Thor: The Dark World (2013) : 3D – English

by Karundhel Rajesh November 9, 2013   English films

முன்குறிப்புகள்

1. நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன.

2. Thor படத்தின் முதல் பாகத்தின் விமர்சனத்தை இங்கே படிக்கலாம். இதிலேயே தோர் பற்றிய சரித்திர – ஆன்மீக உண்மைகளையும் பற்றி தெரிந்துகொள்ளலாம்.[divider]

முதல் பாகத்தில் அஸ்கார்ட் கிரகத்தில் லோகி செய்த அட்டூழியங்களையும், அதன்பின் அவெஞ்சர்ஸ் படத்தில் நடந்த சம்பவங்களையும் நாம் பார்த்து பல மாதங்கள் ஆயிற்று. அஸ்கார்ட் கிரகத்தை பிற உலகங்களோடு இணைக்கும் பைஃப்ராஸ்ட் (Bifrost) பாலத்தை லோகி உடைத்துவிட்டதால், அஸ்கார்டிலிருந்து தோரால் பூமிக்கு வரமுடியாமல் போகிறது. அதை சரி செய்ததும், ஒன்பது உலகங்கள் என்று அஸ்கார்டை சேர்ந்தவர்களால் அழைக்கப்படும் உலகங்கள் அத்தனையையும் தீய சக்திகளிடமிருந்து காக்கும் வேலையை இரண்டு வருடங்களாக தோர் செய்கிறான் (அதில் ஒன்றான மிட்கார்ட் என்ற பூமியை அவெஞ்சர்ஸ் படத்தில் எல்லாரும் சேர்ந்து காத்ததை கண்டோம்). இதனால் பூமியில் இருக்கும் தோரின் காதலி ஜேன் ஃபாஸ்டரை அவனால் பார்க்க முடியாமல் போகிறது. அவெஞ்சர்ஸ் படத்தின் சாகஸங்களை தோர் நிகழ்த்தும்போது கூட அவளை அவனால் பார்க்க முடிவதில்லை.

இத்தகைய ஒரு கதைக்களத்தோடு இந்த இரண்டாம் பாகம் தொடங்குகிறது.

அப்படியே ஒரு சிறிய முன்கதை. Dark Elves என்ற இனம், ஈதர் (Aether) என்ற சக்திவாய்ந்த ஆயுதம் ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்பது உலகங்களையும் தாக்கி வெல்லப்பார்க்கிறது. இந்த ஈதர் என்பது ஆயுதம் என்று நான் சொன்னது சரியல்ல. அது ஒரு சக்தி. ஆனால், அஸ்கார்டில் இருந்து, தோரின் தாத்தா போர் (Bor) பாய்ந்து வந்து, இந்த இருண்ட தேவதைகளை தடுக்கிறார். அந்த நேரத்தில், அவர்களின் தலைவன் மாலெகித் (Malekith) என்பவன் அங்கிருந்து தப்பித்து, எங்கோ அண்டவெளியில் தனது சில சகாக்களோடு சென்று ஒளிந்துகொள்கிறான். அப்படியே அந்த விண்கலம் பிறரது பார்வையில் இருந்து மறைந்துவிடுகிறது. அந்த ஈதர் என்ற சக்தி, போரினால் எங்கோ ஒளித்து வைக்கப்படுகிறது.

இப்போது என்ன நடக்கும்? அதே மாலெகித் திரும்பி வருகிறான்.

காரணம், ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு ஒருமுறையும், இந்த ஒன்பது உலகங்களும் ஒன்றாக ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும். அப்போது என்ன நடக்கும் என்றால், இந்த உலகங்களில் இருக்கும் ஈர்ப்பு விசையில் குழப்பங்கள் ஏற்படும். ஒவ்வொரு உலகத்திலும், மற்ற உலகங்களுக்குச் செல்லக்கூடிய பாதைகள் உருவாகும். ஒட்டுமொத்தத்தில், பெரும் குழப்பம் நேரும். இந்தக் காலகட்டம் நெருங்கி விட்டது. இதனால் பூமியில் இங்லாண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புவியூர்ப்பு விசையால் குழப்பங்கள் நிகழ்கின்றன. அதை ஆராய்ச்சி செய்ய, ஜேன் ஃபாஸ்டர் செல்கிறாள். அங்கே என்ன நடக்கிறது என்றால், லாரியை ஒரு சிறுவனால் சுலபமாக தூக்கிவிடமுடிகிறது. மேலிருந்து கீழே போடும் பொருட்கள் ஒரு இடம் வந்தவுடன் மறைந்துவிடுகின்றன. சில பொருட்கள் விழும்போதே மறைந்து, மறுபடி மேலிருந்து தானாகவே தோன்றி விழுகின்றன. இது ஒரு infinite loop போல நடக்கிறது.

இது, நாம் மேலே பார்த்த ஒன்பது உலக இணைப்பு பிரச்னை என்பது தெரியாத ஜேன், அந்த இடத்தில் டக்கென்று மறைந்துவிடுகிறாள். ஈதர் ஒளித்துவைக்கப்பட்ட அந்த வேறொரு உலகத்துக்கு அவள் சென்றுவிடுகிறாள் என்பது தெரிகிறது. ஈதருக்கு மிக அருகே செலும் ஜேனின் உடலில் அது கலந்துவிடுகிறது. மறுபடியும் பூமிக்கே வந்துவிடுகிறாள் ஜேன்.

ஜேனைப் பார்ப்பதற்காக தோர் வருகிறான். அவளது உடலில் மாறுதல்களை கவனித்து, தனது உலகமான அஸ்கார்டுக்கு அவளை அழைத்துச்செல்கிறான். அங்கே அவள் உடலில் இருக்கும் ஈதரைப் பற்றி தோரின் தந்தை ஓடின் (ஆண்ட்டனி ஹாப்கின்ஸ்) அறிகிறார். இருவருக்கும் பழைய ஃப்ளாஷ்பேக்கை சொல்கிறார்.

அந்த நேரத்தில், ஆல்ரெடி தனது தூக்கத்தில் இருந்து விழிக்கிறான் வில்லன் மாலெகித். அவனுக்கு உலகங்கள் ஒன்றுசேரப்போகும் காலம் திரும்பி வந்திருப்பது தெரிகிறது. அந்த நேரத்தில் தன் கையில் இருக்கவேண்டிய அந்த ஈதர் என்ற சக்தியை தேடிக் கிளம்புகிறான். அது அஸ்கார்டில்தான் இருக்கிறது என்பது அவனுக்குப் புரிகிறது. அஸ்கார்டின் அரண்மனையை நோக்கிப் படையெடுக்கிறான்.

இதன்பின் என்ன நடந்தது என்பதே Thor: The Dark World.

உலகை அழிக்க தயாராக இருக்கும் வில்லன் – அவனது கையில் இருக்கும் சக்தி என்ற இந்தக் கதையை மட்டும் இதுவரை எத்தனை படங்களில் பார்த்திருப்போம்?

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் போல இதிலும் ஆரம்பம் ஃப்ளாஷ்பேக்கில் தொடங்குகிறது. அதே கதைதான். அதில் ஸாரோன். இதில் மாலெகித். அதில் மோதிரம். இதில் ஈதர். அதில் எல்ஃப்கள். இதில் அஸ்கார்டை சேர்ந்த வீரர்கள். அதில் மோதிரம் ஆற்றில் விழுகிறது. இதில் ஈதர் ஒளித்து வைக்கப்படுகிறது. அதில் ஸாரோன் அழிந்ததாக நினைக்கிறார்கள். இதில் மாலெகித் ஒளிந்துகொள்கிறான். அதில் மோதிரம் பில்போவிடம் கிடைக்கிறது. இதில் ஈதர், ஜேன் ஃபாஸ்டரின் உடலில் நுழைந்துவிடுகிறது. அதில் அரகார்ன். இதில் தோர்.

ஆனாலும் இந்தப் படம் எனக்குப் பிடித்தது. காரணம், படத்தில் ஆங்காங்கே இருக்கும் நகைச்சுவை நிமிடங்கள். கூடவே, நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள சண்டைக்காட்சிகள். இன்னொரு காரணம், இது ஒரு மார்வெல் படம் பாஸ். இதில் வேறு என்னத்தை எதிர்பார்க்கமுடியும்?

படத்தின் ஆரம்பத்தில் தோர் அறிமுகமாகும் காட்சியில் இருந்து, படத்தின் இறுதிவரை நகைச்சுவை ஆங்காங்கே தூவப்பட்டிருக்கிறது. தோர், தனது சுத்தியை துணிகளுக்கு இடையே மாட்டுவது, ரயிலில் பயணம் செய்வது, ஒரே அடியில் எதிரியை வீழ்த்துவது போன்ற சில டிபிகல் அவெஞ்சர்ஸ் காட்சிகள் உள்ளன. கூடவே, பிற கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களில் கூட நகைச்சுவை இருக்கிறது.

இந்தப் படத்தின் இன்னொரு ப்ளஸ், தோரின் சகோதரன் லோகி (அவெஞ்சர்ஸ் & தோர் முதல் பாகத்தின் வில்லன்). இந்தப் படத்தில், வழக்கமாக தமிழ்ப்படங்களில் சந்திரசேகர் செய்யும் வேலையை செய்திருக்கிறார். லோகியும் தோரும் பேசிக்கொள்ளும் காட்சிகளில் வசனம் நன்றாக இருந்தது (இருந்தாலும் லோகிக்கும் படத்தில் ஒரு செம்ம ட்விஸ்ட் உண்டு).

எப்படியும் க்ளைமேக்ஸ் பூமியில்தான் நடக்கப்போகிறது என்பது ஏற்கெனவே தெரிந்துவிட்டது. க்ளைமேக்ஸ் சண்டையில் ஒரு சில ரசிக்கத்தகுந்த விஷயங்கள் இருக்கின்றன. ஒன்பது உலகங்களும் ஒரே கோட்டில் சந்தித்தால் என்னென்ன ஆகும் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள். அவையெல்லாமே அதேபோல் ஆகின்றன. அதுதான் க்ளைமேக்ஸின் ஜாலியான அம்சம்.

படத்தின் அறிமுகத்துக்குப் பின்னர் வரும் சண்டை சீக்வென்ஸ் – அஸ்கார்டின் மேல் மாலெகித்தின் படையெடுப்பு – விறுவிறுப்பாக இருந்தது. அதன்பின் நடக்கும் சம்பவங்கள், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவையே.

தோர் படத்தின் முதல் பாகத்தில் இரண்டாம் பாதி மிகவும் இழுவையாக இருக்கும். ஆனால் இதில் அப்படி இல்லை. ஒட்டுமொத்தமாக பயங்கர சுவாரஸ்யமான படம் என்று சொல்லமுடியாவிட்டாலும், படம் முழுக்க ஒரே போன்ற வேகம் இருக்கிறது. எதுவும் இதில் இழுவையாக இல்லை.

படத்தின் பிற கதாபாத்திரங்கள்: முதல் படத்தில் வந்த ஹெய்ம்டால் (Heimdall) – பாலத்தின் காவல்காரன் – இதிலும் வருகிறான். பஸிஃபிக் ரிம் படத்தின் இட்ரிஸ் ஆல்பா. அவருக்கு முதல் பாகத்தைப்போலவே அளவான ரோல். க்ளைமேக்ஸின் சண்டையில் அவரது கிரீடத்தின் நுனி கூட தெரிவதில்லை. அவரை மறந்துவிட்டார்கள் போல இருக்கிறது. அடுத்து, மாமன்னர் ஓடினாக ஆண்ட்டனி ஹாப்கின்ஸ். அதே ரோல். அதே நடிப்பு. தோரின் காதலி ஜேன் ஃபாஸ்டராக, நாட்லீ போர்ட்மன் (Natalie Portman). இவருக்கு இந்தப்படத்தில் சிறிதளவு முக்கியத்துவம் ஜாஸ்தி. ஜேனின் தந்தையாக விஞ்ஞானி எரிக் ஸெல்விக் (அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் விஞ்ஞானி). கூடவே, ஜேனின் அஸிஸ்டெண்ட்களாக வரும் ஜோடி.

ஒட்டுமொத்தமாக, இந்தப்படம் எப்படி?

அவசியம் இதை தோர் முதல் பாகத்தை நம்பியதை விட ஒரு துளி அதிகமாக நம்பலாம். இது ஒரு மார்வெல் அவெஞ்சர்ஸ் படம் என்பதை நினைவில் கொண்டு பார்த்தால், படம் உங்களுக்குப் பிடிக்கும்.

பி.குக்கள்

1. படத்தில் அவெஞ்சர்களை உருவாக்கிய காமிக்ஸ் பிதாமகர் ஸ்டான் லீயின் இரண்டு நொடி cameo அவசியம் உண்டு. அவரை கண்டுபிடியுங்கள் ?

2. படத்தின் டைட்டில் இறுதி முடிந்தபின் வரும் post – credit ஸீன்கள், இந்த முறை இரண்டு. பிரதான டைட்டில்கள் முடிந்ததும் ஒன்று வருகிறது. எல்லா டைட்டில்களும் முடிந்தபின்னர் இன்னொன்று வருகிறது. இந்த இரண்டில், எனக்கு கட்டக்கடைசி ஸீன் மிகவும் பிடித்தது. காரணம் அதில் தெரிந்துகொள்வீர்கள். முதல் போஸ்ட் – க்ரெடிட் ஸீனில் நமக்கு அறிமுகமாகும் நபர் – The Collector. மார்வெல் காமிக்ஸ் உலகில் கொஞ்சம் பரிச்சயமான நபர். இவரைப் பற்றி கூகிள் செய்து பாருங்கள். முதல் க்ரெடிட் ஸீனை தியேட்டரில் ஒரு 20 பேர் காத்திருந்து பார்த்தனர். ஆனால் கடைசி க்ரெடிட் ஸீனை பார்த்தது மொத்தம் நான்கே பேர். அதில் நானும் என் மனைவியும் இருவர். நான் மனைவியிடம் ஆல்ரெடி இதைப்பற்றி சொல்லியிருந்ததால், நாங்கள் அமர்ந்திருந்ததைப் பார்த்து இன்னும் இரண்டு பேர் அமர்ந்துவிட்டனர். ஆகவே, என்னால் அவர்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா ஸீன் லாபம். முடிந்ததும், என்னிடம் வந்து, ‘நீங்கள் அமர்ந்திருந்ததால்தான் நாங்களும் அமர்ந்தோம். உங்களுக்கு எப்படி இரண்டாவது போஸ்ட் க்ரெடிட் ஸீன் வரும் என்று தெரியும்?’ என்று அவர்களில் ஒருவர் கேட்டார். ’எந்த அவெஞ்சர் படம் வந்தாலும் முதலில் போஸ்ட் க்ரெடிட் ஸீனைப் பற்றி நெட்டில் ரிஸர்ச் செய்துவிட்டுத்தான் தியேட்டருக்கு வருவேன்’ என்று சொன்னேன். சிம்பிளாக ஒரு ரிஸர்ச் செய்யாததால் பலருக்கும் இந்த ஸீன்கள் தெரிவதில்லை. அவற்றையும் சேர்த்து பார்ப்பவனே அவெஞ்சர் விசிறி ?

3. படத்தில், இன்னொரு அவெஞ்சர் கேரக்டரும் வருகிறது. அது யார்? சஸ்பென்ஸ் ?

  Comments

18 Comments

  1. ஒருமாறி நிலைல போனபவே நல்லா தான் இருந்துச்சி இன்னொருபா நல்ல மாறி போய் பார்த்திடுவோம் 🙂

    Reply
    • Rajesh Da Scorp

      ஆஹா… இதுவேறயா 🙂

      Reply
  2. படத்துக்கு நான் திங்கட்கிழமை போறேன்னா..!! அப்போதானே டிக்கெட் ரேட் கம்மியா இருக்கும்.. ஹிஹி.!!
    அதுசரி அப்போ ப்யூனி காட்-க்கு இந்தப்படத்துல அவ்ளோவா முக்கியத்துவம் இல்லியா ?? அச்சச்சோ….

    Reply
    • Rajesh Da Scorp

      அவனுக்கு இருக்கு முக்கியத்துவம். பார்த்துட்டு சொல்லுங்க.. ஆனா ஓவரால் அந்தாள் பண்ணுறது சந்திரசேகர் ரோல்தான் 🙂

      Reply
  3. ஒரு காலத்தில் ஈத்தர் (Aether / Ether) பிரபஞ்சம் முழுக்க பரவி இருப்பதாக இருப்பதாக கருதப்பட்டது… ஐன்ஸ்டீனின் Special Theory of Relativity அதை அடித்து நொறுக்கி விட்டது… இந்த படத்தில் it is back!!! 🙂

    Reply
    • Rajesh Da Scorp

      ஆமா.. ஆனா இந்த ஈதர் பயங்கர ஃபாண்டஸி … எதோ ஒரு பேரு வெக்கணும்னு நினைச்சி அதை செலக்ட் பண்ணிட்டாங்க போல இருக்கு

      Reply
  4. Vivek Kanna

    Not yet released in Coimbatore boss..

    Reply
    • Rajesh Da Scorp

      That’s very bad boss

      Reply
      • Vivek Kanna

        இந்த வாரம் படம் பார்த்தோம், உங்க பதிவு முன்னாடியே படித்தால் செகண்ட் போஸ்ட் கிரெடிட் ஸீனை வெயிட் பன்னி பார்த்தோம். 3டி கிளாஸ் collect பன்றவர் சொன்னார் நேத்து இதை 4 பேரு பார்த்தாங்க இன்னைக்கு நீங்க நாலு பேரு நு சொன்னாரு… நன்றி பாஸ்

        Reply
  5. அட பாவமே நான் முதலாவது போஸ்ட் கிறடிற் சீன் மட்டுமே பார்த்தேன்… 🙁

    Reply
    • Rajesh Da Scorp

      அங்கதான் மிஜ்டீக் பண்ணிட்டீங்க 🙂

      Reply
  6. Saravanan

    Once again Rajesh a nice post !
    I again visited your others posts on the Avengers Series .
    Why don’t you write a post no no – Series on How I met your mother …. and about ur favourite Colbie ?

    Have you seen the series , Person of interest ?

    Reply
  7. Senthil

    I saw the movie after reading your review. Really I enjoyed the movie. Thanks for the info on the Post Credit Scenes. We saw till the end of all the credits.

    Reply
  8. postea

    /*பைஃப்ராஸ்ட் (Bifrost) பாலத்தை லோகி உடைத்துவிட்டதால்*/

    Boss, Bifrost பாலத்தை உடைத்தது தோர் தானே .

    Reply
    • கரெக்ட். தோர் தான் அதை உடைச்சிது. லோகியுடனான சன்டையைப் பத்தி எழுதப் பார்த்து இந்தத் தகவலை சரியா எழுதாம விட்டுட்டேன். போஸ்ட்ல இதை ‘ பைஃப்ராஸ்ட் பாலம், இறுதியில் உடைக்கப்பட்டுவிட்டதால்’னு நைட்டு மாத்திடுறேன். நன்றி பாஸ்

      Reply
  9. Senthilkumar

    Stan lee cameo in the shoe scene.( With Erik Selvig )

    Reply
  10. Gokul

    If you like Marvel and avengers you should not miss
    Agents of shield. It starts after the events of the battle of NY
    And there is even an episode after Thor 2.
    And guess who the protagonist is???

    Reply
    • I am waiting for that movie boss. I saw both the post-credit sequences in Thor 2, as I have mentioned in my post.

      Reply

Join the conversation