Fade In முதல் Fade Out வரை – 15

by Karundhel Rajesh August 7, 2014   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பைப் பார்த்துவிட்டோம். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில டிப்ஸ்களும் ப்ளேக் ஸ்னைடரின் வசம் இருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம்.

Fade In முதல் Fade Out வரை


 

7. Covenant of the Arc

ஒரு திரைக்கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரே போன்று இருப்பதில்லை. இருக்கவும் கூடாது. துவக்கத்தில் எப்படி இருந்ததோ, இறுதியில் அதிலிருந்து சற்றேனும் மாற்றம் அடைந்திருக்கவேண்டும். அதுதான் Covenant of the Arc.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஸிட் ஃபீல்டும் இதை வலியுறுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஸிட் ஃபீல்டின் கருத்தை இங்கே படிக்கலாம். முதலில் இதைப் படித்துவிட்டால் அவசியம் இனி வரப்போகும் விஷயங்கள் தெளிவாகிவிடும். எனவே ஸிட் ஃபீல்டின் கருத்தைப் படித்துவிட்டு வாருங்கள். கருந்தேளில் வந்த பழைய கட்டுரை அது.

இது ஏன்? எதற்காக ஒரு கதாபாத்திரம் மாற வேண்டும்?

நிஜவாழ்க்கையில் நம்மை மையமாக வைத்து யோசித்தால், நமது வாழ்க்கையில் சில வருடங்களுக்குமுன் எப்படி இருந்தோமோ அப்படியேவா இப்போது இருக்கிறோம்? அந்த இடத்தைவிடவும் வேறான ஒரு இடத்தில்தானே நமது புரிதலில் நாம் இப்போது இருக்கிறோம்? அது குணத்திலாகட்டும்; செயல்பாட்டில் ஆகட்டும்; புரிதலில் ஆகட்டும்; எதுவாக இருந்தாலும் நமது செயல்கள்/எண்ணங்கள் மாறியிருக்கின்றன. காரணம் நமக்குத் தொடர்ச்சியாக வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்கள். பிறரிடம் பழகுவதாலேயே குயுக்தியாக இனி எப்படி நடந்துகொள்வது? சாமர்த்தியமாக எப்படி வாழ்வது? போன்ற பாடங்கள் நமக்குக் கிடைக்கின்றன. எத்தனை முறை அடிபட்டாலும் அதேபோன்று இருக்க நாம் என்ன ஏமாளிகளா?

வாழ்க்கையில் எப்படி மாற்றங்கள் அவசியமோ அதேபோல்தான் திரைக்கதையிலும் அவை அவசியம். இப்படிப்பட்ட மாற்றங்கள் இருந்தால்தான் கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். பிடித்து வைத்த களிமண் போலவே ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை இருக்கும் கதாபாத்திரங்கள் நமக்குப் பிடிக்காமலேயே போய்விடும்.

இதுவரை வெளிவந்த எல்லாப் படங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், அட்டகாசமான படங்கள், பிற சாதாரணமான படங்களிலிருந்து தங்களைப் பிரித்துத் தனித்துவத்துடன் காட்டிக்கொள்வதில் இந்தக் கதாபாத்திர மனநிலை மாற்றம் ஒரு முக்கியமான அம்சமாக விளங்குகிறது என்பது புரியும். ஏனெனில், அந்தக் கதாபாத்திரம் இருக்கும் சூழலும் சரி- அதனுடன் வாழும் பிற பாத்திரங்களும் சரி – அதைப் பார்க்கும் ஆடியன்ஸும் சரி – இந்த மாற்றத்தினால் பாதிக்கப்படப்போகிறார்கள். அந்த பாதிப்பு அவர்களின் மனங்களில் ஆழமான உணர்ச்சி ஒன்றை விட்டுச்செல்லப்போகிறது. அந்த உணர்ச்சிதான் முக்கியம். அந்த மாற்றத்தினால்தான் அந்தப் பாத்திரத்தை நாம் விரும்பவோ வெறுக்கவோ செய்யப்போகிறோம். அட்டகாசமான ஒரு கதை திரையில் நடக்கிறது என்றால், அதில் சம்மந்தப்பட்ட அனைவரும் மாறுவதுதான் இயல்பு. அந்த சம்பவத்தினாலேயே அவர்களின் மனம் ஏதாவது மாற்றத்தை அடையலாம். அதைப் பார்க்கும் ஆடியன்ஸாகிய நமது மனதையும் அந்த மாற்றம் பாதித்துக் கொஞ்சமேனும் மாற்றும். இது ஹாலிவுட்டில் மட்டும் அல்ல. எந்த நல்ல படம் என்றாலுமே அதில் கதாபாத்திரங்கள் மாற்றங்களை எதிர்கொள்ளும்.

சரி. வழக்கப்படி சில மாற்றங்களை கவனிப்போம். இனிமேல் வரப்போவதை ப்ளேக் ஸ்னைடர் சொல்லவில்லை. இது எனது தனிப்பட்ட அனாலிஸிஸ்.

அக்னி நட்சத்திரம் – எதிரிகளாக இருக்கும் கார்த்திக் & பிரபுவின் மாற்றம்.
பருத்தி வீரன் & ஆடுகளம் – விட்டேற்றியாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் கதாநாயகர்களின் மாற்றம்
புதிய பாதை – இரக்கமே இல்லாத கதாநாயகன் மெல்ல மெல்ல மாறுவது
மைனா – ஆரம்பத்தில் இருந்து இந்தப் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களுமே மாறுவதை கவனித்திருக்கிறீர்களா?
ரத்தக்கண்ணீர் – எம்.ஆர் ராதாவின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் இருந்ததை விட முற்றிலும் மாறுபட்ட நிலையில்தானே இறுதியில் இருக்கிறது?

இவையெல்லாம் பாஸிடிவ் மாற்றங்கள். நல்ல நிலையை நோக்கிக் கதாபாத்திரங்கள் மாறுவது. அதேசமயம் நல்ல நிலையில் இருந்து கெட்ட நிலைக்கும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

அஞ்சாதேயில் கிருபா கதாபாத்திரம் நல்லவனாக இருந்துதானே கெட்டவனாக மாறுகிறது? அதேசமயம் அந்தப் படத்தில் கெட்டனவனாக இருக்கும் சத்யா பாத்திரம் நல்லவனாகவும் மாறுகிறது. இதுபோன்ற போராட்டங்கள் திரைக்கதைக்கு சுவாரஸ்யத்தை வழங்கும். இதே ஃபார்முலாதான் ரஜினி நடித்த பழைய ‘ரங்கா’ படத்திலும் வரும்.

ஆங்கிலத்தில் சில படங்களில் இப்படிப்பட்ட மாற்றங்கள் எதுவுமே இருக்காது. காரணம் படத்தின் ஹீரோ ஒரு எதிர்நாயகனாக இருப்பான் (Anti Hero). உதாரணம் – Pulp Fiction படத்தில் ஜான் ட்ரவோல்டா பாத்திரம் மாறாது. ஆனால் அதே படத்தில் ஸாமுவேல் ஜாக்ஸன் பாத்திரம் மாறும். Guy Ritchieயின் படங்களில் முக்கால்வாசி பாத்திரங்கள் மாறவே மாறாது. இருக்கிறபடியே தான் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட படங்கள் வில்லன்களின் வாழ்க்கையையே சித்தரிக்கின்றன. கெட்டவன் தனது வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறும்போது இன்னும் கெட்டவனாகத்தான் இருப்பான். ஆனால் பாடங்களைக் கற்றுக்கொள்வான். எனவே அவனது வாழ்க்கை முன்னேறும்போது அந்தப் பாடங்களைப் பொறுத்த மாற்றங்கள்தான் அவனிடம் இருக்கும். இதுவேதான் சில க்வெண்டின் டாரண்டினோ படங்களிலும் இருக்கும். Reservoir Dogs படத்தில் யார் மாறுகிறார்கள்? யாரும் இல்லை. ஜாக்கி ப்ரௌனிலும் அப்படியே. கில் பில்லிலும் அப்படித்தான். குற்றுயிராகக் கிடக்கும் அடியாள் ஒருத்தி அவளது வாழ்க்கையை அப்படி ஆக்கியவர்களை ஒவ்வொருவராகப் பழிவாங்குகிறாள். அப்படி ஒவ்வொருவராகக் கொல்லும்போது புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறாள். இறுதியிலும் அதே கெட்டவளாகத்தான் அவள் இருக்கிறாள். ஆனால் அவளை ஆடியன்ஸுக்குப் பிடிப்பதன் காரணம் – அவளைவிடக் கெட்டவர்களைக் காண்பித்துவிட்டதுதான்.

இதுபோல் Anti-Hero படங்களைக் காண்பிக்கும்போது கவனம் முக்கியம். இத்தகைய எதிர் நாயகர்களைக் காண்பிக்கும்போது அவர்களை விடக் கொடிய வில்லன்கள் வேண்டும். அப்போதுதான் இந்த எதிர் நாயகர்களை ஆடியன்ஸ் விரும்புவார்கள். ஆரண்ய காண்டத்தில் பசுபதி அடிப்படையில் ஒரு அடியாள். ஆனால் சிங்கப்பெருமாள் அவனைவிடக் கொடூரமானவன். அதனால்தான் பசுபதியை நமக்குப் பிடிக்கிறது. சூது கவ்வும் படத்தில் வரும் எல்லாருமே ஆள்கடத்தல் செய்பவர்கள்தான். எனவே எதிர் நாயகர்கள். அனால் அவர்களை விடக் கொடூரமானவனாக பிரம்மா வருகிறார். அவர் நல்லவர்களின் பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு போலீஸ். இருந்தாலும் படத்தில் யாரும் நல்லவர்கள் இல்லை. எல்லாருமே சந்தர்ப்பவாதிகள்தான் என்பதால் பிரம்மா இவர்களைத் துரத்தும்போது இவர்களை நமக்குப் பிடிக்கிறது.

எனவே, எல்லாப் படங்களிலும் மாற்றம் அவசியம் என்று நினைத்துக்கொண்டு மாற்றம் இல்லாமலேயே நன்றாக இருக்கும் கதாபாத்திரங்களைப் போட்டு ராவி ஆடியன்ஸை எரிச்சல்படுத்தக் கூடாது என்பதும் முக்கியம். உணர்ச்சிபூர்வமன கதைகளில் கதாபாத்திரங்கள் மாறலாம். பழிவாங்கும் கதைகள், எதிர் நாயகர்களின் கதைகள் ஆகியவற்றில் மாற்றம் தேவைப்பட்டால் மட்டுமே வைப்பது நல்லது. ரொமாண்டிக் படங்களில், கதாநாயகன் காதலால் மெல்ல மெல்ல மாறுவதைப் போல் யோசித்துப் பார்க்கலாம்.

8. Keep the Press Out

இந்த விதி ஹாலிவுட்டுக்கே பெரிதும் பொருந்தும். என்றாலும், சமீபகாலமாக தமிழ்ப்படங்களிலும் இது பொருந்தக்கூடிய சூழல் என்பதால் இதை நன்றாகக் கவனிப்போம்.

பல ஹாலிவுட் படங்களில் மீடியா பெரிதாகக் காட்டப்பட்டிருக்கும். எதாவது ஒரு பிரச்னை வரும்போது, உலகளாவிய பிரச்னை அது என்று காட்டப்படுவதற்காக டிவி, இண்டர்நெட் போன்றவற்றில் இதைப் பெரிதாகக் காட்டுவார்கள். எதாவது ஏலியன் தாக்குதல், ஸோம்பிக்கள் பரவுதல், ராட்சத ஜந்துக்கள் எல்லாரையும் தாக்குவது என்பதுபோன்ற விஷயங்கள் இதில் அடங்கும். இப்படிப்பட்ட ஒரு உலகளாவிய பிரச்னையை நாம் நமது திரைக்கதையில் கையாள்கிறோம் என்றால் மட்டுமே மீடியாவைக் காட்டுவது நல்லது. ஒருவேளை அது ஒரு தனிப்பட்ட குடும்பமோ கதாபாத்திரமோ சந்திக்கும் பிரச்னை என்றால் மீடியா அறவே வேண்டாம்.

‘இது என்னய்யா லூசுத்தனமான ரூலா இருக்கு’ என்று தோன்றுகிறதா?

இந்த ஐடியாவை ப்ளேக் ஸ்னைடருக்குக் கொடுத்தவர் ஸ்பீல்பெர்க் என்று சொன்னால் அந்த எண்ணம் மறைந்துவிடும்.

ஈ.டி படத்தில் மீடியா எங்குமே வராது. ஆனாலும் அதில் ஒரு ஏலியன் வருகிறது. இருப்பினும் அந்த ஏலியன் ஒரு சிறிய குடும்பத்தில்தானே தஞ்சம் அடைகிறது? அதை மீடியாவில் காட்டினால் அந்தக் குடும்பத்தின்மீதான கவனம் ஆடியன்ஸுக்குச் சிதறிவிடும் – மீடியாவில் வந்ததால் அதன் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று ஸ்பீல்பெர்க் உணர்ந்துகொண்டார். இதனால், மீடியா வருவதுபோன்ற காட்சிகளை மாற்றி எழுதினார். அது நன்றாக செயல்படவும் செய்தது. அந்தப் படம் மட்டும் இல்லாமல், இப்படிப்பட்ட தனிப்பட்ட பிரச்னைகள் வரும்போதெல்லாம் அவரது எந்தப் படத்திலும் மீடியா வராது. அவரது படங்கள் என்று மட்டும் இல்லாமல், எந்த Dreamworks தயாரிப்பிலும் அப்படித்தான் என்று வைத்தார் ஸ்பீல்பெர்க். இது ஸ்பீல்பெர்க்கின் முக்கியமான விதிகளில் ஒன்று.

உதாரணமாக, ஒரு வருடம் முன்னர் ப்ராட் பிட் நடித்த World War Z படம் வெளிவந்தது. உலகத்தில் அனைவரும் வேகமாக ஸோம்பிகளாக மாறிக்கொண்டிருக்கும் வகையைச் சேர்ந்த படம் அது. அந்தப் படத்தில், உலகநாடுகள் அனைத்துமே ஸோம்பிக்களுக்கு எதிரான தாக்குதல் நடத்தும். இதனால் ஒவ்வொரு நாட்டுக்கும் பிற நாடுகளில் நிகழக்கூடிய சம்பவங்கள் தெரிந்திருக்கவேண்டிய சூழல். அப்படிப்பட்ட களத்தில் அவசியம் மீடியா பெரும்பங்கு வகிக்கிறது. அதேபோல் சமீபத்தில் வெளிவந்த Godzilla படத்திலும் இதேபோன்ற ஒரு சூழல்தான். அதுவேதான் Pacific Rim படத்திலும். உலகளாவிய பிரச்னைகள். Independence Day படமும் இதேபோல்தான்.

இதுபோன்ற படங்களில் மீடியாவைக் காட்டலாம். அதனால் சுவாரஸ்யம் அதிகம்தான் ஆகும். ஆனால் அதுவே எத்தனை விசித்திரமான களமாக இருந்தாலும், தனிநபரோ அல்லது ஒரு குடும்பம் மட்டுமோ பாதிக்கப்படக்கூடிய ஒரு களத்தில் மீடியா அறவே வேண்டாம் என்பதுதான் முக்கியமான விஷயம்.

தமிழில் இதுபோன்ற படங்கள் இல்லை என்பதால் இது தமிழுக்குப் பொருந்தாது. இருந்தாலும் ‘அரிமா நம்பி’ போன்ற படங்களில் இரண்டாம் பாதியில் வரும் அந்த போலீஸ் கண்ட்ரோல் ரூம் சம்பவங்கள் கொஞ்சம் அலுக்கத்தான் செய்தன அல்லவா? அதிலும் அவை Bourne Supremacy படத்தில் இருந்து எடுத்தவை வேறு.

எனவே, உலகலாவிய ப்ரச்னைகளைக் கையாளும் படங்கள் என்றால் மீடியா வரட்டும். தனிப்பட்ட பிரச்னைகள் எத்தனைதான் weirdஆக இருந்தாலும் சரி – மீடியாவைக் கொண்டுவருவது பற்றி நன்றாக யோசித்து முடிவெடுக்கவும்.

இத்துடன் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் குறிப்பான சில நுணுக்கங்கள் முடிகின்றன. அடுத்து என்ன? மிகவும் சுவாரஸ்யமான ஒரு தலைப்போடு அடுத்த வாரம் பேசுவோம்.


 

பயிற்சி #15

இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு விஷயங்களையும் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, உங்கள் திரைக்கதையில் அவை இடம்பெறுகின்றனவா இல்லையா என்று யோசிப்பதே இந்த வாரப் பயிற்சி. கூடவே, எத்தனை படங்கள் இந்த வகையில் உங்களால் யோசிக்க முடிகின்றன?

 

  Comments

2 Comments

  1. கதையிலிருந்து மீடியாவை நாம் கழற்றி விடுவதில் ஒரு சிறிய ஆபத்து என்னவெனில், எந்த லாஜிக் ஓட்டையையும் நம் கதையில் விமர்சகர்களால் கண்டுபிடிக்க முடியாத போது இந்த பாய்ண்டை பிடித்துக் கொண்டு நம்மை உலுக்கி எடுத்து விடுவார்கள். ( குறிப்பாக விகடன் மாதிரி விமர்சனங்கள், கருந்தேள் போன்ற கொடூர அலசுனர்கள்…! )

    Reply
  2. jairam

    உங்களது கட்டுரைகளில் ஹாலிவுட் கதை அலசல்களே உள்ளது. இந்திய சினிமாவிற்குரிய பாடல்கள் அதன் வரலாறு comic relief போன்றவைகளும் இருந்தால் நல்லது.

    Reply

Join the conversation