யாமிருக்க பயமே (2014) – Analysis

by Karundhel Rajesh June 9, 2014   Screenplay Analysis

தமிழில் பேய்ப்படங்கள் புதிதல்ல. ஆனால் சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் பிரபலமடைந்து வரும் காமெடி ஹாரர் (Comedy Horror) ஜானரை மிகச்சரியாக உபயோகித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘யாமிருக்க பயமே’. இந்தப் படம் பெங்களூரில் வெளியான உடனேயே பார்த்துவிட்டேன். ஆனால் இப்போதுதான் விமர்சனம் எழுத நேரம் கிடைத்தது. Godzilla, கோச்சடையான், X Men – Days of Future Past என்று வரிசையாக இதன்பின் பார்த்துத் தள்ளியதால் யாமிருக்க பயமேவைப் பற்றி எழுத முடியவில்லை.

ஹாலிவுட்டில் இந்த காமெடி ஹாரர் படங்கள் ஹாலிவுட் படங்கள் வெளியாகத் துவங்கிய காலகட்டம் முதலே வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதில் சில படங்கள் மறக்கமுடியாதவை. பீட்டர் ஜாக்ஸன் பட்டையைக் கிளப்பிய Dead-Alive (Braindead) படம் ஒரு உதாரணம். Shaun of the Dead, Fright Night (தமிழில் ’அமாவாசை இரவில்’ என்று 1989ல் வெளிவந்தது. காப்பிதான்), Zombieland, Tremors, Evil Dead – Army of Darkness என்று ஏராளமான படங்கள் அங்கே உண்டு. இவைகளிலெல்லாம் பொதுவான அம்சம் – ஒரு காட்சியில் பயமுறுத்தினால் இன்னொரு காட்சியில் சிரிக்க வைப்பார்கள். அதிலும் நாம் எதைக் கண்டு பயந்தோமோ அதைக் கண்டே சிரிப்பும் வரும். இதுதான் காமெடி ஹாரர். இப்படிப்பட்ட படங்களாகத் தமிழில் ‘முனி’, ‘காஞ்சனா’ போன்றவற்றை ராகவேந்திரா லாரன்ஸ் எடுத்திருக்கிறார். ஒருவகையில் பார்த்தால் ‘சந்திரமுகி’யும் காமெடி ஹாரர்தான். ஆனால் பல படங்கள், காமெடியான ஹாரர் படங்களாகிவிடுவதும் உண்டு. அது வேறு ஒரு ட்ராக் என்பதால் அதை விட்டுவிடுவோம்.

ஹாலிவுடில் இத்தகைய காமெடி ஹாரர் படங்களுக்கென்றே சில விதிகள் உண்டு. Zombieland என்ற செம்ம ஜாலி காமெடி ஹாரரைக் கொடுத்த இயக்குநர்கள் Rhett Reese & Paul Wernick (திரைக்கதை எழுதியவர்களும் இவர்கள்தான்), இதற்கென்றே சில சுவாரஸ்யமான விதிகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவை:

1. காமெடி ஹாரர் எடுத்தால் படம் டப்பா ஆகிவிடும் என்ற எண்ணத்தைத் தலையை சுற்றித் தூக்கி எறியவும். ஹாலிவுடின் பல வெற்றிகரமான காமெடி ஹாரர்கள் உள்ளன என்பது ஒன்று; பயத்தின் உச்சத்தில் இருக்கும்போது இயல்பாகவே அந்த பயம் விலகி, ஜாலியாக சிரிக்கவேண்டும் என்றுதான் உள்மனம் (நம்மை அறியாமலேயே) விரும்பும் என்பது இன்னொன்று.

2. நிஜவாழ்க்கையிலும் கூட, கொடூரமான, பயத்தைக் கிளப்பும் சம்பவங்களிலிருந்து வெளியே வருவதற்கு நாம் என்ன செய்கிறோம்? அந்த சம்பவத்தைப் பற்றியே ஜோக் அடித்தும் நகைச்சுவையாகப் பேசியும்தானே? ஏற்கெனவே உம்மணமூஞ்சியாக இல்லாமல் ஜாலியான மனிதர்களாக இருக்கும் சில கதாபாத்திரங்கள், திரையில் ஒரு பேயோ பிசாசோ வரும்போது அதைப் பற்றியும் ஜாலியாகக் கமெண்ட் அடிப்பதுதானே லாஜிக்?

3. எந்த இடங்களிலெல்லாம் சிரிப்பு ஒரு திரைப்படத்தில் தேவைப்படுகிறது? படுபயங்கர சீரியஸாக, நிஜமாகவே பேய்த்தனமாகச் சென்றுகொண்டிருக்கும் ஒரு இருண்ட படத்தில் அவசியம் சிரிப்பின் தேவை நமக்குத் தேவை. ‘துலாபாரம்’, ‘Seven’ போன்ற படங்களில் சிரிப்பு என்பது ஒரு நேனோமீட்டர் கூட இருக்காதுதான். ஆனால், ஆடியன்ஸின் மீதும்தான் இந்த இயக்குநர்கள் கொஞ்சம் பரிதாபம் காட்டினால் என்ன? சிரித்துவிட்டுத்தான் போகட்டுமே?

4. ’ஸ்லாப்ஸ்டிக் காமெடி’ என்பது காமெடி ஹாரர்களின் ’தலையாய’ அம்சம். தலையே இல்லாமல் அங்குமிங்கும் ஓடும் ஸோம்பிகள், மாடியில் இருந்து ஸோம்பியின் மண்டைமேல் விழும் பியானோ, பேஸ்பால் பேட்டாலேயே ஸோம்பியின் மண்டையை அடித்துப் பந்தைப்போல் பறக்கடிக்கும் நபர் என்று காமெடி ஹாரரில் கொஞ்சம் ஸ்லாப்ஸ்டிக் தன்மை இருப்பது நல்லது.

5. காமெடி ஹாரர் படங்களில் பேய் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு பேயிடம் மாட்டிக்கொள்ளும் கதாபாத்திரங்களும் முக்கியம். காரணம் பேயை சீவி சிங்காரித்து படுபயங்கரமாக நாம் காட்ட எடுத்துக்கொள்ளும் நேரத்தை, கதாபாத்திரங்களை சுவாரஸ்யமாகக் காட்ட நாம் செலவழிப்பதில்லை. இதனால் கதாபாத்திரங்கள் மிகவும் predictable பாத்திரங்களாக மாறிவிடும் ஆபத்து உண்டு.

6. காமெடி ஹாரரில் பெரும்பங்கு வகிக்கும் இன்னொரு விஷயம் – உணவு. ஏதேனும் ஒரு உணவை சுவாரஸ்யமாகக் காட்டி, படத்தில் அதனை நுழைத்தால் இன்னும் ஜாலியான ஹாரர் உணர்வு அதிகரிக்கும். உதாரணம்: ஸோம்பிலாண்ட் படத்தில் Twinkies எனப்படும் ஒரு குறிப்பிட்ட கேக் படம்முழுதும் வரும். படம் பார்த்தவர்கள் இதனை உணரலாம்.

7. கடைசியாக, படத்தின் கதாபாத்திரங்களுக்கு இடையே வரும் வசனங்களும் மூவ்மெண்ட்களும்தான் உங்கள் காமெடி ஹாரரில் சிரிப்பை வரவழைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒருவருக்கொருவர் சம்மந்தமே இல்லாத சில கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும்? அதில்தான் காமெடி இருக்கிறது. படம் காமெடி ஹாரராக இருந்தாலும், படத்தில் வரும் வில்லன்/பேய்/ஸோம்பி/வேதாளம்/மேலதிகாரி போன்றவர்கள் எல்லாம் எதுவுமே இல்லாமலும்கூட உங்கள் காமெடி ஹாரர் சிரிப்பை வரவழைத்தால், இந்தப் பரீட்சையில் நீங்கள் பாஸ் என்று அர்த்தம்.

இந்த ரூல்களை இங்லீஷில் விபரமாகவும் இன்னும் சுவாரஸ்யமாகவும் இங்கே படிக்கலாம். இவற்றைவிடவும் யாரும் ஒரு காமெடி ஹாரர் படத்தைப் பிரித்து மேய முடியாது.


 

‘யாமிருக்க பயமே’ படத்தை எடுத்துக்கொண்டால், அது ஒரு காமெடி ஹாரருக்குரிய அனைத்து விஷயங்களையும் சரியாக டீல் செய்திருக்கிறது என்றே தோன்றியது. கவனிக்க – ’காமெடி ஹாரர் என்பதில் இன்னின்ன இடம்பெறவேண்டும்’ என்ற புரிதலையே நான் குறிப்பிடுகிறேன். வேறு எதுவும் அல்ல.

ஹாலிவுடில் எந்த ஒரு படமாக இருந்தாலும் அதற்கேற்ற பக்காவான ஹொம்வொர்க் இருக்கும். திரைக்கதையை நன்றாக பாலிஷ் செய்துவிட்டுத்தான் படப்பிடிப்பைப் பற்றியே பேச்சை எழுப்புவார்கள். இதனால் அங்கே மொக்கையான படம் ஒன்றை எடுத்துக்கொண்டால்கூட, அதன் திரைக்கதையும் உருவாக்கமும் நன்றாக இருக்கும். அதாவது, திரைக்கதை – அதற்குரிய எல்லா விதிமுறைகளையும் உள்ளே கொண்டிருக்கும் (ஆனால் அதுமட்டுமே ஒரு திரைக்கதையின் வெற்றிக்குப் போதாது. திரைக்கதை விதிமுறைகளைப் பின்பற்றும் அதே நேரத்தில், கதையிலும் ஒரு ஆழம் இருக்கவேண்டும். Zombieland ஒரு காமெடி ஹாரராக இருந்தாலும், அந்தப் படம் வெளியாகும் நேரத்தில் அதுவரை வெளிவந்திருந்த அத்தனை காமெடி ஹாரர்களின் பாக்ஸ் ஆஃபீஸ் சாதனையையும் முறியடித்தது. அந்தப் படம் இப்போது ஒரு Cult Classic. காரணம் அதன் திரைக்கதையில் இருந்த சில சுவாரஸ்யங்கள் (கதாபாத்திரங்களின் நெருக்கம், அவர்களின் நோக்கங்கள், மெல்ல மெல்ல எதிரிகளாக இருக்கும் அவர்கள் இணைவது, சுவாரஸ்யமான கதாபாத்திர உருவாக்கம் போன்றவை).

இப்போது அப்படியே தமிழுக்கு வந்தால், தமிழின் ரசனை வேறுமாதிரியானது. திரைக்கதை அமைப்பும் உள்ளடக்கமும் அட்டகாசமாக இருக்கும் ‘ஆரண்ய காண்டம்’ போன்ற படங்கள் இங்கே வெற்றிபெறவில்லை. காரணம், தமிழ் ஆடியன்ஸின் ரசனை கொஞ்சம் வித்தியாசமானது. அதிலும் இப்போது குறிப்பாக ஒரு குடும்பத்தையே திரையரங்கின் பக்கம் அழைத்து வரக்கூடிய படங்களின் காலகட்டம். அப்படி ஒரு குடும்பம் திரையங்கிற்கு வரவேண்டும் என்றால் அவர்களை நாள் முழுதும் அழவைக்கும்படியா படம் எடுக்கமுடியும்? அதனால்தான் தற்போது வெளிவரும் படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை அதிகமாகவே இருக்கும். அந்த நகைச்சுவையின் தரம் என்பது முக்கியம் இல்லை; மாறாக, சம்மந்தமே இல்லாமல் பேசினாலும் ஆடியன்ஸ் சிரிக்கவேண்டும் என்பதுதான் இங்கே எடுபடும்.

அடுத்ததாக, தமிழில் காட்சிகள் கனமாக இருக்கத் தேவையில்லை. ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் காட்சிகள் இருந்தாலும் இறுதியில் சென்ற பத்தியில் பார்த்த ‘நகைச்சுவை’ அதில் இருந்துவிட்டால் படம் ஓடும். இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு போன்றவையெல்லாம் முக்கியம் இல்லை.

’யாமிருக்க பயமே’ படத்தைத் திரையரங்கில் பார்க்கையில் முதல்பாதி படுபயங்கர மொக்கையாக இருப்பது புரிந்தது. முதல் காட்சியில் இருந்தே சம்மந்தமே இல்லாத வசனங்கள், காட்சிகள் என்பவையெல்லாம் வரிசையாக வந்துபோய்க்கொண்டிருந்தன. இடைவேளை வரை பார்த்ததில் படம் அவசியம் ஃப்ளாப் ஆகிவிடும் என்றுதான் கணித்தேன். ஆனால் இடைவேளைக்குப் பிறகு வந்த காட்சிகளைப் பார்க்கையில் படம் ஓடியதன் காரணம் புரிந்தது. தமிழில் இன்றுவரை தரமான பேய்ப்படம் ஒன்று இல்லவே இல்லை (தரம் என்றால் என்ன என்ற கேள்வி எழுந்தால், ஸ்டான்லி குப்ரிக்கின் The Shining படத்தைப் பார்க்கலாம். அதுதான் இன்றுவரை வெளிவந்த ஹாரர் படங்களிலேயே மிகத்தரமான இங்லீஷ் பேய்ப்படம்). ‘மைடியர் லிஸா’, 13ம் நம்பர் வீடு’ போன்றவையெல்லாம் நமது நாஸ்டால்ஜியாவுக்காக நமது மண்டையில் இருக்கும் படங்கள். அவற்றை இன்று போட்டுப்பார்த்தால் விழுந்து புரண்டு சிரிப்போம் என்பது உறுதி. தரமான பேய்ப்படங்கள் இல்லாத தமிழ்ப்பட உலகில், பேயையும் நகைச்சுவையையும் ஒன்றாகக் கலந்ததுதான் படத்தின் வெற்றி.

கூடவே, படத்தின் பயமுறுத்தும் தருணங்கள் அவசியம் மக்களைக் கவரும். காரணம் இங்கே ஹாலிவுட்/உலக ஹாரர் படங்கள் இன்னும் பிரபலம் ஆகவில்லை. Incidious, A Tale of two Sisters, The Conjuring போன்ற படங்களில் எப்படியெல்லாம் பேயைக் காட்டினார்களோ அப்படியேதான் இதிலும் பேய் காட்டப்பட்டிருக்கிறது (மேக்கப்+கெட்டப்). இதைப்போன்று எக்கச்சக்கமான பேய்ப்படங்களைப் பார்த்திருப்பதால் என்னை இந்தப் படம் கவரவில்லை. இருந்தாலும் அவசியம் தன் குடும்பத்தைத் திரையரங்குக்குக் கூட்டிவரும் ஒரு மனிதனைக் கவர இதுபோதும். குறிப்பாக பெரும்பாலும் எந்தவிதத் திரைப்பட awarenessஸும் இல்லாத தமிழில் (ஃபேஸ்புக்கில் வருவதெல்லாம் general audienceக்குப் பொருந்தாது. பொதுவான ஆடியன்ஸில் 95% ஃபேஸ்புக், ப்லாக் போன்றவற்றில் வரும் விமர்சனங்களைப் பார்ப்பதில்லை) இப்படிப்பட்ட முயற்சிகளில் தவறும் இல்லை. தமிழில் எந்த ஃபார்முலா வெற்றிபெறும் என்று கச்சிதமாக யோசித்திருக்கிறார் இயக்குநர் Deekay (இதில் ஓவியாவின் சில கவர்ச்சி நிமிடங்களும் உண்டு). ’காஞ்சனா’ போன்ற படங்களிலும் ஹீரோயினைக் கவர்ச்சி உடையில் ஆடவைப்பது இருந்தது என்றாலும், இந்தப் படத்தில் காட்டியதுபோல் அபத்தமான நிமிடங்கள் பேய்க்கு இல்லை. பேய் அதில் படு சீரியஸ் பேயாகவே காட்டப்பட்டிருந்தது என்பதே இந்தப் படத்தின் இன்னொரு அட்வாண்டேஜ். நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், பேயையும் காமெடியில் பங்கெடுக்க வைத்தது ஆடியன்ஸுக்குப் பிடித்திருக்கிறது.

கேஷுவலாக, திரைக்கதையில் எந்த ஹோம்வொர்க்கும் செய்யவே இல்லை என்பது நன்றாகத் தெரியும்விதமாகவே இந்தப் படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இருந்தாலும், இந்த வெற்றியை முன்வைத்து Deekay போன்ற இயக்குநர்கள் தங்களது அடுத்த படங்கள் தரமாக இருக்கும்படி ஒரு முயற்சியை முன்னெடுக்க வேண்டும். தமிழ் சினிமா தற்போதுதான் கொஞ்சம் exposure அடைந்து வருகிறது என்பதால் இனி வரும் அவர்களின் படங்கள் அதை நிரூபிக்க வேண்டும். கமெடி ஹாரர் படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்பது Deekayவுக்குத் தெரிந்திருக்கிறது என்றாலும், இந்தப் படத்தைப் போலவே கேஷுவலாக அவரது அடுத்த படம் இருந்தால், அந்த gambleன் முடிவு நெகட்டிவாக இருக்கும் சாத்தியம் அதிகம். திரைக்கதையில் எக்கச்சக்கமான கவனம் தேவை. இந்தப் படத்தையே இன்னும் நன்றாக யோசித்து தமிழின் உதாரண காமெடி ஹாரராக மாற்றக்கூடிய வாய்ப்பை அவர் இழந்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.

Deekayன் அடுத்த படத்தை எதிர்பார்க்கிறேன். பின்னர்தான் அவரைப் பற்றிய முழுக்கருத்தும் சொல்லமுடியும் என்பதால்.

பி.கு

இந்தப்படம், அட்டகாசமான தென் கொரிய இயக்குநர் கிம்-ஜி-வூனின் முதல் படமாகிய ‘The Quiet Family’ (1998) படத்தின் காப்பி என்று ஃபேஸ்புக்கில் நண்பர்கள் பகிர்ந்திருந்தனர். அந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்திருக்கும் நிலையில், அந்தப் படத்தின் சில காட்சிகளில் இன்ஸ்பையர் ஆகித்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் யாமிருக்க பயமே அதன் காப்பி அல்ல என்பது நன்றாகத் தெரிகிறது. ஒரிஜினல் படத்துக்கு அவசியம் க்ரெடிட்ஸில் Deekay நன்றி தெரிவித்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை.

  Comments

8 Comments

  1. Watching this movie, I felt scenes being unconnected to one another with missed humor timing during most of 1st half. But the humor was spot on many occasions blended a really nice Ghost CGI/Makeup;Ending was very good as well. Really a needed attempt in Tamil(which should have happened long back) and I guess this may be a start of a trend for others to finally make Tamil Zombie Comedy which would definitely be a sure hit strategy.

    Reply
    • Rajesh Da Scorp

      I doubt about tamil zombie movies now boss. Once upon a time, Naalaiya manithan and adhisaya manithan got released. At that time, there was no exposure here. Now, the exposure among the youth is at it’s peak. If a zombie film gets released here, I doubt if it would be a hit since there are too many benchmark zombie films outside. But let’s wait and watch

      Reply
  2. vijai

    படம் எனக்கு பிடிக்கவில்லை .காமெடியும் பத்தலே .பயமுறுத்தலும் பத்தலே .

    தரமான பேய்ப்படங்கள் இல்லாத தமிழ்ப்பட உலகில்//// யாவரும் நலம்,பிட்சா இரண்டும் தமிழின் சிறந்த ஹாரர் படங்கள் என்பது என் கருத்து.உங்கள் கருத்து என்ன?

    Reply
    • Rajesh Da Scorp

      எனக்கு யாவரும் நலத்தின் கடைசி சில நிமிடங்கள்தான் பிடித்தது. பீட்ஸா – சஸ்பென்ஸ் படம்னு சொல்லலாம். ஹாரர் படம் இல்லை என்பது என் கருத்து.

      Reply
  3. நேற்றுதான் நான் இந்தப் படத்தை பார்த்தேன். நீங்கள் சொன்னது நூறு சதம் உண்மை. படத்தின் முதல் பாதி அவ்வளவாக சுவாரஸ்யமாக இல்லை. ஆனால் இரண்டாம் பாதி அதற்கு நேர் எதிர். காமெடியும், சின்ன சின்ன ட்விஸ்ட்களும் வயிறைப் பதம் பார்த்து விட்டன. நல்லதொரு முயற்சி ! இதையே நூல் பிடித்து நீங்கள் சொன்னது போல தரமான காமெடி ஹாரர் படங்கள் வர வேண்டும்.

    Reply
    • Rajesh Da Scorp

      ஆமா. ரெண்டாவதுல காமெடி மட்டுமில்லாம ஆபாசமும் இருந்தது. அதை அவசியம் கவனத்துல வச்சி இனிமே குறைக்கணும். இதை எப்படி ஃபேமிலியோட பார்க்குறாங்கன்னு எனக்குப் புரியல. ‘என் பூரியைப் பார்த்திருக்கியா?’ன்னு டயலாக் வருது. கவர்ச்சி நடனங்கள். குழந்தைகள் எப்படி உள்ளே அனுமதிக்கப்படுறாங்க?

      Reply
  4. Accust Here

    Can we expect a review for “Edge of Tomorrow”

    Reply
    • Rajesh Da Scorp

      oh yea just published it 🙂

      Reply

Join the conversation