Fade In முதல் Fade Out வரை – 16

by Karundhel Rajesh August 28, 2014   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை பற்றிய டிப்ஸ்களைப் பார்த்து வருகிறோம்.

Fade In முதல் Fade Out வரை[divider]

பொதுவாக திரைக்கதை எழுதும்போது சில பிரச்னைகள் நேர்வதுண்டு. அப்படிப்பட்ட பிரச்னைகளைப் பற்றி ஸிட் ஃபீல்டின் கருத்துகளை தினகரன் வெள்ளிமலரில் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தொடரில் சில அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம். அதேபோன்ற பிரச்னைகளை ப்ளேக் ஸ்னைடரின் பாணியில் இனி கவனிக்கலாம்.

The Hero Leads

திரைக்கதையில் எப்போதும் வரக்கூடிய பிரச்னைகளில் முதலாவதாக, நமது கதாநாயகன்/கதாநாயகி ஆக்‌ஷன் புரிபவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனரா அல்லது எதுவுமே செய்யாமல் எருமை மாட்டைப் போல் அங்கும் இங்கும் அலைபவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனரா என்பதே இருக்கிறது. இதனை மேலோட்டமாகக் கவனிக்கும்போது ‘அட இதெல்லாம் ஒரு பிரச்னையா? என் கதைல ஹீரோக்கு ஃபைட் இருக்கு; பாட்டு இருக்கு; காமெடி இருக்கு; இன்னும் எல்ன்னல்லாமோ இருக்கு; அதெல்லாம் பத்தாதா? போங்கய்யா’ என்று தோன்றலாம். ஆனால் இது நம்மையே அறியாமல் மிகவும் எளிதாக நமது திரைக்கதையில் நுழைந்துவிடும் தன்மையுடைய பிரச்னை.

எனது தினகரன் தொடரில் ‘மரியான்’ படத்தை இதற்கு உதாரணமாக எழுதியிருப்பேன். அதில் கதாநாயகன் மரியானின் பாத்திரம் ஆரம்பத்தில் இருந்து எதுவுமே செய்யாது. அவனைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எதிர்வினை மட்டுமே புரிவான் மரியான். அவனாக முன்வந்து எதுவுமே செய்யமாட்டான். இப்படி எப்போது பார்த்தாலும் ரியாக்ட் மட்டுமே செய்துகொண்டிருந்தால் அந்தப் பாத்திரம் மக்களுக்கு சிறுகச்சிறுக அலுக்க ஆரம்பித்துவிடும். அவர்களுக்கே தெரியாமல் ஒரு எரிச்சல் தோன்ற ஆரம்பித்து அது படம் சரியில்லை என்று சொல்வதில் கொண்டுபோய் விடும்.

இன்னொரு உதாரணமாக ஏழாம் அறிவின் சூர்யா பாத்திரத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் அந்தப் பாத்திரம் அறிமுகப்படுத்தப்படுவதில் இருந்தே படத்தில் ஆங்காங்கே முக்கியமான முடிவுகள் எடுப்பதெல்லாம் யார் என்று கவனித்தால், அது கதாநாயகி ஸ்ருதியின் பாத்திரம்தான் என்று தெரிகிறது. கதாநாயகன் சூர்யாவுக்குப் படத்தில் முடிவுகள் எடுத்து எதிர்வினைகள் புரியும் வேலை மிகவும் குறைவு. ஆங்காங்கே சண்டைகள் போட்டு, பாட்டுகள் பாடுவதுமட்டும்தானே சூர்யாவின் பாத்திரம் செய்கிறது? அப்படிப்பட்ட பாத்திரம் எப்படி ஆடியன்ஸுக்குப் பிடிக்கும்?

இப்படிப்பட்ட ஒரு அலுப்பான ஹீரோ/ஹீரோயின் உங்கள் கதையில் எழுதப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை எப்படித் தெளிவாகத் தெரிந்துகொள்வது?

1. உங்கள் கதையின் பிரதான பாத்திரத்தின் நோக்கம் திரைக்கதையின் துவக்கத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறதா?

ஆடியன்ஸுக்கும் உங்களுக்கும் இந்த நோக்கம் தெளிவாகப் புரியவேண்டும். வில்லனைக் கொல்லவேண்டுமா (கில் பில்)? சிறுவனைக் காக்கவேண்டுமா (டெர்மினேட்டர் 2)? கதாநாயகியைக் காதலிக்கவேண்டுமா?/கப்பல் விபத்திலிருந்து அவளைப் பத்திரமாகக் காப்பாற்றவேண்டுமா (டைட்டானிக்)? கொலைசெய்தவர்களைக் கண்டுபிடிக்கவேண்டுமா (வேட்டையாடு விளையாடு)? ரவுடியின் பின்னால் சுற்றி அவனைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கவேண்டுமா/ரவுடியை ஏமாற்றித் திரைப்படம் எடுக்கவேண்டுமா (ஜிகர்தண்டா)? கதையே இல்லாமல் ஒரு திரைக்கதையை எழுதவேண்டுமா (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)?

இப்படி நோக்கத்தை விளக்கினால் மட்டும் போதாது. அந்த நோக்கம் தெளிவாகக் கதையில் ஆங்காங்கே கதாபாத்திரங்களால் சொல்லப்படவேண்டும். செயல்களால் நடத்தப்படவேண்டும். கொலைகாரனைக் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு கமல்ஹாஸன் பாத்திரம் படம் முழுதும் பப்புக்குள் அமர்ந்து பியர் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்?

2. அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை ஹீரோ வலிந்து முடிவெடுத்துச் செயல்படுகிறாரா, அல்லது தானாகவே அவருக்கு எல்லாமே நடக்கிறதா?

எல்லாமே ஜாலியாக ஹீரோவுக்கு நடக்கிறது என்றால் பிரச்னை. ஹீரோவின் லட்சியம்/நோக்கத்துக்குப் பல தடைகள் வரவேண்டும். அந்தத் தடைகளை மீறி அவன் முன்னே செல்லவேண்டும். கஷ்டப்படவேண்டும். சாதிக்கவேண்டும்.

3. உங்கள் ஹீரோ தானாக முன்வந்து செயல்புரிகிறாரா அல்லது எப்போது பார்த்தாலும் அவரைச் சுற்றி நடக்கும் செயல்களுக்கு ரியாக்ட் செய்துகொண்டே இருக்கிறாரா?

ஹீரோ செய்யும் செயல்கள் எல்லாமே அவனது மனதில் எரிந்துகொண்டே இருக்கும் இடைவிடாத லட்சியத்தின் பலனாகவே இருக்கவேண்டும். அவனது பிரதான நோக்கத்தை நிறைவேற்ற அவன் செய்யும் வேலைகளாகவே இருக்கவேண்டும். சம்மந்தமில்லாமல் எதையாவது செய்யக்கூடாது. ஹீரோவுக்கு சம்மந்தமே இல்லாமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது/காட்சிகள் வந்துகொண்டிருக்கின்றன என்றால் அங்கே அவசியம் பிரச்னை உண்டு என்று பொருள்.

4. அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைக் கதாபாத்திரங்கள் ஹீரோவுக்குச் சொல்கின்றனரா, அல்லது அவனாகவே அவர்களிடம் என்ன செய்யவேண்டும் என்று சொல்லி அவர்களை வழிநடத்துகிறானா?

ஏழாம் அறிவை நினைவுபடுத்திக்கொள்ளவும். அந்தப் படத்தின் ஹீரோ ஸ்ருதிதான். சூர்யா அல்ல. நமது கதையில் ஹீரோதான் எல்லாவற்றையும் முடிவெடுத்துச் செயல்படவேண்டும். ஹீரோவுடன் எப்போதும் இருக்கும் பிறர் அதையெல்லாம் சொல்லக்கூடாது. காரணம் நமது கதையில் ஹீரோதான் ஹீரோ. பிறர் அல்ல. அவன் ஹீரோ என்பதால், பிறர் அவனை நம்பித்தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் அவன் பிறரிடம் யோசனை கேட்கக்கூடாது. எப்போதாவது இது நடக்கலாம். ஆனால் எப்போதுமே நடந்துகொண்டிருக்கக்கூடாது. அப்படி நடந்தால் ஹீரோவிடம் மக்களால் இணைந்துகொள்ள முடியாது.

இந்த நான்கு பாயிண்ட்களில் ஒன்றோ எல்லாமோ உங்கள் திரைக்கதையில் இருந்தால், முதலில் அவை சரிசெய்யப்பட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் ஹீரோவை யாருக்கும் பிடிக்காமல் போய், அதனால் படம் படுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

Talking the Plot

பெரும்பாலும் தமிழ்ப்படங்களின் பிரச்னை இதுவாகத்தான் இருக்கிறது. கதையில் நடப்பவற்றையெல்லாம் வசனங்களின் மூலம் அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பதுதான் இது. சமீபத்தில் ‘அரிமா நம்பி’யில் இது அதிகமாகவே இருக்கும். கண்முன்னால் ஒரு நபரை அடியாட்கள் மிரட்டுகிறார்கள். அதை ஒளிந்திருந்து பார்க்கும் ஹீரோ, ‘அங்க பாருங்க அந்த ஆளை மிரட்டுறாங்க?’ என்று பக்கத்திலேயே ஒளிந்திருக்கும் நபரிடம் சொன்னால் எப்படி இருக்கும்? ‘ஆடியன்ஸுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும்’ என்ற எண்ணம் திரைக்கதை எழுதும்போது வரத்தான் செய்யும். ஆனால் ஆடியன்ஸ் முட்டாள்கள் அல்ல என்பதையும் அவ்வப்போது நமக்கு நாமே நினைவுபடுத்திக்கொண்டே இருந்தால் அந்த எண்ணம் போய்விடும். எதைச் சொல்லவேண்டும்; எதைச் சொல்லக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.

உதாரணமாக, Inglourious Basterds படத்தின் துவக்கத்தில் வரும் காட்சியை நினைவுபடுத்திக்கொள்ளலாம். அதில் ஜெர்மனியைச் சேர்ந்த ஹான்ஸ் லண்டா என்ற அதிகாரி, ஃப்ரான்ஸில் ஒரு குடியானவரின் வீட்டுக்கு வருவார். ஏன் வருகிறார்? அந்த அதிகாரி யார்? அந்தக் குடியானவர் யார் என்பதெல்லாம் எங்குமே சொல்லப்படாது. அதுதான் முதல் காட்சி. உள்ளே வரும் அதிகாரி, குடியானவரிடம் பேசத் துவங்குவார். படிப்படியாக, ஒவ்வொரு வசனமும் கதையில் என்ன நடக்கிறது என்பதைப் புரியவைக்கும். இறுதியில், ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் ஃப்ரெஞ்ச் அகதிகளை அந்த அதிகாரி எளிதில் கொன்றுவிடுவார். இந்தக் காட்சிதான் ‘எதையெல்லாம் சொல்லலாம்? எதையெல்லாம் சொல்லக்கூடாது’ என்பதற்கு அட்டகாசமான உதாரணம். எதுவுமே வெளிப்படையாக சொல்லப்படாமல் எல்லாமே உள்ளுறையாகவே சொல்லப்பட்டிருக்கும். அதுதான் subtext. ஒரு திரைக்கதையின் வசனங்களுக்கு அவசியம் தேவையான ஒன்று.

ஒரு இடத்தில் அந்த அதிகாரியே குடியானவரிடம் ‘என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் சொல்’ என்று கேட்பார். அது ஒரு புத்திசாலித்தனமான வசனம். தன்னைப்பற்றித் தானே சொல்லாமல் பிறரைச் சொல்லவைத்து, அதன்மூலம் ஆடியன்ஸுக்குக் கதையைப் புரியவைக்கும் டெக்னிக். இதிலெல்லாம் டாரண்டினோவை யாரும் அடித்துக்கொள்ளமுடியாது. இந்தக் காட்சியைப் பற்றி விரிவாக நமது Inglourious Basterds கட்டுரையில் கவனிப்போம்.

அதேபோல் நாம் சொல்ல விரும்பும் விஷயங்களைக் காட்டிவிடுதல் நல்லது. ஒரே காட்சியில் ஹீரோவும் வில்லனும் வருகிறார்கள். யார் ஹீரோ? யார் வில்லன்?

ஹீரோ வருகையில் அங்கே தெருவைக் கடக்கும் பாட்டிக்கு உதவுகிறான். வில்லனிடம் ஒருவன் பிச்சை கேட்கிறான். அவனை அறைகிறான் வில்லன். இந்தக் காட்சியைப் பார்த்தாலே யார் யார் எவர் எவர் என்பது விளங்கிவிடுகிறதுதானே (உதாரணம் படுபயங்கர க்ளிஷேவாக இருந்தாலும்?)? ‘அதோ வர்ரான் பாரு. அவன் எமகாதகன்..’ என்றெல்லாம் வசனம் வைக்க அவசியம் இல்லையே? (ஆனால் அப்படிப்பட்ட வசனங்களும் சிலசமயம் உதவும். ஆரண்ய காண்டத்தில் துண்டிக்கப்பட்ட விரலைப் பற்றி விளக்கும் காட்சி அத்தகையதுதான். எதை எங்கு வைத்தால் நன்றாக இருக்கும் என்று எழுதும்போதே தெரியவேண்டும். வில்லனுக்கு ஒரு அருமையான பில்ட் அப் காட்சி அது)

அதேபோல், ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்வதைவிட, அந்தக் கதாபாத்திரம் செய்யும் செயல்களைக் காட்டினாலே அதன் இயல்பு எளிதில் புரிந்துவிடும். இதைப்பற்றி இன்னும் விரிவாக ஸிட் ஃபீல்ட் விளக்கியிருப்பதைப் படிப்பதே நல்லது. அதனை இங்கே படிக்கலாம்.  படித்தபிறகு இதையும் அவசியம் படியுங்கள். இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்தால்தான் இந்தத் தலைப்பு எளிதில் புரியும்.

Make the Bad Guy Badder

ஒரு திரைக்கதையில் ஹீரோ சுசுறுப்பாக இருக்கலாம். எல்லாவற்றையும் அவனே கண்டுபிடிக்கலாம். பிறருக்கு அடுத்து நடக்கவேண்டியவற்றைச் சொல்லலாம். வழிகாட்டலாம். ஆனாலும் சில சமயங்களில் எதுவோ ஒன்று திரைக்கதையில் குறைவதுபோலவே இருக்கும். அப்போதெல்லாம் எது குறைகிறது என்று கவனித்தால், வில்லன் மோசமானவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்க மாட்டான். வில்லன் என்று ஒருவன் இருப்பான். ஆனால் அவன் தீவிர வில்லனாக இருக்கமாட்டான். இது சிலசமயம் நம்மையறியாமல் நிகழலாம். (அதற்காக எந்தத் திரைக்கதை எழுதினாலும் ‘வில்லன் கொடூரமாக இருக்கவேண்டும்.. வில்லன் மோசமானவனாக இருக்கவேண்டும்.. நரமாமிசம் சாப்பிடவேண்டும்’ என்றெல்லாம் அர்த்தம் இல்லை. அப்படிச் செய்யவும் கூடாது).

எங்கெல்லாம் வில்லனை பயங்கர வில்லனாகக் காட்டலாம்? எங்கெல்லாம் காட்டக்கூடாது? இதையெல்லாம் ப்ளேக் ஸ்னைடர் சொல்லவில்லை. அவர் பாட்டுக்கு ‘வில்லனை மோசமாகக் காட்டுங்கள்’ என்று மட்டும்தான் சொல்கிறார். அதை அப்படியே பின்பற்றினால் திரைக்கதை டண்டணக்கா ஆகத்தான் வாய்ப்பு அதிகம். காரணம் ப்ளேக் ஸ்னைடர் சொல்வது ஹாலிவுட்டுக்கு. தமிழுக்கு அது அப்படியே வேலைசெய்யாது.

எனவே, தமிழுக்கு ஏற்றபடி எனது அனுபவத்தில் இருந்து சில விஷயங்களைச் சொல்கிறேன்.

தமிழ்ப்பட திரைக்கதைகளில் அனுபவம் உள்ளவன் என்ற முறையில், பெரும்பாலான தமிழ்ப்படங்கள் தற்போது நகைச்சுவையையே மையமாக வைத்துத்தான் எழுதப்படுகின்றன (நான் சொல்வது குறைந்த பட்ஜெட்டில் திரைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள். பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ‘சூப்பர்ஹீரோ’ படங்களை அல்ல) என்பது நன்றாகத் தெரிகிறது. இந்தவிதமான படங்களில் வில்லன் அதிதீவிரமாக இருந்தால் படம் பார்க்கும் ஆடியன்ஸ் சிரித்துவிடத்தான் வாய்ப்புகள் அதிகம். ‘முண்டாசுப்பட்டி’யில் ஆனந்தராஜ் எப்படிப்பட்டவர்? ஜாலியான காமெடி வில்லன்தானே? அந்தப் படமே ஒரு நகைச்சுவைப் படம்தான்.  அதுவே ‘ஆரண்ய காண்டம்’ படத்தில்? அந்தப்படம் ஒரு த்ரில்லர். எனவே அதற்கேற்றபடி வில்லன் தீவிரமாக இருக்கவேண்டும்.

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இதை ஸிட் ஃபீல்ட் பலமுறை சொல்லியிருக்கிறார். என்னவென்றால், ஒருவேளை உங்கள் திரைக்கதையில் ஹீரோ ஒரு மோசமான நபர் என்று வைத்துக்கொள்ளலாம். தீய பண்புகள் உள்ளவன். அவனை ஹீரோ என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள். அப்படியென்றால் அவனை எப்படி ஹீரோ என்று ஆடியன்ஸை நம்ப வைப்பது?

அவனை விடவும் மோசமான ஒரு நபரைக் காட்டுவதன் மூலம். அந்த மோசமான நபர் நமது கதையில் ஹீரோவாக வரும் கெட்டவனைவிடவும் மோசமாக இருக்கவேண்டும். அப்போதுதான் ஆடியன்ஸ் இந்த இருவரில் நெகடிவ் பண்புகள் கம்மியாக இருப்பவனை ஹீரோவாக ஒத்துக்கொள்வார்கள். இதுதான் ஆரண்ய காண்டத்தில் நடந்தது. இதுவேதான் பல கேங்ஸ்டர் படங்களில் நடக்கும். ‘சூது கவ்வும்’ படத்திலும் இதேதான். ஹீரோவாக வருபவன் ஒரு கடத்தல்காரன். ஆனால் போலீஸாக வரும் பிரம்மா அவனைவிடவும் மோசமானவன். இதுதான் டெர்மினேட்டர் 2விலும் நடந்தது. டெர்மினேட்டர் 2வில் ஹீரோவாக வரும் அர்நால்ட் பாத்திரம் முதல் பாகத்தில் வில்லன். அந்த வில்லனைவிடவும் கோரமான, மோசமான இன்னொரு ரோபோவை இந்த இரண்டாம் பாகத்தில் காண்பித்தால் அர்நால்டை ஹீரோ என்று எளிதாக ஆடியன்ஸ் மனதில் நிறுவிவிடலாம் என்பதே ஜேம்ஸ் கேமரூனின் எண்ணம். அது அட்டகாசமாக வேலை செய்தது.

இதுதான் ஃபார்முலா. வில்லனை மோசமானவனாகக் காட்டவேண்டும் என்பது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. முதலிலேயே சொன்னபடி, திரைக்கதையில் எல்லா விஷயங்களும் சரியாக இருந்தும் எங்காவது எதையாவது சேர்க்கலாம் என்றாலோ, ஹீரோ ஒரு ஆண்ட்டி ஹீரோவாக இருக்கும் சில சமயங்களிலோ, ஹீரோ வில்லன் மோதல் சரியாக இல்லாமல் இருந்தாலோதான் வில்லனை மிகவும் மோசமானவனாகக் காட்டுவது வேலைசெய்யும்.

தொடருவோம்…

  Comments

1 Comment;

  1. raman

    நன்றி சகோ

    Reply

Join the conversation