Viswaroopam (2013) – Tamil

by Karundhel Rajesh January 30, 2013   Tamil cinema

பாகம் ஒன்று – திரைப்பட விமர்சனம்

தமிழ்ப்படங்களை ஏதோ கொஞ்சம் பார்த்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில், எனது அவதானிப்பு ஒன்றை சென்ற வருடம் ஒரு கட்டுரையாக எழுதியிருந்தேன். கதாநாயகன் அறிமுகமாகும் பாடல் என்ற ஒரு விஷயம் தமிழ்ப்படங்களில் இன்றியமையாததாக இருக்கிறது அல்லவா? படத்துவக்கத்தில் கதாநாயகனை காலில் இருந்து தலைவரை ஸ்லோமோஷனில் காமெரா காண்பிக்கும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல். இந்த கேமரா பாணியையே ஒரு டெம்ப்ளேட்டாக தனது படங்களில் வைத்துக்கொண்டவர் ரஜினி. அந்த நேரத்தில் எதாவது ஒரு செய்கை மூலம் ஆடியன்ஸுக்கு ஹாய் சொல்வதும் அவரது பாணி. அந்த ஹாய், சல்யூட் அடிக்கும் சைகையாகவோ, பூசணிக்காயை தலையால் உடைக்கும் செய்கையாகவோ, கண்களை க்ளோஸப்பில் காண்பிக்கும் காமெரா ஷாட்டாகவோ, லாங் ஷாட்டில் இருந்து சர்ரென்று அணுகும் கேமரா ஷாட்டில், நின்றவாக்கில் தவம் புரியும் செய்கையோ அல்லது ஒரு நடன ஸ்டெப்பை துவக்கும் நிலையில் இருப்பதாகவோ கூட இருக்கலாம். ரஜினிக்கு இந்த அறிமுகம் நன்றாகவே இருக்கும். சொல்லவந்ததன் சுருக்கம் என்னவெனில், ரஜினி இதை உபயோகிக்க ஆரம்பித்தபின்னர், பல கதாநாயகர்களின் படங்களில் இந்த ஓபனிங் ஸாங் அறிமுகம், எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் கவுண்டமணி போல இன்றியமையாததாகிவிட்டது.

ரஜினிக்கு எதிர்வெட்டாக விளங்கும் கமல் படங்களில் இந்த ஓபனிங் ஸாங் இண்ட்ரோ இருக்காது. ஏதோ ஒரு ஷாட்டில் ஜீப்பில் சென்றுகொண்டிருக்கும் கூலிங்க்ளாஸ் அணிந்த கமலாகவோ, ரயிலில் இருந்து இறங்கும் தாடிக்கார ஃபாரின் ரிட்டர்ன் ஷாட்டாகவோ, அகழ்வாராய்ச்சி செய்யும் சிவப்பு படர்ந்த ஷாட்டாகவோ, அல்லது இதுபோன்ற ஷாட்களாகவோதான் கமலின் அறிமுகம் பெரும்பாலும் இருக்கும். எப்போதாவது விக்ரம் டைட்டில் பாடல், வேட்டையாடு விளையாடு அதிரடி அறிமுகம் ஆகியன வருபவை உண்டு.

ஆனால், கதாநாயகனை அறிமுகப்படுத்தும் விஷயத்தில் கமலை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதே என் அவதானிப்பு. சற்று கவனித்து கமல் படங்களைப் பார்த்தால், எந்தக் காட்சியில் கதாநாயகன் அறிமுகத்தை வைத்தால் அது ஆடியன்ஸைக் கவரும் என்பதை மிக நன்றாக அறிந்துவைத்தவராகவே கமல் இருக்கிறார். பெரும்பாலும் அந்த அறிமுகங்களில் பின்னணியில் ஒரு பாடலோ, துடிக்கவைக்கும் இசையோ அல்லது இரண்டுமேயோ கட்டாயம் கமலின் படங்களிலும் இருக்கும். ஆனால், ரஜினிக்கும் கமலுக்கும் வித்தியாசம் என்னவென்றால், ரஜினி படங்களில் இந்த அறிமுகம் பட ஆரம்பத்தில் மட்டுமே இருக்கும். பாடலில் ரஜினியைப் பற்றிய வரிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் படத்தின் ஆரம்பத்தில் வந்துவிடுவதால், அப்பாடல் வரிகள் கதாநாயகனைப் பற்றி இல்லை என்பது நமக்கும் தெளிவாகவே தெரிந்துவிடும். கமல் படங்களில், படத்தின் ஆரம்பத்திலோ, அல்லது சில காட்சிகள் கழித்தோ கூட இந்த அறிமுகம் இருக்கும். ரஜினி படங்களைப் போல் வெளிப்படையாக இது இருக்காது. ஆனால், ஆடியன்ஸுக்கும் பிடிக்கும்வகையில்தான் இருக்கும்.

இதோ இந்தக் கட்டுரையில் – கமல்ஹாஸன், இளையராஜா மற்றும் உன்மத்தம் – நான் சொல்லவந்ததை தெளிவாக எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

நீட்டி முழக்கி எதற்கு இந்த பீடிகை என்பவர்களுக்கு, விஸ்வரூபம் படத்திலும் என் அவதானிப்பின்படி, ஆடியன்ஸை வெறித்தனமாக விசில் அடிக்கவைக்கும் அறிமுகமேதான் இருக்கிறது. இதுபோன்ற ஒரு அறிமுகக் காட்சி, பிற தமிழ் நடிகர்களுக்கு dream introduction. நான் ஏற்கெனவே சொன்னபடி, பின்னணியில் கதாநாயகனைப் பற்றிப் பாடும் பாடல், கமலைப்பற்றியதாகவும் இருக்கிறது. ஆனால், ‘இது கமலைப் பற்றி இருக்கிறதே?’ என்று ஆடியன்ஸை யோசிக்க விடாமல், பரபர என்று ஒரு சுவாரஸ்யமான காட்சியில் கில்லாடித்தனமாக அப்பாடல் உபயோகப்பட்டிருக்கிறது. ’எவனென்று நினைத்தாய் எதைக்கண்டு சிரித்தாய்’ என்று துவங்கும் பாடல்தான் அது (பாடலை இங்கே தெளிவாகவே குறிப்பிட்டுவிடுவதன் நோக்கம், குசும்பு பிடித்த யாராவது, கமல் கதக் நடனமாடும் ‘உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே’ என்ற பாடல்தானே அது? என்று கேட்டு பின்னூட்டம் இடக்கூடும் என்பதால்தான்).

இப்படியாக துவங்கும் திரைப்படத்தில், என்னை முதலில் கவர்ந்தது, கமலின் புத்திசாலித்தனமான ஒன் லைனர்கள். படத்தின் வசனங்கள் நெடுகவே குட்டி குட்டியான, சுவாரஸ்யமான துணுக்குகள் இருக்கின்றன. நகைச்சுவையாக மட்டும் இல்லாமல், நம்மை யோசிக்க வைப்பதாகவுமே அவை இருக்கின்றன. உதாரணமாக, தங்களது கடவுள்கள் பற்றி, கமலின் மனைவி நிருபமாவும் அவளை விசாரிக்கும் பெண் போலீஸ் அதிகாரியும் பேசிக்கொள்வது. இரண்டு பெண்கள் பேசிக்கொண்டால் இப்படித்தான் இருக்கும். போலவே நிருபமாவும், அமெரிக்க போலீஸ் அதிகாரியும் வண்டிக்குள் பேசிக்கொள்வதும் (’நான் டாக்டரேட்’. ’ஸாரி. நான் டாக்டரேட் இல்லை’). இதுபோன்ற பல கு(சு)றும்பு வசனங்கள் இருக்கின்றன. குட்டியாக. ஆங்கிலப்படங்களில்தான் பொதுவாக இதைப்போன்ற துணுக்குகளை கவனித்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட காட்சி முடியப்போகிறது என்றால், இதைப்போன்ற ஒன் லைனர்களுடன் அவை ஜாலியாக முடியும். இப்போது தமிழிலும்.

கமல், நடனக் கலைஞராக அறிமுகம் ஆகும் காட்சிகளும் பிடித்தன. அதில் அவர் பேசும் வசனங்கள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. அவரது செய்கைகளும். படத்தில் சில காட்சிகளின் பிரம்மாண்டம் அடுத்த அம்சம். ஆஃப்கானிஸ்தான் காட்டப்படும் காட்சிகள், அமெரிக்காவில் எடுக்கப்பட்டிருக்கும் பல காட்சிகள், குண்டுகள் வெடிக்கும் நேர்த்தி (குறிப்பாக பெரிய கட்டிடம் ஒன்றின் ஒரு அபார்ட்மெண்ட் வெடிப்பது), இதன்பின்னர் போலீஸ் அந்த இடங்களை சுற்றி வளைப்பது, போலீஸ் விசாரணை போன்ற பல காட்சிகளும் மிக நேர்த்தியாக, ஆங்கிலப் படங்களைப் போலவே எடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் இதுபோன்ற காட்சிகளை பார்த்ததில்லை. ஆங்கிலப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அமெரிக்கா என்பதால் ஆங்கிலப்பட எஃபக்ட் போலும்.

அதேபோல், ஆஃப்கானிஸ்தான் இடம்பெறும் காட்சிகளில், ஓரிரு ஷாட்களில் அந்த இடத்தின் தீவிரம் நமக்குப் புரியவைக்கப்படுகிறது. மருத்துவரை உருதுவில் ‘ஹக்கீம்’ என்ற சொல்லால் அழைக்கிறோம் அல்லவா? இந்த ஹக்கீம் என்ற வார்த்தைக்கும், doctor என்ற வார்த்தைக்குமான வேறுபாடு மூலம் ஆஃப்கானிஸ்தானில் உள்ள தீவிர நிலவரம் ஒரு காட்சியின் வாயிலாக நமது முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டுச் செல்கிறது. படத்தில் ஒமர் வீட்டில் மருத்துவர் வந்திருக்கிறார். அப்போது ஒமர், ‘ஹக்கீம் வந்திருக்கிறாரா?’ என்று கேட்பான். ‘ஹக்கீம் இல்லை. டாக்டர்தான் வந்திருக்கிறார்’ என்ற பதில் கிடைக்கும்.  இந்த வேறுபாடு தெரிந்தவர்கள், இக்காட்சியைப் பார்த்து ‘அட’ போடாமல் இருக்க முடியாது. அதேபோல் சிறிதுநேரம் கழித்து அந்தப் பிராந்தியத்தை சேர்ந்த ஒரு மூதாட்டியின் புலம்பலாக, அமெரிக்கா, ரஷ்யா, தாலிபான் ஆகியவர்களின் போர்வெறியும் நமக்குப் புரியவைக்கப்படுகிறது. அந்தக் காட்சியின் இறுதியில், ‘முன்னால் வால் முளைத்த குரங்குப் பயல்களா’ என்ற துணுக்கு இருக்கிறது. படத்தின் நாயகன், ஒரு தாலிபான் சிறுவனை ஊஞ்சல் ஆட்டும் காட்சி படத்தில் உண்டு. அந்தச் சிறுவனுக்கு அது பிடிக்காமல், ‘நான் சிறுவன் அல்ல’ என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவான். ஆனால் அப்போது அவனை விட பெரியவன் ஒருவன் அங்கே வந்து, ஊஞ்சலில் அமர்ந்து, நாயகனை ஆட்டிவிட சொல்லுவான். ஆனால் அவன் தான் தற்கொலைப்படையின் பிரதான நபர். இந்தக் காட்சி அருமையாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் படத்தில் தாலிபானைச் சேர்ந்த வில்லனான ஒமர், செயற்கைக் கால் ஒன்றை அவனது கையில் வைத்துக்கொண்டு பேசும் சில வசனங்கள் இருக்கின்றன. ஆஃப்கானிஸ்தானில் செயற்கைக் கால்களின் மூலம் நமக்குப் புரியவைக்கப்படும் கோரத்தைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள, Kandahar படத்தைப் பாருங்கள். மக்ஹ்மல்பஃப் இயக்கிய இந்த இரானியப் படம் உங்களைத் தூங்க விடாது. என்ன பிரச்னை என்றால், இந்த வார்த்தைகள், செய்கைகள் மூலம் கமல் சொல்ல நினைப்பது யாருக்கும் புரியாமல் போய்விடக்கூடிய பாதிப்பு இருக்கிறது.  ஆனால் இவைகளை புரிய வைக்க தனியாக காட்சிகளும் வைக்க முடியாது. வைத்தால் படத்தின் கதையை சொல்ல நேரம் குறைந்துவிடும்.

பொதுவாக ஒரு படத்தில் தான்தோன்றித்தனமாக எதையாவது காட்டிவிட முடியாது. அப்படிக் காட்டுவதற்கு ஜஸ்டிஃபிகேஷன் வைக்கவேண்டும். இல்லாவிடில், அப்படி ஜஸ்டிஃபிகேஷன் வைக்காத பக்கத்துக்கு அந்த இயக்குநர் துணைபோய்விட்டதாக அர்த்தம். உதாரணத்துக்கு, ஹேராம் படத்தில் அல்தாஃப் ஒரு கொலைகார மிருகம். ஏன்? Direct action day பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? சாகேத்ராமுக்கு ராணி முகர்ஜியின் கொலைதான் படத்தில் அவனது எல்லா செய்கைகளுக்கும் பின்னணி. அது அந்தக் கதாபாத்திரத்துக்கு இயக்குநர் கமல் வைத்த ஜஸ்டிஃபிகேஷன். அப்யங்கர் என்ற மிருகத்துக்கு இதே போல் அவரே சொல்வதாக அவரது வாழ்க்கையைப் பற்றிய ஜஸ்டிஃபிகேஷன் இருக்கும். ஆனால் அல்தாஃபுக்கு எதுவும் இருக்காது. எனவே படம் பார்க்கும் நாமும் அல்தாஃபைப் பற்றிய மோசமான எண்ணத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், இந்தப் படத்தில் இந்த ஆபத்து இல்லை. ஒமருக்கும் தாலிபான்களுக்கும், அவர்களது தினசரி வாழ்வின் பிரச்னைகள், அவலங்கள், அவர்கள் ஏன் ஆயுதத்தை எடுத்தார்கள் போன்றவையெல்லாம் அவ்வப்போது வசனங்களின் மூலமும், பின்னணியில் ஒலிக்கும் ‘துப்பாக்கி எங்கள் தோளிலே’ பாடல் வரிகள் மூலமாகவும் விளக்கப்படுகின்றன. இதேபோல் அமெரிக்காவின் நோக்கமும். ஆனால், அதேசமயம் அமெரிக்காவை சொறிந்துகொடுக்கும் சில வசனங்களும் இந்தப் படத்தில் உள்ளன. தேவையே இல்லாமல் அவை நுழைக்கப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது (’அமெரிக்காக்காரன் பெண்களையும் குழந்தைகளையும் குண்டு போட்டு கொல்ல மாட்டான்’ – joke).

ஆனால், இந்தக் காட்சிகளும், இத்தகைய அறிமுகமும், குட்டிக்குட்டி ஒன் லைனர்கள் மட்டும் ஒரு படத்தின் சுவாரஸ்யத்துக்குப் போதாதே?

இந்தப் படத்தில் என்னை அந்நியமாக உணர வைத்தவை இரண்டு. முதலாவது, படத்தின் ஆரம்பத்தில் இருந்து நிருபமாவும் அவளது கணவன் விஸ்ஸும் பேசிக்கொள்ளும் கொச்சை பிராமணத் தமிழ். குறிப்பாக, நிருபமாவாக நடித்திருக்கும் பூஜா குமார், படம் முழுதுமே இப்படித்தான் பேசுகிறார். இதுபோன்ற தமிழ் பேசுவோரை நான் கண்டிருக்கிறேன் என்றாலும், ஒரு திரைப்படத்தில் இப்படி வருவது மிகவும் அந்நியமாக இருந்தது. அதேபோல், படத்தில் பஷ்டூன், அராபிக், ஹிந்தி மற்றும் இங்க்லீஷ் வசனங்கள் இடம்பெறும்போது சப்டைட்டில்கள் தமிழில் வருகின்றன. இந்த சப்டைட்டில்கள், மணிரத்னம் படங்களில் ராஜஸ்தான் தலைப்பாகை கட்டிக்கொண்ட வட இந்திய ஆசாமிகள், திருநெல்வேலி தமிழ் பேசுவார்களே அப்படி அபத்தமாக இருந்தன. ஒரே ஒரு இடத்தில் கூட இந்த சப்டைட்டில்கள் இயல்பானதாக இல்லை. மிக இயல்பான இங்க்லீஷ் வசனங்கள் கூட, படு செயற்கையாக சப்டைட்டில்கள் போடப்பட்டு, நகைச்சுவை வசனங்களாகவே இருந்தன. இந்தத் தவறு எப்படி படத்தில் இடம்பெற்றது என்று தெரியவில்லை.

படத்தோடு ஒன்ற விடாமல் என்னைத் தடுத்த இன்னொரு விஷயம் – படத்தின் திரைக்கதை. இந்தத் திரைக்கதை, முன்னும் பின்னும் மாறி மாறி செல்லக்கூடியவகையில் அமைக்கப்பட்டிருந்தவிதம் எனக்கு மிகவும் பிடித்தே இருந்தது. ஆனால், படத்தில் இடம்பெறும் காட்சிகள் – ‘யாரென்று தெரிகிறதா’ பாடலுக்குப் பிறகு – விறுவிறுப்பானதாக இல்லை. இதை இன்னும் கொஞ்சம் விளக்கலாம் என்றால், ஆங்கிலத்தில் இதே தீம் கொண்ட இரண்டு படங்களை எடுத்துக்கொள்வோம். முதல் படம், ரிட்லி ஸ்காட் எடுத்த Body of Lies. இரண்டாவது படம், அவ்வளவாக பிரபலம் ஆகாத Traitor. இரண்டு படங்களிலும், படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மிகவும் விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். படம் பார்க்கும் நமக்கு அலுக்காது. ஆனால், விஸ்வரூபத்தில் இந்த சுவாரஸ்யம் மிஸ்ஸிங். இடைவேளைக்குப்பிறகு ஓரளவு வேகம் பிடித்தாலும், படத்தின் முதல் பாதி – ஃப்ளாஷ்பேக் காட்சிகள் உட்பட – மெதுவாக நகர்கின்றன. படத்தில் விஸ் ’யாரென்று தெரிந்தபின்’, எத்தனை வேகமாக காட்சிகள் இருந்திருக்கவேண்டுமோ, அத்தனை மெதுவாக இருந்ததுபோல் எனக்குத் தோன்றியது. இக்காட்சிகளில் கமல் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.

படத்தின் க்ளைமேக்ஸ் வருவதற்குள் படம் முடிந்துவிட்டது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வருவதால் இதுபோன்று எடுக்க கமல் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், என்னதான் இரண்டாவது பாகம் வருவதாக இருந்தாலும், முதலாம் பாகத்தை ஜஸ்ட் லைக் தட் முடித்திருக்கவேண்டாம் என்றும் தோன்றியது.  எந்த முதல் பாக திரைப்படமாக இருந்தாலும் சரி, அந்தப் படம் முதலிலிருந்து கடைசிவரை ஒரு தனிப்பட்ட unit. அந்தப் படத்தைப் பார்க்க வரும் ஆடியன்ஸ், க்ளைமாக்ஸ் சுவாரஸ்யமாக இல்லாவிட்டால் பொசுக்கென்றுதான் உணர்வார்கள் அல்லவா? அப்படிப்பட்ட உணர்வு, இந்தப் படம் முடிந்ததும் தோன்றியது. படம் முடியும் வேளையில் ஒரு த்ரில்லிங்கான காட்சியில்தான் இறுதி இருபது நிமிடங்கள் நகர்கின்றன என்றாலும், அந்தக் காட்சியின் த்ரில், படம் பார்க்கும் ஆடியன்ஸால் உணரப்படுவதில்லை. மிக மெதுவாக நகர்கிறது. க்ளைமேக்ஸே இல்லாத ஒரு தமிழ்ப்படத்தை நான் பார்ப்பது இதுதான் முதல்முறை.

அதேபோல், காட்சிகளின் நீளமும் இன்னொரு மைனஸ் பாயிண்ட். பட ஆரம்பத்தில் இருந்து காண்பிக்கப்படும் அத்தனை காட்சிகளும் நீளமானதாகவே இருக்கின்றன. ஆகையால் காட்சிகளில் ஒன்ற முடிவதில்லை.

பொதுவாக அமெரிக்கா – தாலிபான் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் ஆங்கிலப்படங்களில், பின்னணியில் ஒரு குறிப்பிட்ட இசை ஒலிக்கும். ஒரே ஒரு தந்திக்கம்பியில், நீளமான ஒற்றை இசை – வில்லன்கள் வரும்போது பின்னணியில் ஒலிக்கும்.  அதே இசை இதிலும் உண்டு. இதைத்தவிர பின்னணி இசையில் விசேடம் எதுவும் இல்லை என்று பட்டது.  படத்தில் கமல் அமைத்திருக்கும் திரைக்கதை உத்தி – நான் லீனியராக முன்னே பின்னே பயணிக்கும் கதை – Time Freeze என்ற தொழில்நுட்பத்தின் மூலமே இவ்வாறு பயணிக்கிறது. ‘பாய்ஸ்’ படத்தில் உறைந்து நிற்கும் காமெரா ஷாட்களை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அந்நியனில் கூட கராத்தே சண்டையின் போது இது இடம்பெறும். இதே தொழில்நுட்பம்தான் இந்த Time Freeze. இந்த உத்தி புத்திசாலித்தனமாக இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஓகே.. கடைசியாக, சுருக்கமாக இப்படத்தைப் பற்றிய கருத்து – என்னதான் படத்தில் தொழில்நுட்பம் அருமையாக இருந்தாலும், படத்தின் ஜீவனாக இருக்கவேண்டிய திரைக்கதை மிக மிக மிக மெதுவாக நகர்வதால், எனக்கு இந்தப் படத்தில் திருப்தி இல்லை.  ஆனால் கமலின் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும். படத்தின் இரண்டாம் பாகத்தில் இதுபோன்ற பிரச்னைகள் களையப்பட்டு வேகமான திரைப்படம் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

பி.குக்கள்

1. நான் படத்தைப் பார்த்தது பெங்களூரின் Innovative Multiplex. Bookmyshow மூலமாக டிக்கெட்கள் கிடைக்கின்றன.

2. படத்தின் முதல் சண்டைக்காட்சியின் இன்ஸ்பிரேஷனாக, இதோ இந்த ஷெர்லக் ஹோம்ஸ் திரைப்பட காட்சிகள் இருந்திருக்கின்றன என்பது தெளிவு. ஆனால், இவைகளை காப்பி என்று சொல்லமுடியாது. இந்த காட்சிகளுக்கே இன்ஸ்பிரேஷனாக இருந்தவை எவையோ? Time Freeze போல இதுவும் ஒரு தொழில்நுட்பமே.

3. இந்தப் படம், Traitor படத்தின் காப்பி என்று எனக்கு நம்பத் தகுந்த ஒரு இடத்திலிருந்து சென்ற மாதம் செய்தி வந்திருந்தது.  இணையத்திலும் ஓரிரு பதிவுகள் இப்படி போன வாரம் படித்தேன். ஆனால் அது உண்மை அல்ல. இரண்டு படங்களுக்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது. இரண்டின் கரு ஒன்றுதான். ஆனால் அதைவைத்துக்கொண்டு காப்பி என்று சொல்வது டுபாக்கூர்.

4. என் அருகில் அமர்ந்திருந்த ஆசாமி ஒரு ஆர்வக்கோளாறு பிடித்தவர் போலும். முதல் சண்டைக்காட்சியில் ‘ஆ…ஊ’ என்று உச்சபட்ச டெஸிபலில் அலறி என் வலது காதை பதம் பார்த்துவிட்டார். அட இது கூட ஓகே. கமல் கதக் ஆடிக்கொண்டே அறிமுகமாகும் முதல் காட்சியில் அவர் அலறியதைக் கேட்டு பீதி அடைந்தேன்.  திடீரென்று என் பக்கம் திரும்பி, ‘இது என்ன A சர்ட்டிஃபிகேட் படமா?’ என்று எந்தவித அறிமுகமும் இல்லாமல் தடாலடி கேள்வி ஒன்றையும் கேட்டார். ‘இல்ல. இது U/A படம்’ என்று அதே தொனியில் பதிலளித்தேன். அவரால் அதை நம்ப முடியவில்லை. ‘அப்படியா’ என்று இரண்டு முறை கேட்டார்.  அதன்பின் தனக்குத்தானே ‘ஹார்ட்கோர் வயலன்ஸ்’ என்று முனகிக்கொண்டார் (ஆனால் எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை).

5. Gangs of Wasseypur படத்தில் கொஞ்ச நேரமே வந்திருந்தாலும் நம் மனதைக் கவர்ந்த ஜெய்தீப் அஹ்லாவத், இதில் சற்றே நீண்ட நேரம் வருகிறார். ஆனால் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு சொற்பம்.

[divider]

பாகம் இரண்டு – திரைப்படத்தின் மீதான விமர்சனங்களைப் பற்றிய விமர்சனம்

’விஸ்வரூபம்’ ட்ரெய்லர் வெளியான காலத்திலிருந்தே அந்தப் படம் பல பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது. DTH பற்றிய பிரச்னை ஒருவிதம் என்றால், படத்தை தடை செய்ய வேண்டும் என்பது இன்னொரு பிரச்னை. இவற்றில் DTH என்பது வியாபார ரீதியான பிரச்னை என்பதால் அவற்றைப் பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை. அந்தப் பிரச்னையும் இப்போது சுமுகமான முடிவில் முடிந்துவிட்டது (இருந்தாலும், கமலின் இந்தத் திட்டம் வரவேற்கத் தக்கது என்பதில் சந்தேகம் இல்லை). ஆகவே, இரண்டாவது பிரச்னையான ‘படத்தை தடை செய்ய வேண்டும்’ என்பது பற்றி எனது கருத்தை (அது இலவசம் என்பதால்) சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.

கலை இலக்கியம் சம்மந்தப்பட்ட இதுபோன்ற போராட்டங்கள் இந்தியாவுக்குப் புதிது இல்லை. புத்தகங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவை பலமுறை இந்தத் தடையை சந்தித்திருக்கின்றன. இந்தக் கட்டுரை திரைப்படத்தைப் பற்றியது என்பதால் அதில் கவனம் செலுத்துவோம். இந்தத் தடைகள் இரண்டுவிதமாக விதிக்கப்படுகின்றன. ஒன்று – அரசோ அல்லது தணிக்கைத்துறையோ ஒரு திரைப்படத்துக்கு விதிக்கும் தடை. இரண்டாவது – சில இயக்கங்கள் மூலம் விதிக்கப்படும் தடை. இந்தத் தடைகளிலும் இன்னமும் உள்ளே நோக்கினால், மாநிலத்துக்கு மாநிலம் இந்தத் தடைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் தனக்குப் பிடிக்காத திரைப்படங்களை தடை செய்கிறது. ஒரு மாநிலத்தில் தடை செய்யப்படும் படம், அடுத்த மாநிலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஜாலியாக ஓடுகிறது. உதாரணம்: Da Vinci Code. தமிழகம், ஆந்திரா, நாகாலாந்து, கோவா ஆகிய மாநிலங்களில் மட்டுமே தடைசெய்யப்பட்டது. பிற மாநிலங்களில் ஓடியது. இது, அரசுத் தடை. தனிப்பட்ட இயக்கங்களின் தடை என்பது, தற்போது விஸ்வரூபம் தடைசெய்யப்பட்டதைப் போன்றது. முஸ்லிம் மக்களைப் பற்றிய தவறான சித்தரிப்பு இதில் இருக்கிறது என்ற ஒரு இயக்கத்தின் குற்றச்சாட்டு காரணமாகவே இந்தப் படம் அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது.

சரி. அப்படியே வைத்துக்கொள்வோம். ஒரு திரைப்படத்தில் இதுபோன்ற தவறான சித்தரிப்புகள் இருக்கின்றன என்பதை முடிவு செய்யவேண்டியவர்கள் யார்? படம் பார்க்கும் மக்களா அல்லது ஓரிரு இயக்கங்கள் மட்டுமா? அப்படி ஒரு படத்தில் தவறான சித்தரிப்பு இருக்கிறது என்பது எப்போது தெரியவரும்? படம் வெளியாகி, அதை மக்கள் பார்க்கும்போதுதானே? ஒரு படத்துக்கு, அது வெளியாகும் வாய்ப்பையே வழங்காமல், தடை விதிக்கவேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்? அதுமட்டுமல்லாமல், படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடனேயே, படத்தைப் பற்றிய எந்த விஷயமும் தெரியாமல், ‘படம் எங்களை தவறாக சித்தரிக்கிறது; ஆனால் படத்தை இன்னமும் நாங்கள் பார்க்கவில்லை; ஆதலால் படத்தைப் போட்டுக்காட்டுங்கள்’ என்று சொல்லி, படத்தைப் பார்த்துவிட்டு, படத்தைத் தடை செய்ய கோஷம் எழுப்புவதும் என்னைப்பொறுத்தவரை நியாயமற்ற செயலாகவே தோன்றுகிறது. எப்படி ஒரு பெரும் சமுதாயத்துக்கான முடிவுகளை எடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்க முடியும்? மக்களிடம் போய்ச்சேரவேண்டிய படத்தை இப்படியாக தடை செய்வது, படத்தின் விளம்பரத்தை அதிகரிக்கும் என்பது ஏன் இப்படி கோஷம் எழுப்பும் நண்பர்களுக்குத் தெரியவில்லை? ஒரு வாதத்துக்கு, படத்தில் தவறான சித்தரிப்பு இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், அதை எப்படி சந்திக்க வேண்டும்? முறைப்படி படம் வெளிவந்தபின், வழக்கின் மூலம் சந்தித்திருக்கவேண்டிய பிரச்னையல்லவா இது?

இந்த விஷயத்தில் முஸ்லிம் அமைப்புகள் மட்டுமே குற்றம் சாட்டப்படவேண்டியவைகள் அல்ல. BJP ஆரம்பகாலத்தில் Fire, Water போன்ற படங்களை எதிர்த்து கோஷமிட்டதன் விளைவே இது என்று தோன்றுகிறது.

சரி. படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்தப் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளனவா?

இல்லை என்பதே என் பதில். இந்தப் படத்தில் வில்லன்களாகக் காட்டப்படுபவர்கள் தாலிபான்கள். ஆனால் அவர்களுமே மொட்டையாக வில்லன்களாக காட்டப்படவில்லை. இக்கட்டுரையின் முதல் பாகத்தில் தாலிபான்களுக்குப் பின்னிருக்கும் காரணங்களை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்று நான் எழுதியதை கவனித்தீர்கள் அல்லவா? ஆஃப்கானிஸ்தானில் என்ன நடந்ததோ அதுதான் படத்தில் காண்பிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் கழுத்தறுபட்டு இறந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளரான டானியல் பேர்லைப் பற்றிப் படித்தோம் அல்லவா? இதைப்போன்ற ஒரு சம்பவம் படத்தில் உள்ளது. ஆனால் அதைச் செய்பவர்கள் தாலிபான்கள். தாலிபான்கள் வசமுள்ள குண்டுகள், அவர்கள் பின் லேடனை சந்திப்பது, அமெரிக்காவுக்கு எதிரான அவர்களது வாதங்கள் போன்றவையெல்லாம் படத்தில் வருகின்றன. தாலிபான் என்பது ஒரு தீவிரவாத கும்பல். அந்தத் தாலிபான்களை ஆஃப்கன் மக்களே வெறுத்து திட்டுவது போன்ற காட்சிகளும் படத்தில் உள்ளன.

அதேபோல், படத்தின் கதாநாயகன் ஒரு முஸ்லிம். அமெரிக்க வீரர்களுடன் சேர்ந்து தீவிரவாதிகளை தாக்கும் காட்சியில், திடீரென்று கதாநாயகனைக் காணவில்லை. பார்த்தால் அவன் அங்கே தொழுகை செய்கிறான். அநியாயமாக தன்னால் இறந்தவர்களுக்காக அழுகிறான். வருந்துகிறான். படம் நெடுகவே கதாநாயகன் இரக்கமுள்ள ஒரு அருமையான முஸ்லிமாகத்தான் காட்டப்படுகிறான்.

ஆனால் ஒரு விஷயம். இதுபோன்ற ஒரு படம், சென்ஸிடிவ் இந்தியாவில் வெளிவருவதில் அவசியம் சிக்கல்கள் இருக்கின்றன. நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டுமல்லவா? எந்த ஜஸ்டிஃபிகேஷனும் இல்லாமல், வில்லன் என்றால் அவன் முஸ்லிம் (அதுவே அடியாள் என்றால் அவன் கிறிஸ்துவன்) என்ற ஃபார்முலாவை இந்திய சினிமா, சற்றும் தயக்கமில்லாமல் பன்னெடுங்காலமாகவே பயன்படுத்திக்கொண்டும் வருகிறது என்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? இந்தப் படத்தில் ஒமர் தமிழ் பேசுகிறான். அது ஒரு மொக்கை தமிழ்ப்பட ஃபார்முலா. அண்டார்ட்டிகா சென்றாலும் தமிழ்ப்படங்களில் வரும் பிற நாட்டு கதாபாத்திரங்கள் தழிழில்தான் பேசும். காரணம், அப்போதுதான் அது தமிழகத்தில் எடுபடும். ஆகவே இந்தப்படத்திலும் வில்லன் தமிழ் பேசுகிறான். ஆனால், அதை அப்படியே விடாமல், அதற்கு ஒரு காரணம் கற்பித்ததுதான் பிரச்னை. அந்தக் காரணமானது, வில்லன் ஒமர் இந்தியாவில் வாழ்ந்ததாக அவனே சொல்வதாக இருக்கிறது. திருச்சி, கோவை, அயோத்தி, அஹ்மதாபாத் ஆகிய நகரங்களில் வாழ்ந்ததாக சொல்கிறான் அவன். இதுதான் பிரச்னைக்கு காரணம். பிற நாட்டு கதாபாத்திரங்கள் தமிழ்ப்படங்களில் மாநில மொழிகளைப் பேசிக்கொண்டு திரிவது. ஹிந்தியில் இது இருக்காது. காரணம் ஒரு ஆஃப்கன் தாலிபான், ஹிந்தி பேசுவான். அதேபோல், ‘தமிழ் ஜிஹாதி மிக அரிதானவன்’ என்று ஒரு வசனம். இதுவும் தேவையே இல்லாத வசனம்தான். மேலே சொன்ன தமிழ் பேசும் கதாபாத்திரங்கள் என்ற காரணத்துக்காக திணிக்கப்பட்ட வசனம் இது. ஆனால் சட்டென்று பார்த்தால் பிரச்னையைக் கிளப்பக்கூடிய வசனமாகத்தான் இது தெரிகிறது.

படத்தின் வில்லன் ஒமருக்கு மொத்தமே நான்கைந்து பக்கங்கள் தான் வசனம். ஆக, அவரை உருதுவில் பேசவைத்து, சப்டைட்டில் போட்டிருக்கலாம். நாயகன் பெயரிலேயே கஷ்மீரி என்பது இருக்கிறது. ஆனால் நாயகனுக்கு கஷ்மீரி தெரியாது. ஏனென்ற காரணமும் அவர் மூலமே அளிக்கப்படுகிறது. இதுவும் மேலே பார்த்த ‘தமிழ் பேசும்’ ஸிண்ட்ரோம்தான். நாயகனையும் வில்லனையும் உருது அல்லது கஷ்மீரி அல்லது பஷ்டூன் பேசவைத்து, சப்டைட்டில் போட்டிருந்தால் இந்தப் பிரச்னைகள் எதுவும் வந்திருக்காது போலும்.

இருப்பினும், படம் வெளிவந்து, அனைவரும் பார்க்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் மட்டுமே முறைப்படி முறையிடவேண்டிய ஒன்றை, இந்தத் தடை கோஷம் மூலம் பிரபலப்படுத்தி, தேவையே இல்லாத விளம்பரத்தையே இந்த இயக்கங்கள் கொடுக்கின்றன. அதில் சந்தேகம் இல்லை.

கூடவே, இதில் சம்மந்தப்படாத இன்னொரு விஷயம். உண்மையில் தமிழகத்தின் பிராமணர்களும் இந்தப் படத்தைத் தடைசெய்ய கோஷம் எழுப்ப எல்லாக் காரணங்களும் இதில் உள்ளன. முதலிலேயே ‘ஏ பாப்பாத்தி… இந்த வாத்தை சாப்புட்டுப் பார்த்து, காரம் சரியா இருக்கான்னு சொல்லுடியம்மா’ என்று நாயகன் பேசும் வசனம் இதில் உள்ளது. அந்தப் பிராமணப் பெண்ணும் சப்புக்கொட்டிக்கொண்டு அந்த வாத்தை சாப்பிடுகிறாள். இந்தக் காட்சியின் அவசியம் என்ன? கதாநாயகன் நன்றாக சமைப்பான் என்பது படத்தில் வரும் வஜனம். அதற்காக இப்படி ஒரு காட்சி. இந்தப் படத்தில் எதை எடுத்தாலும் அதற்காக ஒரு நீ…ளமான ஜஸ்டிஃபிகேஷன் உள்ளது. படத்தின் நாயகி ஒரு பிராமணப்பெண். ஆனால் அவளுக்கு அவளுடைய முதலாளியிடம் கள்ளத் தொடர்பு இருப்பதாக வருகிறது. இதைப்பற்றி யாரும் கோஷம் எழுப்பவில்லையா?

முடிவாக, இப்படி கோஷம் எழுப்புவதன் மூலம் அரசியல் ஆதாயத்துக்காக சில இயக்கங்கள், அப்பாவி மக்களை மூளைச்சலவை செய்கின்றன. இப்படிப்பட்ட இயக்கங்கள் எந்த மதத்தை சார்ந்தவையாக இருந்தாலும் அவற்றை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும். இல்லையேல் இந்தியா கட்டாயம் தொலைந்தே போகும்.

கமல்ஹாஸன் பற்றிய பிற பதிவுகளைப் படிக்க- இங்கே க்ளிக் செய்யலாம்.

  Comments

29 Comments

  1. Shahul Hameed

    I agree with you 100%..

    Reply
  2. படம் தடை செய்யப்பட முக்கிய காரணிகள்:-

    விஸ்வரூபத்தின் ஒளிபரப்பு உரிமை குறித்து ஜெயா டிவி மேலிடத்தில் பேசப்படுகிறது. இந்த உரிமை குறித்த பேச்சு, முதன் முதலாக, கமல்ஹாசன் ஜெயலலிதாவை சந்தித்தபோது நடைபெறுகிறது. விஸ்வரூபம் திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது என்று கமல்ஹாசன் சொன்னபோது, ஜெயலலிதா கேஷுவலாக படத்தின் ஒளிபரப்பு உரிமையை நம்ம சேனலுக்கே கொடுத்திடுங்களேன்.. இது சம்பந்தமா சுனில் கிட்ட பேசுங்க என்று சொன்னதாக தெரிகிறது.

    இது குறித்து கமலிடம் பேசிய சுனில், வழக்கம் போல அடிமாட்டு விலைக்கு படத்தைக் கேட்டதாகத் தெரிகிறது. நாசூக்காக அதைத் தவிர்த்த கமல், விஜய் டிவிக்கு அப்படத்தின் உரிமையை உரிய விலைக்கு விற்றிருக்கிறார். இதையடுத்து, தன்னிடம் முதல்வர் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் எங்கே கோபமாகிவிடப் போகிறாரோ என்று நினைத்த சுனில், எவ்வளவு தொகை கொடுக்கிறேன் என்றாலும், கமல் விஸ்வரூபத்தை விற்க மறுத்து விட்டார் என்று கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதா கடுமையான கோபமடைந்திருந்த நேரத்தில்தான், ப.சிதம்பரத்தைப் பற்றிய புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. ஒரு விழாவில் பேசுகிறோம் என்ற அடிப்படையில், உயர்வு நவிற்சியில், கமல்ஹாசன் “வேட்டி கட்டிய தமிழராக டெல்லியில் வலம் வரும் சிதம்பரம் விரைவில் பிரதமராக வேண்டும்” என்று பேசுகிறார். கமல்ஹாசன் இப்படிப் பேசியதோடு போயிருந்தால் விஷயம் முடிந்திருக்கும். அடுத்து மைக்கைப் பிடித்த தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன், “ வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்!” என்று பேசினார்.

    “அம்மாதான் இந்தியாவுக்கே வழிகாட்டி… அம்மாவின் ஆளுகையில் ஒட்டு மொத்த இந்தியாவும் வரும் நாள் தொலைவில் இல்லை. அம்மா சென்றால் டெல்லியே நடுங்கும், அம்மா டெர்ரர்,” என்று அதிமுக அடிமைகள் தொடர்ந்து பேசி வருவதை அப்படியே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு எப்படி இருக்கும்…. “அதுவும் என்னா ஒரு நக்கலு…. சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் விடை அளித்துள்ளீர்கள்” இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதாவுக்கு எப்படி இருக்கும்…
    ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரையே ஓட ஓட விரட்டியவர், சொல்பேச்சைக் கேட்காத ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் வீசியதை ரசித்தவர், வயதில் மூத்தவர்களை காலில் விழச்செய்து கண்டு இன்புறுபவர். இப்படிப்பட்டவரிடம் ஒரு சாதாரண திரைப்பட நடிகர் முரண்டு பிடித்தால் என்ன ஆகும்…. ? விஸ்வரூபம் படத்துக்கு ஏற்பட்டதுதான் ஆகும்.

    2014 தேர்தலை மனதில் வைத்து இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்று ஜெயலலிதா இப்படிச் செய்கிறார் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ஜெயலலிதா இப்படியெல்லாம் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திப்பவரா என்ன ? இப்படியெல்லாம் தெளிவாகச் சிந்தித்தால் ஜெயலலிதா நல்ல அரசியல்வாதியாகி விடுவாரே…. 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, கரசேவையை ஆதரித்துப் பேசியவர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை வெட்டிப் படுகொலை செய்த நரேந்திர மோடியோடு இன்றும் நட்புப் பாராட்டுபவர். இந்து சனாதன தர்மங்களைத் தூக்கிப் பிடிப்பவர். இந்த ஜெயலலிதாவுக்கா சிறுபான்மையினரின் உணர்வு குறித்த அக்கறை ? உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கு இஸ்லாமியர்கள் மீது அக்கறை இருந்தால், 10 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை அண்ணா பிறந்தநாளன்று விடுவித்திருக்க வேண்டும். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்று, தன் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கும் அபுதாகிர் என்ற கைதியை, தனியார் மருத்தவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளச் சொல்லி நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்தபோதும், அந்த உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பவர்தான் ஜெயலலிதா. இவருக்கா சிறுபான்மையினர் மீது அக்கறை…. ?

    ஜெயலலிதா இந்தப் படத்தை தடை செய்திருப்பது, முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே. இதே திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி வாங்கியிருந்தால், இப்படி நடந்திருக்குமா என்ன ?

    மேலும் படிக்க இங்கே செல்லவும்

    http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1743%3A2013-01-25-19-18-57&catid=1%3A2010-07-12-16-58-06&Itemid=19

    Reply
    • Rajesh Da Scorp

      நண்பா. உண்மைதான். இந்தக் கட்டுரையை முழுதும் படித்தேன்.

      Reply
    • srinivas

      Super

      Reply
  3. Sampath

    ‘தமிழ் ஜிஹாதி மிக அரிதானவன்’ வசனம் – அதனால் தான் உமர் கமலை சுலபமாக உடனே தன்னுடைய இயக்கத்தில் சேர்த்துக் கொள்கிறான்
    And also it conveys a message that there are less (almost none) tamil speaking jihadis..

    ’அமெரிக்காக்காரன் பெண்களையும் குழந்தைகளையும் குண்டு போட்டு கொல்ல மாட்டான்’ – actually this scene doesn’t portray USA in good light… see the next scene, USA strikes and kills Omar’s family immediately after this dialogue…

    I have seen the movie in USA.. we had English subtitles which was not awkward ..

    Reply
    • Rajesh Da Scorp

      Dear Sampath… Thanks for clarifying me about the USA striking Omar’s family. That again proves the anger of Omar on Vis, later in the movie. Let your comment be there to guide people who would read the article. Thank you again.

      Reply
  4. good review buddy.Yesterday i saw this here in Smyrna. Good one from Kamal.

    Reply
    • Rajesh Da Scorp

      Thank you Mayil

      Reply
  5. Arun

    Jus back from the movie Rajesh…. same innovative multiplex. Not satisfied with the sound system, nt sure if its jus me !! But as far as ur review goes, i cant disagree to the points u hv mentioned. Though its technically brilliant for indian movie standards, i still dn the satisfaction. Lot of open questions….in my mind. Hoping Kamal would b giving a satisfiable closure in part-2 !!

    Reply
    • Rajesh Da Scorp

      Yea Arun. I too think the same that Kamal would answer to the doubts in the second part. Especially towards the end of the movie, there were some open questions I noticed. Let’s wait. Thanks.

      Reply
  6. இது பேஸ்புக்கில் ஒரு முஸ்லிம் அன்பர் எழுதியிருந்த விமர்சனம். இதை படித்துவிட்டு கிட்டத்தட்ட இதைப் போன்ற விமர்சனத்தை என்ன செய்யலாம் என நான் உங்களிடம் கேட்க உத்தேசித்திருந்தேன். நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    //மெல்லிய இதயம் உள்ளோர்க்கு ஒரு எச்சரிக்கை: தினம் உலகச் செய்திகளில் காணும் வன்முறைக் காட்சிகள் சில எம் படத்திலும் கதைக்கேற்ப சித்தரிக்கப்பட்டுள்ளது. திடமனதுடன் காண்க.” என்கிற வாசகத்தோடு ஆரம்பிக்கிறது விஸ்வரூபம். இங்கு வாசிக்கும்/கேட்கும் என்ற சொல் இல்லாமல் “காணும்” என்கிற சொல்லின் பின்னால்தான் கமல் தன் பாசிச பரப்புரையை கட்டமைக்கிறார். பொதுவாக செய்திகளில் கழுத்தறுப்பது தூக்கிலிடுவது போன்ற வன்முறை காட்சிகள் காணொளியாகவோ புகைப்படமà®

    Reply
    • Rajesh Da Scorp

      கணேசன். இந்த விமர்சனத்தை படிச்சேன். விமர்சனங்களில் ரெண்டு வகை உண்டு. ஒண்ணு – இயக்குநரே யோசிக்காத ஒரு மேட்டரை எடுத்துக்கிட்டு, படத்துல இது வர்றதுக்கு காரணம் இதுதான். இது ஒரு குறியீடுன்னு இஷ்டத்துக்கு அளப்பது. ரெண்டாவது – இதே மாதிரி இயக்குநரே யோசிக்காத ஒரு மேட்டரை எடுத்துகிட்டு கண்டபடி திட்டுவது. இது அந்த ரெண்டாவது வகைன்னு தோணுது.

      Reply
      • sekar

        correct boss…

        Reply
    • Natraj

      மஞ்சள் காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்

      Reply
    • Rajesh Da Scorp

      Thank you boss

      Reply
  7. \– ‘யாரென்று தெரிகிறதா’ பாடலுக்குப் பிறகு – விறுவிறுப்பானதாக இல்லை.\ – Felt the same… Movie slowing down and the scenes are lengthy after this…

    Reply
  8. Hariharan S

    The movie was not anything great. It certainly does not offend anybody (If you are taking a movie on Babri Masjid demolition wouldn’t they tell Jai Shri Ram before demolishing it?). There were lot of flaws in the movie. Why look for a Faraday shield when you can just switch off the cell phone? How come the Afghani’s Hindi was as good as a normal Hindi guy (his vocabulary was very good)? Why was Andrea there in the movie at all? To be a RAW agent should he know hair cutting also (Kamal does self hair cutting and a long haired viswanath becomes a handsome Taufeeq)? Did RAW collaborate with Americans in tracking Osama (the tracking device was used by Americans and Kamal was having it) or what was the purpose of Kamal joining Taliban (at least it was not clear to me)?
    It looks like Kamal Haasan likes Manmohan & does not like Obama. In Dasavatharam movie, Manmohan & Bush came to TN personally to praise the Kamal Haasan character. In this movie Manmohan makes an international call to praise him. But Obama does not do anything.

    Reply
    • Good questions Hariharan. Most of them are unanswered as well. That’s what happens in a commercial movie.

      Reply
    • Jegan

      The terrorists might have disabled the switch off provision in the phone hence it is wiser to place the shield for 36-48 hrs and remove the bomb once the cell phone battery becomes dead after getting discharged

      Reply
  9. “பாப்பாத்தியமா … நீ சா(ப்)ட்டு சொல்லு உப்பு காரம் போதுமான்னு.” இது ஒரு டயலாக். இதில் கமல் யாரை திருப்தி செய்ய விரும்புகிறார். தி.க-வா , தி.மு.க-வா ? புரியாதவர்க்கு உள்செய்தி (சில வருடங்கள் முன்பு செல்வி ஜெயலலிதா மாட்டு கறி சமைத்து படைத்து மற்றும் உண்டதாக செய்திகள் …தி.க. எப்பவும் போல காலைல வெளிய சரியா போலன்ன அது பார்பனர் சதி என்று கூறும்). உலக படம் எடுக்குற நாய்க்கு உள்ளூர் விவகாரம் எதுக்கு? குரங்கு ஆப்ப எடுத்த கதையா ஆகி போச்சுல்ல, நீ உலக தரத்துல எடுத்தது?

    Reply
    • Jegan

      Don’t get excited. It is a common fact that many brahmins eat chicken not only in TN and all over the world. Then what a big deal if this is mentioned ?

      Reply
  10. afzal

    அருமையான பதிவு! ஒரு சின்ன நெருடல்

    //ஆஃப்கானிஸ்தான் இடம்பெறும் காட்சிகளில், ஓரிரு ஷாட்களில் அந்த இடத்தின் தீவிரம் நமக்குப் புரியவைக்கப்படுகிறது. மருத்துவரை உருதுவில் ‘ஹக்கீம்’ என்ற சொல்லால் அழைக்கிறோம் அல்லவா? இந்த ஹக்கீம் என்ற வார்த்தைக்கும், doctor என்ற வார்த்தைக்குமான வேறுபாடு மூலம் ஆஃப்கானிஸ்தானில் உள்ள தீவிர நிலவரம் ஒரு காட்சியின் வாயிலாக நமது முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டுச் செல்கிறது. படத்தில் ஒமர் வீட்டில் மருத்துவர் வந்திருக்கிறார். அப்போது ஒமர், ‘ஹக்கீம் வந்திருக்கிறாரா?’ என்று கேட்பான். ‘ஹக்கீம் இல்லை. டாக்டர்தான் வந்திருக்கிறார்’ என்ற பதில் கிடைக்கும். இந்த வேறுபாடு தெரிந்தவர்கள், இக்காட்சியைப் பார்த்து ‘அட’ போடாமல் இருக்க முடியாது.//-

    ஆப்கானிஸ்தான்லே டாக்டர, “ஹக்கீம்”ன்னு சொன்னாஅங்குள்ள தீவிர நிலவரம் முகத்தில் ஓங்கி ஒரு அறவுடுது சொல்றீங்க. நம்ம தமிழ்லே டாக்டர “மருத்துவர்னு” சொல்ற வழக்கம் தானே ,நீங்க கூட அந்த காட்சிய விவரிக்கும் பொது மருத்துவர்னு தானே சொல்றிங்க..

    Reply
    • ஆமா பாஸ். நாம டாக்டர்ன்னு தான் சொல்றோம். ஆனா, படத்துல அது நல்லா காட்டப்பட்டிருக்கு. அதாவது, ஓமர் ‘ஹக்கீம்’ன்னு சொல்றது, அவங்க ஊரு மருத்துவரை. ஆனா வந்திருப்பது ஆங்கில மருத்துவர். ஃபாரினர். அது அவனுக்குப் புடிக்கிறதில்லை.

      Reply
  11. சென்னையில் 7-ஆம் தேதி படம் வெளியான அன்று முதல் காட்சி பார்த்துவிட்டேன்.ஏற்கனவே உங்கள் விமர்சனத்தின் முதல் பகுதியை படிக்காமல் இரண்டாவது பகுதியை மட்டுமே படித்திருந்தேன்.இப்போது படம் பார்த்துவிட்டபடியால் முதல் பகுதியை படித்தாயிற்று.அப்படியே வரிக்கு வரி matching. அதிலும் படம் இடவேளையின் பின் Slow paced-ஆக போவது பற்றி என்னுடைய எண்ணமும் அதுவே.மற்றபடி படித்தின் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட இந்த தடை/பிரச்சனைகள் தான் முக்கிய காரணமென்று தோன்றுகின்றது.ஆரவாரமில்லாமல் வந்திருந்தால் இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பு கிடைத்திருக்குமா என்பதும் சந்தேகமே. 🙂 🙂

    Reply
  12. Murali

    அய்யயோ கணேஷ் தாங்கலங்க…..நல்ல வேலை படத்துல முழு நிலா காண்பிக்கவில்லை…. காட்டி இருந்தால் இஸ்லாமியர்கள் பிறையை தான் வணங்குவார்கள்…. நிலா வேண்டும் என்றே காண்பிக்கப்பட்டிருகிறது …. இது முழுக்க முழுக்க மத துவேஷம்தான் சொல்லி திட்டி இருப்பீர்கள்…..

    Reply
  13. d

    1. i too before was thinking that there was not much thrill in the screenplay.
    2. u haven’ t said anything about pooja kumar’s beauty…

    Reply
  14. viruchigam

    நல்ல விமர்சனம்

    Reply

Join the conversation