Iraivi (2016) – Tamil
தந்தையின் இறுதிக் காரியங்கள் அனைத்தும் முடிந்தபின் இன்றுதான் இறைவி பார்க்க நேரம் கிடைத்தது. தமிழ் இணையம் முழுதும் இறைவி பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ பத்தோடு பதினொன்றாக எனதும். படத்தின் கதையை இந்த விமர்சனத்தில் எங்கும் விவாதிக்கப்போவதில்லை என்பதால் தைரியமாகப் படிக்கலாம். சில கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்க்கையில் அவர்களின் குணாதிசயங்கள் இதில் எழுதப்படலாம். ஆனால் அதனாலெல்லாம் கதைக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. இருந்தாலும், ஒருவேளை கதை எங்காவது லேசாக விவாதிக்கப்படலாம் என்பதால் இதோ ஸ்பாய்லர் அலர்ட்.
முதலில், படம் மிகவும் மெதுவாகவே செல்கிறது என்பதை அவசியம் கவனிக்க வேண்டும். தொடக்கத்தில் இருந்து இறுதிவரை எந்த இடத்திலும் வேகம் இல்லை. திரைப்படங்களை வேகமாகத்தான் எழுத/எடுக்கவேண்டும் என்று எந்தவித விதியும் இல்லை. இருந்தாலும், மெதுவாகச் செல்வதால் படத்துக்கு என்ன ப்ளஸ் பாயிண்ட்? உலகம் முழுக்கப் பல படங்கள் மிகவும் மெதுவான வேகத்தில் எடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. Slow Film Movement என்றே ஒரு கட்டுரை எனது தமிழ் ஹிந்து ‘சினிமா ரசனை’ தொடரில் உண்டு. கூடவே, எனக்கு மெதுவாக இருப்பது இன்னொருவருக்கு வேகமாக இருக்கலாம். படத்தின் வேகம் என்பது ஒரு relative விஷயம்தான். ஆனால், இது ஒரு கமர்ஷியல் படம். ஆர்ட் படம் அல்ல என்பதைக் கார்த்திக் சுப்பராஜே ஒப்புக்கொள்வார் என்றே நினைக்கிறேன். இதன் மெதுவான வேகம் எந்த விதத்திலும் படத்துக்கு வலு சேர்க்கவில்லை.
இரண்டாவதாக, படத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகள் மிகவும் பழையவை. ஒரு கதாபாத்திரம், தனது தோல்வியைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் குடித்துக்கொண்டே இருக்கிறது. இன்னொரு கதாபாத்திரம் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு, அவளிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளச்சொல்லி இறைஞ்சிக்கொண்டே இருக்கிறது. மூன்றாவதாக ஒரு கதாபாத்திரம், தான் ஒரு so called feminist என்பதை எப்போது பார்த்தாலும் பறைசாற்றிக்கொண்டே இருக்கிறது. இது தவிர, படத்தில் வரும் இன்னும் சில கதாபாத்திரங்கள் தங்களின் வாழ்க்கையை நினைத்து வருந்திக்கொண்டே இருக்கின்றன. இப்படி வருந்துபவர்களின் மனதில் அவர்களின் இணைகளிடம் உள்ள காதல், அவர்களின் இணைகளால் அவ்வப்போது ignore செய்யப்படுகிறது. இது தமிழ்ப்படங்களில் ஆதிகாலத்தில் இருந்தே காட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கதை தானே? இதில் புதிதாக என்ன இருக்கிறது? இவர்களை வருத்துகிறோமே என்ற குற்ற உணர்ச்சி ‘ஷாவனிஸ்டாகக்’ காட்டப்படும் கதாபாத்திரங்களுக்கு அவ்வப்போது வந்து செல்கிறது. ’அடியே காந்தா’ என்று கர்ஜிக்கும் எம்.ஆர். ராதாவின் வடிவில் ரத்தக்கண்ணீர் படத்திலேயே இதெல்லாம் பார்த்துவிட்டோமே?
உதாரணமாக, கே.எஸ். கோபாலகிருஷ்ணனை சினிமா ரசிகர்கள் நினைவுபடுத்திக்கொள்ளலாம். ஸ்ரீதரிடம் அஸிஸ்டெண்ட்டாக இருந்தவர். சென்ற வருடம் மறைந்தவர். இவர் எடுத்த பல படங்கள், நமது பாட்டிகள்/அம்மாக்களுக்கு மிகவும் பிடித்தமானவை. சாரதாவில் ஆரம்பித்து, கற்பகம், கை கொடுத்த தெய்வம், பணமா பாசமா, சித்தி, பேசும் தெய்வம், குலமா குணமா, படிக்காத பண்ணையார் போன்ற பல படங்களில் வரும் கதாநாயகிகளை நினைவுபடுத்திக்கொள்ளலாம். இவர்கள் அனைவருமே இறைவியில் வரும் நாயகிகளை ஒத்தவர்களே. இறைவியில், கமாலினி முகர்ஜி பேசும் ஆரம்ப வசனங்களால் அவரது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கப்போகிறது என்று நினைத்தால், அவரும் அரதப் பழைய தமிழ் சினிமா டெம்ப்ளேட்டாக, கணவனை விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார். உண்மையில் படத்தின் துவக்கத்தில் அவர் பேசும் விஷயங்களில் அதன்பின் ஒரே ஒரு சதவிகிதம் கூட ஈடுபாடு காட்டவில்லை. என்னதான் ப்ரஷர் என்றாலும், தனக்குப் பிடித்த, தான் செய்யவேண்டும் என்று நினைத்தவைகளைக் கொஞ்சம் கூடச் செய்யமுடியாத சூழலிலா அவர் இருக்கிறார்? ஒரே ஒரு நிகழ்கால உதாரணமாக, இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். இதுதான் நிதர்சனமே தவிர, இப்படத்தில் காட்டப்படுவது அல்ல. அவையெல்லாம் காலாவதி ஆகிப் பல ஆண்டுகள் ஆகின்றன.
தற்கால சமூக வாழ்க்கையில் இது மிகவும் சர்வசாதாரணம். என்னதான் கணவன் மீது காதல் இருந்தாலும், குழந்தைக்காகவும் தனக்காகவும் மிகவும் ப்ராக்டிகலான முடிவுகளை எடுக்கும் பெண்கள்தான் இன்று அதிகம். எனவே இவரது கதாபாத்திரத்திலும் புதுமை என்பது எதுவும் இல்லை. அதேபோல், பூஜா தேவாரியாவின் கதாபாத்திரம், கணவன் இறந்தபின், காதல் என்ற உணர்வே மனதில் இல்லை என்றுசொல்லிவிட்டு, அவ்வப்போது தேவைப்படும் செக்ஸுக்காக மட்டுமே மைக்கேலிடம் உறவு கொள்வதாகக் காட்டப்படுகிறது. அப்படிப்பட்ட கதாபாத்திரம், மைக்கேல் ஒரு காட்சியில் கோபத்துடன் சென்றதும் ஏன் அவனை நினைத்து அழுகிறது? மைக்கேலை அவளுக்குப் பிடித்திருப்பதால்தானே? ஒருவேளை மைக்கேல் வாழும் வாழ்க்கையால் அவளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்துப் பார்த்துக்கொள்ள இயலாது என்று அவள் நினைத்திருந்தால் அதையும் வெளிப்படையாக சொல்லக்கூடிய பெண் தானே அவள்? பின்னே ஏன் பழங்கால தமிழ்ப்பட நாயகி போல, ‘நீ வேறு யாரையாவது மணந்துகொள்’ என்று சொல்லி அவனை விரட்டுகிறாள்?
உண்மையில் செக்ஸுக்காக மட்டும் ஒருவரிடம் உறவு கொள்பவர்கள் இப்படியா இருப்பார்கள்? அது முற்றிலும் வேறுவகையான plane. அதை இந்தப் படம் சரியாகக் காட்டவில்லை. செக்ஸுக்காக உறவு கொள்பவர்கள், முதலில் அது பற்றிய தெளிவு இருக்கும் இணையைத் தேர்ந்தெடுப்பதுதானே சரி? அப்படி இல்லை என்றால் அந்த உறவே சாத்தியமில்லைதானே? இதனாலேயே பூஜா தேவாரியாவின் கதாபாத்திரமும் மிகவும் செயற்கையாக மாறிவிடுகிறது. கூடவே அவர் அழும் காட்சி தேவையற்றது. அதை ஜஸ்டிஃபை செய்யவே முடியாது.
அஞ்சலியின் கதாபாத்திரம் மட்டுமே சிறிதாவது இயல்பாக உள்ளது. அந்தக் கதாபாத்திரத்தின் தவறு எதுவுமே இல்லாமல் அது தண்டிக்கப்படுவது படத்தில் நன்றாகக் காட்டப்பட்டுள்ளது. இதில் உண்மையிலேயே படத்தின் அட்டகாசமான நடிப்பை அஞ்சலி வெளிப்படுத்துகிறார்.
அடுத்ததாக, இறைவி ஒரு social Drama என்று வைத்துக்கொண்டால், அதில் வரும் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் கதைக்குக் கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லாமல், வேண்டுமென்றே நுழைக்கப்பட்டதுபோன்ற உணர்வைத் தருகிறது. அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் எதுவுமே கதையோடு ஒட்டவில்லை. அது ஒரு தனியான, துண்டிக்கப்பட்ட கதையாகவே படம் முழுதும் வருகிறது. இவர் அடிக்கடி உதிர்க்கும் so called ’ஃபெமினிஸ’ வசனங்கள் அனைத்துமே, க்ளைமாக்ஸுக்கானவை என்பது துவக்கத்திலேயே நன்றாகப் புரிகிறது. உதாரணமாக, விருமாண்டி படத்தில், கதைக்குச் சம்மந்தமே இல்லாமல், மரண தண்டனை எதிர்ப்பு வசனங்கள் திடீரென்று படத்தில் இடம்பெறும். அவை வரும்போதெல்லாம் கண்டபடி நமது கவனம் இடறும். அதேபோல் ‘அரவான்’ படத்திலும் இதே மரண தண்டனை எதிர்ப்பு வசனங்கள்/வாசகங்கள் படத்தின் இறுதியில் வரும். அவற்றுக்கும் படத்தின் கதைக்கும் சம்மந்தமே இருக்காது. இதனாலேயே இவை வரும்போது ஒருவித சலிப்பே தோன்றும். இதேபோல்தான் இறைவியில் so called ‘ஃபெமினிஸ’ வசனங்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் க்ளைமாக்ஸில் வேண்டுமென்றே நுழைக்கப்படும் சம்பவங்களுக்காகவேதான் இவை என்பது எளிதில் விளங்கிவிடுவதால் படத்தில் இவை வரும்போதெல்லாம் சலிப்பே தட்டுகிறது. இன்னொன்று- இப்படி ஃபெமினிஸ்டாக இருப்பவன், வேறு எந்த moral valueவும் இல்லாமல் இப்படத்தில் வருவது போன்றா இருப்பான்?
போலவே, சிலை திருட்டு பற்றிய அத்தனை காட்சிகளுமே படத்தைக் கண்டபடி மந்தப்படுத்துகின்றன. இதற்கும் கதைக்கும் தொடர்பே இல்லாமல், காட்சிகளை நிரப்பவேண்டும் என்றே எழுதப்பட்டதுபோலத்தான் இக்காட்சிகள் உள்ளன. சிலைத்திருட்டு – அதனால் அருளின் தந்தையை ஸ்தபதி ஆக்கிவிடலாம் – அவர்களுக்கு எழுது சில சீன்கள் – என்பதுபோலத்தான் எனக்குத் தோன்றின.
அடுத்ததாக, கார்த்திக் சுப்பராஜின் அனைத்துப் படங்களிலும் இருக்கும் ஒரேபோன்ற அம்சங்கள். என்னவென்றால், படத்தில் திரைப்படம் சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்கள்/கதை இடம்பெறுதல் (ஜிகர்தண்டா & இறைவி.. பீட்ஸாவில், திரைப்படம் இல்லாவிட்டாலும், சினிமா போலவே ஒரு திரைக்கதையைத் தயார் செய்து பிறரிடம் சொல்லும் ஹீரோ இருப்பான்); படத்தில் சொல்லப்படும் கதையைக் கடைசி சில நிமிடங்களில் மாற்றுவது; கதைக்கு சம்மந்தமே இல்லாத ரூட்டில் இறுதிச் சில நிமிடங்களின் சம்பவங்கள் பயணிப்பது முதலியன. முதல் இரண்டு படங்களில் இருந்ததுபோலவே இறைவியிலும் அதே டெம்ப்ளேட்டை கார்த்திக் சுப்பராஜ் வைத்திருப்பது இந்தப் படத்தில் உதவவில்லை. ஏனெனில் இதில் கதையே மிகவும் குழப்பமாக எழுதப்பட்டுள்ளது. இது ஒரு சோஷியல் ட்ராமாவா, த்ரில்லரா, ரொமாண்டிக் படமா, Heist படமா என்பதே முடிவு செய்யப்படாமல், இவை அனைத்தையும் கலக்கி எடுக்கப்பட்டிருப்பதால் இறுதியில் இந்த எந்த genreஐயும் திருப்திப்படுத்தாமல் மிகவும் அலுப்பான உணர்வையே இப்படம் தருகிறது.
எஸ்.ஜே. சூர்யா நன்றாக நடித்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் படமே மிகவும் மெதுவாக நகர்வதால் அவரது நடிப்புமே படத்தை சுவாரஸ்யப்படுத்தவில்லை.
’கதை’ என்பதை எடுத்துக்கொண்டால், இதில் வரும் தயாரிப்பாளர் வேடம் உட்பட அனைத்துமே நாம் ஏற்கெனவே பார்த்தவையே. எத்தனை படங்களில், இதில் வரும் தயாரிப்பாளர் போன்ற வில்லனைப் பார்த்திருக்கிறோம்? காலில் விழச்சொல்லும் அதே வசனம் உட்பட? முற்றிலும் பழமைவாதம் சார்ந்த ஒரு படத்தை எப்படி ஃபெமினிஸம் சார்ந்த படம் என்று நம்மால் சொல்ல முடிகிறது? காரணம் எளிது. நமக்கு எக்ஸ்போஷர் குறைவு. வெளியே என்னென்ன இருக்கின்றன? எப்படியெல்லாம் ஃபெமினிஸம் விவாதிக்கப்படுகிறது என்று நாம் சரியாகத் தெரிந்துகொள்ளமுடியாமல் இருப்பதாலேயே இப்படத்தை ஃபெமினிஸம் சார்ந்தது என்று நம்மால் சொல்லமுடிகிறது. கூடவே, கார்த்திக் சுப்பராஜுமே வாசிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டிய அவசியத்தை இந்தப் படம் தெளிவாகப் பேசுகிறது. வாசிப்புதான் நமக்கு எக்ஸ்போஷரைக் கொடுக்கும் . உலகளாவிய விஷயங்களைப் பற்றிய புரிதலில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை வாசிப்புதான் தெளிவுபடுத்தும்.
உண்மையில், பெண்களின் திருமண வாழ்வில் ஏற்படும் சலிப்பு/அலுப்பு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதனால் அவர்கள் திருமணத்தை உடைக்க நினைப்பது, அதனால் நிகழும் பிரச்னைகள் போன்ற கதைகள் உங்களுக்கு வேண்டும் என்றால், நீங்கள் பார்க்கவேண்டிய படங்கள்: Bridges of Madison County, In the Mood for Love, Kabhi Alwidha na Kehna, Silsila, Drowning by Numbers, Y tu mamá también, Queen, American Beauty, Arth, Mirch Masala முதலியவை. கூடவே, ஃபெமினிஸம் சார்ந்த படங்கள் என்றால் Thelma & Louise, The Color Purple, 9 to 5 (தமிழில் ’மகளிர் மட்டும்’ என்ற பெயரில் காப்பியடிக்கப்பட்ட படம்), Elizabeth, Frida, Amélie, Lolita, Talk to Her, Broken Embraces, Mad Max: Fury Road முதலியவை. இன்னும் ஏராளம் உண்டு.
இறைவியின் ஒரு ப்ளஸ் பாயிண்ட் – அதன் வசனங்கள். பல இடங்களில் சுருக்கமாக இருந்தாலும் பெரிய கருத்துகளை ஜஸ்ட் லைக் தட் சொல்லக்கூடிய வசனங்கள். அவை கட்டாயம் பாராட்டத்தக்கவை. கூடவே, ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு genreல் எடுக்க முயலும் கார்த்திக் சுப்பராஜின் முயற்சிகள். மேலே சொன்னபடி, தன்னை நன்றாகத் தயார்படுத்திக்கொண்டு அவர் அதைச் செய்தால் நன்றாக இருக்கும்.
இறைவியின் மிகச்சில காட்சிகள் நன்றாக இருந்தாலும், முழுப்படமாக, இது ஒரு அறுபதுகளின் படத்தைப் பார்த்த அனுபவத்தையே கொடுத்தது. என்னைப்பொறுத்தவரை,சுப்பராஜ் விழித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது. இறைவிக்கு முன் வரை, அவருக்கு ஒரு கல்ட் ஸ்டேட்டஸை இளம் திரைரசிகர்கள் கொடுத்திருந்தனர். இப்படம் ஒரு ஏமாற்றம் என்ற வகையில், அவரது அடுத்த படம் அவசியம் கவனிக்கப்படும். அதுவும் சொதப்பிவிட்டால் அந்த ஸ்டேட்டஸ் அவரை விட்டு விலகிவிடும். அடுத்த படத்தை கவனத்துடன் எழுதவேண்டிய பொறுப்பும் கட்டாயமும் கார்த்திக் சுப்பராஜுக்கு அவசியம் உண்டு. காத்திருக்கலாம்.
பி.கு
1. இதில் வரும் ராதாரவி பற்றிச் சொல்ல ஏதுமில்லை. எப்போது படத்தின் ஆடியோ விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளரைப் பற்றி இழிவாகப் பேசினாரோ, அப்போதே அந்தத் தகுதியை இழந்துவிட்டார். இது அவசியம் பலத்த கண்டனத்துக்கு உரியது. கூடவே, அதைச் சிரித்தபடியே பார்த்துக்கொண்டிருந்த படக்குழுவினருமே பலத்த கண்டனத்துக்கு உரியவர்களே. வாசிப்பே மெச்சூரிட்டியைக் கொடுக்கும். அது இல்லையெனில் இப்படித்தான் மிருகத்தனமாக நடந்துகொள்ளத் தோன்றும்.
2. படத்தில் வரும் referenceகள்: இளையராஜா பற்றியவை, மணி ரத்னத்தின் ஆய்த எழுத்து (மூன்று பேர்; ஒருவன் பெயர் மைக்கேல் etc, ரஜினி பற்றிய கார்த்திக் சுப்பராஜின் ஒவ்வொரு படத்திலும் இடம்பெறும் வசனங்கள், படத்தில் வரும் இரண்டு ‘குறியீடுகள்’ – ஜெயிலில் சட்டை விழுவது & குழந்தை – பொம்மை சம்மந்தப்பட்ட காட்சி (எம்.டி.எம் & co தயாராகலாம்), santha shishunala sharifaவின் கவிதைத் தொகுப்புப் புத்தகம் (இவர் ஒரு கன்னடிகர் – கன்னட இலக்கிய உலகின் முதல் முஸ்லிம்) முதலியவையெல்லாம் ஆங்காங்கே புருவத்தை உயர்த்த வைத்தாலும், படத்தோடு ஒன்ற வைக்கவில்லை.
Apo porumaiya pathukalam pola..
Na dhan first comment ah
விமர்சனத்தில் படத்தில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய வேறு யாரை பற்றியும் எதுவுமே இல்லையே.அப்புறம் ராதாரவி செய்தது கண்டனத்துக்குறியதே,அதற்காக அவரை பற்றி பேசமாட்டேன் என்கிறது புரியல ராஜேஷ்.படத்தையும்,வெளில நடப்பதையும் நீங்களுமா ஒப்பிடுறிங்க??அப்புறம் சினிமா துறையில் முழுமையாக ஈடுபடுவதால் பத்தோடு பதிணொன்னு சொல்றிங்கனு நினைக்கிறேன்.உங்க விமர்சனம் புடிக்குதோ இல்லயோ,உங்களுக்கு தோன்றத சொல்ற தைரியம் புடிக்கும்,அதுவும் போச்சே ராஜேஷ்.அதுநாளயே படத்தின் மீது வைக்க முடிஞ்ச விமர்சனத்த,கார்த்திக் சுப்புராஜ் பக்கம் சொல்லையிலே மென்மையாயிடுது.என்னை பொறுத்தவறை நாளைய இயக்குனர்களில் நலன் போன்றவர்கள் இரண்டாவது படத்தில் சறுக்கிய போதும்,கார்த்திக் தனது மூன்றாவது படத்தில் சிறிது சறுக்கினாலும் பலவிதமான விவாதங்களுக்கு கொண்டு சென்றதே கார்த்திக்கின் வெற்றி என்பது எனது கருத்து,அதுவும் அவரது பாணியிலேயே
அருமையான பதிவு. மிகத்தேர்ந்த விமர்சகர் அகிவிட்டீர்கள்.
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.
“முதலில், படம் மிகவும் மெதுவாகவே செல்கிறது என்பதை அவசியம் கவனிக்க வேண்டும். தொடக்கத்தில் இருந்து இறுதிவரை எந்த இடத்திலும் வேகம் இல்லை. திரைப்படங்களை வேகமாகத்தான் எழுத/எடுக்கவேண்டும் என்று எந்தவித விதியும் இல்லை. இருந்தாலும், மெதுவாகச் செல்வதால் படத்துக்கு என்ன ப்ளஸ் பாயிண்ட்? உலகம் முழுக்கப் பல படங்கள் மிகவும் மெதுவான வேகத்தில் எடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. Slow Film Movement என்றே ஒரு கட்டுரை எனது தமிழ் ஹிந்து ‘சினிமா ரசனை’ தொடரில் உண்டு. கூடவே, எனக்கு மெதுவாக இருப்பது இன்னொருவருக்கு வேகமாக இருக்கலாம். படத்தின் வேகம் என்பது ஒரு relative விஷயம்தான். ஆனால், இது ஒரு கமர்ஷியல் படம். ஆர்ட் படம் அல்ல என்பதைக் கார்த்திக் சுப்பராஜே ஒப்புக்கொள்வார் என்றே நினைக்கிறேன். இதன் மெதுவான வேகம் எந்த விதத்திலும் படத்துக்கு வலு சேர்க்கவில்லை.”
இயக்குனரின் வாசிப்பை பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் மரியாதைக்குரிய கருந்தேள் அவர்களே .. ஒருவரை பற்றி தெரியாமல் அவரை குறைகூருவதுதான் வாசிப்பு உங்களுக்கு கொடுத்த மெச்சூரிட்டியா?
பெமினிசம் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் கொடுத்திருக்கும் படங்களில் பாதிக்கும் மேல் விமர்சகர்களால் கிழித்து தொங்கவிடப்பட்ட படங்களே … வாசிப்பை பற்றி சிலாகித்து பேசும் உங்களுக்கு தென்னமரிக்க (உங்க ஆசான் சொல்வது போல்), வட அமெரிக்க பெமினிஸ படங்களுக்கும் நம்மூர் பெமினிஸ படங்களுக்கும் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும் என்பதை எப்படி புரிந்து கொள்ள முடியாமல் போனது? அங்கே இருக்கும் கலாச்சாரமும் , இங்கே இருக்கும் கலாச்சாரமும் ஒன்றா? நம்மூர் பருத்தி வீரன் போல ஒரு படத்தை ஹாலிவூட்டில் எடுக்க முடியுமா?
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஆங்கில கலாசாரத்தில் வாழும் உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட படங்கள் ஆயிரம் குறைகள் இருந்தாலும் எப்படி உன்னதமோ அதேபோல்தான் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனாகவே வாழும் எங்களுக்கு இந்த படமும் ஆயிரம் குறைகள் இருந்தாலும் நல்ல படமே …
இந்த விமர்சனத்தில் நான் ஒத்து போகும் இடங்கள் மலர் கதாபாத்திரம் மற்றும் பாபியின் கதாபாத்திரத்தை பற்றிய உங்கள் கருத்துதான் .. இந்த இரு கதாபாத்திரங்களும் படத்தின் மிக பெரிய சறுக்கல்கள் … கமாலினியின் கதாபாத்திரம் சரியாகவே கையாளபட்டிருக்கிறது … நம் நாட்டில் பெண்கள் அனைவரும் புரட்சியாலர்களாய் இருந்து விட முடியாது .. அவர்களுக்கு புரட்சி கிரட்சியை எல்லாம் விட குடும்பம் , கணவன் , பிள்ளைகள்தான் முக்கியம் … தன்னால் முடிந்த வரை தன குடும்பத்துக்காக விட்டு கொடுத்து வாழ்வதே அவர்களின் பலம் .. அதைதான் கார்த்தி இந்த படத்தில் காட்டியிருக்கிறார் …
படம் நீங்கள் சொல்லுவதை போல பெரிய சருக்கல் எல்லாம் இல்லை … அதேபோல் சிலர் சொல்வதை அதிகமாக சிலாகிக்கவும் முடியாது ,
Well said..
கா.சுப்புராஜ் ஒரு திறைமையான ஆள்தான். ஆனால் அவரே திரைக்கதை எழுதி இயக்குவதில்தான் ஒரு நல்ல படம் சராசரி படமாக ஆகிவிடுகிறது. அவருக்கு தேவை நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களோ சினிமாக்களோ அல்ல. அவருக்கு உடனடியாகத் தேவை உங்களைப்போன்ற ஒரு SCRIPT WRITER.
Dear Karunthel Rajesh,
I wish to read your comments about “Thani Manithan” Mr. Jayam Ravi & Mr Arvind Swamy acted film and directed by Mr. Mohan Raj. Can you please write ? I had been waiting for that.