The Martian (2015): 3D – English

by Karundhel Rajesh October 7, 2015   English films

ரிட்லி ஸ்காட்டின் முந்தைய இரண்டு படங்களான ’ப்ராமிதியஸ்’ மற்றும் ‘எக்ஸோடஸ்: காட்ஸ் & கிங்ஸ்’ ஆகிய படங்களைப் பார்த்தபின்னர் வாழ்க்கையே வெறுத்துப்போய் இனி ஸ்காட்டின் பிற படங்களைப் பார்க்கவே கூடாது என்ற முடிவில் இருந்தேன். காரணம் அவை இரண்டுமே காட்டு மொக்கைகள். ’ப்ராமிதியஸ்’, ஸ்காட் முன்னொரு காலத்தில் எடுத்திருந்த அட்டகாசமான ‘ஏலியன்’ படத்தின் ப்ரிக்வெலாக இருந்தாலும், அந்தப் படத்தில் புதிதாக எதுவுமே இல்லை. எல்லாமே ஏற்கெனவே பார்த்த அதே விஷயங்களே. கூடவே மிகவும் மெதுவாகவும் பொறுமையை சோதிக்கும்படி இருந்தது அந்தப் படம்.  அதுவே எக்ஸோடஸை எடுத்துக்கொண்டால், முன்னர் வெளிவந்திருந்த ‘டென் கமாண்ட்மெண்ட்ஸ்’ படத்தின் ரீமேக் என்றே சொல்லிவிடலாம். சிசில் பி டெமிலாக மாற விரும்பிய ஸ்காட்டின் படுதோல்வி அந்தப் படம். இதிலும் புதிதாக எதுவுமே இல்லை. ஏற்கெனவே நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த மோஸஸின் கதையை தூக்கம் வரவைக்கும் அளவு காட்டு த்ராபையாக எடுத்திருந்தார் ஸ்காட் தாத்தா (மோஸஸின் கதை தெரியவேண்டும் என்றால், பழைய டென் கமாண்ட்மெண்ட்ஸ் பார்த்தபின், Prince of Egypt என்ற அருமையான அனிமேஷன் படத்தைப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். அது அட்டகாசமான முயற்சி).

இந்த நிலையில் ‘த மார்ஷியன்’ வரவும், படத்தைப் பார்ப்பதில்லை என்ற முடிவில்தான் இருந்தேன். ஆனால் படத்தின் விமர்சனங்கள் நம்பிக்கை அளித்தன. எனவே மனதை திடப்படுத்திக்கொண்டு இன்று இப்படத்துக்குச் சென்றேன்.

Robinson Crusoe‘, ‘Cast Away‘, ‘Gravity‘ ஆகிய படங்களை நீங்கள் பார்த்திருந்தால், மார்ஷியன் படத்தில் உங்களுக்குப் புதிதாக எதுவும் இருக்காது. தனியே மாட்டிக்கொண்ட ஒரு ஆள் எப்படித் தப்பிக்கிறான்/தப்புவிக்கப்படுகிறான் என்பதே கதை. ஆனால், எடுக்கப்பட்ட விதத்தில் ஓரளவு சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். இதனால் அவசியம் ஓரிரண்டு வாரங்கள் உலகம் முழுவதும் ஓடும். போட்ட பணத்தை விட இரண்டு மூன்று மடங்கு எடுக்கும். ஆனால் இதை எடுக்க ரிட்லி ஸ்காட் தேவையில்லை. இதை யார் வேண்டுமானாலும் எடுத்திருக்க முடியும்.

வழக்கமாக இதுபோன்ற படங்களில், பின்னால் வரப்போகும் பிரச்னையை சமாளிக்க ஹீரோ/ஹீரோயினுக்கு ஏற்கெனவே சில திறமைகள் இருப்பது போல எழுதப்பட்டிருக்கும். ‘நான் ஈ’ படத்தில் ஹீரோயின் குட்டிக்குட்டி பொருட்களை நுணுக்கமாக உருவாக்கும் திறன் படைத்தவளாகக் காட்டப்பட்டிருப்பது ஒரு உதாரணம். அதேபோல் இந்தப் படத்திலும் ஹீரோ மார்க் வாட்னி ஒரு பாடனிஸ்ட். தாவரவியல் நிபுணன். ஒரு தாவரவியல் ஆசாமிக்கு விண்வெளியில் என்ன வேலை? என்னவெனில், மார்ஸ் கிரகத்தில் மாட்டிக்கொண்டபின் அவன் அங்கே உருளைக்கிழங்கைப் பயிர் செய்து விளைவித்து அவைகளை உண்ண வேண்டும். அதுதான் காரணம். இதுபோல், படத்தில் வரும் எந்த விஷயமாக இருந்தாலும் ஒரே நிமிடத்தில் மார்க் வாட்னிக்கு அது புரிந்துவிடுகிறது. இதனால் உடனடியாக அதைச் செய்துவிடுகிறான். எனவே, முழுப்படமுமே ஏதோ மார்ஸுக்குப் பிக்னிக் சென்றிருக்கும் ஒரு ஆளைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. கூடவே, பூமியில் இருக்கும் நாஸா விஞ்ஞானிகள் இவனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, ‘இதைச்செய் அதைச்செய்’ என்று கட்டளைகள் இட்டு, அவனது வாழ்க்கையை இன்னும் எளிதாக்கிவிடுகின்றனர். எனவே படம் பார்க்கும் நமக்குப் பரபரப்பு தொற்றிக்கொள்வதில்லை. ‘காஸ்ட் அவே’ படத்தையோ ‘ராபின்ஸன் க்ரூஸோ’ படத்தையோ (அல்லது நாவலையோ) நீங்கள் பார்த்து/படித்திருந்தால், இது புரியும். தனியே தீவில் மாட்டிக்கொண்ட நபர் அனுபவிக்கும் உளவியல் ரீதியான பிரச்னைகள் எதுவுமே மார்ஷியனில் இல்லை. மிகமிகத் தட்டையான ஒரு கதையை அதே அளவு தட்டையாக எடுத்து வெளியிட்டால் எப்படி இருக்குமோ அதுதான் இப்படம்.

இந்த நாவல் எழுதப்பட்டது 2011ல். ஆன்டி வெய்ர் (Andi Weir) என்பவர் சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து எழுதிய நாவல். அமேஸான் கிண்டிலில் அவர் வெளியிட, கிட்டத்தட்ட 35,000 பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நாவல் புத்தக வடிவிலும் வெளியாகி நன்றாக விற்பனையாக, உடனடியாக இதன் திரைப்பட் உரிமையை வாங்கிவிட்டனர். உடனேயே தபதபவென்று ரிட்லி ஸ்காட் ஒப்பந்தமாகி, படம் எடுத்து இப்போது வெளியாகியிருக்கிறது.

விண்வெளியில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைச் சொல்வதில் எனக்கு மிகவும் பிடித்த படம் ‘Apollo 13‘. ரான் ஹோவார்ட் எடுத்தது. டாம் ஹாங்க்ஸ் நடித்த படம். பிய்த்துக்கொண்டு ஓடியது. இப்படிப்பட்ட படஙகளுக்கு அதுதான் benchmark என்பது என் கருத்து. அதைப் பார்க்காத நண்பர்கள் ஒருமுறை இதைப் பார்த்தால், மார்ஷியனில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது தெரியும். இப்படியெல்லாம் எழுதியிருப்பதால் மார்ஷியன் ஒரு மொக்கை என்று நான் சொல்லவில்லை. மிகச்சாதாரணமான ஒரு படம். எந்தவித உணர்ச்சிகளையும் கிளப்பாமல், தேமே என்று எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படம். ஆனால் ப்ராமிதியஸுக்கும் எக்ஸோடஸுக்கும் இது பல மடங்கு பரவாயில்லை. ஒரு பல்ப் நாவலை அதே ஃபீலில் எடுத்திருக்கிறார்கள். இதை ரோலாண்ட் எமரிக்கிடம் கொடுத்திருந்தால் இன்னும் சில மசாலா அயிட்டங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. எடுத்துக்கொண்ட ‘மசாலா’ என்ற genreக்கு அவர் முழு ஜஸ்டிஃபிகேஷனும் செய்திருக்கலாம்.

க்வெண்டின் டாரண்டினோ, வயதானபின்னர் படங்களை எடுத்துத் தள்ளுவதில் உள்ள பிரச்னைகள் பற்றிப் பலமுறை சொல்லியிருக்கிறார். எந்த இயக்குநருக்கும் ஒரு படைப்பின் உச்சம் இருந்தே தீரும். அந்தக் காலகட்டத்துக்குப்பின் மெல்ல மெல்ல அவர்களின் திறன் மங்கி, சாதாரணமான மொக்கைகளை எடுக்கத் துவங்குவர். அதுதான் ரிட்லி ஸ்காட்டுக்கு இப்போது கடந்த சில வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. இத்துடன் அவரது திரைவாழ்க்கை முற்றுப்பெற்றால் கொஞ்சமாவது மரியாதை கிடைக்கும். இல்லையெனில் அனைவராலும் கிண்டல் செய்யப்பட்டுத்தான் அவரது திரைவாழ்க்கை முற்றுப்பெறும் என்றூ நம்புகிறேன்.

உங்களுக்கு உணர்ச்சிகள் இல்லாத, தட்டையான ஆக்‌ஷன் படஙகள் பிடிக்கும் என்றால் இதைப் போய்ப் பார்க்கலாம். ’ரிட்லி ஸ்காட்’ படம் என்பதால் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

படத்தின் கதாநாயகி ஜெஸிகா சாஸ்டெய்ன் எனக்குப் பிடித்த நாயகிகளில் ஒருவர். தற்செயலாக, இதற்கு முன்னர் வெளிவந்த விண்வெளிப் படமான ‘Interstellar’ படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ச்சிவெடெல் எஜியோஃபோர் (Chiwetel Ejiofor), பாதி இந்தியர். அதேபோல் இதில் சைனாவைச் சேர்ந்தவர்கள் செய்யும் ஒரு உதவியைப் பற்றியும் வருகிறது. ச்சிவெடெல் இந்தியராக இருப்பதன் காரணம் என்ன? சைனா ஏன்? இண்டர்ஸ்டெல்லார் படத்திலும் இந்தியா வரும் (அதன் ஒரிஜினல் திரைக்கதையில் அது சைனா. . பின்னர் இந்தியாவாக மாற்றப்பட்டது). இதெல்லாம் ஏன் என்று யோசியுங்கள். ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் Quantico என்ற டிவி சீரீஸில் கதாநாயகியாக நடிப்பதற்கும் இதற்கும் பல தொடர்புகள் உண்டு என்பது என் கருத்து.

  Comments

10 Comments

  1. தயவுசெய்து இடைவெளி விடாம பதிவிடவும். டாட்.

    Reply
    • Dany

      ஆமோதிக்கிறேன்

      Reply
  2. படத்த பார்த்திட வேண்டியதுதான்.

    ஹாலிவுட் சயின்ஸ் பிக்‌ஷன் படம் எவ்வளவு காட்டு மொக்கையா இருந்தாலும் அத ரசிக்கிறது என்ன மாதிரியான மனநிலை?

    இந்தியாவுல 100 கோடி, 200 கோடி வசூல் அப்பிடிங்கிற செய்திய கேட்டு அவனுங்களுக்கு தூக்கம் வந்திருக்காது. அதான் இப்போ இந்தியாவ சொரண்டுறானுங்க. நம்ம ரசிக கண்மனிகளை பத்தி அவனுங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நல்லா இந்தியாவ டார்கெட் பண்றாங்க.

    Reply
  3. It is gone now!

    I have seen ‘Caste away’ and ‘Robinson Crusoe’ and liked them. Now, have got second thoughts to watch this movie. Thank you!

    Reply
  4. ஆதவா

    ஒரு பல்ப் நாவலை அதே ஃபீலில் எடுத்திருக்கிறார்கள். இதை ரோலாண்ட் எமரிக்கிடம் கொடுத்திருந்தால் இன்னும் சில மசாலா அயிட்டங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. எடுத்துக்கொண்ட ‘மசாலா’ என்ற genreக்கு அவர் முழு ஜஸ்டிஃபிகேஷனும் செய்திருக்கலாம்.

    அதேதான் எனக்கும் தோன்றியது. ஒரு பல்ப் நாவல் படித்த உணர்வு படம் பார்க்கும்வரை இருந்தது.

    Reply
  5. Shyam

    Request you to provide your reviews on 2001 space odyssey from great Stanley

    Reply
    • ராஜ்குமார்

      என்னது அந்த படத்த பார்த்துடீங்களா.. நான் பார்த்தப்போ ஒரு கல்லு வானத்துல பறந்துகிட்டு இருந்துச்சி… லைட்டா தூக்கம் வந்தது.. முழிப்பு வந்து பார்த்தா அதே கல்லு அதே வானம் பறந்து கிட்டு இருந்தது .. படம் முடிஞ்சிடுச்சி..

      Reply
  6. ayyanar

    i think ritley scott will give wonderful movie in very soon. because it is more super than before his movies. in MARTIAN movie give good experiance, the hero character is a botanist is the starting point of this story. because if he don’t know the story didnot come reliable. so that is the very important information about hero. but he tells quick and start a story up nice.
    gravity, interstellar movies are wonderful but serious type. i like the hero character that inspire me to happy when meet sad. that is him point i think.

    Reply
  7. PS.SURESH

    உண்மைதான் சில சமயம் என்னை தொட்ட செய்தி .சில நேரம் மனதில் வரவேயில்லை .

    Reply

Join the conversation