Raakh & Made in India: A Titan Story – Hindi (2026)

by Karundhel Rajesh June 20, 2026   Cinema articles

இந்த இரண்டு இந்தி சீரீஸ்களும் இரண்டு நேர் எதிரான Point of Viewக்கள் உடையவை. Raakh (சாம்பல்) என்பது இந்தியாவின் கொடூரமான ஒரு கொலை வழக்கு பற்றிப் பேசுகிறது – பில்லா ரங்கா கொலைவழக்கு. அதில் ஈடுபட்ட பில்லாவையும் ரங்காவையும் எப்படிப் பிடித்தார்கள் என்பதைப் பற்றி விரிவாகச் சொல்கிறது. இது ஒரு police drama.

அதுவே Made in India – a Titan Story, மிக மிக feel goodஆன ஒரு தொனியில் டைடன் கடிகார நிறுவனம் உருவான கதையைச் சொல்கிறது. இதில் முக்கியமான கதாபாத்திரமாக JRD Tata வருகிறார் (நஸ்ருதீன் ஷா). அந்த நிறுவனம் எப்படி ஸெர்(க்)ஸீஸ் தேசாய் (Xerxes Desai) என்பவரால் உருவாக்கப்பட்டது என்ற உண்மைக் கதையைக் கொஞ்சம் கற்பனை கலந்து அட்டகாசமான, மகிழ்ச்சியான, ஜாலியான ஒரு கதையாகச் சொல்கிறது.

(Xerxes என்ற பெயர் பற்றி 300 பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அது பெர்ஷியாவை ஆண்ட ஒரு மன்னனின் பெயர். பார்சிகள் அங்கிருந்தே வந்தவர்கள் என்பதால் அந்தப் பெயரை வைத்துக்கொள்கிறார்கள். எனவே Xerxes Desai).

Raakh சீரீஸ், கொலைகாரர்களின் கதையைக் கொஞ்சம் rawஆகவே சொல்கிறது. குறிப்பாக இதன் கடைசி எபிசோடை மன தைரியம் இல்லாதவர்கள் பார்க்கவேண்டாம். அந்தக் கதையின் வழியாக இன்றுமே இந்தியாவில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என்ற கருத்தை முகத்தில் அறைவது போலச் சொல்கிறது.

அதுவே Made in India, உண்மையாக உழைத்தால் உயர்வை அடையலாம் என்ற நம்பிக்கை தரும் கதையை மகிழ்ச்சியுடன் சொல்கிறது. 70களின் இறுதியிலோ அதற்கு முன்னரோ பிறந்தவர்களுக்கு தூர்தர்ஷனில் வந்த டைடன் வாட்ச்களின் விளம்பரங்கள் கண்டிப்பாக நினைவிருக்கும். அவைகள் + கிஷோர் குமார், முஹம்மது ரஃபி, மன்னாடே, முகேஷ் ஆகியோர்கள் பாடிய அற்புதமான பழைய இந்திப் பாடல்கள் இந்த சீரீஸ் முழுதும் நிறைந்திருக்கின்றன. கூடவே கங்கை அமரன், சங்கர் கணேஷ் இசையமைத்த ஓரிரு தமிழ்ப் பாடல்களும் உள்ளன (சட்டம் – தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு – கங்கை அமரன், ஜோடிப் புறா – காலேஜ் தங்கங்களே – சங்கர் கணேஷ்). இப்படி ஒரு நாஸ்டால்ஜியாவோடு சேர்த்து நல்ல கதை ஒன்றை இனிமையாகச் சொல்லியிருக்கும் சீரீஸ் இது.

(Titan என்பது Tata Industries – TAmil Nadu என்பதன் சுருக்கம் என்பது சிலருக்கே தெரிந்திருக்கும். அப்போதைய TIDCOவுடன் சேர்ந்து டைடன் ஓசூரில் துவங்கப்பட்டது).

Raakh & Made in India: A Titan Story ஆகிய இரண்டுமே நன்றாக எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக எனக்கு Made in Indiaவின் திரைக்கதை மிகவும் பிடித்தது. அது ஒரு புத்தகத்தை வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கொலைக்கேசைப் பின்பற்றித் திரைக்கதை எழுதுவது ஓரளவு எளிது. ஆனால் ஒரு நிறுவனம் உருவான கதையை வைத்து இப்படி அழகாக ஒரு திரைக்கதை எழுதுவது கடினம்.

தொண்ணூறுகளில் ஜூனியர் விகடனில் ஒரு தொடர் வெளியானது. தமிழகத்தில் வெற்றிபெற்ற நிறுவனங்கள் ஒவ்வொன்றும் எப்படி உருவாகின என்று ரமேஷ் பிரபா ஒரு தொடர் எழுதினார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நிறுவனம். அது உண்மையில் இப்போதும் எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது (வழக்கப்படி அதை நான் கிழித்து பைண்ட் செய்து வைத்திருந்தேன்). அதனை ஒரு வெப் சீரீசாக எடுத்தால் எப்படி இருக்குமோ அதுதான் Made in India: A Titan Story.

இந்த இரண்டு சீரீஸ்களுமே அவற்றின் genreல் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. இரண்டுமே எல்லாப் பக்கமும் சென்று சேர்ந்துள்ளன. Both are good watches.

  Comments

Join the conversation