The Wolf of Wall Street (2013) – English – Part 2

by Karundhel Rajesh January 6, 2014   English films

நேற்று எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இதுவரை படித்திருக்காத நண்பர்கள், இங்கே படிக்கலாம்.

The Wolf Of Wall Street – Part 1[divider]

நேற்றைய கட்டுரையில் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். அவரது படமெடுக்கும் பாணியை கவனித்தோம். அவருக்கென்றே இருக்கும் ஒரு டெம்ப்ளேட்டையும் பார்த்தோம். அவரது க்ரைம் படங்களை கூர்ந்து கவனித்தால், படத்தின் நாயகனாக வருபவன் தான் படத்தின் மிகப்பெரிய கிரிமினல். அந்தக் கிரிமினல், வாழ்க்கையின் அடியிலிருந்து தனது கதையை ஆரம்பிப்பான். அப்படி ஆரம்பிக்கும் கதை, பெரும்பாலும் வாய்ஸ் ஓவரில்தான் துவங்கும். படம் முழுக்க வாய்ஸ் ஓவர் இருக்கும். படத்தின் பாதிக்குள், படத்தின் பிரதான பாத்திரம், தனது சமூரவிரோத வேலைகளால் மிகப்பெரிய பணக்காரனாக ஆகிவிடும். அதன்பின்னர் அவனைப் போலீஸார் கண்காணிக்க ஆரம்பிப்பார்கள். இறுதியில் அவனை வளைக்கும் போலீஸ், அவனிடம் அவனது நண்பர்களைக் காட்டிக்கொடுக்கச் சொல்வார்கள். அப்படியே அந்தக் கதாபாத்திரமும் செய்யும்.

இதுதான் அவரது Goodfellas, Casino படங்களின் டெம்ப்ளேட். இதே டெம்ப்ளேட்டில்தான் Wolf of Wall Street படமும் அமைந்திருக்கிறது.

‘ஜோர்டான் பெல்ஃபோர்ட்’ (Jordan Belfort) என்ற மனிதனின் கதையை நமக்குக் காட்டுவதன்மூலம், ஸ்கார்ஸேஸி தனது மனதில் இருக்கும் அமெரிக்க சமுதாயத்தைப் பற்றிய கருத்துகளை ஒவ்வொரு ஷாட்டின் மூலமும் நம்முடன் பகிர்ந்துகொள்வதே இந்தப் படம். 24 வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘Goodfellas’ படத்தில் வரும் ஹென்றி ஹில் (Ray Liotta), அதன்பின் ஐந்து வருடங்கள் கழித்து 1995ல் வெளியான ‘Casino’ படத்தின் ஸாம் ’ஏஸ்’ ரோத்ஸ்டீன் (Robert De Niro), பின்னர் 2004ல் வெளிவந்த ‘The Aviator’ படத்தின் ஹோவார்ட் ஹ்யூஸ் (Leonardo DiCaprio) ஆகியவர்களைப் போன்ற ஒரு கதாபாத்திரம் தான் ஜோர்டான் பெல்ஃபோர்ட். அவர்களைப் போலவே பணம் சம்பாதிப்பதையே தனது வாழ்க்கையின் பிரதான லட்சியமாகக் கொண்டு, அதன்படியே வாழ்ந்த மனிதன்.

இந்தப் படத்தின் உரிமையை 2007ல் லியனார்டோ டிகேப்ரியோ, மிகுந்த பிரச்னைகளுக்கிடையே கைப்பற்றினார். அப்போது அவருடன் மோதிய இன்னொரு திமிங்கிலம் – ப்ராட் பிட். உடனடியாக, திரைக்கதை ஆசிரியர் டெரன்ஸ் வின்ட்டர் (Terence Winter), திரைக்கதை எழுத அமர்த்தப்பட்டார். ஜோர்டான் பெல்ஃபோட் எழுதிய அவரது சுயசரிதையை அப்படியே திரைக்கதையாக அவர் எழுதவில்லை. மாறாக, பெல்ஃபோர்ட்டை சந்தித்து, அவருடன் நிறையப் பேசி, அதன்பின்னரே எழுத ஆரம்பித்தார். குறிப்பாக, பெல்ஃபோர்ட் தனது பேச்சால் எவரையும் மயக்கிவிடக்கூடிய திறமை உடையவர். அதை நிஜத்தில் கண்டுகொண்டு எழுதுவதற்காக, சில துணை நடிகர்களை ஒரு அறையில் அமரச்செய்துவிட்டு, அங்கே ஜோர்டான் பெல்ஃபோர்ட்டை வரச்செய்து, இவர்களுக்கு இடையே அவரது வழக்கமான நம்பிக்கையூட்டும் பேச்சைப் பேசச்சொல்லியிருக்கிறார் டெரன்ஸ் வின்ட்டர். அதன்பின் புயல் அடித்து ஓய்ந்தது போல பெல்ஃபோர்ட் அங்கு பேசி முடித்ததும்தான், எப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றிய திரைக்கதை எழுத ஆரம்பித்திருக்கிறோம் என்பதே அவருக்குப் புரிந்திருக்கிறது.

திரைக்கதை எழுதும்போது, அந்தத் திரைக்கதை பெரும்பாலும் குட்ஃபெல்லாஸ் & காஸினோ படங்களை அடியொற்றியே இருப்பதை அவர் உணர்ந்தார். ஆனாலும் முழுத் திரைக்கதையையும் முடித்து, லியனார்டோ டிகேப்ரியோவிடம் ஒப்படைத்துவிட்டார். அப்படித் திரைக்கதை எழுதும்போதே மார்ட்டின் ஸ்கார்ஸேஸியை தொடர்பு கொண்ட டிகேப்ரியோ, அவரை படத்தை இயக்கித் தரும்படி கேட்டுக்கொள்ள, பல நாட்கள் திரைக்கதையில் தனது கருத்துகளையும் இழைத்து அதனை டெரன்ஸ் வின்ட்டருடன் சேர்த்து உருவாக்கினார் ஸ்கார்ஸேஸி. ஆனால் படத்துக்கு ஃபைனான்ஸ் கிடைக்கவில்லை. எனவே, ஸ்கார்ஸேஸியும் டிகேப்ரியோவும் Shutter Island படத்தை உருவாக்க ஆரம்பித்தனர். அதன்பின் ஸ்கார்ஸேஸி Hugo படத்தில் வேலை செய்தார். இறுதியாக, ஒரு சிறிய ஸ்டுடியோவான Red Granite Pictures என்ற நிறுவனம், பட்ஜெட்டை ஒதுக்கியது. அதேசமயம், ஸ்கார்ஸேஸியின் கூற்றுப்படி, ‘படம் ஒரு காவியமாக வெளிவர வேண்டும்; படத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். இறுதியில், புத்தகத்தின் அதே தொனி படத்திலும் வந்தாகவேண்டும்’ என்ற நிபந்தனையையும் அந்நிறுவனம் டிகேப்ரியோவுக்கு இட்டது.

உடனடியாக இதனை ஸ்கார்ஸேஸியிடம் தெரிவித்தார் டிகேப்ரியோ. இதைத்தொடர்ந்து, படத்தை இயக்குவதில் முழுமூச்சாக ஈடுபட்டார் ஸ்கார்ஸேஸி. அதனைப்பற்றி அவர் சொல்கையில், ‘எனது வயதில் (71) திரைப்படம் இயக்குவது என்பது ஒரு பெரிய விஷயம். என் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்றரையிலிருந்து இரண்டு வருடங்களை ஒரு திரைப்படம் எடுத்துக்கொள்கிறது. எனவே, திரைப்படம் எடுக்க உந்திசக்தி ஒன்று அவசியம் தேவை. இந்தப் படத்தில், புத்தகத்தில் இருந்த அந்த Dark Humor, நம்பவே முடியாத காட்சிகள், பெல்ஃபோர்டின் raw energy போன்றவற்றை அப்படியே படத்தில் கொண்டுவரவேண்டிய சவாலை ஏற்றுக்கொண்டேன். அதுதான் இந்தப் படத்தை நான் இயக்கிய காரணம்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஏன் ஸ்கார்ஸேஸியின் சில படங்கள் கிட்டத்தட்ட ஒரே போன்ற கருவைக் கொண்டிருக்கின்றன? குறிப்பாக Goodfellas, Casino & The Wolf of Wall Street?

தனது திரைவாழ்க்கையை ஸ்கார்ஸேஸி தொடங்கிய காலத்தில் அவரிடமிருந்து பல பரிசோதனை முயற்சிகள் வெளிப்பட்டன. அப்படிப்பட்ட சில படங்களான Raging Bull (கறுப்பு வெள்ளை), Taxi Driver, Mean Streets போன்ற படங்கள், அவரைத் தேடி வந்தவை. எனவே அவற்றை அவர் உருவாக்கவேண்டியிருந்தது. ஆனால், அதன்பின்னர், The last Temptation of Christ, The Gangs of Newyork, Departed போன்ற படங்களை, தானே உருவாக்கவேண்டும் என்று நினைத்து அவற்றில் வேலை செய்ததாக அவர் சொல்லியிருக்கிறார். இளமையில் எதைவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், முதுமையில், நம்மிடம் இருக்கும் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும்போது, எதைச் செய்யவேண்டும் என்று நன்றாக யோசித்தே முடிவுசெய்யமுடியும் என்பது அவரது கூற்று. ஆகவே, அவரது சில படங்கள் ஒரே போன்ற கருவைக் கொண்டிருப்பது என்பது, அந்தப் படங்களை உருவாக்கவேண்டும் என்று அவருக்குள் எழுந்த ஆழமான எண்ணத்தினால்தான் என்பதை அவர் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.

The Wolf of Wall Street படத்தைப் பற்றி, ‘என்னுடைய பிற படங்களில் இல்லாத எதனை நான் இதில் காட்டப்போகிறேன்? பிற படங்களைவிட இதை எப்படி நன்றாக எடுக்கப்போகிறேன்? என்று யோசித்தேன். காரணம், மனதுக்குப் பிடிக்காத ஒரு படத்தில் வேலை செய்வதுதான் இருப்பதிலேயே கொடுமையான அனுபவம். ஆகவே, அப்படி எதுவும் இல்லாமல், நானாக இந்தப் படத்தைப் பற்றி நன்றாக யோசித்தே இயக்கினேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

இன்னொன்று – இது திரைக்கதையில் மிக முக்கியமானது என்பதால் அதை கவனித்துவிட்டு விமர்சனத்துக்கு ஓடிவிடலாம். அவரது படங்களான Goodfellas, Casino போன்றவற்றில் படம் முழுவதுமே வாய்ஸ் ஓவர் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். பொதுவான திரைக்கதை விதிகளில், வாய்ஸ் ஓவரை எவ்வளவு கம்மியாக உபயோகிக்கவேண்டுமோ அவ்வளவு கம்மியாகவே அது இருக்கவேண்டும் என்பது முக்கியமான விதி. ஆனால், இவர் என்னவென்றால் அந்தப் படங்களையே முழுதாகவே வாய்ஸ் ஓவரில்தான் எடுத்திருந்தார். அது ஏன் என்று கேட்கப்பட்டதற்கு, வாய்ஸ் ஓவர் என்பது ஒருவேளை கதாபாத்திரத்தின் பல்வேறு குணாதிசயங்களை விளக்க உதவும் என்றால் அதனை தாராளமாக உபயோகிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். எடுத்துக்காட்டாக, The Wolf of Wall Street, வாய்ஸ் ஓவரில்தான் ஆரம்பிக்கிறது. அதுவும் படத்தின் நாயகனான ஜோர்டான் பெல்ஃபோர்டே தன் கதையைச் சொல்வதாகத் தொடங்குகிறது. அதில், அவனது காரைப் பற்றி அவன் சொல்கையில், சிவப்பு ஃபெராரி, வெள்ளையாக மாறிவிடும். அதேபோல் தன்னைப் பற்றி அவன் சொல்லும் பல வசனங்கள், மிகவும் நகைச்சுவையானவை. அதன்மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை படம் ஆரம்பித்த இரண்டே நிமிடங்களில் புரிந்துகொள்ளமுடிந்துவிட்டது. படத்தைப் பார்க்கையில், இந்த வாய்ஸ் ஓவர் காட்சிகள் ஸ்கார்ஸேஸியால் எப்படி எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

படத்தில் பல புத்திசாலித்தனமான வசனங்கள் உண்டு. அவையெல்லாமே வாய்ஸ் ஓவரில்தான் வருகின்றன. குறிப்பாக, Initial Public Offer எனப்படும் IPOவைப் பற்றி பெல்ஃபோர்ட் ஆடியன்ஸுக்குச் சொல்லும் காட்சி ஒன்றில், திரையைப் பார்த்து இதோ கீழ்க்கண்டவாறு பேசுகிறான்.

You know what, you’re probably not
following what I’m saying. The
question is, “was it legal?”
Absolutely not. But we were making
more money that we knew what to do
with.

இதைப் படத்தில் பார்க்கும்போது இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

இவையெல்லாம்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டதற்கான காரணிகள். படத்தின் விமர்சனம் எழுதலாம் என்று ஆரம்பித்ததில் எக்கச்சக்கமான தகவல்கள் வந்துவிட்டன. இனிமேல் விமர்சனத்தைத் தொடர்ந்து எழுதவேண்டும் என்றால், நான் தூங்க விடிகாலை ஆகிவிடும் என்பதால், இத்துடன் பின்னணி விஷயங்களை விட்டுவிட்டு படத்துக்குள் சென்றுவிடுவோம்.

நாளை இரவு, படத்தை (நிஜமாகவே) கவனிப்போம். அதுவரை

தொடரும்…

  Comments

2 Comments

  1. raymond

    appo ithuvum “vimarchanam” illaya………….!

    Reply
  2. saravanan

    Rajesh amazing ! your knowledge and understanding of the legendary film makers and the care u take to explain to us all the background details of the films you review. that’s why I visit your website
    wow it may take some time for me to see this movie. since it is not exactly falling in my kind of category (thor, ironman, LOTR, Hobbit damal dumeel dishum movies) but I eagerly wait for your review

    Reply

Join the conversation