Tum Tak . . . . .

by Karundhel Rajesh August 15, 2013   Hindi Reviews

பனாரஸ். இந்த நகரத்தைப் பற்றி நினைத்தாலே, ஆங்காங்கே நடக்கும் சாதுக்கள், வண்ணமயமான கொடிகள், கடைகள், பசுக்கள் போன்ற பல நினைவுகள் வருவதை தடுக்க முடியாது. பனாரஸின் மற்றொரு பெருமை – உஸ்தாத் பிஸ்மில்லா கான். பனாரஸ் என்றாலே கங்கைக்கரையில் அமர்ந்துகொண்டு நதியைப் பார்த்தபடியே இசைக்கும் அவரது ஷெனாயின் ஓசை அவசியம் நமது மனதில் ஒலிக்கும்.

அத்தகைய பனாரஸில் ஒரு பூஜாரியின் மகன், ஒரு முஸ்லிம் பெண்ணை விரும்புகிறான். அவனது பள்ளிப் பருவத்தில் அவளை பின்தொடர்ந்து செல்கிறான். அவள் செய்வதையெல்லாம் பார்க்கிறான். அவனது மனதில், அவன் வாழும் பனாரஸின் இசை மூலமாக இந்தக் காதல் வளர்கிறது.

Raanjhanaa படத்தின் பாடல்களில் – குறிப்பாக ‘தும் தக்’ பாடலில் – ஷெனாய் பெரும்பங்கு வகிக்கிறது. பாடல்களைக் கேட்கும்போதே பிஸ்மில்லா கானின் நினைவும் வந்தது. தும் தக் பாடலை எண்ணற்ற முறைகள் கேட்டாயிற்று. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பாடலில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் மிகவும் நுணுக்கமான – சிறிய – இசைக்கருவிகளின் இனிமை காதுகளில் அறைகிறது. இந்தப் பாடல் அலுப்பதே இல்லை.

கடவுளின் மீதான அன்பு, காதலாக மாறும்போது இசை முழுமை அடைகிறது என்று படித்திருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால், பக்திக்கு பதில் காதலை தேர்வுசெய்துகொண்டேன். இருந்தாலும், ரஹ்மானின் சுஃபி பாடல்களை கேட்கும்போதெல்லாம், அந்தப் பாடல்களில் இருக்கும் அற்புதமான இனிமையும் பக்தியும் அன்பும் ஏக்கமும் மனத்தைக் கரைக்கும். அந்தப் பாடல்கள் இசையமைக்கப்பட்ட சூழல் புரியும்.

அப்படி ராஞ்ஜனாவில் ஒரு பாடல் இருக்கிறது. வழக்கமான ரஹ்மான் சுஃபி பாடலாக இல்லாமல், இந்த முறை வடஇந்திய பாணியில் அமைந்த ஒரு பஜன் போன்ற பாடல். பாடல் திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே வருகிறது. பள்ளியில் படிக்கும் கதாநாயகன், கதாநாயகியை பனாரஸில் பின்தொடரும்போது பின்னணியில் ஒலிக்கிறது.

பாடலை எழுதியிருப்பவர் இர்ஷாத் கமில். சமீபகாலத்தில் ஹிந்தியில் பிரபலமாகிக்கொண்டுவரும் ஒரு அற்புதமான கவிஞர்.

‘தும் தக்’ என்ற வரிகளுக்கு, ‘உன் வரை’ என்று பொருள் என்பது எல்லாருக்கும் தெரியும். உர்துவும் ஹிந்தியும் கலக்கும் பாடல்களில், உர்து வார்த்தைகளே அந்தப் பாடல்களுக்கு ஒரு ஏற்றம் கொடுக்கும். உர்துவில், வெறுமனே கேட்டாலே இனிமையை அளிக்கும் பல வார்த்தைகள் இருக்கின்றன. ‘அர்ஸியா’ (Arziyan), ‘மரம்மத்’ (Marammath) போன்ற சில வார்த்தைகள் உடனேயே நினைவுக்கு வருகின்றன. இதுபோன்ற வார்த்தைகள், பாடலின் இசையோடு கலக்கும்போது, பின்னணியில் ஒலிக்கும் ஒருசில ஒலிகளால் அந்த வார்த்தைகள் நமது மனதில் ஆழமாக பதியும். அப்படிப்பட்ட பாடல் இது.

இந்தப் பாடலை பலமுறைகள் கேட்டபின், பாடலின் இனிமைக்குக் காரணமாக சில விஷயங்கள் எனக்குத் தோன்றின. ஒன்று – பாடலில் பெரும்பங்கு வகிக்கும் ஷெனாய். தமிழ்நாட்டில் ஷெனாய் என்றாலே யாராவது தலைவர்கள் மறையும்போது தூர்தர்ஷனில் நாள்முழுக்க ஷெனாயின் சோக இசை கேட்டே வளர்ந்த என்னைப்போன்றவர்கள் கொஞ்சம் நெளிவது வழக்கம். ஆனால், பிஸ்மில்லா கானை கேட்டதும் அந்த எண்ணம் மாறியது. அதேபோல் ஹிந்தி பாடல்களில் அவ்வப்போது ஒலிக்கும் ஷெனாய் இசையைக் கேட்கையில், அது எத்தனை அழகான ஒரு கருவி என்பதும் புரிந்தது. இந்தப் பாடலில் ஷெனாய், கேட்டதும் உள்ளத்தை திருகுவதுபோன்ற இனிமையுடன் இருக்கிறது.

இரண்டு – ஷெனாயை அற்புதமாக compliment செய்யும் டோலக். டோலக் மட்டுமல்லாது, Pakhavaj என்று ஒரு கருவியும் இதில் வருவது, பாடலைக் கேட்கும்போது தெரிகிறது. பகாவஜ் என்பது ஓரளவு மிருதங்கத்தைப் போன்ற கருவி. ஆனால், ‘தடால் தடால்’ என்ற ஒலியை, வட இந்திய பஜன் பாடல்களில் எழுப்ப இது உபயோகப்படும்.

டோலக், பகாவஜ் ஆகிய கருவிகளுடன், செண்டை மேளமும் இதில் வருகிறது. இத்தனை percussion கருவிகள் இருப்பதால், பாடல் முழுதுமே நாம் பனாரஸின் தெருக்களில் உலவுவது போன்ற பிரமை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

மூன்று – ஜாவேத் அலியின் கூர்மையான குரல். அவரது பாடல்களை கேட்டவர்களுக்கு, மிக அனாயாசமாக பல இடங்களிலும் அவரது குரலின் ஏற்ற இறக்கங்கள் புகுந்து வருவது தெரியும். இவரைப் பற்றி சிறிது காலம் முன்னர் தேடியபோது, பிரபல கஸல் பாடகர் குலாம் அலியின் சிஷ்யர் இவர் என்பது தெரியவந்தது. ரஹ்மானின் இசையில் அற்புதமான சில பாடல்களை இவர் பாடியிருக்கிறார். குறிப்பாக – ‘ஜஷ்ன் எ பஹாரா’ (ஜோதா அக்ஹ்பர்), ‘அர்ஸியா’ (தில்லி – 6), ‘குன் ஃபாயா குன்’ (ராக்ஸ்டார்) ஆகிய பாடல்களை சொல்லலாம்.

ஜாவேத் அலியும் ரஹ்மானும் இணையும்போது எப்போதுமே ரஹ்மான் இன்னொரு பாடகரையும் உபயோகப்படுத்திக்கொள்வார். அவர் – கைலாஷ் கெர். கைலாஷ் கெர் மற்றும் ஜாவேத் அலி ஆகிய இரண்டு குரல்களும் ஒருமித்து ஒலிக்கையில் வெளிப்படும் இசை கட்டாயம் மனதை உருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு உதாரணமாக, நான் மேலே குறிப்பிட்ட பாடல்களை கேட்டுப்பார்க்கலாம்.

அதேபோன்று இந்தப் பாடலிலும் இரண்டாவது குரல் ஒன்று ஜாவேத் அலியின் குரலோடு இணைகிறது. கேட்பதற்கு கிட்டத்தட்ட கைலாஷ் கெர் குரல் போலவே இருந்தாலும், அது கீர்த்தி சகாதியா என்பவரின் குரல். இவருமே ஒரு பிரபல பாடகர்தான். பாடலின் depth அதிகரிக்க இதை ரஹ்மான் செய்கிறார் என்று நினைக்கிறேன். அவரது பல பாடல்களில் இப்படி இருவரோ மூவரோ சேர்ந்து பாடுவது இருக்கும்.

பாடல் இடம்பெறும் சிச்சுவேஷன் என்ன? தனது அன்றாட வேலைகளில் ஈடுபடும் கதாநாயகன், கதாநாயகியைப் பின்தொடர்ந்து செல்கிறான். அப்போது அவள் இவனருகில் வருவதாக கற்பனை செய்துகொள்கிறான். அவளைப் பார்க்கையில், அவனது ஒவ்வொரு செயலும், எண்ணமும் அவளை நோக்கியே இருப்பதாக புரிந்துகொண்டு பாடுகிறான். நமக்குப் பிடித்தவர்களைப் பற்றிய சில எண்ணங்கள் நமது மனதில் இருக்கும். வெளிப்படையாக அதை அவர்களிடம் நம் சொல்லாவிட்டாலும், நமது செயல்களின் வழியாக அவை அவர்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட விஷயங்களை கதாநாயகன், அவனுக்குப் பிடித்த பெண்ணிடம் சொல்கிறான்.

என்ன மாதிரியான விஷயங்கள்? இதோ இந்த மொழிபெயர்ப்பில் சென்று படித்துக்கொள்ளலாம்.

இந்தப் பாடலில், எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் என்னவென்றால், வட பஜன்களில் ‘படகு’, ‘ஆறு’ ஆகியவை அடிக்கடி இடம்பெறும். ’பார் உதாரோ நையா மோரி’ என்ற வரியின் மூலம். இதற்கு அர்த்தம் – ’படகை கரைசேர்த்து அருள்வாய்’ என்பது. இறைவனிடம் அவனது கருணையை நம்மீது பாய்ச்சச்சொல்லும் வரி இது. இதே வரியை பல பஜன்களில் கேட்டிருக்கிறேன். மீராவின் பாடல்களிலும் இந்த வரி வரும். இதே வரி, சற்றே வேறு மாதிரி ‘தும் தக்’ பாடலில் வருகிறது.

வீடியோவில் 3:08வது நிமிடம்.

 

[quote]

’நைனோ கி தாங்க் லேஜா…. நைனோ கி நையா..
பட்வார் தூ ஹை மேரி..தூ கேவையா…
ஜானா ஹை பார் தேரே…தூ ஹி ப(ன்)வர் ஹை..
பஹூஞ்சேகி பார் கைஸே…நாஸுக் ஸி நையா…’

(உன் கண்களால் எனது முகத்தைப்பார்..)
எனது கண்களின் ஒளியையும், எனது கண்களாலான படகுகளையும் எடுத்துச்செல்..
நீதானே எனது துடுப்பு…. நீயேதானே எனது படகோட்டி…
நான் கடந்தே ஆகவேண்டிய புயலும் நீயே..
இந்த மெல்லிய படகு, இதையெல்லாம் தாண்டி எப்படி கரைசேரப்போகிறது?

[/quote]
இந்த வரிகள் இடம்பெறும் இடம்தான் பாடலின் சிறந்த இடமாகவும் இருக்கிறது.

காதலியை நோக்கி ஒருவன் பாடும் பாடலாகவும், அதேசமயத்தில் அவளையே கடவுளாகவும் ஆக்கி அவளிடம் இறைஞ்சுவதாகவும் இந்தப் பாடலை அட்டகாசமாக எழுதியிருக்கிறார் இர்ஷாத் கமில். இந்த வரிகள் வருகையில், ஷெனாயும், மேளமும், தப்லாவும் பகாவஜ்ஜும் ஒரே சீராக இணைந்து, நிஜமாகவே ஒரு பஜன் கேட்கும் மனப்பான்மையை உருவாக்குகின்றன.

தற்போது எனக்கு மிகப்பிடித்த பாடல் இதுதான். ராஞ்ஜனாவின் இசை ரஹ்மான் சமீபகாலங்களில் கொடுத்திருக்கும் மிக வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை.

பி.கு –  Aise na dekho பாடலை கேட்கத் தவறாதீர்கள். அதேபோல் Piya Milenge & Nazar Laaye பாடல்களையும்.

  Comments

1 Comment;

  1. வாயாள முடியுமா என்று புருவத்தை உயர்த்தியாவரே சென்றபோது ஆளு அதகளம் செய்திருந்தார்(இந்த நேரத்துலயா ஒஸ்தி சிம்பு பேசுன திருநெல்வேலி தமிழ் காதுக்குள்ள ரிங்குனு சுத்தணும்). சில பிசிறு தட்டல்கள் இருந்தாலும் அபவ் ஆவரேஜ் ஹிந்தி வசன உச்சரிப்பில் ஹமாரே ஹீரோ ராக்ஸ். பள்ளி மாணவனாக இன்னும் எத்தனை ஆண்டுகள் நடித்தாலும் தம்பி கலக்குவாப்ல. யஹா பீ அச்சி தரா ஆக்ட் கர்லியா சாலே. செல்வராகவன் படத்தில் வருவது போல இங்கும் தனுஷின் காதலுக்கு எதிரியாக ஒரு மைதா மாவு செகண்ட் ஹீரோ(அப்பே தியோல்). சிலிண்டரை எடுத்து வைக்க அப்பே உதவிய பின்பு வெறுப்பில் அதை இறக்கி மறுபடி ஏற்றும்போதும், ‘you forget me’ என கடுகடுக்கும் சோனாவிடம் அதை ரிப்பீட் செய்து கொஞ்சலுடன் சொல்லும்போதும் அப்ளாசை அள்ளுகிறார் தனுஷ்.

    Reply

Join the conversation