இது தமிழில் நாளை நமதே என்று எம்.ஜி.ஆர் நடித்து பிய்த்துக்கொண்டு ஓடியது.

அடுத்து வெளியானது Majboor. இது சிறிய அளவில் வெளியான படம். அமிதாப் ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனாலும் படம் ஓடியது. இதில் வழக்கமான கெட்ட ஹீரோ டெம்ப்ளேட்டை சலீம் ஜாவேத் வைக்கவில்லை. இந்தப் படம் தமிழில் நான் வாழவைப்பேன் என்று சிவாஜி நடித்து வெளியானது.

இதற்கு அடுத்து ஹீரோ பிக்பாக்கெட்டாக நடித்த Haath ki Safai. இதில் ஹீரோ பழையபடி இல்லாவிட்டாலும் பிக்பாக்கெட். வழக்கமான சிறிய வயதிலேயே தொலைந்துவிடும் சகோதரர்கள் டெம்ப்ளேட். ஓரளவே ஓடியது. தமிழில் சவால் என்று கமல்ஹாஸன் நடித்து வெளியானது.

அடுத்துதான் இன்று வரை பேசப்படும் Deewaar வெளியானது. இதில் ஹீரோ முழுக்கவே நெகட்டிவ் கதாபாத்திரம். வில்லன், அவனது போலீஸ் அண்ணன். நல்லவன். கெட்டவனைத் தேடும் நல்லவன். இதில் இறுதியாக, கெட்ட ஹீரோ இறக்கிறான். ஆனால் இறக்கையில் அவன் மீது பரிதாபம் வரும்படியான படம். இந்தப் படத்தில்தான் முதன்முறையாக, அம்மா செண்டிமெண்ட் என்ற ஆயுதம் சலீம் ஜாவேதால் கையில் எடுக்கப்பட்டது. இதிலும் சிறுவயதில் பிரியும் சகோதரர்கள் – அதில் நல்லவனுடன் இருக்கும் அம்மா- அம்மா இல்லாமல் கெட்டவனாக மாறும் இன்னொரு சகோதரன் என்ற டெம்ப்ளேட் இடம்பெற்றது. கெட்ட சகோதரனாக அமிதாப் பச்சன் – நல்ல போலீஸாக சசி கபூர். இந்தப் படத்தில் சலீம் ஜாவேத் இன்னொன்றும் செய்தனர். ஆங்காங்கே ஹீரோவான அமிதாப் மற்றும் சசி கபூருக்குப் பஞ்ச் டயலாக் வைத்தனர். அவை இன்றுவரை பேசப்படுகின்றன. இந்தப் படம் தமிழில் தீ என்று ரஜினியை வைத்து எடுக்கப்பட்டது.

உடனேயே சலீம் ஜாவேத் எழுதிய படமே Sholay. இந்தியாவின் மிகப்பெரிய பம்பர் ஹிட் படம். இதைப்பற்றி எதுவுமே சொல்லத் தேவையில்லை என்ற அளவு ஹிட். இதிலும் நாயகர்கள் இரண்டு திருடர்கள். ஆனால் நல்ல மனம் கொண்டவர்கள். அகிரா குரோஸவாவின் செவன் சாமுராய் படத்தின் இன்ஸ்பிரேஷன். இதில் அம்மா செண்டிமெண்ட் இல்லை, ஆனால் விதவை மேல் காதல் கொள்ளும் ஹீரோ என்ற செண்டிமெண்ட் உண்டு. அதேபோல் நட்பு செண்டிமெண்ட் (சலார் இரண்டாம் பாகம் வரட்டும் – உங்களுக்குப் புரியும்).

இதன்பிறகு இரண்டு படங்கள் சரியாகப் போகாமல் (வழக்கமான எந்த டெம்ப்ளேட்டும் இல்லாமல் புதிதாக அவர்கள் எழுதிய படங்கள் – Aakri Dao & Imman Daram), மூன்றாவதாக தர்மேந்திராவை வைத்து, காமெடிப் படமான Chacha Bhatijaவை எழுதினர்.

அது எப்படி சலீம் ஜாவேதால் சகோதரர்கள் பிரிவது, அம்மா (அல்லது) அப்பா செண்டிமெண்ட் என்று எழுதாமல் நீண்டநாட்கள் தள்ளிப் போடமுடியும்? இதோ எழுதுறேண்டா என்று அவர்கள் இந்த நான்கு படங்களுக்குப் பிறகு எழுதிய Trishul இன்னொரு மெகா வெற்றிப் படமாக மாறியது. அமைதிப்படையில் அம்மாவாசை அல்வா கொடுத்துவிட்டு சுஜாதாவை மணந்து, அவருக்கு ஒரு வாரிசு பிறப்பது இந்தப் படத்தில் இருந்தே எடுக்கப்பட்டது. இளவயதில் ஒரு இளம்பெண்ணை ஏமாற்றிவிட்டுச் செல்லும் வில்லன், அவளுக்குப் பிறந்த மகன் வில்லனை எப்படிப் பழிவாங்குகிறான் என்பதே த்ரிஷூல். தமிழில் கமல்ஹாஸன் நடித்து கடல் மீன்கள் மற்றும் ரஜினி – சத்யராஜ் நடித்து மிஸ்டர் பாரத் ஆகிய இரண்டு படங்கள் த்ரிஷூலில் இருந்தே எடுக்கப்பட்டன. இந்தப் படத்திலும் ஹீரோ ஒரு முரட்டுக் கோபக்காரன். தாயை ஏமாற்றிய தந்தையை எண்ணி மிகுந்த கோபத்தில் இருப்பவன். படம் இந்தியில் பயங்கர ஹிட்.

இதன்பிறகு Don வெளியாகிறது. ஊதவே வேண்டாம் என்பதுபோல, படுபயங்கர ஹிட். தமிழில் பில்லா. ரஜினிகாந்த் ஹீரோ. டான் படத்திலும் ஹீரோ என்பவன் மிகப் பிரம்மாண்டமான ஒரு கதாபாத்திரம். மிகப்பெரிய தாதா. இண்டர்னேஷனல் லெவலில் தேடப்படுபவன். கிட்டத்தட்ட வில்லன். அவனுக்குப் பதில் நல்லவன் ஒருவனை அவனைப் போலவே நடிக்கவைத்து, வில்லன்களைப் பிடிக்க நினைக்கும் நல்லவரான போலீஸ் ஒருவரின் கதை. தமிழிலும் மிகப்பெரிய ஹிட்.

இதன்பின் அமிதாப் நடித்த Kaala Patthar. இந்தப் படத்தில் பெரும்பாலான கதை ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் நடைபெறுகிறது (இப்போதே கே.ஜி.எஃப் படத்துக்கும் காலா பத்தருக்கும் இருக்கும் தொடர்பு தெரிகிறதா?). இது நிஜமாகவே ஜார்க்கண்டில் நடந்த ஒரு நிலக்கரிச் சுரங்க விபத்து பற்றிய கதை. முன்னாள் கப்பல் கேப்டன் ஒருவர், அப்போது நடந்த ஒரு பெரிய விபத்தில் கப்பலைக் கைவிட்டுவிட்டதால் வருந்தி, ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்துவரும்போது, அவரைப் போன்ற இருவருடன் சேர்ந்துகொண்டு நிலக்கரிச் சுரங்கத்தின் கொடூர முதலாளி ஒருவனை எதிர்க்கிறார்கள். அப்போது எழும் மிகப்பெரிய விபத்தில் இருந்து சுரங்கத் தொழிலாளிகள் இவர்களால் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பதே கதை.

இந்தப் படத்துக்குப் பின்னரும் சலீம் ஜாவேத் சில வெற்றிப் படங்களில் பங்கேற்றுவிட்டுப் பிரிந்துவிட்டார்கள். ஆனால் நமக்குத் தேவை இங்கே விரிவாக எழுதியுள்ள படங்களே. இவற்றில் நான் எழுதியிருக்கும் வித்தியாசமான அம்சங்களையும், ப்ரஷாந்த் நீல் இதுவரை எடுத்துள்ள படங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கே ப்ரஷாந்த் நீல் எப்படி சலீம் ஜாவேத்திடம் இருந்து இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார் என்பது புரிந்துவிடும்.

அதை விரிவாக இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில் ஆராயலாம்..

(தொடரும்)..

  Comments

11 Comments

  1. Anonymous

    அதே மாதிரி Kgf 1 &2 படத்தோட கதை Scarface and ராஜமெளலியோட சத்ரபதி படங்களோட சாயலும் இருக்கும் Bro,சலார் படத்துல Game of thrones ஒட சாயல் இருக்கும்.

    Reply
  2. Ashwin

    அதே மாதிரி Kgf 1 &2 படத்தோட கதை Scarface and ராஜமெளலியோட சத்ரபதி படங்களோட சாயலும் இருக்கும் Bro,சலார் படத்துல Game of thrones ஒட சாயல் இருக்கும்.

    Reply
  3. Dhuvaragann

    சிறப்பான பதிவு. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

    Reply
  4. பேஸ்புக் இல் லிங் கண்டதும் படிக்க ஓடி வந்து விட்டேன்.

    மீண்டும் உங்கள் எழுத்துக்கள் சூடு பிடிப்பது என் போன்ற திரை உருவாக்குனர்களுக்கு பெரும் வரப் பிரசாதமே

    மிக்க நன்றி கருந்தேள்

    Reply
  5. Bala Ganesan

    ஏன் யாரும் “சிங்கம் களம் இறங்கிடிச்சி..” கமெண்டு போடல? அத விடுங்க.. ஃபர்ஸ்ட் கமெண்ட்.. வடை எனக்குதான் கூட ஏன் யாரும் போடல?

    Reply
  6. V Kannan

    வந்துட்டேன்னு சொல்லு என்ற punch போல இருக்கிறது பதிவு.

    வாழ்த்துகள்.

    அடுத்தடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

    Reply
    • Anonymous

      Attakasam movie also same plot. Good hero with mom, and bad hero.

      Reply
  7. Dharma

    மிக்க மகிழ்ச்சி சார். மீண்டும் உங்களது திரைக்கதை மற்றும் திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகளை படிக்க ஆர்வமாக உள்ளேன். நன்றி.

    Reply
  8. Mohammed Yaseen

    மிக்க நன்றி எழுத்துகளுக்கு
    – பேரன்புகள்

    Reply
  9. SathyaMoorthy

    சிங்கம் களம் இறங்கிடுச்சு

    Reply
  10. Anonymous

    Sir, I’m Big fan of you Sir.
    Please உங்களுடைய தளத்தில் பழைய மாதிரி எழுதுங்க…
    இன்னும் உங்கள் தளத்தில் படிக்க வேண்டியது நிறைய இருக்கு.
    இந்த தளத்தை எப்போதும் செயல்பாட்டில் இருக்கு வேண்டும் கருந்தேள் ராஜேஷ் sir

    Reply

Join the conversation