Snowpiercer (2013) – South Korean
ஒரு கற்பனை.
ஏதோ ஒரு விபத்தால் உலகம் முழுதும் பனியாகிவிடுகிறது. பெரும்பாலான மக்கள் இறந்துவிடுகிறார்கள். உலகில் மிச்சம் இருப்பவர்கள் மிகச்சிலர் மட்டுமே. அவர்கள் அனைவரும் ஒரு ரயிலில் இருக்கிறார்கள். அந்த ரயில் நிற்காமல் உலகம் முழுக்கவும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இந்தப் பிரயாணத்தில் முடிவு என்பதே இல்லை. இறக்கும்வரை அதே ரயில்தான். வெளியே கால்வைத்தால் பனியில் உறைந்து சாகவேண்டியதுதான். எனவே, வெளியுலகத்தைப் பார்க்காமல் அந்த ரயிலிலேயே பிறந்து வளர்ந்தவர்களும் இருக்கின்றனர். அந்த ரயில்தான் உலகம். அதைத்தவிர உலகில் வேறு எதுவுமே இல்லை. 17 வருடங்களாக இப்படி அந்த ரயில், உலகைச் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
இந்த உலகின் கடவுள் யார்? ரயிலின் இஞ்சின். அதுதான் நிற்காமல் செயல்பட்டு, ரயிலில் உள்ளவர்களைக் காக்கிறது. அந்தக் கடவுளின் தூதராக, அந்த ரயிலை வடிவமைத்த மனிதர் இருக்கிறார். அவர், இஞ்சினை விட்டு வெளியில் வருவதில்லை. ஆனால் மொத்த ரயிலின் கட்டுப்பாடும் அவரிடம்தான் இருக்கிறது.
அந்த உலகில் இரண்டேவகையான மனிதர்கள் மட்டுமே. வசதியானவர்கள் ரயிலின் முன்பக்கத்திலும், அடிமைகளாக நடத்தப்படும் சிலர் ரயிலின் பின்பக்கத்திலும் இருக்கிறார்கள். இந்த அடிமைகளின் மீதான அதிகாரம், ரயிலின் முன்பக்கத்தில் இருப்பவர்களுடையது. உணவு, தண்ணீர் போன்றவையெல்லாமே தினமும் மிகக்குறைந்த அளவில்தான் இவர்களால் அந்த அடிமைகளுக்கு வழங்கப்படுகிறது. அடிமைகளும் சரி, அவர்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்களும் சரி, அந்த ரயிலின் உள்ளேயே வாழ்ந்து இறக்கவேண்டிய கைதிகள்தான்.
இப்படி ஒரு உலகில் ஒரு கதை நடந்தால் அது எப்படி இருக்கும்? அடிமைகள் அவசியம் புரட்சி செய்வார்கள். புரட்சியின் நோக்கம், கடைசிப் பெட்டியில் இருந்து ஒவ்வொன்றாகக் கடந்து இஞ்சினைக் கைப்பற்றவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இந்தப் புரட்சிகளைப் பற்றிய சரித்திரங்கள் அடிமைகளிடம் ஏராளமாக இருக்கும். இதற்கு முன்னர் எப்போது இத்தகைய புரட்சிகள் நடந்தன, அவை என்ன ஆயின என்பதெல்லாம் தியாகங்களாக அந்த ரயிலில் பிறக்கும் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படும். தங்களை இதுவரை அடைத்துவைத்து ஆளுமை செலுத்துபவர்களைக் கொல்லவேண்டும், அதன்பின் இஞ்சினைக் கைப்பற்றவேண்டும் என்ற லட்சியம், அவர்களின் மனதில் கொழுந்துவிட்டு எரியும்.
இதுதான் Snowpiercer.
அடிமைகளின் இந்த ரயில் புரட்சிகளுக்குத் தலைமை வகித்துக்கொண்டிருப்பவர், கிலியம் (Giliam). மிகவும் வயதான நபர். இவருக்கு ஒரு கையும் காலும் கிடையாது. இவருக்கு அடுத்ததாக அடிமைகள் நம்பிக்கை வைத்திருக்கும் நபர், கர்ட்டிஸ் எவரெட் (Curtis Everett). வருங்காலத்தில் கிலியமுக்குப் பிறகு அவர்களைத் தலைமைதாங்கும் பொறுப்பு கர்டிஸுக்குத்தான் என்பது பெரும்பாலான அடிமைகளின் கருத்து. அதேபோல் கர்டிஸும் எப்படியாவது இஞ்சினைக் கைப்பற்றிவிடவேண்டும் என்று துடிக்கிறான்.
இத்தகைய சூழலில்தான் இந்தப் படம் துவங்குகிறது. யோசித்துப் பாருங்கள் – உலகம் என்பதே ஒரு ரயில்தான் என்பது எத்தனை அட்டகாசமான கற்பனை? வெளியே கொடிய பனி. ஒவ்வொரு வருடமும் ரயில் சென்ற வருடத்தில் வலம்வந்த அதே இடங்களை மறுபடியும் வலம் வருகிறது. அப்படி ஒரு குறிப்பிட்ட இடமான யெகடரீனா பாலம் (Yekaterina Bridge) என்ற இடத்தை ரயில் கடக்கும்போதுதான் ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் 31 இரவு பன்னிரண்டு மணி. அப்போதுதான் புத்தாண்டு அந்த ரயிலில் கொண்டாடப்படுகிறது. அதேபோல் இதற்குமுன் ரயிலின் கதவை உடைத்து வெளியே தப்பித்தவர்களின் சடலங்கள் பனியில் உறைந்து நிற்கும் காட்சியையும் இந்த ரயிலில் ஒவ்வொரு வருடமும் காணலாம். கீழே இருப்பதுதான் ரயில் ஒவ்வொரு வருடமும் செல்லும் பாதை. படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம்.
இப்படிப்பட்ட பின்னணியில், அடிமைகள் கர்ட்டிஸ் மற்றும் கிலியம் ஆகியவர்களின் தலைமையில் மறுபடியும் புரட்சி செய்ய முடிவெடுக்கின்றனர். அவர்களுக்கு வரும் உணவில், அவ்வப்போது ரகசிய செய்திகள் வருகின்றன. யாரோ ரயிலின் முன்பகுதியில் இருந்து இவர்களுக்கு உதவுகின்றனர் என்பது தெரிகிறது. அந்தச் செய்திகளை வைத்து, ஒரு குறிப்பிட்ட நாளில் தங்களின் கதவுகளைத் தகர்த்து, பெட்டி பெட்டியாக முன்னேற முடிவெடுக்கின்றனர் இந்த அடிமைகள். ஆனால், ஒவ்வொரு பெட்டியின் கதவும் ஒவ்வொரு வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், அந்தக் கதவுகளை வடிவமைத்த நபரின் உதவி அவர்களுக்குத் தேவை. அவன் இருப்பது இவர்களின் பெட்டியைத் தாண்டிய ஒரு குறிப்பிட்ட பெட்டியில்.தங்களுக்கு உணவு வரும்போது இவர்களின் கதவு மற்றும் அடுத்த பெட்டியின் கதவு ஆகியவைகள் நான்கே நொடிகள் திறந்திருப்பது கர்ட்டிஸுக்குத் தெரியும். எனவே, இதைவைத்து ஒரு திட்டம் உருவாகிறது.
அந்த நாளும் வருகிறது. எல்லா ஏற்பாடுகளும் தயார். கதவு திறக்கப்பட்டதா? அடிமைகளால் ஒவ்வொரு பெட்டியாக முன்னேறி இஞ்சினைக் கைப்பற்ற முடிந்ததா என்பதே நகம் கடிக்கவைக்கும் அட்டகாசமான ஆக்ஷனுடன் கூடிய படம்.
படத்தை இயக்கியிருப்பவர் போங்-ஜூன்-ஹோ (Bong-Joon-Ho). கொரியன் பட ரசிகர்கள் இவரது பெயரை மறக்கவே முடியாது. மெமரீஸ் ஆஃப் மர்டர் படத்தின் இயக்குநர். கூடவே, கொரியன் பட சரித்திரத்தில் வசூல் சாதனை படைத்த The Host படத்தின் இயக்குநரும் கூட. 2009ல் வந்த Mother நினைவிருக்கிறதா? நமது தளத்தில் நாம் அடிக்கடி பார்த்திருக்கும் கிம்-ஜி-வூன் (க்ளிக் செய்து படிக்கலாம்) போலவே வித்தியாசமான சப்ஜெக்ட்களில் படம் எடுப்பவர். Perfectionist என்றே சக கொரியன் திரை நண்பர்களால் அழைக்கப்படுபவர். இந்தப் படத்தையும் மிகவும் நேர்த்தியாகத்தான் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்யம் மிகுந்ததாக இருப்பது அதனை உறுதிப்படுத்துகிறது.
இந்தக் கதை இவருடையது இல்லை. ஃப்ரான்ஸுக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கே ஒரு புத்தகக் கடையில் எதேச்சையாக எடுத்துப் படித்த ஒரு காமிக்ஸ் (Graphic Novel) இவரை வெகுவாகக் கவர்ந்ததால், அந்தக் காமிக்ஸின் உரிமையை முறைப்படி வாங்கி, கொரியாவில் அவர் எடுத்த படம்தான் இது. அந்த க்ராஃபிக் நாவல் – Le Transperceneige. ஃப்ரான்ஸிலேயே அந்த க்ராஃபிக் நாவலைக் கண்டுகொள்ளாமல் இருந்தபோது, கொரியாவில் ஒரு ஃப்ரெஞ்ச் க்ராஃபிக் நாவல் படமாக வந்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்தவையாக, பல்வேறு காட்சிகளை detailing செய்திருப்பதை சொல்வேன். ரயில்தான் மொத்த உலகம் என்னும்போது அந்த ரயிலில் வாழ்பவர்கள் எப்படியெல்லாம் தங்களைத் தயார்செய்து வைத்திருப்பார்கள்? அடிமைகள் வாழும் ரயில்பெட்டிகள், இதற்கான உதாரணம். அப்பெட்டிகளில் பயணிகளின் இருப்பிடங்களை கவனித்துப் பாருங்கள். அதேபோல், ஒவ்வொரு பெட்டியாக எப்படியெல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்கலாம். இதுபோன்ற genre படங்களில் (ப்ரூஸ் லீயின் Game of Death (முடிக்கப்படுவதற்குள் ப்ரூஸ் லீ இறந்துவிட்டார்), The Raid: Redemption, Dredd), படிப்படியாக ஒவ்வொரு அடுக்கையும் தாண்டிச்சென்று, அங்கே இருக்கும் எதிரிகளை அழிப்பதுதான் கருவாக இருக்கும். அந்த ஒவ்வொரு அடுக்கிலும் என்னென்ன இருக்கிறது என்பது மர்மமாக இருக்கும். இங்கு சொல்லப்பட்டுள்ள படங்களில் கட்டிடங்கள் என்றால், இந்தப் படத்தில் ரயிலின் பெட்டிகள்.
இந்தப் படம் அமெரிக்காவில் 2014 ஜூன் 27ம் தேதிதான் ரிலீஸ் ஆகிறது. தென் கொரியாவில் 2013 ஆகஸ்ட்டிலேயே ரிலீஸ் ஆகி, படத்தின் பட்ஜெட்டைப் போல் இரண்டு மடங்கு பாக்ஸ் ஆஃபீஸ் வசூலைக் குவித்திருக்கும் படம் இது. ஆனால், அமெரிக்க ரிலீஸில் ஒரு சிக்கல் இருக்கிறது. படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பவர்கள் வெய்ன்ஸ்டீன் சகோதரர்கள். இவர்களைப் பற்றி நமது லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கட்டுரையிலேயே (க்ளிக் செய்து படிக்கலாம்) விபரமாகப் பார்த்திருக்கிறோம். அந்தப் படத்தின் உரிமையை விற்க எட்டுவித கட்டளைகளை பீட்டர் ஜாக்ஸனுக்கு இட்டவர்கள் இவர்கள் என்பதை. அதேபோல் இந்தப் படத்துக்கும் சில நிபந்தனைகளை விதித்திருக்கின்றனர் இவர்கள். என்னவென்றால், படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வாய்ஸ் ஓவர் அவசியம் தேவை என்பது ஒன்று. அடுத்ததாக, இந்தப் படத்தின் நீளத்தில் இருந்து 20 நிமிடங்களை வெட்டவேண்டும் என்பது இன்னொன்று. இவற்றுக்கான காரணங்கள் என்ன?
முதலாவதாக, கொரியப் படத்தைப் பார்த்தவர்களுக்கு, படத்தின் 80% வசனங்கள் இங்லீஷில் இருப்பது புரியும். இருந்தாலுமே, படத்தின் கதை தொடங்குவது திடீரென்றுதான் இருக்கும். ஏன் அப்படி நடந்தது – காரணம் என்ன என்பவையெல்லாம் இருக்காது. போங்-ஜூன்-ஹோவின் ஸ்டைல் அது. காரணமே தெளிவாக இல்லாவிட்டாலும், படம் நிகழும் களம்தான் முக்கியம். அந்தக் களத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் நிலைமை பற்றித்தான் படமே. இதனால் படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் நடப்பவைகள் முக்கியம் அல்ல. ஆனால், ஹாலிவுட்டைப் பற்றித்தான் தெரியுமே? அங்கு பெரும்பாலும் எல்லாவற்றையும் ஆடியன்ஸின் வாயில் எடுத்து ஊட்ட வேண்டும். குறிப்பாக பட நிறுவனங்களின் முதலாளிகள். அதிலும் குறிப்பாக வெய்ன்ஸ்டீன் சகோதரர்கள். ஆனானப்பட்ட பீட்டர் ஜாக்ஸனையே டார்ச்சர் செய்த இவர்களுக்கு, ஹாலிவுட்டில் யாரென்றே தெரியாத (ஆனால் உலகப் படங்களின் ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்த) போங்-ஜூன்-ஹோ எம்மாத்திரம்? எனவேதான் வாய்ஸ் ஓவர் தேவை என்பது அவர்களின் நிபந்தனை. அதேபோல், படத்தின் இடையே வரும் வசனப்பகுதிகள் மிகவும் முக்கியமானவை. ஆக்ஷன் காட்சிகள் நிகழ்ந்தபின்னர் இடையிடையே ஒரு pit stop போல இதில் வசனங்கள் வரும். அவற்றின் மூலம் கதாபாத்திரங்கள் இன்னும் தெளிவாக விளக்கப்படும். இந்தப் பகுதிகளில் 20 நிமிடங்களை வெட்டியே தீருவேன் என்பது இந்த வெய்ன்ஸ்டீன் சகோதரர்களின் இன்னொரு நிபந்தனை. அப்போதுதான் இது முழுநீள ஆக்ஷன் படமாக இருக்கும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். ‘இது முழுநீள ஆக்ஷன் படம் அல்ல’ என்று போங்-ஜூன்-ஹோ கத்தி எந்தப் பிரயோஜனமும் இல்லை.
இதனால் போங்-ஜூன்-ஹோ வெய்ன்ஸ்டீன் சகோதரர்கள் மீது கோபமாக இருக்கிறார். ஏற்கெனவே நன்றாக ஓடி, உலக சினிமா ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற படத்தை இப்படி வெட்டித்தள்ளுவது எந்த வகையில் நியாயம் என்பது அவரது கேள்வி. அதேபோல், சிலகாலத்துக்கு முன்னர் வெய்ன்ஸ்டீன் சகோதரர்களின் நெருங்கிய நண்பர் ஒருவர் போங்-ஜூன்-ஹோவைச் சந்தித்து, வெய்ன்ஸ்டீன்களின் இந்த நிபந்தனை பற்றி விபரமாகப் பேசியும் இருக்கிறார். வெய்ன்ஸ்டீன் சகோதரர்களுக்காக போங்-ஜூன்-ஹோவிடம் சமாதானத்தூது போன அவரது பெயர் – க்வெண்டின் டாரண்டீனோ.
படத்தில் கதாநாயகன் – க்ரிஸ் இவான்ஸ். அவெஞ்சர்ஸ் படத்தின் கேப்டன் அமெரிக்கா என்றால் இவரை நன்கு அடையாளம் தெரியும். கூடவே, ஜான் ஹர்ட் (ஹெல்பாயில் வயதான விஞ்ஞானி), டில்டா ஸ்விண்டன் (முதலில் இவரை எனக்கு இந்தப் படத்தில் அடையாளம் தெரியவில்லை. அப்படிப்பட்ட மேக்கப்), எட் ஹாரிஸ் போன்றவர்களும் இருக்கிறார்கள். கொரியன் இயக்குநர் ஒருவர் இயக்கும் படத்தில் அவரது ஆஸ்தான ஆள் இல்லாமலா? ஸாங்-காங்-ஹோ இதில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். மெமரீஸ் ஆஃப் மர்டர் படத்தின் இரண்டாவது போலீஸ் அதிகாரியாக நடித்தவர் இவர். கூடவே, நமது தளத்தில் ஏற்கெனவே பார்த்திருக்கும் The Good, The Bad, The Weird (க்ளிக் செய்து படிக்கலாம்) படத்திலும் லூசுத் திருடனாக நடித்தவர்.
மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் நிகழும் அருமையான படம் இது. தவற விடக்கூடாத படங்களில் ஒன்று.
பி.கு
1. கொரியன் படங்களில் தவறாமல் இடம்பெறும் கோடரியும் அதீத வன்முறையும் இதிலும் உண்டு. ஒரு மாறுதலுக்கு ஹாலிவுட் நடிகர்கள் கோடரியைப் பிடித்துக்கொண்டு சண்டையிடுவதைப் பார்க்கையில் ஜாலியாக இருந்தது.
2. Snowpiercer Concept art courtesy – Joblo.com| Snowpiercer vehicle Instruction courtesy – brentofthefabulouswild.tumbler,com
படிக்கும்போதே பரபரப்பா இருக்கு ராஜேஷ் …. நன்றி…
thank you Dany 🙂
நன்றி.. நான் சில நாட்களாகத்தான் உங்களுடைய விமர்சனங்களை படித்து வருகிறேன் ….. படம் பார்க்க விருப்பம் இல்லாதவர்களை கூட பார்க்க தூண்டும் விமர்சனம் …. ஆனால் இந்த படங்களின் CD கிடைக்கவில்லை ….. எங்கு கிடைக்கும் என்று mail பண்ண முடியுமா? please?
Done. Mailed you Mahaa
give download link for this korea movie and The good offer movie….
search in kickass torrent
படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது தங்கள் பதிவு… படத்தை விரைவில் பார்க்கவுள்ளேன்… மேலும் எழுத வாழ்த்துகள்…
Cheers boss 🙂
ஹாலிவுட்டைப் பற்றித்தான் தெரியுமே? அங்கு பெரும்பாலும் எல்லாவற்றையும் ஆடியன்ஸின் வாயில் எடுத்து ஊட்ட வேண்டும். —- நிஜம் தான்… இவர்கள் ரீமேக் செய்த ஓல்ட் பாய் / டேல் ஆப் டூ சிஸ்டர்ஸ் படங்களை பார்த்தாலே தெரியும்.
ஆமா. அதுலயும் ஓல்ட்பாய் ஒரு சூரக்கொடும. பாவம் ஸ்பைக் லீ. பலியாடு ஆயிட்டாரு.
இந்த படங்களின் CD கிடைக்கவில்லை ….. எங்கு கிடைக்கும் என்று mail பண்ண முடியுமா? please? @mahaa keta athaey than, scorpi will you mail me too?
It’s clear in this film whatever we live in a earth, a box, a train whatever, we are still humans and we are destined to destroy each other (for a balance)……
Nanbare ! this film concept is as similiar as Elysium , right. but with the different presentation of storyline. alava !
very intresting plot and your review was so good rajesh
Thank you Warcry :-). Cheers
Rajesh…. Can you explain the climax of it…
Boss. It will be a spoiler if I explain it here. Will send a msg soon
Ok… I’m waiting for it…. But thanks for all the reviews… The avenger series was awesome… It gives me the different feel while watching those movies after reading your reviews.. Kudos Rajesh
Watched this movie, after reading your review. totally worth it and an awesome movie. indha maadhiri padam paathutu tamil padam paakum bodhu oru maadhiri iruku…
கரெக்ட். இதெல்லாம் இண்டர்நெஷனல் தரமான படங்களாச்சே? அதான் தமிழ்ப் படங்கள் பார்க்கும்போது நமக்கே அந்த ஸ்டாண்டர்ட் இல்லைன்னு புரிஞ்சிருது.
செம்ம படம்..என்ஜாய் பண்ணி பாக்கலாம்..