Abraham Lincoln: Vampire Hunter: 3D (2012) – English

by Karundhel Rajesh July 16, 2012   English films

பொதுவாகவே ஹாரர் படங்கள் எனக்குப் பிடிக்கும். அதிலும், அப்படங்கள் சரித்திரகால பின்னணியில் நடந்தால். குறிப்பாக, டிம் பர்ட்டனின் Sleepy Hollow. அந்தப் படமும், டிம் பர்ட்டன் இயக்காத From Hell படமும் எனக்குப் பிடித்தவை. பல நண்பர்களுக்கும் இந்த இரண்டு படங்களும் பிடித்திருக்கலாம். சரித்திர பின்னணியில் நடக்கும் ஹாரர் கதையானாலும் சரி, மசாலாவாக இருந்தாலும் சரி – அதில் வரும் ‘சரித்திரகாலப் பின்னணி’ என்பது எனக்கு விருப்பமான backdrop. பெரிய கருவிகள், பழைய கால படகுகள், கப்பல்கள், இரும்பு சாமான்கள், கட்டிடங்கள் – இந்தக் குறிப்பிட்ட ஜானரை, Steampunk என்று அழைப்பது வழக்கம். இந்த வகையைச் சேர்ந்ததாக, சமீபத்தில் வெளியான Sherlock Holmes படங்களை சொல்லலாம். அதேபோல் The Three Musketeers.

இப்போது வந்திருக்கும் ஆப்ரஹாம் லிங்கன்: வேம்பையர் ஹண்டர் என்ற இந்தத் திரைப்படம், லேசான ஸ்டீம்பங்க் வகையைச் சேர்ந்தது என்பதாலும்,  சரித்திரகால backdrop இதில் இருப்பதாலும் இந்த வருட ஆரம்பத்தில் இப்படத்தைப் பற்றி இணையத்தில் படித்தபோது, பார்த்தே தீரவேண்டும் என்று முடிவுசெய்தேன். அப்போதுதான் இந்தப் படம், ஒரு நாவலிலிருந்து படமாக்கப்பட்டிருப்பதாகவும் படித்தேன்.

முதலில் நாவலைப் பற்றி எனக்குப் படித்தே தீரவேண்டும் என்று விரும்பும் நண்பர்கள், கனவுகளின் காதலரின் ஆபிரகாம் லிங்கன்: காட்டேரி வேட்டையன் என்ற இந்த விரிவான நாவல் விமர்சனத்தைப் படிக்கலாம்.

ஒகே. நாவல் விமர்சனத்தைப் படித்தாயிற்றா? ரைட். வாருங்கள். படத்தை அலசலாம்.


காட்டேறிகள் என்பது நெடுங்காலமாகவே மனிதர்களின் கற்பனையைக் கிளறக்கூடியதாகவும், பயத்தை உண்டுசெய்யக்கூடியதாகவுமே இருந்து வந்திருக்கிறது. இணையத்தைத் தேடினால், உலகின் ஒவ்வொரு பாகத்திலும் காட்டேறி வகையைச் சேர்ந்த கதை ஒன்று உண்டு. நமது இந்தியாவில் கூட, பழைய சம்ஸ்கிருத படைப்புகளான ‘கதாஸரித்ஸாகரா’ போன்றவைகளில், வேதாளம் என்ற ஒருவித காட்டேறி வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேதாளமே விக்கிரமாதித்த மன்னனின் முதுகில் ஏறி, அவனை புதிர்க்கதைகள் சொல்லி, கதையின் முடிவைச் சொல்லாவிடில் சாப்பிட்டு விடுவதாக மிரட்டியது. அதேபோல், பண்டைய கால இந்திய படைப்புகளில், ப்ரம்ம ராட்சஸன் என்ற ஒருவித காட்டேறியையும் காணலாம். இந்த பிரம்ம ராட்சஸன் கொஞ்சம் அறிவு படைத்த ஒரு காட்டேறி. இதுவும் எதாவது சிக்கலானதொரு புத்தகத்தின் இலக்கண கேள்வியை வருபவர்களிடம் கேட்டு, அவர்கள் பதில் சொல்லாவிடில் அவர்களை அடித்து சாப்பிட்டு விடும் என்று கதைகளில் வருகிறது (குறிப்பாக சட்டென்று நினைவு வருவது, பதஞ்ஜலி என்ற, பண்டைய கால முனிவரைப் பற்றிய கதை. அவரிடம் பாடம் படிக்க வந்து இப்படி ஒரு காட்டேறியாக மாறிய மாணவனின் கதையைச் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகி, இது ஆன்மீக ப்லாக் ஆகிவிடும் என்பதால், எதாவது பழைய கால புத்தகத்தில் படித்துக்கொள்க).

சொல்லவந்தது என்னவென்றால், உலகம் பூராவுமே காட்டேறிகளைப் பற்றிய விவரணை இருக்கிறது என்பதே.

குறிப்பாக, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை . .ச்சே… பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பாவில் இந்த காட்டேறி நம்பிக்கை பெருமளவில் இருந்திருக்கிறது என்றும் தெரிந்துகொள்கிறோம். அதிலும், கிழக்கு ஐரோப்பாவில் பரவத்துவங்கிய இந்த நம்பிக்கை, பதினெட்டாம் நூற்றாண்டின் பாதியில் கிட்டத்தட்ட முழு ஐரோப்பாவையுமே மூடிக்கொண்டது. இதனால் அரசு அதிகாரிகளே பிணங்களைத் தோண்டியெடுத்து, அவைகளின் நெஞ்சில் Stakes என்று சொல்லக்கூடிய கூரான மரக்குச்சிகளை செருகினர். இதனால் காட்டேறி தொலைந்ததோ இல்லையோ அவர்களின் ஒருசில நாட்களின் சாப்பாடு தொலைந்தது. இதே காலகட்டத்தில், சரித்திரத்தில் அதிகாரபூர்வமாக பதிவான இரண்டு காட்டேறிகளின் கொலைகள் பரவலாக வெளியே தெரிய ஆரம்பித்தன.

ஸெர்பியாவில்தான் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட இந்த இரண்டு காட்டேறி சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 1725லிருந்து 1734க்குள். ஏற்கெனவே இறந்துபோன இருவர், சமாதியிலிருந்து வெளியே வந்து கொலைகள் செய்த சம்பவங்கள் அவை.

அச்சம்பவங்கள் உண்மையா பொய்யா? யாருக்கும் தெரியாது.

இப்படியாக நாளொரு பாடியும் பொழுதொரு ரத்தமுமாக காட்டேறிகள் பல்கிப்பெருகியபோதுதான் ப்ராம் ஸ்டோக்கர் என்ற ஆசாமி சும்மா இருக்காமல் ‘Dracula’ என்ற கதையை எழுதிவைக்க, அதைப்படித்தவர்களின் ராத்தூக்கம் தொலைந்தது. எப்போதுவேண்டுமானாலும் ட்ராகுலா வந்து ரத்தத்தைக் குடித்துவிடுவான் என்பதால்.

இதே காலகட்டத்தில், காட்டேறி அல்லது சூனியக்காரி என்று சந்தேகப்படும் ஆசாமிகளையெல்லாம் தூக்கில் போட்டு விடுவது அல்லது தண்டிப்பது என்ற விஷயம் அளவுக்கதிகமாகவே புழக்கத்தில் இருந்ததாகவும் படிக்கிறோம்.

இதையெல்லாம் பற்றித் தெரிந்தால்தான் காட்டேறிகளைப் பற்றிய படங்கள் கொஞ்சமாவது சுவாரஸ்யமாக இருக்கும் (அல்லது) இருக்கலாம்.


சரித்திரத்தில் புகழ்பெற்ற ஆசாமிகள், உண்மையில் செய்த வேலையே வேறு என்ற கற்பனை எவ்வளவு வசீகரமாக இருக்கிறது? DaVinci Code புத்தகத்தைப்போல். ஒரு உதாரணத்துக்கு, ந்யூட்டன் ஒரு ரகசிய சங்கத்துக்குத் தலைவர் பொறுப்பு வகித்தவர் என்று ஒரு ஆவணம் எங்காவது கிடைத்தால்? அதிலிருந்து ஒரு சூப்பர் சஸ்பென்ஸ் நாவல் எழுதக்கூடிய அளவு மேட்டர் தேறிவிடுகிறது. (ஆனால், இந்த விஷயத்தில் இந்தியர்களாகிய நமக்கு கொஞ்சம்கூட ஒரு சுவாரஸ்ய உணர்வே இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது. ‘காந்தி ஒரு காட்டேறி வேட்டையர்’ அல்லது ‘வீரசிவாஜி இப்படி இருந்தவர்தான்’ என்றெல்லாம் எதையாவது யாராவது எழுதியிருந்தால், அடுத்த நாளே பாடைதான். தமிழ்நாட்டு உதாரணங்கள் வேண்டாம் என்றே வீரசிவாஜி உதாரணம். தமிழ்நாட்டு சரித்திர பெயர்களை எழுதினால், எனக்கு சங்கு உறுதி. இந்த விஷயத்தில் அமெரிக்கர்களின் நகைச்சுவை உணர்வை அடித்துக்கொள்ளவே முடியாது. யாராக இருந்தாலும் பகடி செய்யப்பட்டு விடுகிறார்களே?).

இப்படி உதித்த ஒரு கற்பனையே Abraham Lincoln: Vampire Hunter.

படத்தில் கதையெல்லாம் பெரிதாக எதுவும் இல்லை என்பது படத்தின் தலைப்பிலேயே புரிந்துபோயிருக்கும். ஆப்ரஹாம் லிங்கன் ஒரு காட்டேறி வேட்டையராக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதே கதை.

சில சம்பவங்களின் கோர்ப்புதான் படம். குட்டிப்பையன் லிங்கனின் தாயார் நான்ஸி, ஒரு காட்டேறியால் கொல்லப்பட்டுவிடுவதை லிங்கன் பார்க்கிறான். பெரியவனானபின் அந்தக் காட்டேறியை கொல்ல அவன் எடுக்கும் முயற்சி, அக்காட்டேறியால் தோற்கடிக்கப்பட்டுவிட, அப்போது தன்னைக் காப்பாற்றும் ஹென்றி ஸ்டர்ஜெஸ் என்ற மனிதனிடம் பல தற்காப்புக்கலைகளைக் கற்று, அவனது உதவியால் காட்டேறிகளை ஒவ்வொன்றாக வேட்டையாட ஆரம்பிக்கிறான் லிங்கன். அண்ணனும் தங்கையுமான இரண்டு காட்டேறிகளே இத்தனை காட்டேறிகளும் அமெரிக்காவில் பரவியதற்குக் காரணம் என்று லிங்கனுக்கு ஹென்றியால் புரிவிக்கப்படுகிறது. லிங்கனின் நண்பன் ஜான்ஸனை கடத்தும் அண்ணன் காட்டேறி ஆடாமை சந்திக்கும் லிங்கன், ஆடாமின் காட்டேறி டீமில் இணையும் அழைப்பை நிராகரிக்கிறான். ஒரு கட்டத்தில், இந்த காட்டேறிகளிடம் கறுப்பின அடிமைகள் பல்வேறு நபர்கள் இருப்பதும் லிங்கனுக்குத் தெரியவருகிறது. இவர்களை விடுவிக்க நினைக்கிறான் லிங்கன். அரசியலில் நுழைகிறான். ஜனாதிபதி ஆகிறான். காட்டேறிகளிடம் இருக்கும் ஆயிரக்கணக்கான அடிமைகளை விடுவிப்பதற்காக சிவில் போர் அறிவிக்கப்படுகிறது.

இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

Forrest Gump படம் நினைவிருக்கிறதல்லவா? அந்த நாவலில், அமெரிக்காவில் எந்த முக்கியமான நிகழ்ச்சி நடந்தாலும் அது ஃபாரஸ்ட் கம்ப்பின் ஏதோ ஒரு தற்செயல் செயல்பாட்டினால்தான் என்று விளக்கப்பட்டிருக்கும். அதேபோல், இப்படத்தில் ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாமே காட்டேறிகளைக் கொன்று அமெரிக்காவைக் காக்க லிங்கன் எடுத்த முயற்சிகள் என்றே சொல்லப்படுகிறது. அப்படிக் காட்டுவது ஓகேதான். ஆனால் அவற்றில் ஒரு சில நிகழ்ச்சிகளில் சுவாரஸ்யம் இல்லை. நிகழ்ச்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக வந்துபோகின்றன. அவற்றில் சில சம்பவங்கள், ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு அருமையான ஸீரியஸ் படத்தில் வந்திருக்கவேண்டியவை. ஆனால், இப்படத்தில் இடம்பெற்று வேஸ்ட்டாகிவிடுகின்றன.

படத்தில் காட்டேறிகள் உண்டு. அவற்றை சரமாரியாக வெட்டிச்சாய்க்கும் ஹீரோ உண்டு. எதையும் எதிர்பார்க்காமல், கொஞ்சம் மெதுவாக நகரும் பாதி ஆக்‌ஷன் படத்தைப் பார்க்கவேண்டும் என்றால், இப்படத்தைப் பார்க்கலாம்.

எனக்குப் படம் போர் அடிக்கவில்லை. ஒரே ஒரு முறை பார்க்கலாம்.

படத்தில் டெம்ப்ளேட் காட்சிகளுக்குக் குறைவே இல்லை. அவற்றிலும் பல காட்சிகள், தமிழ்ப்படங்களில் ஆல்ரெடி நாம் பார்த்துவிட்டவையே (ரஜினி குண்டுகளைத் தோளில் மாட்டிக்கொண்டு பழிவாங்கக் கிளம்புவது, கமல் தேவர் மகனில் தேவராக மாறியபின் கதவைத் திறந்துகொண்டு ஸ்லோ மோஷனில் நடந்துவருவது ஆகியவை).

Abraham Lincoln: Vampire Hunter படத்தின் ட்ரெய்லர் இங்கே.

பி.கு – நாங்கள் படம் பார்த்த முகுந்தா தியேட்டரில் மொத்தமே 15 பேர்தான் எங்களுடன் படம் பார்த்தவர்கள். அதிலும், பால்கனியில் மொத்தம் 5 பேர்.

  Comments

11 Comments

  1. தல … கொஞ்சம் Batman சீரீஸ கண்ணுல காட்டுங்க…. இன்றைக்கு batman பதிவை எதிர்பார்த்தேன்.

    Reply
  2. கருந்தேள், இந்த திரைப்படமும் புத்தகமும் Mash-up என்னும் படைப்புவகையை சேர்ந்தவை. Steampunk-ன் மிக முக்கியமான கருவிகளோ தொழில்நுட்பமோ இந்த புத்தகத்தில் கிடையாது. இரண்டு வித்தியாசமான படைப்புவகைகளை சேர்த்து ஒன்றாக எழுதும் வகையே Mash-up. ஒரு சரித்திர கதாபாத்திரத்தையும் (லிங்கன்) ஒரு கற்பனை கதாபாதிரத்தியும் (காட்டேறிகள்) mash செய்ததால் இந்த காரணப்பெயர் :-). Pride, prejudice and zombies, Sense, sensibility and sea-monsters போன்ற புத்தகங்களும் இவ்வகையே. உங்களுக்கு ஒரு லிங்கன் வாழ்கை சித்திரம் வேண்டுமாயின் சற்றே பொறுங்கள். டானியல் டே லூயிஸ் நடிப்பில், ச்பீல்பர்கு இயக்கத்தில் ஒரு திரைப்படம் இந்த ஆண்டு வரவிருப்பதாக கேள்வி.

    மற்றுமொரு தகவல் : உங்கள் / எங்கள் பிரியத்திற்குரிய XIII தற்போது “ரீல்ஸ்” அலைவரிசையில் ஒரு சிறு தொகுதியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது. கதாநாயகன் யார் தெரியுமா ?? ஸ்டூவர்ட் டவுன்செண்டு. ஆம், உங்களின் / எங்களின் பேராபிமான கதாபாத்திரமான “ஆரகன்” வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்ட அதே டவுன்செண்டு தான்.

    Reply
  3. //இந்த விஷயத்தில் இந்தியர்களாகிய நமக்கு கொஞ்சம்கூட ஒரு சுவாரஸ்ய உணர்வே இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது. ‘காந்தி ஒரு காட்டேறி வேட்டையர்’ அல்லது ‘வீரசிவாஜி இப்படி இருந்தவர்தான்’ என்றெல்லாம் எதையாவது யாராவது எழுதியிருந்தால், அடுத்த நாளே பாடைதான். தமிழ்நாட்டு உதாரணங்கள் வேண்டாம் என்றே வீரசிவாஜி உதாரணம். தமிழ்நாட்டு சரித்திர பெயர்களை எழுதினால், எனக்கு சங்கு உறுதி.//

    வாய்ப்பே இல்லை…அக்மார்க் ராஜேஷ் ஸ்டைல்.

    தொடர்ந்து இது போன்ற படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறீர்கள்.
    ‘மேகதக்கதாரா ராஜேஷை’ சீக்கிரம் களத்தில் இறக்குங்கள்.

    Reply
  4. படத்தை விட உங்கள் விமர்சனம் சூப்பர்.
    எனக்கு பிடித்த பகுதி
    //ஒரு உதாரணத்துக்கு, ந்யூட்டன் ஒரு ரகசிய சங்கத்துக்குத் தலைவர் பொறுப்பு வகித்தவர் என்று ஒரு ஆவணம் எங்காவது கிடைத்தால்? அதிலிருந்து ஒரு சூப்பர் சஸ்பென்ஸ் நாவல் எழுதக்கூடிய அளவு மேட்டர் தேறிவிடுகிறது.//

    உலக cinema ரசிகன் கருத்துதான் என் கருத்தும்.
    திரைக்கதை எ. இப்படி-21??
    சகுனி, பில்லா-2 விமர்சனம் ??

    Reply
  5. Nice Review sir. i am a new buddy to ur blog but it is really give me pleasure to read all your articles… keep it up..

    Reply
  6. எனக்கு ட்ரைளர் சுத்தம்மா பிடிக்கலை இதை எல்லாம் எங்க பார்க்க அப்படி நினைத்து கொண்டு இருந்தேன் உங்க விமர்சனம் படித்தவுடன் அப்படி ஒரு நினைப்பே இல்லை….நம்மூரில் காந்தி ரத்தகாடேரியை வேட்டையாடு விளையாடு என செய்வதை போல இருந்தால் எப்படி இருக்கும்…

    Reply
  7. This comment has been removed by the author.

    Reply
  8. after reading your review only I went to theatre ( because I am not impressed with there trailer ) but My Bad luck , the show was cancelled in the theatre ,they are changing the theatre in to 7.1 track for dark knight rises ( Madurai -Ambika theatre )

    Reply
  9. @ லக்கி – இதோ பேட்மேன் போட்டாச்சி 🙂

    @ Tyler Durden – உங்கள் விரிவான கமெண்டுக்கு நன்றி பாஸ். Stetampunk & Mash -up வித்தியாசம் தெரியும்னு சொன்னா, ‘உதாரு உடுறான் பாரு”ன்னு நினைப்பீங்க.. 🙂 .. ஆனா உண்மையிலயே மேஷ் அப் பத்தி எழுதனும்னு நினைச்சி கட்டக்கடசீல மறந்து வெச்சிட்டேன்… அதை மிகச்சரியா இங்க விளக்கினதுக்கு என்னோட நன்றிகள். XIII பத்தின மேட்டர் நீங்க சொல்லித்தான் தெரியும். செம்மையான மேட்டரா இருக்கே இது?

    @ உலக சினிமா ரசிகரே – அவசியம் எனக்கும் நல்ல அருமையான உலகப் படங்கள் பத்தி எழுத ஆசைதான். மிக விரைவில் மறுபடி ஆரம்பிக்கிறேன். அவசியம்.

    @ சிங்கார வேலன் – சகுனி, பில்லா 2 எல்லாம் ஆல்ரெடி பல ப்ளாக்ல வந்தாச்சி தலைவா.. அதான் நானு உட்டுட்டேன்

    @ Brahmanandhan – மிக்க நன்றி தலைவா

    @ சின்ன மலை – //நம்மூரில் காந்தி ரத்தகாடேரியை வேட்டையாடு விளையாடு என செய்வதை போல இருந்தால் எப்படி இருக்கும்…// – உடனடியா உங்க வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தூய வெள்ளுடை தரித்த அடியாட்கள் வந்து நம்மளை கைமா பண்ணுறதுல போயி அது முடியும் 🙂 .. ஆசைய பாரு

    @ Karthik – அது பரவால்ல உடுங்க. இந்தப் படத்தை டிவிடில பார்த்துக்கலாம். டார்க் நைட் ரைசஸ் தான் முக்கியம் 🙂

    Reply
  10. Haven’t you heard about Immortals of Meluha…this book converts hindu gods and godesses into some normal humans with good story.

    Reply
  11. Thanks for the writeup. I deineftily agree with what you are saying. I have been talking about this subject a lot lately with my father so hopefully this will get him to see my point of view. Fingers crossed!

    Reply

Join the conversation