The Raven (2012) – English

by Karundhel Rajesh August 7, 2012   English films

எட்கர் அலன் போ ஒரு பூங்காவின் பெஞ்ச்சில் அமர்ந்துகொண்டிருக்கிறார். அவர் முகம் வாடியிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறார். சூரியன். அதனைச்சுற்றி ஒரு காகம் பறந்துகொண்டிருக்கிறது.

அக்டோபர் 7. 1849. இறக்கும் தருவாயில் இருந்த எட்கர் அலன் போ, பால்டிமோரின் ஒரு பூங்காவின் பென்ச்சில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது இன்னமும் ஒரு மர்மமாகவே இருக்கிறது.

இப்படித்தான் இந்தப் படம் ஆரம்பிக்கிறது.


எட்கர் அலன் போ, மிக மிக சுவாரஸ்யமான ஒரு ஆளுமை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து, நாற்பது வருடங்கள் வறுமையில் உழன்ற ஒரு எழுத்தாளர். இன்றைய காலகட்டத்தில் கொண்டாடப்படும் பல கதைகளை அப்போதே எழுதியிருந்தவர். துப்பறியும் கதைகளை முதன்முதலில் எழுதியவர். பல அருமையான கவிதைகளுக்கும் சொந்தக்காரர். எழுத்து மூலமாகத்தான் வாழ்க்கை என்பதில் இறக்கும்வரை உறுதியாக இருந்தவர்.

இவரைப் பற்றி நமது தளத்தைப் படித்திருக்கும் நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இதோ:  எட்கர் அலன் போ – இருள்மையின் துன்பியல்.

இந்தக் கட்டுரையைப் படித்தால்தான் இந்தப் படத்தில் வரும் அத்தனை மேற்கோள்களுக்கும் விவரணைகளுக்கும் அர்த்தம் புரியும். ஆகையால், மேலேயுள்ள கட்டுரையைப் படித்துவிட்டே நண்பர்கள் மேற்கொண்டு இக்கட்டுரையைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கெனவே படித்திருந்தாலும்கூட, மீண்டும் இந்தக் கட்டுரையை ஒருமுறை படித்துவிட்டு இப்படம் பார்த்தால், போவைப் பற்றிய உண்மைகள் புரியலாம்.


நம்மைச் சுற்றி நமது எண்ணங்களில் அவ்வப்போது வந்துபோகும் இருள், எட்கர் அலன் போவை வேட்டை நாய் போல வாழ்க்கையின் இறுதிவரை தொடர்ந்துகொண்டே இருந்தது.  மாறி மாறி அவரது வாழ்வில் நடந்த துன்பியல் சம்பவங்கள் அவரது மனதை அரித்தவண்ணமே இருந்தன. அவரது கண் முன்னர் அவரது வாழ்வின் முக்கியமான பெண்கள் (தாய் உட்பட) இறந்தபோது, அதற்கான காரணங்கள் புரியாமல், மேற்கொண்டு என்ன செய்வது என்றே தெரியாமல் கொடும் துயரத்தை அனுபவித்திருக்கிறார் போ. அப்போதெல்லாம் ஒருவித மனப்பிறழ்வு நிலையில் அவர் எழுதிய கதைகளும் கவிதைகளும் இன்னமும் அமரத்துவம் பெற்று விளங்குகின்றன. அவரது கதைகள், கொடூரமான முறையில் நிகழும் சம்பவங்களைக் கொண்டிருக்கும். ரத்தம், வன்முறை, அருவருக்கத்தக்க நிகழ்வுகள் ஆகியவை அவரது கதைகளில் பெரும்பாலும் இருக்கும். ஆனால், ஒரு கற்பனையைச் சுற்றியுள்ள இருளை அவரது வார்த்தைகள் மெல்ல மெல்லக் கட்டவிழ்ப்பதையும் அவரது கதைகளில் காணலாம். அவரது வார்த்தைகளில் வழியும் துன்பத்தையும் குரூரத்தையும் இருள்மையையும் விரல்களால் நம்மால் பிடித்துவிடமுடியும். Visionary என்றே சொல்லத்தக்க ஒரு மனிதர் இவர்.

இவரது எழுத்தைப் படித்துவிட்டேதான் துப்பறியும் கதைகளை எழுத ஆரம்பித்ததாக ஷெர்லக் ஹோம்ஸ் எழுதிய ஆர்தர் கானன் டாயல் சொல்லியிருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை என் மனதை மிகவும் பாதித்த எழுத்தாளர் இவர். இவரது கதைகளை மறக்கவே முடியாது. எப்போது இவரைப் பற்றி நினைத்துப் பார்த்தாலும் மனதுக்கு மிக அருகில் இவரது உருவம் நிழலாடும். சற்றுத் தொலைவில் நின்றுகொண்டு இவர் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பது போலவே தோன்றும். இவருடன் எனக்குத் தொடர்பு இருப்பது போலவும் அவ்வப்போது தோன்றும். மிக நெருங்கிய ஒரு சகா போலவே எனக்கு இன்னமும் போ இருந்துவருகிறார்.

இறப்பதற்கு சில நாட்கள் முன்னர் காணாமல் போன போவின் வாழ்வில் என்னென்ன சம்பவங்கள் நடந்திருக்கலாம்? அதைத்தான் இப்படம் ஆராய்கிறது.

ஒரு அபார்ட்மெண்ட்டில் மர்மமான முறையில் ஒரு பெண்ணும் அவரது மகளும் இறக்கின்றனர். அபார்ட்மெண்ட்டோ உள்ளே பூட்டியிருக்கிறது. பெண்ணின் உடல் அந்த வீட்டின் புகைபோக்கியில் திணிக்கப்பட்டிருக்கிறது (க்ளிக்கிப் படிக்க – எட்கர் அலன் போவின் சில்லிட வைக்கும் கதை – 1.  The Murders in the Rue Morgue). துப்பறிய வரும் இன்ஸ்பெக்டர் எம்மெட் ஃபீல்ட்ஸ் கொலைக்கான காரணத்தை ஊகிக்கிறார். அது – ஏற்கெனவே பதிப்பிக்கப்பட்டிருந்த எட்கர் அலன் போவின் சிறுகதைத் தொகுப்பு. Tales of the Grotesque and Arabesque. அதில் வரும் ‘மர்டர்ஸ் இன் ரூ மார்க்’ என்ற கதைப்படியே இந்தக் கொலை நடந்திருக்கிறது.

எட்கர் அலன் போவைக் கடுமையாக விமர்சித்துவந்த விமர்சகர் ரூஃபஸ் க்ரிஸ்வோல்ட் (Rufus Griswold), ஒரு மிகப்பெரிய கூரிய பெண்டுலத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு இறக்கிறார் (படிக்க – 2. The Pit and the Pendulum). இந்தக் கொலையிலும் எட்கர் அலன் போவின் கதையில் இருக்கும் ஒற்றுமை இன்ஸ்பெக்டர் ஃபீல்ட்ஸினால் கண்டுபிடிக்கப்படுகிறது.

அப்போது கிடைக்கும் ஒரு க்ளூவினால், கொலைகாரன் அடுத்து தாக்கப்போவது நகரின் செல்வந்தர்களில் ஒருவரான கேப்டன் ஹாமில்டன். என்று தெரிகிறது. இவரது மகளான எமிலியை போ காதலித்து வருகிறார். மிக ஆழமாக.

ஆகவே போவிடம் பேசும் ஃபீல்ட்ஸ், இந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிக்க அவரது உதவி வேண்டும் என்று கேட்க, போ முதலில் சம்மதிப்பதில்லை. ஆனால், இதன்பின் நடக்கும் ஒரு முக்கியமான சம்பவத்தால், வேறு வழியேயின்றி இந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிக்க போ சம்மதிக்கிறார். ஆனால், அதற்கு மிகக்குறைந்த அவகாசம் மட்டுமே இருக்கிறது. அந்த அவகாசத்திலும், கொலைகாரன் போவுக்கு விடுக்கும் ஒரே நிபந்தனை என்னவெனில், சில வருடங்களாக எழுதாமல் இருக்கும் போ, அன்றிலிருந்து நகரின் பெரிய பத்திரிக்கையான ‘பால்டிமோர் பேட்ரியட்’டில் அவரது பிரத்யேக முத்திரையான குரூரமும் ரத்தமும் உண்மையும் அடங்கிய கட்டுரைகளை எழுதச் சொல்கிறான். போவும் அன்றிலிருந்து மறுபடியும் எழுதத் துவங்குகிறார்.

மெல்ல மெல்ல போவின் ஒவ்வொரு கதையிலும் நிகழும் ஒரு கொலை, நிஜ வாழ்வில் அக்கொலைகாரனால் நிகழ்த்தப்படுகிறது. இதோ இந்த வரிசையில்:

3. The Mystery of Marie Rogêt – இது, உண்மைக் கொலை ஒன்றை வைத்து முதன்முதலில் எழுதப்பட்ட ஒரு சிறுகதை.

4. The Cask of Amontillado

இதற்குள் போ கொலைகாரனை ஒருசில க்ளூக்கள் மூலமாகக் கண்டுபிடித்துவிடுகிறார். இதன்பின் என்ன நடக்கிறது?

இறுதி க்ளூ.

5. The Tell-Tale Heart

ஆரம்பத்தில் பார்த்த அதே பூங்கா பெஞ்ச். கண்கள் சொருகிக்கொள்ளும் நிலையில் எட்கர் அலன் போ அமர்ந்திருக்கிறார். அவரது வாய், ‘ரேய்னால்ட். . . . . ரேய்னால்ட்’ என்று முணுமுணுக்கிறது. மிக சீரியஸான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் எட்கர் அலன் போவின் உயிர் பிரிகிறது.

இறக்கும் தருவாயில் எட்கர் அலன் போ, ‘கடவுளே.. எனது பரிதாபத்திற்குரிய ஆன்மாவைக் காப்பாயாக’ (God. Save my poor soul) என்று சொல்லிவிட்டே இறந்தார். ஆனால், போ அப்படிச் சொல்லும் காட்சி, படத்தின் துவக்கத்திலேயே வந்து, போவின் மரணத்தைப் பற்றி நமக்கு நினைவுபடுத்துகிறது. இதுமட்டுமல்லாமல், தனது காதல் மனைவி நோய்வாய்ப்பட்டிருக்கும்போது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி எட்கரே இப்படத்தில் சொல்லும் ஒரு காட்சியும் வருகிறது. கூடவே, அவரது அமரத்துவம் வாய்ந்த கவிதையான ‘The Raven‘ என்ற அற்புதத்துக்குக் கிடைத்த பரிசான வெறும் பதினான்கு டாலர்களைப் பற்றி விரக்தியாக அந்தக் கலைஞன் பேசும் காட்சியும் படத்தில் உண்டு.

கொலைகாரன் யார்? எட்கரின் இறுதி நாட்களின் மர்மம் என்ன? காதலி எமிலியுடன் எட்கர் சேர முடிந்ததா?

என்னளவில், இந்தப் படத்தில் சில இடங்களில் அருமையாக எழுதப்பட்டிருக்கும் இப்படம், சில இடங்களில் சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது. ஆகவே, ஒரே மூச்சில் பார்க்கும்படி இல்லை. இருந்தாலும், எட்கர் அலன் போவின் ஒரு கதையையாவது – ஒரு கவிதையைவது யாராவது படித்திருக்கும் பட்சத்தில், இப்படத்தைப் பார்க்கலாம். அந்த அற்புதமான கலைஞனின் மனப்பிறழ்வுகள் நிறைந்த கொடுந்துயர வாழ்க்கையின் ஒருசில இருண்ட பக்கங்களைப் பற்றிய ஒரு படமாக இருப்பதால், இப்படம் எனக்குப் பிடித்தே இருந்தது.

படத்தில் கொலைகளுக்கான சில க்ளூக்கள் அருமை. ஆனாலும், திரைக்கதை சரியாக எழுதப்படாததன் காரணமாக, முழுமையான படம் பார்த்த திருப்தி இதில் இல்லை என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

The Raven படத்தின் ட்ரெய்லர் இங்கே.

படத்தை இயக்கியிருப்பவர், V for Vendetta படத்தை இயக்கிய ஜேம்ஸ் மெக்டீக் (James McTiegue). படத்தில் எட்கர் அலன் போவாக நடித்திருப்பவர் – ஜான் க்யூஸாக். படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருப்பவர் –Immortals மற்றும் The Three Musketeers படத்தில் முறையே ஸ்யூஸாகவும் (கடவுள் ஜீயஸ்) அராமிஸாகவும் பின்னியெடுத்த லூக் இவான்ஸ்.

இதே காலகட்டத்தில் ஃப்ரான்ஸில் வாழ்ந்துவந்த ஜூல்ஸ் வெர்னைப் பற்றியும் இப்படத்தில் ஒரு குறிப்பு உண்டு.

  Comments

9 Comments

  1. போ என்கிற மனிதனை மையமாக வைத்து, முழுக்க முழுக்க கற்பனயில் (sort of fantasy) உருவாக்கப்பட்ட ஒரு திரில்லர் படம் என்ற எதிர்பார்ப்பில் தான் நான் இந்த படத்தை பார்க்கவே ஆரம்பித்தேன்..
    ஆனால், கண்டிப்பாக அந்த அளவில் மட்டும் நின்று விடவில்லை இந்தப் படம்..
    போவின் நிஜ வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் படம் முழுக்க ஆங்காங்கே மிக அருமையாக இணைத்ததோடு மட்டுமில்லாமல், ஒரு த்ரில்லர் படத்திற்கு உண்டான பரபரப்பையும் கெடுத்து விடாமல் மிக அருமையாகவே படமாக்கி இருக்கிறார் James McTiegue ..

    ஆலன் எட்கர் போ பத்தி கொஞ்சம் தெரிந்துகொண்டு இந்த படத்தை பார்த்தல் மிகவும் ரசிக்கலாம்..
    இல்லேனா English Literature பத்தின ABCD கூட தெரியாத ஒருத்தன் “Midnight in Paris” படம் பாக்க போன மாதிரி இருக்கும்.. 🙂

    Reply
  2. எட்கர் ஆலன் போவைப் பற்றிய அந்தக் கட்டுரை மனதை மிகவும் பாதித்தது…! 🙁

    Reply
  3. அலன் போ சத்தியமா இன்னைக்குதான் அப்படி பேரே கேள்விபடுறன் உங்க புண்ணியத்தில..இப்படிக்கு இப்படிபட்ட பதிவுகளை மேலும் எதிர்பாக்கும் வாசகன்
    ராத்திரி 1 மணி இருக்கும் அலன் போ பற்றிய முதல் பதிவு கதைகளை வாசிக்கும் போது அப்பப்ப லேசா உடம்பு அதிருது.அவரோட இருள்மை சூழ்ந்த கதைகளை அதே Effectரோட எழுதின உங்களுக்குதான் அதன் பெருமை சாரும் Hat off boss!!

    Reply
  4. எட்கர் ஆலன் போவைப் பற்றிய கட்டுரை அறிந்ததில்லை… நன்றி…

    விரிவான விளக்கம்; விமர்சனம் அருமை…

    நன்றி… தொடர வாழ்த்துக்கள்…

    Reply
  5. ஆலன் போவை எனக்கும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி! வழக்கம் போல ஒரு fully loaded பதிவு 🙂

    Reply
  6. கருந்தேள் மிக அழகான அருமையான பதிவு, புது வாசகர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் ஆங்கங்கே
    தேவையான link கொடுத்து, உங்கள் பதிவை படிக்கும் அனைவரும் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் endru
    நீங்கள் மெனக்கெடுவது புரிகிறது… இது (நல்ல) சினிமாவின் மேல் நீங்கள் வைத்திருக்கும் காதலையே வெளிப்படுத்துகிறது..
    வாழ்த்துக்கள் நண்பரே….

    Reply
  7. எட்கர் அலன் போ பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். ஆழ்ந்து யோசிக்கவைக்கிறது

    Reply
  8. @ பிரசன்னா கண்ணன் – உண்மைதான். போவைப் பற்றி எதுவும் தெரியாம பார்த்தா செத்து சுண்ணாம்பாயிடுவாங்க 🙂 .. முதல் பாதி – வேகம். ரெண்டாவது பாதி எனக்கு ஒகே. போவைப் பத்தி சில நுணுக்கமான தகவல்கள் சொல்லப்படுவதால்.

    @ சுபத்ரா – அதில் இருக்கும் வீடியோவையும் பார்த்தீங்கன்னா அது இன்னமும் மனதை பாதிக்கும்

    @ மணி – எட்கர் அலன் பொவின் கதைகளைப் படித்ததால்தான் அவரைப் பத்தி தெரிஞ்சுது. அதுனால தான் எழுத முடிஞ்சுது. அதனால் எல்லாப் பாராட்டுக்கும் உரியவர் தலைவர் போவே.

    @ திண்டுக்கல் தனபாலன் – கட்டுரையை முழுதாகப் படித்தீர்களா? பிடித்ததா? நன்றி

    @ பேபி ஆனந்தன் – நன்றி. முடிஞ்சா போவின்சில கதைகளை இதே ஆர்டரில் படிக்கலாம். கட்டாம் நல்லா இருக்கும்.

    @ ரவிகுமார்- மிக்க நன்றி

    Reply

Join the conversation