Red Dead Redemption – PS3 Game Review

by Karundhel Rajesh July 2, 2014   Game Reviews

வெஸ்டர்ன் படங்கள் பிடிக்காதவர்கள் நம்மில் அவசியம் மிகக்குறைவானவர்களாகத்தான் இருப்போம். குறிப்பாக ட்ரெம்பெட்கள் பின்னியெடுக்கும் பின்னணி இசையில் கதாபாத்திரங்கள் மெதுவாகப் பிரிந்துசென்று, கையில் ஒரு துப்பாக்கியோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே சுடுவதற்குத் தயாராக நிற்கும் காட்சிகளில் எல்லாம், ஒவ்வொரு ஷாட்டாக அவர்களின் க்ளோஸப்களைப் பார்க்கையில் ஏற்படும் உற்சாகம் அளவில்லாதது. செர்ஜியோ லியோனியின் Good bad and the Ugly படத்தின் Mexican Standoff காட்சி உலகப்புகழ் பெற்றது.

அதேபோல் இதோ இந்தக் காட்சியும் உலகப்புகழ் பெற்றது. இதுவும் அதே செர்ஜியோ லியோனிதான். Good Bad and the Ugly படத்தைவிடவும் அட்டகாசமான Once upon a Time in the West படத்தின் இறுதி இது. சார்லஸ் ப்ரான்ஸனின் அலட்சியமான நடிப்பு இதன் ப்ரத்யேக அம்சங்களில் ஒன்று. படத்துக்கு ஏற்கெனவே விமர்சனம் எழுதியிருக்கிறேன்.

இதுபோன்ற உங்கள் மனதுக்குப் பிடித்த அத்தனை வெஸ்டர்ன்களையும் நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். அத்தனை படங்களின் நடுவிலும் நம்மால் போய் நிற்க முடிந்தால்? அதுதான் Red Dead Redemption.

RockStar Games என்பது பிரபல கேம் நிறுவனங்களில் ஒன்று. Grand Theft Auto, Max Payne போன்ற கேம்களை உருவாக்கும் நிறுவனம். இந்த நிறுவனம் 2004ல் ப்ளேஸ்டேஷன் 2 மற்றும் XBox ஆகிய கன்ஸோல்களுக்காக உருவாக்கிய ஒரு கேம் – Red Dead Revolver. இது ஒரு ஷூட்டர் கேம். Cowboy உலகை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்த கேமின் வெற்றியைத் தொடர்ந்து ஐந்து வருடங்கள் பாடுபட்டு ராக்ஸ்டார் கேம்ஸ் உருவாக்கிய கேம்தான் ரெட் டெட் ரிடெம்ப்ஷன். Open World என்று சொல்லக்கூடிய – கேமுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று விளையாடக்கூடிய தொழில்நுட்பத்தை அற்புதமாக உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட கேம் இது.

ஒரு Open World கேமில் என்ன நடக்கும்?

கேமில் வரும் ஹீரோ/ஹீரோயினின் லட்சியம், வில்லனைப் பிடித்து சித்ரவதை செய்து கொல்வது; அல்லது ஏலியன்களை உலகை விட்டே துரத்துவது; அல்லது நடுக்கடலில் உள்ள தீவில் இருந்து தப்பிப்பது; புதையலை எடுப்பது என்றுஎதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த லட்சியத்தை நிறைவேற்ற ஒவ்வொரு லெவலாக அவர்கள் கடந்து செல்லும்போது பல இடங்களில் அவர்கள் நுழைந்து வெளியேற நேரலாம். பத்து வருடங்க்கள் முன்னர் வெளிவந்த கேம்களிலெல்லாம், அந்தந்த இடங்களில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், பாழடைந்த பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களுக்குள் நுழைய முடியாது. இடது, வலது பக்கங்களில்கூட எங்குமே செல்லமுடியாது. அந்த கேமில் எப்படி அந்தக் கதாபாத்திரம் நடக்க/ஒட/தவழவேண்டும் என்று ப்ரோக்ராம் செய்திருக்கிறார்களோ அப்படி மட்டும்தான் அது செல்லும். ஒருவேளை வலுக்கட்டாயமாக இடதுபக்கமோ வலதுபக்கமோ அதைத் திருப்பினால், டங் டங் என்று கம்ப்யூட்டர் மானிட்டர்/டிவியின் இடது/வலது மூலைகளில் நின்றுகொண்டு மோதிக்கொண்டே இருக்கும். வேறு எதுவுமே நடக்காது.

ஆனால் ஓப்பன் வேர்ல்ட் கேம்களில் இது மாறியது. படுமொக்கையாக ஒரே வழியில் ஓடிக்கொண்டிராமல் நடுநடுவே தென்படும் எதுவாக இருந்தாலும் உள்ளே சென்று கவனிக்க முடிந்தது. இதனால் Secondary Missions எனப்படும் தனியான – கேமின் பிரதான நோக்கத்துக்கு மாறான – சின்னச்சின்ன மிஷன்கள் உருவாக்கப்பட்டன. இது, ஒரு கேமின் விளையாடும் நேரத்தை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. Assassin’s Creed கேம்களின் அட்டகாசமான அம்சங்கள் இந்த Secondary Missionsதான். தற்போது வரும் எந்த கேமாக இருந்தாலும் அதில் அவசியம் Secondary Missions உண்டு. அதேபோல் ஓப்பன் வேர்ல்ட் கேம்களில் முதலிலிருந்து கடைசிவரை வரிசையான ஒரு ஃப்ளோ இருக்காது. இஷ்டப்படி விளையாடிக்கொள்ளலாம். நான்-லீனியர். இதுதவிர, இந்த ஓப்பன் வேர்ல்ட் விஷயத்துக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கேம்களும் உண்டு. Fall Out 3 (விமர்சனம் விரைவில்), Grand Theft Auto Series, The Elder Scrolls Series ஆகியவை சில உதாரணங்கள். இவற்றில் சில Role Playing கேம்ஸ்களும் உண்டு.

யோசித்துப் பாருங்கள். ஒரு கேமின் கதாபாத்திரம், திரையில் தென்படக்கூடிய இடங்களில் எல்லாம் சென்று எதாவது சாகஸங்கள் புரிந்துகொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? இதுதான் Red Dead Redemptionனின் பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணம்.

ரெட் டெட் ரிடெம்ப்ஷன் வெளிவந்த ஆண்டு – 2010 இறுதி. அதற்கு முன்னர் ஏற்கெனவே வெளியாகி அட்டகாசமான வெற்றியைப் பெற்றிருந்த கேம்கள் – அஸாஸின்’ஸ் க்ரீட் முதல் பாகமும் இரண்டாவது பாகமும். அவைகளில் ஏற்கெனவே ஓப்பன் வேர்ல்ட் தொழில் நுட்பத்தில் கேம் வெறியர்கள் விளையாடித் தள்ளியிருந்தனர். நாம் மேலே பார்த்த சில கேம்களின் முந்தைய பாகங்களும் வெளியாகியிருந்தன. ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், ஓப்பன் வேர்ல்ட் கேம்களின் பொற்காலத்தில், இன்னும் அட்டகாசமான ஒரு கேம் வராதா என்று கேம் வெறியர்கள் ஏங்கிக் கொண்டிருந்ததை ராக்ஸ்டார் கேம்ஸ் கில்லாடித்தனமாக உபயோகித்துக்கொண்டது.

கதை

3635-video_games_red_dead_redemption_wallpaper

ஜான் மார்ஸ்டன் என்ற cowboy, அமெரிக்காவின் ந்யூ ஆஸ்டின் மாநிலத்தில் வந்து இறங்குவதில் இருந்து கதை துவங்குகிறது. ஜான் மார்ஸ்டன் ஒரு எத்தன். முன்னாள் திருடன். இங்கு வந்து அவன் இறங்குவதற்குக் காரணம், அவனது பழைய கூட்டாளிகள் இருவரைத் தேடி. அவர்களைப் பிடித்துச்சென்றால்தான் தற்போது நிம்மதியாக வாழத் துவங்கியிருக்கும் அவனது குடும்பத்தோடு அவனால் மறுபடி இணைய முடியும். போலீஸின் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் இந்த ஆபத்தான விளையாட்டில் பங்கேற்க ந்யூ ஆஸ்டினுக்கு வந்திருக்கிறான் மார்ஸ்டன்.

அவன் தேடிச் செல்லும் ஒரு கூட்டாளியின் அடியாட்களால் சுடப்பட்டு மரண காயங்களுடன் கிடக்கையில் பான்னி (Bonnie) என்ற பெண்ணால் காப்பாற்றப்படுகிறான். அவளது பண்ணை வீட்டிலேயே தங்கிக்கொண்டு அந்த ஊரை வலம் வருகிறான். அப்படி அந்தப் பண்ணையில் இருக்கும்போதே அவனைச் சுட்ட கூட்டாளியையும் தேடுகிறான். அங்கு பலதரப்பட்ட மனிதர்களை மார்ஸ்டன் சந்திக்க நேர்கிறது. அதில் சிலர் மார்ஸ்டனுக்கு உதவுகிறார்கள். சிலருடன் சண்டையிடுகிறான். சிலரை ஒதுக்குகிறான். இப்படி மெல்ல மெல்ல அந்த ஊர் மக்களின் நம்பிக்கையைப் பெறுகிறான் (அல்லது ரவுடித்தனம் செய்து ஊரின் வயிற்றெரிச்சலையும் சம்பாதிக்க மார்ஸ்டனால் முடியும். இப்படி நல்லதோ கெட்டதோ மாறிமாறிச் செய்வதுதான் Roleplay. நாம் செய்யும் காரியங்களுக்கு ஏற்றபடி நமது இமேஜ் உயரவோ கெடவோ செய்யும்).

அந்த ஊரில் மெர்ஸர் கோட்டை என்ற ஒரு பழைய கோட்டை உள்ளது. அங்குதான் மார்ஸ்டனைச் சுட்ட கூட்டாளிகள் பதுங்கியிருக்கின்றனர். முடிந்தவரை அந்த ஊரில் பல காரியங்களைச் செய்து சம்பாதித்த நண்பர்களோடு அங்கு செல்கிறான் மார்ஸ்டன். கோட்டைக் கதவை உடைக்கிறான். உள்ளே சென்று அனைவரையும் அட்டகாசமான ஒரு துப்பாக்கிச் சண்டையில் கொல்கிறான். அப்போதுதான் அவனது எதிரி பில் அங்கே இல்லை என்பது புரிகிறது. மெக்ஸிகோவில் உள்ள தனது நண்பனான (மார்ஸ்டனின் இன்னொரு பழைய கூட்டாளி) ஹவியே எஸ்க்யுவேலாவிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறான் பில். ஆனால் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றால்தான் தனது குடும்பத்தை மறுபடி பார்க்கமுடியும் என்ற நிலை மார்ஸ்டனுக்கு.

பில்லைத் தொடர்ந்து மெக்ஸிகோ செல்கிறான் மார்ஸ்டன். அங்கேயும் எக்கச்சக்க சாகஸங்களைச் செய்கிறான். லாண்டன் ரிக்கெட்ஸ் என்ற ஒரு வயதான Cowboyயைச் சந்திக்கிறான். அவர் அவனுடன் பல சாகஸங்களில் உதவுகிறார். (இந்தக் கதாபாத்திரம், ஹாலிவுட்டின் சிம்மக்குரலோன் ஸாம் எலியட்டின் பாத்திரத்தை வைத்துதான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது என் சந்தேகம். ஸாம் எலியட் யார் என்று தெரிந்துகொள்ள எனது TombStone விமர்சனத்தைப் படிக்கலாம்). கூடவே மெக்ஸிகோவில் வின்ஸெண்ட் டி ஸாண்ட்டா என்ற கேப்டன் ஒருவரைச் சந்தித்து நட்பாகிறான் மார்ஸ்டன். அவரது தலைவர் – ஜெனரல் அகஸ்டின் அல்லெந்தெ. உள்ளூரில் ஒரு மிகப்பெரிய கிளர்ச்சியை ஒடுக்குவதில் மார்ஸ்டன் உதவினால் அவன் தேடும் பில் மற்றும் ஹவியேவைப் பிடித்துத் தருவதாக ஜெனரல் சொல்கிறார். ஆனால் சிறிது நாட்களில் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கிறான் மார்ஸ்டன். இதன்பின் நடக்கும் ஒரு சண்டையில் பில்லும் ஹவியேவும் இறக்கின்றனர்.

குடும்பத்தைக் காணலாம் என்ற சந்தோஷத்தில் தனது பண்ணைக்குச் செல்லப்பார்க்கும் மார்ஸ்டனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்று அறிய கேமை விளையாடவும்.

கேமின் சிறப்பம்சங்கள்

’மாண்ட்டெனாவில் ஒரு மாலைப்பொழுது’ என்பது போன்றே ஆரம்பிக்கும் எண்பதுகளின் லயன் காமிக்ஸில் வெளிவந்த ’பழிவாங்கும் பாவை’, டிராகன் நகரம்’, ‘கழுகு வேட்டை’ போன்ற vintage டெக்ஸ் வில்லர் கதைகளைப் படித்திருக்கிறீர்களா? பழிவாங்கும் பாவைதான் என் ஃபேவரைட். அந்தக் கதைகளையோ அல்லது அதுபோன்ற டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் கதைகளைப் படித்திருந்தால் உங்களால் இந்த கேமை மறக்கவே முடியாது. காமிக்ஸே படிக்காமல் வெஸ்டர்ன் படங்களை மட்டுமே பார்த்திருந்தாலும் போதுமானது. நீண்ட நெடிய கணவாய்கள், க்ராண்ட் கேன்யன் போன்ற இடங்கள், பாலைவனங்கள், ஸ்கின்னரின் ட்ரேடிங் போஸ்ட்டை ஒத்திருக்கும் மரத்தால் செய்யப்பட்ட பழைய மதுபான விடுதிகள் (ஸ்கின்னரின் ட்ரேடிங் போஸ்ட் – please refer கார்ஸனின் கடந்த காலம்), பண்ணை வீடுகள், நிலவு தகதகவென்று மின்னும் பின்னணியில் இரவின் இருளில் மலைமீது நிற்கும் குதிரை வீரன், வின்செஸ்டர் ரைஃபிளை மாட்டிக்கொண்டு படுவேகமாகக் குதிரையில் சென்றுகொண்டே ஒரே கையால் டக் டக்கென்று தோட்டாக்களை மாற்றி மின்னல் வேகத்தில் சுடும் ஹீரோ, கோச்சுவண்டியில் துரத்தல், மலையில் பதுங்கியிருக்கும் எதிரிகளைப் பதுங்கிச் சென்று வேட்டையாடுதல், நட்சத்திரப் பதக்கம் அணிந்த ஷெரீஃப், அவரது மொக்கை டெபுடிகள், ஊரில் இருக்கும் ஒரே டாக்டர் (அவர் கோட்டும் கண்ணாடியும் அணீந்திருப்பார்), கௌபாய்க்கு ஒரு காதலி, திருடன்களைப் பிடித்துக்கொடுத்து ஷெரீஃபிடம் பணம் வாங்கும் bounty hunting, ஊரின் நடுவே ஓடும் ரயில்….

இதுபோன்ற அத்தனை அம்சங்களும் இந்த கேமில் அபரிமிதமாக உண்டு. இன்னும் இதில் சொல்லாத ஏராளமான அம்சங்கள் அதிகம். கௌபாய் க்ளாஸிக் ஒன்றுக்கு எப்படி இசையமைக்கவேண்டுமோ அப்படிப்பட்ட இசை இதில் உண்டு.

இதோ மேலே சொன்னவைகளை இந்த சூப்பர் வீடியோவில் பார்க்கலாம்.

விளையாடிச் சலித்தாலும் தீராத எக்கச்சக்க மிஷன்கள் இந்தக் கேமில் உண்டு. இந்த கேமை நான் முடிக்க எனக்கு ஆன அவகாசம் – கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள். ஜாலியாக அனுபவித்து ஆடினேன். இடையிடையே பிற கேம்களும்.

கேம் வெறியர்கள் தவறவே விடக்கூடாத ஒரு Must Play கேம் இது. தவறவே விடாதீர்கள். நான் வாங்கியது, இதன் Game of the Year PS3 edition. இப்போது 1200/-க்குக் கிடைக்கிறது. அதில் Undead Nightmare என்ற ஒரு பிரமாதமான Zombie கேமும் உண்டு. இதே களத்தில் அனைவரும் ஸோம்பிக்களாக மாறினால் எப்படி இருக்கும்?

  Comments

5 Comments

  1. siva

    சூப்பர் விமர்சனம்.விளையாடும் ஆர்வத்தை தூண்டுகிறது. ஆனால் PC version இல்லாதது என்னை போன்றவர்களுக்கு ஒரு ஏக்கத்தை தருகிறது. செவ்விந்தியர்கள் இந்த கேமில் உண்டா?

    Reply
  2. எப்போ கேம் விமர்சனம் எழதுவிங்கன்னு காத்திருந்தேன் i’m happy நாங்கல்லாம் எப்ப ப்ளே ஸ்டேசன் வாங்கி இந்த கேம் விளையாண்டு முடிவை தெரிந்து கொள்ள நீங்களே சொல்லி விடலாம்மே…

    Reply
  3. நண்பா, உங்கள் வலைதளம் அறிமுகமான் உடன் நான் படித்தது அனைத்தும் வெஸ்டர்ன் படம் விமர்சனங்களைத்தான்…காமிக்ஸ் புத்தகங்கலின் தாக்கமும் உண்டு…அருமையான் உங்களின் இந்த கேம் விமர்ஷனம் என்னை playstation வாங்கி விளையாட தூண்டுகிறது…..

    Reply
  4. Dhans

    Finally your review came… Was expecting your review for long time.

    GTA 5 is my next game, I am addicted to open world game and Red dead redemption is additional bonus with western storyline.

    Reply
  5. mani

    exellent game review sir

    Reply

Join the conversation