The Wolf of Wall Street (2013) – English – Part 1

by Karundhel Rajesh January 5, 2014   English films

[quote]திரைப்படங்களால் இனிமேலும் மிகப்பெரிய சமூக மாற்றங்களைக் கொண்டுவரமுடியுமா? கடைசியாக இதெல்லாம் நடந்தது எப்போது? யோசித்துப்பார்த்தால், இத்தாலியன் நியோ-ரியலிஸ திரைப்படங்களை (1944-1952) சொல்லலாம். அந்தப் படங்கள், போரினால் அழிக்கப்பட்ட இத்தாலியின் குரலாக, ஆன்மாவாக விளங்கின. இப்போதெல்லாம் அப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அதேசமயம் – ஒரு புத்தகத்தைப் போல, ஒரு ஓவியத்தைப் போல, ஒரு இசைக்குறிப்பைப் போல – எந்தத் திரைப்படமாவது உங்களுடன் இருந்தால், உங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மெல்ல மாறினால், ஒருவேளை அந்தப் படத்தால் மெதுவாக எதாவது அதிசயம் நிகழ்த்த முடியலாம் – Martin Scorsese[/quote]

நவம்பர் 17ல் தனது எழுபத்தியோராம் வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் மார்ட்டின் ஸ்கார்ஸேஸி, இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொடுத்த ஒரு பேட்டியில் சொல்லியிருப்பதுதான் நாம் மேலே பார்த்த மேற்கோள். குறும்படங்கள் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்து, தனது முதல் திரைப்படத்தை (Who’s that knocking at my door – Black & white – 1967) ஸ்கார்ஸேஸி இயக்கி ஆண்டுகள் 47 ஆகின்றன. இத்தனை ஆண்டுகள் திரையுலகத்தில் இருந்தும், இன்னும் தன் திறமையில் துளிக்கூட மங்காத இயக்குநர் என்று அவரை தாராளமாகக் குறிப்பிட முடியும். இத்தனை வருடங்கள் சுறுசுறுப்பாக திரையுலகில் இயங்கிய / இயங்கிக்கொண்டிருக்கும் இயக்குநர்கள் உலகளவில் மிகச்சிலரே இருக்கின்றனர் (ஸ்பீல்பெர்க் இன்னொரு உதாரணம்). ஒரு உதாரணமாக, போலாந்தின் இயக்குநர் ஆந்த்ரே வாய்தாவை (Andrzej Wajda) சொல்லலாம். இவருக்குத் தற்போது 87 வயது. இவர் தனது முதல் படத்தை எடுத்து வெளியிட்ட ஆண்டு – 1954. இவருக்கு 1990யிலேயே வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிவிட்டனர். இருந்தாலும், ‘விட்டேனா பார்’ என்று அட்டகாசமான படங்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார். இந்தத் தள்ளாத வயதில் அவர் எடுத்த Wałęsa.Man of Hope, உலகப்படவிழாக்களை சுற்றிக்கொண்டிருக்கிறது.

ஸ்கார்ஸேஸியின் படங்களின் விசேட அம்சங்கள் என்ன? எதனால் அவரை இன்றுவரை அற்புதமான இயக்குநர் என்று திரைப்பட வெறியர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம்?

சில இயக்குநர்களின் படங்களை, எந்தக் காட்சியை கவனித்தாலும் அது அவரது படம் என்பதை சொல்லிவிட முடியும். அவர்களது முத்திரை அந்தப் படங்களில் அப்படிப் பதிந்திருக்கும். முத்திரை என்றது, வெறும் ஷாட்கள் அமைக்கும் முறை, லைட்டிங், Cutகள் போன்றவை இல்லை. அந்த இயக்குநரின் மனதில் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைப் பற்றி என்னென்ன தனிப்பட்ட எண்ணங்கள் இருக்கின்றனவோ, அவை அப்படியே அந்தப் படங்களின் காட்சிகளிலும் பிரதிபலிக்கும். இதுவே, நான் குறிப்பிட்ட ‘முத்திரை’ என்ற வார்த்தையின் பொருள். இதனை ‘auteur’ என்ற வார்த்தையால் விளக்குவர்.

ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் பலருக்கும் பங்கு இருக்கும். ஆனால், இவையெல்லாவற்றையும் மீறி, இயக்குநரின் முத்திரை அந்தப் படத்தில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு இயக்குநர்தான் ஸ்கார்ஸேஸி. அதேபோல், அவரது திரைப்படங்களுமே, சில genreகளுக்குள்தான் அமைந்திருக்கும். குறிப்பிட்ட ஜானர்களுக்குள் படமெடுக்கும் பல இயக்குநர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கும் ஸ்கார்ஸேஸிக்கும் இருக்கும் வித்தியாசங்கள் மிக அதிகம்.

1364932409Martin_Scorsese[1]

எப்படிப்பட்ட படங்களை இதுவரை ஸ்கார்ஸேஸி இயக்கியிருக்கிறார் என்று கவனித்தால், Biopic என்று சொல்லக்கூடிய, உண்மைச் சம்பவங்களால் கூடிய, வாழ்ந்து மறைந்த மனிதர்களைப் பற்றிய படங்கள்தான் அவரது திரைவாழ்க்கையில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து இதுவரை ஒன்பது திரைப்படங்களை அப்படி இயக்கியிருக்கிறார் (Raging Bull, The Last Temptation of Christ, Kundun, The Aviator, Hugo, The Wolf of Wall Street. ’Boxcar Bertha’, ‘Goodfellas’ மற்றும் ’Casino’ ஆகியவை ஓரளவு நிஜக்கதைகள்தான்). இதற்கு அடுத்தபடியாக, Gangster Crime திரைப்படங்கள். இவைகளில், GoodFellas, Casino, Gangs of New York, Mean Streets, The Departed ஆகியன அடங்கும். கூடவே, தனிப்பட்ட மனிதர்களின் அடிமன உளவியல் பிரச்னைகளை மையமாகக் கொண்டும் ஸ்கார்ஸேஸி பல படங்களை எடுத்துள்ளார். அவை: Taxi Driver, Cape Fear, Bringing out the Dead, Shutter Island போன்றவை. ஏற்கெனவே மேலே சொல்லிவிட்ட ஒருசில படங்களும் இந்தப் பட்டியலில் வந்துவிடும். இவைதவிர, நகைச்சுவைப் படங்கள் (Alice Doesn’t live here Anymore, The King of Comedy, After Hours) ஆகியவையும், Musical படங்களையும் (New York, New York) எடுத்திருக்கிறார்.

சென்ற பத்திக்கு முந்தைய பத்தியில், குறிப்பிட்ட ஜானர்களுக்குள் படம் எடுக்கும் இயக்குநர்களைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? இவர்களில் ஸ்கார்ஸேஸியை வேறுபடுத்திக் காட்டும் பல அம்சங்கள் அவரது படங்களில் இருக்கின்றன. க்வெண்டின் டாரண்டீனோவைப் பற்றி எழுதும்போது, அவரது படங்கள் வன்முறையையும் தீயவைகளையும் போற்றும் விதத்தில் இருக்கின்றன என்பார்கள். ஆனால் அதையெல்லாம் அவருக்கு முன்னரே செயல்படுத்திக் காட்டிவிட்டவர் ஸ்கார்ஸேஸி. போலவே, ஸ்கார்ஸேஸியின் படங்களில் வரும் கதாபாத்திரங்களை கவனித்தால், அவர்கள் பெரும்பாலும் மனச்சிதைவு உள்ளவர்களாக இருப்பார்கள். இந்தக் கதாபாத்திரங்களை அவர் விரிவாகக் காட்டும்போது, இயல்பாகவே அவரது படங்களின் தொனியைப் பற்றிய விமர்சனங்கள் பலமுறை எழுந்துள்ளன. ஆனால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை முழுதுமாக ஸ்கார்ஸேஸி காட்டும்போது, அவர்களின் போராட்டம், எழுச்சி, தோல்வி, மாற்றங்கள் போன்றவற்றை அவர் முடிந்தவரி இயல்பாக, உள்ளபடிக் காட்டுகிறார் என்பதை கவனித்தால் அந்தக் குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதவை என்பது புரிந்துவிடும்.

ஸ்கார்ஸேஸியின் படங்களில் வன்முறை அதீதமாகக் காண்பிக்கப்படும். ஆனால் அதுவுமே, அந்தந்த நேரங்களில் காட்சியுடன் சம்மந்தப்படுத்திப் பார்த்தால் மிக இயல்பானதுதான் என்று தெரியும். உதாரணமாக, Goodfellaas படத்தில், ஜோ பெஸ்சி நடித்திருக்கும் கதாபாத்திரமான டாம்மி என்பவன், ஒரு பாரில், பில்லி பேட்ஸ் என்ற மற்றொரு பிரபல ரவுடியை அடித்தே மயக்கமுறச்செய்யும் காட்சி வரும். அதே படத்தில், சிறிய வேடத்தில் நடித்த ஸாமுவேல் ஜாக்ஸனை டாம்மி கொல்லும் காட்சியும் அப்படிப்பட்டதே. இதன்பின் வந்த Casino படத்தின் இறுதியில், அதே ஜோ பெஸ்சி நடித்த நிக்கி என்ற கதாபாத்திரத்தை ஒரு காட்சியில் மாட்டை அடிப்பதுபோல் அடித்துவிட்டு, நகருக்கு வெளியே உயிரோடு புதைப்பார்கள். தற்காலத்தில் மிக அதிகமாகப் புழங்கும் இப்படிப்பட்ட வன்முறைக் காட்சிகளையும் என்றோ ஸ்கார்ஸேஸி செய்துகாட்டிவிட்டார். இவற்றையெல்லாம், இவைகள் ரவுடிகளோடு சம்மந்தப்பட்ட காட்சிகள் என்பதால் இயல்பாக, அப்படியப்படியே காட்டவேண்டும் என்பது அவரது முடிவு. (பெட்டிச்செய்தியாக, தனது 14வது வயதில் பாதிரியாராக மாறுவதற்கான படிப்பில் ஈடுபட்டார் ஸ்கார்ஸேஸி என்பது துணுக்கு. ஆனால் அவரால் அதில் தொடர முடியவில்லை. பாதிரியாராக ஆசைப்பட்ட ஒரு நபரின் படங்களில் தெறிக்கும் வன்முறை என்பது சுவாரஸ்யமான முரண் தானே? ஸ்கார்ஸேஸியின் The Last Temptation of Christ படமும் அதனால்தான் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது என் யூகம்).

ஸ்கார்ஸேஸியின் இன்னொரு விசேடம், அவரது படங்களில் அவர் ஷாட்களை அமைக்கும் முறை. இதைப்பற்றி கொழந்த ஒரு வீடியோ பதிவே போட்டுவிட்டார் என்றாலும், சுருக்கமாக சொல்லப்போனால், அவரது படங்களின் ஷாட்கள் பெரும்பாலும் குறுகிய அளவிலேயே cut செய்யப்படும். இவற்றை ஸ்கார்ஸேஸியே எடிட்டிங் டேபிளில் முடிவு செய்வார். கூடவே, ஒரு ஷாட்டுக்குள் இடம்பெறும் விஷயங்கள் மிகவும் richஆக இருக்கும் – கதாபாத்திரங்களின் பின்னணி இவரது பெரும்பாலான படங்களில் அப்படி இருப்பதால். ஸ்கார்ஸேஸியின் டாக்ஸி ட்ரைவர் திரைப்படத்தின் துவக்கக் காட்சியின் ஷாட்களை கவனித்தால், அது ஏதோ ஒரு psychedelic அனுபவத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். புகை – அதன் நடுவே டாக்ஸி – விளக்குகள் – ராபர்ட் டி நீரோவின் கண்கள் – அதன்பின் ந்யூ யார்க்கின் வீதிகள் என்று. போலவே Mean Streets படத்தில் ஹார்வி கீட்டல் சம்மந்தப்பட்ட இந்தக் காட்சியை கவனித்துப் பாருங்கள். பின்னணியில் வரும் Rubber Biscuit பாடலையும், இந்தக் காட்சி எடுக்கப்பட்ட விதத்தையும் பார்த்தால், ஸ்கார்ஸேஸியை பாராட்டாமல் இருக்கவே முடியாது. இப்போது இதுபோன்ற பல காட்சிகள் வந்துவிட்டாலும், திரைப்படம் வெளிவந்த 1974ல் இது ஒரு அசாத்திய முயற்சிதான் என்று புரியும்.

இதேபோல் ஷட்டர் ஐலாண்ட் படத்தின் வலிந்து திணிக்கப்பட்ட போலி ஷாட்கள். ஒருசில ஷாட்களில் வேண்டுமென்றே தவறு இருக்கிறது என்பது படம் பார்க்கையில் தெரிந்துவிடும். அவையெல்லாம், க்ளைமேஸுக்கான ஒரு க்ளுவாக ஸ்கார்ஸேஸியால் வைக்கப்பட்டவை.

தனது படங்களின் மூலம், தொடர்ச்சியாக, தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை மிகக் கவனமாகப் படம் பிடித்தே வந்திருக்கிறார் ஸ்கார்ஸேஸி. இதற்கு அட்டகாசமான எடுத்துக்காட்டு Taxi Driver.

இப்படிப்பட்ட ஸ்கார்ஸேஸிக்குமே கூட ஒரு டெம்ப்ளேட் உண்டு.

அவரது க்ரைம் படங்களை கூர்ந்து கவனித்தால், படத்தின் நாயகனாக வருபவன் தான் படத்தின் மிகப்பெரிய கிரிமினல். அந்தக் கிரிமினல், வாழ்க்கையின் அடியிலிருந்து தனது கதையை ஆரம்பிப்பான். அப்படி ஆரம்பிக்கும் கதை, பெரும்பாலும் வாய்ஸ் ஓவரில்தான் துவங்கும். படம் முழுக்க வாய்ஸ் ஓவர் இருக்கும். படத்தின் பாதிக்குள், படத்தின் பிரதான பாத்திரம், தனது சமூரவிரோத வேலைகளால் மிகப்பெரிய பணக்காரனாக ஆகிவிடும். அதன்பின்னர் அவனைப் போலீஸார் கண்காணிக்க ஆரம்பிப்பார்கள். இறுதியில் அவனை வளைக்கும் போலீஸ், அவனிடம் அவனது நண்பர்களைக் காட்டிக்கொடுக்கச் சொல்வார்கள். அப்படியே அந்தக் கதாபாத்திரமும் செய்யும்.

இதுதான் அவரது Goodfellas, Casino படங்களின் டெம்ப்ளேட். இதே டெம்ப்ளேட்டில்தான் Wolf of Wall Street படமும் அமைந்திருக்கிறது.

மீதியை நாளைய கட்டுரையில் தொடரலாம்….நாளை இரவு இதன் அடுத்த பகுதி வெளிவரும்.

பி.கு

1. மார்ட்டின் ஸ்கார்ஸேஸியைப் பற்றிய எனது முந்தைய சில கட்டுரைகள் – இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

  Comments

2 Comments

  1. gokulnath

    வணக்கம் பாஸ் !!! எப்படி தன நீங்க டைப் பண்றிங்களோ !!! இதுக்கே முச்ஹு முட்டுது. உங்க கடின உழைப்புக்கு பாராட்டுகல்….நீங்க சொல்லிதான் martin scorsese, ஸ்டான்லி குப்ரிக், படங்கள பக்க அர்ம்பிச்ன், அப்போதுலைருந்து உங்கla follow பண்ணீட்டு இருக்கேன்., STOP, mela irukurathe type panna sethutan, inth katuraaiyoda erandam pakkam padichutu katurai pathi comment panren. Note. neenga english keyboard, epadi typanreenga, alathu initala english keyboardla thamiz typanravangluku easynu solluga…please……varthai thedrathukula manasula sola nennachathu maranthudthu….ithnala nerya comment podama oc arvai nakkitu poiiruken. eneeme appdailam nadakathu…..oru mudviku vanthachu., comeentla mansula apadiye irunthu kunma noi vanthutum pola….help…required

    Reply
  2. Jesus fucking Christ…………….boss very hot review, boss fantastic

    Reply

Join the conversation