Sin City: A Dame to Kill for (2014) & Dracula Untold (2014) – Reviews

by Karundhel Rajesh October 13, 2014   English films

சில வாரங்களுக்கு முன்னர் சின் ஸிடி படத்தின் இரண்டாம் பாகத்தையும், இரண்டு நாட்களுக்கு முன்னர் ட்ராகுலா அண்டோல்ட் படத்தையும் பார்த்தேன். இரண்டைப் பற்றியும் எழுதிவிடலாமே என்றே இந்த விமர்சனம்.

முதலில் சின் ஸிடி.

இந்தப் படத்தின் முதல் பாகம் வெளிவந்தபோது அதனால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். எனக்கு இயல்பிலேயே ராபர்ட் ரோட்ரிகஸைப் பிடிக்கும் என்பது ஒரு காரணம். ஃப்ராங்க் மில்லரும் ரோட்ரிகஸும் சேர்ந்து மில்லரின் க்ராஃபிக் நாவலை எப்படிப் படமாக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்பது இன்னொரு காரணம். நான் எதிர்பார்த்தபடியே சின் ஸிடியின் முதல் பாகம் மிகவும் நன்றாகப் படமாக்கப்பட்டிருந்தது. க்ராஃபிக் நாவலின் இயல்பு மாறாமல் நாவலில் வெளிப்பட்டிருந்த வன்முறையும் ஒருவிதத் தீவிரமான madnessஸும் படத்தில் மிகச்சரியாக வெளிப்பட்டிருந்தன. அதுமட்டுமில்லாமல் 2005 என்பது முழுக்க முழுக்க ஸிஜியால் உருவாக்கப்படும் பின்னணிகளுக்கான சரியான காலகட்டம். அதற்கு முந்தைய வருடம்தான் Sky Captain and the World of Tomorrow திரைப்படம் இப்படி வெளியாகியிருந்தது (படத்தைத் திரையரங்கில் பார்த்தேன் – கோவையின் மாருதி. எனக்குப் பிடித்திருந்தது). உலகின் திரைப்பட ரசிகர்களுக்கு இந்தப் புதிய அனுபவம் மிகவும் அட்டகாசமாக இருந்தது. இதனாலும், வலுவான கதை – நடிப்பு ஆகியவை இருந்ததாலும் சின் ஸிடி திரைப்படம் உலகெங்கிலும் பிரமாதமான வரவேற்பு பெற்றது.

Fast forward 9 years. 2014ல் சின் ஸிடியின் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இந்தக் காலகட்டத்தில் இப்படிப்பட்ட பின்னணி ஸிஜியில் இருக்கும் படங்கள் எக்கச்சக்கமாக வெளியாகிவிட்டன. அவதாரை இன்னும் யாராலும் மறக்கமுடியாது. 300 படம் இன்னும் பலரின் நினைவுகளிலும் இருக்கிறது. டிம் பர்ட்டனால் இயக்கப்பட்ட Alice in Wonderland படமும் மறக்கமுடியாததே.  இதே 2014ல் இதற்கு முன்னர் வெளியாகியிருந்த 300 படத்தின் இரண்டாம் பாகம் – Rise of An Empire – நன்றாக ஓடியது ஒருவேளை ராபர்ட் ரோட்ரிகஸுக்கு நம்பிக்கை அளித்திருக்கலாம். இந்தப் படத்தின் கதையும் ஃப்ராங்க் மில்லருடையதுதான்.

ஆனால் ஏற்கெனவே பார்த்த அதே விதமான இன்னொரு படத்தைப் புதிதாக எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? எந்த ஒரு படத்துக்கும் இரண்டாம் பாகம் என்பது தவிர்க்கமுடியாததாக இருந்தாலும், பிற படங்களில் குறைந்தபட்சம் புதிய பின்னணி, சில புதிய கதாபாத்திரங்கள், நடிகர்கள், கதை போன்றவை வேறுபடும். ஆனால் சின் ஸிடியில் ஒரேவிதமான ஸிஜியை உபயோகித்துத்தான் காட்சிகளை எடுக்கமுடியும்; கதாபாத்திரங்களில் பலரும் ஏற்கெனவே வந்தவர்களே. இப்படிப்பட்ட நிலையில் அதை எப்படி ரசிக்கமுடியும்?

ஆனால் இதையும் மீறி இந்தப் படத்தில் ரசிக்கத்தகுந்த விஷயம் – ஈவா க்ரீனின் நடிப்பு. ஆச்சரியகரமாக, ஃப்ராங்க் மில்லரின் 300- Rise of the Empire படத்திலும் இதே ஈவா க்ரீனின் நடிப்புதான் படத்தை வெற்றிகரமாக ஓடவைத்தது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தில் (A Dame to Kill For), ஜாஷ் ப்ரோலினின் முன்னாள் காதலியாக வருகிறார் ஈவா க்ரீன். அந்தக் குறிப்பிட்ட கதை மட்டும்தான் இந்தப் படத்திலேயே மிகவும் சுவாரஸ்யமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இன்னொரு கதையான The Long Bad Nightல் ஜோஸஃப் கார்டன் லெவிட் வருகிறார். அந்தக் கதைக்கும் தமிழின் பழைய பழிவாங்கும் கதைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஈவா க்ரீனின் அத்தியாயம் முடிந்ததும் மறுபடியும் இந்தக் கதை தொடர்கிறது. ஆனால் எந்தப் பயனுமே இல்லாமல் முடிந்துபோகிறது. கூடவே, முதல் பாகத்தின் கதையுடன் தொடர்புடைய சில கதைகளும் இதில் உண்டு. அதில் ஒன்றுதான் Nancy’s Last Dance. இதில் ஆவியாக ப்ரூஸ் வில்லிஸின் கதாபாத்திரம் ஜான் ஹார்ட்டிகன் வருகிறது. அதில் வரும் ஜெஸிகா ஆல்பாவின் பாத்திரம் நான்ஸிதான் இந்த அத்தியாயத்தின் பிரதான பாத்திரம். இதுவுமே ஏனோதானோ என்றுதான் எடுக்கப்பட்டிருந்தது.

எந்த வகையிலும் ஆடியன்ஸைக் கவராத இந்தப் படம் தோல்வியடைந்ததில் பெரிய வியப்பு இல்லை. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து ஒரு சிறந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும்போது எத்தனை எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் திரையரங்கு செல்வார்களோ, அத்தனை எதிர்பார்ப்பையும் வெற்றிகரமாகப் பொய்க்கவைத்து இந்தப் படத்தைத் தோல்வியுறவைத்த பெருமை ரோட்ரிகஸையே சேரும்.


Dracula-Untold-Cover-Wallpapers-HD

இனி ட்ராகுலாவைக் கவனிப்போம்.

ப்ராம் ஸ்டோக்கர் எழுதிய Dracula கதை அனேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும். உலகெங்கிலும் பல படங்களாக இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. வெர்னர் ஹெர்ஸாக் கூட நாஸ்ஃபெராட்டூ (Nosferatu the Vampyre) என்ற பெயரில் 1922ல் வெளிவந்திருந்த ஒரு ஜெர்மானியப் படத்தை க்ளாஸ் கின்ஸ்கியை நடிக்கவைத்து ரீமேக் செய்தார். ஆங்கிலத்தில் குறிப்பிடத்தகுந்த ட்ராகுலா படங்கள் என்றால்: 1. Bram Stoker’s Dracula (1992) – இயக்கம்: ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கேப்பலா – படத்தைச் சொல்லலாம். கேரி ஓல்ட்மேன் பிரமாதமாக நடித்திருந்த படம் இது. நாவலை அப்படியே அடியொற்றி எடுக்கப்பட்டிருந்த படம். இந்தப் படம் பயமாக இருக்காது. மாறாக, ட்ராகுலா என்ற ரத்தக்காட்டேறியின் கதையை உணர்ச்சிகரமாகச் சொல்லிய படம். 2. இதுதவிர ஹெர்ஸாகின் நாஸ்ஃபெராட்டூ. மற்றபடி ஹாலிவுட்டில் புற்றீசல் போல க்ரிஸ்டோஃபர் லீ(ஸாருமான் புகழ்)யை வைத்து எக்கச்சக்கமான படங்கள் அறுபதுகளில் வெளிவந்தன. அவற்றையெல்லாம் இப்போது பார்த்தால் விழுந்து புரண்டு சிரிக்கத்தான் தோன்றும்.

ட்ராகுலா என்ற கற்பனையான காட்டேறிக்கும், நிஜத்திலேயே வாழ்ந்த வ்ளாட் III (Vlad the Impaler) என்ற மன்னனுக்கும் தொடர்பு உண்டு. ப்ராம் ஸ்டோக்கர் தனது கதாபாத்திரத்தை உருவாக்கக் காரணம் இந்த மன்னன்தான். ட்ரான்ஸில்வேனியாவில் பிறந்து வாழ்ந்த மன்னன் இவன். இவனது பரம்பரைக்கு ட்ராகுல் என்ற பெயர் உண்டு. ட்ராகனின் வம்சாவழியினர் என்பது அர்த்தம். இவனது காலம் கி.பி பதினைந்தாம் நூற்றாண்டு. Impaler என்பது வெறும் பட்டம் அல்ல. ஆங்கிலத்தில் இம்பேலிங் என்றால் உடலின் குறுக்கே மிகக்கூரிய ஒரு குச்சியை நுழைத்து மறுபுறம் வெளியேற்றுவது என்று அர்த்தம். தமிழில் ‘கழுவேற்றம்’ என்று சொல்கிறார்கள் அல்லவா? அதுதான் இம்பேலிங். தனது நாட்டை எதிர்த்து வந்த ஆயிரக்கணக்கான துருக்கியர்களை வ்ளாட் III மன்னன் இப்படித்தான் கழுவேற்றினான் என்பது அவனைப் பற்றிய நாட்டார் கதைகளின் முக்கியமான அம்சம். அவனது காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட சில குறிப்புகளில் இருந்து, குழந்தைகளை உயிரோடு ரோஸ்ட் செய்து தாய்மார்களைத் தின்னச்செய்திருக்கிறான் என்பது தெரிகிறது.

வ்ளாட் III மன்னனைப் பற்றி முழுமையாக இங்கே படித்துக்கொள்ளலாம்.

இதோ 1992ன் ட்ராகுலா படத்தின் ஆரம்பம். இவை இரண்டையும் ஒருமுறை பார்த்தாலே ட்ராகுலாவைப் பற்றிய ஒரு சரியான புரிதல் கிடைக்கும். இவற்றின் இசையைக் கவனித்துப் பாருங்கள்.

உலகெங்கிலும் பல்வேறுவகையாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ட்ராகுலாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. மிகப்பெரிய பின்னணி கொண்ட ஒரு கதாபாத்திரம் இது.

இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் எப்படி ரத்தக்காட்டேறியாக உருவானது என்பதை விளக்கப்போகும் படம் ஒன்றை எவ்வளவு கவனமாக எடுக்கவேண்டும்? ஆனால் அப்படி எடுக்கப்படாமல் (ஒரு சில காட்சிகள் தவிர) ஒரு சாதாரணப் படமாக ஆகிவிட்டதுதான் Dracula Untoldடின் பிரச்னை. அதிலும் குறிப்பாக ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கேப்பலா போன்ற ஜாம்பவான்கள் இதற்குமுன் கையாண்டிருந்த ஒரு பாத்திரம் ட்ராகுலா. அதைப் படமாக்கும்போது கவனம் வேண்டாமா?

இந்தப் படத்தின் பிரதான பிரச்னை, ட்ராகுலாவை ஒரு ஹீரோவாகக் காட்ட முயல்வதுதான். எத்தனை தலைகீழாக நின்றாலும் ட்ராகுலாவைக் கதாநாயகனாக யாராலும் ஒப்புக்கொள்ளமுடியாது.எக்கச்சக்கமான போர்வீரர்களை உயிரோடு கழுவில் ஏற்றிய ரத்தவெறி பிடித்த மன்னன் அவன். இத்தகைய ட்ராகுலா கதாநாயகன் என்றால் எப்படி அதை ஏற்றுக்கொள்வது? அது மட்டும் இல்லாமல் ட்ராகுலாவைப் பற்றித் தெரியாதவர்களே இல்லை. உலக இலக்கியங்களில் மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரம் அது. அப்படிப்பட்ட, எல்லாருமே ஏற்கெனவே தெரிந்துகொண்டிருக்கும் பாத்திரம் ஒன்றை அணுகும்போது இத்தனை எளிதாகவும் மடத்தனமாகவும் எப்படி அதனை சித்தரிக்க முடியும்?

படத்தில் ட்ராகுலாவாக எனக்குப் பிடித்த நடிகர் லூக் இவான்ஸ். இதற்குமுன்னர் Clash of the Titans படத்தில் கடவுள் அப்போலோவாகவும் The Three Musketeers படத்தின் அராமிஸாகவும் Immortals படத்தில் கடவுள் ஸ்யூஸாகவும், இன்னும் இன்ஸ்பெக்டர் எம்மெட் பீல்ட்ஸாகவும் (The Raven), ஹாபிட் படங்களில் The Bard பாத்திரத்திலும் நடித்திருக்கும் மனிதர். இத்தனை சரித்திரப் பாத்திரங்களில் சமீபகாலத்தில் யாரும் நடித்ததில்லை. இந்த எல்லாப் படங்களையும் பற்றி நான் கருந்தேளில் எழுதியும் இருக்கிறேன். இவரது நடிப்பு இந்தப் படத்தில் பிரமாதம் என்றெல்லாம் சொல்லமுடியாவிட்டாலும், ஏற்றுக்கொண்ட பாத்திரத்தில் நன்றாகச் செய்திருக்கிறார். இவருக்குப் பின்னர் இந்த படத்தின் ஒரே நல்ல அம்சம் – ரமீன் ஜவாதியின் இசை (Ramin Djawadi). கேம் ஆப் த்ரோன்ஸின் பிரமாதமான டைட்டில் இசை நினைவிருக்கிறதா? படத்தில் சில இடங்களில் இவர்தான் இசை என்பது அது தெரியாமல் படம் பார்த்தாலும் தெரிந்துவிடும்.

வ்ளாட் த இம்பேலர் (ட்ராகுலா) என்பவன் ட்ரான்ஸில்வேனியாவின் இளவரசன். துருக்கியின் தூதுவர்கள் இவனைச் சந்தித்து, ஆயிரம் சிறுவர்களும் இளைஞர்களும் மன்னனுக்குத் தேவை என்றும், அவர்களை வைத்து இரக்கமில்லாத ஒரு படையை உருவாக்கப்போவதாகவும் சொல்கின்றனர். வ்ளாட் சம்மதிப்பதில்லை. அவனுக்கும் துருக்கியர்களுக்கும் பிரச்னை. இந்த நிலையில் இவனது பிராந்தியத்தில் இருக்கும் ஒரு ரத்தக்காட்டேறியைச் சந்திக்கும் வ்ளாட், அதன் சக்தி தன்னிடம் இருந்தால் துருக்கியர்களை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அதனிடம் சக்தியைக் கேட்கிறான். அப்போது அந்தக் காட்டேரி இவனிடம் ஒரு ஒப்பந்தம் போடுகிறது. அதன் ரத்தத்தை ஊற்றித்தரும் காட்டேறி, அதைக் குடித்ததும் மூன்று நாட்களுக்கு அதன் சக்தி வ்ளாடுக்கு வந்துவிடும் என்றும், அந்தக் காலகட்டத்தில் மனித ரத்தம் குடிக்கவேண்டும் என்று ஒரு வெறி கிளம்பும் என்றும், அதையும் மீறி மனித ரத்தத்தைக் குடிக்காமல் இருந்தால் மூன்று நாட்களில் அந்தச் சக்தி வ்ளாடைவிட்டுப் போய்விடும் என்றும் சொல்கிறது. மீறி ரத்தம் குடித்துவிட்டால் போச்சு. வ்ளாட் நிரந்தர ரத்தக்காட்டேறியாகிவிடுவான். இந்தப் பழைய காட்டேறி அதன்பின் விடுதலையாகிவிடும்.

இதன்பின் என்ன நடக்கவேண்டுமோ அது நன்றாக நடக்கிறது. நிரந்தரக் காட்டேரியாகிறான் வ்ளாட். ட்ராகுலாவாக மாறுகிறான். இதுதான் கதை.

இத்தனை பலவீனமான கதையில் எப்படி சுவாரஸ்யம் வரும்? மிகச்சில காட்சிகளை மட்டுமே என்னால் ரசிக்க முடிந்தது (காட்டேறியிடம் வ்ளாட் முதன்முறையாகப் பேசுவது; சக்திபெற்ற வ்லாட், இறுதியில் எதிரிகளை வெல்லக் கிளம்புவது, அவனை அவனது மக்களே ஒதுக்குவது போன்றவை). இந்தப் படத்தின் காட்சிகளில் அவற்றுக்குத் தேவையான உணர்ச்சிகள் இல்லை. உணர்ச்சிகள் இல்லாததால் காட்சிகள் மிகச்சாதாரணமாக அமைந்து நமது பொறுமையைச் சோதிக்கின்றன. கணவன் காட்டேறியாகிவிட்டான் என்பது எத்தனை கொடூரமான சங்கதி? அந்த இடத்தில் மனைவியின் நடிப்பையும் எதிர்வினையையும் கவனித்தால் அந்தக் காட்சி ஒன்றுமே இல்லாமல் கடந்துசெல்வது புரியும். இதுதான் இந்தப் படத்தின் பல காட்சிகளுக்கும் பொருந்தும்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படக்கூடாது என்பதே என் விருப்பம். 1992ல் கேப்பலா எடுத்த ட்ராகுலாவுக்குப் பின் வேறு நல்ல ட்ராகுலாவே இல்லை. அதை லூக் இவான்ஸ் சரிசெய்வார் என்று லேசாக நம்பினேன். அது வீணாகிவிட்டது. கேரி ஓல்ட்மேன் கேரி ஓல்ட்மேன்தான். அவரது ட்ராகுலாவில் வெளிப்படும் ஒருவித ஸ்டைல் இவான்ஸிடம் இல்லை. அதுசரி – கேப்பலா ஒரு ஜித்தர். புதிய இயக்குநரான கேரி ஷோரிடம் அதை எப்படி எதிர்பார்க்கமுடியும்?

PS:-இதில் ஒரு சிறிய சஸ்பென்ஸ் இருக்கிறது. வ்ளாட்டிடம் பேசும் பழைய ரத்தக்காட்டேறியின் பெயரைக் கவனியுங்கள். அது யார் என்று கண்டுபிடியுங்கள்.

  Comments

1 Comment;

  1. vishva

    Caligula.

    Reply

Join the conversation