The Yellow Sea (2010) – Korean

by Karundhel Rajesh December 19, 2013   world cinema

[quote]சைனா, வட கொரியா மற்றும் ரஷ்யா ஆகியவை சந்திக்கும் இடத்தின் பெயர் – யான்பியான். சைனாவின் ஜிலின் மாகாணத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியின் சிறப்பம்சம் – வடக்கிலும் மேற்கிலும் எல்லையாக சைனாவும், தெற்கில் வடகொரியாவும், கிழக்கில் ரஷ்யாவும் இருப்பதே. இப்படி மூன்று நாடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்தப் பகுதி, பெரும்பாலும் கொரியர்களால் ஆனது. கிட்டத்தட்ட 800,000 கொரியர்கள் இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள். இவர்கள், காலம்காலமாக சைனாவில் தங்கிவிட்டவர்கள். இவர்களை ‘ஜோஸோஞ்ஜோக்’ (Joseonjok) என்ற பெயரில் அழைக்கிறார்கள். இவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலாக, ஒன்று கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் – அல்லது தென் கொரியாவிற்குச் சென்று தங்கி வேலை செய்து வாழ்பவர்கள்.[/quote]

மேலே இருப்பது, இந்தப் படம் ஆரம்பிக்கையில் காண்பிக்கப்படும் வாசகங்களை இன்னும் தெளிவாக நான் எழுதியிருப்பதே.

கொரியப்படங்களைப் பற்றி நான் எழுதிய கடைசி விமர்சனம் – The Thieves. மேயில் எழுதியது. அதன்பின் இப்போதுதான் நேரம் கிடைத்தது. முதலில், இயக்குநர் நா-ஹோங்-ஜின் (Na-Hong-Jin) பற்றிப் பார்த்துவிடுவோம். அதன்பின் படத்தை கவனிப்போம்.

‘Chaser’ திரைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதுதான் இவரது முதல் படம். நான் சேஸர் படத்தைப் பார்த்தது, இரண்டு வருடங்கள் முன்னால். அந்தப் படத்தை எனக்குக் கொடுத்தது ஒரு பிரபலம். அவரது பெயரை கட்டுரையின் இறுதியில் தருகிறேன். இதுவரை நான் பார்த்த கொரியப்படங்களில் மறக்க முடியாதவற்றில் அவசியம் சேஸரும் ஒன்று. அதைப்பற்றி விரைவில் நினைவுகூர்ந்து எழுதினாலும் எழுதுவேன் (சோம்பல் இல்லாவிடில்). அப்படிப்பட்ட ஒரு அருமையான த்ரில்லரை எடுத்த நா-ஹோங்-ஜின்னின் இரண்டாவது படம்தான் The Yellow Sea.

கொரிய மசாலா சினிமாவில் ஒரு பெரிய படையே இருக்கிறது. படத்துக்குப் படம் மாறுபட்டு எடுத்து பல்வேறு genreகளில் புகுந்து புறப்படும் கிம்-ஜி-வூனில் (Kim-Ji-Woon) இருந்து தொடங்கி (A Bittersweet Life, I saw the Devil, The Good, bad and the Weird, The Tale of Two Sisters) பார்க்-சான்-வூக் (Park-Chan-Wook) – Oldboy, Lady Vengeance, Sympathy for Mr. Vengeance, லீ-ஜியோங்-பியோம் (Lee-Jeong- Beom) – The Man from Nowhere, ச்சோய்- டோங்-ஹூன் (Choi-Dong-Hoon) – The thieves என்று போகும் லிஸ்ட் அது. இதில் கிம்-கி-டுக், லீ-சாங்-டோங் (Lee-Chang- Dong) போன்றவர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்கள் கலைப்பட இயக்குநர்கள். கிம் – கி-டுக் பற்றிப் படிக்க மேலே அவரது பெயரை க்ளிக் செய்யலாம். நமது தளத்தில் இதுவரை நான் எழுதிய அவரது விமர்சனங்கள் வரும். லீ-சாங்-டோங் பற்றிப் படிக்க, அடுத்ததாக இருக்கும் ‘Peppermint Candy‘ மீது க்ளிக் செய்து கொழந்த எழுதிய விமர்சனத்தைப் படிக்கலாம்.

ஓகே. சென்ற பத்தியில் உள்ள அத்தனை கொரியப்பெயர்களையும் படித்துவிட்டு தலை சுற்றும் நிலைக்குப் போயிருப்பீர்கள். ஆகவே, இனி The Yellow Sea படத்தைப் பற்றிப் பார்க்கலாம்.[divider]

படத்தில் மொத்தம் நான்கு அத்தியாயங்கள் (யெஸ். க்வெண்டின் ஸ்டைலேதான்) இருக்கின்றன. முதல் அத்தியாயத்தின் பெயர் – Taxi Driver.

கிம்-கு-நாம் என்பவன், கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் மேற்கோளில் வரும் யான்பியான் பகுதியில் டாக்ஸி ஓட்டிப் பிழைக்கும் ஒரு பெஸிமிஸ்ட். அவனது மனைவியான லீ-யோ-ஜா அவனுடன் இல்லை என்று தெரிந்துகொள்கிறோம். காரணம், தென் கொரியாவுக்கு அவள் சென்றுவிட்டிருக்கிறாள் – பணம் சம்பாதிப்பதன் பொருட்டு. அவளுக்காக பெரும் பணத்தை உள்ளூர் ரவுடி ஒருவனிடமிருந்து பெற்றுத் தந்திருக்கிறான் கு-நாம். அந்தப் பணத்தை அடைக்க, டாக்ஸி ஓட்டி அதில் வரும் பணத்தை தினமும் அந்த ரவுடிக்குத் தந்துகொண்டிருக்கிறான். ஆனால் அவனைச் சுற்றியிருப்பவர்களோ, அவனது மனைவி கொரியாவில் யாருடனாவது வாழ்ந்துகொண்டிருப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். அதில் கு-நாமுக்கு நம்பிக்கையில்லை. அவனது மனைவி அவசியம் அவனிடம் வருவாள் என்பதே அவனது எதிர்பார்ப்பு.

ஒருநாள், அந்தப் பிராந்தியத்தின் சூதாட்ட விடுதியில் அவன் அடிக்கடி பார்த்துக்கொண்டிருக்கும் தாதாவான ம்யூங்-கா என்பவன், கு-நாமுக்கு விரைவில் பணம் சம்பாதிக்கக்கூடிய திட்டம் ஒன்றைச் சொல்கிறான். தென் கொரியாவுக்குச் சென்று, ஒரு குறிப்பிட்ட நபரைக் கொன்றால், அவனது கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக வாழக்கூடிய அளவுக்குப் பணம் தருவதாகச் சொல்கிறான்.

உடனடியாக சம்மதிக்காத கு-நாம், அன்றிரவு அவனது பெண் குழந்தையுடனும் தாயுடனும் செலவழிக்கிறான். தூக்கத்தில் மனைவியின் கனவு. இரவில் கண் விழிக்கும் கு-நாம், இந்த வேலையை ஏற்றுக்கொள்வதாக ம்யூங்-காவிடம் சொல்கிறான். பணத்தில் ஒரு பங்கை அவனிடம் கொடுக்கும் ம்யூங்-கா, தான் சொன்ன நபரின் விபரங்களை கு-நாமிடம் கொடுத்து படிக்கச் சொல்லிவிட்டு அந்தக் காகிதத்தை எரிக்கிறான். அந்த நபரின் கட்டை விரலை எடுத்துக்கொண்டு தன்னிடம் வந்தால் மீதிப்பணத்தைக் கொடுப்பதாக சொல்கிறான்.

கிளம்புகிறான் கு-நாம். கொலைக்காக மட்டும் இல்லாமல், மனைவி இருக்கும் கொரியாவுக்குச் செல்ல ஒரு காரணம் கிடைத்திருப்பதாலும்தான். கஷ்டப்பட்டு திருட்டுப்படகில் மிருகங்களைப் போல் அடைபட்டு சட்டவிரோதமாக கொரியாவுக்குச் செல்லும் கும்பலோடு ஒருவனாக கொரியாவை அடைகிறான்.

இரண்டாவது அத்தியாயம் துவங்குகிறது. அதன் பெயர் – Murderer. இதில், கொரியாவில் கு-நாம் எப்படியெல்லாம் அவன் கொல்லவேண்டிய நபரின் வீட்டை அடைகிறான், அந்த வீட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்படியெல்லாம் கற்றுக்கொள்கிறான், தனது மனைவியைத் தேடி எங்கெல்லாம் பயணம் செல்கிறான், எப்படிப்பட்ட மக்களை அங்கே பார்க்கிறான் என்பதை விபரமாக சொல்கிறது (எனக்கு இந்தப் பகுதியைப் பார்க்கையில் ஒரான் பாமுக்கின் ‘My Name is Red’ நினைவு வந்தது). கொரியாவில் ஒரு அந்நியனாகவே உலவுகிறான் கு-நாம். யாருடனும் பேசாமல், நகர்ப்புறத்துக்கு முற்றிலும் அந்நியமாக, பசித்த மிருகத்தைப் போல உலவுகிறான். ஒவ்வொரு நாளும் கொலையாகப்போகும் நபரின் வீட்டைக் கண்காணித்து, அவரது தினசரி நடவடிக்கைகளை தெரிந்துகொள்கிறான். தன்னிடம் உள்ள நாட்குறிப்பில் ஒவ்வொரு தேதியாக அடிக்கிறான்.

கொலை செய்யவேண்டிய நாள் வருகிறது. ஏற்கெனவே துல்லியமாகப் போட்ட திட்டப்படி, இரவில் வீட்டுக்கு வரும் நபர், அந்த அபார்ட்மெண்ட்டின் மாடிக்குச் சென்று வீட்டின் கதவைத் திறக்கும்வரை வாசலில் அவனது ட்ரைவர் நிற்பான். அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு தளத்திலும் இருக்கும் தானியங்கி விளக்குகள் உயிர்பெறும். அந்த நபர் அவற்றைத் தாண்டிப் படியேறும்போது அணையும். இந்த விளக்குகளை ட்ரைவர் பார்த்துக்கொண்டிருப்பான். கடைசி விளக்கு அணைந்ததும்தான் அவன் கிளம்புவான். எனவே, இதையெல்லாம் எப்படிக் கடப்பது என்பதை அட்சரசுத்தமாக கு-நாம் முந்தைய நாள் அங்கு சென்று திட்டமிடுகிறான். அந்தச் சமயத்தில்தான் அவனது மனைவி இருக்கும் இடத்தையும் கண்டுபிடிக்கிறான். ஆனால் அங்கே அவள் இல்லை. எனவே, பக்கத்து வீட்டுக்காரனிடம் பணம் கொடுத்து, மனைவி வந்தால் அவளை அங்கேயே இருக்கச்சொல்லுமாறும், வேலை ஒன்றை (கொலை) முடித்துவிட்டு வந்து அவளைச் சந்திப்பதாகவும் சொல்லிவிட்டு செல்கிறான் கு-நாம்.

கு-நாம், தெருவின் முனையில் நின்றுகொண்டு, கொலைசெய்யவேண்டிய மனிதன் வந்துவிட்டானா என்று நோட்டம் இடுகிறான். திடீரென்று, வேறு இரண்டு நபர்கள் அங்கே உள்ளே சென்று மறைந்துகொள்வதை கவனிக்கிறான். இதை அவன் எதிர்பார்ப்பதில்லை. பதற ஆரம்பிக்கிறான்.

கார் வந்து நிற்கிறது.

அதிலிருந்து இறங்கும் அந்த மனிதன், மெல்ல அபார்ட்மெண்ட்டுக்குள் செல்கிறான்.

தெருவில் நின்றுகொண்டிருக்கும் கு-நாமுக்கு, மேலே கண்ணாடியின் வழியாக அங்கு பதுங்கியிருப்பவர்கள் தெரிகிறார்கள்.

அபார்ட்மெண்ட் தளங்களில் இருக்கும் தானியங்கி விளக்குகள் ஒவ்வொன்றாக எரிகின்றன.

ஆபத்தைப் புரிந்துகொள்ளும் கு-நாம், அபார்ட்மெண்ட்டை நோக்கி ஓட ஆரம்பிக்கிறான் . . .[divider]

photo-The-Murderer-Hwanghae-2010-1

படத்தின் முதல் ஒரு மணி நேரம் அட்டகாசமாக செல்கிறது. குறிப்பாக கு-நாம் தென் கொரியாவுக்கு வருவதும், வந்தபின்னர் அங்குமிங்கும் அலைவதும் மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கின்றன. அழகு என்றதும் கவித்துவமாக இருக்கிறது என்று எண்ண வேண்டாம். மிக இயற்கையாக இருக்கின்றன என்று பொருள். படத்தின் ஆரம்பத்தில் காண்பிக்கப்படும் யான்பியான் பிராந்தியமும் சரி, அதன்பின்னர் கொரியாவும் சரி – அந்தந்த பிராந்தியத்தில் காணப்படக்கூடிய இயல்பான மனிதர்களோடு இருக்கின்றன. நகரில் யாரும் இவனுடன் சரியாகப் பேசுவதில்லை. இவனது செய்கைகளாலேயே இவன் ஒரு சிறு பிராந்தியத்திலிருந்து வந்திருக்கிறான் என்பது புரிகிறது.

கூடவே, படத்தின் முதல் பாதியில் வரும் பனி, படம் பார்க்கையில் நான் கவனித்த ஒரு விஷயம். ஆரம்பத்தில் இருந்தே சிறுகச்சிறுகக் காட்டப்படும் இந்தப் பனியும் குளிரும், அவசியம் படம் பார்க்கும் எவருக்குமே உறைக்காமல் போகாது. கொரியாவின் தெருக்களில் குளிரைப் பொறுக்காமல் உடலை அசைத்துக்கொண்டே நிற்கும் கு-நாமின் நிலை மிகவும் கொடியது.

கொரியப்படங்களில் இருக்கும் அதீத வன்முறை இதிலும் இருக்கிறது. இரண்டாம் பாதி முழுக்கவே கிட்டத்தட்ட அப்படித்தான். அதிலும் மெகா சைஸ் கோடரிதான் பெரும்பாலானவர்களின் ஆயுதம். ஓல்ட்பாயிலிருந்து இன்னும் அப்படித்தான் போலும்.

படத்தின் இரண்டாம் பாதி, முதல் பாதி அளவு இயல்பாக இல்லை. வேகமாக செல்கிறது என்பது உண்மைதான். ஆனால் இயல்புத்தன்மை இல்லாமல் இருந்ததால் எனக்கு ஈடுபாடு சற்றே குறைந்தது. இருந்தாலும் அவசியம் படத்தைப் பார்க்கலாம். படத்தின் இன்னொரு நெகடிவ் பாயிண்ட்டாக, இரண்டாம் பாதியின் கதாபாத்திரங்களுக்குள்ளான தொடர்பை சொல்லலாம். வேகமான வசனங்களால், என்ன நடக்கிறது என்பது கொஞ்சம் இழுபடுகிறது. குறிப்பாக, படத்தில் சில விஷயங்களுக்கு பதில் தெளிவாக இல்லை. அவை என்னென்ன என்பதை இங்கே சொன்னால் சஸ்பென்ஸ் உடையலாம் என்பதால், லேசாக சொல்கிறேன். படத்தில், கு-நாமை, கொரியாவுக்கு சென்று ஒருவனைக் கொல்லச்சொல்லும் தாதா ம்யூங்-கா, இரண்டாம் பாதியில் உள்ளே வருவதன் நோக்கம் என்ன? காரணத்தை ம்யூங்-காவே இன்னொரு கதாபாத்திரத்திடம் (கொரியாவின் தாதா கிம்-டே-வோன்) சொன்னாலும், அது ஒரு வலுவான காரணமாக இல்லாமல், சற்றே அலுப்பானதாக இருக்கிறது.

படத்தின் இரண்டாம் பாதியில், ம்யூங்-காவும் அவனது அடியாட்களும், ஏதோ ஒரு பெரிய மிருகத்தின் எலும்புகளில் ஒட்டியிருக்கும் சதைத்துணுக்குகளை பிய்த்துத் தின்றுகொண்டிருக்கும்போது நடக்கும் சண்டைக்காட்சி என்னைக் கவர்ந்தது. அந்த மிகப்பெரிய எலும்பையே (குதிரை??) ஆயுதமாகப் பயன்படுத்தும் ம்யூங்-காவின் கதாபாத்திர உருவாக்கம் அருமை.

படத்தைப் பார்க்கச்செல்லுமுன், படத்தில் ரத்தம் பீய்ச்சும் பல காட்சிகள் இரண்டாம் பாதியில் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

படத்தின் வில்லன் ம்யூங்-காவாக, கொரியன் படங்கள் பலவற்றில் நாம் பார்த்துப் பழகிய நடிகர் கிம்-யூன்- ஸியோக் (Kim-Yoon-Seok) பிரமாதமாக நடித்திருக்கிறார். இவரை ஏற்கெனவே சேஸரிலும் (கெட்ட ஹீரோ) பார்த்திருக்கிறோம். கூடவே, மேயில் நான் எழுதியிருந்த ‘The Thieves’ படத்திலும் கவனித்திருக்கிறோம். படத்தின் நாயகன் கு-நாமாக நடித்திருக்கும் ஹா-ஜுங்-வூ (Ha-Jung-Woo), சேஸரில் வில்லனாக நடித்தவர். கூடவே, நமது தளத்தில் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் கிம் கி டுக்கின் Time படத்திலும் நடித்திருக்கிறார்.

பி.குக்கள்

1.  எனக்கு சேஸரை அளித்த பிரபலம் – கொழந்த.

2. நமது தளத்தில் இதுவரை எழுதப்பட்டுள்ள கொரியன் படங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

3. படத்தின் இறுதி டைட்டில்கள் முடிந்ததும் வரும் Post-Credit ஸீனை காணத் தவறாதீர்கள்.

  Comments

12 Comments

  1. Rajesh Oru vella Torrent block pannita yenga irundhu World movies download pannuvinga………….

    Reply
    • Rajesh Da Scorp

      அஹமத் …நான் டிவிடிக்களை ரெண்ட் பண்ணி பார்ப்பவன் பாஸ். அதுனால, டாரன்ட்லாம் பிரச்னையே இல்ல எனக்கு

      Reply
  2. siva

    இது நல்லா புரயுது . நீங்க எழுதற gaming review தான் புதியவர்களுக்கு புரிவதில்லை. அது இன்னும் simpleஆ எழுதனா நல்லாருக்கும்.

    டிவிடிக்களை ரெண்ட் பண்ணி பார்க்க பெங்களூர்la எப்டினு சொன்னா நல்லாருக்கும். விலை?

    Reply
    • ஓகே.. பெங்களூர்ல பல இடங்கலில் சின்னச்சின்ன டிவிடி கடைகள் இருக்கு. ஒரு ப்ளூரேவுக்கு கிட்டத்தட்ட 75ல இருந்து 100 வாடகை. உதாரணம் – Channel 9 கடை. ஜெயநகர்ல இருக்கு. நான் முதல்ல மூணு வருஷம் ரிலையன்ஸ் BigFlix கஸ்டமர். அதுக்கப்புறம் அங்க சப்ஸ்க்ரிப்ஷன் நிறுத்திட்டு மூவிமார்ட்ல மெம்பர் ஆயிட்டேன். விலை – மாதம் மூவாயிரத்துல இருந்து ஆரம்பம்

      Reply
      • U can update weekly or monthly some 5 to 10 International movies list, so i can search for that…

        Reply
        • Rajesh Da Scorp

          Seems to be a good idea. Lemme think about it Ahamed

          Reply
          • Thank you…. waiting for ur list………….. 🙂

  3. raymond

    korean series ah…. super

    Reply
  4. Vijai

    hi.. have you watched ‘Zodiac’ (2007) ? please review it in your way..

    Reply
    • Rajesh Da Scorp

      Yes Vijai. I have watched it before many years. Will try to review sure.

      Reply
      • Vijai

        thank you..

        Reply

Join the conversation