Fade In முதல் Fade Out வரை – 23 : Robert Mckee – 2
இதுவரை எழுதப்பட்ட அத்தியாயங்கள்:
1. முழுத்தொடரையும் காண – Fade in முதல் Fade Out வரை
2. Blake Snyder தொடர்பான அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Blake Snyder
3. Robert Mckee பற்றிய அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Robert Mckee
Robert Mckee’s Introduction
தனது புத்தகத்தைத் துவக்கும் அறிமுகத்திலேயே, எந்தவிதமான சுற்றிவளைத்தலும் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வருகிறார் ராபர்ட் மெக்கீ. இந்தப் புத்தகம் முழுதுமே அப்படித்தான். ஸிட் ஃபீல்டின் புத்தகத்தில் ஆங்காங்கே நட்பான பல வரிகள் நம்மை வரவேற்கும். ஆனால் மெக்கீ அப்படிப்பட்டவர் இல்லை என்பதால், அவரது கடுமையான திரைக்கதை வகுப்புகளைப் போலவே புத்தகமும் கடுமையான நடையிலேயே இருக்கிறது. இதோ ராபர்ட் மெக்கீ சொல்லும் கருத்துகளைக் கவனிக்கத் துவங்கலாம். இனி வருவது அத்தனையும் – இங்கே இருந்து ராபர்ட் மெக்கீயின் புத்தகம் முடியும் வரை – அவரது பார்வையிலேயே வழங்கப்படுகிறது. சில சமயங்களில் ஸிட் ஃபீல்டின் கருத்துகளை அவர் கோபத்துடன் மறுக்கலாம். அது அவரது பார்வை என்பதால் அதற்கு நாம் மதிப்புக்கொடுக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் ராபர்ட் மெக்கீ கோபமடைந்து அவரது திரைக்கதை வகுப்பில் இருந்து எழுந்துபோய்விடக்கூடும்.
இந்தத் தொடரில் எந்த அத்தியாயத்தை இனிமேல் நீங்கள் படித்தாலும், அடிப்படையான அம்சம் – நமது மனதில் உள்ள கதையை எப்படி உண்மையாகவும் வெளிப்படையாகவும் பார்வையாளர்களின் மனதில் புகுத்துவது என்பதைத்தான் இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இனி, முதல் அத்தியாயம் ஆரம்பம். இது – Introduction என்று மெக்கீயால் எழுதப்பட்டது. ஆனால் முன்னுரை அல்ல. மிக முக்கியமான அத்தியாயம் இது.
கதை என்பது விதிகளால் (Rules) ஆனது அல்ல. மாறாக, அது சில கோட்பாடுகளைப் பற்றியது (Principles).
’விதி’ என்பது ‘இதை இப்படித்தான் செய்யவேண்டும்’ என்று ஆணையிடுவது. ஆனால் கோட்பாடு, ‘இப்படிச் செய்தால் சரியாக வரும்.. இப்படித்தான் பல்லாயிரம் வருடங்களாக அனைவரும் செய்து வெற்றிபெற்றனர்’ என்று சொல்வது. இரண்டுக்குமான வித்தியாசம் மிகவும் முக்கியமானது. நீங்கள் எழுத நினைக்கும் படைப்பு, ஏற்கெனவே வெற்றிபெற்ற ஒரு நாடகத்தையோ திரைக்கதையையோ அப்படியே வரிக்கு வரி அடியொற்றி விதிகளைப் பின்பற்றி எழுதப்படக்கூடாது. மாறாக, அந்தக் கலைப்படைப்பை உருவாக்கத் தேவையான கோட்பாடுகளை வைத்தே கவனமாக உருவாக்கப்படவேண்டும்.
உதாரணமாகக் கவனித்தால், ’பாட்ஷா’ திரைப்படம் அட்டகாசமான வெற்றி பெற்றது. இதனால், ‘என் திரைக்கதையை நான் பாட்ஷா எப்படி வெற்றிபெற்றது என்று ஆராய்ந்து அதன்படி உருவாக்குவேன்’ என்று முயற்சித்தால், ‘ஆரம்பத்தில் கதாநாயகன் அனைவருக்கும் உதவுகிறான். இதன்பின் சூப்பர்ஹிட் பாடலுடன் அறிமுகமாகிறான்.. கொஞ்ச நேரத்தில் சண்டை. வில்லன்கள் அவனை அடிக்கிறார்கள்.. அவன் திருப்பி அடிக்காமல் இருக்கிறான்..’ என்று ஆரம்பித்து, பாட்ஷாவின் அச்சு அசல் நகலாகத்தான் நமது திரைக்கதை உருவாகும். மாறாக, அந்தப் படம் வெற்றிபெற்றதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து, ஒரு நல்ல திரைக்கதையை விறுவிறுப்பாக எழுத என்ன செய்யவேண்டும் என்று யோசித்தால், மக்களுக்குப் பிடித்த திரைப்படங்களைக் கவனிக்கத் தோன்றும். அப்படிக் கவனித்தால் அவைகளில் பொதுவான அம்சங்கள் என்னென்ன என்று புரியும். இவைதான் கோட்பாடுகள். அவைகளை உபயோகித்தே – நாவல் என்றால் அதை எப்படி எழுதுவது; திரைக்கதை என்றால் எப்படி அதைச் சுவாரஸ்யமாகக் கொண்டுவருவது; அப்படியே கதை, கவிதை, கட்டுரை ஆகிய வடிவங்களுக்கு உண்டான வடிவங்கள் எவை; அவற்றுக்கான கோட்பாடுகள் எப்படி விளக்கப்பட்டிருக்கின்றன என்பதை வைத்தே – இப்படிப்பட்ட கலைப்படைப்புகள் உருவாக்கப்படவேண்டும்.
கதை என்பது காலத்தால் அழியாத, அனைவருக்கும் பொதுவான வடிவம். அது ஒரு சூத்திரத்தால் (Formula) உருவாக்கப்படுவதே இல்லை.
திரைக்கதை பற்றிய சூத்திரங்கள், டெம்ப்ளேட்கள், ’அவசியம் வெற்றிபெறும்’ என்று உருவாக்கப்பட்ட விதிகள் ஆகிய அனைத்துமே நான்சென்ஸ் (இதே வார்த்தைதான்) என்பது ராபர்ட் மெக்கீயின் கருத்து. உலகம் முழுக்க, கமர்ஷியல் படங்கள் எத்தனை வெற்றிகள் பெற்றாலும் அவைகள் பொதுவான மூலவடிவம் (Prototype) என்ற ஒன்றால் ஆனது அல்ல – அதாவது, ஒரே வார்ப்புரு இல்லை. ஒரு கலைப்படைப்பை உருவாக்கும்போது நமக்குத் தேவையானது என்ன தெரியுமா? ஒரே ஒரு விஷயம்தான். அந்தப் படைப்பை உலகில் உள்ள எந்த நாட்டில் இருப்பவனாலும் ரசிக்கமுடியவேண்டும். போலவே பலநூறு ஆண்டுகள் ஆனாலும் அவை அவர்களின் மனதில் இருந்து மறையக்கூடாது (உதாரணம்: திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூற்றுப் பாடல்கள், ராமாயணம், மஹாபாரதம், பாரதியாரின் கவிதைகள், ஷேக்ஸ்பியர், ஷெர்லக் ஹோம்ஸ், ஜேம்ஸ் காமரூன், ஸ்பீல்பெர்க், நோலன், டாரண்டினோ, வெர்னர் ஹெர்ஸாக், ஸ்கார்ஸேஸி, ஃபெலினி, பெர்க்மன், குரஸவா, ரித்விக் கடக், சத்யஜித் ரே முதலியன). நமக்கு, ஒரே டெம்ப்ளேட்டில் அமைந்த மசாலாக்களை எப்படி எடுப்பது என்ற சூத்திரங்களோ செய்முறை விளக்கங்களோ தேவையில்லை. மாறாக, உலகின் எந்த மூலையில் இருக்கும் ரசிகனாக இருந்தாலும், அவனது மனதை எப்படி வசப்படுத்துவது என்று யோசிக்க வைக்கும் கோட்பாடுகள்தான் முக்கியம். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், இப்படிப்பட்ட தரமான படைப்புகளின் அடியாழத்தில் இருக்கும் அனைத்துக்கும் பொதுவான கதைசொல்லல் வடிவம்தான் நமக்குத் தேவை. இப்படிப்பட்ட மூலமான வடிவத்தை ஆங்கிலத்தில் Archetype என்று சொல்வது வழக்கம். இதைப்பற்றிப் பின்னால் விரிவாகக் கவனிக்கலாம்.
இப்படிப்பட்ட தரமான கதையை உருவாக்கினால், உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு மனிதனுக்கும் அது பிடிக்கும்; அவனது மனதைக் கனிய வைக்கும். அவனை மட்டும் கவராமல், ஒரு தலைமுறையையே அது பாதிக்கும். யோசிக்கவைக்கும். அப்படிப்பட்ட திறமையை நாம் எப்படி அடைவது என்பதுதான் நமக்குத் தேவையான அம்சமே தவிர, விதிகள், டெம்ப்ளேட்கள், கமர்ஷியல் சூத்திரங்கள் ஆகியவை இல்லை.
கதை என்பது ஒரேபோன்ற (Stereotype) அரைத்தமாவு அல்ல. மாறாக, அது உலகம் முழுமைக்கும் பொதுவான, அடிப்படையான எளிய வடிவம் (Archetype).
ஏற்கெனவே பார்த்ததுபோல், உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பொதுவான கலைப்படைப்புதான் கதை. மாறாக, ஏற்கனவே வந்ததை அப்படியே அடியொற்றி உருவாக்கப்படுவது அல்ல. உதாரணமாக, இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பழக்கம் இருக்கிறது. அந்தப் பழக்கத்தை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படம் எடுக்கப்படுகிறது. அப்படி எடுத்தால் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும்தான் அதில் இருக்கும் பல விஷயங்கள் பொதுவாக இருக்கும். பிடிக்கும். அதை இந்தியாவின் இன்னொரு பகுதியைச் சேர்ந்தவன் பார்த்தால் அவனால் அதனுடன் ஒட்டமுடியாது. இதுதான் ஸ்டீரியோடைப் என்கிறார் ராபர்ட் மெக்கீ.
அப்படியென்றால் இதுபோன்ற ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களின் துயரங்களையும் வாழ்க்கைமுறைகளையும் பேசும் Circle, Fandry, Meghe Dhaka Tara, Salaam Bombay, Carandiru, 4 Months, 3 Weeks, 2 Days போன்ற படங்கள் எப்படி உலகம் முழுவதும் பேசப்படுகின்றன? காரணம், அவற்றில் உள்ள உண்மையும், அந்தக் கதைகளில் இருக்கும் வெளிப்படையான தன்மையும்தான். அவற்றிலெல்லாம் செயற்கையான அம்சங்களோ வலிந்து திணிக்கப்பட்ட கமர்ஷியல் விஷயங்களோ (சூத்திரங்கள்) இல்லை. இப்படங்களை உலகில் யார் பார்த்தாலும் அவற்றின் வலிகள் புரியும்.
அப்படியென்றால் ராபர்ட் மெக்கீ சொல்லும் கருத்துகளை வைத்து so called ‘அழுவாச்சியான’ உலகப்படங்கள் மட்டும்தான் எடுக்கமுடியுமா?
இல்லவே இல்லை. அவரது உதாரணங்களைக் கவனித்தால் தரமான கமர்ஷியல் கதை ஒன்றை எடுக்கத் தேவையான அம்சங்கள் பற்றித்தான் விவரித்திருக்கிறார் என்பது புரியும். அப்படங்களை எப்படி மறக்கமுடியாமல் ஆக்குவது என்பதுதான் இந்தப் புத்தகம். ‘சுறா’, ‘ஆழ்வார்’ போன்ற படங்கள் எப்படி எடுக்கலாம் என்பது இதில் இல்லை. மாறாக, ஆரண்ய காண்டம், நாயகன், முள்ளும் மலரும், மகாநதி போன்ற உணர்வுரீதியான படங்களும், கில்லி, தூள், மெட்ராஸ், சூது கவ்வும் போன்ற தரமான கமர்ஷியல்களும் எப்படி எடுக்கலாம் என்றுதான் பல உதாரணங்கள் உள்ளன.
ஹாலிவுட்டைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் பல நல்ல படங்கள் வரும். ஆனால் தமிழில் அப்படி அல்ல. ஒரு வருடத்தில் 3-4 நல்ல படங்கள் வந்தால் பெரிய விஷயம். காரணம் இங்கே இன்னமும் பெரிய பட்ஜெட் படம் என்றால் குத்துப்பாட்டு, ஹீரோ அறிமுகப் பாடல், கதையே இல்லாமல் எடுப்பது, காமெடி, டான்ஸ், சண்டைகள் போன்ற பல செயற்கையான அம்சங்கள் உள்ளன. அவற்றின் நடுவே தரமான கமர்ஷியல் படங்கள் எப்படி எடுக்கலாம் என்றுதான் பார்க்கப்போகிறோம்.
எனவே ஸ்டீரியோடப் டெம்ப்ளேட் படங்கள் எடுத்தால் அது குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் சந்தோஷப்படுத்தக்கூடும். ‘ஆழ்வார்’ படத்தையோ அல்லது ‘சுறா’ படத்தையோ அல்லது ‘நாட்டுக்கொரு நல்லவன்’ படத்தையோ அல்லது ‘அந்த ஒரு நிமிடம்’ படத்தையோ வெளிநாட்டுத் திரைப்பட ரசிகனுக்குப் போட்டுக்காண்பித்தால் அரை மணி நேரத்தில் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை அது ஒரு ட்ரக் ட்ரைவராக இருந்தால் வெறியில் நம்மைக் கொலையும் செய்யலாம். மாறாக, Archetype என்ற, உலகத்தின் கலை வடிவங்களுக்கெல்லாம் பொதுவான அடிப்படைத் தன்மையுடன் கூடிய (இத்தனை பெரிய வாக்கியத்தைக் கண்டு மிரளவேண்டாம். சுருக்கமாக, தரமான கதையமைப்புள்ள படம் என்று புரிந்துகொள்ளவும்) படமாக இருந்தால் அதனைப் பார்க்கும் அந்த வெளிநாட்டு ஆசாமி திருப்தியடையலாம். அப்படிப்பட்ட படங்கள் தமிழில் இல்லை என்பது எத்தனை கேவலமான விஷயம் என்று யோசித்துப் பாருங்கள். மேகே தக்க தாரா, சுபர்ணரேகா போன்ற ரித்விக் கடக்கின் படங்கள் உலகம் முழுவதும் செல்கின்றன. பாராட்டுப் பெறுகின்றன. இத்தனை ஏன்? Gangs Of Wasseypur படம் கூட அப்படித்தான். இப்படிக்கூட ஒரு படம் தமிழில் இதுவரை இல்லை (நாயகன் டைம் பத்திரிக்கையால் பாராட்டப்பட்டது ஒரு நல்ல விஷயம். ஆனால் காட்ஃபாதரை இன்ஸ்பிரேஷனாக வைத்தே அது எடுக்கப்பட்டது. ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ போன்றவை அவசியம் நல்ல படங்கள்தான். ஆனால் இந்தியாவுக்கு வெளியே எடுபட்டதா?).
அதுவே Road to Perdition, schindler’s list போன்றவையெல்லாம் ஆர்ட் படங்கள் அல்ல. அவையும் கமர்ஷியல் படங்கள்தான். ஆனாலுமே உலகம் முழுவதும் செல்கின்றனவே? குறைந்தபட்சம் கொரியன் படமான Oldboy உலகெங்கும் பெற்ற வெற்றிகூட நம்மிடம் இல்லை அல்லவா? ஒரு இரானியன் படம் கூட இப்போதெல்லாம் மார்ஸ் கிரகத்திலேயே திரையிடப்பட்டுவிடும் போல இருக்கிறது. இவ்வளவு ஏன்? ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த மிகச்சிறிய நாடுகளில் கூட தரமான படங்கள் உள்ளன. இங்கு ஏன் இல்லை? தமிழின் சிறந்த படம் என்று நினைக்கப்படும் பல படங்கள் திரைப்பட விழாக்களில் டப்பாவில்தான் தூங்குகின்றன. அல்லது சீந்தப்படுவதே இல்லை.
எனவே, தரமான – அதேசமயம் பணமும் சம்பாதிக்கும் நல்ல கமர்ஷியல் (மற்றும் கலைப்படங்கள்) படங்கள் உலகம் முழுக்கவும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. சார்லி சாப்ளினை விடவும் ஒரு உதாரணம் வேண்டுமா? அவர் என்ன கலைப்படங்களா எடுத்தார்? மக்களின் மனதைத் தொடும் அடிப்படை உணர்வுகளை வைத்துத்தானே படங்கள் எடுத்தார்? ஆனால் ஸ்டீரியோடைப் படங்கள் லோக்கல்தான். அந்த லோக்கல் இடத்தைத் தவிர வெளியே அவற்றால் செல்லமுடியாது (டெம்ப்ளேட் தமிழ்ப்படங்கள்). அப்படிச் சென்றாலும் அவமானமே மிஞ்சும்.
இப்படிப்பட்ட தரமான படங்கள் (கமர்ஷியல் & ஆர்ட் இரண்டுமே), ஆடியன்ஸுக்கு இரண்டுவிதமான அட்டகாசமான அனுபவங்களைத் தருகின்றன என்பது ராபர்ட் மெக்கீயின் கருத்து.
ஒன்று: ஆடியன்ஸாகிய நமக்கு முற்றிலும் தெரியாத புதிய உலகம் ஒன்றின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த உலகம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி – ஆடியன்ஸைக் கவர்கிறது. அவர்களின் மனதை சந்தோஷமாகவோ சோகமாகவோ தொடுகிறது.
இரண்டு: அந்த அறிமுகமில்லாத உலகினுள் நாம் என்ன பார்க்கிறோம்? நம்மையேதான் அங்கே கவனிக்கிறோம். இந்தக் கதாபாத்திரங்களின் பிரச்னைகளுக்குள் ஆழமாக இருப்பது மனித வாழ்க்கையின் சிக்கல்கள்தான். அவற்றை நாமும் பலமுறை அனுபவித்திருக்கிறோம். நாம் கனவுகாணும் பல அம்சங்களைத் திரையில் பார்க்கும் பாத்திரம் வாழ்கிறது. எனவே திரையரங்கில் நாம் பார்க்க நினைப்பது, இப்படிப்பட்ட கனவுகள் நிஜமாவதைத்தான். இன்னும் அடிப்படையாக யோசித்தால், முழுமையான வாழ்க்கை. அதுதான் அங்கே நமக்குத் தேவை. அப்படிப்பட்ட முழுமையான அனுபவத்தை ஆடியன்ஸுக்கு எப்படி அளிப்பது என்பதே ராபர்ட் மெக்கீயின் புத்தகத்தின் மைய நோக்கம்.
தொடருவோம்…
மிகத் தரமான ஒரு கட்டுரை. நன்றி .
Good article. nice writing. I am expecting more from Mckee.
Very good explanation of world cinema…..thanks…..