தமிழ் சினிமாவும் so called மசாலாக்களும்
காட்சிப்பிழை அக்டோபர் இதழில், தமிழ் வணிகப்படங்களின் தேய்ந்துவரும் தரம் குறித்து, ‘தமிழ் வெகுஜனப் படங்கள்: கட்டெறும்பான காதை’ என்ற பெயரில் நான் எழுதியிருந்த விரிவான கட்டுரை இது. ஏற்கெனவே ‘தமிழ்ப்படங்களும் மசாலாவும்’ என்று கருந்தேளில் சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்த கட்டுரையின் மிக விரிவான வடிவம் இது. படித்துப் பாருங்கள்.
1965ல் வெளிவந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தைச் சென்று அந்தச் சமயம் பார்த்தவர்களுக்கு அது எப்படிப்பட்ட மறக்கமுடியாத படமாக விளங்கியது என்பது நன்றாக நினைவிருக்கும். தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் பிய்த்துக்கொண்டு ஓடிய படம் அது. சிவாஜி கணேசனின் ரசிகர்களாக இருந்தவர்கள்கூடப் பாராட்டிய எம்.ஜி.ஆரின் படம். எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு மிகவும் உதவிய படம். இப்படிப்பட்ட சிறப்புகளை எல்லாம் மறந்துவிட்டு, ஒரு சராசரித் திரை ரசிகனாக இந்தப் படத்தைப் பார்த்தாலும் இப்போதுமே ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தக்கூடிய படம் இது.
இப்போது 1969ல் வெளிவந்த ‘சிவந்த மண்’ படத்தை எடுத்துக்கொள்வோம். தமிழக ரசிகர்கள் சிவாஜி, எம்’ஜி.ஆர் என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து, அதன்விளைவாகவே உயர்தரக் கலை ரசிகர்களுக்கு சிவாஜி; சராசரி சண்டைப்படங்களுக்கு எம்.ஜி.ஆர் என்ற பிரிவும் உண்டாகி, அந்தந்த ரசிகர்களை இருவருமே முழுமையாகத் திருப்திப்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் வெளிவந்த படம் இது. இயக்கியவர் ஸ்ரீதர். இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படமாகவே இருந்தது. இந்தக் கதாபாத்திரம் எம்.ஜி.ஆருக்குரியது. ஸ்ரீதரால் முன்னர் ‘அன்று சிந்திய ரத்தம்’ என்று எழுதப்பட்டு, பின்னர் மாற்றியமைக்கப்பட்ட கதை. இதுவும் தமிழில் ஒரு வெற்றிப்படம்தான். ரசிகர்களால் மறக்கமுடியாத பல அம்சங்கள் (முதன்முறையாக வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம், மிக பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்ட படம், ஹெலிகாப்டர்கள் சண்டைக்காட்சிகளில் இடம்பெற்ற படம் முதலியன) இதில் இருந்தன.
தமிழ்ப் படங்களில் ஆதிகாலத்தில் இருந்தே, படம் பார்ப்பவர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தி அனுப்பும் வணிகப்படங்கள் அதிகம். சிவாஜியின் ‘உத்தமபுத்திரன்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘சிவந்த மண்’, ‘ராஜா’ எம்ஜியாரின் ‘நாடோடி மன்னன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘அடிமைப்பெண்’, ரவிச்சந்திரன் நடித்த ‘அதே கண்கள்’, ‘மூன்றெழுத்து’, ஜெய்சங்கர் நடித்த பல ’தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ படங்கள், இதுதவிர மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் எடுத்த பல படங்கள் (வல்லவன் ஒருவன், வல்லவனுக்கு வல்லவன் போன்றவை), ஜெமினி கணேசனின் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘கொஞ்சும் சலங்கை’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற படங்கள் சில உதாரணங்கள். தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’ கூட இந்த வகையில் சேர்த்திதான். டி. ஆர். மகாலிங்கத்தின் ‘வேதாள உலகம்’ என்பதும் ஒரு உதாரணம்தான்.
இவையெல்லாம் எழுபதுகளுக்கு முன்னர் வெளிவந்த ஜனரஞ்சகத் திரைப்படங்கள். இந்தப் பட்டியலில் சேர்க்காமல் எண்ணற்ற பிற படங்களும் இதே வகையில் அடங்கும்.
எழுபதுகளில், மக்களின் திரை ரசனை சற்றே மாறியது. இதைப்பற்றி ஸ்ரீதரே தனது ‘திரும்பிப்பார்க்கிறேன்’ புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்ரீதரின் பாணி நகைச்சுவையும் கலைரசனையும் மிகுந்த படங்கள் அறுபதுகளில் பிரம்மாண்ட வெற்றிகள் அடைந்தன (கல்யாணப்பரிசு, தேநிலவு, நெஞ்சில் ஒரு ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை முதலியன). ஆனால் எழுபதுகளில் அப்படி அவர் எடுத்த சில படங்கள் தோல்வியைத் தழுவின. மக்களின் ரசனை மாற்றத்தைப் புரிந்துகொண்டார் ஸ்ரீதர். சிவந்த மண்ணுக்குப் பின்னர் சிவாஜியை வைத்து விறுவிறுப்பான சண்டைப்படங்கள் எடுக்க ஸ்ரீதர் தள்ளப்பட்டதை அதைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் (ஹீரோ – 72 (அல்லது) வைர நெஞ்சம்). இது ஹிந்தியிலும் எடுக்கப்பட்டது). இதன்பின்னர் எம்ஜியாரை வைத்து ‘உரிமைக்குரல்’ படத்தை இயக்கினார். கூடவே ‘மீனவ நண்பன்’ படமும் அவரால் இயக்கப்பட்டது.
எழுபதுகளின் முடிவில் மறுபடியும் கலாரசனை மிகுந்த படங்கள், புயல் போல் தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்த பாரதிராஜா, மகேந்திரன், ருத்ரைய்யா போன்றவர்களால் இயக்கப்பட்டன. இதே போட்டியில் ஸ்ரீதர் இயக்கிய ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். புதிய இயக்குநர்களோடு மோதினாலும், தனது தனித்தன்மையை ஸ்ரீதர் இன்னும் இழக்கவில்லை என்று நிரூபித்த படம் அது.
இப்படியேதான் இவற்றுக்குப் பின்னர் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெளிவந்த ரஜினிகாந்த், கமல்ஹாஸன், விஜயகாந்த் ஆகியவர்களின் பெரும்பாலான படங்களும், திரையரங்குக்குள் பொழுதுபோக்கை எதிர்பார்த்து நுழையும் சினிமா ரசிகனை முழுமையாகத் திருப்திப்படுத்தி அனுப்பின. குறிப்பாக எண்பதுகளின் காலகட்டம், தமிழ்த் திரைப்படங்களின் பொழுதுபோக்குத் தன்மைக்கான சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்.
80களின் காலத்தில் தமிழ் சினிமாவின் மசாலாத் தந்தையாக எஸ்.பி. முத்துராமன் உருவானார். ரஜினியை வைத்துப் படம் எடுக்கும்போதே ஒரே சமயத்தில் கமலை வைத்தும் படம் இயக்குவார். இரண்டும் ஒரே நாளில் வெளியாகும். இரண்டுமே பெருவெற்றி அடையும். இரண்டுக்குமே இளையராஜாதான் இசை. இதுதவிர சலம், விட்டல், புலியூர் சரோஜா போன்றவர்களும் அந்த இரண்டு படங்களிலுமே இருப்பார்கள். எஸ்.பி. முத்துராமனின் கூடவே வளர்ந்த இன்னொரு ஜனரஞ்சக இயக்குநர் – ராஜசேகர். இவருக்கும் மேலே சொன்ன விஷயங்கள் பொருந்தும். இவர்களின் படங்களை ஒரு உதாரணத்துக்காக எடுத்துக்கொள்ளலாம். அப்போதுதான் ‘பொழுதுபோக்கு’ என்ற வார்த்தையின் உண்மையான பொருள் விளங்கும்.
எண்பதுகளில் வெளிவந்த பெரும்பாலான எந்த ரஜினி கமல் படமாக இருந்தாலும், படம் பார்க்க வந்த ரசிகனை திருப்திப்படுத்தாமல் அவை பொய்த்ததில்லை. குறிப்பாக எஸ்.பி. முத்துராமன் மற்றும் ராஜசேகர் படங்கள். உதாரணமாக ‘மிஸ்டர் பாரத்’, ‘காக்கிசட்டை’, ‘வேலைக்காரன்’, ‘படிக்காதவன்’, ‘விக்ரம்’, ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘உயர்ந்த உள்ளம்’, ‘குரு சிஷ்யன்’, ‘எனக்குள் ஒருவன்’ போன்றவை சில உதாரணங்கள். ரஜினி கமல் அல்லாது, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்றவர்களுக்கும் அட்டகாசமான படங்கள் இருக்கின்றன. கூடவே, திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த ஆபாவாணன் குழுவினரால் பல தரமான வணிகப்படங்கள் எடுக்கப்பட்டன. சில தயாரிப்பு நிறுவனங்களில், கதை இலாகா என்ற ஒன்றும் இருந்தது (சத்யா மூவீஸ் கதை இலாகா போல்). இந்தப் படங்களின் கதைகள் மிக மிக சாதாரணமாக இருந்தாலும், அவைகளை எப்படி திரைக்கதை மூலம் சுவாரஸ்யம் ஆக்குவது என்பது இவர்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது.
ரஜினி & கமல் ஆகியவர்களுக்குத் தலா ஒரே ஒரு எண்பதுகளின் வணிகப்படத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால்கூட – உதாரணம்: ரஜினிக்கு ‘மிஸ்டர் பாரத்’. கமலுக்கு ‘காக்கி சட்டை’- எப்படி அவர்களது கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கான சகல சுவாரஸ்யமான அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது புரியும். இதில் ரஜினிக்கான படங்கள் இன்னும் சுலபம். காரணம், ஏற்கெனவே அமிதாப் நடித்து வெற்றிகரமாக ஓடியவை அவை.
மேலே குறிப்பிட இயக்குநர்களின் அதே தரத்தில் சூறைக்காற்று போல் எண்பதுகளைக் கலக்கிய இன்னொரு வணிக இயக்குநர் – மணிவண்ணன். ரஜினி & கமலை வைத்து இயக்காமலேயே பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் அவர். அதேபோல் எண்பதுகளின் பல ரஜினி கமல் படங்களில் சத்யராஜ்தான் வில்லன். வணிகப்படங்களில் எத்தனைக்கெத்தனை வில்லன் சக்திவாய்ந்தவனாக இருக்கிறானோ அத்தனைக்கத்தனை அவனுடன் பொருதும் காட்சிகளில் மக்களுக்குக் கதாநாயகனைப் பிடிக்கும். அந்தவகையில் அப்போதைய காலகட்டத்தில் சத்யராஜின் தவிர்க்கமுடியாத இருப்பைப் புரிந்துகொண்டால்தான் வில்லனாக சத்யராஜின் நடிப்பு புரிபடும்.
இதன்பின் தொண்ணூறுகளிலும் ரஜினி & கமலின் வணிகப்பட ஆதிக்கம் தொடரவே செய்தது. ரஜினியின் திரை வரலாற்றின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றான ‘பாட்ஷா’ அப்போதுதான் வெளிவந்தது. கமல் இந்தக் காலகட்டத்தில் பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டாலும், அவரிடமிருந்தும் பல தரமான பொழுதுபோக்குப் படங்கள் வெளிவந்தன. கூடவே, கதாநாயகனாக நடிக்கத் துவங்கியிருந்த சத்யராஜூக்கும் இது ஒரு சிறப்பான காலகட்டம். தொண்ணூறுகளில்தான அஜீத் & விஜய் அறிமுகமானார்கள். இந்த இருவருக்கும் இன்றுவரை வந்திருக்கும் பல படங்களில், தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து இரண்டாயிரத்தின் இறுதி வரையிலான சில படங்களே அவர்களின் ஒட்டுமொத்தப் படங்களிலும் சுவாரஸ்யமானவை.
எஸ்.பி. முத்துராமன், ராஜசேகர், மணிவண்ணன் போன்ற தரமான வணிகப்பட இயக்குநர்கள் தற்போது மிகவும் சொற்பம். தரணி (தில், தூள், கில்லி) அந்த இடத்தை கச்சிதமாக அவரது சில படங்களில் நிரப்பினார். அதேபோல் சரண், தனது ஆரம்பகாலப் படங்களான ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’ போன்றவைகளில் அதைச் செய்தார். தொண்ணூறுகளில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் கச்சிதமான மசாலாக்களை ஷங்கர் உருவாக்கினார். எஸ்.பி. முத்துராமன் விட்ட இடத்தைத் தனக்கே உரிய பாணியில் நிரப்பியவர் அவர்தான். ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, முதல்வன்’ போன்றவைகள் மூலம். அதே சமயத்தில் சுரேஷ் கிருஷ்ணாவும் ரஜினி & கமலை வைத்து சில நல்ல வணிகப்படங்களை இயக்கினார். கே. எஸ். ரவிகுமாரும் அதைச் செய்தார்.
இத்தனை விபரமாக பொழுதுபோக்குப் படங்கள் தமிழ்த்திரைப்படங்களில் எப்படியெல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றன என்று பார்த்தால்தான் தற்காலத்தில் அந்த வகையின் வீழ்ச்சியைப் பற்றிப் பார்க்கமுடியும்.
தற்காலத்தில் ‘வணிகப்படம்’ என்பதற்கான அர்த்தம் இயக்குநர்களால் இப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்றே தோன்றுகிறது. ‘கதாநாயகனின் தேதிகள் தயாரிப்பாளர்களிடம் இருக்கின்றன. அந்தத் தேதிகள் முடிவதற்குள் அவர்களை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும்’. இதனால் என்ன ஆகிறது என்றால், அவசரமாகக் கதாநாயகர்களை மனதில் வைத்து ஒரு கதை பண்ணப்படுகிறது. அந்தக் கதையானது, முன்னொரு காலத்தில் தனியான கதை இலாகாக்களில் பட்டி தட்டப்பட்டு சுவாரஸ்யமாக உருவாக்கப்படுபவை போன்றது அல்ல. மாறாக, குறிப்பிட்ட கதாநாயகன் இதெல்லாம் செய்தால் போதும் என்று ஒரு பட்டியல் போடப்பட்டு உருவாக்கப்படுபவை.
அந்தப் பட்டியல் என்ன?
1. கதாநாயகனைப் பார்த்துப் படத்தில் வரும் பாமர, சாதாரண கதாபாத்திரங்கள் பயம் கலந்த மரியாதையோடு நடந்துகொள்ளவேண்டும். அதற்கு ஒரு (பஞ்ச்) வசனம் தேவை. இந்த வசனத்தில், கதாநாயகனைப் பற்றிய பாமர கேரக்டரின் தர்க்க நெறிகளுக்கு அப்பாற்பட்ட புரிதலோடு ஒரு உப்புப்பெறாத விஷயம், பிரம்மாண்டமானதாக சொல்லப்படவேண்டும். இது படத்தில் ஹீரோ அறிமுகப்படுத்தப்பட்டபின்னர் உடனடியாக வரவேண்டும்.
உதாரணம்: ‘வீரம்’ படத்தில் அஜீத்தின் தலைமுடியும் தாடியும் வெள்ளையாக இருப்பதற்கு டீக்கடைக்காரர் சொல்லும் மரியாதையான வசனம். இன்னும் பல விஜய் படங்களில் பிற கதாபாத்திரங்கள் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிச் சொல்லும் வசனங்களாகவும் அவை இருக்கலாம்.
2. கதாநாயகனுக்கு எதிராக ஒரு வில்லன். அந்த ஆள், பார்வையிலேயே மிகக்கொடூரமாக இருக்கவேண்டும். இது, வில்லனை முதலில் காட்டியவுடன் பார்வையாளர்கள் அவனைப் பார்த்து பயப்பட.
3. வில்லனும் கதாநாயகனும் சந்திக்கும் முதல் காட்சியில் வில்லன் பலத்த பின்னணி இசையுடன் வந்து இறங்க வேண்டும். அவன் பின்னால் சில தடியர்கள். இந்தக் காட்சியில் மடத்தனமாக அவன் கதாநாயகனிடம் அவமானப்படவேண்டும் (ஆடியன்ஸைக் கஷ்டப்பட்டு சிந்திக்கவைப்பது பாவம் என்ற விதிக்கு ஏற்பவே இப்படிப்பட்ட காட்சிகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன என்று அறிக).
4. கதாநாயகியின் பாத்திரம் கதாநாயகனுக்குத் துணை புரிந்து அவனைப் புரிந்துகொண்டு அவனுடன் படம் முழுக்க வரவேண்டும் என்பது போய், தற்போது கதாநாயகி என்றால் கதாநாயகன் ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டால் கூட அவன் நோபல் பரிசு வாங்கிவிட்டதைப் போன்ற அதிர்ச்சி கலந்த ஆச்சரிய முகபாவங்களோடு எப்போது பார்த்தாலும் கண்களையும் வாயையும் திறந்து திறந்து மூடிக்கொண்டே இருக்கவேண்டும். கதாநாயகியால் படத்துக்கு என்ன பயன் என்றால், நான்கைந்து பாடல்கள். அவ்வளவே.
5. கதாநாயகனும் நாயகியும் காதல்வயப்படும்போது அதற்கான காரணம் ஒரு அற்பமான காரணமாகத்தான் இருக்கவேண்டும். அந்த நோக்கம் நிஜவாழ்க்கையில் இருந்தால் எந்த ஒரு உயிரினமும் நம்மை சீந்தாது என்பது வேறு விஷயம்.
இதன்பின் அவ்வப்போது வில்லனும் நாயகனும் மோதிக்கொள்வார்கள். அக்காட்சிகளைப் பார்த்தால்தான் வில்லன் எவ்வளவு முட்டாள் என்பது புரியும்.
6. அவ்வப்போது நாயகன் அடியாட்களை கொன்றுகொண்டே இருக்கவேண்டும். படத்தில் எத்தனை காட்சிகள் இருக்கின்றனவோ, அத்தனை காட்சிகளிலும் அடியாட்களை அவன் கொன்றுகொண்டே இருக்கவேண்டும்.
7. படத்தில் வரும் பிற கதாபாத்திரங்கள், ஹீரோவைப் பார்க்கும்போதெல்லாம் வாழும் காந்தியைப் பார்ப்பதுபோன்று ஒரு பணிவான எதிர்வினையையும் உடல்மொழியையும் வெளிப்படுத்தவேண்டும்.
8. அத்தனை பேரையும் கொன்றுவிட்டு நாயகன் நாயகியைக் கைப்பிடிப்பார். உடனே படம் முடியும்.
இதே பட்டியல்தான் ‘பொழுதுபோக்குப் படம்’ என்று புரிந்துகொள்ளப்பட்டு சமீபத்திய படங்களாக தமிழில் எடுக்கப்படுகின்றன.
சராசரியான திரைப்பட ரசிகர் ஒருவர் இந்தத் திரைப்படங்களுக்குச் சென்றால், தமிழ் சினிமாவையே வெறுத்து ஒதுக்கவேண்டி வரும். இதன்பின் வேறுவழியின்றிச் சில படங்களைப் பார்த்தபின் அவராகவே தன்னை மாற்றிக்கொண்டு இந்தப் படங்கள் அட்டகாசம் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார். அதுவும் அடிக்கடி நடக்கிறது. ‘பொழுதுபோக்குப் படம்’ என்ற வார்த்தை எப்படியெல்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, தமிழ் சினிமாவில் உலவுகிறது என்பதை இந்தப் படங்களைப் பார்த்தாலேயே புரிந்துகொண்டுவிடமுடியும்.
இன்னொரு பிரச்னை – குறிப்பிட்ட நடிகர்களுக்கான ரசிகர்கள். ரசிகர்கள் என்பதைவிட, ‘வெறியர்கள்’ என்ற வார்த்தையே சரியானது. நடிகர் திரையில் வந்துவிட்டாலே இவர்களுக்கு அது போதுமானது. நடிகர் எதுவுமே செய்யவேண்டாம். மேலே சொல்லப்பட்ட விஷயங்களில் ஒன்றையோ பலவற்றையோ செய்தாலே இவர்களின் கைதட்டலும், ‘தலைவா’ என்ற அலறலும், ‘படம் சூப்பர் மச்சி… தலைவரு பின்னிட்டார்ல்ல’ என்ற பாராட்டுப் பத்திரமும் ஹீரோவுக்குக் கிடைத்துவிடுகிறது.
இதேவிதமான வெறித்தனமான ரசிகர்கள் சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் கமலுக்குமே உண்டு. இதற்கு முன்னிருந்த எல்லாக் காலகட்டங்களிலுமே அது இருந்தது. ஆனால் அவர்களின் வெறியை அப்போது வந்த படங்கள் தீர்த்துவைத்தன என்பதே உண்மை. இன்னொரு விஷயம் – சமீபகாலமாக, 16-17 வயதில் ஆரம்பிக்கும் இந்த வெறித்தனமான ரசிப்புத்தன்மை, 24-25 வரை ஓடுகிறது. இந்த வயதுள்ளவர்களையே இந்தத் திரைப்படங்கள் குறிவைக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படங்கள் எதையுமே பார்த்திராதவர்கள். அதில் தவறு ஒன்றும் இல்லைதான். ஆனால், தான் பார்க்கும் இத்தகைய படங்கள்தான் சிறந்தவை என்ற ஒரு எண்ணத்தை இப்படங்கள் அவர்களின் மனதில் விதைக்கின்றன. இதனால், அந்தப் படங்களைப் பற்றிய உண்மையை (படம் சரியில்லை) யாராவது எங்காவது சொன்னாலோ அல்லது எழுதினாலோ, அவர்களின் பரம்பரையையே திட்டி இவர்கள் பேசுவதும் அடிக்கடி நடக்கிறது. இத்தகைய ஒரு குழு சார்ந்த வன்முறை உணர்வையை ரசிக வெறியர்களின் மனதில் விதைப்பதிலும் இத்தகைய போலிப் பொழுதுபோக்குப் படங்கள் சிறந்து செயல்படுகின்றன.
இதனால் ஒட்டுமொத்தமாக என்ன பலன் என்றால், ஒரு நிமிடம் கூடப் பார்க்கமுடியாமல் இருக்கும் படங்கள் சிறந்தவைகளாகப் பிரச்சாரம் செய்யப்படுவதுதான்.
முதலில், இதற்கு முன் வந்திருக்கும் தரமான பொழுதுபோக்குப் படங்களை இப்போதைய இயக்குநர்கள் ஒருமுறை கவனித்துப் பார்த்தாலே போதும். எப்படியெல்லாம் படங்களை உருவாக்கலாம் என்பது எளிதில் புரிந்துவிடும். அப்படிப் புரிந்ததும், மேலே சொல்லப்பட்ட வகையிலான படங்கள் எடுக்கப்படுவது குறையும். அப்படிக் குறைந்தால், சராசரி சினிமா ரசிகனுக்கு நல்ல பொழுதுபோக்குப் படங்கள் கிடைக்கும். அப்படி இல்லை என்றால், ஆயிரம் பேரைக் கொல்பவன் அரை வைத்தியன் என்பதுபோல், படம் பார்ப்பவர்கள் எல்லாரையும் கொன்று குவிப்பதே பொழுதுபோக்குப் படம் என்று ஆகிவிடும்.
தற்போதைய காலகட்டத்தில் முன்னணிக் கதாநாயகர்கள் நடித்துவரும் படங்கள் தொடர்ச்சியாக இப்படி நல்ல கதை இல்லாமல் வெறும் கதாநாயகனைச் சுற்றியே பின்னப்பட்டிருப்பதால் அடிவாங்குவதும் நடக்கின்றன. தமிழ்த் திரை ரசிகர்கள் இப்போதெல்லாம் ஏராளமான படங்களைப் பார்க்க ஆரம்பித்தாயிற்று. இனிமேலும் இப்படிப்பட்ட படங்களைக் கொடுத்து அவர்களை ஏமாற்றவும் முடியாது. உதாரணமாக சமீபத்தில் ‘அஞ்சான்’ படத்தை இணையமெங்கும் பலரும் கிண்டல் செய்து தள்ளியதைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம். படம் பணரீதியில் வெற்றி அடைந்திருந்தாலும், விமர்சன ரீதியில் கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களாலும் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டது. அடுத்ததாக வெளிவந்த ‘யான்’ படமும் இந்தவிதமான கிண்டலிலிருந்து தப்பவில்லை. இதுதான் தற்போதைய சினிமா ரசிகனின் நிலை. அவனால் இனிமேல் கதையம்சம் இல்லாத படங்களைப் பார்க்கமுடியாது என்பதற்கான அவனது எதிர்க்குரலே இப்படி வெளிப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் ‘அரிமா நம்பி‘, ‘மெட்ராஸ்‘ போன்ற படங்களின் தயாரிப்புச் செலவு அதிகமாக இருந்தாலும், அவற்றின் கதையம்சம் ரசிகர்களைக் கவர்ந்ததால் அப்படங்களும் அனைவருக்கும் பிடித்தே இருந்தன.
அதேசமயத்தில், மிகப்பெருமளவு பணத்தை முதலீடு செய்யாமல், இரண்டு கோடி, மூன்று கோடி என்று சிறிய அளவில் முதலீடு செய்து எடுக்கப்படும் படங்களில் பலவும் ரசிகர்களுக்குப் பிடித்தே இருக்கின்றன. அட்டக்கத்தியில் ஆரம்பித்து பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், தெகிடி, பண்ணையாரும் பத்மினியும், முண்டாசுப்பட்டி என்று ஏராளமான சிறிய பட்ஜெட் படங்கள் வரிசையாக வெற்றிபெறுவதைக் காண்கிறோம்.
இதற்கான காரணத்தை யோசித்தால், பெரிய கதாநாயகர்களுக்கான போலியான கதையம்சத்தைக் கொண்டிராமல், இந்த எல்லாப் படங்களிளும் நல்ல கதையமைப்பு உள்ளது புரிகிறது. ரசிகர்களுக்குத் தேவையெல்லாம் அலுப்பின்றிச் செல்லும் படங்களே. தயாரிப்புச் செலவு எப்படி இருந்தாலும் சரி, யார் நடித்திருந்தாலும் சரி – இதுதான் ரசிகர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு.
அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற நாயகர்கள் இத்தனை வருடங்கள் தாக்குப்பிடித்து இப்போதைய பிரதான நடிகர்களாக உருவாகியிருப்பது பாராட்டத்தக்கதுதான். ஆனால், ஒரேபோன்ற படங்களில் வரிசையாக அவர்கள் நடித்துக்கொண்டே இருப்பது அவசியம் அவர்களின் பெயரை பாதிக்கிறது என்று அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் (இதில் விக்ரம் விதிவிலக்கு என்றாலும், அவரும் இந்தப் பட்டியலில் சிக்கிக்கொள்ளும் முகாந்திரங்கள் தற்போது பிரகாசமாகத் தென்பட ஆரம்பித்திருக்கின்றன) எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் எப்படி ஒரு பிரமாதமான தளம் இருக்கிறதோ, அப்படி ஒரு தளத்தையே தங்களுக்கென்று அமைத்துக்கொள்ள விருப்பப்படுகிறார்கள் என்பது அவர்களின் படங்களைக் கவனித்தால் தெரிகிறது. ஆனால், புதிதாக உருவானால்தான் அதற்கு மதிப்பு இருக்கும். எம்.ஜி.ஆரும் ரஜினியும் அப்படி உருவானவர்கள்தான். கமல்ஹாசனும் அப்படிப்பட்ட ஒரு புதிய இடத்தை தனக்கென உருவாக்கியவர். ஆகவே, இனியாவது எந்த நாயகர்களுக்கும் பொதுவான ஒரு பின்னணியில், யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற முறையில் எழுதப்படும் இப்படிப்பட்ட கதாநாயகர்களை வழிபடும் படங்களைத் தவிர்த்து, தரமான கதையம்சமுள்ள படங்களில் நடிகர்கள் நடிப்பது அவர்களுக்கே நல்லது. யோசித்துப் பார்த்தால், அஜீத்துக்கு, ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘வாலி’ போன்ற சில நல்ல வணிகப்படங்கள் முன்னொரு காலத்தில் அமைந்தன. விஜய்க்கும் ‘கில்லி’, ‘போக்கிரி’, ‘துப்பாக்கி’ என்று சில படங்கள் இருக்கின்றன. (பல காலம் ஒரே போன்ற படங்களில் விஜய் நடித்தபின் அவருக்கு அமைந்த ஒரு விறுவிறுப்பான படமே துப்பாக்கி). இப்படிப்பட்ட படங்களைப் போல், பார்வையாளர்களை ரசித்துப் பார்க்கவைக்கும் வேகமான படங்கள்தான் யாராக இருந்தாலும் தேவை. அப்படிப்பட்ட படங்களை உருவாக்க, இயக்குநர்களை அவர்கள் ஊக்குவிக்கவேண்டும். மாறாக, ஒரே வார்ப்புருவில் அமைந்த படங்களையே தொடர்ந்து உருவாக்குவதில்தான் அவர்களின் விருப்பம் இருக்கிறது என்ற கருத்தைத்தான் அவர்களின் தற்போதைய படங்கள் உருவாக்குகின்றன.
பணம் சம்பாதிக்கத்தான் மசாலாக்கள் எடுக்கப்படுகின்றன என்பதில் பிரச்னை இல்லை. ஆனால் அப்படி எடுக்கப்படுபவை, குறைந்தபட்சம் சுவாரஸ்யமாகவாவது இருக்கவேண்டும் என்பதில்தான் பிரச்னை. என்னதான் இலக்கியத்தரமான கதைகள் படித்தாலும், அவ்வப்போது ஜனரஞ்சகக்கதைகளும் நமக்குத் தேவைப்படுகின்றன அல்லவா? அப்படிப்பட்டதுதான் தமிழ் சினிமாவில் பொழுதுபோக்குப் படங்கள். ஒரு திரைப்பட ரசிகனாக, திரையரங்கில் சென்று அமர்ந்ததும், திரை இருளடைந்த நிமிடம் முதல் அந்தத் திரைப்படம் நம்மை முற்றிலும் ஆக்கிரமித்துக்கொண்டு சுவாரஸ்யமாகச் செல்வதுதான் உண்மையான வணிகப்படம். அப்படிப்பட படங்களைத் தமிழில் பல முறை பார்த்திருப்பதால், அப்படிப்பட்ட படங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
ஹ ஹ ஹ…
ஏற்றுக் கொள்ளக் கூடிய யதார்த்த உண்மைகளை விரிவான பாணியில் எழுதி இருக்கிறீர்கள்.
மாஸ் ஹீரோக்களின் சம்பளமே நீங்கள் சுட்டிக் காட்டிய தரம் கெட்ட படங்கள் எடுப்பதற்கு காரணி.
எந்த ஒரு சோ கால்ட் மாஸ் ஹீரோ -வும் குறைந்த பட்சம் 10 கோடி சம்பளம் வெள்ளை + சில பல கோடி கருப்பு + சில பல ஏரியா கலக்ஷன்… இந்த சில்றைத் தனத்துக்காக ஒரு ஹீரோ பில்டப் அப்புறம் கொடூரமான வில்லன்
கில்மா ரசிகர்களை குளிர்விக்க ஒரு புதுமுக இறக்குமதி ஹீரோயின் 4 சண்ட, 5 பாட்டு. மேற்படி பஞ்ச் வசனங்கள்
தர லோக்கல் என்று மார்தட்டிக் கொள்ளும் சி சென்டர் ரசிகர்களையே மையமாக வைத்து இந்த மாஸ் மண்ணாங்கட்டி படங்கள் வெளி வந்து கொண்டுதான் இருக்கும்.
அரசியல் செய்ய, கெத்து காட்ட, பணம் சம்பாதிக்க.. என்று ஏகப்பட்ட காரணங்கள் உண்டு.
முடிந்தால், இந்த தர லோக்கல் வெகுஜனங்கள திருத்துற அம்சங்கள் உங்க திரைக்கதைல புகுத்துங்க… அது நீங்க சினிமாத் துறைக்கு செய்யும் ஒரு பெரிய சேவையா இருக்கும்.
நான் நினைத்தது தான் நீங்கள் கூறி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்