Quentin Tarantino : Chapter 2 – Pulp Fiction – part 1
’Like a lot of guys who had never made films before, I was always trying to figure out how to scam my way into a feature. The ones you’ve seen a zillion times—the boxer who’s supposed to throw a fight and doesn’t, the Mob guy who’s supposed to take the boss’s wife out for the evening, the two hit men who come and kill these guys. It would be “an omnibus thing,” a collection of three caper films, similar to stories by such writers as Raymond Chandler and Dashiell Hammett in 1920s and 1930s pulp magazines. That is why I called it Pulp Fiction – Quentin Tarantino.
பன்னிரண்டு பள்ளிக்கூட நோட்டுப்புத்தகங்களில், யாருக்குமே புரியாத தனது கிறுக்கலான, எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் இருந்த ஒரு விபரீதமான கையெழுத்தில் டாரண்டினோ எழுதியிருந்த பல்ப் ஃபிக்ஷன்’ திரைக்கதையை முதலில் பார்த்த அவரது தோழி லிண்டா சென் (Linda Chen), இந்தத் திரைக்கதை பிந்நாட்களில் ஒரு க்ளாஸிக் திரைக்கதையாக மாறும் என்பதைக் கனவில் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஹாலிவுட்டின் திரைக்கதை ஜாம்பவானான ராபர்ட் டௌன் (Robert Towne – Chinatown, Mission Impossible part 1 & 2, Days of Thunder, the Firm, Godfather –uncredited), லிண்டாவை ஒரு டைப்பிஸ்ட்டாகத் தன்னிடம் வேலைக்கு அமர்த்தியிருந்தார். லிண்டா, ராபர்ட் டௌனிடம் ஒரு திரைக்கதை கன்ஸல்ட்டண்ட்டாகவும் இருந்தார். டாரண்டினோவுக்கு லிண்டாவின் வேலை பற்றித் தெரிந்திருந்ததால் அடிக்கடி லிண்டாவிடம் பேசுவார். தனது திரைக்கதையை டைப் செய்து கொடுக்க யாரோ ஒரு டைப்பிஸ்ட்டை நாடுவதைவிடவும், லிண்டா போன்ற திரைக்கதையில் தனது இன்புட்களைக் கொடுக்கக்கூடிய ஒரு நபரையே விரும்பினார் டாரண்டினோ. இதற்கிடையில் Reservoir Dogs மூலம் தயாரிப்பாளராகியிருந்த டாரண்டினோவின் நண்பர் லாரன்ஸ் பெண்டர், புதிய திரைக்கதைக்காக டாரண்டினோவை நெருக்கத் துவங்கியிருந்தார்.
ஆனால், ரிஸர்வாயர் டாக்ஸ் வெளிவந்ததும் ஹாலிவுட்டின் புகழேணியில் மெல்ல ஏறிக்கொண்டிருந்த டாரண்டினோவுக்குப் பல ஸ்டுடியோக்களிடமிருந்து படங்களை இயக்க வாய்ப்புகள் வந்திருந்தன. அதில் ஒன்று – Speed. இன்னொன்று – Men in Black. இந்த இரண்டு படங்களையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் தவிர்த்தார் டாரண்டினோ. காரணம் அவர் புதிதாக எழுதிக்கொண்டிருந்த திரைக்கதை. அதுமட்டும் இல்லாமல் தனது திரைக்கதைகளைத்தான் படமாக இயக்கவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாகவும் இருந்தார்.
அப்படிப்பட்ட புதிய திரைக்கதையை எழுதுவதற்காக ஆம்ஸ்டர்டாமில் சில மாதங்கள் தனியாக அறை ஒன்றை எடுத்துக்கொண்டு தங்கினார். அங்கேதான் அந்தப் பன்னிரண்டு நோட்டுப்புத்தகங்கள் நிரம்பின. ரிஸர்வாயர் டாக்ஸ் எடுத்த நிமிடம் வரை தனது வாழ்க்கையின் 29 வயதுகளையும் ஏழையாகவும் கடனாளியாகவுமே கழித்தவர் டாரண்டினோ. எனவே, ரிஸர்வாயர் டாக்ஸில் அவருக்குக் கிடைத்த 50,000 டாலர்களை வைத்துக்கொண்டு ஆம்ஸ்டர்டாம் கிளம்பினார். வாழ்க்கையில் முதன்முறையாக அமெரிக்காவுக்கு வெளியே டாரண்டினோ சென்ற அனுபவம் அது. ஆம்ஸ்டர்டாமில் மரியுவானா சட்டபூர்வமாகவே அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அங்கே விபசாரமும் சட்டபூர்வமான தொழில். அத்தகைய சுதந்திரமான ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு சில மாதங்கள் செலவழித்து டாரண்டினோ எழுதிய திரைக்கதைதான் பிந்ந்நாட்களில் உலகத் திரைப்பட வரலாற்றில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்தது.
இதன்பின்னர் டாரண்டினோவின் விடியோ ஆர்க்கைவஸ் சக நண்பர் ரோஜர் ஆவெரியும் ஆம்ஸ்ட்டர்டாம் வந்தார். சில வருடங்களுக்கு முன்னர் வீடியோ ஆர்க்கைவ்ஸில் வேலை செய்துகொண்டிருந்தபோதே டாரண்டினோவும் ஆவெரியும் ஒரு கதையை முடிவுசெய்துவைத்திருந்தனர். அதன்படி, தாதாவின் மனைவியை வெளியே கூட்டிச்செல்லும் கதையை டாரண்டினோ எழுதுவதாகவும், பாக்ஸர் ஒருவனுக்கு அந்தத் தாதா பணம் கொடுக்க முயலும் கதையை ஆவெரி எழுதுவதாகவும் திட்டம். அதேபோல் மூன்றாவதாக இன்னொரு கதையை (இரண்டு அடியாட்கள் பாஸின் பெட்டியை எடுத்துவரும் கதை) இன்னொரு நண்பர் எழுதுவதாகத் திட்டமிட்டனர். ஆனால் அந்த நண்பர் இவர்களுடன் சேராததால் அந்தக் கதையையும் டாரண்டினோ எழுதுவதாக முடிவானது. ரிஸர்வாயர் டாக்ஸை எழுதுவதற்கு முன்னர் தனது முதல் திரைக்கதையாக இதைத்தான் டாரண்டினோ எழுத விரும்பினார். ஆனால் தனது தாயின் வீட்டில் மூன்றரை வாரங்கள் அமர்ந்து டாரண்டினோ எழுதிய திரைக்கதை ரிஸர்வாயர் டாக்ஸாக அமைந்தது. காரணம், எழுதத் துவங்கும்போதே அந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் தன்னை முழுதும் ஆக்கிரமித்துக்கொண்டதாக டாரண்டினோ சொல்லியிருக்கிறார்.
ஆம்ஸ்ட்டர்டாமில் அமர்ந்துகொண்டு டாரண்டினோவும் ஆவெரியும் விவாதித்தனர். பாக்ஸரின் கதையை ஆவெரி முழுதும் சொல்ல, அந்தக் கதையை எடுத்துக்கொண்டு தனது பாணியில் டாரண்டினோ திரைக்கதை எழுதினார். ஆவெரி சொன்ன கதைக்கு 25,000 டாலர்கள் அவருக்கு டாரண்டினோவால் அளிக்கப்பட்டன. படத்தின் படப்பிடிப்பு துவங்கியதும் ஆவெரிக்கு ஒரு தொலைபேசி எழைப்பு டாரண்டினோவிடமிருந்து வந்தது. ‘படத்தின் திரைக்கதைக்குக் க்ரெடிட்ஸ் வழங்க முடியாது. ஆனால் கதைக்கு டைட்டிலில் க்ரெடிட்ஸ் வழங்கமுடியும்; எனவே அதை ஏற்றுக்கொள்; ஒருவேளை மறுத்தால் உன் பாக்ஸர் கதையை நீக்கிவிட்டு நானே வேறு ஒரு கதை எழுதி உள்ளே சேர்த்துவிடுவேன்; உனக்கு எதுவுமே கிடைக்காது’ என்று டாரண்டினோ சொன்னதாக ஆவெரி பிற்காலத்தில் சொல்லியிருக்கிறார். காரணம், டாரண்டினோவுக்கு எப்போதும் தனது கதையைப் படமாக எடுக்கும்போது தனது பெயர்தான் வரவேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆவெரி ஒப்புக்கொண்டார். டாரண்டினோ ஆவெரியை வஞ்சித்தார் என்று ஒரு கருத்து உண்டு. அதேசமயம் ஆவெரியிடமிருந்து வந்தது கதை மட்டும்தான். திரைக்கதையை டாரண்டினோதான் எழுதினார் என்பதால் அது சரியான லாஜிக்தான் என்றும் ஒரு கருத்து திரைப்பட ரசிகர்களிடம் உண்டு. பிறகு இது ஆவெரியிடம் கேட்கப்பட்டபோது அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று ஆவெரி மறுத்தார் என்பது தனிக்கதை.
இதற்கு முன்னால், ரிஸர்வாயர் டாக்ஸின் பிரபலத்தால் டாரண்டினோ ஹாலிவுட்டின் பிரபல நடிகர் டான்னி டெவீட்டோவை சந்திக்க நேர்ந்தது. (Get Shorty & Be Cool படங்களை நினைவிருக்கிறதா?). அவரது திரைப்பட நிறுவனத்தின் சார்பில் டாரண்டினோவை வைத்து ஒரு படம் தயாரிப்பதாக டான்னி டெவீட்டோ சொல்லியிருந்தார்.
பிரம்மாண்டமான, தலையணை சைஸில் 159 பக்கங்களைக் கொண்ட ஒரு திரைக்கதை டான்னி டெவீட்டோவுக்கு ஒருநாள் வந்து சேர்ந்தது. ‘பல்ப் ஃபிக்ஷன்’ என்ற பெயரில். டெவீட்டோவுக்கு அது மிகவும் பிடித்தது. அவருக்கும் ட்ரைஸ்டார் நிறுவனத்துக்கும் ஒரு ஒப்பந்தம் இருந்ததால் ட்ரைஸ்டாரிடம் பேசினார் டெவீட்டோ. ஆனால் அப்போதுதான் வெள்ளைமாளிகையில் நடந்த ஒரு கருத்தரங்கில் ‘ஹாலிவுட் படங்களில் வன்முறை அதிகமாக இருப்பதைத் தடுக்க என்ன செய்யலாம்’ என்று ட்ரைஸ்டாரின் அப்போதைய சேர்மன் மைக் மெடேவாய் (Mike Meedavoy) பேசியிருந்ததால், அந்தத் திரைக்கதையை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று டான்னி டெவீட்டோவிடம் சொல்லிவிட்டனர். இதன்பிறகு பல ஸ்டுடியோக்களை அணுகினார் டெவீட்டோ. யாருமே இந்தத் திரைக்கதையை எடுக்க விரும்பவில்லை. அதீத வன்முறை திரைக்கதையில் இருக்கிறது என்று அவர்கள் நினைத்ததே காரணம்.
இதன்பிறகு, ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்ற தயாரிப்பாளரிடம் டான்னி டெவீட்டோ பேசினார். (லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றிய தொடரையும் War of the Ring மின்புத்தகத்தையும் படித்திருக்கும் நண்பர்களுக்கு, எட்டுவித கட்டளைகள் போட்ட ஹார்வி வெய்ன்ஸ்டீனைப் பற்றித் தெரிந்திருக்கும். இவரால் பீட்டர் ஜாக்ஸன் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் இன்றுவரை டாரண்டினோவைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்குகிறார்கள் வெய்ன்ஸ்டீன் சகோதரர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி விதி போலும்). மிராமேக்ஸ் ஸ்டுடியோ டிஸ்னியுடன் இணைந்திருந்த காலம் அது. இந்த எண்பது மில்லியன் டாலர் வியாபாரத்தைப் பற்றி டார்ட் ஆஃப் த ரிங்ஸ் தொடரில் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். துடிப்புடன் வெயின்ஸ்டீன் சகோதரர்கள் செயல்பட்டுவந்த காலகட்டம் இது. தனது பிஸியான அலுவல்களில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு சில நாட்கள் ’மார்த்தா’ஸ் வினியார்ட்’ (Martha’s Vineyard) என்ற மாஸச்சூஸெட்ஸைச் சேர்ந்த பகுதிக்கு விமானத்தில் செல்ல இருந்தார் ஹார்வி வெய்ன்ஸ்டீன். அப்போதுதான் அவரது கைகளில் இந்தத் தலையணை சைஸ் திரைக்கதை திணிக்கப்பட்டது. பொதுவாக ஹாலிவுட்டின் திரைக்கதைகள் 120 பக்கங்களைத் தாண்டுவதில்லை என்பது நமது தளத்தைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலும் புதிதாக வரும் இயக்குநர்களுக்கு முடிந்தவரை 110-115 பக்கங்களுக்குள்தான் திரைக்கதை எழுத வாய்ப்புத் தரப்படும். ஆனால் க்வெண்டின் டாரண்டினோ என்ற இந்தப் புதிய இயக்குநரின் திரைக்கதை 159 பக்கங்களில் இருந்ததால், கடுப்புடன் தான் ஃப்ளைட்டில் ஏறினார் ஹார்வி வெயின்ஸ்டீன்.
ஆனால் இரண்டே மணி நேரங்களில் திரைக்கதையை ஹார்வியிடம் கொடுத்த ரிச்சர்ட் க்ளாட்ஸ்டீன் என்பவருக்கு ஹார்வியிடமிருந்து ஃபோன் வருகிறது.
‘திரைக்கதையின் முதல் காட்சி அட்டகாசமாக இருக்கிறது. திரைக்கதை முழுதுமே இப்படித்தான் இருக்குமா?’
‘படித்துத்தான் பாருங்களேன்’
மறுபடியும் ஒரு மணி நேரத்தில் ஃபோன்.
‘இந்த ஆளுக்கு என்ன பைத்தியமா? பாதித் திரைக்கதையிலேயே பிரதான பாத்திரம் (வின்ஸெண்ட் வேகா) செத்துவிட்டது. இதற்குப்பின் என்ன செய்து திரைக்கதையை சுவாரஸ்யமாக வைக்கப்போகிறான் இந்த க்வெண்டின்?’
‘இதே வேகத்தில் படித்து முடித்துவிடுங்களேன்… உங்களுக்கே புரிந்துவிடும்’
உடனடியான பதிலாக, ‘இந்த ஆளுடன் வியாபாரம் பேச ஆரம்பியுங்கள்.. அவனுக்கு என்னென்ன நிபந்தனைகள் என்று கேளுங்கள்.. இந்தத் திரைக்கதையை விடவே முடியாது. இதனை நாம்தான் தயாரிக்கப்போகிறோம்’ என்று கர்ஜித்தார் ஹார்வி வெய்ன்ஸ்டீன்.
உடனடியாக தாய் நிறுவனமான டிஸ்னியிடம் பேசினார் ஹார்வி. டிஸ்னி மிராமேக்ஸை வாங்கியிருந்தபோது, புத்திசாலித்தனமாக அந்த வியாபார ஒப்பந்தத்தில் சுயமாக முடிவெடுக்கக்கூடிய சில ஷரத்துகளை ஹார்வி சேர்த்திருந்தார். அதனை டிஸ்னியும் ஒப்புக்கொண்டிருந்தது. இதனால், அப்போதைய டிஸ்னி சேர்மனான ஜெஃப்ரி காட்ஸன்பெர்க்கிடம் ‘இந்தப் படத்தை நான் தயாரிக்கப்போகிறேன். இதை உங்களிடம் ஒரு செய்தியாகத்தான் சொல்கிறேன். எனக்கு இதைத் தயாரிக்க முழு உரிமை இருந்தாலும் இதை உங்களிடம் சொல்லக்காரணம், என் முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன் என்பதைச் சொல்லத்தான்’ என்று தெளிவாகப் பேசினார் ஹார்வி. காட்ஸென்பெர்க்கும் திரைக்கதையைப் படித்தார். ‘இதுவரை நான் படித்த திரைக்கதைகளிலேயே இது அற்புதமானது. ஆனால் அந்த ஹெராயின் காட்சியில் மட்டும் கொஞ்சம் பார்த்து எடுக்கச்சொல்’ என்பது காட்ஸென்பெர்க்கின் பதில்.
இப்படி, திரைக்கதையைப் படித்த அத்தனை பேரையும் டாரண்டினோவால் கவர முடிந்தது. அதுதான் இன்றுவரை அவரது வெற்றியின் காரணம். எந்த டாரண்டினோ திரைக்கதையாக இருந்தாலும் அவரது முதல் 5 பக்கங்களைப் படித்துவிட்டால் முழுத் திரைக்கதையையும் படிக்காமல் வைக்க முடியாது.
இதன்பிறகு நடிகர்களுக்குத் திரைக்கதை அனுப்பப்பட்டது. ‘இந்தத் திரைக்கதையை வெளியே லீக் செய்தால் அடியாட்களை வைத்து உங்கள் எலும்பை எண்ணி விடுவோம்’ என்ற டிஸ்க்ளெய்மருடன்.
டாரண்டினோவின் ஏஜெண்ட்டின் பெயர் மைக் சிம்ப்ஸன். துவக்கத்தில் இருந்து இப்போதுவரை அவர்தான் ஏஜெண்ட். அவர்தான் டாரண்டினோ சார்பில் ஸ்டுடியோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். அவர், தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனிடம் ஒரு பட்டியலைக் கொடுத்திருந்தார்.
1. Final Cut: படம் டாரண்டினோ நினைத்தபடிதான் வெளிவரும். அதில் இருக்கும் காட்சிகளை டாரண்டினோதான் முடிவுசெய்வார். தயாரிப்பாளர்கள் அதில் தலையிடமுடியாது.
2. படம் இரண்டரை மணி நேரம் ஓடும்.
3. படத்தில் நடிக்கும் நடிகர்களை டாரண்டினோதான் தேர்வு செய்வார்.
இதன்படி நடிக நடிகையர்களையும் டாரண்டினோ தேர்வு செய்து அனுப்பியிருந்தார். ஹார்வி எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டார். ஒன்றே ஒன்றைத் தவிர. ஜான் ட்ரவோல்டா இந்தப் படத்தில் நடிக்கக்கூடாது என்பதே அவரது ஒரே நிபந்தனை. அவருக்கு ட்ரவோல்டாவைப் பிடிக்காது.
இந்தத் திரைக்கதை ஹாலிவுட் ஸ்டுடியோக்களிடம் அனுப்பப்பட்டிருந்தபோது ப்ரூஸ் வில்லிஸ் இந்தக் கதையில் வின்ஸெண்ட் வேகாவாக நடிக்க ஆர்வம் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு ஏற்கெனவே டாரண்டினோ தேர்வு செய்திருந்தது – ஜான் ட்ரவோல்டாவை.
படத்தில் வரும் பாக்ஸர் வேடத்துக்கு டாரண்டினோ தேர்வு செய்தது – மேட் டில்லன் Matt Dillon). There is Something about Mary படத்தில் துப்பறிவாளராக நடிப்பாரே, அந்த நடிகர். ஆனால் அவர் திரைக்கதையைக் கேட்டுவிட்டு, திரைக்கதையைப் படித்துப் பார்த்தே முடிவைச் சொல்லப்போவதாகச் சொன்னதால் அவரை டாரண்டினோ நீக்கிவிட்டார். காரணம், கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு, முடிவை அப்புறம் சொல்கிறேன் என்று சொன்ன டில்லனை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அந்த வேடத்துக்கு ப்ரூஸ் வில்லிஸை டாரண்டினோ கேட்க, வில்லிஸ் ஒப்புக்கொண்டார்.
எழுபதுகளின் இறுதியில் 1977ல் Saturday Night Fever வெளிவந்து, ட்ரவோல்டாவை சூப்பர்ஸ்டார் ஆக்கியிருந்தது. அதன் அடுத்த வருடமே Crease வந்து அவரை இன்னும் சில வருடங்களுக்கு ஒரு சூப்பர் ஸ்டாராகவே நிலைநிறுத்தும் வேலையைச் செய்திருந்தது. 1970ல் இருந்து 1980 வரையிலான பத்து ஆண்டுகளின் சூப்பர்ஹிட்களில் இவைகளும் இருந்தன. 24 வயதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார் ட்ரவோல்டா, இது ஒரு சாதனை. இதன்பின் 1980ல் Urban Cowboy வந்து, ட்ரவோல்டாவை நன்றாகவே நிலைநிறுத்தியிருந்தது. இதன்பிறகுதான் அவரது decline துவங்கியது. கிட்டத்தட்ட பதினான்காண்டுகளில் வெகுசில நல்ல படங்களையே ட்ரவோல்டாவால் நடிக்க முடிந்தது. Look Who’s talking (1989) அவற்றில் ஒன்று (இந்தப் படத்தைப் பற்றி Get Shortyல் ஜான் ட்ரவோல்டா கிண்டலடிப்பதைக் காணலாம். தன்னைப்பற்றித் தானே அடித்துக்கொண்ட கிண்டல் அது).
பல ஆண்டுகள் ஒரு ஃப்ளாப் ஸ்டாராகவே ட்ரவோல்டா இருந்த காரணத்தால் ஹார்வி வெய்ன்ஸ்டீன் அவரை நிராகரித்தார். அதற்குப் பதில் டானியல் டே லூயிஸையோ அல்லது ஷான் பென்னையோ அல்லது வில்லியம் ஹர்ட்டையோ போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரைத்தார். அதேசமயம் Die Hard வெளிவந்து ப்ரூஸ் வில்லிஸையும் அப்போது சூப்பர் ஸ்டார் ஆக்கியிருந்தது. அவருமே ட்ரவோல்டாவின் பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்று தீவிரமாக இருந்தார்.
பல்ப் ஃபிக்ஷனில் டாரண்டினோவின் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய இரவு. டாரண்டினோவின் ஏஜெண்ட் மைக் சிம்ப்ஸன் ஹார்வி வெய்ன்ஸ்டீனிடம் ஃபோனில் பேசுகிறார். அப்போது ஹார்வி, ‘எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன். ட்ரவோல்டாவைத் தவிர. மற்றதெல்லாம் நாளை அலுவலகத்தில் பேசிக்கொள்ளலாமே?’ என்று சொல்கிறார். ஆனால் சிம்ப்ஸன், ‘எல்லாவற்றையும் இப்போதே பேசினால்தான் உண்டு. காரணம் எங்களிடம் இன்னும் இரண்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் இருக்கிறார்கள். உங்களால் முடியாது என்றால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்களுக்குப் பதினைந்து நொடிகள்தான் என்னால் கொடுக்க முடியும். அதற்குமேல் போனால் ஃபோனை வைத்துவிடுவேன். அதன்பின் இந்தப் படம் உங்களுடையது அல்ல’ என்று பேசிவிட்டார். அதுமட்டுமல்லாமல் 15….14…13.. என்று எண்ணவும் ஆரம்பித்துவிட்டார். எண்ணிக்கை எட்டை அடைந்தபோது ஹார்வியின் சகோதரர் பாப் வெய்ன்ஸ்டீன் ஹார்வியை நிர்ப்பந்திக்க, ஹார்வி வேண்டாவெறுப்பாக எல்லா நிபந்தனைக்கும் ஓகே சொல்ல, ஒப்பந்தம் இனிதே முடிந்தது.
கதையில் ப்ரூஸ் வில்லிஸ் இருந்ததால், தயாரிப்பு தொடங்கும் முன்னரே வெளிநாட்டு உரிமை 11 மில்லியனுக்கு விலைபோனதால் பட்ஜெட்டான எட்டு மில்லியன் டாலர்களை மொத்தமாக ஹார்வியால் வசூலித்துவிட முடிந்தது.
இதன்பிறகு கதாநாயகி மியா வாலஸாக உமா தர்மன். எத்தனையோ முன்னணிக் கதாநாயகிகள் இருந்தும் அப்போது 23 வயதே ஆகியிருந்த உமா தர்மன்தான் டாரண்டினோவின் தேர்வாக இருந்தது.
படத்தின் இன்னொரு பிரதான கதாபாத்திரமான ஜூல்ஸுக்கு டாரண்டினோ தேர்வு செய்திருந்தது – லாரன்ஸ் ஃபிஷ்போர்ன். ஆனால் அவர் அதனை மறுத்துவிட, அப்போது இளம் நடிகர்களாக இருந்த ஸாமுவேல் ஜாக்ஸனுக்கும் பால் கால்டெரோனுக்கும் போட்டி ஏற்பட்டது. உண்மையில் இருவரிடமும் ‘உனக்காகத்தான் இந்த வேடம்’ என்று டாரண்டினோ உறுதியளித்திருண்டார். ஒரே நாளில் இருவருக்கும் ஆடிஷன் குறிக்கப்பட்டது. இது ஸாமுவேல் ஜாக்ஸனுக்குத் தெரியாது. கால்டெரோன் ஏற்கெனவே ஒருமுறை படத்தின் வசனங்களை அட்டகாசமாகப் பேசியிருந்தார். அவருக்குத்தான் இந்த வேடம் போகப்போகிறது என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. அன்று இருவரில் முதலில் ஆடிஷனுக்குச் சென்றவர் பால் கால்டெரோன்தான். ஆனால், அன்று டாரண்டினோ சற்றே தாமதமாக வந்ததால் லேசாக கால்டெரோன் டென்ஷன் ஆனார். கூடவே, ஆடிஷனில் வசனங்களை கால்டெரோன் பேசியபோது தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூடவே வசனங்களை உச்சரிக்கத் துவங்கினார். இதனால் கால்டெரோனின் வசன உச்சரிப்பு பாதிக்கப்பட்டது. நேரம் செல்லச்செல்ல அந்த டென்ஷன் அதிகம் ஆனது. வசனங்களில் தடுமாறினார் கால்டெரோன். அந்த வேடம் அவரிடமிருந்து இப்படியாகப் பறந்துசென்றது.
அந்த நேரத்தில்தான் ஏர்போர்ட்டிலிருந்து ஸாமுவேல் ஜாக்ஸன் வந்துகொண்டிருக்கிறார். ஸ்டுடியோவுக்குள் அவர் நுழைந்ததும் அங்கே அவரை வரவேற்ற ஒரு அதிகாரி, ‘மிஸ்டர் லாரன்ஸ் ஃபிஷ்போர்ன்.. உங்கள் நடிப்பு எனக்குப் பிடிக்கும்’ என்றே வரவேற்றதால் ஸாமுவேல் ஜாக்ஸனும் டென்ஷன் ஆனார். அப்போதுதான் ஆடிஷன் முடிந்து பால் கால்டெரோன் வெளியே வருகிறார். தடாலடியாக உள்ளே புகுந்த ஸாமுவேல் ஜாக்ஸனின் ஒரு கையில் ஒரு பர்கர். இன்னொரு கையில் ஒரு குளிர்பானம். உள்ளே இருந்த அனைவரையும் கொன்றுவிடுவது போல் முறைத்துக்கொண்டே, ’ Do you think you’re going to give this part to somebody else? I’m going to blow you motherfuckers away!’ என்று கடுப்பில் கோபமாக ஸாமுவேல் ஜாக்ஸன் பேச, அனைவருக்கும் ஜூல்ஸையே நேரில் பார்த்ததுபோல் இருந்ததால் ஏகமனதாக ஸாமுவேல் ஜாக்ஸனுக்கு அந்த வேடம் சென்றது. கூடவே பைபிளில் இருந்து படிக்கும் காட்சியில் மிகவும் உக்கிரமாகவும் நடித்திருந்தார் ஜாக்ஸன். பால் கால்டெரோன், பல்ப் ஃபிக்ஷனில் வில்லன் மார்ஸெல்லஸ் வாலஸின் bartendeராக ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.
இதன்பின் பிற வேடங்களுக்கு அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
படப்பிடிப்பு துவங்குவத்ற்கு முன்னர் அனைவருக்கும் படத்தின் களத்தைப்பற்றிப் பயிற்சி கொடுக்கப்பட்டது. உமா தர்மனுக்கு ஹெராயின் உறிஞ்சுவதிலும் கொச்சையான வார்த்தைகள் பேசுவதிலும் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஹெராயின் அடிக்டாக இருந்த க்ரெய்க் ஹெமான் என்ற டாரண்டினோவின் நண்பர்தான் இந்தப் பயிற்சியைக் கொடுத்தவர். அதேபோல் ட்ரவோல்டா ஹெராயின் அடிக்ட்களை நெரில் பார்த்துப் பழகிப் பயிற்சி எடுத்துக்கொண்டார். பல்ப் ஃபிக்ஷன் பார்த்தவர்களுக்கு, ஒரு காட்சியில் ட்ரவோல்டா ஹெராயினை இஞ்செக்ட் செய்துகொள்வது தெரியும். அதில் அப்படியே கண்கள் சொருகிக்கொண்டு முகமெல்லாம் மலர்ந்து ஹெராயினை உட்செலுத்திக்கொண்டதுபோலவே ட்ரவோல்டா நடித்திருப்பார். அந்தக் காட்சிக்காக ட்ரவோல்டாவுக்குக் கிடைத்த டிப்ஸ் என்ன தெரியுமா? முடிந்தவரை டகீலாவை அருந்திவிட்டு இளஞ்சூடான தண்ணீர் இருக்கும் bathtubபில் அமிழ்ந்திருந்தால் அந்த எஃபக்ட் வந்துவிடும் என்பதே.
படப்பிடிப்பு துவங்கியது.
பி.கு
இங்கே ஒரு சிறிய விஷயம். இது திறந்த மனதுடன் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு அல்ல. மாறாக, இது யாருக்கு என்றால், அடுத்தவர்களின் கருத்தை ஏற்க மறுத்து, எதிலுமே இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று செயல்படுபவர்களுக்கே. எனவே, என்னைப்போன்ற ஜாலியான திரை ரசிகர்கள் இதைப் படிக்கவேண்டாம். அலுக்கும்.
டாரண்டினோவைப் பற்றி எழுத ஆரம்பித்ததுமே சில நண்பர்களுக்கு குளிர் ஜுரம் வந்து கைகால் நடுங்கி விரல்கள் தந்தியடித்து, முடியெல்லாம் செங்குத்தாக நட்டுக்கொண்டு நிற்பதைக் காணமுடிகிறது. உலக சினிமா என்றால் என்ன? Literature of trash என்றால் என்ன? உலக இலக்கியத்தில் அதன் பங்கு எப்படிப்பட்டது? போன்ற எதுவுமே தெரியாத அந்த நண்பர்களின்மேல் பரிதாபமே எழுகிறது. Literature of Trash என்றால் என்ன என்று திரைப்படங்களில் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் அவர்கள் அட்லீஸ்ட் அடிப்படை முயற்சியாக Serbian Film ஆவது பார்த்தால் நல்லது. இவர்களின் பிரச்னை என்ன என்றால், தங்களைத்தாங்களே உலக சினிமாவை உய்விக்க வந்த தூதுவர்கள் என்று எண்ணிக்கொண்டு அந்தக் கண்மூடித்தனமான ஈகோவினால் நல்ல படங்களைத் தவறவிட்டுவிடுகின்றனர். அவரது படங்களைக் கண்மூடித்தனமாக மறுத்து சிலர் எழுதுவதால் அவர்களுக்கு டாரண்டினோவின் அனுபவம் இல்லாமல் போகிறது. அதனால் அவர்களுக்கே நஷ்டம். இனியாவது திறந்த மனதுடன் அவர்கள் இந்தக் கட்டுரைகளைப் படித்து, நல்ல படங்களைப் பார்க்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். உலகம் முழுக்க இந்தப் பிரச்னை இருக்கிறது. தீவிர வலதுசாரிகள் எப்போதும் இடதுசாரி சிந்தனையை மறுத்தே வந்திருக்கின்றனர். அதேபோல் ஒழுக்கமான மடி எழுத்தாளர்கள் Transgressive (சமுதாயத்தின் போலியான, கற்பிக்கப்பட்ட சிந்தனைமுறையை உடைப்பது) எழுத்தாளர்களை அவதூறாகப் பேசியே வந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆன்மா, உள்ளொளி என்றெல்லாம் பேசி, எழுதினால்தான் அது இலக்கியம். இலக்கியத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதே இவர்களால் ஒப்புக்கொள்ளமுடிவதில்லை. செக்ஸோ வன்முறையோ வந்துவிட்டால் போதும்; இவர்களின் கூச்சல் சகிக்காது. ஆனால் இவர்களில் பலருமே குடும்பத்துடன் தொலைக்காட்சியில் குத்துப்பாடல்களையும் பார்ப்பவர்கள். இதுவேதான் உலக சினிமாவிலும். Pulp Fiction கான் பட விழாவில் உலக சினிமாவின் மரியாதைக்குரிய பாம் டோர் (பால்மே டி ஓர் – palme d’or அல்ல) விருதை வாங்கியிருக்கிறது. உலக சினிமாவில் புயல் போல் நுழைந்த படம் அது. அந்த விருதைக் கொடுத்தவர்களைவிட இப்படிப்பட்ட கண்மூடித்தனமான நபர்களுக்கு உலக சினிமா தெரிந்திருக்கும் என்று எண்ணத் தோன்றவில்லை.
டாரண்டினோவை யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்று உலக அளவில் கவனித்தால், பெரும்பாலும் இப்படிப்பட்ட போலிகளே அதிகம் என்பது தெரியும்.
எந்தக் கலைவடிவத்திலும் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று – பத்தியமான, மடியான, உயர்ஜாதிப் படைப்பு. இன்னொன்று அடிமட்ட நிலையில் இயங்கும் Transgressive படைப்பு. பெரும்பாலான முதல் வகை நபர்கள் இந்த இரண்டாம் வகையான படைப்பை அழித்தொழிக்கவே முயல்வார்கள். காரணம் அவர்களுக்கு the other என்ற, இன்னொன்று இருக்கக்கூடாது என்பதே எண்ணம். இவர்களின் கற்பிதங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ட்ரான்ஸ்க்ரெஸிவ் எழுத்தில் உடைபடுவதை இவர்களால் தாங்க முடியாது. இவர்களுக்கு என் கோரிக்கை என்னவென்றால், நவீனகாலத்திய நல்ல படங்களை இனிமேலாவது பார்க்கக் கற்றுக்கொள்ளலாம் என்பதே. போலவே கண்மூடித்தனமான எதிர்ப்பால் என்ன நடக்கும் என்றால் இவர்களுக்கே ரத்தக்கொதிப்பு, பீப்பீ ஏகியவை எகிறி, உடல்நிலையைப் பாதிக்கும். எனவே, இவர்கள் டாரண்டினோவின் அனைத்துப் படங்களையும் இனிமேலாவது பார்த்து ரசித்து உய்ய என் வாழ்த்துகள். முடிந்தால் இதைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டும். பார்ப்போம்.
எனவே, வெளிப்படையாக இருப்போம். அனைத்துப் படங்களையும் பார்ப்போம்.
(தொடருவோம்…மிக விரிவான திரைப்பட அனாலிசிஸுடன்)
இந்த வரிசையின் எல்லாக் கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம் –> Quentin Tarantino – an Analysis.
Reference:
1. http://www.vanityfair.com/hollywood/2013/03/making-of-pulp-fiction-oral-history
2. http://www.rogerebert.com/interviews/quentin-tarantino-a-pulp-hero
3. http://www.pulpfiction.com/all-interviews.html
// பி.கு
இங்கே ஒரு சிறிய விஷயம். இது திறந்த மனதுடன் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு அல்ல. மாறாக, இது யாருக்கு என்றால், அடுத்தவர்களின் கருத்தை ஏற்க மறுத்து, எதிலுமே இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று செயல்படுபவர்களுக்கே. எனவே, என்னைப்போன்ற ஜாலியான திரை ரசிகர்கள் இதைப் படிக்கவேண்டாம். அலுக்கும். //
படிச்சு முடிச்ச பின்னாடியா வரும்.
excellent wrritten keep it up…
every hardcore world cinema fan always love this film..
Cheers boss 🙂
Waiting for next Quentin Tarantino article 🙂